11-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 11

வீட்டில் நடந்த நிகழ்வுகளில் அரண்டு போய்ச் சமையலறையில் நின்றிருந்தாள் வசுந்தரா. எதற்குச் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதே புரியாத நிலை அவளுக்கு. தனக்கு பரிசளித்த பிரேஸ்லெட்  வைத்து அங்கு ஏதோ பிரச்சனை நடந்து இருப்பதாக யூகிக்க முடிந்தது அவளால். ஆனால் அது என்ன பிரச்சனை.? என்ன மாதிரியான விபரீதங்களைக் கொண்டது என்பது தெரியாமல் மனம் பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது. அன்னையை அடிக்கும் அளவுக்குத் தந்தை கோபம் கொண்டதும் இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் மனம் பதை பதைத்து நின்று கொண்டிருந்தவளுக்கு தாய் கூறிய  இருபது நாளில் திருமணம் என்பது யோசனையைக் கொடுத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் தனக்கு திருமணமா என்ற அதிர்ச்சி இருந்தாலும் தனக்கான வாழ்வு, தன்னை விரும்பி மனம் முடிக்க நினைக்கும் அவன். சிறிது நேரமே அருகில் இருந்தாலும் அவரின் பாசத்தை தனக்கு உணர வைத்த அவனின் அன்னை. அவர்களின் சிறு குடும்பத்தில் இனி தானும் ஒருவள் என்பதை நினைக்கும் போதே, மனம் முழுவதும் மகிழ்ச்சி அலைகள் படர்வதை தவிர்க்க முடியவில்லை. வளமை போல இரவு உணவாகச் சப்பாத்தியும் பன்னீர் கிரேவியும் செய்தவள் அனைத்தையும் உணவு மேஜையில் அடுக்கி வைத்து விட்டு உணவு உண்ண அனைவரையும் அழைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள் சாப்பிடுவதற்கு. வெளியே சென்று இருந்த வசுமதியின் கணவனும் திரும்பி வந்து இருக்க, யாரும் எதுவும் பேசாமல் அவரவர்களுக்குத் தேவையானதை எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள். உண்டு முடித்து எழுந்த ரகுபதி மகளைப் பார்த்தவர்,  “வருகிற இருபத்து நான்காம் தேதி உனக்குத் திருமணம் செய்ய முடிவு செஞ்சிருக்கோம் மா, உனக்குச் சம்மதம் தானே.?” என்று கேட்ட தந்தையை பார்த்தவள் சிறிது அதிர்வு இருந்தாலும் சம்மதமாகத் தலையசைத்தாள். “அவ என்னைக்கு மாமா உங்க பேச்சை மீறி இருக்கா.” எனக் கேட்ட கணவனின் கேள்வியில் “ம்ம்க்கும்.” என்று உதட்டைச் சுழித்த வசுமதி, “சீக்கிரம் சாப்பிடுங்க. வீட்டுக்குக் கிளம்பனும். அப்பறம் உங்க அம்மா ஏன் இவ்வளவு நேரம்னு அதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கப் போறாங்க.” என்றவள் உணவில் கவனமாக. “எங்க அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்.”என்று மனைவிக்குப் பதில் அளித்தவன். வசுந்தராவை நோக்கி. “வாழ்த்துக்கள் மா.”என்றான் புன்னகையுடன். அவளும் அதே புன்னகையோடு தலையசைத்து ஏற்றுக் கொண்டாள் அவ்வாழ்த்தை. மறுநாள் காலை, உணவு வேலை முடிந்த பின்பு மகளை ஏறிட்டு பார்த்த ரகுபதி, அவள் கிளம்பி தயாராக நிற்பதை பார்த்து, “என்னமா வேலைக்குப் போகப் போறியா.?”