
மரம் தேடும் மழைத்துளி 11
சுந்தரியின் திருமணத்தை நல்ல முறையில் நடத்திய பிறகு. சேத்தூரில் இருந்து திருமண விழாவிற்கு வந்திருந்த சொந்தங்கள் அனைவரும், அழைத்து வந்த வேனிலேயே மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அதன் பிறகு மணமக்கள் இருவரும் மறு வீட்டுக்கு சேத்தூர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பால், பழம் கொடுத்து பெண் வீட்டு உபச்சாரங்களை செய்து முடித்து. மறுவீட்டு பலகாரங்கள், மற்றும் பாத்திர பண்டங்களை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.
கிருஷ்ணனும், லட்சுமியும் மாலையில் தம்பி பட்டி ஊருக்கு சென்று. சாந்தி முகூர்த்தத்திற்கு தேவையான பலகாரங்கள், மற்றும் பழங்கள் வாங்கி கொடுத்துவிட்டு ஊர் திரும்பினார்கள்.
திருமணத்திற்கு இரண்டாவது நாள் பெண் வீட்டார் சார்பில் கறி விருந்து கொடுப்பது வழக்கம். அதன்படி கிருஷ்ணரும் லட்சுமியும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பணம் கொடுத்து கறி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சேத்தூரில் இருக்கும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு. தம்பிபட்டி ஊருக்கு கறி விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார்கள்.
கறி விருந்தோடு திருமண சடங்குகள் நிறைவு பெற்றுவிட்டது. விருந்தில் கலந்து கொள்ள வந்திருந்த சேத்தூர் சொந்தங்கள் அனைவரும் ஒன்றாக ஊர் திரும்பினார்கள். லட்சுமியும் கிருஷ்ணனும் அவர்கள் வீட்டில்
கிருஷ்ணன், “நல்லபடியா சுந்தரிக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு.”
லட்சுமி, “நானும் எதிர்பார்க்கலங்க. பெண் பார்த்து 15 நாளைக்குள்ள கல்யாணம் ஓடி முடிஞ்சிருச்சு.”
“கால நேரம் கூடி வந்துட்டால், யார் தடுத்தாலும் நிற்காதுனு சொல்றது சரிதான் போல.”
“கல்யாணம் கூடி வந்திருச்சு. ஆனால் நடத்துறதுக்கு ஒரு தனி தைரியம் வேணும். நம்ம கூட இந்த பசங்க எல்லாம் சேர்ந்து ஒத்துழைச்சு வேலை பாக்காட்டி. நம்ம ரொம்ப தவங்கி போயிருப்போம்.”
“அது என்னமோ நெசம்தான் லட்சுமி. அந்த பிள்ளைகளுக்கு நம்ம எதுவும் செலவழிகலையே.”
“இது கூட நல்லதுக்கு தான். அவனுங்களுக்கு கையில காசு கொடுத்தால், வாயில தண்ணியை ஊத்திட்டு வந்து நிப்பானுங்க. சம்பந்தர்களுக்கு முன்னாடி பெரிய தலைகுனிவா போயிருக்கும்.”
“அதுக்காக செலவழிக்க கூடாதுன்னு சொல்றியா?”
“நான் அப்படி சொல்லலங்க. இந்த மாதிரி கல்யாணம் எல்லாம் முடிஞ்ச பிறகு, செலவழிச்சிடுவோம்னு சொன்னேன்.”
“இனி என்ன கல்யாண வேலை இருக்கு?” என்ற கிருஷ்ணன் எழுந்து சென்று தனது பக்கத்து அண்ணன் வீடான முருகன் வீட்டில், முருகனை அழைத்தார்.
முருகன், “சொல்லுங்க சித்தப்பா, என்ன விஷயம்?”
கிருஷ்ணன், “நம்ம பாப்பா கல்யாணத்துக்கு. இந்த பையனுகளுக்கு ஒன்னும் செலவழிக்கல. என்று தனது சட்டை பையில் இருந்து சிறிது பணத்தை எடுத்து முருகன் கையில் கொடுத்து. “நீ அந்த பயல்களுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லு. நீ கல்யாண வீட்டுக்காரன். செலவு மட்டும் செஞ்சிட்டு. வீட்டுக்கு வந்துடுடா. நீ சாப்பிட்டு கிப்ட்டு வந்துராதே.” என்று எச்சரிக்கையோடு சொல்லிவிட்டு சென்றார்.
