
“வா வா மனோஜூ… இப்படி ஒரேடியாவா பெங்களூர்லயே இருந்துடுறது…” சிவக்குமாரின் தம்பி மனோஜையும் அவரது மனைவி இனியாவையும் வரவேற்றார் சவுந்தரவல்லி.
தாயின் அருகில் ஆசுவாசமாக அமர்ந்த மனோஜ், “என்னமா செய்றது? பசங்க படிப்பு படிப்புனு இருந்துட்டாங்க. பெரியவன் சந்தோஷ் இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் ஸ்டார்ட் பண்றது சம்பந்தமா ப்ரெண்ட்ஸ் கூட லண்டன் போயிருக்கான். நீலிமா காலேஜ்ல முக்கியமான ப்ராஜக்ட் போகுது. என்னை எங்கயும் கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டா. நாங்க வர்ற வரைக்கும் ஹாஸ்டெல்ல இருந்துக்குறதா சொல்லிருக்கா. அதுவும் இல்லாம, நம்ம லெதர் பேக்டரியை டெவலப் பண்றதுக்கு நிறைய பிளான்ஸ் வச்சுருக்கா…” என்று தனது மகவுகளின் பெருமையை அள்ளி அடுக்கினார்.
இனியாவும், “எங்களை எங்கயும் நகர விடுறதே இல்ல அத்த. இப்ப கூட அக்னிக்கு கல்யாணம் பேசணும்னு சொன்னதுனால தான் விட்டாங்க… அவங்க எய்ம், ஆம்பிஷன் எல்லாம் ஹை’யா தான் இருக்கும்… உங்களை மாதிரி இருக்கணும்னு சொல்லி வளர்த்துருக்கேனே…” என்றபடி அங்கு வந்த நிவேதாவை இளக்காரமாய் ஏறிட்டார்.
அவர் பேசியது காதில் விழுந்தாலும், “வா தம்பி… வா இனியா” என்று இருவரையும் வரவேற்றவர் குளிர் பானத்தையம் கொடுத்தார்.
சவுந்தரவல்லியோ இளைய மருமகளின் கூற்றில் சிலாகித்துப் போனார்.
“என்னமா பண்றது, உனக்கு இருக்குற தெளிவு கூட மூத்த மருமகன்னு போர்டு மாட்டிக்கிட்டவளுக்கு இல்லையே. புள்ளைங்களுக்கு ஓடிப்போறதையும், அப்பன் காசை கரைக்கிறதையும் தான சொல்லிக் குடுத்துருக்கா…”
நிவேதாவிற்கு சுருக்கென இருந்தது. அவரது இரு மகன்களும் தங்கங்கள் ஆகிற்றே!
ஆனால் இப்போது பேசினால், தேவையற்ற பிரச்சினை தான் எழக்கூடும்.
‘உங்களுக்கு எப்ப ரோஷமும் தைரியமும் வருதோ அப்போ என்கிட்ட இந்தக் கேள்வியைக் கேளுங்க…’ காலையில் அக்னி கூறிய வார்த்தைகள் செவியில் எதிரொலித்தாலும் ஒன்றும் பேச இயலா நிலை.
அக்னியின் திருமணமாவது சுற்றத்தாரின் ஆசியுடன் கோலாகலமாக நடைபெற வேண்டுமென்பதே அவரின் தற்போதைய அதிகபட்ச ஆசை.
இரவு உணவின் போது அக்னி வேந்தனும் வீட்டிற்கு வந்து விட்டான்.
உண்ணும்போதே மனோஜ், “அந்த ஓடுகாலியைப் பத்தி எதுவும் தகவல் தெரிஞ்சுதாமா?” எனக் கேட்க, அக்னி ஒரு கணம் உண்ணுவதை நிறுத்தி விட்டுப் பின் தொடர்ந்தான்.
சவுந்தரவல்லியோ, “அவன் தான் ஏதோ வெளிநாட்டுக்கு ஓடிப்போய்ட்டானாமே. அவனோட ப்ரெண்ட்ஸ்ங்ககிட்ட விசாரிச்சப்ப, உளறிட்டானுங்க. எக்கேடோ போகட்டும். சொந்த பந்தம் முன்னாடி அவமானப்பட்டு நின்னது தான் மிச்சம்!” என சலித்துக் கொண்டார்.
மனோஜும் வருத்தமாய் கேட்பது போல, “பாவம் அவன் போனதும் இல்லாம அக்னியையும் இழுத்து விட்டுட்டு போய்ட்டான். அந்த இடியாடிக் ஓல்ட் ஏஜ் ஹோம்ல இவன் போய் மாட்டிக்கிட்டது தான் கஷ்டமா இருக்கு. லாஸ் ஆனாலும் பரவாயில்ல அக்னி. நீ அதை இழுத்து மூடிட்டு, லெதர் பேக்டரியை பார்க்கலாமே…” என்று இலவச அறிவுரை வழங்கினார்.
