Loading

26

 

“வாட்? என்ன உளறல் இது?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

“எஸ்.. அது விஷ்ணுப்ரியா இல்ல” என்றான்.

 

அதேநேரம், அங்கு, சிகிச்சையின் பலனாய், சுயம் மீண்டு, மெல்ல விழி திறந்தாள், ப்ரியா.

 

அவள் கண் விழிப்பதைக் கண்ட செவிலியர், பரபரப்பாய் சென்று மருத்துவரை அழைத்துவர, மருத்துவர் அவளைப் பரிசோதித்தார்.

 

வெளியே நின்று கொண்டிருந்தவர்கள், மருத்துவரை ஆர்வமும் பதட்டமுமாய் நோக்க, “டோன்ட் வொர்ரி.. அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவங்க கண் விழிச்சுட்டாங்க” என்று மருத்துவர் கூறினார்.

 

அனைவருக்கும் பெரும் நிம்மதி மனதில் படர்ந்தது.

 

“டாக்டர்.. நா.. நான் என் பொண்ணைப் போய்ப் பார்க்கலாமா?” என்று ராமராஜன் கேட்க,

 

“டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அமைதியா பார்த்துட்டு வந்துடுங்க. அவங்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாது” என்று கூறிய மருத்துவர், “நர்ஸ் நீங்களும் கூட இருங்க” என்று கூறிவிட்டுச் சென்றார்.

 

ராமராஜன் சென்று தன் மகளைப் பார்த்தார்.

 

“ப்..ப்பா..” என்று கடினப்பட்டு அவள் இதழ் பிரிக்க,

 

“ஷ்ஷ் ஷ்ஷ்.. வேணாம்டா கண்ணம்மா.. அப்பா இங்கதான் இருக்கேன்.. நீ..நீ கஷ்டப்படாதடா..” என்று கண்ணீரோடு கூறினார்.

 

அவள் தொண்டைக்குழி எதையோ கூறிவிடச் சொல்லி ஏறி இறங்கியது.

 

“ப்பா‌..” என்று மீண்டும் அவள் அழைக்க,

 

“உனக்கு ஒன்னுமில்ல விஷ்ணுமா” என்றார்.

 

பாவை இடவலமாய்த் தலையசைக்க,

 

பதட்டமாய் செவிலியரைப் பார்த்தவர், “என் பொண்ணுக்கு ஏதும் பண்ணுதாமா?” என்று கேட்டார்.

 

செவிலியர் அவளை நெருங்கி, “என்ன பண்ணுதுப்பா?” என்க,

 

“நா..நான்..” என்று தடுமாறினாள்.

 

“என்னப்பா? என்னாச்சு?” என்று மீண்டும் அவர் கேட்க,

 

“நா.. நான் விஷ்ணு இல்ல” என்று தட்டுத்தடுமாறிக் கூறினாள்.

 

“என்னப்பா? புரியல” என்று அவர் கூற,

 

தன் தந்தையைப் பார்த்து, “நா.. நான் விஷ்ணு இல்ல” என்றாள்.

 

அவள் கூற்றில் அதிர்ந்து போனவர்,

 

“என்னடா சொல்ற?” என்க,

 

“நா.. நான் சிவா..” என்றாள்.

 

அதேநேரம், அங்கு, அவ்வறையில், ராஜசிம்மனிடம், “அது என் சிவா” என்று அபூர்வன் கூற,

 

“காட்.. என்னடா இது..” என்று ராஜசிம்மன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

 

“ச்சில்.. ரிலாக்ஸ்.. நீங்க தேடி வந்த பொண்ணுதான் அவ‌. ஆனா அது விஷ்ணு இல்ல. சிவா..” என்று வேண்டுமென்றே இன்னும் ராஜை அவன் குழப்ப,

 

“எனக்குத் தலையே வெடிச்சுடும் போல” என்று முனகியவன், அபூர்வனுக்காக வைத்திருந்த நீரை எடுத்து மடமடவென்று குடித்து முடித்தான்.

 

அதில் அட்டகாசமாய் அபூர்வன் சிரிக்க,

 

கருப்பசாமி அவ்வறைக்குள் நுழைந்தான்.

 

தம்பியைப் பார்த்ததும், அபூர்வனின் முகம் கனிவு பெற்றது.

 

அவனைப் பார்த்தபடியே தன் நண்பனிடம் வந்த கருப்பசாமி, நண்பன் அமர்ந்திருக்கும் நிலையைப் புரியாமல் பார்க்க,

 

“அப்ப உண்மைலயே விஷ்ணு எங்க?” என்று ராஜசிம்மன் கேட்டான்.

