Loading

அத்தியாயம் 6

 

சிறிது நேரத்திற்கு முன்னர்..

தமக்கையின் சொல்லில் அரக்கப் பரக்க ஓடி வந்தான் விஜயன்.

அவனை வீட்டின் வாசலிலேயே எதிர்கொண்ட வசந்தி, “என்னடா நடக்குது இங்க.?”

“அதான் அக்கா எனக்கும் தெரியல.”

“என்ன தெரியல? உனக்குத் தெரியாம தான், அந்தப் பொண்ணு கிளம்பி வந்திருக்கா?”

“இப்ப எங்க அவ.?”

“நிஜமாவே லவ் பண்ணுறீங்களா?”

அவன் அமைதியாய் நிற்க, “சொல்லு விஜி.”

‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தான்.

கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திய படி வாசலில் அமர்ந்தார்.

“அக்கா..” என விஜயனும் அருகே அமர, “நம்ம வீட்டு நிலைமை உனக்குத் தெரியும் தான? இப்ப, இந்த லவ் வேற.”

“அவ திடீர்னு இப்படிச் செய்யிவானு நான் எதிர்பார்க்கல.”

“எவ்வளவு நாளா‌?”

“ஒரு ஆறு மாசமாவே தெரியும். லவ் பண்ண ஆரம்பிச்சது இப்பதான், ஒன்றரை மாசமா.?”

“அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் ஆனது தெரிஞ்சுமா லவ் பண்ண.?”

அவன் திகைத்து, “அக்கா, என்ன சொல்லுற? சஞ்சுக்கு நிச்சயம் ஆகிடுச்சா‌?”

“உனக்குத் தெரியாதா? ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைப் பார்த்துப் பேசி முடிச்சு நிச்சயம் செஞ்சிட்டாங்களே.?”

“அவ, என்கிட்ட சொல்லவே இல்லக்கா.?”

“சொல்லி இருந்தா?” என்ற வினாவில் இருவருமே திரும்பிட, அவர்களிற்குப் பின்னால் நின்று இருந்தாள் சஞ்சனா.

வசந்தி எதுவும் பேசாமல் எழுந்து செல்ல, விஜி அவளின் முன்னால் வந்து நின்றான்.

“ஏன் என்கிட்ட சொல்லல சஞ்சு.?”

“இந்த ஏரியால இருக்கிற எல்லாருக்குமே எனக்கு எங்கேஜ்மெண்ட் ஆனது தெரியும்‌. உனக்கும் தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன்‌‌. பிரபோஸ் பண்ணதுக்கு அப்புறம், நீ ஒரு தடவைக் கூட அதைப் பத்திக் கேட்கல. பின்னாடி தான், உனக்குத் தெரியாதுனு புரிஞ்சுக்கிட்டேன். அந்த டைம்ல உன்கிட்ட எப்படிச் சொல்லுறதுனு தயக்கமா இருந்துச்சு. ஆனா, அப்படியே இருந்துட முடியாது இல்ல.?”

அவன் குழப்பத்துடன், “நிச்சயம் ஆனதுக்குப் பின்னாடி தான், நீ எனக்கு பிரபோஸ் பண்ணியா.?”

அவள் தலை அசைத்து, “எனக்கு அந்த மாப்பிள்ளை மேல எந்த இண்ட்ரெஸ்ட்டும் இல்ல. என்னோட மறுப்பை மீறிதான், வீட்டுல பேசி முடிச்சாங்க. கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுனு தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். முன்னாடி இருந்தே, உன்னைக் கொஞ்சம் பிடிக்கும்‌‌. அந்த டைம்ல, அது எப்படியோ லவ்வா மாறிடுச்சு.”

அவன் முகத்தில் எந்த பிரதிபலிப்பையும் காட்டாது அப்படியே நிற்க, “ஸாரி விஜி. உன்கிட்ட மறைக்கணும்னோ, ஏமாத்தணும்னோ நினைக்கலடா!” எனக் கையைப் பற்றினாள்.

ஆடவனாலுமே உணர முடிந்தது. தனது வீட்டின் சூழலையும், தமக்கை மற்றும் சுற்றத்தாரின் வாழ்க்கை முறையையும் அறிந்தவனிற்கு‍, மனித இயல்புகளைப் புரிந்து கொள்வது அப்படி‌ ஒன்றும் கடினமில்லை.

