Loading

தன் ஆராவின் வயிற்றில் வளரும் தங்களது குழந்தையின் வருகையால் மெய் சிலிர்த்துப் போயிருந்தான் அபூர்வன்.

 

ஆம்! தங்களது நீண்ட நாள் காத்திருப்பு இன்று கருவாய் உருவாகி இருப்பது தெரிந்ததும் அபூர்வனுக்குச் சொல்லொண்ணா ஆரவாரம் தொற்றிக் கொண்டது.

 

முதலில் ஆராவின் பாதங்களின் அருகில் அமர்ந்தவன் அதில் தெரிந்த அவளது அழகான, குட்டி விரல்களுக்கு மென்முத்தம் வழங்கினான்.

 

அதில் ஒருமுறை ஆராவின் உடலும், உள்ளமும் சிலிர்த்து அடங்கியது. 

 

அவளுக்குள் எத்தனை நாட்கள் இந்த ஏக்கம் இருந்து கொண்டு இருந்தது என்பதை அவள் மட்டும் தானே அறிவாள்! 

 

வெளியாட்களிலிருந்து, தன் மாமியார் வரை எத்தனைக் குத்தல் பேச்சுக்களைக் கடந்து வந்திருக்கிறாள்!

 

இன்று வரைக்கும் அவை மனதில் நீங்காத வடுக்களாக நின்று அவளைத் துன்புறுத்தும் வலியைத் தாங்கிக் கொண்டு இருந்தவள், இன்றோ அந்த வலி முற்றிலும் நீங்கி இந்தக் குழந்தையின் வரவு அவளுக்கு முழுமையான மனதிடத்தைக் கொடுத்து உள்ளது என்றால் மிகையாகாது

 

அபூர்வனுக்கும் தன் மனைவியின் கஷ்டங்கள், அவமானங்கள் அனைத்தும் தெரியும் அல்லவா! எனவே இவளை இமை போல் காத்து, எந்தத் துன்பமும் இனி அண்டக் கூடாது என்பதை எப்போதோ செயலாற்ற ஆரம்பித்து விட்டான்.

 

அதன் பலன் தான் இந்த பரிசோ? என்றெண்ணி ஆராவின் பாத விரல்களில் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்து முடித்த பிறகு நிமிர்ந்து தன் மனையாளைப் பார்த்தான் அபூர்வன்.

 

அவளோ தன் கணவனின் காதல் முத்தங்களைக் கண்களில் காதலைத் தேக்கி வைத்துக் கொண்டுத் தன்னுடைய விழியிலிருந்து வழிந்த கண்ணீர் தன் கன்னங்களைத் தொட்டதையும் பொருட்படுத்தாமல் அந்த நிமிடத்தை ரசித்துப் பூரித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதை அவளது மதிமுகம் காட்டிக் கொடுத்தது.

 

ஈரேழு ஜென்மங்கள் போதாது இந்த சந்தோஷத்தைக் கொண்டாடி மகிழ்வதற்கு! 

 

அது போலத் தான் அபூர்வன் மற்றும் ஆராவின் நிலை இன்று இருந்தது.

 

தங்கள் மகவின் வருகையை வெகுவாய் எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இப்போது பேச வார்த்தைகள் இல்லாமல் போய் விடவும் அங்கே மௌனமே ஆட்சி செய்தது.

 

மெல்ல ஆராவின் அருகில் அமர்ந்த அபூர்வன் அவளது பிறை நெற்றியில் தன் இதழைப் பதித்தான்.

 

அந்த இதழ் ஸ்பரிசம் ஆராவிற்கு அவனது காதலைக் காட்டப் போதுமானதாக இருந்தது எனலாம்.

 

‘தாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் ஆராவைக் குழந்தையின்மையைச் சுட்டிக் காட்டி வார்த்தைகளால் வதைக்கும் போதெல்லாம் அதைப் பற்றி நான் எதுவும் கூறாத போது இவர்களுக்கு என்னப் பிரச்சனை? எங்கள் இருவரது காதலுக்குக் கடவுள் உகந்த பரிசை எங்கள் அன்புக் குழந்தையின் ரூபத்தில் வழங்குவார். அதுவரை நாங்கள் காத்திருப்போம்!’ என்ற இந்த வார்த்தைகள் இப்போதும் ஆராவின் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது.

