
மறுநாள் முதல் வேளையாக ஆபூர்வனிடம் வந்தாள் ஆரா.
அவனோ தன் சட்டைக் காலரைச் சரி செய்து கொண்டு இருப்பதிலேயே தெரிந்தது அவன் அலுவலகத்திற்குச் செல்வதற்குக் கிளம்பிக் கொண்டு இருக்கிறான் என்பது!
அதனால் அவன் தயாராகும் வரைக் காத்திருக்க முடிவெடுத்து அங்கேயிருந்து அகன்று விட்டாள் ஆரா.
கால் மணி நேரத்திற்குப் பிறகு அவனிடம் மீண்டும் வந்த ஆராவை,’என்ன’என்பதைப் போல் பார்த்தான் அபூர்வன்.
“பிரேக்ஃபாஸ்ட் ரெடியாக இருக்கு! சாப்பிட வாங்க”என்றவளைப் பார்த்தவனோ,
அவள் தன்னைக் கடமைக்காகத் தான் உணவுண்ண அழைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் அபூர்வன்.
தன் மனைவி இவ்வாறு நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது எப்படி இருந்தவளை, நான் எப்படி மாற்றி உள்ளேன்? என்றெண்ணித் தன்னையே வெகுவாக நொந்து கொண்டான்.
ஆனாலும் தன்னுடைய காலை உணவை உண்பதற்காகச் சாப்பாட்டு மேசை நாற்காலியில் வந்தமர்ந்தவன் அமைதியாகத் தனது தட்டில் உணவைப் பரிமாறிக் கொண்டிருக்கும் தன்னவளைத் தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் அபூர்வன்.
தன் கணவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தாலும் அவனை ஏறிட்டும் பார்க்காமல் உணவுப் பரிமாறுவதிலேயேக் கவனமாக இருந்தாள் ஆரா.
பரிமாறி முடித்ததும் கணவனைப் பார்த்தவள் அவன் இன்னும் கண்களைத் தன்னில் இருந்து எடுக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டவளோ,
“சாப்பிடப் பிடிக்கலயா?”என்று எப்போதும் போலவே இப்போதும் அவனிடம் நிதானமாகவே கேட்டாள்.
அதில் புன்னகைத்தவன் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் உணவுத் தட்டைத் தன்புறம் நெருக்கி வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்து விட்டான் அபூர்வன்.
தனக்குப் பதில் கூறாமல், உணவு வேண்டாம் என்று மறுக்காமல் அவன் பாட்டிற்கு, உண்ணத் தொடங்கியதைக் கண்டதும் அவளுக்கும் நிம்மதியாகத் தான் இருந்தது.
சிறிது நேரம் கழித்து உணவுண்டு முடித்தவன் தட்டைத், தானே கழுவி வைத்து விட்டு வந்தான் அபூர்வன்.
இது எப்போதும் அவனது அன்றாடப் பழக்கங்களில் ஒன்று. தான் உண்டத் தட்டைக் கழுவி வைப்பது, மனைவிக்குச் சமையலில் உதவுவது இந்த மாதிரியான வேலைகளைத் தாமே முன் வந்து செய்வான்.
இப்போதும் அந்த வேலையைச் செய்து முடித்தவன் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகி விட்டு,
“ஆரா! இங்கே வாயேன்”என்று மனைவியை அருகில் அழைத்தான்.
அவளும் ஏதோ விஷயம் சொல்லப் போகிறான் என்று அவனருகில் சென்றாள்.
ஆனால் நொடியில் அவளது மென் கன்னத்தில் அழுத்தமான முத்தமொன்றைப் பதித்து விட்டு விலகி இருந்தான் அபூர்வன்.
அதில் திடுக்கிட்டுப் பின்னர் தன்னைக் கோபமாகப் பார்த்தவளைக் கண்டுச் சிரித்தவனோ,
“நீ என் மேல் கோபமாக இருக்கறது கூட லவ்னால தானே? நான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, நீ என் மேல் இப்போ மறைச்சு வைச்சு இருக்க லவ்வையும் ஒட்டு மொத்தமாக எனக்கே எனக்குன்னுக் கூடிய சீக்கிரத்திலேயே சொந்தமாக்கிக்கிறேன்! பை ஆராம்மா”என அவளின் கோபத்தில் மையல் கொண்டவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுக் கிளம்பிச் சென்றான் அபூர்வன்.
இதே சமயம் தன் கணவனின் இந்தச் செயல்கள் யாவும் தன்னுடைய உறுதியைத் தகர்த்து விடுமோ! என்று கவலை கொண்டாள் ஆரா.