முருகனுக்கு, கிருஷ்ணன் செய்யாதே என்ற காரியம். செய்யச் சொல்வதைப் போல தோன்றியது. பணத்தை பையில் வைக்கும் போது, மாப்பிள்ளைகளா உங்களுக்கு விருந்து கொடுக்க வந்து கொண்டிருக்கிறேன்.” என்று மனம் சொல்லியது. அதன் மகிழ்ச்சி முகத்தில் வெளிப்பட்டது.
கருப்பு கதிர் கணேசன் இவர்களோடு மேலும் இரண்டு சொந்தக்கார பசங்கள் ஒன்று கூடினார்கள். கருவேலம் காட்டுக்குள் ஆறு பேரும் தண்ணீர் விருந்தில் திழைத்திருந்தார்கள்.
அவர்கள் ஆறு பேரும் கருவேலம் காட்டை விட்டு வெளியேறும் போது.இரவு தொடங்கி நெடுநேரமாகிவிட்டது.
ருக்மணி, மாடியில் இருக்கும் தனி அறையில். தன்னுடைய கணவனுக்காக காத்திருந்து, களைத்து உறங்கிப் போனாள்.
முருகன் வீடு திரும்பும் போது, வீட்டின் கதவு பூட்டப்படாமல். சாற்றி வைக்கப்பட்டிருந்தது.
“அம்மா எதுக்காக காத்திருக்கிறா? தூங்கலையா?” என்ற எண்ணத்தோடு கதவை இழுத்து சாற்றி அடைத்து விட்டு. மாடிப்படி ஏறி தனி அறைக்கு சென்றான்.
தனி அறையில் ருக்மணி, விளக்கை அணைக்காமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.
முருகன், தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி ஆணியில் கோர்த்து விட்டு. ருக்மணியின் அருகில் வந்து நின்றான். அதே நேரத்தில் அவனுக்கு சிறுநீர் உபத்திரம் தோன்ற, மாடியில் இருந்து கீழே சென்று, சிறுநீர் கழிக்க வேண்டுமே என்று சோம்பேரித்தனமும் உடன் தோன்றியது. தரையில் படுத்துறங்கும் ருக்மணியை பார்த்ததும், அவள் தன்னை அவமதித்த முதல் இரவு காட்சிகளும். அதை தொடர்ந்து வந்த அவளது செயல்களும். அவன் கண்முன் நிழலாயாய் ஓடியது.
மதுவில் மூழ்கடிக்கப்பட்டிருந்த முருகனது மூளை. “உன்னை அவமதித்த ருக்மணி, உன் காலுக்கு கீழே கிடக்கிறாள். அவள் முகத்தில் மூத்திரம் பெய்ந்திடு.” என்று கட்டளையிட்டது.
உள்ளிருக்கும் மது, அவனுக்கு கொடுத்த உற்சாகத்தில், செய்வது தவறு என்று தெரிந்தும், அவள் மேல் சிறுநீர் கழித்தான்.
உறக்கத்தில் இருந்த ருக்மணிக்கு, தன்மேல் தண்ணீர் விழுகிறதே என்ற உணர்வு தோன்றிட. கண் விழித்துப் பார்த்தவள் அதிர்ந்தாள். தான் படுத்து இருந்த தலையணை அருகில், முருகன் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை கண்டவளுக்கு, ஆத்திரம் தோன்றியது. ஆவேசமாய் எழுந்தாள்.
“பாவி பயலே, என்ன காரியம்டா… செஞ்சுகிட்டு இருக்கிறே? குடிச்சுபுட்டா, உனக்கு வீடும், காடும் விளங்காமலாடா போயிருச்சு”. என்று வசை மொழிந்து கொண்டு எழுந்து, அவன் எதிரில் நின்றவள், ஓங்கி கன்னத்தில் ஒரு அரை கொடுத்தாள்.
