Loading

மாயோன் – 3

யாரோ தன்னை இழுத்து வந்து அறையினுள் தள்ளியதை உணரவே கீர்த்திக்கு நேரம் எடுத்துக் கொண்டது.

கீர்த்தியை அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டான் அபிமன்யு.

ஒரு காலை மடக்கி, கதவில் சாய்ந்தபடி நின்றவன்… கைகளைக் கட்டியபடி அவளைப் பார்த்தான்.

கீர்த்தியோ மிரண்டு போய் அவனைப் பார்த்தவள் கதவருகில் சென்று, “தள்ளுங்க நான் போகணும், எதுக்கு என்னை உள்ள தள்ளி கதவை பூட்டினீங்க?” என்று பதட்டத்துடன் கேட்க…

“காலையில் அந்தப் பொண்ணு கூட நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு உனக்கு டவுட் இருக்கு இல்லை? அது தான் அந்த டவுட்ட கிளியர் பண்ணலாம்னு வந்தேன்” என்றவன் அவளைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்ட… விழி விரித்து, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் கீர்த்தி.

“எனக்கு எதுவும் தெரிஞ்சிக்க வேண்டாம். ப்ளீஸ் என்னை விடுங்க நான் போகணும்.”

“நான் ஒன்னும் உன்னைப் புடிச்சி வைக்கலையே தாராளமா போ…” என்றவன் இன்னும் நன்றாகக் கதவில் சாய்ந்து கொண்டான்.

“இப்படிக் கதவை அடைச்சுட்டு நின்னா, நான் எப்படி வெளிய போறது” என்று கேட்டவளின் கண்களில் நீர் திரண்டது.

“ம்ம்ம்… சரி போ” என்றவன் கதவில் இருந்து விலகி நிற்க… தாழ்பாளை திறக்க முயன்றவளுக்கு அது எட்டவே இல்லை…

குதித்து, குதித்துத் தாழ்பாளை திறக்க முயன்றவளை இதழ்க்கடியில் மறைத்த புன்னகையுடன் பார்த்தவன் சாவகாசமாக அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்று கொண்டான்.

குதித்து, குதித்துக் களைத்தவள் கதவை திறக்க முடியாமல் பின்னால் நின்றவனைப் பாவமாகத் திரும்பி பார்த்தாள்.

அவள் பார்வையில் தன்னை மறந்தவன் ஒரு கணம் தயங்கி, பின்… “இப்படி என்னைப் பார்த்தால் என்ன அர்த்தம்? போகணும்ன்னு சொன்ன இல்லை! போ…” என்றவன் அவள் பக்கம் நெருங்கி வர…

அவளோ பயத்தில் உடல் நடுங்க, உதடு துடித்தபடி எப்போது வேண்டுமென்றாலும் அழுது விடுவேன் என்ற நிலையில் அவனைப் பார்த்தபடி நின்றவள், கதவு பக்கம் சாய்ந்து கொண்டாள்.

அவளை நெருங்கி அடி எடுத்து வைத்தவன், அவளுக்கு இரு புறமும் கைகளை ஊன்றி தடுப்பமைக்க… அவளோ அவன் முகம் பார்க்க முடியாமல், கதவை பார்த்து திரும்பி நின்றுகொண்டாள்.

அவனது அருகாமை அவளை மூச்சடைக்கச் செய்தது. திரும்பி நின்றவளின் முதுகு புறம் நன்றாக ஒட்டி நின்றவன்… அவளது முதுகில் கருமேகமாகப் படர்ந்திருந்த கூந்தலை தன் விரல்கள் கொண்டு நீக்கினான். அவனது மென்மையான தொடுகைக்குப் பெண்ணவள் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.

அவளது கூந்தலை முன்புறமாக ஒதுக்கியவுடனே, பெண்ணவளின் வெண்ணிற மேனி அவன் கண்களுக்கு விருந்தானது. அவளது வெண்ணிற முதுகில் சிறு புள்ளியாக ஒரு மச்சம்… அதனைத் தன் கை கொண்டு அவன் வருட, அவனது கரம் தன்னைத் தீண்டுவதை உணர்ந்த பெண்ணவள் மீண்டும் சட்டென்று திரும்பி அவனைத் தள்ளிவிட முயன்றாள்.

ஆனால் அவனை ஒரு இன்ச் கூட அவளால் நகர்த்த முடியவில்லை. அவனது பார்வை உரிமையுடனும், ரசனையுடனும் அவள் அங்கங்களில் படர்வதைக் கண்டவள், ஒரு கட்டத்தில் தன் தளிர் கரம் கொண்டு அவனைத் தாக்க தொடங்கினாள்.

“தள்ளி போ… போ… போ…” என்றவள் சரமாரியாக அடிக்க… அவனோ சிறிதும் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை அடித்து, அடித்துச் சோர்ந்தவள்… இதழ் பிதுக்கி கண்களில் கண்ணீருடன், அவனைப் பார்க்க… அவனோ சத்தமாகச் சிரித்து விட்டான்…

அவனது சிரிப்பு பெண்ணவளுக்குப் புதிதாகக் கோபத்தைக் கொடுக்க… “முதல் முறை பாக்குற பொண்ணு கிட்ட இப்படித் தான் நடந்துப்பீங்களா? கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல்… கதவை திறந்து விடுங்க நான் போகணும்…” என்று அவள் சிணுங்க… அந்த பாவனை அவளது முகத்தின் அழகை இன்னும் அதிகமாகக் காட்டியது.

“உன்னோட இந்தச் சிணுங்கலைப் பார்த்தால்! என் மனசில கண்ட கண்ட ஆசை எல்லாம் வருதுடி…” என்று கிறக்கமாகச் சொன்னவன் அவளது கரம் பற்ற… அவளோ அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

மெல்ல அவள் கரம் உயர்த்தித் தன் கன்னத்தில் பதிக்க வைத்தவன், ஆசையாக அவள் முகம் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் உணர முடியாமல் தவித்த பெண்ணவள்… முகத்தைச் சுளித்துக் கொள்ள…  மெல்ல இதழ் பிரித்துச் சிரித்தவன்,

“சோ ஸாப்ட்” என்றான், அவளது கைகளின் மென்மை உணர்ந்து, அவளது கரத்தை அப்படியே முகத்தில் இருந்து நகர்த்தி, கழுத்து வழி பயணிக்க வைத்தான்… அவன் தாடி அடர்ந்த கன்னத்தை அவளது தளிர் கரம் மெல்ல வருடியபடி கீழிறங்க… அவளோ திகைப்புடன் அவன் முகம் பார்த்தாள்.

அவளது கண்களில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்தபடி… அவளது கரத்தை தனது இடது பக்க நெஞ்சில் வைத்து அழுத்தி கொண்டவன், “காலையில் உள்ளே என்ன நடந்து இருக்கும்னு நீ சொன்ன?” என்றவனின் பார்வையில் இப்போது சிறிய மாற்றம் தெரிந்தது.

“அது… அது வந்து நான் ஏதோ சும்மா” என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது.

“அவள் கூட நான் தப்பா நடந்திருப்பேன்னு நெனச்சியா? ஹான்… சொல்லுடி… அப்புறம் இப்போ என்ன சொன்ன முதல் முறை பாக்குற பொண்ணு கிட்ட இப்படித் தான் நடந்துப்பீங்களான்னு கேட்டல்ல?!” என்றவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ம்ஹும் நாகரிகமில்லாமல் நடந்துப்பீங்களான்னு கேட்டேன்” என்றவளுக்கு இப்போது கோபத்தில் முகம் சிவந்திருந்தது.

