10-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading


அத்தியாயம் 10

வேகமாக மாடியிலிருந்து இறங்கி வந்தவன் தன் தந்தையின் அருகில் சென்று,
“அடுத்ததா வரும் முதல் முகூர்த்தத்திலேயே எங்க கல்யாணத்தை முடிவு பண்ணிடுங்கப்பா.” எனக் கூற அதிர்வாக அவனை நிமிர்ந்து பார்த்தார் பிரபு.
“என்னப்பா சொல்ற.? இப்பதான் தேதி எல்லாம் முடிவு பண்ணி மூணு மாசத்திற்கு அப்புறம் வரும் முகூர்த்தத்தில் கல்யாணம்னு பேசிட்டோமே. அம்மா கூட எந்த மண்டபம் பிடிக்கணும்னு முடிவு பண்ணி அத பத்தி பேசிக்கிட்டு இருந்தா.” என மகனிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து மற்றவர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்தார்கள்.

ரகுவின் முகம் இருக்கத்துடன் காணப்பட்டது. மற்றவர்களின் முகங்களும் சரி இல்லை. ஏதோ நடந்திருப்பதை யோசித்த பிரபு.
“நீ சொல்ற மாதிரி வர முகூர்த்தத்திலேயே கல்யாணம் வைக்கணும்னா அதுக்கு இன்னும் இருபது நாள் தானேப்பா இருக்கு.” எனக் கேட்க
“பரவால்லப்பா. கல்யாணம் நம்ம செலவு தானே. நாம பாத்துக்கலாம்.”என்று மகன் கூறுவதை கேட்டபடி யோசனையாக ரகுபதியை நிமிர்ந்து பார்க்க அவர் ஏதும் கூறுவதற்கு முன்பாகவே கோகிலா,
“கல்யாண செலவு நீங்கச் செய்றீங்க. இருந்தாலும் மற்ற செலவெல்லாம் எங்களுக்கு இருக்கு இல்ல தம்பி. எல்லாமே உடனே எங்களால் செய்ய முடியாது.”
“உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்க. போதும். என் மனைவிக்கு என்ன செய்யணுமோ அதை நான் செய்துகிறேன்.” என்றான் சஞ்சய் உறுதியாக.
“சரி, சரி வாங்க எல்லோரும் முதல்ல சாப்பிடலாம். அதுக்கப்புறம் என்ன.? ஏதுன்னு.? பொறுமையா பேசலாம்.” என அனுபமா, சூழ்நிலையைச் சகஜமாக்க  அனைவரையும் உணவு உண்ண அழைக்க. இதற்கு மேல் எதுவும் பேசிப் பிரச்சனையாகி விடாமல் இருப்பதற்கு ரகுபதியும் முன் சென்றார்.அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் சென்றனர்.

அனைவரையும் அமர வைத்து. முகம் மாறாமல் வந்தவர்கள் திருப்தியாகச் சாப்பிடும் வரை பார்த்து, பார்த்துப் பரிமாறினார்கள் சஞ்சையும்,  அனுபமாவும்.
“நீங்களும் எங்க கூட உட்காருங்க சஞ்சய்.” என வசுமதியின்  கணவன் அழைக்க
“இல்ல, நீங்க எல்லாம் முதல்ல சாப்பிடுங்க. நான் அம்மா கூடச் சாப்பிடுகிறேன்.” என்று இன் முகத்துடனேயே அவனிடம் மறுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் வேண்டியதைக் கேட்டு உணவு  பரிமாறினான்.
ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தாலும் உணவின் சுவையில் அனைவரும் திருப்தியாகவே உண்டு எழுந்தனர்.

அவர்களுடனே பிரபுவும் உண்டிருக்க, உண்டு முடித்தவர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இனிப்பு  சோம்பை கொடுத்த சஞ்சய். வசுமதி கணவனின் அருகில் அமர்ந்து கொண்டான். மறுபடியும் பேச்சு ஆரம்பிக்க. மகன் எதற்காகவோ சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட பிரபுவும்,

“சொல்லு சஞ்சய் எதுக்கு முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம் வைக்கணும்னு நினைக்கிறே.?” எனக் கேட்க
“நினைக்கிறதுக்கு பெருசா ஒன்னும் இல்லப்பா. சீக்கிரம் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு தோனிச்சு  அதுதான்.” என்றான் அவனும். ஏதோ சம்பவம் நடந்திருப்பதை புரிந்து கொண்ட பிரபுவும்
“நீங்க என்ன சொல்றீங்க ரகு.?” எனப் பெண்ணின் தந்தையிடம் கேட்கத் தங்களோடு இருந்து பெண் சிரமப்படுவதற்கு இவர்கள் வீட்டில் இருந்தால் மகள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பாள். என்பதை நினைவில் கொண்டவராக.