 

தன் கணவன் தனக்கு உறுதுணையாக இருக்கும் பொழுது வேறெந்தக் கஷ்டமும் நெருங்காது என்பதில் அவளுக்கு உறுதி.

 

ஆனாலும் தங்களது மகவின் வரவைத் உண்மை என்பதை உறுதி செய்யும் விதமாக,”நீ கர்ப்பமாக இருக்கிற விஷயம் உனக்கு எப்படி தெரிய வந்துச்சு?”என மனைவியிடம் வினவினான் அபூர்வன். 

 

“காலையில் எழுந்தப்போ இருந்தே மயக்கம் வர்ற மாதிரியே இருந்துச்சு. இரண்டு, மூனு தடவை வாமிட் பண்ணிட்டேன்! அதே மாதிரி இந்த மாசம் பீரியட் வரலை. அதை வச்சு யூகிச்சேன். ஆனால் இன்னும் அதை உறுதிப்படுத்தலை”என்றுரைத்தாள் ஆரா. 

 

அதைக் கேட்டதும் அவளுக்கு ஏற்படும் உடல் உபாதைகளைக் கொண்டு மட்டுமே குழந்தை உருவானதை அறிந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் அபூர்வன்.

 

“நான் வேனும்னா ப்ரக்னன்சிக் கிட் வாங்கிட்டு வர்றேன். செக் பண்ணிட்றியா ஆரா?”இதைக் கேட்கும் பொழுதே பதட்டம் தான் அபூர்வனுக்கு!

 

ஆனாலும் சரியான முறையில் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டால் அவளுக்கும் நிம்மதியாக இருக்கும் அல்லவா? அதனால் தான் கேட்டான்.

 

“ம்ஹ்ம். வாங்கிட்டு வாங்க. நான் சொன்ன ஸ்வீட், அப்படியே உங்களுக்குச் சாப்பாட்டையும் மறக்காமல் வாங்கிட்டு வந்துருங்க”எனக் கணவனுக்கு அறிவுறுத்தி விட்டு அறைக்குச் சென்று விட்டாள் ஆரா.

 

அவளின் இந்தச் செயலால் புன்னகைத்துக் கொண்டுக் குழந்தைப் பிறக்கும் வரை இவளது குறும்புத் தனங்களை ரசிக்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டுக் கடைக்குச் சென்றான் அபூர்வன். 

 

அறையின் கட்டிலில் சயனிக்கத் தொடங்கியவள் மசக்கைத் தந்த சோர்வில் அப்படியே உறங்கிப் போனாள்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகுக் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தவனோ தனது மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வந்த அபூர்வன் சத்தம் எழுப்பாமல் தனக்கான உணவை இரவு உட்கொள்ளலாம் என்று அதைச் சமையலறையில் வைத்தான் அபூர்வன்.

 

ஆராவிற்காக வாங்கி வந்திருந்த இனிப்புக்களைக் குளிரலமாரியின் மேல் கவரில் சுற்றப்பட்டுப் பத்திரமாக வைத்து விட்டு வந்தவனுக்கு ஒரு யோசனை உதித்தது. அதைச் செயலாற்றவும் முடிவெடுத்தான் அபூர்வன்.

 

சிறிது நேரம் கழித்துச் சாப்பாட்டு மேசை நாற்காலியில் மனைவி அமர்ந்திருப்பதைக் கண்டு அவளிடம் சென்று, 

 

“என்னம்மா தூங்கலையா?”என அக்கறையாக கேட்க,

 

“தூக்கம் போயிடுச்சுங்க”என்றவளிடம், 

 

“நான் பிரக்னன்சிக் கிட்டை வாங்கிட்டு வந்துட்டேன். மத்ததையும் வாங்கிட்டு வந்துட்டேன்”என்றுரைத்தான் அபூர்வன். 