“என்னைப் பார்த்தா பொம்பளை பொறுக்கி மாதிரி இருக்கா?” என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்க…

“அப்படி இல்லைன்னா? முதல் தடவை பார்த்த பொண்ணு கிட்ட எப்படி இப்படி நடந்துக்க முடியும்” என்று கீர்த்தி மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினாள்.

“நீ சொல்லுறதும் ஒரு வகையில் சரி தான்… நான் கொஞ்சம் பொறுக்கி தான்… ஆனாலும் இது ஒன்னும் நமக்கு முதல் சந்திப்பு இல்லையே” என்றவனின் இதழோரம் அரும்பிய புன்னகைக்குள் ஆயிரம் அர்த்தம் ஒளிந்திருந்தது.

அவளோ அவனைப் புரியாமல் பார்த்தபடி… “கதவை திறங்க நான் போகணும்” என்றாள் அழும் குரலில்…

“போகலாம் அதுக்கு முன்னாடி…” என்றவன் அவளைத் தன்னை நோக்கி இழுத்தபடி, அப்படியே அருகில் இருந்த மேசையின் மீது சரித்தான்.

அவள் விலகி செல்ல முயலும் முன் அவளை நெருங்கியவன், அவளது முகம் நோக்கி குனிந்தான்.

அவன் தன்னை நெருங்குகிறான் என்பதை உணர்ந்து பயம் கொண்டவள் பதட்டத்துடன் மேசையின் மீது சரிய… அவனும் அவள் மீது பட்டும் படாமல் படர்ந்திருந்தான்.

நெருங்கி இருந்தவனது முகம் அவளுக்குப் பதட்டத்தைக் கொடுக்க இதயம் வேகமாகத் துடித்தது. அமைதியாக இருந்த அந்த அறையில் அவளது இதயத் துடிப்பே, அவனுக்குத் தாலாட்டாகக் கேட்டது.

மெல்ல அவளது செவி பக்கம் நகர்ந்தவன், “பயமா இருக்கா?” என்று கேட்ட மறுநொடி அவளோ கண்ணீருடன், “ம்ம்ம்” என்று சிறுபிள்ளை போலத் தலையாட்ட… உதடு கடித்துத் தன் உள்ள சிரிப்பை அடக்கிக் கொண்டான் அபிமன்யு.

“ம்ம்ம் கொஞ்சம் நேரம் தான், அப்புறம் போயிடலாம்” என்றவனை அதிர்ந்து பார்த்தவள் அவனைத் தன்னில் இருந்து தள்ளி விடப் பார்த்தாள், அது முடியாமல் போக, தனது கால்களைக் கொண்டு அவனைத் தாக்க முயற்சிக்கவும், தனது முழுப் பாரத்தையும் அவள் மீது கொடுத்து அவளது தாக்குதலை தடுத்தான்.

இந்தப் போராட்டத்தில் அவளது நெற்றியில் வடிந்த வியர்வை துளிகள் அவள் இட்டிருந்த குங்குமத்தை கலைக்க… பார்ப்பதற்கே அத்தனை அழகு… அந்த நொடி இருவருக்குமானதாக இருந்தது. ஆனால் அவர்கள் வாழ்க்கையோ வெவ்வேறு வழியில் அல்லவா பயணமாகி கொண்டிருந்தது.

அவளது முகத்தில் இதழ் குவித்து ஊதியவன்… அவளது ஒரு கரத்தை தன் கரம் கொண்டு மேசையில் வைத்து அழுத்தியபடி, “தப்ப சரியா பண்ணா அது தப்பில்லைன்னு சொல்லுவாங்க. சோ… பண்ணலாமா…?” என்று அவன் கேட்க… அவளோ கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்த்தவள் தன் இயலாமையை எண்ணி கதறி அழ தொடங்கினாள்.

அதைக் கண்டதும், உடனே அவள் மீதிருந்து எழுந்தவனது முகம் இறுகி போனது. கதவருகில் சென்று தாழ்பாளை விடுவித்துக் கதவை திறந்தவன், அவளை நோக்கி சொடுக்கிட்டு, “போடி” என்றான்.

அவளோ பயத்துடன் விட்டால் போதும் என்று எண்ணியவள் அடுத்த நொடியே அவனைத் தாண்டி வெளியே செல்ல போக… அவளது முடியை பிடித்து இழுத்தவன், “நில்லுடி” என்றபடி அவளைத் தன்னை நோக்கி திருப்பினான்.

தன்னால் விலகிய அவளது ஆடையைச் சரி செய்து விட்டவன், “வெளியே போகும் போது இதெல்லாம் பார்த்து சரி பண்ணிக்க மாட்டியா? இருபது வயசு பொண்ணு மாதிரியா நடந்துக்கிற, இன்னும் சின்னப் பொண்ணு மாதிரி” என்று உரிமையாகத் திட்டியபடி அவளை முறைத்து பார்க்க… அவனது உரிமை பேச்சில் இவளுக்குத் தான் ஒன்றுமே புரியவில்லை.

திருதிருவென கருவிழி சுழல அவனைப் பார்த்தவளின், இடையில் மெல்ல கரம் கொடுத்து தன் பக்கம் இழுத்த அபிமன்யு, “என்ன?” என்று கேட்க… அவளோ தன் இடையில் பதிந்திருந்த அவன் கரத்தை பார்த்தவள் புதிதாய் பிறந்த பூனை குட்டி போல முழித்தாள். மீண்டும் ஒருமுறை அவள் செயலில் சொக்கி நின்றவன்… அவளது இடையில் அழுத்தம் கொடுத்தபடி மறு கையால் இதமாக அவளது கன்னத்தைத் தாங்கினான்.

தன்னை விழிவிரித்துப் பார்த்தவளின் கன்னத்தில் தன் ஈர இதழ் கொண்டு முதல் முத்தத்தைப் பதித்தவன்… “என்னடி பாக்குற போ” என்றான்.

அவளோ தலைகால் புரியாமல் அவனை அதிர்ந்து பார்த்தவள் இதழ் பிதுக்கி அழ தொடங்கினாள். அவள் செயலை கண்டு அபிமன்யுவிற்கு மீண்டும் சிரிப்பு தான் வந்தது.

“இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே நின்னு பார்த்திட்டு இருந்த, பொது இடம்னு கூடப் பார்க்காமல்…” என்றவன் அவசரமாக அவளை நெருங்கி வரவும், அவளோ குடுகுடுவென அங்கிருந்து ஓடி சென்றாள்.

செல்லும் அவளைப் பார்த்துச் சந்தோசமாகப் புன்னகைத்தவன், நிம்மதியாகச் சுவரின் மீது சாய்ந்து கொண்டான்.

அப்போது அபிமன்யுவிற்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவன்…

“ம்ம்ம் சொல்லு…”

“சார் நாளைக்குச் சென்னையில் ஷூட்டிங் சார் நம்ம உடனே கிளம்பனும்” என்று அவன் மேனேஜர் கூற…

“ஒரு மூணு நாள் எனக்கு இங்க வேலை இருக்குச் சதீஷ், அதுக்கு அப்புறம் நான் சென்னை வரேன்னு சொல்லுங்க”

“அப்படி என்ன வேலை சார்?” என்று அவன் தயங்கியபடி கேட்க..

