
அத்தியாயம் 5
செண்பகப் பொழில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூமி. பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது இவ்வூர். இதற்கு மற்றொரு பெயரும் உண்டு.
வடக்கில் இருக்கும் காசிக்குச் செல்ல இயலாத மக்களிற்காக, தெற்கே விஸ்வநாதருக்கு பராக்கிராம பாண்டிய மன்னனால் ஆலயம் எழுப்பப் பட்டதால், செண்பகப் பொழிலானது தென்காசி என்று பெயர் மாற்றம் பெற்றது.
பழைய மற்றும் புதிய குற்றால அருவிகள், ஐந்தருவி, செண்பகா தேவி, பால், புலி அருவிகள், நீர் தேக்கங்கள், அது தரும் குளுமை, உலகம்மன் கோவில் என சுற்றுலாவிற்குப் பெயர் போன ஊர்.
இரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து நிறுத்தத்தை அடைந்தான் நவநீதன்.
அங்கேயே வாடகை வண்டியில் ஏறி பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.
தங்களின் வசதியை ஊரிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி கடைசியில் ஒன்றும் இல்லாது வெறும் கையோடு நின்ற தந்தையின் வாழ்க்கை முறையால், அப்பழக்கத்தை அடியோடு விட்டு விட்டான் நவன்.
சென்னையை விடுத்து ஊருக்கு வரும் தருணங்களில் பெரும்பாலும் எவ்விடம் சென்றாலும், பேருந்து பயணம் தான். தவிர்க்க இயலாத தருணங்களில் ஆட்டோ.
அப்பழக்கத்தில் நகரப் பேருந்திலேயே வந்து இறங்கினான். நிறுத்தத்தில் இருந்து பெண் வீட்டார் இருக்கும் குடியிருப்புப் பகுதியின் பெயரை விசாரித்து நடந்தே வந்து அத்தெருவை அடைந்தான்.
அன்னை செல்வாம்பிகை, அடையாளமாக அருகே இருக்கும் கிருஷ்ணன் கோவிலை உரைத்து இருந்தார்.
ஞாயிற்றுக் கிழமை தினம். காலை ஏழு மணி. இன்னும் பலருக்கு விடியவே இல்லை போலும். வெறிச்சோடிக் கிடந்தது வீதி. ஆனால் வீடு தவறாமல், கோலம் போடப்பட்டு இருந்தது.
தெரு முனையில் இருந்த கடையில் எதையோ வாங்கிச் சென்ற இளம் பெண்ணை நிறுத்தி, “இங்க, கிருஷ்ணன் கோவில் எங்க இருக்கு?” என விசாரித்தான்.
“இந்த தெருதான். வாங்க நான் காட்டுறேன்.” என முன்னால் நடக்க, “இல்ல பரவாயில்ல, நானே போயிக்கிறேன்.”
அவள் சிரித்து, “நானும் எங்க வீட்டுக்குத் தான் போறேன்!” என்றிட, வலிந்து புன்னகைத்து பார்வையால் மன்னிப்புக் கேட்டபடி அவளைப் பின் தொடர்ந்தான் நவன்.
இரண்டு எட்டுதான் வைத்திருப்பர்.
பக்கவாட்டில் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நடுத்தர வயது பெண்மணி, “ஏய் கனி, என்னடி ஆச்சு உங்க வீட்டுல.?” என விசாரிக்க, “எங்க வீட்டுல, என்ன?”
“உங்க வீடுனா, உங்க வீடேவா? கீழ இருக்கிற கல்யாணி அக்காவைப் பத்திக் கேட்டேன்.”
“ஏன் அவங்களுக்கு என்ன.?”
“அடிப்பாவி! அந்த அக்காவோட மக ஓடிப் போயிடுச்சுனு சொன்னாங்க. ஏன், உனக்குத் தெரியாதா.?”
“உங்களுக்குத் தான் தெரிஞ்சிருக்கே? அப்புறம் ஏன் என்கிட்ட கேட்கிறீங்க.?”
“வேற ஏதாவது விபரம் தெரியுமானு தான்.”
“எனக்கு அந்த அளவுக்கு விபரம் பத்தாது அக்கா.”