முருகனுக்கு, முற்றும் ஏறி இருந்த போதை. எங்கே போனது என்று தெரியவில்லை. ருக்மணியின் காளி ரூபத்தை பார்த்தவன் அரண்டு விழித்தான்.
ருக்மணி, “நான் உனக்கு என்னடா துரோகம் செஞ்சேன்? எதுக்குடா என் மேல மோண்டே? போதையில கிறுக்கு புடிச்சிருந்தா உன்னோட ஆத்தா மேல மோண்டுருக்க வேண்டியது தானடா? ஆத்தாளை மட்டும் சரியா அடையாளம் தெரிஞ்சிருக்கு? வஞ்சனை புடிச்ச பயலே. உனக்கு வாழ விருப்பம் இல்லாட்டி வெளியேறிப்போனு சொல்லி இருந்தால் உன் மூஞ்சில காரி துப்பிட்டு. அன்னைக்கே போய் இருப்பேனடா? என்னை எங்கேயும் போக விடாமலே இந்த கூட்டுக்குள்ள வச்சு சித்திரவதை படுத்தலாம்னு நினைச்சியாடா? என்று ஆவேசத்தோடு கத்தியவள், தனது இரு கைகளும் நோகும் வரை, அவனது நெஞ்சகத்தில் அடித்து அழுதாள்.
குத்துக்கல்லுக்கு குளிர் அடிக்கப் போகிறதா? என்பதைப் போல நின்று கொண்டிருந்தான் முருகன்.
கீழ் வீட்டில் படுத்திருந்த பார்வதி, ருக்மணியின் சத்தத்திற்கு பதறி எழுந்து மாடிக்கு ஓடிவந்தார். வந்தவர், அந்த அறைக்குள் சொல்லாமல், வாசலில் நின்று. எதற்காக சத்தம் இடுகிறாள் என்று கவனித்தார்.
ருக்மணி, “நானும் புருஷன்னு பொறுத்துப்போனால், நீ மனுசனே இல்லன்னு இப்பத்தானடா தெரியுது. உன்னோட வீரத்தை, உறக்கத்திலே இருந்த என் மேல மோன்டு காமிச்சயே. நீ மட்டும் சரியான ஆம்பளையா இருந்தால், என்னோட நேருக்கு நேரா நின்னு சண்டை போட்டு ஜெயிச்சு காட்டுடா? பயந்தேறிப்பயலே” என்று கத்தும் போது தான் பார்வதிக்கு விஷயம் விளங்கியது. அதன் பிறகு அந்த அறைக்குள் நுழைந்தார் பார்வதி.
பார்வதி, “என்ன காரியம்டா செஞ்சு வச்சே விளங்காதவனே? நீ எல்லாம் உயிரோட இருக்காதே. மருந்து குடிச்சு செத்துரு.”
ருக்மணி பார்வதியை “ஆஹாஹா நல்லாருக்கு உன் நாடகம். நீ… உன் நாடகத்தை செத்த நிறுத்துரியா? நீ பெத்த புள்ளையோட லட்சணம் என்னன்னு, உனக்கு இத்தனை நாளும் தெரியாமல் இருந்தியாக்கும்? இவனுக்கு எவளும். பொண்ணு குடுக்க மாட்டானு தெரிஞ்சிருந்தும். என் பொழப்பை கெடுக்கிறதுக்கு வந்துட்டே அடி பாவி. கூட பிறந்தவன் பிள்ளையை, கொண்டு வந்து கழுத்தை அறுத்துட்டயேடி. நீ எல்லாம் நல்லா இருப்பியா? உனக்கெல்லாம் நல்ல சாவு கிடைக்குமா? என்றவள் விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். “அடியே திரும்பி எங்க ஆத்தா பின்னாடி போயிருவேன்னு மட்டும் நினைக்காதே. இங்கேயே இருந்து. உங்க ரெண்டு பேத்தையும் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பிட்டு தான் போவேன். நீ செஞ்ச காரியத்துக்கு, பீயையும் சோத்தையும் சேர்த்து பிசைஞ்சு சாப்பிடும் நிலைக்கு வந்து. நீ மருகி கிடைக்கிறதை நான் பாத்துட்டு தான் போவேன். இது எங்க ஆத்தா, மாரியாத்தா மேல சத்தியம்.
