Loading

அத்தியாயம் 4

 

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்கள். நவநீதனை பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் எனலாம். அத்தனை செல்வ மிகுதியில் பிறந்தவன்.

 

அவனது தந்தை, ராஜ கணபதியும் அப்படியே! பெயரிற்கு ஏற்றது போல் ராஜாவாய் வாழ்ந்தவர். தனது உயிரணுவில் உதித்தவனையும் அப்படித்தான் வளர்த்தார்.

 

மகன் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே, அவனின் இருகை விரல்கள் பத்திற்கும் மோதிரம் அணிவித்து அழகு பார்த்தார். இடைக்கு பொன்னால் செய்த அரைஞாண் கொடி. 

 

சுற்றத்தாரில் இதைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை எனலாம். அதனாலேயே அவர்களின் பகுதியில் நவநீதன் பிரபலமாக இருந்தான் என்றால் மிகையாகாது.

 

அவனது குணத்திற்காக பழகியவரைக் காட்டிலும், செல்வந்தன் என்பதற்காக நட்பு பாராட்டியவர்கள் ஏராளம்.

 

அனைத்தும், பள்ளி படிப்பு முடியும் வரை மட்டுமே நிலைத்தது‌. 

 

ராஜகணபதி நடத்திய நிதி நிறுவனத்தில் பணிசெய்த மேலாளர் பணம் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டு ஓடி விட, நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியது.

 

எவரிற்கும் கடுகளவு கூட தீங்கு நினையாத மனிதர். யார் உதவி என்று கேட்டாலும், இல்லை என மறுப்பு சொல்லாது தன்னால் இயன்றதை செய்து தரும் குணம் கொண்டவர். 

 

உலகின் தற்போதைய சூழலானது நேர்மையான மனிதர்களிற்கு ஏமாளி எனப் பெயர் தந்திருக்கிறது‌. அதற்கு ராஜகணபதியும் விதிவிலக்கு இல்லை.

 

ஏமாற்றி விட்டான், நம்பிக்கை வைத்திருந்தவனே! ஆண்டுக் கணக்கில் பணி செய்து வந்தவன், அரைநொடியில் இப்படி முதுகில் குத்திவிடுவான் எனக் கணிக்கத் தவறிப் போனார். 

 

விளைவு, நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் ராஜாவின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டனர். போலீசார் விசாரணை என்று வீட்டிற்கும் நிறுவனத்திற்கும் மாறி மாறி இடம் பெயர்ந்தனர்.

 

இறுதியில், நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

அனைவருக்கும் தெரியும், இவர் மீது தவறு இல்லையென. எனினும் நீதிமன்றத்திற்கு மன சாட்சியைக் காட்டிலும் மனித சாட்சி அல்லவா தேவைப் படுகிறது?

 

பணம் இழந்தோரின் கூக்குரலும் அழுகை ஒலியும் ராஜாவை நிம்மதி இழக்கச் செய்திட, அவர்களின் பணத்தைத் தானே தந்து விடுவதாய் வழக்கறிஞரின் மூலமாய் நீதி மன்றத்திற்குச் செல்லும் முன்னரே காவல் ஆணையரிடம் பேசி வெளியே வந்தார். 

 

சொன்னது போலவே இருக்கும் சொத்துகளில் பாதியை விற்று, பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடு கட்டினார். இதற்கிடையில் ‘தங்களுக்கு எதுவும் மிஞ்சாது போகுமோ?’ என உரிமையைக் கேட்டு வந்து நின்றனர் உடன் பிறந்தவர்கள்.

 

தன் மீதான அவர்களது நம்பிக்கை உடைந்து போனதை உணர்ந்த ராஜா, வசிக்கும் வீட்டை மட்டும் தனக்கென வைத்துக் கொண்டு மீதம் இருந்தவற்றை சகோதர சகோதரிகளிற்குப் பிரித்துக் கொடுத்தார்.

 

அனைத்தும் முடிந்து போயிற்று. நவநீதனும் தனது இறுதி ஆண்டு பள்ளிக் கல்வியை முடித்து இருந்தான்.

 

தந்தை, மகன் இருவருமே வாழ்வின் புது அத்தியாயத்தைத் துவக்க வேண்டிய இடத்தில் நின்றனர்.

