Loading

தன் நண்பர்களுடன் பேக்கரி முன் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் உமாபதி. அந்நொடி அவனை நோக்கி விறுவிறுவென நடந்து வந்து அவன் முன்னே நின்றாள் வெண்ணிலா. அவள் கண்களில் அத்தனை கோபம் தெரிந்தது.

 

“ஒரு நிமிசம் மச்சான்.” என்று தன் நண்பர்களிடமிருந்து விடைப்பெற்றவன் அவளை அழைத்துக் கொண்டு தனியாக வந்தான்.

 

“இங்க என்ன பண்ற?”

 

“நான் எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு தெரியாது அப்படி தானே?”

 

“எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் நிலா.”

 

“அய்யா சாமி உங்களோட பேசுற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. நான் தான் ஒதுங்கி போயிட்டேன்ல, நீங்க எதுக்கு என் விசயத்துல தலையிடுறீங்க? என் கிளாஸ்மேட் சிவாவை மிரட்ட நீங்க யாரு?”

 

“ரோட்ல நின்னுட்டு கத்தாத. உனக்கு அவன் என்ன பண்ணான்னு தெரியாது. வீட்டுக்கு போ அங்க வந்து நான் சொல்றேன்.” என்றவன் பெண்ணவளை உறுத்து விழிக்க, 

 

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ஏற்கனவே சொன்னதே ரணமா இருக்கு. உங்களை விட அவன் எதுவும் தப்பா சொல்லியிருக்க மாட்டான்.” என்றவள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, உமாபதிக்கோ கோபம் சுள்லென்று ஏறியது. 

 

அவள் பின்னாலே வண்டியை எடுத்துக் கொண்டு சென்றவன், அவளை வண்டியில் ஏறும்படி கட்டளையிட்டான். முடியாது என்று மறுத்தவளை மிரட்டி ஏறி அமர வைத்தவன், தனது இருசக்கர வாகனத்தை உயர் வேகத்தில் செலுத்தினான்.

 

“எதுக்கு இவ்ளோ வேகம்? வண்டியை நிறுத்துங்க.” என்றவளது கத்தல் எல்லாம் காற்றோடு கரைந்தது தான் மிச்சம்.

 

ஆள் அரவமற்ற இடத்தில் வண்டியை அவன் நிறுத்த, அவளோ அவனை முறைத்தபடி இறங்கினாள்.

 

“எதுக்கு இங்க நிறுத்திருக்கீங்க? நான் வீட்டுக்கு போகணும்.”

 

“அப்போ என்ன சொன்ன?”

 

“ஏன் அதுக்குள்ள மறந்து போச்சா? என் விசயத்துல தலையிட நீங்க யாரு? நான் இங்க படிக்க வந்திருக்கேன். ஆனால் நீங்க என்னோட படிக்கிற பையனை மிரட்டுனது இல்லாமல் அடிச்சிட்டு வேற வந்திருக்கீங்க?”

 

“அவன் என்ன பேசுனான்னு தெரியுமா? உன்னை பத்தி தப்பா கமெண்ட் பண்ணான்.”

 

“இருக்கட்டும் அது நான் பார்த்துக்கிறேன். நீங்க யாரு முதல்ல? என் விசயத்துல குறுக்க வரதுக்கு உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது.” என்றவள் கூறவும் அவளை அறைவதற்காக கைகளை ஓங்கியிருந்தான் உமாபதி.

 

அவனது செயலில் நொடியில் அவள் விழிகள் மிரட்சியுடன் நோக்க, அவளது பார்வையில் தனது கைகளை கீழே இறக்கியவன் அவளைப் பார்த்து, “இன்னொரு தடவை இப்படி பேசுன அவ்வளவு தான். எனக்கு மட்டும் தான்டி உங்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.” என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க,

 

“வார்த்தைகளால காயப்படுத்தவும் உங்களுக்கு தான் உரிமை இருக்கு போல?” என்றவள் குத்திக் காட்ட, அவனோ தன் கோபத்தை தலைகோதி சமன் செய்தான்.

