
ஆடவனின் முரட்டு கரம், மெல்லிடையாளை இறுக்கியிருக்க, அவனது பார்வையில் தெரிந்த உரிமையும், உறுதியும் அவளை அந்நொடி அச்சுறுத்தியது என்னவோ உண்மைதான். சேலை விலகிய இடையில் அழுத்தமாக பதிந்த அவனின் கரம் அவளுக்குள் கூச்சத்தைக் கொடுத்தது.
“பைத்தியமாடா நீ? எதுக்கு இப்படி ஓவரா பண்ற? என்னை விடு.” அவனை உதறிவிட்டு வெளியே வர அவள் நினைத்த முயற்சிகளை அவனது இறுக்கமான பிடி தடுத்திருக்க, தன் கண்களாலே அவனை முடிந்தவரை முறைத்துத் தள்ளினாள் மது.
“நேத்து வரை நான் நானாக தான் இருந்தேன் மது. ஆனால் இப்போ உன் மேல பைத்தியமா மாறிட்டேன். என்ன பொண்ணுடி நீ.” என்றவன் நின்ற வாக்கிலேயே பெண்ணவளின் உச்சி முதல் பாதம் வரை ரசித்துப் பார்க்க, அவனது பார்வை தாளாமல் அவனது கண்களை தன் கைகளால் மூடினாள் மது. நிச்சயம் அது வெட்கத்தால் இல்லை. அவனது பார்வை அவளுக்கு துளியளவும் பிடிக்கவில்லை.
“ச்சீ உன் பார்வையே சரியில்லை. பாவி, ஆக்ஸிடென்டலா நடந்ததுக்கு இப்படி ரியாக்ட் பண்ணாத. ஏற்கனவே உன் முன்னாடி அவமானப்பட்டு நிற்கிறேன்.” என்றவளின் கடைசி வார்த்தைகளில் அத்தனை வேதனை தெரிந்தது.
தனது மற்றொரு கரத்தால் அவளது மென் கைகளை பற்றியவன் கீழே இறக்கியபடி, அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான்.
“மது…” அவனது மென்மையான அழைப்பு அவள் செவிகளை அடைந்தும் பாராமுகமாக நின்றிருந்தவளின் தாடையை பற்றி, தன்புறமாக திருப்பினான்.
“விடு.” என்றவள் அவனை உறுத்து விழித்தும் கூட, அவனது அழுத்தம் மட்டும் குறையவேயில்லை. மெல்ல அவளது இடையை விடுத்தவன், பெண்ணவளின் இரு கன்னத்தையும் தன்னிருக்கைகளால் ஏந்திக் கொண்டான்.
‘என்ன கண்ணுடா சாமி.’ அவன் மனம் நினைக்காமல் இல்லை. மெதுவாக தன்னை நோக்கி அவள் பார்வையை நிமிர செய்தவன், “மது…” என்றான் அழுத்தமாக. பதில் ஏதும் அவள் பேசவில்லை என்றாலும், அவள் பார்வை அவன் மீது இருந்தது.
“நீ அவமானப்பட்டு நிற்கும் அளவுக்கு ஒண்ணுமே நடக்கலை மது. இது சாதாரணமான விசயம் தான். ஆனாலும் நானும் மனுசன் தானே. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கத் தானே செய்யும். இப்ப கூட நினைக்கும் போதே ஹார்மோன்ஸ் எல்லாம் தாறுமாறா ஓடுது. இருந்தும் உனக்காக நான் கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கிறேன் மது. எனக்கு ஏற்கனவே உன்னை பிடிக்கும். இப்போ அதோடு உரிமையும் சேர்த்து வந்திருச்சு. மனச போட்டு குழப்பிக்காமல், ரிலாக்ஸ்டா இரு. ஓகே.” என்றவன் தலையாட்ட, பெண்ணவளோ சிலை போல நின்றாள்.
அவளது நிலையை புரிந்துக் கொண்டவன் விலகி செல்ல, செல்லும் அவனை புரியாதுப் பார்த்தவள், “விபத்து தான். அதுக்காக உன்னை என் புருசனா எல்லாம் ஏத்துக்க முடியாது. போடா.” என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல, செல்லும் அவளைக் கண்டு,
“யார் கேட்டா… சரி தான் போடி.” என்று முணுமுணுக்க, “என்னடா சொன்ன?” என்றவள் பழையபடி முறைக்க,
“சொன்னேனா? என்ன சொன்னேன்?” என்றவன் அப்பாவியாக கேட்ட நொடி,
“நீ திருந்தவே மாட்டடா.” என்று முறைத்து விட்டு நகர்ந்தாள் மதுவர்ணிகா.