அவனோ இட்லி மீது சாம்பாரை ஊற வைப்பதில் கொடுத்த அக்கறையைக் கூட அவரது பேச்சிற்கு கொடுக்கவில்லை.
“சந்தோஷ் என்ன பண்றான் சித்தப்பா?” கேட்டபடி இட்லியை பிய்த்தான்.
“அவன் லண்டனுக்கு” என மீண்டும் பெருமை பேச ஆரம்பிக்க,
“லாஸ்ட் மன்த் ட்ரங்க் அண்ட் ட்ரைவ்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்களே… அப்ப அவன் எனக்கு தான் போன் பண்ணுனான் ஹெல்ப் கேட்டு. ரெண்டு நாள் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்துட்டு வந்தா தான் அறிவு வரும்னு ரெண்டு நாள் கழிச்சு தான், எங்களோட ஓல்ட் ஏஜ் ஹோம்ல இருந்த ரிட்டயர்டு ஐஜியோட இன்ஃப்ளூயென்ஸ் யூஸ் பண்ணி, கர்நாடகா போலீஸ்ட்ட பேசி வெளிய விட சொன்னேன். இப்ப ட்ரிங்க்ஸ் நிறுத்திட்டானா? இல்ல மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா?” என ஒற்றைப்புருவம் உயர்த்தியதில், மனோஜுக்கு இட்லி தொண்டையில் சிக்கிக் கொண்டது.
சவுந்தரவல்லியோ, “என்னப்பா போலீஸ் அது இதுனு சொல்றான். என்ன ஆச்சு சந்தோசுக்கு” என்று மகனிடம் வினவ,
“அவனுக்கு எதுவும் ஆகல. அவன் இடிச்சுட்டுப் போன ஆளுக்கு என்ன ஆச்சுன்னு வேணா கேளுங்க… நல்லவேளை உயிருக்கு எதுவும் ஆகல. இல்லன்னா, காலம் பூரா கம்பி தான் எண்ணிருக்கணும். அங்க தான், என் பாட்டி மாதிரி உங்களை புல்லி பண்ண யாரும் இல்லையே. பசங்களை நல்லா வளர்க்க வேண்டியது தான சித்தி! ஒழுக்கம்… ஒழுக்கத்தை சொல்லிக் குடுத்து வளருங்க…” என்றதில் இனியாவின் முகம் கருத்துப் போனது.
நிவேதாவிற்கு தான் சிரிப்பை அடக்கவே இயலவில்லை.
“ஆமா ஆமா உன் அண்ணனை விட என் பசங்க ஒன்னும் ஒழுக்கங்கெட்டுப் போய்டல…” மனோஜ் எகிறிட, கை கழுவ எழுந்த அக்னி, மனோஜின் முன் கையூன்றி குனிந்து,
“நீலிக்கு ஸ்கூல்ல இருந்து இப்ப காலேஜ் வரைக்கும் 5 பிரேக்கப். என் அண்ணன் ஒருத்தியை காதலிச்சு, அவளை மட்டுமே கல்யாணம் பண்ணி, இப்ப வரை அவள் வேணாம்னு இங்க திரும்பி வரல. தன்னை நம்பி வர்றவங்களுக்கு ஒழுக்கமா இருந்தா போதும். கண்ட கண்ட காசிப் பேசுறவங்களுக்கு எல்லாம் ஒழுக்கமா இருந்து ப்ரூவ் பண்ணனும்னு என் அம்மா எங்களுக்கு சொல்லித் தரல சித்தப்பா. அட, என்ன நீங்க வெறும் இட்லியை சாப்பிட்டுட்டு இருக்கீங்க. சாம்பார் ஊத்திக்கோங்க” என்று சுட சுட சாம்பாரை இட்லிக்கு பதில் அவரது கையிலும் ஊற்றி விட்டுச் சென்றான்.
அவன் செய்த வேலையை வெளியில் சொன்னால் தனக்கு அவமானம் என்று வலியைப் பொறுத்துக்கொண்டு மனோஜ் அமர்ந்திருக்க,
“என்ன அத்த… இப்படி எங்களை அசிங்கப்படுத்ததான் வர சொன்னீங்களா. விக்ரம் கல்யாணத்துக்கு வாங்கனு இப்படி தான் அஞ்சு வருஷம் முன்னாடி வர சொன்னீங்க. அவன் எங்க பேச்சை மதிக்காம இன்னொருத்தியை இழுத்துட்டு ஓடிட்டான். இப்ப இவன் எங்க பசங்களை இவ்ளோ கேவலமா பேசுறான்… நீங்க கேட்டுட்டு இருக்கீங்க!” என எகிறிட, கையை கழுவி விட்டு மீண்டும் அங்கு வந்து அமர்ந்த அக்னி வேந்தன், “பாட்டி வேற எதுவும் பொண்ணு போட்டோ இருக்கா?” எனக் கேட்டான் வெகு அக்கறையாக.