அந்தச் சமயத்தில் அவளது செல்பேசி ஒலித்தது.
அதை எடுத்துப் பார்த்தவளோ அது தன்னுடைய தோழியிடமிருந்து வரும் அழைப்பு என்றதும் தாமதிக்காமல் ஏற்றுக் காதில் வைத்துப் பேச எத்தனிக்க,
அதற்குள் தானே பேசத் தொடங்கி விட்டாள் காரிகா.
“ஹலோ ஆரா! கால் பண்ணி இருந்தியே! அபூர்வன் அண்ணாவும், நீயும் சந்தோஷமாகத் தானே இருக்கீங்க? அங்கே எதுவும் பிரச்சினை இல்லையே?” என்றக் காரிகாவிற்குப் பதட்டமாக இருந்தது.
ஆரா தனக்குக் கால் செய்து இருந்ததை தாமதமாகத் தான் பார்த்திருந்தாள் காரிகா.
அதனால் இன்னும் தாமதம் செய்யாமல் இன்றைக்கு உடனே அவளுக்கு அழைத்திருந்தாள்.
“நாங்க ரெண்டு பேரும் சூப்பராக இருக்கோம்டி! உன்னைக் கால் பண்ணாதேன்னு சொல்லிட்டு நான் கால் பண்ணிட்டேன். சாரி காரிகா”எனத் தோழியிடம் மன்னிப்புக் கேட்டாள் ஆரா.
“இதுக்கு எதுக்குடி சாரி கேட்கிற?சரி சொல்லு! என்ன விஷயம்?”என்று அவள் என்ன விஷயமாக அழைத்துள்ளாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டாள் காரிகா.
“ரிகா! நான் கர்ப்பமாக இருக்கேன் டி”சொல்லும் பொழுதே மகிழ்ச்சியிலும், நெகிழ்விலும் புன்னகைத்தாள் ஆரா.
அதைக் கேட்டதும்,”ஹேய் சூப்பர்டி! கங்கிராட்ஸ்! என்னோட ஆராவுக்குக் குழந்தை வரப் போகுதா? எனக்கு ரொம்ப ஹேப்பியாக இருக்குடி”என்று அவளுக்கு ஆராவிற்கு இணையாக காரிகாவிற்கும் இந்த விஷயத்தைக் கேட்டதும் மகிழ்ச்சி உண்டானது.
“தாங்க்யூ சோ மச் ரிகா! ஆமாம், அங்கே நிலவரம் எப்படி இருக்கு? நான் என்னக் கேட்கிறேன்னா உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை தானே? இப்போ எல்லாரும் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்க?”என்று தோழியைப் பற்றி அளவுக்கு அதிகமாகவே பதட்டப்பட்டாள் ஆரா.
“நீ முதல்ல அமைதி ஆகு! ஏன் ரொம்பப் பதட்டம் ஆகுற? இங்கே எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியே இருந்தாலும் நான் அதைப் பான்த்துக்கிறேன். நீ முதல்ல நல்லா ஓய்வெடு. கர்ப்பமாக இருக்கும் போது உனக்கும், அபூர்வன் அண்ணாவுக்கும் ஒருத்தர் கூட ஒருத்தர் நேரம் செலவழிக்கனும்னுத் தோனும். அதனால் நீ அண்ணாகிட்ட நல்லபடியாக பேசு. என்கிட்ட பேசனும்னுத் தோனுனா மட்டும் பேசு. அதுவே போதும்! அப்பறம் இந்த நேரத்தில் உன்னோட மனநிலையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் வரும். அதை நீ தான் தெளிவாகப் புரிஞ்சிக்கிட்டுக் கையாளனும். அண்ணாவையும் பாத்துக்கோ. அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதே! இப்போ நான் கால் கட் பண்றேன் ஆரா”என அவளுக்குச் சில அறிவுரைகளை மட்டும் தெளிவாக எடுத்துரைத்து விட்டு அதற்கு மேல் தோழியிடம் பேசாமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள் காரிகா.
அதில்,”என்னைப் பதில் கூட சொல்ல விடாமல் கட் செய்துட்டாளே!”என்றெண்ணியவளோ,
இவளுக்கு என்ன ஆயிற்று? அங்கு எதுவும் சங்கடம் நேர்ந்ததா? ஒன்றும் விளங்கவே இல்லையே என்ற யோசனையில் ஆழ்ந்தாள் ஆரா.
அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்வதாக மனைவியிடம் உரைத்து விட்டு வந்திருந்த அபூர்வனோ தனது மேலதிகாரியிடம் இன்றைக்கு அரை நாளுக்கு மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்வதாக விண்ணப்பம் வைக்க, அதற்கு அவரும் சம்மதித்து அவனுக்கு அரை நாள் விடுப்புக் கொடுத்து விட்டிருந்தார்.