அவனுக்கும் திருப்தி தான் பழைய படி அவளது இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விட்டோம் என்று நின்ற இடத்திலிருந்தே குதித்தவனது முகமோ வெட்கத்தில் சிவந்தது.
“இருந்தாலும் மறக்க கூடிய சம்பவமா அது?” வெட்கத்தில் நெளிந்தவன், காலை நடந்த நிகழ்வினை மீண்டும் அசைப் போட்டான்.
மதுவின் அன்னையிடம் உரையாடிய பின் அறைக்குள் நுழைந்தவன், அறை இருக்கும் கோலத்தைக் கண்டான்.
ஆங்காங்கே பூக்கள் சிதறி இருக்க, இருவரும் உறங்கிய படுக்கை விரிப்பும் தலையணையும் கீழே அப்படியே இருந்தது.
“எப்படி எல்லாம் நடக்க வேண்டிய முதலிரவு. கடைசியில ஒண்ணுமே இல்லாமல் போய்டுச்சு. எல்லாம் நம்ம நேரம்.” என்றவன் பெருமூச்சொன்றை விடுத்தபடி, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் மதுவர்ணிகாவின் புகைப்படத்தைப் பார்த்தான்.
“அடியே திமிரழகி… ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை அடக்கி ஆளப் போறேன். அப்புறம் உன்னை கவனிச்சுக்கிறேன் டி மை டியர் ஜூஜிலி பாப்பா.” என்று புகைப்படத்தைப் பார்த்து எச்சரித்தவன் நேராக சென்றது என்னவோ குளியலறை நோக்கி.
“ரொம்ப கசகசனு இருக்கு. சூப்பரா ஒரு குளியலைப் போட்டுட்டு வருவோம்.” என்றவன் பட்டென்று குளியலறைக் கதவினை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருக்க, நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டிற்கு எப்போதோ வந்துவிட்ட மதுவோ அவ்விடம் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே இருப்பதை அறியாதவனும், அவனது திடீர் வருகையை அறிந்தவளும் ஒருவரை ஒருவர் பார்த்த நொடி அதிர்ச்சியில் உறைந்து போக, இருவருமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
நந்தாவின் கண்கள் பெரிதாக விரிய, ‘ஆ…” என்று கத்தியபடி மிரட்சியில் அங்கிருந்த சுவற்றினோரம் பல்லி போல ஓட்டிக் கொண்டான் என்றால் பெண்ணவளோ சோப்பு நுரையுடனே, அருகில் மாட்டப்பட்டிருந்த பூந்தூவலைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டபடி அறையே அதிரும் அளவிற்கு கத்தினாள்.
அவள் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. பெண்ணவளின் கை கால்கள் நடுக்கம் எடுக்க, அவளது இதயமோ படபடவென்று அடித்துக் கொண்டது. நந்தாவிற்கும் அதே பதட்டம் தான். காணக் கூடாத கோலத்தில் அவளைக் கண்டு விட்டவனது கண்களில் இன்னும் அவளது நிலை மனக்கண்ணின் முன் தோன்ற, “சொதப்பிட்டியேடா… உன்னை வெச்சு செய்யப் போறா” என்று சுவற்றை குத்தினாலும் உள் மனதிலோ ஹார்மோன்களின் இயக்கம் தாறுமாறாக இருந்தது பளிங்கு மேனியாளை முழுவதுமாக கண்டுக் கொண்டதால்.
“யூ…யூ இடியட். வெளியே போடா இங்க இருந்து. பொறுக்கி ராஸ்கல்” என்றவள் பெரும் குரலில் கத்தினாலும் அவளையும் மீறி கண்கள் கலங்கியது. அவமானத்தில், தன்னிலையை நொந்துக் கொள்ள, ஆணவனின் வருகையில் மொத்தமுமாய் கூனி குறுகிப் போனாள் மது. அவள் கத்தியதும் சுவற்றினோரம் ஒன்றி நின்றவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ஏய் நீ… நீ எப்போ வந்த? நீ இங்க இருப்பேனு எனக்கு தெரியாது” என்றவன் படபடப்புடன் கூறினாலும் அவனது கண்கள் வேறு பெண்ணவளின் வழவழப்பான வாழைத்தண்டு கால்களின் மீதே பதிந்து மீண்டது.