“சித்தி சித்தப்பாட்டையும் காட்டுங்க. அவங்க எடுக்குற முடிவு கரெக்ட்டா இருக்கும். நீங்க பேசிட்டு எனக்கு போட்டோ குடுங்க. ஆனா நான் சொல்றது தான் ஃபைனல்…” என ஒரு இக்கு வைத்துப் பேசியதை யாருமே கவனிக்கவில்லை.
அக்னி சென்றதும், “பார்த்தியாமா… அவனுக்கு பொண்ணே நீங்க தான் செலக்ட் பண்ணனும்னு சொல்லிருக்கான். சந்தோஷுக்கு கேஸ் ஆகிடும்ன்ற வருத்தத்துல பேசிருப்பான்” என்று இனியாவிடம் சமாளித்தார் சவுந்தரவல்லி.
“அத்தை… பெங்களூர்ல இருக்குற லைஃப் ஸ்டைலே வேற. சந்தோஷ் ஒன்னும் கார் ஓட்டிட்டுப் போகல. அவன் ஃப்ரெண்டு தான் ஓட்டுனானாம். இன்னும் ஒரு தடவை அவன் தேவையில்லாம என் பசங்களை பத்தி பேசுனா, அப்பறம் இங்க வரவே மாட்டோம்” என்று தனது ஆணவத்தைக் காட்டி விட்டுச் சென்றார் இனியா.
மனோஜும் எரிச்சலுடன் பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்ள, நிவேதா வெகு கவனமாய் முகத்தை வேதனை தோய வைத்து விட்டு, அடுக்களையில் சென்று குலுங்கி குலுங்கிச் சிரித்தார்.
———-
மறுநாள், பவித்ராத்யாவிற்கு வகுப்பில் கவனமே இல்லை. முயன்று கவனத்தை நிலைநிறுத்தி வகுப்பை முடித்தவளை, தேவாரம் அண்ட் கோ பிடித்துக்கொள்ள அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது.
“என்னமா யாரையும் பார்க்க போறியா?” விஜயா கேலியாய் கேட்க,
“ஹான் இல்லையே” என வேகமாய் தலையசைத்தாள்.
பின் அவளே, “அது அது… நான் அக்னியைப் பார்க்க போறேன். ஒரு விஷயம் பேச” என ஒப்புக்கொள்ள, “சரி சரி” என நால்வரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்ததில் அவள் அவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு அக்னி வேந்தனின் அறை நோக்கிச் சென்றாள்.
“நீங்க ரூம்ல இருக்கீங்களா?” அவன் எண்ணிற்கு குறுஞ்செய்தியும் அனுப்பிக் கேட்க, “ம்ம்” என்ற பதில் கிடைத்தது.
‘பேச கூட காசு கேட்பாரு போலருக்கு… விக்ரம் அத்தான்லாம் எப்படி படபடன்னு பேசுவாரு’ என்று ஒப்பிட்டுக் கொண்டே நடந்தவளுக்கோ, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விடக்கூடாது என்ற பயமும் இருந்தது.
அவளது நடையை தடைசெய்தான் அவன். அவளுக்கு முன் மார்புக்கு குறுக்கே நின்ற ஆடவனைக் கண்டதும், “என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் புருவம் சுருக்கி.
“என்ன கேட்டாலும் கிடைக்குமா?” சில்மிஷத்துடன் கேட்டவனிடம், “உங்களுக்கும் எனக்கும் இடையில என்னங்க இருக்கு? எதுக்கு என்னை இப்படி தேவை இல்லாம தொந்தரவு பண்றீங்க…” அடக்கப்பட்ட சீற்றத்துடன் வினவினாள்.
“தேவை இருக்கப்போய் தான நான் தொந்தரவு செய்றதே!” விஷமப் புன்னகை அவனிடத்தில்.
“நான் எதுவா இருந்தாலும் இந்த இடத்தோட ஓனர் அக்னிட்ட பேசிக்கிறேன்” எனும்போது அவன் பாதங்கள் அவளை நோக்கி நடக்கத் தொடங்க, அவள் பாதங்கள் திகைப்புற்று பின்வாங்கியது.
“ஓனர்கிட்ட பேசுற அளவு, பார்ட் டைம் ஜாப் பாக்குற யோகா டீச்சர்கு என்ன அவசியம் இருக்கு” அவனது பார்வையும் கணீர் குரலும் அவளை சில்லிட வைக்க,
“அது… அது… பெர்சனல்!” திக்கித் திணறி உரைத்தவாறே சுவரில் முட்டி நின்றாள்.
“ஓஹோ!” உதடு குவித்த ஆடவனின் அடர் புருவங்களில் சின்னஞ்சிறு சுருக்கம்.
