
தழும்பு விஷயத்தைப் பற்றிக் கேட்டதும் தடுமாறல், அதிர்ச்சி இவை யாவும் ஆராவின் முகத்தில் நிறைந்து இருக்கும் என்று அவளது முகத்தைக் கூர்ந்து கவனித்த அபூர்வனுக்கு ஏமாற்றமே மிச்சம்!
ஏனெனில், தழும்பைப் பற்றிக் கேட்டதும் அவளது முகம் அந்த மாதிரியான எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் முன்பை விட உறுதியாக இருந்ததைக் கண்டு அவனுக்குத் தான் தடுமாற்றம் ஏற்பட்டது.
“என்ன கேட்டீங்க அபூர்வன்? என் முதுகில் இருக்கிறத் தழும்பு எப்படி வந்துச்சுன்னு தானே கேட்டீங்க? அவ முதுகில் சூடு வச்சதால் பெருசாகத் தழும்பு இருக்கும். ஆனால் என் முதுகுல இருக்கிறது சின்னது தான்! அது எனக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்துல ஆனத் தழும்பு! அதுக்கும், இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை”என்று அவனிடம் விலாவாரியாக அந்தத் தழும்பைப் பற்றிக் கூறி விடவும்,
அதைக் கேட்டு அபூர்வனுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது!
ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவளிடம் மேலும் பேசும் விதமாகத் தனது வாயைத் திறந்த போது,
“வேற என்னச் சாட்சியைக் காமிக்கனும் அபூர்வன்?”என்றவளிடம் இருந்த அதே நிமிர்வு இன்னும் அவளை விட்டுப் போகவில்லை.
ஆனால் அபூர்வன் தான் சோர்ந்து போய் விட்டான்.
“ஓகே ஆரா. எதுவாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை. ஆனால் நீ இனிமேல் அந்தப் பொண்ணுக் கிட்டப் பேசக் கூடாது! எனக்கு உன் மென்டல் ஹெல்த் தான் ரொம்ப முக்கியம்”எனவும்
அவளுக்குத் தனது கணவன் இந்த மாதிரியான உத்தரவிடுவதைப் போல் பேசஉம் தோரணை மிக, மிகப் புதிதாகத் தெரிந்தது.
எந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் கலந்து, பேசி முடிவெடுத்து தான் அதைச் செய்வர். ஆனால் உப்புச்,சப்பில்லாத காரணத்திற்காகத் தன் தோழியிடம் பேசவே கூடாது என்று கட்டளையிட இவனுக்கு எவ்வாறு மனம் வந்தது?
அதனாலேயே,”எனக்குச் சலிச்சுப் போச்சு அபூர்வன்! நாம இதைப் பத்தியே பேசிட்டு இருக்கோம். நீங்கச் சொல்றதையும் என்னால கேட்க முடியாது! அதனால் நான் முன்னாடியே சொன்ன மாதிரி இந்தக் கதையைச் சொல்லி முடிச்சதுக்கு அப்பறம் நாமப் பிரிஞ்சுடலாம்! அது தான் என்னோட கடைசி முடிவு!”என்றவளுக்கு அவன் காரிகாவைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவது பிடிக்காது போக இந்த முடிவிற்கு வந்திருந்தாள்.
அவள் பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கு முதல் முக்கிய காரணம், அவளைப் பைத்தியம் என்பது போல் பார்த்துக் கொண்டும், பயந்து கொண்டும் இருப்பவனுடன் ஆராவிற்கு வாழ்வது என்பது கசந்து போயிற்று.
அதனால் தான் இதுவே தனது இறுதி முடிவு எனக் கூறி விட்டாள்.
இதற்குப் பிறகும் என்னவெல்லாம் நிகழப் போகிறதோ? என்ற விரக்தியின் உச்சத்திற்கேச் சென்று விட்டவனோ,
“ஆரா! கதை சொல்ற வரைக்கும் நீ என் கூட இருப்பேன்னு சொன்னதே போதும். ஆனால் நாமப் பிரியறது எனக்குப் பிடிக்கலை! நான் இன்னும் உன்னை லவ் பண்ணிட்டு இருக்கறதால் தான் நான் இப்படி எல்லாம் சொல்றேன்! நான் உன்னை இப்பவும் அளவுக்கதிகமாக லவ் பண்றேன்!”என அவளிடம்,
‘நான் உன்னை அந்த அளவிற்கு காதலிக்கிறேன்!’என்று அவளிடம் தன் மனமுவந்து சொல்லும் போதே தனது விழிகள் பனிக்க ஆரம்பிப்பதைக் உணர்ந்து கொண்டு அதற்கு மேல் அங்கிருந்து அழுவதை விரும்பாமல் அடக்கிக் கொண்டு,”நான் போய் ரெடி ஆகுறேன்”எனக் கூறி விட்டு அங்கேயிருந்து அகன்றுத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டுக் குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் அவளை கண்டு கொள்ளாமல், அமைதியாக அலுவலகத்திற்குச் செல்வதற்காகத் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டான்.
