
அத்தியாயம்: 21
மஹதியின் முகத்தில் சின்னப் பளிச்சிடல். இவள் மருத்தவரை பார்த்து பேசிவிட்டு தான் வந்திருக்கிறாள் என்பதை அவளைப் பார்த்த நொடியில் புரிந்துக்கொண்டான் ஆதித்.
“ஆதித்!” என அவனை அழைத்தாள் மஹதி.
“உனக்கு இங்கே என்ன வேலை மஹதி?” என்றான் கோபமாக ஆதித்.
“அதான் அந்த ஆரா உன்னை மறந்துட்டாளே, அப்பறம் எந்த நம்பிக்கையில அவ பின்னாடி சுத்திட்டு இருக்க ஆதித்?” எனக் கோபமாகக் கேட்டாள் மஹதி.
“இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விசயம் மஹதி, உன் வழியைப் பார்த்து போயிரு. ஆரா என்னை விட்டு போயிடுவா எப்போ சான்ஸ் கிடைக்கும் வந்து ஒட்டிக்கலாம்ன்னு நினைக்காதே. ஆராவுக்கு அப்பறம் யாரையும் என்னால அந்த இடத்தில் வச்சி பார்க்க முடியாதுன்னு முதலில் நீ புரிஞ்சுக்கோ மஹதி” என விரல் நீட்டி எச்சரித்தவன் அவளை விட்டு விலகி நடந்தான்.
“நீ எவ்வளவு தூரம் என்னை விலகி போனாலும். ஐ வில் ஃபாலோ யூ ஆதித்” என அவன் செவிகளில் தெளிவாய் விழும் படி தான் கத்திக்கொண்டிருந்தாள் அவள். அவள் பேசவதை பொருட்படுத்தாது. அவனோ முன்னேறி நடந்தான்.
***********
ஆராவை மருத்துவமனையில் விட்டுவிட்டு. அவளின் தாய் தந்தை வீட்டிற்குள் நுழைந்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. அவனுடன் விக்கியும் இருந்தான். மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம். மகேஷை ஆராவின் அறைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையும் போட்டு வைத்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறான்.
“ஆதித்! சுதா உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னாள்” என்றான் விக்கி.
“என்ன விசயம்? நீயே கேட்க வேண்டியது தானே” எனப் பேசியபடி அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் கடைசியாகப் பார்த்த போது பாழடைந்து கிடந்த கட்டிடம் இப்போது எவ்வாறு இப்படிப் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. அதோடு அந்த மகேஷூக்கு எப்படி ஆராவின் தாய் தந்தை பற்றித் தெரிந்திருக்க முடியும்? எனப் பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விடைக் கிடைக்குமா? என்ற எண்ணத்தில் அவன் வீட்டிற்க்குள் நுழைந்தான்.
“கேட்டேன் ஆதித்! சுதா, ஆராவை பார்க்கணும்னு சொன்னாள்”என்றான் தயங்கி தயங்கி.
“சரி வந்து பார்த்திட்டுப் போகச் சொல்லு” என எளிதாய் சொல்லிவிட்டு முன்னேறி நடந்தான் ஆதித்.
“உனக்குச் சுதா மேல் கோபம் இல்லையா?” எனக் கேட்டான் விக்கி.
“இல்லைடா, மகேஷ் பத்தி சுதா சொல்லலைனா தெரிஞ்சிருக்காது. அட்லீஸ்ட் கடைசி நேரத்திலாவது சொன்னாளே, நீ நாளைக்குக் கூட்டிட்டு வந்து காட்டு சுதாவோட நியாபகம் ஆவது ஆராவுக்கு இருக்குதா பார்ப்போம்” எனச் சொன்னான் ஆதித்.
“நாளைக்கு வரைக்கும் ஏன் வெயிட் பண்ணணும் சுதா இங்கே தானே இருக்கா வர சொல்லிடலாம். நானே சுதா மேல் கோபமா தான் இருந்தேன். ஆனால் அவ ரொம்ப அழுது மன்னிப்பு கேட்டா டா மனசு கேட்கலை” என்றான் விக்கி.
“சரி சரி சுதாவை தனியா போய்ப் பார்க்க வேண்டாம்ன்னு சொல்லு ஏன்னா ஆரா எப்படி ரியாக்ட் பண்ணுறான்னு நான் தெரிஞ்சுக்கணும். இப்போ வந்த வேலையைப் பார்க்கலாமா” என்றான் ஆதித்.
“சரிடா” என விக்கி பதில் கொடுத்தான்.
அந்தப் பிரம்மாண்ட வீட்டின் வரேவேற்பறையில். மகேஷூடன் திருமணக் கோலத்தில ஆரா நின்றிருப்பது போல் புகைப்படம். துருப்பிடித்த ஆணியில் தொங்கி கொண்டிருந்தது. அதன் அருகிலே எண்பதுகளில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கருப்பும் வெள்ளையுமாகத் தொங்கி கொண்டிருந்தது . அதுவும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது மட்டும் தெளிவாய்ப் புரிந்தது. ஆனால் அதனுடைய சட்டம் புதிதாய் இருந்தது.