பார்வதிக்கு பதில் சொல்ல வார்த்தை இல்லாமல், வாய் அடைத்து போய் நின்றார்.
முருகனைப் பார்த்த ருக்மணி, “நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொன்னாலும் தகும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தினுசா யோசிச்சு, என்னை படுத்தினதுக்கு நீ திங்கிற சோத்துல விசத்தை வச்சு கொன்னுருவோமான்னு எனக்கு ஆத்திரம் வருது. ஆனா இப்ப அதை நான் செய்ய மாட்டேன். இதுதான் உனக்கு கடைசி மன்னிப்பு… இதுக்கடுத்து இந்த மாதிரி சில்ற வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்னால். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உனக்கு மருந்து வச்சு கொல்றது தான் என்னோட முதல் வேலை. அதை மறைமுகமா யாருக்கும் தெரியாம செய்ய மாட்டேன். உங்க அம்மா இருக்கால்ல இவளுக்கு எதுக்கவே சொல்றேன். உன் சாவு என்னால தான் நடக்கும்னு விதி இருந்தால், அதை யாராலும் மாத்த முடியாது .” என்று சொன்னவள், பார்வதியை, ஏறஇறங்க பார்த்துவிட்டு. வேகமாக இறங்கி மாடிப்படிக்கு கீழே இருக்கும் குளியல் அறைக்கு சென்று கதவடைத்தாள்.
பார்வதியும், அவள் பின்னாலேயே இறங்கி வந்து. குளியல் அறையின் கதவைத் தட்டி, வெளியில் பிடித்து வைத்திருந்த தண்ணீர் குடத்தை எடுத்து கொடுத்தார்.
வெடுக்கென்று பிடுங்கி உள்ளே வைத்துக் கொண்டு, கதவை அடைத்தாள்.
மருமகளுக்கு மாற்றுத் துணியை எடுத்துக் கொண்டு வந்து, கதவின் மேல் போட்டுவிட்டு. காத்திருந்தார் பார்வதி.
குளித்து முடித்த ருக்மணி, மாற்று உடை அணிந்து கொண்டு கதவைத் திறந்தவள். பார்வதியை பார்த்து நீயேன் எனக்கு காவ காத்துகிட்டு இருக்க? நான் நல்லவ. என் மேல எந்த தப்பும் இல்லைனு என்கிட்ட நிரூபிச்சு காட்ட போறியா? நீ உன்னை நிரூபிச்சால், என் கஷ்டம் மறந்திட போகுதா? போய் படு.” என்றவள், பார்வதியை சட்டை செய்யாமல் கீழ் அறைக்குள் சென்று. கதவை தாடல் என்று அடைத்துவிட்டாள். பார்வதி படியிலேயே அமர்ந்து தலையில் கை வைத்து விட்டார்.
மாடியில், வேர்த்து விதிர் விதிர்க்க நின்று கொண்டிருந்த முருகன், தான் உண்மையிலேயே பெருந்தவறு செய்து விட்டோம் என்று இப்போதுதான் உணர்ந்தான். ஆனால் இந்த முறை முருகன் திருந்தி விட்டான் என்று நம்பும் மனநிலையில் ருக்மணி இல்லையே!
ருக்மணி ஆவேசம் கொண்டு அத்தனை முறை அடித்திருக்கிறாள். திட்டியிருக்கிறாள். அவை அனைத்தையும் தான் செய்த தவறுக்கான தண்டனைகளாக ஏற்றுக் கொண்டு விட்டான். இனி ருக்மணிக்கு தெரியாமல் கூட சிறு துன்பம் இழைத்து விடக்கூடாது என்று முடிவு செய்து விட்டான. அவனது மன மாற்றத்தை ருக்மணி எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறாள்? என்று கடவுளுக்கு தான் தெரியும்.