 

கருப்பசாமி அவன் கேள்வியில் குழப்பம் கொண்டு, அபூர்வனை நோக்க,

 

“இறந்துட்டா” என்று அபூர்வன் கூறினான்.

 

“என்ன உளறுற?” என்று கருப்பசாமி கேட்க,

 

“ஷ்ஷ்.. விஷ்ணு செத்துப்போய் பல வருஷம் ஆச்சு.. நீங்க எல்லாரும் விஷ்ணு விஷ்ணுனு சொல்லிட்டு இருக்குறதே என்னோட சிவாவைத் தான்” என்று கூறினான்.

 

“உன்னோட சிவாவா?” என்று கருப்பு புரியாமல் கேட்க,

 

“வெல்…” என்று நன்கு நிமிர்ந்து அமர்ந்தவன், “சில வருஷங்களுக்கு முன்ன, நடந்த ஒரு பஸ் ஆக்ஸிடென்ட்ல விஷ்ணு சிவா ரெண்டு பேரும் பலத்தக் காயத்தோட மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டாங்க. அந்த சமயம்தான் எனக்கும் அடிப்பட்டு என் ஜீன் எக்ஸ்ப்ரஸ் ஆகி நான் முன்னாடி சொன்னதெல்லாம் நடந்தது. அப்ப அந்த ஆக்ஸிடென்ட்ல உண்மைலயே இறந்துபோனது விஷ்ணுப்ரியா. ஆனா டாக்டர்ஸ் இறந்துபோனது சிவான்னும், உயிரோட இருக்குறது விஷ்ணுனும், தெரியாம மாற்றி சொல்லிருக்காங்க” என்றான்.

 

“அதெப்படி அவங்க வீட்டாளுங்களுக்கு அதுத் தெரியாமப் போகும்? கண் விழிச்சு அவளே சொல்லிருக்க மாட்டாளா?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

“ஏன்னா கண்விழிச்சவ பாஸ்டை எல்லாம் மறந்துட்டா. அன்ட் அவங்க ரெண்டு பேருக்கும் எந்தவொரு வேற்றுமையும் இல்லாத ஐடென்டிகல் ட்வின்ஸ்.. பெருசா அடையாளம் கண்டுபிடிக்கும் வேறுபாடுகள் எதுவுமில்லை. ஆக்ஸிடென்ட் ஆகி பழசெல்லாம் மறந்ததாலயும், அவளோட காயங்களினாலும் பெருசா அவளை வேறுபடுத்திக்கவும் முடியலை. அதைக் கண்டுபிடிக்கும் நிலையில் அவளைச் சார்ந்தவர்களும் அப்ப இல்ல. அவதான் விஷ்ணுனு மத்தவங்க நம்பி, அவளையும் நம்ப வச்சுட்டாங்க” என்று கூறினான்.

 

“உனக்கு எப்படித் தெரியும் அவதான் சிவானு?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

“பிரம்மாவோட அவளை மாதிரியே ஒரு பொண்ணை நிக்க வச்சா உன்னால கண்டுபிடிக்க முடியாதா? அவ ஆட்டிட்யூட் பேசுற விதம்.. இப்படி?” என்று குறும்பு சிரிப்புடன் கேட்டான்.

 

கருப்பசாமி மீண்டும் அதிர்ந்துபோய் நண்பனைப் பார்க்க, ராஜசிம்மனுக்கு சூழலுக்கு மாறாய்ப் புன்னகை பூத்தது.

 

“ஏன் உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சதை அவங்க வீட்டாட்களால முடியாதா?” என்று மென்மையான சிரிப்போடு ராஜசிம்மன் கேட்க,

 

“ஏன்னா அவளும் பழசையெல்லாம் மறந்துட்டா. அவளுக்கே அவ யாருனு தெரியாதப்ப, அவ பழக்க வழக்கங்கள் மாறினா கூட, அவளுக்கு நினைவில்லாம புது பழக்கங்களை மேற்கொள்றானு தானே தோன்றும்? அவளோட ட்வின் சிஸ்டர் சைகாலஜிகல் சென்சுஷன் கொடுத்த டிப்ரஷனோட சேர்த்து அவளோட ஐடென்டி சேஞ்ச் ஆனதும் அவளே அறியாத அழுத்தமா அவளுக்குள் இருந்தது. எல்லாரும் சிவ இறந்த சோகம் தான் விஷ்ணு மாறினதுக்கானக் காரணமா பார்த்து அதுக்கான கௌன்சிலிங்கதான் அவளுக்குத் தந்தாங்க” என்று விளக்கம் கொடுத்தான்.

