Loading

சிற்பமே 5

 

“ரிஷி… அம்மா, அப்பா!” என்று அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்றாள் வித்யா.

 

“அக்கா” என்று இன்முகத்துடன் வந்தவன், சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே சோஃபாவில் சாய்வாக அமர்ந்து கால்களை சோஃபாவில் நீட்டியபடி வைத்து அதையாட்டியபடியே டிவியில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த ஜானவியைக் கண்டு புருவத்தை சுருக்கினான். 

 

சத்தம் கேட்டு பார்த்த ஜானவி, “வாங்க…சரஸூ” என்று உற்சாகத்துடன் ஆரம்பிக்க, “அது வந்து சரஸூ ஆன்ட்டி, மாணிக் அன்கிள்னு சொல்றாள் ஜானவி” என்று தம்பிக்கு பயந்து முந்திக்கொண்டு பேசினாள் வித்யா. 

 

பின்னே தன் முன்னாடி தன் தாய் தந்தையை மரியாதை இன்றி பெயர் சொல்லி அழைத்தால் அதைப் பார்த்து ரிஷி சும்மா இருப்பான்னா என்ன? 

 

“பாலைய்யா ஜூஸ் எடுத்துட்டு வாங்க” என்று பணித்த வித்யா, ஜானவிக்கும், தம்பிக்கும் பயந்தே இடத்தை விட்டு நகரவில்லை. 

 

“ஜூஸ் குடிங்க” என்று மூவருக்கும் பருக கொடுத்தவள், அவ்விடத்தில் கணவன் இல்லையென உணர்ந்து, “ஜானவி, என் தம்பி வந்திருக்கான் குட்டிமா” என்று பல் காட்டியபடி கூறினாள். 

 

“அதான் என் முன்னாடி உட்கார்ந்திட்டு இருக்காரே” என்று எதார்த்தமாக கூறிவிட்டு டிவியைப் பார்த்த ஜானவி, “திமிரு” என பல்லைக் கடித்தபடி மெல்ல முணுமுணுத்தவன், ‘இவள் என்னை வாங்கன்னு கேட்கலைன்னு ஃபீல் பண்ண மாதிரி இந்த அக்கா இவள்கிட்ட பல்லைக் காட்டுறாள்! மாமாவுக்கு இப்படியொரு தங்கச்சியா?’ என்று அவனால் ஆதங்கத்துடன் நினைக்காமல் இருக்கமுடியவில்லை. 

 

“ரிஷி! எப்போ டா வந்த” என்று மாடியிலிருந்து இறங்கி வந்த பாலாஜி மாமனார் மாமியாரையும் வரவேற்று விட்டு மைத்துனனின் முன் அமர, “இப்போ தான் வந்தேன் மாமா” என்று முகத்தில் புன்னகை மலர மரியாதையுடன் பதில் அளித்தான். 

 

“பாலா! காலேஜ் முடிஞ்சு போரிங்க்கா இருக்கு டா இந்த வித்யா வேற என்னை சரியா கவனிக்கவே மாட்டிங்குறாள்” என்று டிவியைப் பார்த்தே சலித்துக்கொண்டாள் இருபது வயது பெரிய மனுஷி ஜானவி. 

 

‘திமிரு! திமிரு! உடம்பு ஃபுல்லா இவளுக்குத் திமிரு… இவள்  பெரியவங்களை மரியாதையில்லாமல் கூப்பிடுறாள். இதெல்லாத்தையும் பார்த்து மாமாவும் சும்மா இருக்காரு… மாமா பண்றது சரியே இல்லை’ என்று மனதிற்குள் ஜானவியை வறுத்தெடுக்க, இங்கு பாலாஜி மனைவியை வறுத்தெடுக்க ஆரம்பித்தான். 

 

“வித்யா… பாப்பாவை கவனிக்காமல் அப்படி வீட்டுல உனக்கு என்ன பெரிய வேலை!” என்று கத்த, ரிஷிவந்த்திற்கு கோபம் ஏறியது. மாமாவிடம் இதுவரை நேரிடையாக கோபத்தை காட்டாவிட்டாலும் மனதில் வறுத்தெடுத்ததெல்லாம் ஏராளம்.எப்போதும் போல் தன் கோபத்தை வெளிக்காட்டாது கட்டுப்படுத்திக்கொண்டான்.