“மாப்பிள்ளை சொல்ற மாதிரி செய்யலாம் சம்மந்தி. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றார் அவரும். அதைக் கேட்ட கோகிலா
“என்ன பிரச்சனை இல்லைன்னு சொல்றீங்க.? கொஞ்சம் நகை வாங்கணும். துணிமணி எடுக்கணும். அதுக்கு எவ்ளோ செலவு இருக்கு. உடனே நாம பணத்துக்கு எங்க போறது.?” என்றார் எப்படியும் கல்யாண செலவு அவர்கள்தான் செய்கிறார்கள். அதில் மேலும் இவை அனைத்தையும் குறைத்து விட முடிவு செய்தவராக. தந்திரமாக அவர் கூற, அவரின் எண்ணம் புரிந்தவராக அவரை முறைத்துப் பார்த்த ரகு.

“மூணு மாசமா இருந்தாலும் நான் தான் செய்யணும். இருபது நாளா இருந்தாலும் நான் தான் செய்யணும். என்ன செய்யணும்னு  எனக்குத் தெரியும். என் பொண்ணுக்கு நான் செய்வேன்.” என்றவர்
“அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் பிரபு.” என அவரிடம் சம்மதமாகக் கூறிவிட்டு
“அப்ப, நாங்க கிளம்புறோம்.” என விடை பெற்று எழுந்தார்கள் அனைவரும்.

“திருமணத்தைச் சீக்கிரமா வைக்கச் சொல்லி உங்களை நெருக்குறேன்ன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க. மாமா” என்று கூறிய சஞ்சய்யின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரகு
“என் பொண்ணு அங்க இருக்கிறத விட இங்க ரொம்ப சந்தோஷமா இருப்பான்னு நான் நம்புறேன். அதனால  சீக்கிரம் கல்யாணம் வைக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் மாப்பிள்ளை.” என்றவர் பிடித்திருந்த அவன் கைகளை லேசாக அழுத்திவிட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து அனைவருமே விடை பெற்று செல்ல. அவர்களை வாசல்வரை சென்று வழி அனுப்பி வைத்தார்கள் பிரபுவும், அனுபமாவும். வீட்டிற்குள் வந்தவர்கள் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மகனை யோசனையாகப் பார்க்க
“சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்லப்பா. சீக்கிரம் கல்யாணம் முடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன். வேற ஒன்னும் கேட்காதீங்க என்கிட்ட.” என்றபடி தன் தட்டில் பிரியாணியை வைத்தவன், “அம்மா வாங்க. சூடா இருக்கும்போதே சாப்பிடலாம்.” எனத் தாயையும் அழைத்துக் கொண்டு வேறு எந்தப் பேச்சும் பேசாமல் உணவில் கவனத்தை செலுத்தினான்.

வீட்டுக்கு வரும் வரையில் எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை ரகுபதி. அவரின் அமைதி சற்று பயத்தை தான் கொடுத்தது வசந்திக்கு. ஏனோ சிறு வயதிலிருந்து சற்று பயம்தான் தந்தையிடம் அவளுக்கு. கோகிலாவிற்கும் பயம் இருந்தாலும் அதையும் மீறி என்ன நடந்துவிடும் பார்த்துக் கொள்ளலாம் என்று தெனாவட்டும் அதிகமாகவே இருந்தது.

வசுமதிக்கு தந்தை எவ்வளவு தூரம் அங்கு நடந்ததை கேட்டார் என்பது தெரியாமல், வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று திடமும், அம்மா இருக்கிறார்கள் என்ற தைரியமும்.அதற்கு மேல் திருமணம் ஆன தன்னை தந்தை எதுவும் கூற மாட்டார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அமைதியாக வீட்டிற்கு வந்தவர்களைப் பார்த்த வசந்தராவிற்கு ஏனோ மனதில் பயம் வந்து அழுத்தியது.ஏதேனும் விரும்பத் தகாத அசம்பாவிதம் அங்கு நிகழ்ந்து விட்டதோ என மனம் படப்படவென அடித்துக் கொண்டது. அனைவரின் அமைதியையும் பார்த்துத் தனக்குள் யோசனையில் உழன்றவள். வழமைபோலத் தந்தைக்கு குடிக்க தண்ணீரை எடுத்துச் சென்றவள், அவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாக அவரின் அருகிலேயே நின்றிருந்தாள். தண்ணீரை குடித்து  முடித்து டம்ளரை அவளிடம் கொடுத்தவர்.