வியர்வையில் நனைந்து போன பெண்ணின் நெற்றியதில் விழி பதித்தவனாக, “பெர்சனலா பேசுற அளவு, என்ன இருக்கு… உனக்கும் உன் ஓனர்கும்?” அவன் கேள்வியே அவளுக்கு அதிருப்தியை அளித்ததில்,
“நான் அவருக்கு கட்டிக்கிற முறை தான்…” என்றாள் வெடுக்கென.
இம்முறை கூடுதல் சுவாரஸ்யம் அவன் விழிகளில்.
“கட்டிக்கிற முறை மீன்ஸ், ரெண்டு பேரையும் ஒண்ணா கயிறு வச்சுக் கட்டிக்கிறதா?” அப்பாவி போல வினவியவனை வேற்றுக் கிரகவாசி போலவே பார்த்து வைத்தாள்.
“ஆனா, எனக்கு…” என ஆரம்பித்தவன், “க்கும்” எனத் தொண்டையை செருமி விட்டு,
“ஓனர்கு இப்டி ஒரு கட்டிக்கிற முறை இருக்குன்னு எனக்குத் தெரியாம போச்சே!” என்றான் கேலியாக.
“அதான் இப்ப தெரிஞ்சுதுல வழி விடுங்க” அவனது இரு கைகளுக்கு இடையில் சிறை பட்டிருந்தவளுக்கு இதற்கு மேலும் சுவரை உடைத்துப் பின்னால் நகர இயலா நிலை!
தன்னைச்சீண்டுவதால், அவனைத் தள்ளி நிறுத்தவே அப்படி கூறினாள்.
இதற்கிடையில் சஞ்சீவ் அங்கு வந்தவன், பவி… ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்ல நீ சைன் பண்ணனும். பண்ணிட்டுப் போறியா?” என அழைக்க, “ஓகே சார்…” என்றபடி வேகமாய் அவன் அறைக்குச் சென்றாள்.
கையெழுத்திட்டு விட்டு, மீண்டும் அக்னி வேந்தனின் அறைக்குச் சென்றவளோ அங்கு அந்த வளர்ந்து கெட்டவன் அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பேறியது.
“நீங்க எதுக்கு இங்க உக்காந்துருக்கீங்க?” சண்டை போடுவது போல மூச்சிரைத்தாள்.
“சேர் போட்டுருக்காங்க உக்காந்துருக்கேன். நின்னுட்டே இருந்தா கால் வலிக்குமே ஆத்யா!” அவன் நக்கலாய் சிரிக்க,
“செம்ம காமெடி. இது அக்னி ரூம் தான? அவர் ரூம்ல நீங்க ஏன் இருக்கீங்க?”
“இது அக்னி ரூம் தான். அக்னி ரூம்ல அக்னி தான் இருக்கேன்.”
“ப்ச், சும்மா என்னை கார்னர் பண்ணாதீங்க…” என விரல் நீட்டும்போதே அவன் கூறியதன் அர்த்தம் புரிய, திகைத்து விட்டாள்.
அவன் முன்னே இருந்த நேம் போர்டையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், “அ… அ… அக்னி வேந்தன்” என திக்கித் திணறி கேட்க, “இட்ஸ் மீ. உன்னைக் கட்டிக்கப் போறவன்!” என்றான் இதழக்கிடையில் புன்னகையை மறைத்தபடி.
“ஹான்?” உட்சபட்ச திகைப்பில் வீற்றிருந்தவளிடம், “நீ தான் எல்லார்கிட்டயும் அப்படி சொல்லி வச்சுருக்க” என்றான் அர்த்தமாய்.
“இல்ல இல்ல இல்ல நான் யார்ட்டயும் சொல்லல. நீங்க டீஸ் பண்ணதுனால, உங்களை லாக் பண்ண தான் அப்படி சொன்னேன்…: அவளுக்கு விழியெல்லாம் கலங்கி விட்டது.
‘கடவுளே! அவன்கிட்டயே போய் அவனைப் பத்தி கேட்டுருக்கோமே!’
“நான் ஃபர்ஸ்ட் நாள் கேட்டப்பவே சொல்லிருக்கலாம்ல?” அழுகுரலில் கேட்டாள்.
“அக்னி யார்னு கேட்டுருந்தா சொல்லிருப்பேன். நீ ஏதோ என் கூட குடும்பம் நடத்துன ரேஞ்சுக்கு உரிமையா பேசுன. அதான் என் உரிமையைக் காட்டுனேன்” என ஒற்றை விரலை நாடியில் பதித்துக் கொண்டான்.
‘ஹையோ!’ என நொந்து கொள்ளும்போதே, “அக்னி சார்…” என்ற கனியின் குரல் வாசலில் கேட்க, அவன் தலையசைத்தான்.