விருப்பம் இல்லாத ஒன்றை செய்யச் சொல்லி ஒருவரால் நிர்பந்திக்கப்படும் பொழுது, அதில் இருந்து வெளியேறுவதற்கான வழியையே மூளை சிந்திக்கும்.

நகைக்கடையின் பொறுப்பை மருமகன் மணிகண்டனிடம் ஒப்படைத்து விட்டு, “மாப்பிள்ளையோட சேர்ந்து கடையைப் பார்த்துக்க!” என அவனின் தந்தை சிவநாதன்‌ உரைத்த பொழுது‍, அதை ஆடவனின் மனம் முற்றிலுமாய் ஏற்க மறுத்தது.

விஜயன்‌ விரும்பிப்‌ படித்த படிப்பிற்கும் கண்ட கனவிற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது, நகைக்கடைத் தொழில்‌. அதில் ஆனா ஆவன்னா கூட அறிந்திடாதவன்.

ஆனால் மணிகண்டனிற்கோ ஆபரண வடிவமைப்பின் தொடக்கப் புள்ளி முதல், கடையின் வியாபார நுணுக்கம் வரை அத்தனையும் அத்துபடி. அத்தோடு தமக்கையின் கணவன் வேறு.

இவன் கடைக்குச் சென்றால் மாமனிற்கு எடுபிடியாகத் தான் இருக்க வேண்டும். முதலாளி இருக்கையானது என்றுமே வசமாக வாய்ப்பு இல்லை. அது இல்லாது போனாலும் தொழிலைக் கற்றுக் கொள்ளுதல் என்பதும், இயலாத காரியம்.

பணி செய்பவர்கள் யாவரும் இதுவரை தங்களிற்கு முதலாளியாக இருப்பவனிற்கு விசுவாசமாய் இருப்பார்களா? அல்லது வாரிசு என்ற ஒற்றைக் காரணத்திற்காகக் கடையின் உரிமையாளரது மகனின் சொல்லை செவி மடுத்துக் கேட்பார்களா.?

‘தனது சொல் அங்கு சபையேறும்!’ என்ற நம்பிக்கை வராததால், தங்களது சொந்த நகைக் கடைக்குச் செல்வதை முற்றிலுமாய் வெறுத்தான் விஜயன்.

படித்ததோ, முதுகலை அரசியல் அறிவியல். கனவோ, குடியியல் பணியில் இணைய வேண்டும் என்பது. ஆனால் அவனது தந்தையைப் பொறுத்தவரை, விஜயனின் கனவெல்லாம், கரத்திற்கு எட்டிடாத கானல் நீர்.

படித்து முடித்ததும் சம்பாதிக்க ஆரம்பித்து விட வேண்டும் அவருக்கு. வருவாய் இல்லாமல் ஒருநாள் வீட்டில் இருந்தாலும், அவன் வாழத் தகுதி இல்லாதவன்.

“நான் எல்லாம் பதினஞ்சு வயசுலயே, உன் தாத்தாக்கூட சேர்ந்து கடைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். இருபது வயசுல கடையை என் பொறுப்புக்கு மாத்திக்கிட்டேன். அப்ப இருந்தே, வீட்டுல என் சொல்லு தான். நான் எடுக்கிறது தான்‌ முடிவு. என்ன காரணம்னு நினைக்கிற? சம்பாத்தியமும் சாமர்த்தியமும் தான்.

இருபத்தஞ்சு வயசாகுது‌. இன்னும் இப்படியே இருந்தா எப்படி.? படிக்கிறேன், பரிட்சை எழுதப் போறேன்னு நாளைக் கடத்தி அப்பனோட நிழல்லயே கடைசி வரைக்கும் இருந்துடலாம்னு நினைக்கிறியா.?

அப்படி நினைச்சு உன் இஷ்டத்துக்கு இருந்தா, எத்தனை நாளைக்கு நான் சேர்த்து வச்சிருக்கிறது தாங்கும்.? இந்த சொகுசு வேணும்னா, இருக்குற சொத்தைப் பாதுகாக்கத் தெரியணும். அதுக்கு முதல்ல உழைக்கணும். நீ அதைச் செய்யிற மாதிரி தெரியல. அதுனால மாப்பிள்ளைக்கிட்ட கடையை கொடுக்க வேண்டியதா போச்சு.

