
அடுத்த நாள் காலை அழகாய் மலர்ந்திருந்தது. காலையில் எழுந்ததுமே உமாபதி உடற்பயிற்சி மேற்கொள்ளும் அறைக்குச் சென்றிருந்தான். அவன் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்று. தனது கட்டுமஸ்தான தேகத்தை காட்டும் வகையில் மெலிதான பனியனை அணிந்திருந்தவன், முழங்கால் வரையிலான கால்சட்டையை அணிந்திருந்தான்.
எதை பற்றியும் கவலைக் கொள்ளாது ட்ரட்மில்லில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் உமா. அதே நேரம் எதேச்சையாக அவ்விடம் வந்திருந்த வெண்ணிலாவின் கண்களில் அவன் பட்டிருக்க, அவனிடம் வம்பிழுக்க ஆசைப்பட்டாள் நிலா.
அவன் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்க பெண்ணவளோ, தான் கைகளில் கொண்டு வந்திருந்த நெல்லிக்காய்களை ஒவ்வொன்றாக எடுத்து அவன் மீது குறி பார்த்து எறிந்திடத் தொடங்கியிருந்தாள். ஒவ்வொரு காய் எறிந்ததும் வெளியே அவள் மறைந்துக் கொள்ள, அவனோ ஒன்றும் புரியாது நாலாபுறமும் சுற்றும் முற்றும் பார்த்தான். முதல் இரண்டு முறை குழம்பியவனுக்கு, அடுத்தடுத்து வந்துக்கொண்டிருப்பதை கண்டதுமே புரிந்து விட்டது. இது தன் வீட்டிலிருந்தே நடக்கும் அந்நிய நாட்டு சதி என்று.
“என்னடா, இங்க நடக்குது? யாரது என் மேலயே அடிக்குறது? ஒழுங்கா வெளியே வந்துடுங்க? இல்லை நான் கண்டு பிடிச்சா மவனே தக்காளி சட்னி தான் நீ.” பொறுத்துப் பார்த்தவன் பின் மிரட்டத் தொடங்கியிருக்க, வெளியே மறைந்து நின்ற வெண்ணிலாவோ களுக்கென்று புன்னகைத்தாள். பல வருடங்களுக்கு பிறகு அவனிடம் வம்பிழுப்பது கூட சுகமாக இருந்தது போலும், ஆதலால் தான் பெண்ணிவள் மீண்டும் மீண்டும் அதையே செய்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் அவன் அமைதியானதும் அவள் எட்டிப் பார்த்து, நெல்லிக்காயை அடிக்கப் பார்க்க, அவனோ அவ்விடத்திலேயே இல்லை.
“எங்க இவரு?” என்றவள் நாலாபுறமும் கண்களை சுழல விட, சுவற்றினோரம் ஒட்டியிருந்தவனோ, அவள் என்னவென்று யோசிக்கும் முன்னரே பெண்ணவளின் கரத்தினை பற்றி தன்புறமாக இழுத்ததில், அவன் திடகாத்திரமான மார்பின் மீதே மோதியிருந்தாள் பெண்.
மோதிய விசையில், அவளது இதழ்கள் அவனது வெற்று மார்பின் மீதே பதிந்திருக்க, அவளையும் மீறி படபடத்தது பெண்ணவளின் நெஞ்சம். அத்தனை நெருக்கமாக அவன் அருகில் இதுவரை அவள் நின்றதும் இல்லை. ஆணவனின் ஸ்பரிசம் பதட்டத்துடன் சேர்த்து பயத்தையும் கொடுக்க, வேகவேகமாக அவனைவிட்டு விலக நினைத்தவள், பிரியப் பார்க்க அவனோ அவளது கைகளை இறுக்கமாக பற்றியது மட்டுமின்றி, சுவற்றின் ஓரம் அவளை வலுக்கட்டாயமாக திருப்பி பெண்ணவளின் கைகளை இறுக்கினான்.
அவன் பிடி உண்மையிலுமே வலியைக் கொடுக்க, அவளது மாநிற தேகமும் சிவந்துப் போனது.