அவன் பார்வை செல்லும் இடத்தை அறிந்தவள் காலை மறைக்க முற்பட, மேலே கட்டிய துண்டு அவிழப் பார்க்க சுதாரித்தவள் இருக் கைகளால் இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவனும் ஒருநிமிடம் பதறித்தான் போனான்.
“ஹே பார்த்து டி.” என்றவன் அருகில் வரப் பார்க்க, ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தாள் பெண்.
“கிட்ட வராத, இடியட்.” என்றவள் கத்த, அவளைக் கண்டு எச்சிலை விழுங்கியவனோ, “அதுதான் எல்லாம் பார்த்தாச்சே. அப்புறம் ஏன்டி, ரொம்ப ரியாக்ட் பண்ற?” என்றான் அசட்டையாக.
அவனது பதிலில் அவளது கண்களில் கண்ணீர் திரண்டு வந்திருந்தது. கழுத்தில் அவன் கட்டிய தாலியை ஏற்றிருந்தாலும், அவனை அவள் கணவனாக ஏற்கவில்லையே. அவளைப் பொறுத்தவரை அந்நியன் அல்லவா? அவன் முன்பு மானம் போனதே என்ற வேதனை அவளது கண்களில் தெரிந்தது.
“இப்போ உனக்கு சந்தோசமா இருக்குமே. ச்சீ என்ன மாதிரியான மனுசன் நீ. உன்னை பார்க்கவே பிடிக்கலை. கெட் லாஸ்ட்.” என்று பற்களைக் கடித்தபடி கத்தியவள், கையில் கிடைத்த சோப்பினை அவன் மீதே எறிய, லாவகமாக தன் மீது படாதவாறு நகர்ந்தவன்,
“கொலைகாரி” என்று கூறியபடி வெளியேறியிருக்க, கதவினை அடித்து சாத்தியவளோ, அப்படியே சிலை போல கதவின் மீதே சாய்ந்து நின்றாள்.
“மானமே போச்சு. மொத்தமா பார்த்துட்டானே… ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? நோ…” என்று கலங்கிய விழிகளுடன் கத்தியவளின் குரல் அவனையும் அடைந்திருந்தது.
அப்படியே கீழே சரிந்தவள் பொத்தென்று அமர்ந்துக் கொள்ள, பெண்ணவளின் கண்களில் பட்டது கீழே விழுந்துக் கிடந்த தாழ்ப்பாள். அவள் நிஜமாகவே அறியவில்லை. தாழ்ப்பாள் ஒப்புக்கு தான் மாட்டப்பட்டிருந்தது என்பதை. ஆதலால் விதி செய்த சதி என்று தவறாக எண்ணிவிட்டாள் மது.
ஆனால் வெளியே நின்றிருந்தவனின் மனமோ வேறு உலகத்திற்கே சென்றிருந்தது. வெட்கத்தில் நெளிந்தவன், “அய்யய்யோ கொல்லுறியேடி மது. இத்தனை அழகை எங்க ஒளிச்சு வெச்சிருந்த? அய்யய்யோ எனக்கே வெட்க வெட்கமா வருதே? என்ன பொண்ணுடி நீ..!” என்று சுவற்றை தட்டிக் கொண்டே அதன் மீது சாய்ந்து நின்றான். அவனுக்கே இயல்பு நிலைத் திரும்ப ரொம்ப நேரம் பிடித்தது என்றால் உள்ளே இருந்தவளின் நிலை சொல்லவா வேண்டும்?
பின் வெகுநேரம் உள்ளே இருந்தவள் வெளியே வராமலிருக்க அவன் தான் அவளை சமாதானம் செய்தான்.
“நான் எதுவும் பார்க்கலடி. நான் தான் அப்போவே திரும்பிட்டேனே, எதையும் போட்டு குழப்பிக்காமல் வெளியே வா.” என்று அவன் கூறிய பின்னரே கதவைத் திறந்து தயங்கியபடி வெளியே வந்திருந்தாள்.