“அவசியம் தெரிஞ்சுக்கணுமோ? தட்ஸ் மை பெர்சனல் திங்(அது எனது தனிப்பட்ட விஷயம்)” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

அதிர்ந்தபடியே அங்கிருந்து வந்த கீர்த்தி, தங்கள் வகுப்பறைக்குள் நுழைந்து கதறி அழ தொடங்கி இருந்தாள். அழுதவள் அப்படியே அங்கேயே கண்மூடி தூங்கியும் இருந்தாள்.

அனைவரும் ஷூட்டிங் பார்த்து கொண்டிருந்ததால் யாருமே அந்த வகுப்பறைக்குள் இல்லாமல் இருந்தனர்.
*******
இங்குக் கண்களை மூடி அமர்ந்திருந்த நந்தினிக்கு கடந்த கால நினைவுகள் அலையாக ஓடிக் கொண்டிருந்தது.

நந்தினிக்கு அப்போது 22 வயது, மகிழனுக்கு 29 வயது.

ஒரு நாள் மகிழனின் முதலாளி, அவனது வீட்டிற்கு வந்து அம்பிகாவிடம், “என் பொண்ணுக்கு மகிழனை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் ஆசைப்படுறேன். என் பொண்ணுக்கும் இதுல முழுச் சம்மதம். ஆனால்… மகிழன் கிட்ட கேட்க கொஞ்சம் தயக்கமா இருந்தது. அது தான் உங்க முன்னாடியே அவன் கிட்ட கேட்கலாம்னு இன்னிக்கு வீட்டுக்கு வந்தேன்” என்று அவர் கூற… மகிழனின் முகம் நொடியில் மாறியது.

“சார் தப்பா எடுத்துக்காதீங்க? எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. நீங்க என்னைப் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்…” என்று அவன் பொறுமையாகத் தன் நிலைமையை அவருக்குப் புரிய வைக்க, “சரி மகி” என்ற அவரும் பெருந்தன்மையுடன் அங்கிருந்து சென்றார்.

அவர் சென்ற பிறகு அம்பிகாவோ மகிழனிடம், “ஏன்டா உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலயா?” என்று கேட்க…

“எனக்கு நந்தினியை பிடிச்சி இருக்கு அத்தை. உங்களுக்கும், அவளுக்கும் இதில சம்மதம் அப்படின்னா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கேட்க… அம்பிகாவிற்கு அவ்வளவு சந்தோசம்.

“இதை எதுக்கு அவள் கிட்ட கேட்கணும்? நாளைக்கே நல்ல நாள் பாத்திடுவோம்”

“இல்லை அத்தை அவள் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குவோம்… படிச்ச பொண்ணு அவள் மனசுல ஏதாவது ஆசை இருக்கும் இல்லை… நானோ ஒரு டிகிரி கூட முடிக்கல” என்று கூறும் போதே அவன் மனம் வலித்தது.

“அவளைப் படிக்க வச்சதே நீ தானேடா… உன்னை எப்படி அவள் வேணாம்னு சொல்லுவா?”

“இல்லை அத்தை எதுக்கும் அவள் கிட்ட கேட்டுக்கலாம்”

“சரி மகி” என்றவரும் நந்தினியின் வருகைக்குக் காத்திருந்தார்.

அப்போது கீர்த்திக்கு பதிமூன்று வயது, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும். நேராகச் சென்று மகிழனின் மடியில் அமர்ந்து கொள்வாள். அவளுக்கு அவனே தந்தை… அது போல மகிழனுக்கு அவள் முதல் குழந்தை.

“பாப்பா வந்துட்டீங்களா?”

“மாமா எனக்கு நாளைக்கு வரும் போது முட்டை பப்ஸ் வாங்கிட்டு வரியா?”

“கண்டிப்பா வாங்கிட்டு வரேன்டா செல்லம்” என்று அவன் கூறிக் கொண்டிருக்க… அப்போது நந்தினி உள்ளே வந்தாள்…

அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு நந்தினியை தனியே அழைத்த அம்பிகா மகிழனை திருமணம் செய்து கொள்ளும் படி கூற… அவளோ கோபத்தில் வானுக்கும், பூமிக்கும் குதித்தாள்.

அந்தச் சத்தம் கேட்டு மகிழனும், கீர்த்தியும் அங்கு வர…

“வாங்க… வாங்க… அப்போ என் மேல இருந்த ஆசைக்காகத் தான் என்னைப் படிக்க வச்சியிருக்கீங்க, என்னை அடையலாம்னு இருந்திருக்கீங்க… உங்களை மாதிரி ஒரு சுயநலவாதியை நான் பார்த்ததே இல்லை” என்று அவள் கோபத்தில் எல்லை மீறி பேச… அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அம்பிகா…

“யாரை பார்த்துடி சுயநலவாதின்னு சொல்லுற… நீ படிக்கணும்னு, நம்ம சந்தோஷமா இருக்கணும்னு சொல்லி அவன் சந்தோஷத்தை அழிச்சிக்கிட்டவன்டி அவன்… நம்மளை பார்த்துக்கணும்னு அவனுக்கு என்ன தலை எழுத்தா சொல்லு… கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாமல் பேசுற…” என்று அவர் பொரிந்து தள்ளினார்.

“அத்தை வேண்டாம்… அவளை அவள் விருப்பத்துக்கு விட்டுடுங்க.” என்று கூறிய மகிழனால் அவள் கூறிய ‘சுயநலமானவன்’ என்ற வார்த்தையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்போதிலிருந்து இப்போது வரை நந்தினியும் அவனிடம் அதிகம் பேசுவது இல்லை. அவனும் அவளிடம் அதிகம் பேசுவது இல்லை.

ஏதோ உடல் தேவைக்காகத் தான் தன்னை மணக்க நினைக்கிறான் என்று எண்ணி அவள் பேசிய வார்த்தைகளை இன்னும் மகிழனால் மறக்க முடியவில்லை.

அதன் பிறகு அம்பிகா மகிழனுக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்க எவ்வளவு முயன்றும் அவன், ‘முடியாது எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மறுத்து விட்டான்.

இதனை எண்ணி பார்த்தவளின் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

அப்போது மதிய உணவை சமைத்து முடித்த மகிழன் அதனை அம்பிகாவிற்குக் கொடுத்து உண்ண வைத்து விட்டு, நந்தினியின் அறைக்கதவை தட்டினான்.

அவள் அறைக்கதவோ திறந்திருக்க… இவன் கரம் பட்டு அறை கதவு தானாகத் திறந்து கொண்டது.

மெத்தையில் கண்ணீருடன் அமர்ந்திருந்த நந்தினி மகிழனது வருகையை உணர்ந்து எழுந்துக் கொண்டாள்.

மகிழனோ உணவை அவளது மேசையின் மீது வைத்து விட்டு செல்ல பார்க்க…

“மாமா கொஞ்சம் நில்லு உன்கிட்ட பேசணும்” என்றவளின் குரல் தடுக்க… அவனோ அமைதியாக அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன், ‘என்ன பேசனுமோ பேசு’ என்பது போல அவளைப் பார்த்தான்.

