Loading

9.அத்தியாயம்

‘என்ன இவ இன்னைக்குனு பார்த்து சுடிதார் போட்டுருக்கா? எப்படி இப்போ அவ இடுப்பை பார்க்குறது? இப்போவும் அவளுக்கு வலி இருக்குமானு தெரியலையே?’ என்று தனக்கு எதிராக கண்ணாடியின் முன் அமர்ந்திருந்து அலங்கரித்துக் கொண்டிருந்தவளையே யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் நந்தா.

இளம் எலுமிச்சை நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரும், அதற்கு ஏற்றார் போல சில்வர் மெட்டல் ஜிமிக்கியும், சில்வர் மெட்டலால் ஆன அட்டிகையும் அணிந்திருந்தவளின் கொள்ளை அழகு, பிம்பமாக கண்ணாடியில் தெரிய, சில அடி தூரங்களில் நின்றபடியே தன்னவளையே ரசித்துப் பார்த்தான் நம் நாயகன். இறுதியாக நெற்றியில் சிறு பொட்டை மட்டும் வைத்தவள், வேறு எந்த வித ஒப்பனைகளும் செய்திடாமல் எழுந்தபடி திரும்ப, மிக நெருக்கமாக அவள் முன் நின்றிருந்தவனைக் கண்டு ஒரு நொடி பதட்டம் கொண்டவள், இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்து தன்னை சமப்படுத்திக் கொள்ள, அவளது செயலை அடக்கப்பட்ட புன்னகையுடன் கண்டான் நந்தா.

“அறிவில்ல… இப்படி தான் மூஞ்சிக்கு முன்னாடி வந்து நிற்பியா?” என்றாள் முறைத்த வண்ணம்.

“அப்போ பின்னாடி வந்து நிற்கட்டுமா?” அசட்டையாக பதில் அளித்தவனைக் கண்டு கோபமாக முகம் சுழித்தாள்.

“உன்கிட்ட எல்லாம் மனுசன் பேச முடியாது.” என்றவளோ அவனைக் கடந்து செல்லப் போக, பெண்ணவளின் கைகளை இறுக பற்றி நிறுத்தியவன் அவள் புறமாக திரும்ப, அவளும் அவனை பார்த்து முறைத்தபடி திரும்பினாள்.

“எல்லாம் ஓகே. ஒன்னு மட்டும் மிஸ்ஸிங் மது?”

“என்ன சொல்ல வர?”

“வெயிட்.” என்றவன் அடுத்த நொடியே குங்கும சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்தவன் பெண்ணவளின் நெற்றியில் சிறு கீற்றாக வைத்துவிட்டு, மேலும் பெண்ணவளின் உச்சந்தலையில் வைக்க முற்பட, அவனது கைகளை தடுத்து பிடித்துக் கொண்டாள் மது.

“புருசன்னு அட்வான்டேஜ் எடுக்க பார்க்குறியோ?” என்றவள் புருவம் உயர்த்த, அவனோ குறும்பாக புன்னகைத்தான்.

“இதுல அட்வான்டேஜ் எடுக்க என்ன இருக்கு? குங்குமம் வெச்சா இன்னும் அழகா இருப்ப?”

“நோ தாங்க்ஸ். இப்படியே இருந்துக்கிறேன்.” கடுப்புடன் கூறியவள் அவனை விட்டு விலகி சென்று, கட்டிலின் மீதிருந்த தனது துப்பட்டாவை எடுத்து தோள்பட்டையின் மீது ஒரு புறமாக போட்டுக் கொள்ள, துப்பட்டாவின் முனை அவனது முகத்தை உரசிவிட்டு சென்றது.

கண்களை மூடி இன்பமாக ரசித்தவன் பின் கண்களைத் திறந்து, “இந்த கோபத்துக்கு மட்டும் கொறைச்சல் இல்லை. நியாயப்படி நான் தான் டி கோபப்படணும்.” பெருமூச்சொன்றை விடுத்தவன், அவள் அணிந்து செல்லும் அதே நிறத்திலான டீசர்ட்டினை எடுத்து அணிந்துக் கொண்டான். பின் ஒருவருக்கு பின் ஒருவராக மாடியிலிருந்து இறங்கி வர, இருவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தார் தாமோதரன்.