“நீங்க கேட்ட ஃபைல்!” என்ற கனி, இதம் மறைந்து பவித்ராத்யாவை முறைத்து விட்டுச் செல்ல, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘அடப்பாவி கனி… இவ்ளோ நாள்ல ஒரு தடவை கூட இவரை பேரை சொல்லிக் கூப்டாம விட்டுட்டியே… இந்த வாட்ச்மேன் வேற என்னை குழப்பி விட்டுட்டான்’ தனக்குள் புலம்பிக் கொண்டாள்.
பவித்ராத்யாவைப் பற்றிய தகவல் அடங்கிய கோப்பு தான் அது.
அதனைத் திறக்காமல் பெண்ணவளையே விழிகளால் துழாவியவன், “சிட்” என்றான்.
“இல்ல பரவாயில்ல… நிக்கிறேன்!”
“சரி அதென்ன நான் உன்னைக் கட்டிக்கிற முறை?” மேலுதட்டைக் கடித்துக் கொண்டதில் அவனது மீசையின் வளைவுகள் இன்னும் அழகாய் காட்சியளித்தது.
கொஞ்சம் அடர்ந்த மீசை தான்! கருமம் பிடிச்சவளே… இந்த நேரத்துல இந்த ஆராய்ச்சி முக்கியமா தன்னையே திட்டிக்கொண்ட பவித்ராத்யா, “அது அது அது…” எனத் திணறினாள்.
அந்நேரம் “ஏய்… நீ ஏன்டி இங்க வந்த? இவளை யாரு இங்க விட்டது: என்ற சவுந்தரவல்லியின் குரல் கர்ஜனையாக ஒலிக்க, பயந்து திரும்பினாள்.
அவரை இங்கு எதிர்பாராத அக்னி வேந்தனும் எழுந்து, “பாட்டி நீங்க என்ன பண்றீங்க இங்க?” என வினவ,
அவரோ விழிகளில் நெருப்பைக் கக்கினார்.
“என்னடி உன் அக்காக்காரி ஒருத்தனை வளைச்சுப் போட்டு போய்ட்டா. நீ இவனையும் வளைச்சுப் போட்டுடலாம்னு ஆட்டிக்கிட்டு வந்துட்டியா? எவ்ளோ தைரியம் இருந்திருந்தா, இந்த இடத்துல நுழைஞ்சுருப்ப. என்ன உன் அக்காக்காரி உன்னை அனுப்பி விட்டாளா?” என நாக்கில் நரம்பின்றி பேச, பவித்ராத்யாவிற்கு கண்ணே சிவந்து விட்டது.
அவளது நீண்ட கூந்தல் வேறு அவரது எரிச்சலை கிளப்பி இருக்க வேண்டும். அதனைக் கொத்தாகப் பற்றியவர், “அவளை உசுரோட விட்டதே நாங்க செஞ்ச தப்புனு நினைச்சுட்டு இருக்கோம். உயிர் பிச்சையோட ஓடாம, எவ்ளோ தெனாவெட்டா என் பேரன் முன்னாடி சரிக்கு சமமா பேசிட்டு இருப்ப… அந்த சூனியக்காரி இன்னும் என்ன சூனியம் வைக்க சொன்னா” என்று அங்கலாய்த்தார்.
வலியில் முகம் சுருக்கியவள், “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல… என் அக்கா சூனியக்காரியும் இல்ல. தப்பா பேசாதீங்க” என்று கோபமும் பயமும் கலந்த குரலில் கூறிட, சவுந்தரவல்லி அவளை அடிக்கச் சென்றார்.
“பாட்டி” அக்னி வேந்தனின் குரலில் அவளது தலைமுடியை விட்டவர், “இவளை இங்கயே கொலை பண்ணி போடு அக்னி” என்றதும் அவளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கி விட்டது.
பேசியதை வைத்தே அவள் யாரென்று தெரிந்து கொண்ட அக்னி வேந்தனின் முகம் பாறையாய் இறுகி இருக்க, அவளுக்கோ பயத்தில் நா குழறியது.
“இது என் பிசினஸ் பிளேஸ். இங்க நீங்க டீசண்ட்டா நடந்துக்குறது ரொம்ப முக்கியம் பாட்டி. நீங்க வீட்டுக்குப் போங்க. என்ன செய்யணுமோ நான் செஞ்சுக்குறேன்” என்றான் தீர்க்கமாக.
தனது பேரன் அவளை விடமாட்டான் என்ற தைரியத்தில் அங்கிருந்து கிளம்பிப் போக, ஆடவனின் பார்வை அவளை ஊசியாய் குத்தியதில் வியர்த்து போனாள்.
“அது அது… நான் நான் விக்ரம் அத்தான்… அவங்க வைஃபோட தங்கச்சி…” என தட்டுத் தடுமாறி உரைக்க, அவளைச் சலனமின்றிப் பார்த்தவன், ஒரு நொடி அந்த பைலைத் திறந்து பார்த்து பின் மூடி, “கனி” என்றான் உரத்த சத்தத்துடன்.