“அபூ! இது நியாயமே இல்லை! ஏன் என்னை இப்படி ஒரு சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க? நானும் உங்களை ரொம்ப லவ் பண்றேன்! ஆனால் நீங்க என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க”என்று தன் கணவன் கிளம்பும் வரை வாயைத் திறவாயல் என்னமோ, ஏதோ! நமக்கென்ன வந்தது என்பதைப் போல் இருந்தவள் இப்போது அவளவனிடம் மானசீகமாக உரையாடிக் கொண்டு இருக்கிறாள்.
இந்த நேரத்தில் சரியாக அவளுக்குக் காரிகாவிடம் இருந்து அழைப்பு வருகிறது.
அதை ஏற்றுப் பேசலானாள் ஆரா.
“ஆரா!”என்றக் காரிகாவின் குரல் அவள் அழுகையை அடக்கிக் கொண்டுப் பேசுவதைப் போல் காட்டியது.
“காரிகா! அழுறியா? அங்க என்னப் பிரச்சனை? நீ நல்லாத் தானே இருக்கிற?”என்று தோழியின் குரலில் தெரிந்த தொய்வின் காரணமாக, ஆராவிடம் இருந்து கேள்விகள் அம்பு வேகத்தில் வந்தது.
சில நிமிட நிசப்த அமைதிக்குப் பிறகு, சிறு கேவலுடன் பதில் அளிக்க ஆயத்தமானாள் காரிகா.
“பரவாயில்லை ஆரா. ஆனால் மனக் காயங்களை மறுபடியும் கீறி விட்டால், அது சீழ்ப் பிடித்து, ஆழமாக காயமாகிடுமே! அதிலிருந்து வர்ற வலி உயிர் வலியாகுதே! இந்த நிமிஷம் என் குழந்தைக்காக எதையும் சமாளிக்கனும்னுத் தோனுது! இப்பவும் என் மனசு ஒரு நிலையில இல்லை ஆரா! ஆனால் உங்கிட்டப் பேசினாலே ஆறுதலாக இருக்கு”என்று தன் வாழ்வில் அவளுடனான உரையாடல் எவ்வளவு முக்கியம் என்பதை அவளிடம் பகிர்ந்து கொள்ள,
“காரிகா! உன் ஹஸ்பண்ட் ஊர்ல இருந்து வர்ற வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையாக இரு. அவர் வந்துட்டால் உனக்கு இனிமேல் பிரச்சினையே வராதுல்ல? அண்ணா கிட்ட ஃபோன் பேச முடியலைன்னாலும் அவரைப் பற்றிய நினைவுகள் உன் கூட இருந்து, உன் மனசைப் பலப்படுத்தும்! நம்பிக்கையோட இரு. நல்லதே நடக்கும்”என்று அவளுக்கு ஆறுதல் அளித்தாள் ஆரா.
வாழ்வில் ஒரு சிலரே இப்படியான நேர்மறை எண்ணங்களை நமக்குள் விதைத்துக் கொண்டு இருப்பர்.
அவர்களுடன் பல மணி நேரம் கூட இல்லை, ஒரு சில நிமிடங்கள் உரையாடினாலே போதும்! நாமும் அத்தகைய நேர்மறையான மனநிலைக்கு மாறி விடுவோம், இல்லையெனில் அவர்கள் நம்மை அப்படி மாற்றி விடுவர்.
அதேபோல் தான், காரிகாவிற்கு ஆராவிடம் தனிப் பிரியம் இருக்கிறது!
ஒந்த சூழ்நிலையிலும் அவளுடனேயே இருக்கும் தோழியை காரிகாவிற்குப் பிடிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்!