தந்தையைக் கண்டு புன்முறுவல் பூத்தவள், “குட் மார்னிங் பா‌” என்று கூறிக்கொண்டே அவரின் அருகே நின்றுக் கொள்ள,

‘நானும் சொல்வேன்’ என்ற தோரணையில் வந்த நந்தாவும், “காலை வணக்கம் மாமனாரே.” என்று உற்சாக குரலில் கூற, இவளோ தலையில் அடிக்காத குறையாக அவனை பார்த்தாள்.

“வணக்கம் மாப்பிள்ளை.” என்றவர் குஷியுடன் அவனது தோளில் கை போட்டு கொண்டார்.

“மாமா, இன்னைக்கு ரொம்ப ஹேண்ட்சமா இருக்கீங்க? உங்க இளமையின் ரகசியம் என்ன?” என்றிவன் கூறியதும் அவர் முகத்தில் சொல்லிலடாங்கா வெட்கம் நர்த்தனமாட,

“விளையாடாதீங்க மாப்பிள்ளை” என்று சங்கோஜத்துடன் பேசினார் தாமோதரன்.

‘இவன் சும்மாவே ஐஸ் வெச்சு பேசுவான். இன்னைக்கு ஐஸ் மழையாவே ஊத்துறானே? ஆண்டவா இவனை போய் என் வாழ்க்கையில சேர்த்து வெச்சு இப்படி விளையாட்டு காட்டுறியே?’ என்று மனதிற்குள் புலம்பியவள் அவனை முறைத்துப் பார்க்க,

“போன ஜென்மத்துல எனக்கு நீ மொறப்பொண்ணா பொறந்திருப்பேனு நினைக்கிறேன் மது.” என்று சன்னமாக அவள் காதோரம் கிசுகிசுத்தவனை புரியாமல் பார்த்தாள் பெண்‌.

“பின்ன முறைச்சு பார்க்கலாம். ஆனால் முறைக்கிறதையே ஆல் டைம் வொர்க்கா வெச்சுட்டு சுத்துறியே மது செல்லம்.” என்றான் புன்னகையுடன்.

“சோதிக்காதடா” என்றவள் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, அதற்குள் பிரபாவதி அவ்விடம் வந்திருந்தார்.

“இரண்டு பேரும் சாப்பிட வாங்க?” என்றவர் அழைக்க,

“இல்லைங்க அத்தை… மதுவும், நானும் இன்னைக்கு முக்கியமான இடத்துக்கு போறோம். ஈவினிங் தான் வருவோம்.” என்றவன் மதுவைப் பார்க்க, அவளும் அவனை தான் பார்த்தாள்‌‌.

காலையில் கிளம்பும்படி அவன் கூறியிருக்க, இவள் கேட்டும், செல்லவிருக்கும் இடத்தைப் பற்றி அவன் உரைக்கவில்லை. ‘நீ வரவில்லை என்றால் ஒப்பந்த திருமணம் பற்றி கூறிவிடுவேன்’ என்று மிரட்டியே அவளை சம்மதிக்க வைத்திருந்தான் நந்தா.

“பார்த்து போயிட்டு வாங்க.” என்று அவர்களும் வழியனுப்ப, முதலில் வெளியே வந்தது என்னவோ நந்தா தான்.

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவன் அலைப்பேசி சிணுங்க, அலைப்பேசியில் குறுஞ்செய்தியை அனுப்பியபடி தோட்டத்திற்குள் நடந்து வந்தவன் நிமிர்ந்து பார்க்கவும் அவனது கண்களில் பட்டது என்னவோ உமாபதியும், வெண்ணிலாவும் தான்.