“அத்தா…ன் விடுங்க.” என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
“எதுக்கு டி, என் மேல நெல்லியை எறிஞ்ச?”
“அத்தான் அது விளையாட்டுக்கு தான் பண்ணேன். ஆனால் நீங்க இப்படி பிடிக்குறது ரொம்ப வலிக்குது. விடுங்க அத்தான் ப்ளீஸ்.”
“அச்சோ வலிக்குதா நிலா.” என்றவன் அவளது கைகளை தடவிக் கொடுப்பது போல செய்கை செய்தபடி, அவளது காதில் கைவைத்தவன், பெண்ணவளின் காதை திருக, அவளோ வலியில் கத்தியே விட்டாள்.
அவள் கத்தும் சத்தம் கேட்டு யாரேனும் வந்துவிடுவார்களோ என்று மிரண்டவன், அவளது வாயை தன் கைகளால் பொத்தியபடி, தனது மற்றொரு கையால்,”ஸ்சு கத்தாதடி கிறுக்கி” என்று செய்கை செய்தான்.
அவனது கைகள் பெண்ணவளின் இதழை அழுத்த, அவனுக்கும் அவளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க, அவனது பழுப்பு நிற கண்களை அவ்வளவு பக்கத்தில் பார்த்தவள் இமைமூடாது போனாள்.
அவள் புறம் திரும்பியவன், “ஹேய், சும்மா சும்மா என்னை தொந்தரவு பண்ணனும்னு நினைச்ச அப்புறம் அவ்வளவு தான். நான் இருக்குற பக்கம் தலை வெச்சு கூட படுத்துடாத. மீறி வந்தா, நடக்கப் போற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்லை.” என்றவன் அவளை விடுவித்திருக்க, அப்போதும் அவனையே இமை மூடாது பார்த்தாள் நிலா.
“என்ன புரியுதா?” என்றவனின் கேள்விக்கு, தலையை ஆட்டியவள், அவனையே பார்க்க,
“என்ன லுக்கு… கிளம்புடி.” என்றான் முறைத்தபடி,
அவளோ அவனது அருகில் வந்தவள், “என்னோட பொட்டு” என்றாள் தயக்கத்துடன்.
“எங்கிட்ட எங்க இருக்கு?” என்று அவன் புரியாது கேட்க, அவனருகே நொடியில் நெருங்கியவள் அவன் நெஞ்சத்தில் ஒட்டியிருந்த அவளது ஸ்டிக்கர் பொட்டினை எடுத்திருந்தது மட்டுமின்றி, ஒரே ஓட்டமாக ஓடியிருக்க, அவனோ செல்லும் அவளைக் கண்டு முகம் சுளித்தான்.
“சரியான இம்சை.” என்று தலையில் அடிக்காத குறையாக கூறியவன் வெளியே வர, அவனுக்கு எதிரே வந்தான் நந்தா.
ஏற்கனவே தெறித்து ஓடும் நிலாவை புரியாது பார்த்தபடி அவன் நிற்க, உமாவும் எதிரே வர, சந்தேகத்துடன் உமாவைப் பார்த்தவன்,
“என்னடா நடக்குது?” என்பது போல புருவம் தூக்க,
“ஒன்னுமில்லை மாமா.” என்றான் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி.
“மச்சான், எங்கிட்டயே சமாளிக்குற… நீ நடத்து ராசா.” என்று இவனும் நக்கலடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட, உமாவிற்கு தான் அய்யோ என்றானது.
உடற்பயிற்சி செய்யும் அறைக்குள் நுழைந்திருந்த நந்தா, ஒவ்வொரு உபகரணங்களையும் பார்த்தபடி நடந்து வந்தான். சற்றுமுன் எழுந்திருந்தவன் தன்னருகே படுத்திருந்த மதுவினை காண்பதற்காக திரும்ப, அவனது நாயகியோ, எப்போதோ எழுந்திருந்தது மட்டுமின்றி நடைபயிற்சி மேற்கொள்ள வெளியே சென்று இருந்தாள்.
“புருசனுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்து எழுப்பலாங்குற ஒரு நல்லெண்ணமாவது இருக்குதானு பாரு சில்லி கேர்ள்.” என்று புலம்பியவனும் நன்கு அறிவான், இது அவனுக்கே உச்சபட்ச ஆசை என்று. இருந்தும் எண்ணங்களில் தவறில்லை என்பதால், குளியலறைக்குள் புகுந்துக் கொண்டவன், கதவை சாத்த தெரியாமல் சாத்தி, தாழ்ப்பாளை உடைத்திருந்தது தான் மிச்சம்.
எங்கு அவள் வந்துவிட்டால் தேவையில்லாமல் திட்டு வாங்க வேண்டியிருக்கும்? என்ற பதட்டத்தில் தான் தற்போது இவ்வறைக்கு நுழைந்திருந்தான் நந்தா.
“நீ ரிஜெக்டெட். நீயும் ரிஜெக்டெட்.” என்று கூறிக்கொண்டே வந்தவன் இறுதியாக தேர்ந்தெடுத்தது என்னவோ கரலாக்கட்டை தான். கரலாக்கட்டையை எடுத்தவன் சுற்ற ஆரம்பித்தான்.
“ஒன்னு, இரண்டு,…ஐம்பது.” வரை அசராது செய்தவன் உச்சந்தலை முதற்கொண்டு உள்ளங்கால் வரை வியர்த்து வழிந்தது.
“பொண்டாட்டி உன்னை சமாளிக்க இந்த ட்ரைனிங் எல்லாம் பத்தாது. இன்னும் பண்ணனும்.” என்று வெறிக்கொண்டு நூறு முறை செய்தவன் கரலாக்கட்டையை இறக்கி வைத்துவிட்டபடி தன்னையே பார்த்தான்.
“ரொம்ப கசகசனு இருக்கு. சப்பா. இதுக்கு மேல முடியாது.” என்றவன் அங்கிருந்து நகர, நேராக தனது அறை நோக்கி செல்லயிருந்தவனை அழைத்திருந்தார் பிரபாவதி.
“மாப்பிள்ளை தம்பி.” என்று பிரபாவதி அழைக்க,
“மாப்பிள்ளை மட்டும் தானே இருக்கேன். எனக்கு தம்பியா?” யாரை அழைக்கிறார் என்று குழம்பியபடி அவன் திரும்ப, பிரபாவதியோ, தன் மருமகனைக் கண்டு புன்னகைத்தார்.
“உங்களை தான் தம்பி.” அவர் அழைக்கவும், “சொல்லுங்க அத்தை.” என்றான்.
“இன்னைக்கு பத்து மணிக்கு நல்ல நேரம் தாலி மாத்துற சடங்கு செஞ்சுட்டா கடமை முடிஞ்சிடும். அப்புறம் எல்லாரும் அவங்க அவங்க வொர்க் பார்த்துக்கலாம். நீங்க ரெடியாகிடுங்க தம்பி. நேத்தே வருணிகிட்ட சொல்லியிருந்தேன். அவ சொல்ல மறந்துட்டா போல” என்று புன்னகையும், அழுத்தமும் கலந்து கூறினார்.
“ஓ..! சரிங்க அத்தை நான் பார்த்துக்குறேன்.” என்றவன் வேறு எதுவும் பேசவில்லை.
அவனும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறானே, எந்நேரமும் இயந்திரத்தனமாக வாழும் இந்த குடும்பத்தில் எப்படி தான் மதுவும் சரி, உமாவும் சரி வாழ்கிறார்கள் என்ற கேள்வி அவனுக்குள் இருக்கும். மது இப்படி இறுக்கமாக இருக்க காரணமும் அவளது வாழ்வியல் சூழலாக இருக்கலாம் என்று கூட அவனுக்கு தோன்றியிருக்கிறது. ‘யாரு எப்படி இருந்தால் நமக்கு என்ன?’ என்று நினைத்தவன் அறைக்குள் நுழைந்திருந்தான்.
****
மாம்பழ வண்ண பட்டுப்புடவையில், எந்த வித ஒப்பனைகளும் இன்றி, மனையில் அமர வைக்கப்பட்டிருந்த தன் மனையாளை ரசித்த வண்ணம் நின்றிருந்தான் நந்தா. அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காது, கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வேறு சிவந்துக் காணப்பட்டது.