 

முதலாளியாய் இருந்த ராஜா அதன்பின்னர் தெரிந்த துணிக்கடை ஒன்றில் கணக்கராக பணியில் இணைந்தார். நவன் பிடித்தமான கல்லூரி ஒன்றில் இணைவதற்காக விண்ணப்பப் படிவத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

 

“ஃபீஸ் ஒன் லாக் ஆகும்பா. எனக்கு ஃபார்ம்ல சைன் பண்ணிக் கொடுங்க!” எனக் கேட்ட மகனிற்குப் பதில் சொல்ல முடியாத நிலையில், தந்தை.

 

ராஜா இயலாமையுடன் மனைவியைப் பார்க்க, “நவநீ, உனக்கே நம்ம வீட்டோட நிலைமை தெரியும்ல.? இப்ப அவ்வளவு பணம் கையில இல்லப்பா. இங்க லோக்கல்ல ஏதாவது ஒரு காலேஜ்ல சேர்ந்துக்கோ. மேல் படிப்புக்கு வேணும்னா, சென்னையில உனக்குப் பிடிச்ச காலேஜ்ல சேர்ந்துக்கலாம்!‌” என்று சமாதானம் உரைத்தார் அம்பிகை.

 

“அம்மா, பேஸ்மண்ட் ஸ்ட்ராங்கா இருந்தா தான், பில்டிங்கோட தரம் நல்லா இருக்கும். இதுவரை ஸ்கூல்ல படிச்சது எல்லாம் ஒன்னுமே இல்ல. இதுதான் என்னோட எதிர்காலத்தைத் தீர்மானிக்க போகுது. சோ, நான் சேக்ரிஃபைஸ் பண்ணத் தயாரா இல்ல. அதுனால எப்படியாவது பணத்தை அரேஞ்ச் பண்ணுங்க, படிச்சு முடிக்கிற வரை மட்டும். அப்புறம் நான் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவேன். அப்ப, எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்.”

 

“நீ சொல்லுறது புரியிது நவநீ.‌ ஆனா பணம் இல்லயே?”

 

“இல்லனா என்னம்மா.? யார்க்கிட்டயாவது வாங்குங்க.”

 

மகனின் பேச்சைக் கவனித்து இருந்த ராஜா, “இதுவரைக்கும் அடுத்தவனுக்கு கொடுத்து தான் எனக்கு பழக்கமே தவிர, நான் யார்க்கிட்டயும் எதையும் கேட்டு நின்னது இல்ல.” என்றிட, 

 

“அப்பா, அதெல்லாம் சரிதான். உங்களுக்குச் சங்கடமா தான் இருக்கும். ஆனா, இது என்னோட வாழ்க்கைப் பிரச்சனை. எனக்காக செய்யக் கூடாதா.?”

 

“மகனுக்காகக் கூட, நான் என்னோட உறுதியை விட்டுத்தர தயாரா இல்ல.”

 

“இப்ப, நான் என்னதான் செய்யிறது.?”

 

“இங்கேயே ஏதாவது ஒரு காலேஜ்ல சேர்ந்து படி. அதுக்குச் செலவு பண்ண எனக்குத் திறம் இருக்கு. எந்த இடமா இருந்தாலும், படிப்பு ஒன்னு தான?” என ‘இதுதான் எனது முடிவு!’ என்பது போல் உரைத்துச் சென்றார் ராஜா.

 

பிறந்ததில் இருந்தே கேட்டது அனைத்தும் கிடைத்த நவனிற்கு, முதன் முதலான இந்த மறுப்பு தாங்கிட இயலாத வலியைக் கொடுத்தது. அதிலிருந்து இன்னுமே அவன் மீண்டு வரவில்லை‌ என்பது தான்‌ உண்மை. 

 

‘மற்றவர்களுக்காக பெற்ற மகனைக் கை விட்டு விட்டாரே ஈன்றவர்?’ என்ற எண்ணம் அவனது மனதை பெருமளவில் பாதித்து இருந்தது. 

 

இரண்டும் கெட்டான் வயது‌. பக்குவம் அடையாத மனம். தந்தையை தனது வாழ்வைக் கெடுத்த மனிதராகவே எண்ணத் தொடங்கி விட்டான். அத்தருணத்தில் இருந்து தான், கூர் சொற்கள் நவனின் உடைமையாகிப் போயின.

 

அவன் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்விக் கடனிற்கு ஏற்பாடு செய்து தந்து, மேலும் தேவையான உதவிகளிற்கும் கரம் நீட்டினார். 

 

அது, ராஜாவினது குணத்தின் மீது வைத்திருந்த மரியாதையின் காரணமாய்‌ செய்யப்பட்டது என்பது நவன் இன்று வரை அறிந்திடாத ரகசியம்.