 

“என்ன ஆச்சுங்க… நான் ஜானவியை நல்லா தான் கவனிக்குறேன்” என்று பயம் கலந்த பதற்றத்தில் தட்டுத் தடுமாறினாள் வித்யா. சும்மாவே கணவனின் முன் ஜானவியின் விஷயத்தில் வித்யா பயப்படுவாள். இப்போது தம்பி வேற இருக்கிறானே என்று பதற்றத்தில் திணறினாள். 

 

மனைவியிடம் முறைப்பை பதிலாகக் கொடுத்தவன் ஜானவியின் தலையை வருடியபடி, “பாப்பா, என்ன ஆச்சு டா? வித்யா எல்லாமே சரியா தானே செய்வா!” என்று மனைவியை முழுதாக நம்ப முடியாமலும், வித்யா நன்கு கவனிப்பவள் ஆயிற்றே என்கிற குழப்பமும் இணைந்து ஒருங்கே புரியாமல் கேட்டான் பாலாஜி. 

 

“வித்யா என் கூட ஸ்விம்மிங் வர மாட்டிங்குறாள்… என் கூட டென்னிஸ் விளையாட வர மாட்டிங்குறாள். அவளுக்கு தெரியாதாம்.. எனக்காக வந்தால் குறைஞ்சா போயிடுவா?” என்று ஜானவி பேசிக்கொண்டே போக, இங்கே ரிஷியின் முகமோ கடும் பாறை போல இறுக்கமாக இருந்தது.

 

தங்கை கூறுவதைக் கேட்ட பாலாஜிக்கே, அவளின் பேச்சில் சங்கடம் கலந்த தலைகுனிவு தான். அவன் கவனிப்பு என்பதை வேறு விதமாய்ப் புரிந்துக் கொள்ள, இங்கே பிரதர்ஸ் லிட்டில் பிரின்ஸ் ஜானவியோ (Brother’s little Princess) புகார் என்கிற பெயரில் லூசுத் தனமாக பேசிக் கொண்டிருந்தாள். 

 

ஆனால் அப்போதும் கூட பாலாஜி தங்கையை கண்டிக்கவில்லை. அவன் செய்யும் பெரிய தவறு இது தான்.

 

இங்கே வித்யாவிற்கு கணவன் மற்றும் தம்பியை நினைத்து வியர்த்து, அவளறியாத மசக்கையின் காரணமாக சற்று தலைச் சுற்றல் வேறு வர ஆரம்பித்தது. இதில் கணவன் தன்னை நம்பாமல், தன் குடும்பத்தின் முன் தன்னை திட்டுவது வேறு அவமானம் கலந்த வலியைத் தந்தது. 

 

சுடிதார் அணிந்த படி மாடிப் படியில் கணவனோடு கைக்கோர்த்து இறங்கி வந்துக் கொண்டிருந்த காஞ்சனாவோ, “வாட் இஸ் திஸ் குசேலன்… நம்ம பப்புமாவுக்கு தாஜ் கோரமண்டல்ல தான் ரிசெப்ஷன் வைக்கணும்” என்று வாதாடியபடி வந்துக் கொண்டிருந்தார். 

 

பெரியவர்களைப் பார்த்த மரியாதையில் மாணிக்கம் மற்றும் சரஸ்வதி எழுந்து நிற்க, ‘ஆமா ஆமா மரியாதைன்னா இட்டாலியன் டிஸ்ஸான்னு கேட்குற பைத்தியகார குடும்பத்துக்கு இந்த மரியாதை ஒன்னு தான் குறைச்சல்’ என்று ரிஷி மனதில் கடுகடுத்தாலும், அவர்களின் வயதிற்காக எழுந்து நின்றான். 

