Loading

சலனம்-9

விடிந்தும், விடியாததுமாய் எழுந்து, அங்கும் இங்குமாய் நடந்து வரவேற்பறையின் நீள அகலங்களை நிதானமாய் அளந்துக் கொண்டிருந்தேன்.

 

என் கண்கள் அவள் அறைக் கதவைத் தொட்டு தொட்டு மீண்டது. அவள் எப்போது எழுந்து வருவாள்.? என எதிர்பார்த்தபடி, குட்டிப் போட்ட பூனையாய் நடை பயின்றுக் கொண்டிருந்தேன்.

 

எனக்கு அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அவள் என்ன செய்திருக்கப் போகிறாள்? என்ற கேள்வி மூளையைக் குடைந்துக் கொண்டே இருந்தது. நடந்து, நடந்து கால் வலித்ததே ஒழிய, இவள் அறையிலிருந்து வெளியே வரும் வழியைக் காணோம் என்றதும், எனக்குள் எரிச்சல் மூண்டது.

 

பேசாமல் கதவைத் தட்டி அவளிடமே கேட்டு விடலாமா? என்ற எண்ணம் மேலோங்க, அவள் அறையை நோக்கி நான் அடியெடுத்து வைத்த நேரம், சித்தார்த்திடமிருந்நநு வந்த அலைபேசி அழைப்பு என்னைத் தடுத்து நிறுத்தியது.

 

 

“விக்ரம்! எக்ஸ் தளம் பார்த்தியா?” என எடுத்தும் எடுக்காததுமாய் சித்தார்த் கேட்க,

 

“என்னடா, காலையிலேயே கால் பண்ணி, எக்ஸ், ஒய்ன்னு உளறிட்டு இருக்க?” எனனப் பொறுமையில்லாமல் கேட்டேன்.

 

 

“டேய்! ட்விட்டர் தான்டா எக்ஸ் தளம்.. எல்லாத்தையுமே மறந்துடு. சம்யூ ட்வீட் பாரு..!” என அவன் சொன்ன பின்பே, அழைப்பை அவசரமாய் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, அவள் பெயரைத் தேடி, உள் நுழைந்து பார்த்தேன்.

 

 

“This is just a rumor.. He is not a patriarch. He will support me in every moment of my life. So, go ahead with new beginning guys.. Here is my next movie update..!” என்ற அறிவிப்பின் கீழ், அவளின் புதுப் படத்திற்கான போஸ்டரை பதிவேற்றியிருந்தாள். அதுவும் நான் தடுத்து நிறுத்திய அதே படம். இயக்குநர் கூட அதே மகாதேவ் தான். இவளால் எப்படி இது முடிந்தது? இது அத்தனை எளிதான காரியம் இல்லையே? என்ற கேள்விகளோடு நான் நின்றிருக்க,

 

 

“விக்ரம்! இருக்கியா டா? விக்ரம், கேட்குதா? என்னதான்டா பண்ணுற?” அலைபேசி வழியே கேட்ட சித்தார்த்தின் குரலில் நனவிற்கு வந்து,

 

“ம்.. சொல்லுடா! கேட்குது!”எனச் சாதாரணமாய் சொல்ல முயற்சித்தேன்.

 

 

“என்னடா! சாதாரணமா சொல்லுன்னு சொல்றே? இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? நீ பேப்பரில் கொடுத்த நியூஸ் பார்த்து, அந்த மகாதேவ், வேற ஹீரோயினை புக் பண்ணுற அளவுக்குப் போய்ட்டார்.

 

 

நடிக்கிறேன்னு கால்ஷீட் கொடுத்துட்டு, பாதியில் க்விட் பண்ணிட்டீங்கன்னா என்ன செய்றதுன்னு கேட்டுருக்கார். ஆனால், அத்தனையுமே மீறி, இப்போ சம்யூ தான் ஹீரோயினா நடிக்கிறாள்ன்னா.. இது ரொம்பப் பெரிய விஷயம் தான்டா!” என சித்தார்த் சொல்வது புரிந்தாலும் கூட, என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

 

 

நான் எதிலோ தோற்றுவிட்டதைப் போல் உணர்ந்தேன். ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

 

 

“இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை டா! யாராவது இவளுக்காக ரெக்கமெண்ட் பண்ணியிருப்பாங்க! இன்டஸ்ட்ரி பத்தி உனக்குத் தெரியாதா? இங்கே காம்ப்ளிமெண்ட்ஸ் இல்லாமல் எதுவும் இருக்காதே!” என வாய்க் கூசாமல் சொன்னேன்.