 

மேலும் “புதுசா லவ் பண்ண உனக்கே இப்படின்னா.. என் சிவாவை என்னால கண்டுபிடிக்க முடியாதா?” என்று அபூர்வன் கேட்க,

 

“என்னடா நடக்குது இங்க?” என்று கருப்பசாமி அதிர்வாய்க் கேட்டான்.

 

“சரிசரி.. போதும். சீக்கிரம் விஷயத்துக்கு வா. விஷ்ணுவோ சிவாவோ.. அவளை எதுக்கு கடத்தி வச்சிருந்த?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

“மறுபடியும் சொல்றேன்.. நான் கடத்தலை. நான் காப்பாற்றினவன். அவளைக் கடத்தினது, இதோ இவனோட வருங்கால மாமனார் தான்..” என்று கருப்பசாமியைப் பார்த்துக் கூறினான்.

 

கருப்பசாமி அவனை அதிர்ந்து பார்க்க,

 

ராஜசிம்மன், “வாட்? இவன் மாமனாரா? இவன்..” என்று பேச வந்து சட்டென நின்றான்.

 

அட்டகாசமாய் சிரித்த அபூர்வன், “புடிச்சுட்டப் போல?” என்க,

 

“சுபிக்ஷா அப்பா யாருடா?” என்று ராஜசிம்மன் கருப்பசாமியிடம் அயர்ந்துபோய் கேட்டான்.

 

அந்த நேரம் பக்கத்து அறையில் பெரும் சப்தம் கேட்டது.

 

“ப்ச்.. உன்னைச் சொல்லனும்டா.. நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன்” என்று ராஜசிம்மன் முடிக்கும் முன், “சிவா என் ஆளுப்பா” என்று அபூர்வன் குறுக்கிட்டான்.

 

அவனைத் தீயாய் முறைத்தவன், “விஷ்ணுபெருமானேனு..” என்று கூறவர, “அது என் ஆளோட தங்கச்சி” என்று மீண்டும் குறுக்கிட்டான்.

 

“யப்பா சாமி.. பிரம்மாவேனு இருந்தேன்.. போதுமா? அது என் ஆளு தானே?” என்று கத்திய ராஜ சிம்மன், பக்கத்து அறையில் சளசளப்பு அதிகமாகவும், “உனக்கு இருக்குடா” என்று கருப்பசாமியிடம் கத்திவிட்டுச் சென்றான்.

 

அவனை பேவென்று வேடிக்கைப் பார்த்தக் கருப்பசாமி, “என்னைய ஏன்டா கத்திட்டுப் போற?” என்று புரியாது குழப்பமாய் நிற்கவும்,

 

“அவனை இந்த கேஸ் பார்க்கக் கூப்பிட்டது நீ தான? பக்கத்து ரூம்ல அந்த பிரதாப் தப்பிக்கப் பார்த்திருப்பான். அவனோட உயிருக்கும் ஆபத்து இருக்கு. மிஸ்டர் சந்திரசேகருக்கு அவன் தானே எடுபிடி வேலைப் பார்த்தது” என்று அபூர்வன் கூற,

 

“சந்திரசேகரா? அது யாரு?” என்று கருப்பசாமி கேட்டான்.

 

“அதான் சொன்னேனேடா.. உன் மாமனார் தான்” என்று அபூர்வன் கூற,

 

“என்ன உளறுற நீ?” என்று கத்தினான்.

 

“உன் ஃபிரெண்டுதான் ஷார்ட் டெம்பர். அவனே இவ்ளோ நேரம் பொறுமையா கதை கேட்டான். நீ என்னாட ரெண்டு கேள்விக்கு இவ்ளோ பொங்குற?” என்ற அபூர்வன், “ப்ளான்டோ நிறுவனத்தில் பணி புரியும் சந்திரசேகர்தான் உன் மாமனார். சுடர் அன்ட் சுபியோட அப்பா. அவருக்கும் சுடர் சுபியோட அம்மாக்கு டிவோர்ஸ் ஆகின பிறகுதான் இவங்க பாட்டி வீட்ல வளர்ந்தது. ஐ திங்க் சுபிக்கு அவ அப்பாவை அடையாளம் தெரியல. பட் சுடருக்கு நினைவிருக்கும். அந்த நாய் தான் காட்டுலருக்க அரியவகை மூலிகைகளை இல்லீகலா எடுத்து ஃபாரின் எக்ஸ்போர்ட், அன்ட் மெடிசனல் யூஸ்கு பயன்படுத்த திட்டமிட்டது. அவனும் பிரதாப்பும் சேர்ந்து திட்டம் போட்டுத்தான் மலைவாழ் மக்களை பயமுறுத்தி அங்கிருந்து துரத்தியது. மியூச்சுவல் டீலிங் அவங்களுக்குள்ள. காட்டிலிருக்கும் செடி அவனுக்கு, அடிலருக்கும் ஓர் இவனுக்கு” என்க,