 

“அதைக் கொடுங்க. நான் போய்ச் செக் பண்ணிட்டு வர்றேன்”எனக் கூறிக் குளியலறைக்குச் சென்று சில நிமிடங்கள் கழித்து வெளியேறி அவனது முன்னால் வந்து நின்றாள் ஆரா.

 

“என்னாச்சும்மா?”என்று கண்களில் எதிர்பார்ப்பைத் தேக்கி வைத்துக் கொண்டுக் கனிவானக் குரலில் கேட்க, 

 

உடனே தன்னுடைய கையில் இருந்த ப்ரக்னன்சிக் கிட்டை அவனிடம் நீட்டினாள்.

 

அதை வாங்கிப் பார்த்த அபூர்வனுக்குத் தங்கள் குழந்தை உருவாகி விட்டதைப் பறைசாற்றும் வகையில் அதில் இரு கோடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டிருந்தது. 

 

அதைப் பார்த்ததும் இது நிஜம் தான்!

 

தன் மனைவி தாயாகி இருக்கிறாள்!

 

நாங்கள் இருவரும் பெற்றோராகப் போகிறோம்! 

 

இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டுமே கடவுளே! என்று அனைத்துக் கடவுள்களிடமும் தங்கள் குழந்தையின் நலனிற்காக மனதிற்குள் வேண்டிக் கொண்டான் அபூர்வன்.

 

அவனிடம் அந்தக் கிட் – ஐக் கொடுத்து விட்டு அங்கேயிருந்து நிற்காமல் சென்று விட்டிருந்தாள் ஆரா.

 

அதைக் கூடப் பிறகுத் தான் கவனித்து இருந்தான் அபூர்வன்.

 

தனது மனைவியின் இந்தப் பாராமுகத்தால் மனம் வலித்தாலும் இந்த நேரத்தில் ஆராவிற்குத் தேவையானவற்றைப் பார்த்துப், பார்த்துச் செய்ய நினைத்தான்.

 

அதேபோல், இந்த அழகான தருணத்தை தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து தன் செல்பேசியில் அன்னைக்கு அழைப்பு விடுத்தான்.

 

“ஹலோ அபூர்வா!”எனத் தாயின் குரல் உற்சாகமாய் ஒலித்ததைக் கண்டு இவனுக்கு இதழின் ஓரத்தில் சிறு புன்னகை தோன்றியது.

 

அவர் தங்கள் இருவரிடமும் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறார் என்பதைத் தெரிந்து கொண்டான்.

 

“அம்மா! நீங்களும், அப்பாவும் எப்படி இருக்கீங்க?”என்று எடுத்த எடுப்பிலேயே அவரிடம் விஷயத்தைக் கூறாமல் அவர்களது நலத்தைக் கேட்க ஆரம்பித்தான் அபூர்வன்.

 

“நாங்க நல்லா இருக்கோம்ப்பா. நீயும், என் மருமகளும் எப்படி இருக்கீங்க?”எனத் தானும் மகன் மற்றும் மருமகளின் நலனைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்துக் கேட்டார்.

 

“நாங்களும் நல்லா இருக்கோம்மா”என்று அபூர்வனிடம் இருந்து வந்த அந்தப் பதில் அவருக்குத் திருப்திகரமாக இருந்தது.

 

“சரிப்பா. நீங்க ரெண்டு பேரும் இங்கயே வந்துருங்களேன்! நீயும், ஆராவும் இல்லாமல் எங்களால் முடியலப்பா. கஷ்டமாக இருக்கு! ஆரா மனசு ரொம்ப வேதனைப்பட்டுப் போயிருக்கும்! அதை நான் தானே ஈடு செய்யனும்! என் மருமக ரொம்ப தங்கமான பொண்ணு! இது தெரியாமல் அவளை வார்த்தைகளால் கஷ்டப்படுத்தி இருக்கேன்றது இப்போ வரைக்கும் எனக்கு உறுத்துது! மனசே ஆற மாட்டேங்குது அபூர்வா! ப்ளீஸ் டா! என்னை இந்த ஒரு தடவை மன்னிச்சு நீயும், ஆராவும் இங்கேயே வந்துடுங்க” என்று மகனிடம் உருக்கமாகப் பேசி முடித்தார் நீலவேணி.