“சும்மா சமாளிக்காதடி. மேல் வீட்டுல குடி இருக்க? அதெப்படி உனக்குத் தெரியாம போகும்.?”
“சமாளிக்க எல்லாம் இல்ல, எங்க சித்தி அப்படித்தான் சொல்லும் என்னை விபரம் கெட்டவனு.”
“உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்!” என்றுவிட்டு அப்பெண் செல்ல, “நானா வந்து கேட்கச் சொன்னேன்.? அந்த அத்தை வேற சுடிதார் எடுத்துக் கொடுத்து கல்யாணத்துக்கு வா கனினு கூப்பிட்டாங்க. போனா, அப்பளம் பாயாசத்தோட நல்லா கல்யாண சாப்பாடு சாப்பிட்டு வரலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, இந்த அக்கா வேற இப்படி ஓடிப் போயிருச்சு.
அந்த மாப்பிள்ள வீட்டுக்காரங்க பாவம் இல்லையா? முன்னாடியே சொல்லி இருந்தா, அவங்க வேற பொண்ணாவது பார்த்திருப்பாங்க.” என யார் என்றே அறியாதவர்களுக்காக, தனது கருணையின் சில துளிகளைச் சிந்தியபடி நடந்தாள்.
பின்னால் வந்த நவனின் இதழ்களில், அவளின் பேச்சால் அனிச்சையாய் புன்னகை மலர்ந்தது.
பாதி வீதியைக் கடந்து இருப்பர். விழா நடக்கும் வீட்டை அறிவிப்பு செய்வதாய், வெளிப்பக்கம் பந்தல் போடப்பட்டு இருந்தது. உறவினர்களில் சிலர் வெளியே கூடி நின்றனர். ஏதோ வாக்குவாதம் நடப்பது போல் தெரிந்தது.
சற்றுத் தள்ளி இருந்த கோவிலைக் கைக்காட்டிய கனி, “இதுதான் நீங்க கேட்ட கிருஷ்ணன் கோவில்!” என்றிட, “தேங்க்ஸ்.” என நன்றியைத் தெரிவித்தான்.
அவள் நடப்பதைப் பார்த்தபடி அங்கேயே நிற்க, “ஏய், கனி! என்ன வேடிக்கை.?” என்று மேல் இருந்து குரல் தந்தார் காளீஸ்வரி.
“அச்சோ! நான் எதுவும் பார்க்கல சித்தி.” என உரைத்தவாறே அவள் மாடிப் படிகளில் ஏறிச் செல்ல, கீழ் வீட்டின் வாயிலில் இருந்த தந்தையைக் கண்டு அதிர்ச்சியுடன் அப்படியே நின்றான் நவன்.
வழியில் இரு பெண்களும் பேசிக் கொண்டது நினைவிற்கு வந்தது. ராஜ கணபதி அங்கு வந்திருப்பதற்கான காரணத்தைக் கணிக்க, அரை நொடிக்கூட தேவைப் படவில்லை.
புரிந்து கொண்டான், வீட்டில் இருந்து வெளியேறி இருப்பது தனக்கு நிச்சயித்த பெண் என்று.
அச்சூழலை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை ஆடவனிற்கு. வருத்தம் ஏமாற்றம் என எவ்வித உணர்வும் ஏற்படவில்லை.
நடக்கும் நிகழ்வுகளை மூன்றாம் மனிதனின் மனநிலையில் இருந்து பார்த்த படி, கிருஷ்ணன் கோவிலின் வாயிலில் சென்று அமர்ந்தான்.
அரை மணி நேரத்திற்கு மேலாய் வாக்குவாதம் தொடர்ந்தது. ராஜா தலையைத் தொங்க போட்டபடியும், அம்பிகை கண்களைத் துடைத்தவாறும் வெளியே வந்தனர்.
மகனைக் கண்டவர்களிற்குப் பேரதிர்ச்சி. ஆனால் அவனோ முகத்தில் சலனமின்றி நோக்கினான்.
“நவநீ..” என அன்னையானவர் அழுகையுடன் அழைத்திட, வலிந்து புன்னகைத்தான்.
ராஜாவின் முகத்திலோ கடுமை.