“அது மாமா அவன்….” என்று அவள் மீண்டும் தடுமாற… அவள் அறையில் இருந்து வெளியே வந்தவன்… தன் அறைக்குள் சென்று கோப்புகள் அடங்கிய ஒரு பையை எடுத்து வந்து அவள் முன் வைத்தான்.

அதனை அவள் புரியாமல் பார்க்க… “உனக்கு ஏதோ பிரச்சனைன்னு எனக்குப் புரியுது, ஆனால் அது என்னன்னு தான் தெரியல… ஒரு முறை இந்த பைலை விளையாட்டா கீர்த்தி எடுத்ததுக்கே நீ அவளை அப்படித் திட்டின… அப்படி இருக்கும் போது யாரோ உன்கிட்ட இந்த பைல் பத்தி பேசவும்… நீ அதுக்குப் பதட்டமாகி மாடியில் இருந்து பேசிட்டு இருந்ததையும் நான் அன்னைக்குக் கேட்டுட்டேன்… அப்புறம் கூட நீ ஏதோ கல்யாணம்” என்றவன் நொடியில் நிறுத்தி குரலை செருமியபடி அவளைப் பார்க்க… அவளோ தலை குனிந்து கொண்டாள்.

“ம்ம்ம் இப்போ சொல்லு யாரு அவன்?” என்று மகிழன் கேட்க…

நந்தினியோ, சத்யனை பற்றியும், அவன் மூலம் தான் கர்ப்பமானதை பற்றியும் என அனைத்தையும் கூறினாள். ஆனால் அந்தக் கோப்புகளைப் பற்றி மட்டும் கூறாமல் மறைத்தாள்.

“அந்தச் சூழ்நிலையில் எனக்காக என்கூட நின்னவன் அவன் தான்… நான் அவனை அவ்ளோ நம்பினேன் மாமா… ஆனால் அவன்??? எல்லாம் முடிஞ்சது மாமா” என்று அவள் வலியுடன் பேச, குரலை செருமிய மகிழன் எதுவும் பேசாமல் வெளியே செல்ல முற்பட்டவனின் முதுகை ஏமாற்றத்துடன் பார்த்தவள்…

“என்கிட்ட சொல்லுறதுக்கு உனக்கு எதுவும் இல்லையா மாமா” என்று கேட்டவளின் கண்களில் ஒரு துளி கண்ணீர் வழிய… அவளைத் திரும்பி பார்த்தவன் உதடுகள் அழுத்த பெற, அடுத்த நொடி மௌனம் கலைத்தவன்…

“இனி இதுல சொல்லுறது என்ன இருக்கு… ஆனால் உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கணும்” என்றவனை அவள் அதிர்ந்து பார்க்க… வலியுடன் புன்னகைத்தவன், “பயப்படாத தப்பா எதுவும் கேட்க மாட்டேன்” என்றவனைப் பார்த்து வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தாள் நந்தினி.

“நீ என்ன கேட்டாலும்… உனக்குன்னு கொடுக்க என்கிட்ட புதுசா எதுவும் இல்லையே மாமா… எல்லாமே தான்…” என்றவளுக்கு அதற்கு மேலும் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

ஆழ்ந்த மூச்செடுத்தவன், “அவன் மேல உனக்கு வந்த அந்த நம்பிக்கை! ஏன்? என்மேல உனக்கு வரமால் போச்சு…” என்று கேட்டவனின் மன ரணத்தை அவன் மட்டுமே அறிவான்… இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நந்தினியின் காதல் மகிழனுக்கு ஏமாற்றம் தான், வலி தான்… ஆனாலும் அதற்காக அவன் அவளை ஒரு வார்த்தை கூடக் குத்தி காட்டவோ, பழி சொல்லவோ இல்லை… மாறாக என் நந்தினி ஏன் என்னை நம்பவில்லை என்ற ஆதங்கமும், தவிப்பும் மட்டுமே அவனுக்கு இருந்தது.

“எனக்குத் தெரியும் இதுக்கு உன்கிட்ட பதில் இருக்காது” என்று கூறி வலியுடன் புன்னகைத்தான் மகிழன்.

அடுத்தக் கணமே “மாமா” என்று கண்ணீருடன் அவனை அழைத்தவள் அவனது கரம் பற்றியிருந்தாள். முதல் தொடுகை… அவளது கரம் அன்புடன் முதல் முறையாக அவனைத் தீண்டியது… எத்தனையோ நாள் இந்தக் கரம் பற்றுதலுக்காக ஏங்கியவனால் இன்று அதனை அனுபவிக்க முடியாமல் போனது…

அவள் பிடியில் இருந்து தனது கரத்தை அவன் விடுவிக்கப் பார்க்க… “மாமா ப்ளீஸ்…” என்றவள் அடுத்த நொடியே அவனை அணைத்திருந்தாள்.

அந்த அணைப்பை சிறிதும் எதிர்பாராமல் அவனது இதயம் வேகமாகத் துடிக்க… கண்களை மூடி திறந்தவன் அவளைத் தன்னில் இருந்து பிரிக்கப் பார்க்க…

“தப்பா நெனைக்காத மாமா… நான் உன்கிட்ட தப்பா எந்த ஆறுதலும் கேக்கல… எனக்கு நீ இன்னொரு அம்மா, மாமா உன்னைப் போய் என்னால அப்படி எல்லாம் நினைக்க முடியலை மாமா… அதான் அம்மா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் போது கூட எனக்குக் கோபம் வந்திடுச்சு… நீ கண்ணம்மா, கண்ணம்மான்னு காதலோடு சொன்னது எல்லாம் எனக்குப் பாசமா தெரிஞ்சது மாமா… காதலா தெரியல… அதனால தான் உன்னை என்னால அப்படி யோசிக்கக் கூட முடியாமல் போயிடுச்சு… என் வயசுக்கு உண்டான பக்குவம் கூட எனக்கு வரமால் போனது தான் மாமா இந்தத் தப்புக்கு எல்லாம் காரணம் என்னை மன்னிச்சிடு மாமா…” என்று அவள் கதறி அழ சிலையாக நின்றான் மகிழன்.

தன்னையே அவளுக்குக் கொடுக்க நினைத்த போது விலகி நின்றவள்…

இன்று தன்னிடமே ஒரு அணைப்புக்காக அனுமதி கேட்டு நிற்கும் விதியை எண்ணி…

அவளை விலகவும் முடியாமல்… விரும்பி ஏற்கவும் முடியாமல்… இதயத்தில் ஒரு உறுத்தல்… ரணமாய் வலிக்கச் செய்தது…

அவளது எண்ணத்தை மாற்றும் பொருட்டு அவளைத் தன்னில் இருந்து விலக்கி நிறுத்தியவன்.

“தேவன் சக்ரவர்த்தி யாரு? அவருக்கும், உன் பிரச்சனைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” என்று மகிழன் கேட்க… நந்தினியின் முகம் வியர்த்து வடிய தொடங்கியது.

‘தேவன் சக்ரவர்த்தி’ என்ற பெயரை கேட்டவுடனே நந்தினியின் முகத்தில்  ஏற்பட்ட மாற்றத்தை கவனித்தவன்… ஒரு நொடி அமைதியாக அவளை ஆழ்ந்து பார்த்தான்..