 

“காயப்படுத்த மட்டுமில்ல, காயத்துக்கு மருந்தும் போடவும் தெரியும்.” என்றவன் அடுத்த நொடியே அவளது இதழ்களை சிறை செய்தபடி பின் மென்மையாக பிரித்தெடுக்க, அவளோ அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“முடியலடி, நான் பேசுனது தப்பு தான். அதுக்காக என்னை வதைக்காத. ஒவ்வொரு முறையும் உன்னை நீயே காயப்படுத்திக்கும் போது ரொம்ப வலிக்குது நிலா. நீ என்னை விட்டு ஒதுங்கி போகும் போதெல்லாம் ரொம்ப கோபம் வருது. இவ்வளவு நாள் நான் உன்னை அழ வெச்சுட்டேன். இனி அதை நான் நினைச்சாலும் மாத்தியமைக்க முடியாது. ஆனால் ஒண்ணு பண்ண முடியும், இனி உன்னை கண் கலங்காம என்னால பார்த்துக்க முடியும். இனி வர நாட்கள்ல உன்னை கையில வெச்சு தாங்குவேன். ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாரு நிலா.” என்றவன் அவளது கன்னம் ஏந்தி கூற, அவன் கண்களில் தெரிந்த காதல் அவளையும் ஒரு நிமிடம் கலங்கடித்தது.

 

“நிஜமாவா?” குழந்தை போல கேட்டவளது தலையை செல்லமாக முட்டியவன், 

“சத்தியமாடி.” என்று கூற, அவளது கண்களில் ஆனந்த கண்ணீர் அளவில்லாமல் பெருக்கெடுத்தது, அந்நொடி தன் பெருவிரல் கொண்டு அழுத்தமாக கண்ணீரைத் துடைத்து விட்டான்.

 

“இப்போ தான சொன்னேன் உன் கண் கலங்காம பார்த்துக்குவேன்னு, அதுக்குள்ள அழுதா எப்படி?”

 

“இது ஆனந்த கண்ணீர்.” என்றவள் அவனையே ஆழ்ந்து பார்த்தபடிக் கூற, அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் உமாபதி. 

 

அவளது வலியை அவள் உணர்ந்த தருணமே இவனும் உணர்ந்தான் அவனது காதலை. காதல் எத்தகு வீரனையும் கலங்கடித்துக் காட்டும் அஸ்திரம் தான். இங்கு காதல் அவனையும் மாற்றியிருந்தது. இத்தனை நாள் அவள் மீது கொண்ட அவன் சிறுபிள்ளை கோபம் எல்லாம் காதலுக்கு முன் ஒன்றுமில்லாமல் போயிருந்தது.

                            ***

நந்தாவும், கேணியும் மானசாவைக் காண்பதற்காக மும்பைக்கு வந்திருந்தனர். இருவரையும் கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்தாள் மானசா. அவ்வதிர்ச்சி குறையும் முன்பே இருவரையும் வீட்டிற்குள் அழைத்தவள் உபசரிக்க, அவளது கைப்பேசியை அவளிடம் கொடுத்திருந்தான் நந்தா.

 

“யம்மாடி பரதேவதை” என்று கேணி அழைக்க, நந்தாவோ அவனை முறைத்த நொடி தன் அழைப்பை சட்டென்று மாற்றியிருந்தான் கேணி.

 

“மானசா, நல்லவேளைமா நீ உன் அட்ரஸ் தந்துட்டு போன, அதுனால சுலபமா வர முடிஞ்சுது. ஆமா உங்க அப்பா, அம்மா எங்க? தனியா தான் இருக்கியா?”

 

“அம்மாவும், அப்பாவும் இன்னும் கோபமா தான் இருக்காங்க. ஆனால் அம்மா மட்டும் பேசுவாங்க அண்ணா.”

 

“ஓ சரிமா. ஆமா நம்ம இரண்டு பேரு மட்டும் தான் பேசிட்டு இருக்கோம். இவன் பாரு அமைதியாவே இருக்கான். டேய் சிஷ்யா, முக்கியமான விசயம் பேச வந்துட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படிடா?” கேணி நந்தாவை பார்த்து கேட்க, 

 

“அப்படி என்ன விசயம்?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் மானசா.

 

“ரகுவரனை தெரியுமா?” என்று மௌனத்தை கலைத்து நந்தா கேட்ட நொடி, அவளது ஆர்வம் முற்றிலும் வடிந்து போனது. அவளது முகமாற்றத்தைக் கண்டதுமே கேணி கூறியது உண்மை தான் என்பதை புரிந்துக் கொண்டான் நந்தா.