 

அவனை அதிர்ந்துபோய் பார்த்த கருப்பசாமி, “இதெல்லாம் உனக்கு எப்டி தெரியும்?” என்றான்.

 

“இலை தலைக்கு நடுவுல இருக்கும்போது காட்டு விலங்குகளே என்னைக் கண்டுபிடிக்காது. இந்த மனிதர்கள் எம்மாத்திரம்? இந்த சந்திரசேகர் சில மக்களை பிடிச்சுட்டுப் போய் இல்லீகலா மெடிசன் டெஸ்ட் பண்ணவும் பயன்படுத்திருக்கான். இந்த பொறுக்கி ராஸ்கல் தான் நம்ம அப்பா அம்மாவைக் கொன்றதும்” என்று அபூர்வன் கூற,

 

“நம்ம அப்பா அம்மாவா?” என்று கருப்பசாமி மேலும் அதிர்ந்தான்.

 

ஆம்! சக்கரவர்த்தியின் நம்பகத்தன்மையான அந்த நண்பர் தான், சந்திரசேகர். சக்கரவர்த்தியிடமிருந்து சிறுவயதிலேயே அபூர்வனைப் பிடுங்க முயற்சித்தபோது, ராஜலட்சுமி இறப்பதற்கும், சக்கரவரத்தி இறப்பதற்குமானக் காரணியும் சந்திரசேகர் அல்லவா?

 

“ம்ம்.. நம்ம அப்பா அம்மா தான். திரும்ப கதை சொல்லவெல்லாம் நேரமில்லை. ஒருநாள் நீ சிவாவைக் காட்டுலருந்து தூக்கிட்டுப் போய் அவங்க வீட்ல சேர்த்த நினைவிருக்கா? அப்ப இந்த சந்திராவோட ஆள் ஒருத்தனைத்தான் நான் போட்டுட்டு இருந்தேன். சந்திராவும் காட்டுக்குள்ள நுழைஞ்சிருந்தான். அவன் சிவாவையும், அவனோட ஆள நான் கொல்றதையும் பார்த்துட்டான். எனக்கும் சிவாக்கும் சம்மந்தம் இருக்கும்னு, சிவாவைப் பிடிச்சா என்னைப் பிடிக்கலாம்னும் நினைச்சு தான் அவளைத் தூக்கினான். நான் காப்பாத்தி அவளை காட்டுக்குள்ளயே பாதுகாத்து வச்சிருந்தேன். அதுல அவனுக்கு இன்னும் ப்ரஷராயிடுச்சு. சிவா மூலமா எதாவது உண்மை கசியுமோனு அவனுக்கு பயம். கதை முடிஞ்சது. போய் உன் ஃபிரெண்டுக்கு உதவு. போ” எனக் கூறி அபூர்வன் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொள்ள, கருப்பசாமி அதிர்வு விலகாது அவனைப் பார்த்திருந்தான்.

 

“டேய்.. போரியா இல்லையா இப்ப நீ? எல்லாம் பிறகு சொல்றேன்னு சொல்றேன்ல?” என்று அபூர்வன் மிரட்டலாய்க் கூற,

 

தனது முதன்மை அதிகாரிகளின் மிரட்டலுக்குக்கூட அஞ்சாதவன், ஏனோ அவன் மிரட்டவும் ஓடியே விட்டான்.

 

அபூர்வன் தலையை இடவலமாய் ஆட்டி சிரித்துக் கொள்ள,

 

அங்கு காவலதிகாரிகள் பிரதாப்பையும், முகமறியாத இன்னொருவனையும் தனித்தனியாகப் பிடித்து வைத்திருந்தனர்.