  ” அது யாரு ? ”  என்று எதுவும் அறியாதவள் போல  கேட்ட நந்தினி… தன் பதட்டத்தை மறைக்க பாடாது பாடுபட்டாள்…

“ஒஹ் உனக்கு தெரியாமல் தான் இந்த பைலில் அவர் பேரு வந்துதா? ஹான் ” என்ற மகிழன்  அதனை எடுத்து காட்ட… பதில் பேச முடியாமல் பதட்டமாக நின்றாள் நந்தினி…

” நந்தினி உண்மையை சொல்லு, இது அந்த மல்டி மில்லியனர் தானே, மூணு வருசத்துக்கு முன்னாடி கூட உங்க மருத்துவமனையில் நடந்த விபத்தில் இறந்து போனாரே அவரு தான? ” என்று அவன் தனக்கு தெரிந்தவரை சொல்லி விவரம் கேட்க…

” அது விபத்தில்லை மாமா… நூறு பேரோட உயிரை காவு வாங்கினா அந்த விக்ரமனோட ரத்த வெறி ” என்றவளது கண்கள் நொடியில் அக்னிக்கு ஒப்பாக சிவந்து போனது…

அவளது பார்வை மாற்றத்தை கவனித்த படியே அவள் அருகில்  வந்த மகிழன் “யார் அந்த விக்ரமன்?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்…

“டாக்டர் விக்ரமன்… அவன் ஒரு டாக்டர் அப்படிங்குறது இந்த மருத்துவ தொழிலுக்கே அவமானம்… தன் தேவைக்காக எத்தனை உயிரை வேணும்னாலும் அவன் எடுப்பான்… அந்த அளவுக்கு அவன் உடம்புல ரத்த வெறி நிரம்பி இருக்கு… கண்ணு முன்னாடி ஒரு உயிர் துடிக்கிறதை கொஞ்சம் கூட கலக்கம் இல்லாமல் கையை கட்டி வேடிக்கை பார்த்த கொடூரன்… அவன்…” என்று பேசியவளின் கண்களில் தான் எத்தனை ரௌத்திரம்…

“இதுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? இந்த பைல் எப்படி உன்கிட்ட வந்தது “

“இந்த பைலில் இருக்க ஆதாரம் எல்லாம் விக்ரமனுக்கு எதிரானது மாமா… இதை நான் தான் கலெக்ட் பண்ணி வச்சேன், ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு எதிரான இந்த ஆதாரம் என்னை காப்பாத்தும் அப்படின்னு தான் இதையெல்லாம் நான் சேகரித்து வைத்தேன்…”

“ம்ம்ம் இப்போ அவனுக்கு என்ன வேணுமாம்? எதுக்காக உன்னை டார்கெட் பண்ணி இதெல்லாம் பண்ணனும்… இந்த பைலை அவன் கிட்ட கொடுத்திட்டா எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிடும் இல்லை “

” எதுவும் முடியாது மாமா, என்னோட பாதுகாப்புக்கு தான் இந்த ஆதாரமே தவிர… பிரச்சனையே வேற…  அதெல்லாம் சொன்னால் புரியாது மாமா,  எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… நீ எதுவும் யோசிச்சி கவலைப்படாத…. ஏன் சொல்லுறேன்னா இந்த பிரச்சனை எல்லாம் உனக்கு  வேண்டாம் மாமா, நானே சமாளிச்சிக்கிறேன்” என்றவள் அவனிடம் இருந்த பைலை வாங்கிகொண்டு உள்ளே செல்ல பார்க்க… அவளது கையை பிடித்து நொடியில் தடுத்து நிறுத்தினான் மகிழன்.

“நீ பார்த்துக்கிட்ட வரை போதும் உண்மையை சொல்லு… இங்க நீ அப்படிங்குறது நீ மட்டும் இல்லை… நம்ம குடும்பம் முழுவதும் சேர்ந்தது தான் நீ… அதனால் நீ எடுக்கிற ஒவ்வொரு முடிவும் இந்த குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கணும்… புரியுதா ? என்ன பிரச்சனைன்னு சொல்லு, அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசிக்கலாம்… “

ஆழ்ந்த மூச்செடுத்த நந்தினி நடந்த அனைத்தையும் பட்டும் படாமல்  மகிழனிடம் கூறி முடித்தவள் ” மூணு வருசத்துக்கு முன்னாடி  நடந்தது மாமா இது… நடந்த அந்த ஒரு மெடிக்கல் எரரை மறைக்க… அந்த இடத்தில் நூறு பேரோட உயிர் காவு வாங்கபட்டது…  ஆனால் இதுக்கு எல்லாம் பின்னாடி அந்த விக்ரமன் தான் இருக்கான்னு எங்களுக்கு அப்போ தெரியாது… எதுக்கு எடுத்தாலும் விக்ரமன்… விக்ரமன்… விக்ரமன்….  அந்த பேரு தான் அவனுக்கான அடையாளமா  இருந்தது… அவன் முகத்தை கூட நாங்க யாரும் இதுவரை பார்த்தது இல்லை… அவன் யாருன்னு எங்க யாருக்குமே தெரியாது,  ஆனால் எங்க எல்லாரை பத்தியும் அவனுக்கு சின்ன சின்ன விஷயம் கூட நல்லாவே தெரியும்… அவன் எங்க இருந்து நம்மல வாட்ச் பண்ணுறான்?  நம்ம செய்யுற ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு எப்படி தெரியுதுன்னு,  எங்களுக்கு இப்போ வரை ஒண்ணுமே புரியல…”

“முகம் தெரியாத ஒருத்தன் இத்தனை டாக்டரை தன் கட்டுப்பாட்டில் வச்சி இருக்கான்னா ஆச்சர்யமா இருக்கு…”

“ம்ம்ம் ஆமா மாமா… ஏன்னா அவன் நடவடிக்கை அந்த மாதிரி இருக்கும்… இப்போ வரை நாங்க அவன் ஹாஸ்பிட்டல ஒர்க் பண்ண காரணம்… எங்களால வேற எங்கேயும் ஒர்க் பண்ண முடியாத அளவுக்கு அவன் லாக் பண்ணி வச்சி இருக்கான்… உண்மையை சொல்லணும்னா என்னால இந்த இடத்தில் இருந்து கூட எங்கயும் போக முடியாது… இல்லைனா இருக்குற பிரச்சனைக்கு எப்போவோ உங்க எல்லாரையும் அழைச்சிட்டு இங்க இருந்து போயிருப்பேன்…”

“இதெல்லாம் அவன் ஏன் பண்ணனும்? அந்த ஹாஸ்பிட்டல்  ராஜேந்திரனோடது தானே… அவரு கூட ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தானே இறந்தாரு” என்று மகிழன்  கேட்க…

“இல்லை மாமா… அது அவரோடது இல்லை, வெளி உலகத்துக்கு தான் ராஜேந்திரன் அந்த மருத்துவமனை உரிமையாளரா இருந்திருக்காரு… ஆனால் உண்மையா அந்த ஹாஸ்பிட்டல் விக்ரமனுக்கு சொந்தமானது… ராஜேந்திரன் சார் பேருக்கு மட்டும் தான் அந்த மருத்துவமனையோட உரிமையாளர்.. ஆனால் அந்த மருத்துவமனையோட முதுகெலும்பு விக்ரமன் தான்…   அது மட்டும் இல்லை விக்ரமன் அவன் ஹாஸ்பிட்டலில் நடந்த அந்த தப்பை மறைக்க… நூறு பேரை தீ வச்சி கொழுத்தின சிசிடிவி ஆதாரம் கூட என்கிட்ட இருக்கு… ஆனால் அதுல அவன் முகம் சரியா தெரியல… தீயில் அவங்க உயிருக்கு போராடிட்டு இருக்க… கண்ணாடி கதவு வழியே அதை கையை கட்டி அவன் ரசிச்சி பார்த்திட்டு இருந்தான்… சாடிஸ்ட்..” அவனை நம்பவைக்க என்ன எல்லாம் சொல்ல முடியுமோ அதை எல்லாம் சொன்னாள்.