 

“என்ன பாலா எதுவுமே சொல்ல மாட்டிங்குற!” என்று ஜானவி சிணுங்க, 

 

தங்கையிடம் இருந்து எஸ்கேப் ஆக துடித்த பாலாஜி, மாடிப்படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்த தன் தாத்தா மற்றும் பாட்டியைப் பார்த்து, 

 

“யார் வந்திருக்காங்கனு பாருங்க பாட்டி?” என்று பேச்சை மாற்றி திசை திருப்பி விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட,

 

தன் மூக்கு கண்ணாடியை தலையில் சொருகியபடி வைத்திருந்த காஞ்சனா பாட்டியோ தன்னுடைய மங்கலான பார்வையினால், ‘ஓ வசந்தியும், மாப்பிள்ளையும், ஜெகனும் வந்துட்டாங்க போல… என்ன தான் பொண்ணா இருந்தாலும் என் பப்புமாவுடைய மாப்பிள்ளை குடும்பம் சோ நாங்க ரெஸ்பெக்ட் கொடுக்கணும்’ என்று மனதில் கணக்கிட்டு, தன் பக்கத்தில் இருந்த கணவனிடம், 

 

“குசேலன்… ரெஸ்பெக்ட்… ரெஸ்பெக்ட்” என்று வாக்கிடாக்கியில் கூறுவது போல் கணவனின் காதின் பக்கம் கிசுகிசுக்க, இங்கு குசேலனிற்கோ பெரும் குழப்பம் தான். 

 

‘இவ நமக்கே ரெஸ்பெக்ட் கொடுக்க மாட்டா! என்ன வித்யா குடும்பத்துக்கு போய் இப்படி பம்முறா… ஒரு வேளை ஏதாவது காத்து கருப்பு, பேய் பிசாசுனு ஏதோ ஒன்னு பிடிச்சிருச்சா’ என்று தீவிரமாக யோசித்தார் தாத்தா. 

 

“வாங்க சம்மந்தி, வாங்க மாப்பிள்ளை… என்ன உங்க வருங்கால பொண்டாட்டி ஜானவியை பார்க்க சொன்ன நேரத்திக்கு ரொம்ப நேரம் முன்னாடியே வந்துட்டீங்க” என்று தன் பேரன் ஜெகனை கலாய்க்கிறோம் என்று ஒரு புறமும், பேத்திக்காக தன் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கொடுக்க நினைத்த மரியாதையை கொடுத்து விட்டோம் எனவும் தன்னை நினைத்தே காஞ்சனா பாட்டி பெருமிதத்தில் இருக்க, சபையில் இருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி என்றால்… பாலாஜிக்கோ சங்கடத்தின் உச்ச நிலை…விட்ட பெருமூச்சு இப்போ செத்துப் போச்சு என்கிற கணக்காய் அவனின் இதயம் மைத்துனனை நினைத்து பயத்தில் வேகமாக துடித்தது. 

 

‘ஐய்யோ இந்த பாட்டி கண்ணாடி போடாமல்… ரிஷியை வம்பிழுத்துட்டாங்களே’ என்று பாலாஜி மனதில் அதிர்ந்து புலம்பினாலும் அவனுக்கு அந்நொடி அங்கே என்ன பேசி சமாளிப்பது என்று தெரியவில்லை. 

 

“என்ன இவன் என்னுடைய வருங்கால புருஷனா” என்று அதிர்ச்சியடைந்த ஜானவி மைன்ட்வாய்ஸ் என நினைத்து அவளை மீறி வெளியிலேயே சொல்லி விட்டு ரிஷியைக் பார்க்க, அவனோ ஜானவியைத் தான் எளக்காரம் கலந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

‘ஜெகன் தானே மாப்பிள்ளைன்னு சொன்னாங்க’ என்று ரிஷியின் கோப முகத்தை பார்க்க பயந்து, வேறுப்புறம் திரும்பியபடி யோசித்தாள் ஜானவி. 