‘என்ன?’ என்பது போல் அவன் பார்த்திட, “அந்தப் பிள்ளைக்கிட்ட பேசுனு சொன்னேனா இல்லையா.? பேசி இருந்தா விபரம் தெரிஞ்சிருக்கும்ல.? இல்லேனா, ஃபோன் போட்ட போதாவது எடுத்திருக்கணும். ரெண்டையுமே செய்யல. இப்படி இருந்தா, எந்தப் பொண்ணுக்குத்தான் உன்மேல நம்பிக்கை வரும். அதான் இடையில நம்புற மாதிரி ஒருத்தனைப் பார்க்கவும், போயிடுச்சு!” என்று மகனைக் குற்றம் சாட்டினார்.
‘அடப்பாவிங்களா? அந்தப் பொண்ணு போனதுக்கு நான் என்னய்யா செய்வேன்.?’ என மனதோடு எண்ணியவனிற்குமே, தான் தவறு செய்துவிட்டதாகவே தோன்றியது.
உண்மை தான். ஓரிரு முறை கைப்பேசியில் உரையாடி இருந்தாலோ, அல்லது நிச்சய தினத்தன்று நேரில் சந்தித்துப் பேசி இருந்தாலோ கூட அவளின் மனவோட்டத்தைக் கணித்திருக்க முடியும். அதைச் செய்யாமல் போனதன் விளைவு தான், தற்போதைய நிலை என உணர்ந்து ஒரு பெருமூச்சு விட்டான்.
திருமண ஆசையோ அதைப் பற்றிய எதிர்பார்ப்போ இல்லாமல் இருந்தவனிற்கு, ‘அது நடக்க வாய்ப்பில்லை!’ எனத் தெரிந்த பின்னர் தான், சூழ்நிலையின் தீவிரம் புரிபடத் துவங்கியது.
இன்று பந்தக்கால் நடுவதாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் அதற்காக வருகை தந்திருப்பர். ஆனால், வீட்டைப் பூட்டிவிட்டு பெற்றோர்கள் இங்கு வந்து நிற்கின்றனர்.
அழைப்பிதழ் கொடுத்தவர்களிற்கு எல்லாம் அழைத்து, திருமணம் நின்றதைச் சொல்ல வேண்டும்.
‘ஏன்? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?’ என வினா எழுப்புபவர்களிற்குச் சலிக்காமல் விளக்கம் கொடுக்க வேண்டும்.
அருகில் இருப்பவர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வந்து செல்வர். அவர்கள் இறக்கி வைக்கும் வித விதமான துக்கங்களை எல்லாம் ஏற்கத் தயாராய் இருக்க வேண்டும். இதில் வருவோருக்கு தேநீர், காபி, பலகாரம் வேறு பரிமாற வேண்டும். இல்லையேல் அதையும் ஒரு குறையாய் சொல்லிவிட்டுச் செல்வர்.
இரு வாரங்கள் விடுப்பு எடுத்திருந்தான் திருமணத்திற்காக. தற்போது அதற்கு அவசியமே இல்லை. விடுமுறையை ரத்து செய்துவிட்டுப் பணிக்குத் திரும்பும் பட்சத்தில், உடன் வேலை செய்யும் அனைவருக்கும் விபரம் தெரிந்து விடும்.
இனி, குறைந்தது ஒரு மாதத்திற்கு நவநீதனின் நின்று போன திருமணம் தான் அலுவலகத்தில் பேசு பொருளாக இருக்கும்.
முன்தினம் தான் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் தந்து விட்டு வந்திருந்தான். திரும்பிய உடனே மனைவியைப் பற்றித்தான் விசாரிப்பர்.
என்னவென்று சொல்வது? வேறு ஒருவனுடன் சென்று விட்டாள் என்றா.?
அனைத்திற்கும் மேலாய் வாங்கிய கடன்?