 

 

“ஏய்.. லூசா டா நீ? சம்யூ உன் வொய்ஃப் டா! அவளைப் போய் இப்படி சொல்றே? என்னைப் பொருத்தவரை சம்யூ இதற்கு தகுதியானவள் தான். அவள்கிட்டே, அதற்கான திறமையும் உழைப்பும் இருக்கு.!” என சித்தார்த் பேசுவதைப் பொறுக்க முடியாமல், அலைபேசியின் இணைப்பைத் துண்டித்துவிட்டு திரும்ப, சுவற்றில் சாய்ந்தபடியே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. வழக்கத்தை விட இன்று கூடுதல் அழகோடு தெரிந்தாள்.

 

 

‘இந்த அழகில் ஈர்க்கப்பட்டு தானே ஏமாந்து போனேன்?’ என் மனம் என்னைக் கேள்வி கேட்டது. ஆனால் வழக்கம் போலவே என்னிடம் எந்த பதிலும் இல்லை. சுவரோரமாய் நின்று, என்னை நக்கலாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர முயன்றேன்.

 

 

“விஷ் பண்ண மாட்டியா விக்ரம்? ஜஸ்ட் ஒரு வாழ்த்து சொல்லக் கூட, உன் ஈகோ தடுக்குதா?” என்ற கேள்வி சம்யூவிடமிருந்து வந்தது.

 

“எனக்குப் பிடிக்காததை மட்டும் தானே செய்ற? இதுக்கு வாழ்த்து ஒரு கேடா?!” அவளுக்கு வலிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன்.

 

“நீ இப்படியெல்லாம் சொல்லிட்டா, நான் அமைதியாகிடுவேன்னு நினைக்கிறியா விக்ரம்? நீ உனக்கு பிடிச்சதை செய்யலாம்.. நான் எனக்குப் பிடிச்சதை செய்யக் கூடாதா?!” அவள் கேள்வியிலிருந்த அழுத்தம் எனக்குப் புரிந்தது.

 

 

“நான் சம்பாதிக்கிறேனே அது பத்தாதா உனக்கு? நீ சம்பாதிச்சு என்ன பண்ண போற? ஃபேமிலின்னு வரும் போது, சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் ஆகனும். இதெல்லாம் உனக்கு எங்கே புரியப் போகுது?” என் குரலில் கொஞ்சம் அதிகமாகவே நக்கல் தொனித்தது.

 

“நீ விட்டுக்கொடு விக்ரம்! நீயும் நம்மக் குடும்பத்தில் ஓர் அங்கம் தானே?” குறி தாக்கும் அம்பைப் போல் அவள் கேள்வி என்னைக் குறிபார்த்து தைத்தது.

 

“இந்த சினிமாவே சீஸனல் ஜாப் மாதிரி தான். இதையும் விட்டுட்டு சும்மா உட்கார சொல்றியா?!” ஆழ்ந்த காற்றழுத்தம், புயலாய் உருமாறக் காத்திருப்பதைப் போல், நான் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த பொறுமையும், கோபமாய் உருக்கொள்ளக் காத்திருந்தது.

 

“நான் உன்னைப் பார்த்துக்கிறேன் விக்ரம்! என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? உன்னை விட என்னால் அதிகமாக சம்பாதிக்க முடியும் விக்ரம்! நீ ஜாலியாய் காலை ஆட்டிட்டு வீட்டில் இருந்தால் போதும், மத்ததெல்லாம் நானே பார்த்துக்கிறேன். உனக்கு எந்தக் கவலையும் வேண்டாம். ஜஸ்ட் சாப்பிடு! தூங்கு.. என்ஜாய் யுவர் லைஃப் விக்ரம்.!”

 

“போதும்.. நிறுத்துடி! டைரக்டர் ஆகறது என்னோட கனவுன்னு உனக்கு தெரியாதா? எவ்வளவு நக்கல் உன் குரலில்..? என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது?” அதீத கோபத்தோடு என் குரல் உயர்ந்தது.