மேலும் முன்னேறி வீட்டினுள் சென்றான் விட்டின் சமையலறை பெரிதாய்க் காணப்பட்டது. அப்படியே ஒவ்வொரு அறையாக ஆராய்ந்த படி நடந்தான் ஆதித் கிருஷ்ணா.
“ஆதித்! நிஜாமாகவே மகேஷூக்கும் ஆராவுக்கும் திருமணம் ஆகிடுச்சா?” எனப் பதற்றத்தில் கேட்டான் விக்கி.
“நிச்சயமாக இருக்காது” என ஆதித் பேசிக்கொண்டிருந்த போது ஆதித்தின் நண்பனும் காவலனும் ஆன ராகவனிடம் இருந்து ஆதித்திற்கு அழைப்பு வந்தது. “ஒரு நிமிசம்” விக்கியிடம் ஒரு விரலை காட்டியவன் அழைப்பை ஏற்றான்.
“ராகவ்!” என்றான் ஆதித்.
“ஆதித்! ஒரு முக்கியமான விசயம். அந்த மகேஷ் பத்தி பேக்க்ரவுண்ட செக் பண்ணிட்டேன். அவன் ரொம்ப டேஞ்சரஸ். எப்படியாவது ஆராவை அவன்கிட்ட இருந்து காப்பத்தணும்” என்றான் அவசரமாக.
“என்ன சொல்லுற ராகவ்?” அதிர்வுடன் கேட்டான் ஆதித்.
“இப்போ நீ எங்கே இருக்க ஆரா கூடத் தானே?”
“நோ, ஆரா ஹாஸ்பிட்டல்ல இருக்கா, நான் ஆராவோட அப்பா அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். மகேஷ் பத்தி எதாவது தெரியுமான்னு பார்க்க வந்திருக்கேன்” என்றான் ஆதித்.
“அய்யோ ஆதித் தப்பு பண்ணிட்டியே. அந்த மகேஷ் கூட எதுக்குத் தனியா விட்டுட்டு வந்த” எனக் கோபமாய்க் கத்தினான் ராகவ்.
அதே சமயம் மருத்துவமனையில்,
“மேடம்! நீங்க சாப்பிடமாட்டேன்னு அடம் பிடித்தால், நாங்க எப்படி மெடிசன் கொடுக்க முடியும் என ஆராவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் அந்தச் செவிலிப் பெண்.
“எனக்கு எதுவும் வேண்டாம்” பிடிவாதமாய்ப் பதில் கொடுத்தாள் ஆரா.
“மேடம் ப்ளீஸ்” என மீண்டும் கெஞ்சலாய் அவள் தொடங்கிய போது.
“மஹியை வரச் சொல்லுங்க” எனக் கட்டளை போலச் சொன்னாள் ஆரா. செவிலிப்பெண்ணோ அவனை உள்ளே அழைத்து வர மறுப்பு தெரிவித்தாள். அப்போது அந்த அறையே அதிரும் படிக் கத்தினாள் ஆரா.
என்ன செய்வதென்று தெரியாமல் செவிலிப்பெண் வெளியே சென்ற போது. அதற்காகவே காத்திருந்த மஹதியோ அந்த அறைக்குள் நுழைந்தாள்.
“உன்னோட மஹிகிட்ட நான் கூட்டிட்டு போகவா?” என மஹதி ஆராவை பார்த்து கேட்க அவளோ சிறுப்பிள்ளை போல் தலையாட்டினாள் ஆரா. விஷபாம்பு தன் இறைக்குக் காத்திருப்பது போல் இருந்தது மஹதியின் பார்வை.
“வா நான் கூட்டிட்டு போறேன்” எனச் சொன்னவள் மர்மமாய்ச் சிரித்தாள். அவள் எண்ணம் ஈடேறே போவதாய் நினைத்துக் கொண்டிருந்த மஹதி. ஒரு பக்கம் மகிழ்ந்தாலும் ஆராவை எப்படி இந்த மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்வது என்று குழம்பி போனவள். அருகில் இருந்த ஸ்டெரச்சரில் ஆராவை அமர வைத்தாள் மஹதி.
“நம்ம ஹாஸ்ப்பிட்டல் விட்டு வெளியே போகுற வரைக்கும் அமைதியா இருக்கணும்” என மஹதி சொல்வதை நம்பியதோடு தலையசைத்து அமர்ந்தவளின் முகத்தில் பேஸ் மாஸ்க்கை மாட்டி விட்டாள் மஹதி.
******************
பிருந்தாவனம் பேலிஸிற்குள் காரை இயக்கியபடி வந்தான் அஜய். அவனை இவள் ஏன் வேண்டாமெனச் சொன்னாள் என்பதை எல்லாம் அவன் ஆராய விரும்பவில்லை. அவனுக்குக் கொடுத்த கடமையை முடிக்கும் பொருட்டு லாவண்யாவை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அஜய். லாவண்யாவோ மௌனத்திலே நேரத்தை கழித்தாள்.