“உன்னோட பிரேஸ்லெட் எங்கம்மா.?”என்று சாதாரணம் போலக் கேட்க, வேகமாக அவளின் பார்வை தங்கையைச் சென்று  மீண்டது அவள் கைகளையும் ஆராய்ந்தது.அது வெறுமையாக இருக்க பயத்தோடு தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் பதில் கூறுவதற்கு முன்பாகவே
“ஏய்.! வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே.? போகும்போது வெறும் கையா இருக்குன்னு நீ தானே உன் கையில் இருந்த பிரேஸ்லெட்ட கழட்டி வசந்தி கையில போட்டு விட்டே.” என்று அவளை முறைத்தபடி கோகிலா கூற.

“அவ பதில் சொல்றதுக்கு முன்னாடி நீயே ஏன் ஆரம்பிக்கிற, இப்படி  சொல்லனும்னு அவளுக்கு ஜாட காட்டுறியா.?” என்று மனைவியை அறிந்தவராக ரகுபதி குரல் உயர்த்தாமல் கோபத்துடன் கேட்க. “அய்யய்யோ.! என்ன ஆச்சு உங்களுக்கு.? ஏன் இப்படி புதுசு புதுசா நடந்துக்குறீங்க.?”
“இப்படி நான் புதுசா நடந்துக்கிற மாதிரி நீங்கத் தான் என்னை மாத்துறீங்க. அமைதியா இருந்த என்னுடைய பொறுமையும் ஒருநாள் எல்லை கடந்து போகும் என்பதற்கு இது தான் ஆரம்பம்.” என்றவரின் பேச்சு, இதுவரை தன்னிடம் கோபத்தை காட்டாத கணவர், எப்போது வசந்தராவிற்கு திருமணம் பேச ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்தே அவரின் அதிகப்படியான பேச்சையும் தன் மேலான கோபத்தையும் பார்த்தவருக்கு கட்டுக்கடங்காமல் ஆத்திரம் எழ மகளின் அருகில் சென்றவர்.

“உன்கிட்ட தான் டி கேக்குறேன்.? பதில் சொல்லு. கல்லூலி மங்கன் மாதிரி நின்னுட்டு இருக்கே. நீயே தான அவளுக்குப் போட்டுக்க கொடுத்த.” என்றவரின் அரட்டலான பேச்சில் அதிர்ந்தவள்.
“ஆமா, ஆமா நானே தான் கொடுத்தேன்.”  என்றாள் வேக வேகமாக
“போதுமா கேட்டீங்களா.? உங்க செல்ல மக சொன்னத. என்னமோ அவ கையில இருந்து கழட்டி போட்டுக்கிட்ட மாதிரி  அந்தக் குதி குதிக்கிறீங்க. அந்தப் பையனும் அப்படி பேசுறாரு வெடுக்குன்னு. கொடுத்தத வெக்கமே இல்லாம அவரே எடுத்து வச்சுக்கிட்டாரு. இவங்க எல்லாம் நல்ல குடும்பமா.? அந்த வீட்டுக்கா உங்க பொண்ணு கட்டி கொடுத்து அனுப்ப போறீங்க.? அதுவும்  இருபது நாள்ல.? தய்ய தக்கன்னு  குதிச்சுகிட்டு. போங்க, போங்க அவங்கள நம்பி கட்டி கொடுக்கப் போறீங்களா.? நல்ல பெரிய ஆப்பா வைப்பாரு உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் சேர்த்து கட்டி வாங்குங்க. இருபது நாள்ல இவ கல்யாணத்த எப்படி நடத்துறீங்கன்னு நானும் பாக்குறேன்.”என்றார். சேலை முந்தானையை உதறி இடுப்பில் சொருகியவாறு, வேக மூச்சுகளை எடுத்துக்கொண்டே.

அவர் சொன்ன தொணியிலேயே என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்திருந்தார் ரகுபதி.
அமர்ந்திருந்தவர் விழியை மட்டும் நகர்த்தி சின்ன மகளைப் பார்த்தவர் “அப்படி என்ன உனக்கு அடுத்தவங்க பொருள் மேல அப்படியொரு ஆசை.?” என்று கோபத்தை உள்ளடக்கிய குரலில் கேட்க. தந்தையின் கோபத்தில் நடுங்கி விட்டாள் வசந்தி. பயத்தில் சற்று தொலைவில் இருந்த அன்னையின் பின்னே வேகமாகச் சென்று மறைந்து நின்றபடி அவரின் தோள்களில் முகத்தைப் புதைத்துக் கொள்ள தாங்க முடியவில்லை அவளுக்கும், பெரியவளுக்கும் மட்டுமே தாயாக இருக்கும் அந்தப் பெண்மணிக்கு.