வறண்டு இருந்த தொண்டைக்குள் எச்சிலை விழுங்கி, சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
“உங்களுக்கு என்மேல இருக்குற கோபம் நியாயம் தான்பா. ஆனா, நீங்களும் கொஞ்சம் விசாரிச்சு இன்னும் நல்ல பொண்ணா பார்த்திருக்கலாம். அந்தப் பொண்ணையும் தப்பு சொல்ல முடியாது. உங்களை மாதிரியே அவளுக்கும் அப்பா அமைஞ்சிருந்தாரோ என்னவோ.?” எனத் தன்னுள் உண்டான வலியை, கூர் வார்த்தைகளாய் ஈன்றவரின் மீதே கடத்தினான்.
“நவநீ! பேச்சுல கவனம் இருக்கட்டும்! நீ நடந்துக்கிற முறை நல்லா இல்ல!” என்று அம்பிகை மகனை எச்சரித்திட, “நிஜம் தான். என்னை மாதிரி அப்பன் இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்!” எனச் சொற்களைத் துண்டு துண்டாய் உரைத்து, அச்சூழலின் பாரத்தைத் தாங்கிட இயலாது தவித்தார் ராஜா.
அவரிற்குமே, ‘திருமணமே வேண்டாம் என இருந்தவனை நாம் தானே வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தோம்.? தற்போது மணப்பெண் வெளியேறி விட்ட நிலையில், மகனின் மனம் எத்தனை ஆழமாய் பாதிப்பு அடைந்திருக்கும்? அவன் உரைத்தது போல் பெண்ணை முடிவு செய்வதற்கு முன்னர், இன்னும் கூட நன்றாய் விசாரித்து இருக்கலாமோ?’ என்று தோன்றத்தான் செய்தது.
அம்பிகைக்கு எவரிற்குச் சமாதானம் சொல்வது என்றே தெரியவில்லை. கணவன் மகன் என இருவரின் மன எண்ணங்களைப் பற்றியுமே நன்கு அறிந்தவர்.
பிள்ளையின் தோளில் தடவிக் கொடுத்து, துணைவருக்கு பார்வையால் ஆறுதல் மொழிந்தார்.
‘அங்கு என்ன பேசினாலும், எந்த பயனும் கிட்டாது!’ என்பது அவரின் புரிதலாக இருந்தது. அதனால் அமைதியாகவே நேரத்தை நகர்த்தினார்.
“சரி விடுங்க! இனி, பேசி என்னாகப் போகுது?” எனப் பெற்றவர்களைச் சற்று இலகுவாக்கும் பொருட்டு உரைத்த நவன், தனக்கு அவர்கள் அனுப்பிய சஞ்சனாவின் புகைப்படத்தைக் கைப்பேசியில் இருந்து அழித்தான்.
“நான் வீட்டுக்குப் போறேன். நீங்க இங்க என்ன ஏதுனு பேசி முடிச்சிட்டு வாங்க. அப்புறம் எதுவும் சத்தம் போட்டுட்டு இருக்காதீங்க. அந்த பொண்ணோட அம்மா அப்பாவுக்குமே, இது அதிர்ச்சியா தான் இருக்கும்.
மண்டபத்துல, சமையல் காரவங்கக்கிட்ட எல்லாம் பேசி பைசாவைத் திருப்பி வாங்க முடியுமானு பாருங்க. பட்டு சேரியை ரிட்டன் கொடுக்க முடியாது இல்ல.? இருபத்தஞ்சாயிரம் ரூபா. சொந்தக்காரங்களுக்கு வாங்கிக் கொடுத்த டிரஸ் எல்லாம் திரும்ப வாங்க வழி இல்ல. அதைப் பத்திப் பேசுனா அசிங்கமா இருக்கும்.” என வலியுடன் கூடிய நீண்ட மூச்சு ஒன்றை வெளிவிட்டவன்,
“வந்ததுக்கு உங்கக்கூட ஒருநாள் இருந்துட்டு, நாளைக்கு நைட் சென்னைக்குக் கிளம்புறேன். சங்கடப்படாதீங்க பார்த்துக்கலாம். நானும் கொஞ்சம் தப்புதான் செஞ்சிட்டேன். கல்யாண விசயத்தை ஜஸ்ட் லைக் தட்னு எடுத்திருக்கக் கூடாது. அதுக்கான ஃபைனா இதை நினைச்சுக்கிறேன்! பார்த்து வாங்க நீங்க!” என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