 

 

“என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? எனக்கெல்லாம் கனவுன்னு ஒண்ணு இருக்கவே கூடாதா? நீ என்ன நினைச்சுட்டு இருக்கே? பணத்துக்காக நான் நடிக்க வந்துட்டேன்னு நினைச்சுட்டு இருக்கியா? எனக்குப் பிடிச்சு ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் இங்கே வந்த பிறகு தான் தெரிஞ்சது.. இங்கே ஏகப்பட்ட அரசியல் இருக்குன்னு.. அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காதுன்னு புரிஞ்சுது. அதனால் தான், நீ கேட்டதுக்கு நான் சம்மதிச்சேன். ஆனால் உனக்கு என்னை இப்போ வரைக்குமே புரியலையே விக்ரம்! பணத்துக்காக நான் உன்னோட இருக்கேன்னு நினைக்கிறியா?” எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காத முகத்துடன் அவள் கேட்டது, என் கோபத்தைத் தூண்டி விட்டது.

 

“என்னமோ தியாகி மாதிரி பேசற சம்யூ? உன் அலங்காரத்திற்கும், அழகை பராமரிக்கிறதுக்கும் இலட்சக்கணக்கில் செலவாகுமே.. நீ பணத்திற்காக நடிக்க வரலைன்னு சொல்ற, அதை நான் நம்பணும்? உனக்குப் பிடிச்சதை செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்ட தானே? உன் வேலையைப் போய் பாரு.. ஆனால் ஒண்ணு, உன்னால் எப்போவும் ஜெய்க்க முடியாது.!” ஆண் எனும் திமிரும், அகம்பாவமும் கலந்தே சொன்னேன் நான்.

 

 

“நான் உன்னை ஜெய்க்கனும்ன்னு நினைக்கலை விக்ரம். தொழிலில் எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். அதை பர்ஸ்னல் லைஃப்க்குள்ளே கொண்டு வராதே. இங்கே உன்னை நான் ஜெய்க்கணும், என்னை நீ ஜெய்க்கணும்ங்கிறது இல்லை. ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்க்கை முழுசும் பயணிக்கணும். அது தான் முக்கியம். உண்மையான காதல் என் மேல் இருந்திருந்தால், கண்டிப்பா நீ என்னோட வெற்றியில் சந்தோஷப்பட்டிருப்ப விக்ரம். உனக்கு என் மேல் இருக்கிறது காதல் இல்லை. ஜஸ்ட் லஸ்ட்.. அவ்வளவு தான். இதை காதல்ன்னு நம்பி உன்னைக் கல்யாணம் பண்ணிட்டேனோன்னு தோணுது..!” அவள் குரலில் மெல்லிய வருத்தம் இழையோடியதை என்னால் உணர முடிந்தது. ஆனால், அதை உணர்ந்தாலும் கூட, அவள் கடைசியாய் சொன்ன லஸ்ட் என்ற வார்த்தை என் கண்ணையும், கருத்தையும் மறைத்திருந்தது.

 

 

“ஆமா.. உண்மை தான்..! எனக்கு உன்மேல் இருந்தது வெறும் லஸ்ட் மட்டும் தான்! போதுமா? இதைக் கேட்கதானே ஆசைப்பட்டே? உன் ஆசைப்படியே சொல்லிட்டேன் போதுமா?” எனக் கேட்டபடியே விறுவிறுவென வெளியேறிவிட்டேன்.

 

 

அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், யானையின் பாதம் தைத்த பெருநெருஞ்சியாய் என் மனதைத் தைக்கிறது. இவள் கேள்விகளுக்கு பதில் சொல்வதையே முற்றிலும் வெறுக்கிறேன் நான். என்னால் இத்தனை தூரம் வளர்ந்து நிற்பவள், என்னையே எதிர்த்துக் கேள்விக் கேட்டால், கோபம் வரத்தானே செய்யும்? நான் எதை வேண்டாமெனத் தடுக்கிறோனோ, அதையே வேண்டுமென அடம் பிடிக்கிறாள்.. வர வர வீடு, எனக்குப் பிடிக்காத இடமாய் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது.

 

*******

 

இப்படியே சில மாதங்கள் கடந்திருக்க, நான் எந்தப் படத்தை வேண்டாமெனச் சொன்னேனோ, அந்தத் திரைப்படமே அவளுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தது. தமிழ்நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளெல்லாம் அவளுடனான நேர்காணலை போட்டிப் போட்டு ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இந்தப் படத்தை மிஸ் செய்திருந்தால், மிகப் பெரிய வாய்ப்பை இழந்திருப்பேன். என லிப்ஸ்ட்டிக் இதழ்கள் பளபளக்கப் பிதற்றிக் கொண்டிருந்தாள்.