 

“இவ எல்லாம் ஒரு ஆளு… கோடி ரூபா கொடுத்தாலும்… ஏன் உலகத்துல வேற பொண்ணே இல்லாமல் இவ மட்டும் தான் பொண்ணு… இவளை மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு நிலைமை சூழ்நிலை வந்தாலும் கூட… கடைசி வரைக்கும் கன்னி கழியாமல்… கல்யாணம் பண்ணாமல்… கட்டப் பிரம்மச்சாரியாவே இருந்திடுவேனே தவிர இந்த குட்டச்சியை வருங்கால பொண்டாட்டியா  நினைக்க மாட்டேன்… இந்த பாட்டி ஏதோ கனவுல இருந்து எழுந்திருச்சிட்டு வராங்க போல… என்னை எல்லாம் இவங்க மாப்பிள்ளைன்னு சொல்ல வாய்ப்பே கிடையாதே’ என்று யூகித்தபடியே சிந்தித்தான். 

 

பல் காட்டிய படியே சென்றுக் கொண்டிருந்த மனைவியை, “காஞ்சு! முதல்ல கண்ணாடியைப் போடு… வந்திருக்குறது வித்யாவுடைய குடும்பம்” என்று அவரமாகச் சொல்ல, 

 

“ஓ மை காட் கருப்பசாமி” என்று அதிர்ச்சியில் அலறிய பாட்டி, வேகமாக தன் மூக்கு கண்ணாடியை அணிந்து ரிஷி மற்றும் அவனின் பெற்றோர்களைப் பார்த்து, “நான் சொன்னது எல்லாம் வாப்பஸ்” என்று சத்தமாகக் கூறியபடியே அவர்கள் பக்கம் வரவும், வித்யா மயங்கி விழவும் சரியாக இருந்தது.

 

“அக்கா” என்று ரிஷி பதற, 

 

“வித்யா” என்று பாலாஜி அலற, அவள் தரையில் விழுவதற்குள் ஏந்திக்கொண்ட பாலாஜி, அவளைத் தூக்கி அள்ளிக்கொண்டு கீழே உள்ள அறைக்குள் சென்று அவளை படுக்கவைத்து விட்டு,உடனே தங்களுடைய ஃபேமிலி டாக்டருக்கு  ஃபோன் செய்து அழைத்து உடனே வரும்படி கூறினான். அனைவரும் பாலாஜியைத் தொடர்ந்து பின்னே செல்ல, ரிஷியோ ஜானவியை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அப்பார்வையை அறியாத ஜானவியோ, வித்யாவைப் பார்க்க பதற்றத்துடன் செல்ல அவளின் கரத்தை வேகமாகப் பற்றி  வெளியில் இழுத்துச் சென்றான் ரிஷி. 

 

இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத ஜானவி முதலில் அதிர்ச்சியில் பேச்சிழந்தாள். அதற்குள் ரிஷி அவளை தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று 

 

“ஏய்! என்ன பண்ற… கையை விடு” என்று கத்தினாள் ஜானவி. 

 

“உனக்கு மூளைன்ற விஷயம் இருக்கா இல்லையா! உன்னால தான் என் அக்கா மயங்கி விழுந்திருக்கா” என்று இத்தனை நாள் தான் அடக்கி வைத்திருந்த கோபத்தை ஜானவியிடம் காட்டினான். இதில் பாலாஜியின் மீது வைத்திருந்த கோபமும் அடக்கம். 

 

“நான் என்ன பண்ணேன்?” என்று தன் கரத்தில் எழுந்த வலியைப் பொறுக்க முடியாமல் தடவிக்கொண்டு கேட்கும் போதே ஜானவியின் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது. இதுவரை யாரும் திட்டாத தன்னை… அடிக்க வரும் வேகத்தில் முதல் முறை அதுவும் ஒரு ஆடவன் எகிறிக் கொண்டிருக்க… சுருங்கியே விட்டாள் பெண். அதிலும் வலிய ஆண்மகனின் கை விரல்கள் பெண்ணவளின் மென் கரத்தில் பதிந்து அதீத வலியைக் கொடுத்தது. 

 

“இந்தியா வந்தால் என் அக்கா இருபத்தி நாலு மணி நேரமும் இங்க உங்க எல்லார் கூடவும் தானே இருக்கா!” என்று கடுகடுத்தவனின் மனதில், 

 

‘என் அக்காவால ஒரு தடவை கூட அவள் பிறந்த வீட்டுக்கு வர முடியலை’ என்கிற ஆதங்கமே மேலோங்கி அவனை இவ்வாறு பேச வைத்தது. 