அடுத்த நொடி கனி அங்கு இருக்க, “இந்த ஃபைல் என் டேபிளுக்கு வர்றதுக்கு முன்னாடி யார்கிட்ட போச்சு?” பார்வையை அவள் மீதிருந்து திருப்பாது கேட்டான்.
“சார்?”
“செவிடா நீ? நான் கேட்டது புருஞ்சுதுல பதில்!” என்றவனின் உறுமலை இதுவரை கனியே கேட்டதில்லை.
“அது… நான் தான் இந்தப் பொண்ணு பத்தி தெரிஞ்சதும் பாட்டிட்ட சொன்னேன் சார். இந்தப் பொண்ணு வேணும்னே குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ண வந்துருக்குனு தோணுச்சு அதான்…”
“நான் யார் குடும்பத்துலயும் குழப்பம் பண்ண வரல…” அழுகையுடன் சீறினாள் பவித்ராத்யா.
அவளை கடினமாய் ஏறிட்டவன், கனியின் புறம் திரும்பி, “என் குடும்பத்து மேல எவ்ளோ அக்கறை கனி உனக்கு” என்றதில் கனியின் முகம் சாந்தமானது.
அக்னியே தொடர்ந்து, “இவ்ளோ அக்கறை இருக்குற உனக்கு நான் வெறும் சம்பளம் குடுத்து அசிங்கப்படுத்த முடியாது… சோ நீயே வேலையை விட்டுப் போய்டு” மின்னாமல் முழங்காமல் அவன் தலையில் இடியை இறக்க, “சார்…” என்றான் அதிர்ச்சியாய்.
“ஐ செட் கெட் அவுட்!” அந்தக் கோப்பை அவன் மீதே விட்டெறிந்தான்.
அவனுக்கே இந்த நிலை என்றால், தனக்கு? அச்சத்தில் மயக்கமே வரும்போல இருந்தது அவளுக்கு.
கனி தொங்கிய முகத்துடன் வெளியேற, “என்ன விஷயம்?” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்.
இனி அவனிடம் என்னவென சொல்வது? அவனது தமையனுக்கு உடல்நிலை சரி இல்லை. பண உதவி செய் என்றா? இழுத்துக்கொண்டு ஓடும்போது இதெல்லாம் தெரியவில்லையா என்று கேட்டால்… வேண்டாம்… இது திலோத்தமாவையும் விக்ரமையும் அவமானப்படுத்துவதற்கு சமம்!
இதற்காக தானே விக்ரம் அத்தான், இந்தக் குடும்பத்தின் சவகாசமே வேண்டாமென்று, வெளிநாட்டிற்கு சென்று விட்டதாய் அனைவரையும் நம்ப வைத்து, சென்னையில் ஒரு மூலையில் இருந்திருந்தார்.
சிவக்குமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் சென்னை என்றாலே ஆகாது. அந்த வெப்பநிலையும், தூசியும் யாருக்கும் பிடிக்காது. சுற்றிப்பார்க்க கூட யாரும் சென்னைக்கு வர விரும்ப மாட்டார்கள் என்று அறிந்து வைத்திருந்தான்.
அதனாலேயே இத்தனை பக்கத்தில் இருந்தும் கூட, அவனைக் கண்டறிய இயலவில்லை!
தளர்ந்து போன பெண்ணவள், “ஒன்னும் இல்ல. தெரியாம வந்துட்டேன்…” என்று அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் உணர்வற்று வெளியில் சென்றாள்.
நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த நான்கு பெரியவர்களுக்கும் மனம் ஆறவில்லை.
தேவாரம், “ஏப்பா… அந்தப் பொண்ணைப் பார்த்தா தப்பான பொண்ணா தெரியல. என்ன ஏதுன்னு கேளுப்பா” என்றதும், விஜயாவும் “ஆமா அகி… அப்டியே விக்ரம் எங்க இருக்கான்னு தெரிஞ்சுடும்ல. வெளிநாட்டுல இருந்து வந்துட்டானானு கேட்டு தெரிஞ்சுக்கலாம்…” என்றார் கெஞ்சலாக.
“அவனுக்கு ஒரு விஷயம் பிடிச்சதுன்னா என்கிட்ட தான் முதல்ல சொல்லுவான். ஆனா லைஃப்ல நடக்குற ஒரு முக்கியமான விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சதும் இல்லாம, என்கிட்ட கூட அவன் எந்த நாட்டுக்குப் போயிருக்கான்னு தெரியப்படுத்தக்கூடாதுனு அவன் ப்ரெண்ட்ஸ்கிட்ட ஸ்ட்ராங்கா சொல்லிருக்கான். நான் என்ன தப்பு பண்ணேன் விஜி? தண்டனை அவனுக்கு குடுத்துக்குறானா இல்ல எனக்கா?” ஆடவனின் அழுத்த விழிகள் கலங்கிப் போயிற்று!