ஏனென்றால், அபூர்வனின் அன்றைய முக்கியமான வேலையே காரிகாவைப் பற்றி விசாரிப்பது தானே?
தன் மனைவி பயின்றக் கல்லூரியை அடைந்தவனோ அங்கிருந்த அலுவலகத்திற்குச் சென்று ஆராவைப் பற்றியும், காரிகாவைப் பற்றியும் விசாரித்தான்.
அதற்கு அங்கிருந்தவர்களோ,”அவங்களோட டிபார்ட்மெண்ட்டில் கேளுங்க சார். அங்கே ஹெச். ஓ. டி அப்பறம் அவங்களோட கிளாஸ் இன்சார்ஜ் உங்களுக்குத் தெளிவானப் பதிலைச் சொல்லுவாங்க”எனக் கூறி விடவும் தனது மனைவியும், காரிகாவும் பயின்றத் துறையின் தலைவரைக் காண ஆசிரியர்களின் ஒய்வறைக்குப் போய்
அங்கு அமர்ந்து இருந்தப் பெண் தான் துறைத் தலைவர் என்பதைக் கண்டு கொண்டதும் அவரிடம் சென்று,
“குட் மார்னிங் மேம்! என் பேர் அபூர்வன். உங்களோட ஓல்ட் ஸ்டூடண்ட் ஆராவோட ஹஸ்பண்ட்”என அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஓஹோ! ஆராவோட ஹஸ்பண்ட் ஆ? அவ ரொம்ப நல்ல பொண்ணாச்சே! எங்க டிபார்ட்மெண்ட்டோட பெஸ்ட் ஸ்டூடண்ட்! அவ எங்க எல்லாருக்கும் செல்லம்”என்று ராவைப் பற்றிய நற்சான்றிதழ் வழங்கினார்.
“ரொம்பத் தாங்க்ஸ் மேம். எனக்கு ஆராவோட ஃப்ரண்ட் காரிகாவைப் பற்றியும் தகவல்கள் வேணும். இது முழுக்க, முழுக்கப் பர்சனலாக இருக்கட்டும் மேம். இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்”எனக் கேட்டுக் கொண்டவனிடம்,
“காரிகாவா? அப்படி யாரும் இங்கேப் படிக்கலையே சார்?”என்று,’காரிகா’ என்றப் பெயரையே அப்போது தான் முதல் முறையாக கேள்விப்பட்டதைப் போல் பேசினார் அந்தப் பெண்மணி.
“என்ன சொல்றீங்க மேம்?”என்று அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டிருந்தான் அபூர்வன்.
அதை உணராத துறைத்தலைவர் மேலும் கூறலானார்.
“ஆமாம் சார். இங்கே காரிகான்னு எந்த ஸ்டூடண்ட்டும் படிக்கல”என்றவரது உறுதியான குரல் வேறு அபூர்வனை மிரளச் செய்தது.
“எதுக்கும் நீங்க ஒரு தடவை எனக்காக செக் செய்து பாருங்க மேம். ப்ளீஸ்!”என
அவருக்கு மறந்து கூட போயிருக்கலாமே? என்று தோன்றியதால் அவ்வாறு கேட்டுக் கொள்ள,
“நான் இங்கே இருபது வருஷமாக ஹெச்.ஓ.டி ஆக இருக்கேன்! இதுவரைக்கும் அப்படி எந்த ஸ்டூடண்ட்டும் இங்கே படிச்சது இல்லைன்னு என்னால் கன்ஃபார்ம் ஆகச் சொல்ல முடியும். ஆனால் இருந்தாலும் நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறதால் நான் செக் பண்றேன்”எனக் கூறி விட்டு அங்கிருந்த மேசையின் ட்ராயரைத் திறக்கவும் அதில் அனைத்து வருடங்களுக்கும் தனித் தனியாக வருகைப் பதிவேடுகள் இருந்தன.
அதில் ஆரா படித்த வருடத்தின் வருகைப் பதிவேட்டைச் சரியாக எடுத்தவர் அதில் காரிகா என்ற பெயரைத் தேடிப் பார்த்தார்.
ஆனால் அவளது இதழ் சுழிப்பே அந்தப் பெயர் அதில் எதிலும் இல்லை என்பதைத் தெளிவாய் உணர்த்தியது அபூர்வனுக்கு.