 

அவர் சென்ற முறை அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போது ஆராவின் அன்பான அணுகுமுறைகள் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதே! 

 

அதேபோல் தானும் அவளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

 

அதனால் தான் மகனிடம் இவ்வாறு பேசியிருந்தார் நீலவேணி

 

“அம்மா!”என ஆரம்பித்து, தாயிடம் அவனும், மனைவியும் பெற்றோராகப் போவதைக் கூற எத்தனித்தவனை அவன் செல்பேசியில் பேச ஆரம்பித்த போதே அங்கே வந்திருந்த ஆராவோ அவனது கையைப் பற்றித் தடுத்தாள்.

 

அதில் மனைவியைப் பார்க்கவும், அவளோ,’வேண்டாம்’ என்று தலையசைக்க, அவன் என்னவென்று கூடக் கேட்காமல் தாயிடம், 

 

“சரிம்மா. நான் ஆராகிட்ட இதைப் பத்திப் பேசிட்டுச் சொல்றேன்”என்றுரைத்து அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு மனைவியிடம், 

 

“அம்மா நம்மளை அங்கே வரச் சொல்றாங்க ஆரா. ரிக்வஸ்ட் தான் செய்தாங்க. நீ என்ன சொல்ற?”என்று அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான் அபூர்வன்.

 

அதையே தான், நீலவேணி இவர்கள் வீட்டிற்கு வந்திருந்த போது இவளிடமும் வேண்டுகோளாக வைத்து விட்டுச் சென்றிருந்தாரே!

 

“ம்ஹ்ம். இரண்டு நாள் கழிச்சுப் போகலாம். நேரில் போய் நான் கர்ப்பம் ஆக இருக்கிறதை அவங்க கிட்ட சொல்லிக்கலாம். இப்போ ஃபோனில் சொல்ல வேண்டாம்”என்றிருந்தாள் ஆரா.

 

ஆனால் இப்போதும் கூட அவளது ‘அபூ’ என்ற வார்த்தையைக் கேட்க முடியவில்லையே என்று ஏங்கிப் போய் விட்டான் அபூர்வன்.

 

ஆனால் அவளோ அந்த வார்த்தையை மறந்தும் உபயோகித்தாளில்லை.

 

“எனக்குத் தானே பிறந்த வீடுன்றது இல்லாமல் போச்சு. எங்க அப்பா, அம்மா இறந்து ரொம்ப வருஷம் ஆச்சு. அத்தை, மாமா கூடத் தங்கி அதை மறக்க முயற்சிப் பண்றேன். நாம சர்ப்ரைஸ் ஆக அங்கே போவோம்”என்றவளது கைகள் தன் வயிற்றில் இருக்கும் கருவை ஆதூரமாக வருடிக் கொடுத்தது.

 

அந்தக் கருவின் வரவால் அவளது கோபம் சற்றுத் தணிந்து தான் போயிருக்கிறதே தவிர மறைந்து போகவில்லை.

 

தான் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அபூர்வனிடம் பிரிவைப் பற்றிப் பேச வேண்டாம், இருவருக்கும் இடையில் எந்த மனஸ்தாபமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான் இப்போது அமைதியாக இருந்து வருகிறாள் ஆரா.

 

அதே சமயம், தான் கருவுற்றிருக்கும் விஷயத்தைக் காரிகாவிடம் கூற எண்ணியவள் அவளுக்கு அழைத்தாள்.

 

ஆனால் அவள் அழைப்பை ஏற்காததால் அவள் தனக்குத் திரும்ப அழைக்கும் பொழுது சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள் ஆரா.

 

காரிகாவின் வீட்டில் என்ன நிலவரம் என்பதைக் கூட இவளால் அறிய இயலவில்லை.

 

வாழ்வில் கஷ்டத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கும் காரிகாவிற்கு விடியல் என்ற ஒன்றை நிச்சயம் தன்னால் உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தாள் ஆரா.