“காரிகா! இனிமேல் என்னால் உனக்கு அடிக்கடி கால் பண்ணிப் பேச முடியாத சூழ்நிலை! நீ உனக்கு ரொம்ப அவசரம்ன்னா, யோசிக்காமல் எனக்குக் கால் பண்ணு! நான் கண்டிப்பாக உனக்கு உதவிப் பண்ணுவேன்! இங்கே அபூவுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருக்கு! அதனால் நான் அவரைச் சரி செய்யனும். அதனால் கொஞ்ச நாளைக்கு நீ உன்னையும், குழந்தையையும் பாத்துக்கோ”என்று அபூர்வனின் முன்னிலையில் காரிகாவிடம் செல்பேசியில் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவனுக்குத் தன் மேல் வெறுப்பு ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு விஷயத்தைக் கொண்டுச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்து தான் இவளிடம் இவ்வாறு கூறியிருக்கிறாள்.
“நீ சொன்னால் ஓகே ஆரா! நான் அப்பறம் பேசறேன்”என்று அவள் அழைப்பைத் துண்டித்ததும் ஆராவிற்கு மதிய உணவைத் தயாரித்து உண்ணும் எண்ணம் இல்லை.
எனவே, அடுத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகுச் சமைத்து சாப்பாட்டுக் கொள்ளலாம். அதுவரை என்ன செய்யலாம்? என்று யோசித்தவளுக்கு ஒன்றும் பிடிபடாததால் அப்படியே சோபாவில் அமர்ந்தவாறே, அபூர்வனுக்கும், தனக்கும் இடையில் எப்போதும் இருக்கும் அந்த அளப்பரியாக் காதலின் நினைவுகளின் உதவியுடன் கண் அயர்ந்தாள் ஆரா.
ஆனால் அவள் கண் விழிக்கும் போது, மணி மூன்றைத் தாண்டி இருக்க, சமையல் செய்யும் எண்ணத்தைக் கை விட்டவள் வீட்டில் எப்போதும் இருக்கும் பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து, தேநீரையும் தயாரித்தாள்.
அதைப் பருகிக் கொண்டே அதில் பிஸ்கெட்டை முக்கி எடுத்து உண்டாள்.
அதிலேயே அவளுக்கும் வயிறு நிரம்பியது.
காரிகாவிற்கு நம்பிக்கை வருமாறு பேசியது அவளுக்கும் நிம்மதியாக இருந்தது.
தன் அலுவலகத்தில் வேலையைச் செய்யத் தோன்றாமல் தனது மனதில் அழுத்தும் பாரம் உடலையும் சோர்வுறச் செய்வதை உணர்ந்தான் அபூர்வன்.
அத்துடன் இரவு உறங்காமல் இருந்தானல்லவா? அந்த உறக்கம் இப்போது அவனது கண்களைச் சுற்றி வலம் வர ஆரம்பித்தது.
‘இனி தாங்காது வீட்டிற்குச் சென்று உறங்கி விடலாம்’ என்ற நோக்கத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருந்தாலும் அதிலும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அபூர்வன்.
தன்னிடமிருந்த மாற்றுச் சாவியை உபயோகித்து வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
முன்பு அவன் வீட்டிற்கு வரும் சமயங்களில் எல்லாம் தங்களது வீட்டிற்கு முன்னால் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து, எதையாவது கொறித்துக் கொண்டுத் தன் செல்பேசியில் தோழியுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் அந்தத் தரிசனம் தான் அவனுக்குக் கிடைக்கும்.
ஆனால் இப்போதோ அந்த இடம் வெறிச்சோடி இருந்தது.
அதை யோசனையாகப் பார்த்து விட்டு வரவேற்பறைக்கு வந்தான் அபூர்வன்.
அவனது அப்போதைய நேர வரவு ஆராவிற்கே விநோதமாகப்பட்டது.
நான்கு மணிக்குப் பிறகே அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டேன் எனத் தெரிவித்தப் பிறகு தான் இங்கு வருவான்.
ஆனால் இப்போது அந்த நேரத்திற்குள்ளாகவே இங்கு வந்து நிற்பதற்குக் காரணம் அவன் தன்னைச் சந்தேகப்படுகிறான் எனத் தவறாக நினைத்து விட்டாள் ஆரா.
ஆனால் சோர்வாக மனைவி இருந்த சோபாவை நோக்கி அடியெடுத்து வைத்தான் அந்தக் கணவன்.