புஸ்தகத்தைத் தூக்கிப் போட்டுட்டு, ஏதாவது ஒரு வேலைக்குப் போற வழியைப் பாரு. அது நம்ம கடையா இருந்தாலும் சரி, வெளிய வேலைக்குச் சேர்ந்தாலும் சரி! இல்லேனா, சொத்து உன் கைக்கு வராது சொல்லிட்டேன்!” என்று உரைத்திருந்தார் சிவநாதன்.

அவர் மொழிவது அனைத்தும் சரிதான். ஆனால் அவனின் மனம் அதை ஏற்க வேண்டுமே?

‘அப்படியா தான் எதற்கும் உதவாதவனாக இருக்கிறேன்.? ஈன்றவரின் கரத்தை விடுத்து தன்னால் தனியாக‌ வாழ்வில் நிமிர முடியாதா.?’ என்ற எண்ணம் மெல்ல அவனுள் வேர்விடத் தொடங்கி‍, நாளுக்கு நாள் அதிவேகமாய் வளர்ந்தது.

அதன் உந்துதலின் காரணமாய், தந்தை சேர்த்து வைத்த செல்வத்திற்காக அல்லாது தனது சுயமரியாதைக்காக.. வீட்டில் இருந்து வெளியேறும் முடிவிற்கு வந்தான் விஜயன்.

‘தனது மகன் எங்கும் எதிலும் வெற்றி கொள்பவனாக இருக்க வேண்டும்!’ என்ற எண்ணத்தில் விஜயன் எனப் பெயர் இட்டிருந்தார், சிவநாதன்.

தற்போது அதை அடையாமல், தனக்கு என்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளாது வீட்டிற்குத் திரும்பக் கூடாது என உறுதி‌ ஏற்றிருந்தான்.

ஆனால் நடப்பதோ வேறு விதமாய் இருக்கிறது. ஆடவன் தனக்கென்று நிலையான ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்ளும் முன்பே, துணையாய் சஞ்சனாவும் வந்து சேர்ந்து விட்டாள்.

நூல் அறுந்து பிடிமானம் இல்லாது காற்றில் பறந்து கொண்டிருந்த பட்டத்தை, மரக்கிளை என்றெண்ணி குருவி ஒன்று வந்து அதன்மேல் அமர்ந்தது போலாயிற்று நிலைமை.

தற்போதான நிகழ்தகவில் இரண்டு தான் நடக்கக் கூடும். ஒன்று, காற்று பட்டத்தையும் குருவியையும் பாதுகாப்பாய் தனது அரவணைப்பிற்குள் வைத்து அழைத்தும் செல்லலாம். இல்லையேல், பட்டம் கிழிந்து அதன் நிலை புரியாது நம்பி வந்த குருவியும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளலாம்.

எதுவென்றாலும் சரி, ஒன்றரை மாத காதலுக்காகத் தன்னை நம்பி‌ வந்தவளின் மனதை, ‘பொய் உரைத்தாய்!’ எனக் குற்றம் சாட்டி வேதனைப்படுத்த விரும்பவில்லை அவன்‌.

“என்னால நீ சொல்லுறதைப் புரிஞ்சிக்க முடியிது. ஆனா, இப்படித் திடீர்னு கிளம்பி வர வேண்டிய அவசியம் என்ன.?” என சமாதானமாகவே பேச முயன்றான்.

“புதன்கிழமை எனக்குக் கல்யாணம் விஜி. இந்த சூழ்நிலையில வீட்டுல எப்படி இருக்க முடியும்?”

அவன் அதிர்ந்து, “வாட்.?”

“எனக்குத் தெரியும், தப்பு என்மேல தான். உன்கிட்ட எல்லாத்தையும் முன்னாடியே சொல்லி இருக்கணும்‌. ஆனா முடியல.”

ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன், “சரி, இப்ப என்ன செய்யலாம்.?”

“தெரியல விஜி. நீ தான் சொல்லணும்.”

“திரும்பி வீட்டுக்குப் போக முடியாதா உன்னால.?”

“எப்படிப் போக முடியும்? புரிஞ்சுதான் பேசுறியா.?”