“அவன் மேல கோபம் இருந்தா, போய் பார்த்து நாலு அடி கூட அடிச்சுடு அகி…” ஜெயசுதா கூறியதில், கண்ணை மூடித் திறந்தவன், “நான் பாத்துக்குறேன்” என்று பெருமூச்சு விட்டு, வெளியில் சென்றான்.
அக்ரம் அமைப்பில் இருந்து அழுதபடியே வெளியில் வந்த பவித்ராத்யா வாட்ச்மேனைக் கண்டு, “யோவ்… அதான் அக்னி உள்ள இருக்காரே. அப்பறம் ஏன்யா வெளிநாட்டுக்குப் போயிருக்கறதா சொன்ன?” என சிவந்த முகத்துடன் வினவினாள்.
“நான் ஐயா வெளிநாட்டுக்குப் போயிருக்குறதா தான் சொன்னேன், சின்னையா போயிருக்காருன்னு சொல்லவே இல்லையே” அவன் தலையைச் சொறிய,
“போயாங்…” எனத் திட்டி விட்டு அருகில் இருந்து பேருந்து நிலையத்தில் வந்து அமர்ந்தாள்.
தமக்கையிடம் என்னவென்று சொல்வது? அக்ரம் குடும்பத்தினருக்கு எதுவும் தெரியக்கூடாது என்றாளே! தன்மூலம் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து எதுவும் செய்து விடுவார்களோ என்ற பயம் வேறு கொன்றது.
அந்நேரம் அவள் முன்னே உயர்ரக கார் ஒன்று நிற்க, உள்ளிருந்து ஜன்னல் கண்ணாடியைத் திறந்தான் அக்னி வேந்தன்.
அவனைக் கண்டதும் குலைநடுங்கியது அவளுக்கு.
“வா!” இறுகிய குரலில் அவன் அழைக்க,
“இல்ல… நான் போய்க்கிறேன்” அவள் வேகமாய் மறுத்தாள்.
“நீ வர்றியா? இல்ல நானே இறங்கி வந்து உன்னைத் தூக்கி உள்ள உட்கார வைக்கணுமா?” இன்ஜினைப் போல அவனும் சீறியதில் திகைத்தவள், வேறு வழியற்று காரினுள் அமர்ந்தாள்.
அந்தப் பாட்டி சொன்னது போல தன்னைக் கொலை செய்து வீசப்போகிறானோ என்ற அச்சம் அப்பிட, என்னவானாலும் விக்ரமின் வீட்டை மட்டும் காட்டி விடக் கூடாது எனக் குறித்துக் கொண்டாள்.
“விக்ரம் எங்க?” கார் சீராய் சாலையில் செல்ல, அக்னி வினவினான்.
“எனக்குத் தெரியாது!” அவசரமாய் பதில் உரைத்ததில், அவளைத் திரும்பி முறைத்தவன், “இப்ப நீ சொல்லலைன்னா, என் பாட்டி கண்டுபிடிச்சு நேரா அவன் வீட்டுக்குப் போய்டுவாங்க. குடும்பத்தை கலைச்சு விட்டுட்டு வந்துடுவாங்க. தென் உன் இஷ்டம்!” என்றான் தோளைக்குழுக்கி. காரையும் ஒரு ஓரமாக நிறுத்தி இருந்தான்.
கண்ணில் நீர் வைத்து விட்டவள், “நீங்க என்னைக் கொலை கூட பண்ணிக்கோங்க. ஆனா அக்காவையும் அத்தானையும் எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்… நான் ஹெல்ப் கேட்டு தான் வந்தேன். யாரையும் மயக்கவும் வரல. உங்க குடும்பத்துல பிரச்சினை பண்ணவும் வரல…” எனத் தேம்பி தேம்பி அழத் தொடங்க, “உஷ்!” என ஒற்றை விரலால் அவள் இதழ் மீது அணை கட்டினான்.
“நான் கேட்டதுக்கு பதில் இது இல்ல ஆத்யா. அவன் எப்போ ஃபாரின்ல இருந்து வந்தான்?”
அவளோ திருதிருவென விழித்தபடி, தனது இதழ் மீது வீற்றிருந்த அவனது விரலைத் திகிலாய் பார்த்தாள்.
நிதானமாய் விரலை எடுத்தவன், “பதில்?” என்றான் கடுமையாக.
“அத்… அத்தான் எப்போ ஃபாரின் போனாங்க? நான் நாலு வருஷமா அவங்க கூட தான் இருக்கேன்…” மெல்லிய குரலில் கூறிட, அக்னி வேந்தனின் புருவ மத்தியில் சிறு முடிச்சு.
“எதுக்கு என்னை பார்க்க வந்த?” மீண்டும் வினவியதில், அவளுக்கு ஐயோ என்றிருந்தது.