“அண்ணி மேக்கப் போடாமலே நம்ம வருணி ரொம்பா அழகா இருக்காளே.” என்று ஜானகி மகிழ்ச்சியுடன் கூற,
“என் பொண்ணு எப்பவுமே அழகு தான்.” பெருமைப்பட்டுக் கொண்டார் பிரபா.
“புதுப் பொண்ணுக்கான பூரிப்பு எல்லாம் வந்திடுச்சு. அதுவே தனி அழகு தானே.” என்று புன்னகையோடு கூறிய ஜானகி பெண்ணவளது கன்னத்தில் சந்தனமிட்டார்.
அவளது சிவந்த கன்னத்தில் சந்தனம் அழகாய் மிளிர, தலையில் சூடப்பட்ட மல்லிகைச்சரம், மஞ்சள் கயிறாலான தாலி, நெற்றி வகுட்டில் குங்குமம், கழுத்தை ஒட்டிய அட்டிகை. கைகளில் நிறைந்திருந்த கண்ணாடி வளையல்கள், என அழகே உருவாக அமர்ந்திருந்தவளை பார்க்க, இருக்கண்கள் போதவில்லை அவனுக்கு.
‘அந்த பூரிப்பு எதுனாலனு நமக்கு மட்டும் தானே தெரியும்.’ மனதில் நினைத்தபடி நின்றிருந்த நந்தாவின் மனமோ துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. அதில் வேறு அழகு மங்கையாக வீற்றிருக்கும் தன் மனையாளின் மதிமுகம் அவனை கட்டியிழுக்க, தனக்கே உரியவளை உரிமையுடன் சைட் அடித்தான் ஆடவன்.
இவன் ஒருபுறம் தன் மனையாளை பார்த்துக் கொண்டிருக்க, உமாபதியை அவனுக்கே தெரியாது வெட்க புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. என்னதான் கை கன்றிப் போகும் அளவிற்கு அவன் பிடித்திருந்தாலும், என்றோ மனதில் வந்திருந்தவனின் தொடுகையும், ஸ்பரிசமும் அவளை புது உலகிற்கு கூட்டி செல்ல, சந்தன நிற சட்டையில் நின்றிருந்தவனது புன்னகை முகத்தை மனதில் பதித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
“இந்தாங்க தம்பி… தாலிக்கொடி வருணி கழுத்துல போட்டு விடுங்க.” என்று பிரபாவதி நந்தாவிடம் கூற, அவரிடமிருந்து தங்க தாலிக்கொடியை வாங்க கைகளை நீட்டினான் நந்தா.
பின் அனைவரின் ஆசியோடு தாலிக்கொடியை பெற்றவன், பெண்ணவளின் சங்குக்கழுத்தில் அணிவிக்க, அவனது விரல்கள் அவளது கழுத்தில் உரசிய அந்த நொடி, சிலிர்த்தது மதுவர்ணிகாவின் தேகம். நேற்று அவன் தாலிக் கட்டும் போது தோன்றாத எண்ணங்கள் அனைத்தும் தற்போது தோன்ற, தனக்கு என்ன தான் ஆனது? என்று தெரியாது தவித்தவளது தேகத்தின் நடுக்கத்தினை உணர்ந்தவன் இதமாக அவளது பின்னந்தலையை வருடிக் கொடுத்தது மட்டுமின்றி, பெண்ணவளின் உச்சி வகுட்டினில் அழுத்தமாக முத்தமிட்டு விலகினான்.
அவனது முத்தத்தை சற்றும் எதிர்பாராதவள், எந்த ஒரு எதிர் வாதமும் புரியவில்லை. புரியும் நிலையிலும் இல்லை. இன்னுமே சற்று முன்பு நடந்தவை அவளது மனக்கண்களில் ஓடிக்கொண்டிருக்க, தலைக்கவிழ்ந்தவள் நிமிராமலே இருந்தாள் ஒருவித கூச்சத்துடன். எவ்வளவு தான் கூச்சம் இருந்தாலுமே, அதற்கு இணையான கோபமும் அவளது மனதில் இருக்கத் தான் செய்தது. இருவருக்கும் சேர்த்து சந்தனம், குங்குமம் அனைவரும் வைக்க, மனமகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் நந்தா. தாலி கோர்த்து மாற்றும் சடங்குகள் முடிந்து விட்டிருக்க தனது அறைக்குள் நுழைந்தவன், ஒரு இடத்திலேயே நிற்கவில்லை.
குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான் நந்தா. இன்று நடந்தவை ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்தவனுக்கு கனவில் மிதக்கும் உணர்வே மிதமிஞ்சியது. இதுவரை அவள் மீது எழாத உரிமை எல்லாம் தற்போது எழ, ஆண்கள் வெட்கம் கொள்ளும் தருணத்தில் திளைத்தவன் இதழ் பிரித்து புன்னகைத்தான்.
“எனக்கே எனக்கா…நீ எனக்கே எனக்கா..?” என்றிவன் துள்ளிக்குதித்துத் திரும்பவும், அவனது மனைவி கதவைத் திறந்து வரவும் சரியாக இருந்தது.
கையில் பழச்சாறுடன் வந்தவள் அவனை உறுத்து விழித்தாள். அவள் முறைப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன், அலட்சியப் பார்வை பார்த்தபடி பாடலைத் தொடர்ந்து பாடினான்.
“ஃபிப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா? ஃப்ளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா…” என்றவன் குஷியாக பாட, அவளுக்கோ உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது. அதை உள்ளூர ரசித்தவனோ, “சாரி மை டியர் வைஃப்… சிக்ஸ்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா?” என்று பாடலைத் திருத்தி, பெண்ணவளின் வதனத்தைக் கண்டு பளிச்சென்று கண்ணடிக்க,
அவன் எதைப்பற்றி உரைக்கிறான் என்பது தெளிவாக புரிய, ஒருபுறம் பெண்களுக்கே உரிய கூச்ச உணர்வும் எழுந்தது. இருந்தும் அவன் மீது இருந்த கோபம் மேலோங்க, “யூ… யூ இடியட்.” என்று கூறியபடி கையிலிருந்த பழச்சாறை அவன் முகத்தின் மீதே ஊற்றியிருந்தாள் மதுவர்ணிகா.
ஏற்கனவே நடந்த நிகழ்விலிருந்து மீண்டு வராதவளுக்கு அவன் பாட்டும், அவன் பார்வையும் எரிச்சலையூட்ட, கோபத்துடன் வந்தவளை கடுப்பாக்கி இருந்தான் அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்ட கள்வன்.
அவள் ஊற்றிய பழச்சாறை நாக்கினை சுழற்றி சுவைத்தவனோ, “உன்னைவிட இனிப்பு கொஞ்சம் கம்மிதான் மது.” என்று பளிச்சென்று புன்னகைக்க, அவளுக்கோ எரிச்சல் மேலோங்கியது.
“திருட்டு ராஸ்கல்.” என்றவளோ அவனை அறைவதற்காக கை ஓங்க, அவளது கையை பற்றியவன், தன்புறமாக அவளை சுழற்றி திருப்பியிருந்தான்.
அவனது திடீர் செயலில் தடுமாறியவள், திகைத்து சிலையென நிற்க, அவளையே அசரடிக்கும் பார்வை பார்த்தவனோ, “இதுவரை இந்த நந்தாவை திருடனா மட்டும் தான பார்த்திருக்க மது… இனி இந்த நந்தாவை உன் புருசனா பார்க்கப் போற?” என்றவன் அவளது இடையினை இறுக்கி தன்னோடு சேர்த்தணைக்க விக்கித்துப் போய் நின்றாள் கள்வளின் துணைவி.
சற்றும் முன்பு நடந்த நிகழ்வு அவனை இத்தனை தூரம் உரிமை எடுத்துக் கொள்ள வைத்திருந்தது என்பதே நிதர்சனமான உண்மை. அவனது இந்த உரிமையும் அணுகுமுறையும் அந்த நொடி பிரளயத்தையே உருவாக்கியிருந்தது பெண்ணவளின் மனதில்.