 

ராஜசிம்மன் உச்சக்கட்டக் கோபத்தில், அந்த புதியவனைப் போட்டு வெளுத்துக் கொண்டிருக்க, “டேய் டேய்.. செத்துடப்போறான்டா” என்று கத்தியபடி கருப்பசாமி நண்பனைப் பிடித்துக் கொண்டான்.

 

“யாருடா இவன்?” என்று கருப்பசாமி அவன் அடித்துச் சாய்த்தவனைக் கேட்க,

 

“எல்லாம் உன் மாமனார் அனுப்பின ஆள் தான்..” என்று காய்ந்தான்.

 

“என்னங்கடா ஆளாளுக்கு உன் மாமனார் மாமனாருங்குறீங்க? இன்னும் அவளே ஓகே சொல்லலை.. இவனுங்க வேற” என்று முதல் பாதியை சத்தமாகவும் மீதியையும் முனுமுனுப்பாகவும் அவன் கூற,

 

தான் அடித்துச் சாய்த்தவனை, மற்றக் காவலர்களிடம் ஒப்படைத்த ராஜசிம்மன், பிரதாப்பை நெருங்கி, அவன் சட்டைப் பட்டாவைப் பிடித்து இறுக்கியவனாய், “உன்னோட அந்த சந்திரசேகர்தான் கூட்டுனு எங்களுக்கு நல்லாத் தெரியும்.. மரியாதையா உண்மையை ஒத்துக்கிட்டு சரெண்டர் ஆகிடு. அதுதான் உனக்கு நல்லது. இப்ப உன்னைக் கொல்ல ஆள் அனுப்பிருக்கான்.. மேலும் அவனைக் காப்பாத்துறேன்னு அவன் கையாலயே சொத்துடாத” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, அவனை உதறிவிட்டு வெளியே வந்தான்.

 

தானும் வெளியே வந்த கருப்பசாமி, “வந்தது சந்திரசேகரோட ஆளுனு உனக்கு எப்புட்ரா தெரியும்?” என்று கேட்க,

 

“ப்ச்.. அதெல்லாம் தெரியாதுடா.. சும்மா அவன மிரட்ட சொன்னேன்” என்று நெற்றியை நீவிக் கொண்டான்.

 

“அடப்பாவி!” என்ற கருப்பு, “அங்க உள்ள அவன் சொன்னதை என்னமோ நீயே கண்டுபிடிச்சமாதிரி இவன்கிட்ட சொல்லிட்டு வர்ற நீ சந்திரா கூட்டுனு எங்களுக்குத் தெரியும்னு” என்க,

 

“டேய்.. உன்னைக் கொல்லப் போறேன் நானு.. அல்ரெடி நெக்ஸ்ட் என்னனு யோசனைல மண்ட வெடிக்குது.. இப்ப இந்த கேஸ்லருந்து அந்தப் பச்சையனை எப்படிக் காப்பாத்துறதுனும் தெரியல.. நீ வேற கடுப்பேத்துற” என்று கூறினான்.

 

“பச்சையனக் காப்பாத்தப் போறியா? கேஸ்ல புலியா இருப்பனு பார்த்தேன்” என்று கேட்டாலும் கூட, கருப்பசாமியால் தன் மனம் கூறும் நிம்மதியை உணர முடிந்தது.

 

“ப்ச்.. வேற என்ன பண்ண சொல்ற? செய்யாத தப்புக்கு அவரை ஜெயில்ல போட்டு களி திங்க வைக்கச் சொல்றியா? அவர் கொல்லலைனாலும் இதோ இவனுங்க செய்த வேலைக்கு உடந்தையா இருந்ததுக்கு தண்டனை அனுபவிக்கத்தான் வேணும் அவனுங்கல்லாம்.. இந்த கேடுகெட்டவனுங்கள உள்ள போட்டு தண்டச்சோறு ஆக்கிப்போடுற கணக்கையாவது குறைச்சாரேனு நினைச்சுக்க வேண்டியதுதான்.. உனக்கு என்னடா? உன் அண்ணானு பாசமே இல்லயா?” என்று ராஜசிம்மன் கத்த,

 

“ஹ்ம்.. போடா டேய்.. உனக்கு சொன்னாலும் புரியாது.. சிரிச்சுட்டுத்தான் இருக்கேன்.. உள்ள எப்புடி இருக்குனு விளக்கம் கொடுக்க எனக்கும் சரி, கேட்க உனக்கும் சரி.. நேரமில்லை” என்றுவிட்டு கருப்பசாமி அமைதியாய் வெளியேறினான்..

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்