 

“ஆனால் உங்களுக்கு எப்படி..?” என்றவள் இழுக்க,

 

“நாங்க ஒன்னா படிச்சவங்க தான்.” என்றவனது பதில் அவளுக்கு மட்டுமல்ல கேணிக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

 

வரும் வழியில் தான் தன்னை பற்றி மட்டுமல்ல, ரகுவரனை பற்றியும் அவனிடம் கூறியிருந்தான். மதுவிடம் நடந்துக் கொண்ட விதமாகட்டும், மானசாவுக்கு அவன் செய்த செயலாகட்டும் நினைக்கும் போதே கேணிக்கு பற்றிக்கொண்டு வந்தது. இவையனைத்தையும் சொன்னவன் தற்போது தானே உடன் படித்தவன் என்கிறான் அந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான் கேணி.

 

“ஓ…” சுரத்தே இல்லாமல் ஒலித்தது அவள் குரல்.

 

“அடிப்படையில அவன் ரொம்ப நல்லவன் மானசா.”

 

“ஆமா ரொம்ப நல்லவன்” என்றாள் நக்கலாக.

 

‘என்னத்துக்கு இவன் இப்படி அந்த பொறுக்கிக்கு சப்போர்ட் பண்றான்.’ என்று ஒன்றும் விளங்காமல் குழப்பமாக அவனைக் கண்டான் கேணி.

 

“புரியுது மானசா. உன்னோட விசயத்துல அவன் செஞ்சது ரொம்ப தப்பு. அவனை நான் நல்லவன், நீ ஏத்துக்கோனு சொல்ல வரலை. அவனை பத்தி நீ தெரிஞ்சுக்கணும்.”

 

“இனி என்ன தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு? தெரிஞ்சாலும் அவன் பேசுனது எல்லாம் மாறுமா என்ன?”

 

“அதுதானே சிஷ்யா தகுதியே இல்லாதவனுக்கு எதுக்கு இப்படி கொடி பிடிச்சிட்டு வர?” கேணி கேள்விக்கு அவனை பதில் பார்வையாலே நந்தா முறைக்க, “ரைட்டு விடு” என்றவன் அமைதியானான்.

 

“ஆனால் அவனை பத்தி உனக்கான புரிதல் மாறலாம்.” என்றான் நந்தா மானசாவை பார்த்து.

 

“கண்டிப்பா மாறாது. என்னை தான் வேண்டாம்னு சொன்னான். கடைசியில அவன் குழந்தையவே கலைக்க சொல்ற அளவுக்கு மோசமானவனா மாறியிருக்கான். அப்படி பட்டவனை பத்தி என்ன தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அவனை உண்மையா காதலிச்ச எனக்கு அவன் நல்ல பாடத்தை கத்து தந்துட்டு போயிட்டான். இப்போ சொல்றேன் அவனை மாதிரி ஒரு கேவலமான மனுசனை என் வாழ்க்கையில நான் பார்த்ததே கிடையாது.” என்றவள் உணர்ச்சி வசப்பட்டு கத்தினாள்.

 

“ஆமா கெட்டவன் தான். ஒருவேளை அவனோட அம்மா அவனை விட்டு போகாம இருந்திருந்தா நல்லவனா இருந்துருப்பானோ? இல்லை அவங்க அத்தை கொடுமை படுத்தாம இருந்திருந்தா அவனோட பெண்களை பத்துன அபிப்பிராயம் மாறியிருக்குமோ? இல்ல உயிருக்கு போராடுற அப்பாவை காப்பாத்த சொல்லி கெஞ்சுன அவனுக்கு யாராவது உதவியிருந்தால், அவனுக்கும் அந்த உதவி பண்ற குணம் வந்திருக்குமோ? இல்ல காயம்பட்ட அவன் வாழ்க்கையில காதல்னு பேர்ல ஒரு பொண்ணு இவனை காயப்படுத்தாம போயிருந்தால், எந்த பொண்ணையும் அவன் காயப்படுத்தாமல் இருந்திருப்பானோ? இங்க எது சரி எது தவறுனு பிரிச்சு சொல்ற நம்ம, அவன் பண்ண தப்புக்கு காரணத்தை மட்டும் யோசிக்குறதே இல்லை. அதுக்குன்னு அவன் பண்ணது சரின்னு சொல்லலை. அதே சமயம் நீயும் அவனை புரிஞ்சுக்காம போனா இந்த உலகத்துல அவனுக்குன்னு யாருமே இல்லாம போயிடுவாங்கனு தான் சொல்றேன்.” என்றவன் ரகுவரனது கடந்தக்காலத்தை பற்றி ஒன்றுவிடாமல் அவளிடம் எடுத்துக் கூறியிருக்க, அதை கேட்ட கேணிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