 

‘என்ன சொல்றான் இந்த காட்டான்’ என்று மனதில் குழம்பிக் கொண்டிருந்த ஜானவி முழிக்க, 

 

“என் அக்கா உன்னை நல்லா கவனிக்க மாட்டிங்குறாள்னு மாமாக்கிட்ட பொய்யா போட்டுக் கொடுக்குற… நீயெல்லாம்… அப்படி என்ன என் அக்கா மேல உனக்கு வன்மம். நானும் பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு பொறுமையா இருந்தால் ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க” என்று சீறினான் ரிஷி. 

 

இப்போது ஜானவிக்கும் கோபம் பொங்கியது. “நீ யார் என்னை கத்துறதுக்கு! இது என் வீடு… நான் ஒன்னும் வித்யாவை குறை சொல்ல அப்படி சொல்லலை… நான் சொன்ன அர்த்தமே வேற” என்று அவளும் இப்போது நன்றாகவே வாதாடினாள். 

 

“ஏய்! லூசா நீ…நீ சொன்ன விதம் வேற மாதிரி பிரொஜெக்ட் ஆயிருக்கு அதை ஏன் உன்னால புரிஞ்சிக்க முடியலை.. இல்ல புரியாத மாதிரி நடிக்குறியா” என்று குத்தலுடன் கேட்டான் ரிஷி. 

 

இதற்கிடையில் வசந்தியின் குடும்பம் ஜானவியின் வீட்டிற்கு வந்தடைந்தனர். வலப்பக்கம் காரை பார்க் செய்து விட்டு அப்படியே வீட்டுக்குள் சென்றதால், இடப்பக்கம் அமைந்த தோட்டத்தில் சுடச் சுட  ரிஷியுடன் வாதாடிக் கொண்டிருந்த ஜானவி அவர்கள் வந்ததைக் காணவும் இல்லை கவனிக்கவும் இல்லை. 

 

இப்போது ஜானவிக்கே மனதில் புது குழப்பம்.‘நான் எப்போவுமே இப்படித் தானே பேசுவேன்… யாரும் என்னை தப்பு சொன்னதில்லையே! பாலாவும், வித்யாவும் அமைதியா இருக்கும் போது இவன் ஏன் என்னை கெட்டவள் மாதிரி பிரொஜெக்ட் பண்ணுறான். இவன் கிட்ட எல்லாம் நான் விளக்கம் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை’ என்று நிமிர்ந்தவள், தன் கண்களை அழுத்தி துடைத்து…

 

“நான் எந்தவொரு கெட்ட நோக்கத்தோடயும் அப்படி பேசலை… அது எனக்குத் தெரியும்! உன்கிட்ட அதை ப்ரூவ் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை… உன்னை அண்ணாக்கிட்ட சொல்லி என்னப் பண்றேன்னு மட்டும் பாரு” என்று கோபத்தில் பொங்கியவள், வேகமாக நகர…அவளை நகர விடாது சிறைப்பிடித்திருந்தது அவனின் வலிய கரம்… இறுக்கத்துடன். 

 

“ஏய்! நீ எதுக்கு என் கையை” என்று கோபத்துடன் அவள் கத்தும் போதே, “நான் ஒன்னும் உன்னைத் தொடணும்னு கைப்பிடிக்கலை… நீ மட்டும் மாமாக்கிட்ட நான் சொன்ன எல்லாத்தையும் சொன்னின்னா… மாமாவுக்கும் அக்காவுக்கும் நடுவுல பிரச்சனை வரும். அப்படி மட்டும் ஏதாவது நடந்துச்சுன்னு வை… உன்னை நான் சும்மா விட மாட்டேன்” என்று கோபத்துடன் மொழிந்தவனின் வார்த்தைகளின் உஷ்ணம் ஒரு பக்கம் ஜானவியை அச்சுறுத்த… இன்னொரு பக்கம் ரிஷியின் ரௌத்திரம் பேசிய கண்களில் மிரண்டே விட்டாள். 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்