“எதுக்கு இப்ப அவகிட்ட கோவத்தை காட்டுறீங்க. உங்க செல்ல மக தான் என்ன நடந்தது என்று சொன்னாளே. அவளேத் தந்ததாகத் தானே  சொன்னா. இவளா கேட்டா.?”
“அவ சொல்லல
நீயே என்ன நடந்ததுன்னு சொல்லிட்டே.” என்றவரின் பதிலில். “சரி, இப்ப என்னதான் செய்யணும்னு சொல்றீங்க.? முடிஞ்சு போன விஷயத்தைப் பற்றி ஏன் பேசுறீங்க.?” “முடிஞ்சு போன விஷயமா.? இதனால் எவ்வளவு  தலைக்குனிவு ஆச்சி. உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்ல.”
“வெக்கமா.? எங்களுக்கேன் வெட்கம் ஆகுது.? வெட்கப்படுற மாதிரி நாங்க எதுவும் செய்யல. அந்தப் பையன் தான் நடந்துக்கிட்டான். இப்ப நீங்களும் வெட்கப்பட்டு, அசிங்கப்பட்டு நிக்க போறீங்க. மகளுக்கு இருபது நாள்ல கல்யாணத்தை முடிவு பண்ணிட்டு வந்து இருக்கீங்களே பணத்துக்கு எங்க போவீங்க.? பிச்சைதான் எடுக்கணும்.” என்றவரின் பேச்சு எல்லை மீற, தன்னையும் மீறி வேகமாக அறைந்திருந்தார் கோகிலாவை.

அவரின் ஒரு அறையில் சுழன்று அங்கு இருந்த சோபாவில் சென்று அமர்ந்தவர். அதிர்வோடு கைகளால் கன்னத்தைப் பொத்திக் கொண்டு, கண்களில் பயத்தோடு கணவரை ஏறிட்டு பார்க்க. இரண்டாம் முறையாக இது நடக்கிறது அவருக்கு.
“யார பாத்துடி பிச்சை எடுப்பேன்னு சொல்ற. என் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிற தெம்பு எனக்கு இருக்கு. அப்படியே பிச்சை எடுக்கிற நிலைமை வந்தாலும் என் மகளுக்காக நான் எடுப்பேன். இனி ஒரு வார்த்தை நீயோ உன்னோட ரெண்டு மகள்களோ பேசினாலோ, இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்துற மாதிரி ஏதாவது வேலை செஞ்சாலும் உன் சின்ன மகளோட எந்த நல்ல விஷயத்துக்கும் நான் வந்து நிக்க மாட்டேன். நீ சொல்ற மாதிரி என் செல்ல மகளுடைய கல்யாணம் முடிஞ்சதோடு விருப்ப ஓய்வு வாங்கிகிட்டு காசி, ராமேஸ்வரம்னு  கிளம்பிடுவேன். அதுக்கப்புறம் நீ சொன்ன மாதிரி நீங்கத் தான் பிச்சை எடுக்கணும்.” என்றவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் அறைக்குள் வேகமாகச் சென்று மறைந்தார்.

நல்ல வேலையாக அடி வாங்கும்போது வீட்டு மாப்பிள்ளை அங்கு இல்லை. இவர்களை வாசலோடு விட்டுவிட்டு அவன் வெளியில் சென்று இருந்தான். அடி வாங்கிய அதிர்ச்சி இருந்தாலும் மருமகன் முன் நடக்கவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது கோகிலாவிற்கு. அதோடு கணவன் சொல்லிச் சென்ற விஷயங்களை யோசித்தவர் இனி எதிலும் தலையிடுவதில்லை என்று முடிவு செய்து கொண்டார். வசுந்தரா திருமணம் முடித்துச் செல்வதில் அவருக்குமே விருப்பம் இருந்தது. என்னதான் பிடிக்காத மகளாக இருந்தாலும், தான் வயிற்றில் சுமந்து பெற்ற மகள் என்ற  பாசம் சிறிதளவு இருந்தது.

செலவுகளை எப்படி சமாளிக் போகிறார்.? தன் செல்ல மகளுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறார்.? கணவர் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்க. வரும் நாட்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார் கோகிலா.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. கோகிலா தாய் என்று சொல்வதற்கு தகுதி இல்லாதவர்