நந்தா கூறியதைக் கேட்டவளுக்கும் அவன் வலி நன்கு புரிந்தது. அவனது கூற்றும் உண்மை தானே. ஒருவனை தீயவனாக்கி பார்ப்பதும் இச்சமூகம் தான். ஒரு காதலியாய் தன்னவனின் நிலையை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு சான்றாக அவள் கண்கள் கலங்கியும் இருக்க, தன் பிள்ளைக்கு ஒரு அன்னையாக அவளால் அவனை மன்னிக்க இயலாது போனது.

 

“நீங்க சொல்றது எல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியுது. அவனோட வலியை கண்கூடா உணர்ந்திருக்கேன். அவன் வலிக்கு மருந்தா நானாவே மாறியிருக்கேன். ரகு என்னை பத்தி பேசுனது எல்லாமே என்னால மன்னிக்க முடியும் அண்ணா. ஆனால் என் குழந்தையை கலைக்க சொன்னதை என்னால நிச்சயம் மன்னிக்க முடியாது. அதுக்குன்னு இப்படியே இருப்பேனு சொல்லலை. காலம் அவனையும் மாத்தும். அப்போ அவன் தப்பை உணர்ந்து எங்களை தேடி வரட்டும் அன்னைக்கு அவனை நான் ஏத்துப்பேன். முக்கியமா என் குழந்தை அவரை ஏத்துக்கணும்.” என்று கூறும்போதே அவள் கரம் அவளது வயிற்றில் பதிந்திருந்தது.

 

“கண்டிப்பா அவன் உன்னை தேடி வருவான். அவனை பத்தி எனக்கு தெரியும்மா. வந்தா என் சார்பா நாலு அடி போடு.” என்றவன் புன்னகைத்து கேணியை அழைத்துக் கொண்டு விடைபெற, வீட்டு வாயிலைக் கடந்ததும் கேணி அவனை பிடித்து நிறுத்தினான்.

 

“என்னடா நடக்குது. வர வழியில உன்னை பத்தியும் அவன் உனக்கு பண்ண துரோகம் பத்தியும் சொல்லியிருந்த. ஆனால் அவனுக்கு போய் இப்படி சப்போர்ட் பண்றியேடா? நல்லவனா இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா? நீ பணக்காரன்னு சொன்னதே எனக்கு அதிர்ச்சிடா. அப்படி இருக்கப்போ உன் எதிரிக்கு நல்லது பண்ற? யாருடா நீ?”

 

“எனக்கு அவன் மேல நிறைய கோபம் இருந்துச்சுடா. உனக்கு ஒன்னு தெரியுமா கேணி? என் மதுவோட வாழ்க்கையில என் அடையாளத்தை பயன்படுத்தி விளையாடுன ரகுவரன் இவன் தான்னு தெரிஞ்சப்போ மொத்தமா உடைஞ்சு போயிட்டேன்டா. எனக்கு தெரிஞ்ச ரகுவரன் கோபப்படுவான், ஆனால் இப்படி பொறுக்கித்தனமா நடந்துக்க மாட்டான். அது அவனோட குணமும் கிடையாது.”

 

“ஆனாலும் மது விசயத்துல அவன் பண்ணது பக்கா பொறுக்கி தனம் சிஷ்யா. நிஜமா உனக்கு கோபம் வரலையா?”

 

“வராம இருக்குமா? அவன் தான்னு விசாரிச்சதுல தெரிஞ்சதும் அவனைத் தேடி மும்பை வந்தேன். அவனை அடிக்குற அடியில எந்த பொண்ணையும் அவன் ஏமாத்தக் கூடாதுங்குற கோபம் எனக்கு அந்த நிமிசம் அதிகமாவே இருந்துச்சு. ஆனால் இங்க நடந்ததே வேற.”

 

மது ஏமாற்றபட்ட விசயத்தை சைத்ராவின் மூலமாக தான் அறிந்திருந்தான் நந்தா. அன்று அவளை அவன் காப்பாற்றிய போதும், “நான் சாகணும்” என்றே போதையில் புலம்பியவளது வார்த்தைகள் அவனை உயிரோடு வதைத்தது. தான் இருக்கும் போது தன்னவளுக்கு இந்நிலையா? அதுவும் தன்னை போன்று வேடமிட்டு ஏமாற்றியவனை சும்மா விடக்கூடாது என்ற ஆவேசம் அவனையும் மீறி அதிகரிக்க, அடுத்த நாளே ரகு யார் என்று அறிய விசாரிக்கத் தொடங்கியிருந்தான். 