“சீக்கிரம் வந்துட்டீங்க! என் மேல் அவ்வளவு சந்தேகமா?”என்று தன் மனம் ஆற மாட்டாமல் அவனிடம் கேள்வியைக் கேட்டாள் ஆரா.
அதைக் கேட்டு,”அடப் போடி!”என்று சலித்துக் கொண்டான் அபூர்வன்.
அவன் கஷ்டம் அவனுக்கல்லவா தெரியும்?
இரவு தூங்காமல் இருந்ததன் விளைவாக இப்போது வந்த உறக்கம் தன்னால் அவனைச் செயலிழக்க வைத்து இருந்தது.
அவனது கண்கள் மெது,மெதுவாக உறக்கத்திற்காகக் கெஞ்சின.
“கேள்விக் கேட்டால் பதிலே சொல்ல மாட்டாரே! நான் மட்டும் பதில் சொல்லனும்”என ஆற்றாமையில் பொருமினாள் ஆரா.
இவனுக்குத் தான் என் மேல் காதலே போய் விட்டதே!
அது இருந்த இடத்தில் தான் சந்தேகம் வந்து குடி கொண்டு விட்டதே! என்று அவளின் மனம் தன் கணவனைப் பற்றித் தவறாகச் சிந்திப்பதை நிறுத்தவில்லை.
“பதில் சொல்லுங்க அபூ!”என்றவளுக்குத் தலை சுற்றுவதைப் போல் தோன்றத் தன்னை நிலைபடுத்திக் கொள்ளக் கூட முடியாமல் மயங்கிச் சரியலானாள் ஆரா.
அவள் பேசுவது வரை அமைதியாக இருந்தான் அபூர்வன்.
அவள் மயங்கி சரிந்ததும் அனைத்தையும் மறந்து உடனே அவளைத் தாங்கிக் கொண்டான்.
அந்தப் பதட்டத்தில் உறக்கம் தொலைந்து போயிற்று.
“ஆரா! என்னம்மா ஆச்சு? கண்ணத் திறம்மா”என அவளது கன்னத்தைக் தட்டிப் பார்த்துப் பலனின்றிப் போனதால் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை கையில் ஊற்றி
அதை மனைவியின் முகத்தில் தெளித்து விட்டு அவள் கண் திறக்கும் வரை பொறுத்திருந்தான்.
சில மணித்துளிகள் கடந்ததும் மெல்லக் கண் விழித்துப் பார்த்த ஆராவிற்கு அபூர்வனின் உறக்கம் தொலைந்து கருவளையம் சுற்றி இருந்த கண்கள் தான் தெரிந்தது.
தன்னைச் சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்து கொண்டாள்.
அவள் மறந்தும் அபூர்வனிடம் உதவி கேட்கவில்லை.
“நீ காலையிலும், மதியமும் சாப்பிடலையா ஆரா?”என்று அவளது மயக்கம் உணவுண்ணாதது தான் காரணமாக இருக்கும் என்று தான் நினைத்தான் அபூர்வன்.
“குழந்தை பிறந்ததும் நாமப் பிரியறதைப் பத்தி யோசிப்போம் அபூர்வன்! எனக்கு வாய்க்கு ரொம்ப கசப்பாக இருக்கு! ஸ்வீட் ஏதாவது வாங்கிட்டு வர்றதுன்னாப் பால்கோவா, சோன் பப்டி வாங்கிட்டு வாங்க. மதியம் சாப்பாடு செய்யலை! உங்களுக்கு மறக்காமல் வெளியே ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வந்துருங்க”எனச் சோபாவிலேயே சயனிக்கும் நிலையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள் ஆரா.
அவள் கூறிய விடயத்தில் இருந்த மறைமுகமாகச் சொல்லப்பட்ட செய்தியைத் தாமதமாகக் கணித்தவன் அதில் நெகிழ்ந்து போய் அவளது முன்னால் மண்டியிட்டு அமர்ந்து ஆராவின் மணி வயிற்றில் தன் முகம் புதைத்தான் அபூர்வன்.
தன் குழந்தையின் வருகையைக் கேள்வியுற்றதும் பொலிவிழந்த கண்களும், சோர்வடைந்த மனமும் அவனைப் புது மனிதனாக உருமாற்றின.
“ஆரா!”
– தொடரும்