 

ஈன்றவரின் மீதிருந்த அதிருப்தி, அவர் கொடுத்த பணத்தை ஏற்க விடாமல் தடுத்தது பதினெட்டு வயது இளைஞனை. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக, பகுதி நேரப் பணி ஒன்றிலும் இணைந்து கொண்டான்.

 

கிட்டத்தட்ட தந்தையும் மகனும் பகைவர்களாகிப் போயினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

தான், வாழ்வில் பின்னடைந்தது போல் அல்லாது மகன் உறுதியுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற‌ எண்ணத்தில் நவனை அவனின் விருப்பத்திற்கே விட்டு விட்டார் ராஜாவும்.

 

கல்வியும் உழைப்பும் அவனைக் கை விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆடவன் தனது செயல்களிற்கு எத்தனை உண்மையாய் இருந்தானோ, அதற்கான பலனைக் காலம் தயக்கமின்றி நல்கியது‌.

 

இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று கல்லூரியில் இருந்து வெளியேறும் பொழுது, ஐந்து இலக்க வருமானத்துடன் கையில் வேலையை வைத்திருந்தான்.

 

பணியில் இணைந்ததுமே, கல்விக்காகப் பெற்ற‌ கடனை அடைக்கத் துவங்கி விட்டான். அது முடிந்ததும் அலுவலகத்தில் கடன் பெற்று, அடுக்கு மாடி‌ குடியிருப்பு ஒன்றில் வீட்டை வாங்கினான். அதற்கான மாதாந்திர தவணைத் தொகையாக‌ வருவாயில் பெருமளவு போய்விடக் கூடிய சூழலில், தனக்கென்று ஒரு தொகையை வைத்துக் கொண்டு, மீதத்தை பெற்றவர்களிற்கு அனுப்பினான்.

 

“உங்களை மாதிரி இல்ல நான். ஒரு பையனா என் கடமையைச் சரியா செய்யணும்னு நினைக்கிறேன்! ” எனப் பணத்துடன் வந்த அவனின் சொற்களைக் கேட்டுப் பெற்றவர்களால் வலியுடன் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

 

“உன்னோட பணம் எனக்குத் தேவை இல்ல. நான் யார்க்கிட்டயும் கேட்டு நின்னது இல்லனு முன்ன சொன்னேன். அதுல பெத்த மகன் நீயும் தான் அடக்கம். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தேவையான அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன்! நீ சம்பாதிச்சதை நீயே பத்திரப்படுத்தி, நாளைக்கு உன் பொண்டாட்டிக்குச் செய்!” என்று அப்படியே பணத்தைத் திருப்பி அனுப்பி விட்டார் ராஜா.

 

அதில் தந்தையின் மீது மேலும் வருத்தம் தனயனிற்கு.

 

ஊரிற்குச் செல்லும் தருணங்களில் செலவிற்கு என்று பணம் கொடுத்தாலும் கூட, “வர்ற பிள்ளைக்குச் சோறு போடக்கூட திறம் இல்லாமலா இருக்கேன்?‌‌” என மகனின் வார்த்தை ஆயுதத்தாலேயே திருப்பித் தாக்கினார், குடும்பத் தலைவரும்.

 

இதிலேயே இருவருக்கும் முட்டிக் கொள்ளத் துவங்கிவிடும். அவன் ஒவ்வொரு முறை ஊரிற்கு வரும் பொழுதும், தாலிக் கொடிக்கும் தொப்புள் கொடிக்கும் இடையே சிக்கித் தவிப்பது என்னவோ செல்வாம்பிகை தான்.

 

அதனாலேயே வீணான வாதங்களையும் மனக் கசப்புகளையும் தவிர்ப்பதற்காக ஊரிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டான் நவன். கைப்பேசி அழைப்புகளும் கூட வாரம் ஒரு முறை, பத்து தினங்களிற்கு ஒரு முறை என அவனிற்குத் தோன்றும் போது நடக்கும்.

 

பெரும்பாலும் தந்தை மகனிற்கு நடுவே பேச்சு இருக்காது. எனினும் தலைவன் தலைவியிடம் உரையாடும் போதும், மகன் அன்னையிடம் விசயங்களைப் பகிரும் பொழுதும் மற்றவர் கேட்டுக் கொள்வர்.

 

‘தானாய் கரம் ஊன்றி மேலே வந்தவன், அதனால் இவ்வாழ்வு முழுவதும் அவனிற்கானதாகவே இருக்கட்டும். தான் எந்நிலையிலும் தலையிடக் கூடாது. மகனின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்!’ என தீர்மானமாய் முடிவெடுத்து இருந்தார் ராஜா. 