 

ஏனெனில் காரிகாவிற்கு நேர்ந்தவற்றை எல்லாம் உடனிருந்து பார்த்தவளாயிற்றே!

 

அதனால் ஏற்பட்ட அனுதாபமும், தோழிக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற வைராக்கியமும் தான் ஆராவைச் சுயநலமாக செயல்பட தடுக்கிறது.

 

தற்போது தன் கணவனையும் காயப்படுத்துவதற்கு அதுவே முதன்மையான காரணமாகி விட்டிருந்தது! 

 

ஆனால் எப்படியும் தன் பெற்றோரிடம் சென்றப் பிறகு ஆராவிற்கும் மசக்கை ஆரம்பித்து விடும். அதனால் அவள் காரிகாவிடம் அவ்வளவாக உரையாட மாட்டாள்.

 

எனவே அந்த நேரத்தில் அவளைப் பற்றியும், காரிகாவைப் பற்றியும் அவர்கள் படித்தக் கல்லூரிக்குச் சென்று அங்கு விசாரித்து விடலாம்.

 

இது ஆராவிற்கு மட்டும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

இந்தங் சமயத்தில் அவளை அதிகம் கோபப்படுத்தவோ, உணர்ச்சி வசப்படுத்தவோ கூடாது!

 

ஆரா மகிழ்ச்சியாக இருந்துக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும். 

 

அதனால் அவளுக்குத் தன்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தெரியக் கூடாது என்று உறுதியாக இருந்தவனோ, இவை அனைத்தையும் மிக, மிக கவனமாகவே செய்ய எண்ணினான் அபூர்வன்.

 

இவை எல்லாம் தன் மனைவிக்காத் தானே?

 

அதிலும் முக்கியமாக அவளது மனநலனுக்காகத் தானே?

 

இதை முயன்று பார்த்து விடலாம், காரிகாவைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தப் பிறகுத், தான் மட்டும் தனியாகச் சென்று அவளைச் சந்தித்து விட வேண்டும். 

 

அப்படி காரிகாவிற்கு என்ன தான் பிரச்சினை? ஆரா கூறிய விஷயத்திற்குப் பிறகு அவளுக்கு என்ன நடந்தது? இன்னும் அவள் ஏன் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாள்? 

 

ஆராவின் உதவி இல்லாமல், அவள் காரிகாவின் கதையைக் கூறாமல் இவற்றை எல்லாம், தானே கண்டறிந்து தீர்வு காண முயல்வோம் என்று முடிவெடுத்தான் அபூர்வன்.

 

தன் மனைவிக்காக அவன் எடுக்கும் முயற்சிகள் யாவற்றையும் தான், அவள் மேல் தனக்கு ஏற்பட்டு இருக்கும் ‘சந்தேகம்’ என்று முத்திரைக் குத்தி விட்டாளே?

 

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தக் காரியத்தையும் கேள்வியுற்றால், அவளது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதெல்லாம் இப்போதைக்கு அவன் யோசித்துப் பார்ப்பதாக இல்லை.

 

தன்னால் முடிந்தவரை தான் செய்யப் போகும் அடி முதல் நுனி வரையிலான காரியங்கள் சிறிதளவும் தனது மனைவிக்குத் தெரிந்து விடக் கூடாது என்றத் தவிப்பு தான் அபூர்வனுக்குள் இருந்தது.

 

தன் இரவு உடையை மாற்றி விட்டுத் தங்களது அறைக்குள் வந்தான்.

 

அங்கே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஆராவின் அந்த அமைதியான உறக்க நிலை அவனையும் அமைதியடையச் செய்தது.

 

பரிசுத்தமான காதலைப் பறைசாற்ற நெற்றி முத்தத்தை விட வேறெதுவும் இல்லை என்பதைப் போல் மனைவியின் பிறைநுதலில் தன் இதழ் கொண்டு முத்தம் கொடுத்தான்.

 

அப்படியே அவளது கரம் பற்றித் தலையை வருடிக் கொடுத்தவாறே தானும் உறங்கத் தொடங்கினான் அபூர்வன்.

 

– தொடரும்

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்