“காரிகான்றப் பேர் இல்லை சார். சாரி”என்றவருக்கோ அவன் ஆராவின் கணவன் என்பதால் அவன் மீது அவருக்கு மரியாதை இருந்தது.
அதனால் தான் அவன் கேட்டதும் அதைத் தேடிப் பார்த்தார்.
அவர் கூறியதைக் கேட்டுச் சோர்ந்து போய் நின்றவனை அமரச் சொல்லி பியூனை வரவழைத்துக் காப்பிக் கொண்டு வரச் சொன்னார்.
அதை வாங்கிப் பருகிய அபூர்வனுக்கு அப்போது தான் சற்றுத் தெளிவு கிடைத்தது.
“என்ன ஆச்சு சார்? ஏதாவது பிரச்சினையா? ஆரா நல்லா தானே இருக்கா?”என்று தனக்குப் பிடித்தச் சுட்டித்தனங்கள் நிறைந்திருந்த மாணவியின் கணவனிடம் அவளைப் பற்றி இவ்வளவு வருடங்கள் கழித்து ஆசையாக விசாரித்தார் அந்தப் பெண்மணி.
“நல்லா இருக்கா மேம்”என்று அவருக்கு பதில் கொடுத்தவன் காபியைப் பருகி முடித்தான்.
“அவ ரொம்ப, ரொம்பச் சுட்டி! ஆனால் எனக்கு ரொம்பப் பிடிச்ச மாணவி. அவளை மாதிரியான ஒருத்தியை இப்போவும் என்னால் யாரையும் பார்க்க முடியறதில்ல. நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி அபூர்வன்! ஆரா கூட இருந்தால் அவ உங்களைக் கலகலன்னுச் சிரிக்க வச்சு சந்தோஷமாகப் பார்த்துக்குவா”என்று அவர் ஆராவைப் பற்றித் தன் மனதிலிருந்தவற்றை அவனிடம் ஆத்மார்த்தமாக கூறினார்.
அதில் புன்னகைத்தான் அபூர்வன். அவரது கூற்று முற்றிலும் சரி தானே?
“ஆமாம் மேம். நீங்க சொன்னது சரி தான். ஆரா கூட இருக்கும் போது என்னையே நான் மறந்து சிரிச்சு இருக்கேன். ரொம்பவே ஹேப்பியாக இருக்கேன்”எனத் தன் மனைவியைப் பற்றிப் பெருமையாக அவரிடம் கூறினான் அபூர்வன்.
அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவனிடம் இருந்த சோர்வைத் தாண்டி அவன் தனது மனைவியின் மீது வைத்திருக்கும் காதல் அவரது கண்களில் இருந்து தப்பவில்லை.
“அது அவளோட ஸ்பெஷாலிட்டி ஆச்சே! அது மாறவே மாறாது. உங்களுக்குக் குழந்தைகள்?”என்று அவனிடம் அடுத்த கேள்வியையும் கேட்டு விட்டார்.
“இப்போ தான் அவ கர்ப்பமாகி இருக்கா மேம்”என்று குழந்தைப் பற்றிய விஷயத்தைக் கேட்டதும் அவனுக்குமே முகம் மலர்ந்தது.
“வாவ் சூப்பர்! கங்கிராட்ஸ்! ஒருநாள் அவளைக் கூட்டிட்டு என் வீட்டுக்கு வாங்க அபூர்வன்” என்று அறிவுறுத்தி விட்டுத் தன் செல்பேசி எண்ணையும், விலாசத்தையும் கொடுத்தார் அந்தத் துறைத் தலைவர்.
அதைப் பெற்றுக் கொண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தன் அலுவலகத்துக்கே சென்று விட்டான் அபூர்வன்.
ஆனால் அவனது முகமும், மனமும் அதிகமாகவே சோர்ந்து போயிருந்தது.
ஒரு பக்கம் காரிகா என்ற இல்லாத, கற்பனையானத் தோழிக்காகத் தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் தன் மனைவி ஆராவின் மனநிலையில் அடுத்து என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழுமோ?
அதேபோல், அவள் இப்போது கர்ப்பமாக வேறு உள்ளாளே!
அவளும் , குழந்தையும் அபூர்வனுக்கு என்றும் இன்றியமையாதவர்களாயிற்றே!
இதற்கு மேலும் பொறுத்திருக்க இயலாதவனாகத் தானும், மனைவியும் அடுத்த நாளே தன் பெற்றோரிடம் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அன்றைய அலுவலக வேலைகளை விரைவாக முடித்து விட்டு வீட்டிற்கு விரைந்து வந்தவனுக்கு ஆராவின் கண்ணீர் தான் வரவேற்பாய்க் கிடைத்தது.
– தொடரும்