“நீ நெஜமாவே என்னை பார்க்கலை தானே?” கிட்டத்தட்ட குழந்தை போலவே கேட்டாள்.
“உண்மை சொல்லவா, பொய் சொல்லவா?” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“அப்போ பார்த்துட்ட அப்படி தானே?” என்றாள் ஆதங்கத்துடன்.
அவளைக் கண்டு மென் புன்னகையை பரிசளித்தவன், “இல்லை நீ ரிலாக்ஸ்டா இரு. குளிச்சிட்டு வரேன்” என்று குளிப்பதற்காக உள்ளே நுழைந்துக் கொள்ள, அப்போது தான் மூச்சினை சீராக இழுத்து விட்டாள் மது. இவன் குளித்து விட்டு வெளியே வருவதற்குள் தயாராகி இருந்தாள் மது.
ஒப்பனைகள் செய்துக் கொள்ளும் மனநிலையிலே இல்லையவள், கடமைக்கென தயாராகியிருக்க, வேஷ்டி சட்டையில் வெளியே வந்தவனோ அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.
“ரொம்பா அழகா இருக்க?” உரிமையுடன் கூற, பெண்ணவளுக்கோ கோபம் தலைகேறியது.
“நான் உன்னை கேட்டேனா. நான் எப்படியோ இருந்துட்டு போறேன். என்னை பார்த்து எதுவும் சொல்லாத சரியா” என்றாள் மூஞ்சியில் அறைந்தாற் போல.
“மொத்தமா பார்த்தாச்சு அப்புறம் என்னடி ரொம்பா பேசுற?” என்றவன் தலையைக் கோத, அவளோ விக்கித்துப் போய் பார்த்தாள்.
“நீ… நீ தான் பார்க்கலைனு சொன்ன? டக்குனு திரும்பிட்டதா சொன்ன?”
“அது சும்மா நீ வெளிய வரதுக்காக சொன்னேன் செல்லம். இன்னுமா நான் சொன்னதை நம்பிட்டு இருக்க? அப்புறம் மது அது கூட பார்த்தேன். கடுகு சைஸ்ல க்யூட்டா ஒரு மச்சம்…” என்று அவன் பேச வரும் முன் ஆணவனின் வாயை அடைத்தவள்,
“இதுக்கு மேல கேட்குற சக்தி எனக்கில்லை.” என்று அழாத குறையாக கூறியவள் அங்கிருந்து சென்றிருக்க, செல்லும் அவளையே பார்த்தான் அடக்கப்பட்ட புன்னகையுடன். அதன்பின்னரே தாலிக்கோர்த்து அணியும் சடங்கு நடந்தது. அவனும் அப்பட்டமாக தன்னவளை உரிமையுடன் ரசித்துப் பார்த்த நிகழ்வும் நடந்தது.
சற்றுமுன் நடந்த நிகழ்வினை நினைத்தவனுக்கு மீண்டும் புன்னகை அரும்பியது.
“இன்னைக்கு யார் முகத்தில முழிச்சேனு தெரியலை, வாழ்க்கையே சூப்பரா போகுது.” என்றவன் புன்னகைத்துக் கொள்ளவும் அவனது அலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.
அலைபேசியை உயிர்பித்தவன், சுற்றும் முற்றும் பார்த்தபடி, யாரும் இல்லாததை உறுதி செய்த வண்ணம் பால்கனி நோக்கி நகர்ந்து சென்று பேசத் தொடங்கியிருந்தான். சிறிது நேரம் கழித்து கைப்பேசியை அணைத்தபடி, வானையே புன்னகையுடன் நோக்கினான்.
அன்று மாலையே இருவரையும் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர் மதுவின் வீட்டினர். அவளும் மறுத்தாலும், திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு சென்று விட்டு வருவது வழக்கத்தில் இருந்ததால் வேறு வழியின்றி அவனுடன் சென்றாள் மது.
இருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கினர். பின் மீண்டும் காரில் ஏற, மழை வேறு அடித்து ஊற்றியது.
“இப்போ தான் இந்த மழை வரணுமா?” திட்டிக்கொண்டே காரினை ஓட்டினாள் மது.
“மழைனா வரத் தான் செய்யும். இதுக்கு ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ற?” என்றவனைத் திரும்பிக் கூட பார்க்க பிடிக்காது காரை செலுத்தினாள் மது.