 

ஆனால் திருமண விஷயத்திலும் தந்தையால் அப்படி நடந்து கொள்ள இயலவில்லை. 

 

கேட்கும் பொழுது எல்லாம், “எதுக்குக் கல்யாணம்? அதுவேற தேவை இல்லாத கமிட்மெண்ட். என்னை அப்படியே விட்டுடுங்க!” என்பது தான் அவனின் பதிலாக இருந்தது.

 

‘திருமணம் வேண்டாம் என்றால், அவனின் எதிர்கால வாழ்வு.? பார்வைக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறான். அங்கு யாரிடம் இருந்து எதைக் கற்றானோ? எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களிடம் அவனின் உறவு எப்படியானதாய் இருக்குமோ.? கற்றுத் தந்த ஒழுக்கத்திலும் வாழ்க்கை நெறியில் இருந்தும், தடம் மாறிச் சென்று விடுவானோ? அவனிற்குப் பின்பான தங்களது தலைமுறையின் நிலை?’ என்று மகனைப் பற்றிய கவலையும் அச்சமும் வேர் விடத் தொடங்கியது, ஈன்றவர்களின் மனதில். 

 

அதன்‌ பின்னர் தான்.. பெண் பார்க்கும் படலத்தைத் துவங்கி, புலனத்தின் வாயிலாய் பெண்ணின் புகைப்படம் மற்றும் விபரங்களைப் பகிர்ந்து, அனைத்தையும் பேசி முடித்து, அம்பிகையின் மூலமாய் நவனையும் சம்மதிக்க வைத்தார் தந்தையானவர்.

 

“நிச்சயத்துக்கு நாள் குறிச்சாச்சு. ஊருக்கு வா..” என்று அழைக்க, 

 

“ஆஃபிஸ்ல ஒரு முக்கியமான பிராஜெக்ட் ஒர்க் போயிட்டு இருக்கு. வந்து போறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல. தட்டு தான மாத்துறீங்க? அதுக்கு நான் எதுக்கு? நீங்களே பார்த்துச் செய்யிங்க!” என மறுத்து விட்டான்.

 

மணப் பெண்ணின் கைப்பேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லும் பொழுதும், ஆர்வம் இன்மையின் காரணமாக அப்படியே விட்டு விட்டான்.

 

உண்மையில் நவனிற்குத் திருமண வாழ்வைப் பற்றியோ, வரப் போகும் துணையை எண்ணியோ எவ்விதக் கருத்தும் சிந்தனையும் இல்லை.

 

ஒவ்வொரு விடியலையும் அதன்போக்கில் சென்று, நாளைக் கடத்துபவன்‌. பெரிதாய் திட்டங்களோ எதிர்பார்ப்புகளோ வைத்துக் கொள்ளாதவன்‌. அவனது இயல்பே அதுதான் என்பதால், திருமணம் என்ற நிகழ்வையும் அப்படித்தான் அணுகினான்.

 

‘மேரேஜ் தான? நடக்கட்டும் பார்த்துக்கலாம். வொய்ஃப்.? வரட்டும், அவளைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம்!’ என்பது தான் தற்போது வரை, அவனின் சிந்தனையாக இருந்தது.

 

நம் எண்ணங்களின் படியே அனைத்தும் நிகழ்ந்து விட்டால், வாழ்வின் மீதான பற்று நீர்த்துப் போகக் கூடும் அல்லவா.?அதை அப்படியே உயிர்ப்புடன் வைத்திருக்க, சில வலிகளும் அதைக் கடந்து வரும் பொழுது எதிர்கொள்ளும் மகிழ்ச்சியும் அவசியம் ஆகிறது. 

 

காலம் எத்தருணத்தில் எதை நடத்தி நம்மை வியப்பிற்கு உள்ளாக்கும் என்றே தெரியாது. சில நேரங்களில் தேர்வுகளை நிகழ்த்தி, நம் திறனையும் சோதனைக்கு உள்ளாக்கி, புதிது புதிதாய் பாடம் கற்பிக்கும்.

 

நிகழப் போகும் திருமணத்தின் வழியாய் நவனிற்கும் அதுபோல் தேர்வு வைத்து, அதன் வழியாய் வாழ்க்கைக்கான மதிப்பெண்களை வழங்கிடக் காத்திருந்தது வருங்காலம்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்