 

 

எனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாய் இருந்த என் கணவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். என கடைசியாய் அவள் சொன்ன வரிகளில் என் மனம் தேங்கி நின்றது.

 

‘நான் கணவன் என அவளுக்கு நினைவு இருக்கிறதா? போனால் போகிறதெனக் கடைசியாய் நன்றி சொல்லியிருக்கிறாள்.. எவ்வளவு பெரிய மனது இவளுக்கு? கடந்த நான்கு மாதமாய், அவள் ஒரு அறையில், நான் ஒரு அறையில் என்றுதான் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. இதில் நான் அவள் கணவன் என நினைவிருந்தால் அதிசயம் தான்.’ என என் மனம் கேள்விக் கேட்டது.
நான் எனக்குள் புலம்பிக் கொண்டு, தொலைக்காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, அவள் உள்ளே வரும் அரவம் கேட்டதும், சேனலை மாற்றிவிட்டு, நீ இல்லாமல் நான் ஒன்றும் கஷ்டப்படவில்லை எனச் சாதாரணமாய்க் காட்டிக் கொள்ள முயன்றேன்.

 

 

ஆனால், என் முகத்தில் இருந்தாலும், இந்தக் கண்கள் இரண்டும், என் அனுமதியின்றியே அவளைத் தான் பார்த்தது. என் உடலும் மனமும், என் அனுமதியின்றியே அவளை நோக்கி ஈர்க்கப்படுவதை உணர்ந்தேன்.

 

 

என்னதான் வெளியே நான் கோபமாகக் காட்டிக் கொண்டாலும், எங்கள் இருவருக்கிடையேயான சில மாதப் பிரிவு, அவள் மீதான என் கோபத்தை நீர்த்துப் போகச் செய்திருந்தது. ஆனால் அவளிடம், நேரடியாய் சென்று பேசவும் தயக்கமாக இருந்தது.

 

 

“சம்யூ!” மெதுவாக அழைத்துப் பார்த்தேன். அவள் தலை என்னை நோக்கித் திரும்பவே இல்லை.

 

 

“கங்ராஜூலேஷன்ஸ் டி!” என நான் சொன்ன மறுநொடி, அவள் தலை என்னை நோக்கி மெதுவாய் திரும்பியது. அவள் இதழ்களில் புன்னகை நிறைந்தது.

 

 

“நான் பேசலைன்னா நீயா வந்து பேச மாட்டியா டா இடியட். என்கிட்டே இந்த ஒருவார்த்தையைச் சொல்ல உனக்கு நாலு மாசம் தேவைப்பட்டுச்சா.? சண்டையாவது போட்டுடு டா! இப்படிப் பேசாமல் இருக்காதே! அப்படி என்னடா கோபம் என் மேலே? இடியட்! நான் இல்லாமல் உன்னால் எப்படி இருக்க முடிஞ்சுது? வேற எவளுக்காவது ரூட் விடறியா? இடியட்..! இடியட்..!” உரிமையாய் எப்போதும் போல், என் சட்டைக்காலரைப் பற்றி சண்டைபோட்டவள், என் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டாள்.

 

 

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நான் மட்டும் தான் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.. என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அவளும் என்னைத் தேடியிருக்கிறாள் என்ற உணர்வே அலாதியாய் இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு, என் முகம் புன்னகையில் நிறைந்தது.

 

 

“ஏன்டா என்கிட்டே பேசவே இல்லை? என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியா?” தலையைத் தூக்கி என்னைப் பார்த்து ஏக்கம் நிறைந்தக் கண்களுடன் கேட்டாள்.

 

 

“நீ தான்டி என்கிட்டே சண்டைப் போட்ட நான் இல்லை. நீ லஸ்ட்ன்னு சொன்னால், எனக்குக் கோபம் வராதா?!” அப்போதும் கூட, அவளிடம் மன்னிப்பு கேட்க எனக்கு மனம் வரவில்லை.