“நீ தான் அவன் முகத்தையே பார்த்தது இல்லையே அப்புறம் எப்படி அது அவன் தான்னு உறுதியா சொல்லுற, அவன் இடத்தில் எடுத்த சிசிடீவி உன்கிட்ட எப்படி”

” நடந்த இந்த விஷயத்தை விபத்தாக காட்ட… சிசிடிவி புட்டேஜ் எல்லாம் அழிக்க சொல்லும் போது அதை அவங்களுக்கு தெரியாமலே நான் ஒரு காப்பி எடுத்து வச்சிட்டேன்… ஆனால் அதுலயும் அவன் முகம்  தெரியல… மாஸ்க் போட்டு இருந்தான்…  என்ன தான்  இருந்தாலும் அது அவன் தான்னு நிரூபிக்க என்கிட்ட இருக்க ஒரே உறுதியான ஆதாரம் அது தான், ராஜேந்திரன் சார் கூட அவன் இருக்க மாதிரி ஒரு போட்டோ என்கிட்ட இருக்கு… இந்த போட்டோவை ராஜேந்திரன் சாரோட பேர்சொனால் பைல்களில் இருந்து எடுத்தேன் ” என்றவள் அந்த போட்டோவை எடுத்து அவனிடம் காட்டினாள்…

அதில் விக்ரமன் முகத்தை மாஸ்க் போட்டு மூடி, தலையில் தொப்பியும் அணிந்திருக்க… அவன் முகம் ஒரு துளி கூட வெளியே தெரியவில்லை.

“இதுல என்ன ஆதாரம் இருக்கு?”

“முகம் இல்லை மாமா… அவன் நெஞ்சில் பாருங்க… அதுல ‘s’ அப்படிங்குற லெட்டர் இருக்கும் அது மாதிரியே.. இந்த சிசிடிவி ல நான் எஸ்ட்டேன்ட் பண்ணி எடுத்த போட்டோ பாருங்க..  அதே ‘ s ‘ லெட்டர் இருக்கும் பாருங்க… இது ஒன்னு தான் அதை பண்ணினது விக்ரமன் அப்படிங்குறதுக்கு ஆதாரம்… சிசிடீவி ஆதாரத்தில் அந்த டேட்டோ கிளியரா இல்லை பட் கண்டிப்பா இது ரெண்டும் ஒருத்தர் தான்… அது அந்த விக்ரமன் தான்…”

” அப்போ ராஜேந்திரன் எப்படி இறந்தாரு… “

“இந்த உண்மை எல்லாம் அவருக்கும் தெரியும்… அதனால அவரையும் கொன்னுட்டான்…  அதை கூட ஹார்ட் அட்டாக் அப்டின்னு  பொய் சொல்லி மாத்திட்டாங்க.. இது எல்லாத்துக்குமான ஆதாரம் என்கிட்ட இருக்கு… அதை வாங்க தான் அவன் இப்படி எல்லாம் பிளான் பண்ணி பண்ணுறான்…   ” என்றவளை ஆழமாக பார்த்தவன்..

“ம்ம்ம் இதெல்லாம் உண்மையா இருக்கலாம். ஆனால் அவன் உன்னை துரத்தினத்துக்கு  இது மட்டுமே காரணமா எனக்கு தோணால நந்தினி… ஒரு தப்பை மறைக்க நூறு உயிரை எடுத்தவனால உன்னை கொன்னு இந்த ஆதாரத்தை எடுக்குறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை… ஆனால் அவன் அதை பண்ணாமல்… இந்த மூணு வருஷம் அமைதியா இருந்து, இப்போ உன்னை கொல்லனும் நினைக்கிறத்தை பார்த்தால்… இடையில ஏதோ மறைக்கபடுற மாதிரி எனக்கு தோணுது… உண்மையை சொல்லு இதுல எதுவும் எனக்கு தெறிய கூடாதுன்னு மறைக்கிறியா? இல்லை நம்ம என்ன சொன்னாலும் இந்த முட்டாள் மாமன் நம்புவான்னு இப்படி உண்மையை மறைச்சி  சொல்லுறியா?” என்று கேட்க…

நந்தினிக்கு வார்த்தை வரவில்லை… இந்த மூன்று வருட இடைவேளையில் நடந்ததே வேறு , இவளிடம் அவன் தேவையே வேறாக அல்லவா இருந்தது… ஆனாலும் அதனை நந்தினியால் மகிழனிடம் கூற முடியவில்லை… காரணம் இந்த உண்மை தன்னோடு மறைய வேண்டும் என்று அல்லவா அவள் நினைத்து கொண்டிருக்கிறாள். இந்த உண்மையை வைத்து விக்ரமன் தன்னையும் தன் குடும்பத்தை எதுவும் செய்துவிட கூடாது என்று எண்ணியவள் அவனிடம் இருந்து தன்னை காக்கவே தேவன் சக்கரவர்த்தியை பற்றிய உண்மையை அவனுக்கு எதிராக திரட்டி தனக்கு பாதுகாப்பாக வைத்து கொண்டாள்…

“அப்படி எல்லாம் இல்லை மாமா… நான் பாத்துகிறேன் ப்ளீஸ் இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத…”

“ம்ம்ம் அடுத்து என்ன தான் பண்ண போற?”

“நீங்க அம்மா, கீர்த்தி எல்லாரும் இனி இங்க இருக்க வேண்டாம்… கோயம்புத்தூரில் இருக்க அப்பாவோட பழைய வீட்டுக்கு போயிடுங்க… ” என்று அவள் வருத்ததுடன் கூற…

“அப்போ நீ…” என்று மகிழன் புருவம் உயர்த்த…

“என்னால இங்க இருந்து வர முடியாது மாமா… இந்த பிரச்சனை என்னோட முடிஞ்சி போகட்டும்…”

“அப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு போக முடியாது… நீயும் எங்க கூட வர மாதிரி இருந்தால் நம்ம இங்கேயிருந்து போவோம்… இல்லை வாழ்வோ? சாவோ?  சேர்ந்தே பார்த்துக்கலாம்”

” அய்யோ மாமா உன்கிட்ட எப்படி சொல்லி புரிய வைப்பேன் “

“உங்கூட வாழ தான் எனக்கு தகுதி இல்லை… சாகுறதுக்கு கூடவா ?” என்று அவன் பேசி முடிக்கும் முன் அவனது வாயை மூடியவள் ” வேண்டாம் மாமா… நீங்க எல்லாம் நல்லா வாழனும்னு தான் நான் சாகுற அளவுக்கு ரிஸ்க் எடுத்திட்டு இருக்கேன்… என்னை மேலும் வார்த்தையால ரண படுத்தாத மாமா… நான் இழந்ததுக்கு எல்லாம் சேர்த்து, நின்னு அழ கூட எனக்கு நேரமில்லை மாமா… புரிஞ்சிக்க”