மழையின் வேகம் கூடிக்கொண்டே செல்ல, காரை ஓட்டுவது சிரமமாக இருந்தது மதுவிற்கு.
“மது, நம்ம வேணா காரை ஓரமா நிறுத்திட்டு, எதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவோமா?” என்பவனை முறைத்துப் பார்த்தவள்,
“எப்போ பாரு சாப்பிடறதுலயே இரு?” என்றாள் கடுப்பாக.
“நான் என்ன பண்ணட்டும். இன்னைக்கு உன்னை அப்படி பார்த்ததிலிருந்தே, காலையிலையும், மதியமும் சரியா சாப்பிடக் கூட இல்ல.” என்றவன் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை அவளுக்கு.
‘அந்த மோசமான நிகழ்வை ஞாபகப்படுத்துறதுலயே குறியா இருக்கானே சதிகாரன்.’ என்று மனதில் புலம்பியவள் அவனைப் பார்த்து,
“இப்போ என்ன சாப்பிடணும்,அவ்ளோ தானே? இரு வண்டியை ஓரமா நிறுத்துறேன்.” பல்லைக் கடித்தபடி காரை ஹோட்டலின் முன்பு நிறுத்தியிருந்தாள் மது.
பின் இருவரும் ஹோட்டலில் நுழைந்திருக்க, அவனுக்கு பிடித்த அனைத்தையும் ஆர்டர் செய்தவன் அவளைப் பார்த்து, “உனக்கு என்ன வேணும் மது?” என்றவன் கேட்க,
அவள் வாய் திறக்கும் முன்னரே, “உனக்கும் அதே ஆர்டர் பண்றேன். இரண்டு பிளேட்டா கொண்டு வந்திடுங்க. அது தான் கப்பில்ஸ் கோல்.” என்ற பதிலும் அவனே உரைத்துவிட, அவளோ பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“இடியட்.” என்றவள் முணுமுணுக்க,
“இடியாப்பம் எல்லாம் இங்க கிடைக்காது. சில்லி கேர்ள்.” என்றான் கண்ணடித்தபடி.
வெயிட்டரோ, இருவரையும் கண்டு புன்னகைக்க, கடுப்படைந்தவள், “அவ்ளோ தான் சீக்கிரம் கொண்டு வாங்க.” என்றாள் எரிச்சல் மேலோங்க.
அவனுடன் அவ்விடம் வந்ததே பிடிக்கவில்லை அவளுக்கு. இதில் இவன் வேறு பேசிக்கொண்டே இருக்க, கடினப்பட்டு தனது கோபத்தை அடக்கியபடி இருந்தவள், ரெஸ்ட் ரூம் செல்வதற்காக அங்கிருந்து எழுந்துக் கொண்டாள்.
“எங்க போற மது?” என்றவனின் கேள்வியில்,
“வாஷ் ரூம்க்கு.” என்றவள் பல்லைக் கடித்தபடி செல்ல, அவனோ, “நானும் வரட்டுமா?” என்று கேட்டதும் தான் தாமதம் அவனை, “வாயை மூடு” என்று செய்கையால் உரைத்தவள் கோபத்துடனே வாஷ் ரூமை நோக்கி நகர்ந்தாள்.
பெண்களுக்கான வாஷ் ரூமில் நுழைந்தவள் சிறிது நேரத்தில் வெளியே வர, எதிரே வந்த ஒருவரின் மீதே தெரியாமல் மோதியிருந்தாள் மது.
“ஐ அம் சாரி.” என்றவள் அவனைக் கடந்துச் செல்ல, சில அடிகளிலே ஸ்தம்பித்துப் போய் நின்றவள், அவனை திரும்பி பார்த்தாள்.
அவனும் அவளையே பார்த்து புன்னகையுடன் நோக்க, பெண்ணவளின் முகம் ஒரு நொடியில் மாறியது. எவன் ஒருவனை வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்று எண்ணினாளோ, அவனே கண்முன் நிற்க, பிரளயமே வெடித்தது பெண்ணவளின் மனதில்.
எந்த பெயரை கூறக் கூடாது என்று நினைத்தாளோ, அதே பெயரை உச்சரித்தது பெண்ணவளின் உதடுகள்.
“ரகு…”