என்றவரின் கேள்விக்கு “ஆமாம் பா.” என்றாள் அவளும். ஏன் இந்தக் கேள்வி என்ற யோசனையுடன். “ஓஹ்.! நேத்தே சொல்லணும் நினைச்சேன். கல்யாணத்தக் கிட்ட வச்சுக்கிட்டு வேலைக்குப் போறது நல்லா இருக்காது. அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் போயிட்டு வந்துடு, நாளிலிருந்து வர மாட்டேன்னு அவங்களுக்கு சொல்லிடு, அப்படியே உன் திருமண தேதியையும் சொல்லிட்டு, அப்பா வந்து பத்திரிகை வைப்பார்ன்னு  சொல்லிடு சரியா.” என்று கேட்டவருக்கு சம்மதமாகத் தலையசைத்தாள் அவளும். வேலைகளை முடித்தவள் பள்ளிக்குக் கிளம்பி நடந்து செல்லும் போதே தன்னவன் இன்றும் தன்னை எதிர்பார்த்து காத்திருப்பானோ என்ற பயம் மனதை தடதடக்க செய்தது. தைரியத்தை திரட்டி வேக எட்டுக்களுடன் பள்ளியை நெருங்கியவள் ஓர கண்களால் தான் மருமகளாகச் செல்ல இருக்கும் வீட்டை விழிகளை மட்டும் உருட்டி வேவு பார்த்தாள். முதலில் மாடியைத் தான் கவனித்தாள். பின்பு கவனம் வந்தவளாக வேகமாகத் துடிக்கும் மனதை கைகொண்டு அழுத்தியப்படியே வாசலைப் பார்க்க, இரு பக்க கேட்டுகளும் இறுக மூடி இருந்தது. அப்பாடா என்று ஆசுவாசம்  கொண்டாலும் அவனை எதிர்பார்த்த  மனது சற்று ஏமாற்றமடைந்து வாடித் தான் போனது. அதுவும் நேற்று பெரிதாக ஏதோ சம்பவம் நடந்திருக்க, இன்று தன்னை எதிர்பார்த்து காத்திருப்பானோ.? பிரேஸ்லெட்டை பற்றித் தன்னிடம் கேட்பானோ.? என்ற பயம் நெஞ்சை அரித்தது பெண் அவளுக்கு. அவள் கைச்சேர்ந்திருந்த பிரேஸ்லெட் தற்போது அவன் கைகளில். இது எப்படி தங்கையின் கைகளுக்குப் போனது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் பயந்து கொண்டே வளர்ந்தவளுக்கு தற்போது அந்த நிலைமை இல்லை என்பதும் சற்று ஆசுவாசத்தை கொடுத்தது. வேகமாகப் பள்ளிக்குள் நுழைந்தவள் எதுவும் கூறிக் கொள்ளாமல் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும்போதே சமீபத்தில் தனது திருமணம் முடிவானதை பற்றிக் குறிப்பிட்டு விட்டுத் தந்தை வந்து பத்திரிகை வைப்பார் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அவளும் ஒரு அழைப்பைக் கொடுத்துவிட்டு, யாரேனும் எதிர் வீட்டில் தென்படுகிறார்களா என்பதை பார்த்து விட்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள் வசுந்தரா. தினப்படி வழக்கமாகத் தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் எந்த மாற்றமும் இல்லாமல். என்ன ஒன்று பள்ளிக்குப் போகும் வேலை மட்டுமில்லாமல் இருந்தது. அதற்கேற்றவாறு கூடுதல் வேலைகளும் சேர்ந்து இருந்தது அவளுக்கு. திருமணம் அருகில் இருப்பதால் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலை அவள் மட்டுமே தனியாகச் செய்துகொண்டிருந்தாள். அவ்வப்போது அன்னையுடன் தமக்கையும் தங்கையும் ரகசியம் பேசும்போது எப்போதும் போல ஆர்வம் இல்லாமல் தன் வேலையை முடித்துவிட்டு தனக்கென இருக்கும் அறைக்குச் சென்று அடைந்து கொள்வாள் தந்தை வரும் வரை. திருமண வேலைகளும் ஒவ்வொன்றாக நடந்து கொண்டுதான் இருந்தது. பத்திரிகை அடித்து வந்ததும், இவளை அழைத்துச் செல்லாமலேயே திருமண புடவையும் இவளின் கைச்சேர்ந்திருந்தது. திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கும்போது வசுந்தராவை அழைத்த ரகுபதி. திருமணக் களை சிறிதும் இல்லாமல் சோர்வாக இருந்த மகளைப் பார்த்தவருக்கு மனம் வேதனையில் பிசைந்தது “ஏன் மா ரொம்ப டல்லா இருக்கே.?”எனக் கேட்ட தந்தையிடம் “ஒன்னும் இல்லப்பா. நல்லா தான் இருக்கேன்.” என்றாள் கண்களை எட்டாத புன்னகையுடன். கல்யாணத்திற்கு மேக்கப், மருதாணி எல்லாம் யார்கிட்டயாவது சொல்லி இருக்கியா மா.” “இல்லப்பா யார்கிட்டயும் சொல்லல.”