“அப்ரோம் இங்க இருந்து என்ன பண்ண போற? அந்த குழந்தை…” என்று அவன் கூறும் போது அவனது வலி, விழி வழியே வெளிப்பட்டது…

அதை உணர்ந்தவள்.. ஒரு சிறு புன்னகையை மட்டும் அவனுக்கு பதிலாக கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

********

ஷூட்டிங் முடிந்து ‘பேக்கப்’ என்று கூறிய அடுத்த நொடியே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்…

அப்போது தான் வினோதினி அருகில் இருந்த தன் தோழி கீர்த்தியை தேடினாள்…

” எங்க போனாள் இவ ? ” என்றவள் ஒரு பக்கம் அவளுடைய புத்தகபையையும், மறுபக்கம் தன்னுடைய புத்தகபையையும் சுமந்த படி அவளை தேடி ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள்… அங்கும் அவள் இல்லாமல் இருக்கவே… ” ஒரு வேளை நம்ம கிளாஸ்ல இருப்பாளோ ? ” என்ற யோசனையுடன் அவளை தேடி வந்தவள் ” கீர்த்தி…கீர்த்தி ” என்று அழைக்க…

அவள் போட்ட சத்ததில் கண் விழித்த கீர்த்தி எழுந்து வெளியே வரவும் அங்கு நின்றுகொண்டிருந்த வினோ ” பைத்தியமே இங்க என்ன பண்ணுற… ” என்று கேட்டாள்..

” தூக்கம் வந்துச்சா அப்படியே தூங்கிட்டேன் ” என்ற கீர்த்தி நடந்த விஷயத்தை பற்றி எதுவும் அவளிடம் கூறவில்லை…

” பாரு இருட்டிடுச்சு?  சீக்கிரம் வா ” என்று வினோ சலித்து கொள்ள…

” ஷீட்டிங் முடிஞ்சு எல்லாரும் போயிடாங்களா? ” என்று கீர்த்தி கேட்க…

” ம்ம்ம் அதெல்லாம் எல்லாரும் போய்ட்டாங்க… நேரம் ஆச்சு வா வீட்டுக்கு போவோம் ” என்றவள் கீர்த்தியின் பையையும் தானே சுமந்த படியே தான் அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்…

கீர்த்திக்கு அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருக்க… அதனை பார்த்த வினோ ” என்னடி முகம் எல்லாம் வாடி இருக்கு ” என்று பேசியபடியே சாலையில் நடந்து வர…

” ஒன்னும் இல்லடி விடு ” என்று அவளை சமாளித்த கீர்த்தி… வினோவிடமிருந்து தன் பேகை வாங்கிக்கொண்டு முன்னே சென்றாள்….

சாலையை கவனிக்காமல் சென்றவள், கல் தடுக்கி தடுமாற… அப்போது வளைவில் திரும்பிய கார் ஒன்று அவள் மீது மோதியபடி நிற்காமல் சென்றது…

அதனை பார்த்து பதறிய வினோ, அவளருகில் ஓடு வருவதற்குள்… அவளுக்காக துடித்து கொண்டிருக்கும் இன்னொரு இதயம் அவளை மடி தாங்கியிருந்தது… அவனே விக்ரமன்…

விழுந்த வேகத்தில் கீர்த்தி அப்படியே  மயங்கி கீழே சரிய, அவளை தன் மடி தாங்கியிருந்தவன் ஒரு கணம் சுற்றும் மறந்து… ” ஸ்ரூதி… ஸ்ரூதி ” என்று அவள் கன்னம் தட்டி எழுப்ப முற்படவும்… அவன் தோளில் கைவைத்த சத்யன் ” சார்… என்ன பண்ணுறீங்க ” என்று மெதுவாக கேட்க… உடனே தன்னிலை அடைந்தவன்… அப்படியே அவளை கீழே படுக்க வைத்தபடி எழுந்து நின்று கொண்டான். அங்கே மக்கள் கூட்டம் கூடி இருந்தது…

உடனே அங்கு வந்த வினோதினி ” கீர்த்தி ” என்று பதறி அழைக்க… அனைவரும் சுத்தி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை…

” ப்ளீஸ் யாராவது தண்ணீர் இருந்தால் கொடுங்க ” என்று வினோ கேட்க… சுற்றி நின்றவர்கள் அனைவரும் அவர்களுக்குள்ளேயே பேசி கொண்டருந்தனரே தவிர யாரும் தண்ணீர் கூட கொடுக்க வில்லை… அதில் ஒருவர்  தன் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மறைத்து வைத்து  கொண்டார்.   மனிதம் அழிந்ததற்கு இன்னுமொரு சான்று…

விக்ரமனும் கூட அதனை கல்லாக நின்று பார்த்துக்கொண்டிருந்தானே தவிர… எந்த எதிர்வினையும் புரியவில்லை…

சிறிது நேரத்தில் கீர்த்திக்கு பிக்ஸ் வர தொடங்கியதும், வினோதினி பதறி அழுது விட்டாள் ” ப்ளீஸ் யாராவது உதவி பண்ணுங்க”  என்றவள் சுற்றி இருந்தவரை கையெடுத்து வணங்க… கண்களை மூடி திறந்த விக்ரமன்… நொடியில் கீர்த்தியை கையில் ஏந்திக்கொண்டான்…

அவனது செயலை அங்கிருந்தவர்கள் மட்டும் அல்ல… சத்யன் கூட ஆச்சர்யமாக தான் பார்த்தான்…

தன் கைகளில் சுருண்டு கிடக்கும் அவளது முகத்தை பார்த்தவனுக்கு, அவளை அப்படியே தன் நெஞ்சோடு பொத்தி வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது… பேராசை தான்…

கீர்த்தியை தன் கைகளில் ஏந்தியபடியே தனது காரினை நோக்கி வந்தான் விக்ரமன்..

வினோவும், சத்தியனும் கூட அவனை பின் தொடந்து வந்தனர்…

விக்ரமன் எப்போதும் போல தொப்பியும், மாஸ்க்கும் அணிந்திருக்க… வினோவிற்க்கோ கொஞ்சம் பதட்டமாக இருந்தது… ” ஹெலோ அவளை எங்க தூக்கிட்டு போறீங்க ? ” என்று அவள் கேட்க…

விக்ரமனோ எதுவும் பேசாமல் கீர்த்தியை காரில் அமர வைத்தவன் ” சத்யன் ஹாஸ்பிட்டலுக்கு போ ” என்று கூறிய படி… விக்ரமன் கீர்த்தியின் அருகில் அமர்ந்து கொண்டான்…

வினோ அப்பாவியாக வெளியே நிற்க… அவளை நோக்கி சொடுகிட்ட விக்ரமன் “முன்னால ஏறு  என்று கூற…

அவளுக்கோ இப்போது கீர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது முக்கியம் என்று தோணவே, யாரும் உதவிக்கு முன் வராத நிலையில் இவர்களாவது முன் வந்தனரே என்று எண்ணியபடியே தானும் அவர்களது வண்டியில் ஏறி கொண்டவள்..  அடுத்த நொடியே மகிழனுக்கு போன் பண்ண அலைபேசியை எடுத்தாள்…