 

அவன் வேலை பார்த்த இடம் வரை தேடி சென்றவனுக்கு ரகுவரன் தான் இவ்வாறு கீழ்தரமான வேலையை புரிந்தான் என்பதை அறிந்த நொடி அவன் மனம் அதை ஏற்க சில நொடிகள் பிடித்தது. மதுவின் விசயத்தில் அவன் புரிந்த செயலுக்கு மன்னிப்பே கிடையாது என்று ஆவேசம் கொண்டவன் பல ஆண்டுகளுக்கு பிறகு அவனைக் காண மும்பைக்கு சென்றிருந்தான். ஆனால் அவன் ஒன்று நினைக்க அங்கு நடந்ததே வேறாகிப் போனது.

 

“அப்படி என்ன தான் நடந்துச்சு?” கேணி பற்களை கடித்தபடி கேட்டான்.

 

“அவனுக்கு ஆக்ஸிடென்ட். அப்போ நியூஇயர் குடிச்சிட்டு ஹை ஸ்பீட்ல வண்டி ஓட்டி போயிருப்பான் போல, அப்போ கார் இடிச்சு நிறைய பிளட் லாஸ் ஆகி, ஹாஸ்பிடல்ல இருந்தான். அவனைத் தேடி போனப்போ, அவனோட பிரெண்ட் மூலமா தான் அவனுக்கு விபத்து நடந்திருக்குங்குற விசயமே எனக்கு தெரிஞ்சுது.”

 

“கெட்டது பண்ணா அப்படி தான் நடக்கும்.” என்ற கேணியை சலிப்புடன் பார்த்தான் நந்தா.

 

“அப்படி பேசாதடா. அந்த நிலையில நீ அவனை பார்த்திருந்தா இப்படி பேச மாட்ட. அந்த நேரத்துல அவனுக்கு இமிடியட்டா பிளட் தேவைபட்டுச்சு. அந்த நிமிசம் அவன் மேல எனக்கு கோபம் எல்லாம் வரலை. அவன் உயிரை காப்பாத்தணும்னு நினைச்சேன். எனக்கும் அவனுக்கும் ஒரே பிளட் க்ரூப்… இரத்தம் கொடுத்துட்டு அங்கிருந்து வந்துட்டேன்.” என்றவனை அதிர்ந்துப் போய் பார்த்தான் கேணி.

 

“அடப்பாவி உன்னை மாதிரி ஒருத்தனை நான் பார்த்ததே இல்லைடா‌. துரோகம் பண்ணவனுக்கும் இரத்தம் கொடுத்து காப்பாத்துற நீ இந்த உலகத்துக்கு செட்டே ஆகாத பீஸ்.” என்று சலிப்புடன் கூறுபவனைக் கண்டு புன்னகைத்துக் கொண்டவன்,

 

“ஒருத்தன் நமக்கு கெட்டது பண்ணா திருப்பி நம்மளும் அவனுக்கு கெட்டது தான் பண்ணனும்னு அவசியம் இல்லைடா. அதுவும் இல்லாமல் அவனை துரோகியா என்னைக்குமே நான் நினைச்சதில்லை. அந்த பிராஜெக்ட் டே அன்னைக்கு என்னை எல்லாரும் பாராட்டும் போது, கடைசியா இது எல்லாத்துக்குமான கிரேடிட் ரகுவரனுக்கு தான் போய் சேரணும்னு சொல்லிட்டு தான் வந்தேன். ஆனால் அதை பார்க்க அன்னைக்கு அவன் அங்க இல்லை. ஒருவேளை அவன் என்னோட இருந்திருந்தா நிச்சயம் அவனை தப்பான வழிக்கு போயிருக்க விட்ருக்க மாட்டேன்.” 

 

“போதும்டா சாமி. உன் அன்பை கண்டு வியக்குறேன். மொதல்ல இங்கிருந்து போகணும். போனா தான் எனக்கு நல்லது.” என்று கேணி முன்னேறி செல்ல, அவனோடு செல்ல முன்னேறியவனது தோளை பற்றியிருந்தது ஒரு கரம்.