உமாபதி வெண்ணிலாவை இறுக பற்றி முத்தமிட்டுக் கொண்டிருந்த காட்சி கண்களில் பட, ‘அடப்பாவி’ என்று வாயைப் பிளந்தவன் அடுத்த நொடியே “டேய் உமா?” என்று சத்தமாக கத்தியதில், வெண்ணிலாவை விட்டு பிரிந்து நின்றுக் கொண்டான் உமாபதி. அவளும் பதட்டத்தில் இரண்டு அடி தள்ளி நின்றுக் கொள்ள, உமாபதியோ பயத்துடன் திரும்பினான்.

நந்தாவின் குரல் கேட்டதுமே நடுக்கத்துடன் திரும்பியவன் ஏறிட, அவ்விடம் நந்தாவும் அவன் பின்னே மதுவும் நின்றிருக்க, உமாபதியின் முகத்தில் ஈ ஆடவில்லை. கெட்டதிலும் நல்லதாக சரியாக அவன் திரும்பும் நேரம் தான் வெளியே வந்திருந்தாள் மது.

“என்னாச்சு? டேய் நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்ட மது தள்ளி நின்றுக் கொண்டிருந்த வெண்ணிலாவையும் பார்த்தாள்.

“நிலா, நீயும் இங்க தான் இருக்கியா?” என்றாள் சர்வசாதாரணமாக.

அவள் பார்க்கவில்லை என்றதும் தான் போன உயிரே திரும்பி வந்தது உமாவிற்கு. தன் மாமாவினை நிமிர்ந்து பார்க்க சங்கடப்பட்டவன், பார்வையாலே மன்னிப்பை யாசித்தான்.

“ஆங்கில படக்காட்சிக்கு ஒத்திகை போட்டுட்டு இருக்காங்க? என்ன பண்றாங்கனு கேள்வி வேற?” முணுமுணுத்தான் நந்தா. நல்லவேளையாக அது அவளது காதுகளை அடையவில்லை.

“அக்கா, சும்மா வாக்கிங் கா…” என்றவன் சமாளித்தபடி பதில் கூற, நந்தா தான் வாயைப் பிளந்தபடி பார்த்தான்.

‘அடப்பாவி என்னமா சமாளிக்குறான்?’ என்பது போல் இருந்தது அவன் பார்வை.

“நான் பிளவர்ஸ் பறிக்க வந்தேன் மது அண்ணி.” என்றிவளும் சமாளிக்க,
‘ஆண்டவா இந்த பொண்ணு அதுக்கு மேல சமாளிக்குதே?’ என்ற ரீதியில் நின்றவனுக்கு தன்னை நினைக்கும் போதே வருத்தமாக தான் இருந்தது.

‘கல்யாணம் பண்ணி சிங்கிள் கிஸ்க்கு வழியில்லாமல் இருக்கோம். இங்க என்னடானா என்னென்னமோ நடக்குது. இந்த கல்யாணமான பேச்சிலரோட சாபம் உங்களை சும்மா விடாதுடா’ என்று மனதில் புலம்பியவனுக்கு ஏனோ அவர்களை காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை.

“மது, நீ கார்ல ஏறு. நான் வரேன்.” என்றவன் வலுக்கட்டாயமாக அவளை அனுப்பி விட்டபடி உமாபதியிடம் வர, அதற்குள் வெண்ணிலா ஒரே ஓட்டமாக ஓடியிருந்தாள்.

“டேய் மச்சான், உன்னை நல்லவன்னு நினைச்சா? என்ன காரியம்டா பண்ற? அதுவும் பட்ட பகல்ல, நட்ட நடு வெளியில? என்ன லவ்வா?” என்றான் சற்று அதட்டலாக.

“இல்லை மாமா. இது ஒரு ஆக்ஸிடென்ட் மாமா.” என்றவன் பதட்டத்துடன் உரைக்க,

‘ஆக்ஸிடென்ட் பத்தி நம்மகிட்டயே பேசுறானே?’ என்று முறைத்தவன் அவனை பார்த்து, “எனக்கு ஆல்ரெடி காது குத்தியாச்சு. திரும்ப குத்திக்கிற ஐடியா எனக்கில்லை.” என்றதும், எப்படி அவனிடம் புரியவைப்பது என்று தெரியாமல் தவித்துப் போனான் உமாபதி.