‘ இவனுங்க மூஞ்சியை எல்லாம் பார்த்தால், கொள்ளை காரனுங்க போல இருக்கு , ஒருத்தன் என்னனா முகம் முழுதும் மாஸ்க் போட்டு இருக்கான்…  இன்னொருத்தன் பார்க்க கிட்னி திருடுறவன் போலவே இருக்கான்… பேசாமல் பாதுகாப்புக்கு ஒரு போட்டோ எடுத்து வச்சிப்போம் ‘என்று எண்ணிய வினோ சத்யனை தன் அலைபேசியில் அவனுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்தாள்… அதே போல பின்னால் திரும்பி விக்ரமனையும் புகைப்படம் எடுக்க பார்க்க… அதனை கண்டு கொண்ட விக்ரமன்..  நொடியில் அவளது கையில் இருந்த அலைபேசியை பிடிங்கி கார் சன்னல் வழியே வெளியே தூக்கி போட்டவன்… “கொன்னுடுவேன்” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான்…

அவளோ போன் விழுந்த ஜன்னலை  ஏக்கமாக பார்த்தபடி அமர்ந்திருக்க… இங்கு கீர்த்தியின் உடல் தூக்கி போட துவங்கியது…

அதனை கண்ட விக்ரமன் சத்யனிடம் மெடிசன் பாக்ஸை எடுக்க சொல்ல… அவனோ அதனை எடுத்து விக்ரமனிடம் கொடுத்தான்…

அதிலிருந்த ஒரு ஊசியை எடுத்தவன், சில மருந்துகளை அதில் நிரப்பி, கீர்த்திக்கு அதனை போட பார்க்க… அதனை கண்ட வினோதினி “அய்யோ என்ன பண்ணுறீங்க… ஊசி எல்லாம் போட்டு அவளை கொல்ல போறீங்களா?” என்று கேட்க…

விக்ரமனுக்கோ கோவம் தலைக்கேறியது… அவளை முறைத்து பார்த்தபடி கீர்த்திக்கு அவன் மருந்தை செலுத்தினான்…

மருந்து செலுத்தபட்ட ஐந்து நிமிடத்தில் கீர்த்திக்கு பிக்ஸ் நின்றது…

அதனை கண்ட வினோ “ஐய் சரி ஆகிடுச்சி… அப்போ நீங்க டாக்டரா?” என்று கேட்க… மீண்டும் அவளை முறைத்து பார்த்தான் விக்ரமன்..

அவன் மாஸ்க் அணிந்திருந்ததால், அவன் தன்னை முறைக்கிறான்  என்று கூட வினோதினிக்கு தெரியவில்லை…

‘ க்கும் எதுக்கு எடுத்தாலும் இப்படி நிமிர்ந்து பார்த்தால் என்ன அர்த்தம்… ஒரு வேளை போலி டாக்டரா இருக்குமோ ? ‘ என்று சந்தேகம் கொண்டாள்… வினோதினி…

கீர்த்தியோ இன்னும் மயக்கமாகவே இருந்தாள்.. கீழே விழுந்ததில் அவளது நெற்றியில் சற்று கீரி ரத்தம் வடிய… அதை பார்த்த விக்ரமன், காயத்தை டிஞ்சர் கொண்டு சுத்தம் செய்ய… கீர்த்தியோ வலியில் சற்று முனங்கினாள்…

நூறு பேர் இறந்ததை கண் முன் கண்ட போது கூட தோன்றாது உறுத்தல்… வலி எல்லாம் இன்று இவளது இந்த சிறு முக சுருக்கலை பார்த்த போது  தோன்றியது… அவளது வலியை இவனால் தாங்கிகொள்ளவே முடியவில்லை… அது தான் விந்தையிலும் விந்தை…

தன்னுடைய இந்த  உணர்வுகளை முழுவதுமாக வெறுத்தவன்… வேண்டுமென்றே அவளது  காயத்தை அழுத்தி சுத்தம் செய்தான்…

அதில் மேலும் அவளது முகம் வலியில் சுருங்கியது… ஆனால் இம்முறை அவன் முகத்தில் எந்த வித பதட்டமும் வெளிப்படவில்லை, மாறாக ஒரு ஏளன புன்னகை தான் வெளிப்பட்டது…

காயத்திற்கு மருந்திட்டவன், தனது உணர்வுகளுக்கு கடிவாளமிட்டபடி அவளை விட்டு விலகி அமர்ந்தான்…

சிறிது நேரத்தில் குளிரின் காரணமாக கீர்த்தியின் உடல் நடுங்க தொடங்கியது..  அதனை கண்டவன் கண்களை முடித்திறந்த படி அவள் அருகில் நெருங்கி அமர… கீர்த்தியோ மயக்கத்தில் அவன் தோள் சாய்ந்தாள்… அப்போது கீர்த்தியின் வலது கை அவனது தொடையின் மீது வந்து விழ… உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு இனம் புரியாமல் அவனை ஆர்பரிக்க வைத்தது…

அந்த ஏகாந்த நிலையை தனக்கானதாக மாற்ற நினைத்தவனின், வலது கரம் அவளது வளை கரத்தை  அழுத்தி பிடிக்க… இடது கரமோ அவளது இடை தேடி பயணமான நேரம்… சற்றென்று கார் நின்றது…

” என்ன ஆச்சு ? ” என்று விக்ரமன் சத்யனிடம் கேட்க…

” ஹாஸ்பிட்டல் வந்திடுச்சு சார்” என்று சத்யன் கூற…

விருப்பம் இல்லாமல் கீர்த்தியை விட்டு விலகி அமர்ந்தவன், கீழே இறங்கி, கீர்த்தியை கைகளில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் நுழைந்தவன், அவளை அங்கு அட்மிட் செய்தான்.

பின்னர் வினோதினியோ கீர்த்தியின் அலைபேசியில் இருந்து மகிழனுக்கு அழைத்து கீர்த்தியின் விபத்து பற்றி கூறி மருத்துவமனைக்கு வரும் படி கூறினாள்…

மகிழனோ பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்..

இந்நிலையில் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்த விக்ரமனும், சத்யனும் காரில் வந்து அமர்ந்திருந்தனர்…

“இது தான் ஆடு பகை குட்டி உறவுன்னு சொல்லுறதோ? ” என்று சத்யன் கேட்க…

” எனக்கு நீ சொல்லுறது ஒன்னும் புரியல ” என்று விக்ரமன் வேண்டுமென்று மறைத்து பேச…

” உங்களுக்கு புரியல, அதை நான் நம்பனும் அப்படி தானே… சரி நம்பிட்டேன்… ஆனால் அந்த பொண்ணு உங்களை ரொம்ப பலவீன படுத்துது போல… அவள் முன்னாடி உங்க உணர்வுகள் பலவீனபடுறது ரொம்ப நல்லாவே தெரியுது “

” ஷட் அப் சத்யன்.. என்னை யாரலையும் பலவீன படுத்த முடியாது… எந்த உணர்வுகளுக்கும் நான் அடிமையாக மாட்டேன்… ஒருவேளை நீ சொல்லுற மாதிரி அவள் தான் என் பலவீனம்ன்னு எனக்கு எப்போ தோணுதோ அடுத்த நொடி அவள் உயிரோடவே இருக்க மாட்டாள்… “

“அப்போ அந்த அபிமன்யுவின் ஸ்ருதகீர்த்தி?” என்று சத்யன் கேட்க… நொடியில் விக்ரமன் முகம் மாறியது..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்