 

அந்நொடி திரும்பி பார்த்தவன் தனக்கு எதிரே நின்றிருந்த ரகுவரனை பார்த்து சிறு அதிர்ச்சியுடன் ஏறிட்டான். ஆனால் ரகுவரனோ அவனைக் கண்டு கண்கள் கலங்கி போய் நின்றவன் அடுத்த நொடி அவனை இறுக அணைத்துக் கொண்டான். இப்படி அவன் செய்வான் என்று நந்தாவும் நினைக்கவில்லை.

 

“சாரிடா, இத்தனை நாள் உன்னை என் எதிரியா மட்டும் தான் பார்த்தேன். ஆனால் நீ உன்னோட எதிரியா இருந்தும் நண்பனா பார்த்திருக்க. இப்போ வரை நீ தான் என் வாழ்க்கையில குறுக்க வந்தேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் இப்போ தான் தெரியுது நான் தான் உன் அடையாளத்தை மிஸ் யூஸ் பண்ணியிருக்கேன்னு. எப்படிடா உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சுது?” என்று ஆறடி ஆண்மகன் அவன் முன்பு கண்ணீர் வடித்தான். 

 

எத்தகு உயர்ந்த நட்பை தான் இழந்திருக்கிறோம் என்பது ரகுவரனது புத்தியில் உரைத்தது. சற்று முன் சந்துருவை அழைத்துக் கொண்டு மானசா வீட்டிற்கு வந்திருந்தவன் இவனைக் கண்டதும் கோபத்தில் கை முஷ்டியை மடக்கிக் கொண்டு அடிப்பதற்காக தான் சென்றிருந்தான். சந்துரு தான் அவனை அமைதியாக இருக்கும்படி கூறியிருந்தது மட்டுமின்றி அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள் என்று மறைந்திருந்து கேட்கவும் வைத்திருந்தான். மானசாவிடம் அவன் பேசியதைக் கேட்ட நொடி, ரகுவரனது கோபம் பனியை போல் உருகிப் போயிருந்தது.

 

கேணியும், நந்தாவும் வீட்டைவிட்டு வெளியேற அவர்கள் தன்னை காணாதவாறு இவர்கள் மறைந்து நின்றுக் கொண்டனர், அதன்பின்னர் கேணியுடன் அவன் பேசியதை முற்றிலும் கேட்டவனுக்கு குற்ற உணர்வு அதிகரித்துப் போனது. 

 

இப்படிப்பட்டவனுக்கு தான் நிகழ்த்தியது எத்தகைய அநீதி என்பது தெளிவாய் புரிய, அந்நொடி அவனது தப்பை எண்ணி கலங்கிப் போனான் ரகுவரன். ரகுநந்தனைக் காண்பதற்கு கூட தனக்கு தகுதியில்லை என்றே நினைத்தான். அன்று கல்லூரியில் சிறிது நேரம் நின்றிருந்தால் கூட அவன் நட்பை இழந்திருக்க அவசியமில்லாமல் போயிருக்குமே என்றெல்லாம் அந்நொடி யோசித்தவனுக்கு மனம் ரணமாய் வலித்தது.

 

“மன்னிப்பு கேட்குற தகுதி கூட எனக்கில்லைடா.” என்றவனது தோளை ஆதரவாக பற்றி நிறுத்தினான் நந்தா.

 

“இப்பவும் என் மதுக்கு நீ பண்ண விசயத்தை நான் மன்னிக்கலைடா. ஆனால் மறக்கணும்னு நினைக்கிறேன். எல்லாத்தையுமே…” என்றவன் சூசகமாக அவனது நட்பையும் சேர்த்துக் கூறியிருக்க ரகுவரனுக்கும் புரிந்துப் போனது. அவனது நட்புக்கு தகுதியானவன் தான் அல்ல என்று. மேலும், “போ ரகு, நீ இப்போ மன்னிப்பு கேட்க வேண்டியது எங்கிட்ட இல்லை மானசாகிட்ட.” என்றவனைக் கண்டு வலியுடன் தலையசைத்தான் ரகுவரன்.

 

“கண்டிப்பாடா.” என்றவனது, தோளை தட்டிக் கொடுத்த நந்தா சிறு புன்னகையை உதிர்த்தபடி கேணியை அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றான். 