“முக்கியமான வேலையா வெளியே போறேன். வந்து உன்னை கவனிச்சுக்குறேன். திரும்பவும் இப்படி எதாவது பண்ண? அப்புறம் நடக்குற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்லை டா. உன் பேரை நீயே கெடுத்துக்காத.” என்று எச்சரிக்கை விடுத்தவன் அங்கிருந்து சென்றுவிட, அவன்தான் அவமானத்தில் அடிபட்ட பார்வை பார்த்தபடி நின்றான்.

“ச்சே மாமா, என்ன பத்தி என்ன நினைச்சிருப்பாரு. எல்லாம் அவளால வந்துச்சு. போயும் போயும் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கேன், எனக்கு எங்க போச்சு அறிவு. ச்சே.” என்றவன் தன் காலால் அங்கிருந்த பூந்தொட்டியை உதைக்க, ஆணவனின் கால் நகம் பிய்ந்து ரத்தம் சொட்டத் தொடங்கியிருந்தது.

இங்கு காரில் ஏறி அமர்ந்திருந்தவளை பார்த்து இறங்கும் படி உத்தரவிட்டான் நந்தா.

“மேடம், நான் தான் உங்களை அழைச்சுட்டு போறேன்‌. சோ நீங்க அந்த பக்கமா உட்கார்ந்தா நல்லாயிருக்கும்.” என்றதும் தான் தாமதம் வெடுக்கென்று காரை விட்டு இறங்கியவள் அவனை தாண்டி வந்து மறுபக்கமாக ஏறிக் கொண்டாள்.

அதன் பின் காரை எடுத்தவன் மனம் முழுவதும் சொல்லிடங்காத பாரத்துடனே பயணித்தான். ஏனோ காலையில் கண்ட காட்சி அவனை சங்கடப்படுத்தியிருந்தது.

‘சின்ன பையன் என்னென்னல்லாம் பண்றான். ஆனால் நமக்கு மட்டும் வாய்ச்சதும் சரியில்லை. தலைவிதியும் சரியில்லை. எல்லாம் என் நேரம்.’ மனதிற்குள் புலம்பிக் கொண்டே வந்தவன் அருகில் அமர்ந்திருந்தவளை ஏக்கத்துடன் பார்த்தான்.

“கடைசி வரைக்கும் பெருமூச்சு மட்டும் தான் நீ விடணும்.” என்றவன் சத்தமாக புலம்பிவிட, அவன் சத்தம் கேட்டு அவன் புறம் திரும்பி பார்த்தவள்,

“என்ன?” என்றாள் அகங்காரமாக.

“ஒண்ணும் இல்லையே. அப்புறம் உன் இடுப்பு ஓகே தானே?”

“அது எப்படி ஓகேயாகும். ஒரு பெருச்சாளி பிராண்டிருச்சே?”

“அடடா. கொடுத்து வெச்ச பெருச்சாளி போலயே?” என்றவன் கண்சிமிட்ட, முகத்தை திருப்பிக் கொண்டாள் பெண்.

காரில் பாடலை அவன் போட்டு விட, பழைய பாடல் அழகாக இசைத்தது.

“தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்…”
என்னும் பாடல் வரிகளோடு சேர்ந்து பாடியவனின் ஒரு கண் பெண்ணவளின் இடுப்பின் மீதே பதிந்தது. என்ன ஒரே வருத்தம் இடையை மறைத்திருந்த அவளது உடை மீது தான்.

“கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை” என்று அவன் ராகத்துடன் பாட, பாடலை அணைத்திருந்தாள் பெண்.