“நீயும் என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு சஞ்சு. என் கையில, நிலையான வேலை இல்ல. சிவில் சர்வீஸ் எக்ஸாம்கு பிரிபர் செஞ்சிட்டு இருக்கேன்‌. எப்ப அதுல பாஸ் பண்ணுவேன்னும் உறுதியா சொல்ல முடியாது. முக்கியமா, தங்க இடம் இல்ல. பசங்களோட சேர்ந்து ரூம் எடுத்து அதுல தான் இருக்கேன். இதுல உன்னையும் எப்படி நான்.?”

“உங்க வீடுதான் இருக்கே விஜி?”

“நான் திடீர்னு ஒரு பொண்ணைக் கூட்டிட்டுப் போய் நின்னா, எங்கப்பா ஒத்துக்குவாருனு நினைக்கிறியா.?”

“என்னால திரும்பிப் போக முடியாது. அப்படி நான் போனா என்னைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்க‌.”

“சஞ்சு, ஒரு உண்மையைச் சொல்லு. இந்த லவ் எனக்கானதா? இல்ல, பிடிக்காத மேரேஜ்ல இருந்து தப்பிக்கிறதுக்கான ஆப்சனா என்னை சூஸ் பண்ணியா.?”

“ஏண்டா இப்படி எல்லாம் பேசுற.?”

“ஏதோ தோணுச்சு, அதான் கேட்டேன்.”

“ஐ ட்ரூலி லவ் யூ விஜி. ப்ளீஸ் என்னைப் போகச் சொல்லாத!”

“என்கூட வந்தா, கஷ்டப்பட வேண்டியது இருக்கும் சஞ்சு‌. சில நேரங்கள்ல தன்மானத்தை விட்டுக் கொடுக்கணும். அதுக்காக எப்பவும் அப்படியே தான் வாழ்க்கை இருக்கும்னு இல்ல‌. நான் யூபிஎஸ்சி எக்ஸாம்ல பாஸ் பண்ணற வரைக்கும். ஒருவேளை என்னால முடியலேனா‍, நிச்சயமா வேற ஏதாவது வேலையைத் தேடிக்கிறேன். அதுக்கு, எனக்கு ஒரு ரெண்டு வருஷம் டைம் வேணும். ஓகேவா உனக்கு? வெயிட் பண்ண முடியுமா.?”

அவள் சம்மதமாய் தலை அசைத்திட, ஆதரவாய் கரத்தைப் பற்றிக் கொண்டான் விஜயன்.

இருவரையும் கவனித்து இருந்த வசந்தி, “இது சரிவரும்னு நினைக்கிறியா.?” எனத் தம்பியிடம் வினவ, “ஏன் க்கா.?”

“அப்பாவுக்குத் தெரிய வந்தா.?”

“அவர்க்கிட்ட மறச்சு நான் எதுவும் செய்ய முடியாது. நிச்சயம் எப்படியாவது தெரிய வந்துடும். இல்லேனா, உன்னோட வீட்டுக்காரரே போய் சொல்லுவாரு‌.”

“அப்புறம் எப்படி விஜி?”

“அதுக்காக, என்னை நம்பி வந்த பொண்ணை அப்படியே விட சொல்லுறியா அக்கா.?”

அவர் என்ன பதில் உரைப்பது என்று புரியாமல் பார்க்க, “சஞ்சுவை ஒரு ரெண்டு நாளைக்கு உன்னோட வீட்டுல வச்சிருக்கியா.?”

“என்ன செய்யப் போற.?”

“இப்படியே இருக்க முடியாதுல? மேரேஜுக்கு அரேஞ்ச் பண்ணணும். நான் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுறேன் முதல்ல.‌ அவங்க ஏதாவது வழி சொல்லுவாங்க.”

“எனக்குப் பதட்டமா இருக்கு விஜி.”

“அக்கா ப்ளீஸ்..” என்றிட, தனக்குப் பின்னால் பிறந்தவனை ஆதரவின்றி தவிக்க விட மனமில்லாது, தலையை அசைத்தார்.

“சரி‌ சஞ்சு, நீ அக்காக்கூட இரு. நான் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டு வர்றேன்!” என விஜயன் விடைபெற்றுச் செல்ல, அடுத்த சில நிமிடங்களிலேயே சஞ்சனாவின் பெற்றோர் விஷயம் தெரிந்து வசந்தியின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

செய்தியானது காட்டுத் தீ போல் பரவிட, வசந்தியின் கணவன் மணிகண்டன் மற்றும் அவரது தந்தை சிவநாதனின் செவியையும் எட்டியது விஜயனின் காதல் விவகாரம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்