என்றவள் மேற்கொண்டு எதுவும் பேச முன்பு “அதெல்லாம் பொம்பளைங்க நாங்க பார்த்துப்போம்.” என்றார் கோகிலா இடைப் புகுந்தவராக. “நீங்கப் பாக்குற லட்சணம் தான் எனக்குத் தெரியுமே.” என்று மனைவிக்குப் பதில் கொடுத்தவர். “நான் ஆபீஸ்ல யார் கிட்டயாவது கேட்டுச் சொல்லவா மா.”என்று மகளைப் பார்த்துக் கேட்க. “இல்லப்பா எனக்கு மேக்கப் எல்லாம் எதுவும் வேண்டாம். மருதாணி கூட இலை அரைச்சு வைத்துக் கொள்கிறேன். அந்த வாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் கோன் மருதாணி எல்லாம் எனக்கு வேண்டாம் பா.” “ஏன் மா. திருமணம் ஒரு முறை தான் நடக்க போகுது. அதுல உன்னை அலங்கரித்துகிறதுல தப்பு இல்லையே.?” என்று கேட்ட தந்தையை பார்த்தவள். “ஆனா எனக்கு இப்படி தான் பாப்பிடிச்சிருக்கு.” என்றாள். “அப்பா என் பிரண்டோட அக்கா மேக்கப் ஆர்டிஸ்ட் தான். அவங்க கிட்ட நான் சொல்லி இருக்கேன்.” எனக் கூறிய வசந்தியை ஆச்சரியத்துடன் பார்த்த ரகு. “பரவால்ல இதையாவது உன் அக்காவுக்குச் செய்யணும்னு  தோனிருக்கே சந்தோஷம்.” “ஆனா அப்பா எனக்கு மருதாணி மட்டும் வேண்டாம். அது மட்டும் எனக்கு விருப்பமான மாதிரி நானே வச்சிக்கிறேன்.” என்ற அவளின் கூற்றுக்குச் சம்மதித்தவர் வசந்தியை ஒரு பார்வை பார்க்க. ” சரிப்பா நான் என் ஃப்ரெண்டோட அக்கா கிட்ட சொல்லிடுறேன் மேக்கப் மட்டும் போட்டா போதும்னு.”என்றாள்  வேகமாக. “ஹ்ம்ம். சரி, சரி அதெல்லாம் நீங்கப் பாத்துக்கோங்க அப்புறம் வசுந்தரா உன் கிட்ட முக்கியமா இதைத்தான் கேட்கணும்னு நினைச்சேன் மா. பாட்டி உனக்குக் கொடுத்த அவங்களுடைய நகையெல்லாம் உனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கிறியா.?” எனக் கேட்க “வேண்டாம் பா. எதுவும் மாற்ற வேண்டாம்.”  என்றாள். பாட்டியின் நகை என்றதுமே கோகிலாவின் கண்கள் ஒளிர்ந்தன. “அந்த நகை எல்லாம் கொண்டு வந்து காட்டினா தானே எப்படி இருக்கு.? என்ன.? ஏதுன்னு தெரியும் எங்களுக்கு. ஏதோ புதையலை  அடைகாக்கிற மாதிரி கண்ணுல கூடக் காட்டாம இத்தனை வருஷமா அடைக்காட்டிட்டு இருக்கீங்க.” என்றவருக்கு எதுவும் பதில் கூறாமல் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தார் ரகுபதி. “முதல்ல அந்த நகையைக் கொண்டு வந்து குடுங்க. இவளுக்கு எதெல்லாம்  கொடுக்கலாம்னு பாத்துட்டு மற்ற ரெண்டு பேருக்கும் என்னென்ன நகைகள் வேணும்னு கேட்டு அவங்களையும் எடுத்துக்க சொல்லலாம்.” என்றார். இடை செருகலாக. “மற்ற ரெண்டு பேருக்கும் கொடுக்கணுமா.?” என்ற கணவரின் கேள்விக்கு, “பின்னக் கொடுக்க வேண்டாமா.? எல்லா நகையும் உங்க செல்லப் பொண்ணுக்கு மட்டும் தானா.?” “கட்டாயமா அவளுக்கு மட்டும் தான். அவளுக்கு மட்டும் தான்னு. எங்க அம்மா தெளிவா சொல்லிட்டு போயிருக்காங்க.” “இது என்ன  ஓரவஞ்சன தனம்…? ஏன் அவ மட்டும் தானா பேத்தி.? இவங்க ரெண்டு பேரும் அவங்களோட பேத்திங்க இல்லையா.?”