“கேட்க சகிக்கலை. வரவர உன் போக்கும் சரியில்லை. நீ பண்றது எதுவுமே சரியில்லை. என்ன ரொம்ப எகத்தாளமா நடந்துக்குற? இப்போ எங்க போறோம்னு கூட சொல்ல மாட்டீங்குற? உன் மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க?”

“உன்னை தான் நினைப்பேன். வேற யாரை நினைப்பேன். ஐ ஹேவ் நோ ஆஃப்சன் பேபி” என்றவன் அவளை ஒருமுறை பார்த்தபடி மகிழுந்தை இயக்க, “காரை நிறுத்து. இதுக்கு மேல எங்கயும் நான் வர விரும்பலை.” என்றாள் திட்டவட்டமாக.

“என்ன மது விளையாடுறியா? இன்னைக்கு நீ என் பேச்சை கேட்டு தான் ஆகணும்.”

“முடியாது. நான் எதுக்கு உன் பேச்சை கேட்கணும்? வண்டியை நிறுத்துடா ஒழுங்கு மரியாதையா?” என்றாள் கோபத்துடன்.

“ஹே இது யானை வர பிளேஸ். கொஞ்சம் அமைதியா வா. இல்லைனா தனியா இறக்கிவிட்டுட்டு போயிட்டே இருப்பேன்.” என்று எச்சரித்தவன் காரினை ஓட்ட, பற்களை கடித்தபடி கோபத்தை அடக்க முயற்சித்தாள் மதுவர்ணிகா.

“நான் பண்ண பெரிய தப்பு. உன்னை என் வாழ்க்கையில கூப்பிட்டு வந்தது தான். நான் ஒரு இடியட். நீ பண்ற ஒவ்வொரு விசயத்தையும் பொறுத்து போறேன் பாரு. என்ன சொல்லணும்.”

‘இவ என்ன நான் சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் இவ சொல்லிட்டு இருக்கா. பூமி தாயே என் பொறுமையை பார்த்து ஆஸ்கர் விருது கொடுக்கும். இவ என்னடானா ரீல்லா விடுறா?’ மனதில் புலம்பியவன் அவளை ஒரு மாதிரி முகத்தை வைத்துப் பார்க்க,

“என்ன பார்க்குற? உண்மையா என் நிலைமையில வேற ஒருத்தி இருந்தால் இங்க நடக்குறதே வேறயா இருந்திருக்கும்.”

“ஓ… ஓ… இருக்கட்டும் அவளாவது உன்னை மாதிரி அரிச்சந்திரனுக்கு அக்கா பொண்ணா இருந்திருக்காமல் இருந்திருப்பா.”

“வாட் யூ மீன்.”

“நெய் மீனு… தின்னுறியா?” என்றான் நக்கலாக.

“இடியட்.” என்றவள் முகத்தை படக்கென்று திரும்பிக் கொள்ள,

“பாத்து செல்லம், கழுத்து சுளிக்கிக்க போகுது.” என்று கண்ணடித்தபடி கேலி செய்தான் நந்தா.

அவளும் முகத்தை திருப்பிக் கொண்டபடி வர, இருபக்கமும் மரங்கள் சூழ்ந்திருந்த சாலையில் பயணித்தான் நந்தா. இருவரது பயணமும் தடைபடும் வகையில் மகிழுந்து பாதியிலேயே நிற்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் உள்ளே அமர்ந்திருந்தாள் மது.

“என்னடா நடக்குது.” என்று ஒன்றும் புரியாமல் அருகே இருந்தவளை அவன் பார்த்த சமயம், பெண்ணவளின் புன்னகை அவனது கண்களில் தெள்ளத் தெளிவாகப்பட்டது.

‘இதுக்கு எல்லாம் காரணம் நீ தானா?இருக்குடி உனக்கு.’ என்று முறைத்தவன் கீழே இறங்கி பார்க்க, வழி நெடுகிலும் டீசல் சிதறிய வண்ணம் இருந்திருப்பதை பார்த்து பெருமூச்சொன்றை விடுத்தான்.