 

ரகுவரன் செய்த தவறு, நல்ல நட்பினை இழக்கச் செய்திருக்க, செல்லும் அவனை வலியுடன் பார்த்தான். சந்துரு ஆதரவாக ரகுவரனது தோளைத் தொட, ஆறுதலாக தலையசைத்தவன் நந்தா கூறியது போலவே மானசாவின் வீட்டு வாயிலிற்குள் நுழைந்தான்.

 

காலிங் பெல் சத்தம் கேட்டு பெண்ணவள் கதவினைத் திறக்க, அங்கு நின்றிருந்த ரகுவரனைக் கண்டு உறைந்துப் போனாள் பெண். இருவருக்கும் தனிமையை கொடுத்து விட்டு சந்துருவும் வெளியே நின்றுக்கொள்ள,

 

“உள்ள கூப்பிட மாட்டியா?” என்றவன் கெஞ்சும் குரலில் அவளை பார்த்து கேட்க,

 

“உங்களை மாதிரி ஏன் வந்தேனு கேட்க எனக்கு தெரியாது. உள்ள வாங்க.” என்றவள் அவனை அழைத்திருந்த நொடி வீட்டிற்குள் நுழைந்ததுமே அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன் இரு கரம் கூப்பி மன்னிப்பினை யாசித்தான்.

 

அவனது செயலில் ஒரு நொடி பதறியவளோ, “என்ன பண்றீங்க? திரும்ப என்ன நாடகம் பண்ண வந்திருக்கீங்க?” என்றாள்.

 

“உனக்கு பண்ண பாவத்துக்கு எப்படி மன்னிப்பு கேட்குறதுனு தெரியல பேபி. நான் பண்ண விசயங்கள் ஒவ்வொன்னும் மன்னிக்க முடியாதது. என்னை மன்னிச்சிடுனு சொல்லக் கூட தகுதி இல்லாம நிற்கிறேன்.” என்று அழுதபடி கூறுபவனை நம்ப இயலாத பார்வை பார்த்தாள் பெண்.

 

“என்னை உன்னால மன்னிக்க முடியுமா மானசா?” அவனது ஒற்றைக் கேள்விக்கு அவளால் பதில் அளிக்க இயலவில்லை.

 

“தெரியலை. ரொம்ப வலிக்குது ரகு. உன்னை ரொம்ப நம்புனேன். ஆனால் நீ நம்ம பேபியை கலைக்க சொல்லிட்டியே? அந்த நிமிசம் உன் மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை செத்து போச்சுடா.”

 

“அப்போ எனக்கு மன்னிப்பே இல்லையா பேபி?”

 

“அவ்ளோ சீக்கிரம் வலி ஆறாது ரகு. இப்படி எல்லாம் பண்ணி என்னை சங்கடப்படுத்தாத.”

 

“ம்ம்ம்… இனி படுத்தமாட்டேன். நீயும், நம்ம பாப்பாவும் நல்லாயிருக்கணும்.” என்றவன் பெண்ணவளின் மணி வயிற்றில் முத்தமிட, கண்களை மூடி ஏற்றவளது இமை தாண்டி கண்ணீர் அவன் மீதே விழுந்தது.

 

“இப்போவாவது இது நம்ம குழந்தைனு நம்புறியா?” அவள் கேள்வி அவன் நெஞ்சினை சுருக்கென்று தைக்க, 

 

“நம்ம குழந்தைடி.” என்றவன், “நீ கூட என்னை வார்த்தையால வதைக்குறியே பேபி.” என்று இயலாமையில் அவளை நிமிர்ந்து பார்த்தபடி எழுந்துக் கொண்டான்.

 

“உன் அளவுக்கு இல்லை ரகு.”

 

“உண்மை தான். தப்பு பண்ணா தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும். ரகுநந்தனோட நட்புக்கும், உன் காதலுக்கும் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான். போறேன். ஆனால் காத்திருப்பேன் உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும். நீ வானு ஒரு வார்த்தை சொன்னா போதும் உன்னை தேடி வந்திடுவேன் பேபி” என்றவன் அங்கிருந்து கலங்கிய கண்களுடன் நகர்ந்து செல்ல, 

 

மானசாவின் வயிற்றில் மீண்டும் சுருக்கென்று வலி உருவாக, அவன் கரம் பற்றியபடி வலியில் “அம்மா” என்று கத்திக்கொண்டே தரையில் அமர்ந்தாள் பெண். அவள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய ரகுவரன் ஒரு நொடியில் பதறித்துடித்தான்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்