என்றவரின் ஆங்காரமான கேள்விக்கு, “அப்படி  பேத்திங்கன்னு சொல்லிக்கிற அளவுக்கு எங்க அம்மாக்கு இவங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சாங்க.? தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுத்தாங்களா.? அவங்க படுத்த படுக்கையா இருக்கும்போது அவங்களுக்கு ஏதாவது சேவகம் செய்து இருக்காங்களா.? அவங்களுடைய அசுத்தத்தை எல்லாம் சுத்தம் செஞ்சது எல்லாமே  என் செல்லப் பொண்ணுன்னு  நீ சொல்ற இந்த வசுந்தரா தான். அதனால அவங்க சொன்ன வாக்குப்படி அவங்களுடைய மொத்த நகையும் இவளுக்கு மட்டும் தான்.” என்ற அவரின் சரமாரியான கேள்வியில் சற்று நிதானித்த கோகிலா, “அப்படி பார்த்தா அவங்களுடைய நகை மட்டுமே குறைந்தது பதினைந்து பவுன் வருமே.” “என்னது பதினைந்து பவுனா.?” என்று கேட்டுச் சிரித்தவர். “மொத்தம் நாற்பது பவுனுக்கு மேல. அது மட்டும் இல்லாம என் பங்குக்கும் என்னால என்ன முடியுமோ அதையும் என் மகளுக்குச் செஞ்சு தான் நான் அனுப்ப போறேன்.” என்று அவருக்குப் பதிலளித்து விட்டு வெளியில் சென்று விட்டார். “ஹான்.!” என்று அதிர்ந்தவராக,  கணவன் சொல்லிச் சென்றதில் வாயில் கை வைத்துச் சிலையாக அமர்ந்து விட்டிருந்தார் கோகிலா. தாய்க்கும் தந்தைக்கும் இடையில் நடந்த உரையாடல் உடனே வசுமதியிடம் டெலிகாஸ்ட் பண்ணப்பட்டது வசந்தியால். பாட்டியின் மொத்த நகைகளும் வசுந்தராவுக்கு மட்டும் தான் என்பதே இப்போதுதான் தெரிந்திருந்தது அவளுக்கு. “என்னடி சொல்ற.? பாட்டி கிட்ட அவ்ளோ நகையா இருந்தது.இவ்ளோ நாள் நமக்குத் தெரியாம போயிடுச்சே.” “ஆமா அக்கா, எல்லாம் பழைய நகைன்னு நினைக்கிறேன். அப்பா, உனக்கு எல்லாத்தையும் புதுசா மாற்றித் தரட்டுமான்னு கேட்டாங்க. இந்த மக்கு எதுவுமே மாத்த வேணாம். அப்படியே நான் எடுத்துக்கிறேன்னு  சொல்லிடுச்சு.” “பழைய நகையா இருந்தாலும் எல்லாம் ஆன்ட்டிக் கலெக்ஷனா இருக்கும் நினைக்கிறேன் டி. பார்த்தா தான் தெரியும். அது எப்படிப்பட்ட நகைன்னு. அம்மா என்ன சொன்னாங்க.?” “அம்மா ரொம்ப சண்டை போட்டாங்க நம்ம ரெண்டு பேருக்காகவும். அதுக்கப்புறம் அதிர்ச்சியில் அப்படியே வாய் அடைச்சு உட்கார்ந்துட்டாங்க. மொத்தம் நாற்பது  சவரனுக்கு மேல இருக்குன்னு  அப்பா சொல்லிட்டு போனதிலிருந்து.” “ஓ.! நாற்பது சவரனா, ?” என்ற அதிர்வு அவளுக்குமே இருந்தது. “அப்படி பார்த்தால் எனக்கு வெறும் பதினைந்து பவுன் நகை தான் போட்டாங்க. இரு, நான் கிளம்பி வரேன். அப்பா வந்தவுடன் கண்டிப்பா இதைப் பத்தி பேசணும். இவ ஒருத்திக்கே நாற்பது பவுன் குடுத்துட்டா உனக்கு என்ன பண்ணுவாங்களாம்.?” “அது மட்டும் இல்ல அக்கா அப்பாவும் தனிப்பட்ட முறையில்  நகை போடப் போறாராம்.” “இது என்னடி அநியாயமா இருக்கு.? அப்படி பார்த்தா  கிட்டத்தட்ட அவளுக்கு மட்டுமே அம்பது, அறுபது  பவுன் நகையா.? இதெல்லாம் சும்மா விடக் கூடாது. பெரிய இடத்து சம்பந்தம்னு அப்பா தலைக்கால் தெரியாம ஆடுறார் போல இருக்கு. அவளுக்கு மட்டும் இவ்வளவு பண்ணா எங்க மாமியார் வீட்ல கேக்க மாட்டாங்களா.? அப்புறம் அங்க எனக்கு என்ன மரியாதை இருக்கும்.? ஒன்னு அதே மாதிரி நமக்கும் போடச் சொல்லணும். இல்லனா இப்பவே பாட்டி நகையில பங்கு தரச் சொல்லிக் கேக்கணும். இரு நான் கிளம்பி வரேன்.” என்று அலைபேசியை அணைத்தவள், சொன்னது போல ஒரு மணி நேரத்தில் தன் அன்னை வீட்டிற்கு வந்து இறங்கினாள் வசந்தி. மிகுந்த கோபத்துடன். தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்