 

 

“நான் லஸ்ட்ன்னு சொன்னால், ஆமான்னு சொல்லிட்டு அப்படியே விட்டுடுவியா? நீ எப்படி லஸ்ட்ன்னு சொல்லலாம்ன்னு சண்டை போட்டிருக்கணும். என்மேல் உனக்கு இருப்பது காதல்தான்னு எனக்குப் புரியவச்சிருக்கணும். இதெல்லாம் எதையும் செய்யாமல் சண்டை மட்டும் போட்டுட்டு மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கோ! எனக்கு உன்னை விட்டால் யாரு இருக்கா?” என அவள் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. உண்மையைச் சொன்னால், பதில் சொல்லத் தெரியவில்லை.

 

 

“பதில் சொல்லேன்டா.. கல்லு மாதிரி நிற்கிறே? நானாக வந்து பேசினால் கூட, பேச மாட்டியா? போடா!” என அவள் என்னைத் தள்ளிவிட்டு நகர முயல, அவள் கரம் பிடித்து இழுத்து, என்னோடு சேர்த்தணைத்து, அவள் இதழ்களில் என் உதடுகளைப் பதித்திருந்தேன்.

 

 

“மிஸ் யூ பேட்லி சம்யூ!” என்ற ஒற்றைப் பதிலில், அவள் அனைத்தையும் மறந்து, என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

 

இத்தனை நாளாய் நடந்துக் கொண்டிருந்த மௌன யுத்தம், முத்த யுத்ததில் முடிவுக்கு வந்திருந்தது. அவளின் கதகதப்பான ஸ்பரிசம், அணைப்பு, அத்தனையும், வெகுநாட்களுக்குப் பின் உணர்ந்ததில், என்னை அறியாமலே, அவளை இறுக்கமாய் அணைத்திருந்தேன். ஏதோவொரு நிம்மதி எனக்குள் ஊடுருவியது. ஆனால், அதன் பெயர் காதல் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை.

 

 

எங்கள் அணைப்பின் நேரம் நீண்டுக் கொண்டே இருந்தது. நானும் விலகவில்லை. அவளும், விலக முயற்சிக்கவில்லை. ஏதோவொரு புரியாத உணர்வில் கட்டுண்டு, கண்மூடி நின்றிருந்தோம். எங்கள் இருவரின் ஊடலைத் தீர்க்கக் காமம் தேவைப்படவில்லை. இறுக்கமான, அழுத்தமான, கதகதப்பான ஒற்றை அணைப்பே போதுமானதாக இருந்தது.

 

 

ஆனால் நான் தான் இந்தவுணர்வு காதல்தான் என்பதை அறியாத முட்டாளாய் இருந்திருக்கிறேன். நொடிகள், நிமிஷங்களாகி, நாழிகையாய் மாறும் முன்னே,

 

“எங்கேயாவது போய்ட்டு வரலாமா டா?” தலையை நிமிர்த்தாமல், கண்களைத் திறவாமல், மார்பில் சாய்ந்தபடியே கேட்டாள் சம்யுக்தா.

 

 

“ம்ம்ம்!” என ஒற்றை எழுத்திற்கு அர்த்தம் தர முயன்றேன்.

 

“எங்கே போகலாம்?”அடுத்த கேள்வி அவளிடமிருந்து.

 

 

“தெரியலை சம்யூ! எனக்கு இப்படியே இருந்துக்கலாம்ன்னு தோணுது.!” நிஜமாகவே மனதிலிருந்து சொல்லியிருப்பேனோ? என்னவோ?

 

 

“இடியட்.. பசிக்குதுடா!” என அவள் சொல்ல, அவள் சொல்லும் இடியட் என்ற வார்த்தைக் கூட எனக்கு இனிமையாய் இருந்தது. சில மாத பிரிவு இத்தனை இனிமைகளைப் பரிசளிக்கும் என்பது எனக்குத் தெரியாது.

 

 

அவள் மீதிருந்த கோபம் எங்கே சென்றது என்பது எனக்கே தெரியவில்லை. தண்ணீரில் பதித்த பாதத் தடம் போல், அவள் மீதானக் கோபம் காணாமல் போயிருந்தது.

 

 

“நீ எங்கே கூட்டிட்டு போனாலும், எனக்கு ஓகே சம்யூ!” என நான் சொல்ல,

 

“நான் தான் ட்ரைவ் பண்ணுவேன்.!” எனச் சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழி வீச்சில் தலையாட்டி பொம்மையாய் தலையாட்டி வைத்தேன்.

Click on a star to rate it!

Rating 3.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்