கோபத்தில் தன் கை முஷ்டியை மடக்கியவன், கார் கதவினைத் திறந்து பெண்ணவளை வெளியே இழுக்க,

“எதுக்கு இப்படி காட்டு மிரண்டி மாதிரி இழுக்குற?” முகம் சுழித்தவண்ணம் கேட்டவளை உறுத்து விழித்தான் நந்தா.

“எதுக்குடி இப்படி பண்ண? இப்படி லீக் பண்ணதுனால உனக்கு என்ன கிடைச்சுது. எதாவது பயராகியிருந்தா என்ன ஆகுறது. அறிவு இருக்கா இல்லையா?”

“ஏய், என்ன உளறிட்டு இருக்க? நான் என்ன பண்ணேன்?”

“நீ என்ன தான் பண்ணலை. அவ்ளோ திமிராடி உனக்கு?” என்றவன் பெண்ணவளின் தாடையை பற்றி இழுக்க, அவனது கைகளை தட்டிவிட்டாள்.

“ச்சீ என்ன விடு. சும்மா சும்மா தொட்டு பேசுற வேலை வெச்சிக்காத. இடியட்.” என்றவள் கூறவும் அவளது இடை வளைத்து தன்னுடலோடு நெருக்கியபடி நின்றான் ஆடவன்.

“இதுக்கு மேல பேசுன அவ்ளோ தான்.” என்று மிரட்ட, முதன்முதலாக அவனது கோபத்தைக் கண்டவள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள்.

தன் முழு பலத்தையும் திரட்டி அவனை தள்ளி நிறுத்தியவள், “போ இங்கிருந்து. ஒவ்வொரு முறையும் நீ பண்றது எல்லாம் சகிக்க முடியலை என்னால… மரியாதையா போயிடு. நான் தானே உன்னை கூப்பிட்டு வந்தேன். நானே சொல்றேன் போடா இங்கயிருந்து.” உயர்குரலில் கத்தினாள். அவ்வழியே வேறு எந்த வாகனமும் வராததால் இருவருக்கும் இடையில் பெருத்த மௌனம் நீடித்தது.

“உனக்கு என்ன நான் போகணும். அவ்ளோ தானே. போறேன்.” என்றவன் அங்கிருந்து கோபத்துடன் செல்ல, அவனையே சலிப்புடன் பார்த்தவள்,

“சரி தான் போடா.” என்று கூறியபடி திரும்பி நின்றாள்.

“ஒரு பேச்சுக்காவது போகாதனு சொல்றாளானு பாரு. கொஞ்ச நேரம் உனக்கு பயத்தை காட்டுறேன்” என்று புலம்பியவன் அவள் கண்களுக்கு அகப்படாத தூரம் வரை நடந்து சென்றிருக்க, “போதும் போதும் விட்டா இமயமலைக்கே போய்டுவோம். கண்டிப்பா நம்மளை காணோம்னு தேடுவா? சோ இப்போ திரும்பி போனா சரியா இருக்கும்.” என்றவன் மீண்டும் திரும்பி அவளை விட்டு சென்ற இடத்திற்கே செல்ல,

அவ்விடம் காரும் இல்லை‌ மதுவும் இல்லை. தான் அவளைவிட்டு தனித்து வந்து பெரும் தவறை இழைத்து விட்டோமோ? என்ற சிந்தனை சடுதியில் தோன்ற, பெருத்த அமைதியுடன் காணப்பட்ட இடத்தைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் நின்றான் நந்தா.

“மது… மது” என்றவன் சுற்றும் முற்றும் அவளை தேட, ஆணவனின் கால்கள் தன்னாலே நடுக்கம் பெற தொடங்கியிருந்தது. அவளுக்கு ஏதேனும் ஆபத்தா? என்றெல்லாம் யோசித்தவனுக்கு அதற்கு மேல் அவ்விடம் நிற்கக் கூட இயலவில்லை.

“மது…” என்றவனின் அலறல் அக்கானகம் முழுவதும் எதிரொலித்தது.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்