திலோத்தமாவைக் கூறினால், அவள் வேண்டுமென்றே பணம் பறிக்க திட்டம் தீட்டி இருப்பதாக பழி போட்டு விடுவார்களோ என்ற அச்சம் எழ, “அது அத்தான் உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க அதான்…” என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.
வில்லாய் வளைந்த புருவங்கள் மேலெழ, “சொந்தத் தம்பியைப் பார்க்க மீடியேட்டரா? குட்!” உணர்வு துடைத்த முகத்துடன் மீண்டும் காரை செலுத்தினான்.
“இல்ல அது” எனப் பேச எண்ணினாலும் அவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
கார் நேராக விமான நிலையத்திற்குச் செல்ல, “இங்க எதுக்கு?” என்றாள் மிரட்சியுடன்.
“சென்னைக்கு!”
“அவங்க அங்க இருக்காங்கன்னு நான் சொன்னேனா?” பவித்ராத்யா பதற,
அவளை மேலிருந்து கீழ் வரை அழுத்தமாய் ஏறிட்டவன், “உன் காலேஜ் டீடைல்ஸ்ல வீட்டு அட்ரஸ் இருந்துச்சு…” என அசட்டையாகக் கூறியதில், மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் பவித்ராத்யா.
——-
வாசலில் காலிங் பெல் அடித்ததில், திலோத்தமா தான் கதவைத் திறந்தாள்.
எதிரில் சவுந்தரவல்லியும் சிவக்குமாரும் நின்றிருக்க, திலோத்தமாவிற்கு பயம் அப்பியது.
“உள்ள வரலாமா?” சிவக்குமார் சிரித்த முகத்துடன் கேட்க, “வா… வாங்க” என்று வழி விட்டாள் திலோத்தமா.
ஏதோ வரைந்து கொண்டிருந்த அக்னிலா, இவர்களைக் கண்டு “அம்மா யாரு இவங்க” எனக் கேட்க, சவுந்தரவல்லி தனது கொள்ளுப் பேத்தியைத் தூக்கி “நான் உனக்கு பாட்டிடி தங்கம்” என்று கொஞ்சினார்.
திலோத்தமாவிற்கு நடப்பதை நம்பவே இயலவில்லை.
சிவக்குமாரோ “விக்ரம் எங்கம்மா?” என வினவ, “அவரு தூங்குறாரு. நான் எழுப்புறேன்” என நகரப்போக, “வேணாம்மா அவனை டிஸ்டர்ப் பண்ண வேணாம். நாங்க வந்த வேலையை முடிச்சுட்டுக் கிளம்புறோம்” எனும்போதே சிவக்குமாரின் முகம் கொடூரமாய் மாறியது. சில நிமிடங்களில் திலோத்தமாவும் அக்னிலாவும் கழுத்தில் வழிந்த குருதியுடன் விக்ரமின் கட்டிலுக்கு கீழே உயிரற்று கிடந்தனர்.
உறங்கிக் கொண்டிருந்த விக்ரம வேந்தன் வெடுக்கென விழித்தான். முகமெல்லாம் வியர்த்து விட்டிருந்தது.
“திலோ திலோ…” மூச்சிரைக்க கத்தியவனின் குரலில் பயந்து, அடுக்களையில் இருந்து வேகமாய் ஓடி வந்த திலோத்தமா “என்னாச்சு விக்ரம்?” என்றாள் பதறி.
“அகி எங்க?” மகளை விசாரிக்க, “ஹால்ல தான் விளையாடிட்டு இருக்கா ஏன் விக்ரம்? ஏன் இப்படி வேர்த்துருக்கு” என்று தனது முந்தானை கொண்டு துடைத்து விட, அதன்பிறகே மெல்ல ஆசுவாசமானான்.
“ஒரு கெட்ட கனவு திலோ! என் கையைப் பிடிச்சுக்குறியா?” கலக்கமாகக் கேட்ட விக்ரமின் கையை அழுந்தப் பற்றிக்கொண்டாள்.
உணர்ச்சி இல்லையென்றாலும், உணர்ந்தான் அவளது வெப்பத்தை.
“ஒன்னும் இல்ல விக்ரம்!” திலோத்தமா அவனைச் சமன் செய்ய,
“எனக்கு என் தம்பியைப் பார்க்கணும் போல இருக்கு திலோ” என்றான் கலங்கிய விழிகளுடன்.
ஐந்து வருடத்தில், இதுவே முதன்முறை. திலோத்தமா பலதடவை அக்னியிடம் பேசச் சொல்லிக் கூறியும் மறுத்தவன், தற்போது அவனது அரவணைப்பைத் தேடுகிறான் இன்னும் சில மணித் துளிகளில் அவனிடம் இருந்து தர்மஅடி வாங்கப் போவதை அறியாமல்!
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
+1