“சின்ன மேடம் வீடு வந்திருச்சு”
“தேங்க்ஸ்” என அமைதியாய் சொன்னவள் வீ்ட்டிற்குள் நுழைந்தாள். அவளின் வருகைகயை எதிர்நோக்கி காத்திருந்தனர் யசோதாவும் கோதண்டமும்.
“அங்கேயே நில்லு!” என்றார் கோதண்டம்.
“டாட்” என்றாள் லாவண்யா.
“என்ன தைரியம் இருந்தால் மஹதியோட திங்க்ஸ்லாம் அவ வீட்டில எடுத்திட்டுப் போய்க் கொடுத்திருப்ப. அவ நம்ம வீட்டு மருமகன்னு உனக்குத் தெரியாதா?” எனக் கோபமாய்க் கத்தினார் கோதண்டம்.
“ஆரா அண்ணி தான் ஆதித் அண்ணாவுக்குப் பிடிச்சிருக்காம். நிச்சயம் ஆரா அண்ணியை அண்ணா கூட்டிட்டு வருவான்” என நிதானமாய்ச் சொன்னாள் லாவண்யா.
“அதைச் சொல்ல நீ யாரு” எனக் கத்தினார் கோதண்டம்.
“என்னங்க, என்ன பேச்சு பேசுறீங்க” என யசோதா பதறினார்.
“இல்லாததையா பேசிட்டேன், இருக்கிறதை தானே பேசுறேன்” என்றார் ஆத்திரம் குறையாமல். அவரோ பேசிக்கொண்டே போக,
“சும்மா இருங்க, அவ வந்ததும் வராததுமா ஆரம்பிக்கணுமா?”
“எல்லாமே ஆதித் சொல்லி தான் இவ பண்ணிட்டு இருக்கா” என்றார் கோதண்டம்.
“அண்ணா என்கிட்ட அப்படி எதுவும் சொல்லலை, மஹதியோட திங்க்ஸை நானாகவே தான் எடுத்திட்டுப் போய்க் கொடுத்தேன்”எனச் சொன்னவளின் விழிகளைத் தாண்டி வழிந்த கண்ணீரை ஓடி வந்து யசோதா துடைத்துவிட்டார்.
“என் பொண்ணை அழ வைக்காதீங்க” எனக் கோபமாகக் கத்தினார் யசோதா.
“அந்த மஹதிக்கு உன் பையன் ஆதித்தை கல்யாணம் பண்ணிக்கொடுக்கிறதா வாக்கு கொடுத்திருக்கோம். அதுக்கு உன் பொண்ணு இடைஞ்சலா இருக்கிறது உனக்குத் தெரியலையா யசோதா? இவ எப்படி மஹதியை இந்த வீட்டுக்கு வரவேண்டாம்ன்னு சொல்லலாம்” என மீண்டும் கோபமாகக் கத்திக் கொண்டிருந்தார் கோதண்டம்.
“அவ நம்ம பொண்ணுங்க” என அழுத்தமாய் யசோதா சொன்ன போது,
“நான் உங்க பொண்ணு இல்லைன்னு எனக்குத் தெரியும்” என்ற லாவண்யா விறுவிறுவென மாடிபடிகளில் ஏறினாள் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
“ஏய் நில்லு லாவண்யா! உன்கிட்ட யார் சொன்னது?” என்ற தாயின் கேள்விக்குக் கூட அவள் பதில் சொல்லவில்லை.
அவள் இந்த வீட்டுப் பெண் என்பது நினைத்து தான் அஜய் அவளிடம் காதலை சொல்லியிருப்பான் என நினைத்து, காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அவள் இந்த வீட்டுப் பெண் இல்லை என்பது அஜய்க்கு தெரிந்தால் தன்னை விட்டு விலகி சென்றுவிடுவான் என்ற பயம். அவன் ட்ரைவராய் இருந்த வரையில் லாவண்யாவிற்கும் அஜய் மீது ஈர்ப்பு இருந்தது. அவன் பெரிய நிறுவனத்தின் முதலாளி என்று தெரிய வந்ததோ. சிறிதாய் துளிர்த்த காதலையும் தனக்குள் புதைத்துக்கொண்டாள்.
ஆதித் அங்கு இல்லை என்பதை அறிந்த அஜயோ காரின் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்க்குள் நுழைந்தான். ஆனால் லாவண்யாவின் முன் மீண்டும் போய் நின்று அவளுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த அவன் விரும்பவில்லை. கோதண்டத்திடம் சாவியைக் கொடுத்து விட்டு கிளம்புவதற்காக அவன் உள்ளே நுழைந்தான்.
“கோதண்டம் சார்!” என அழைத்தபடி வந்தான். அவனின் குரல் அறையில் இருந்தவளுக்குக் கேட்க, அறையில் இருந்து வெளியே வந்தவள் கீழே எட்டி பார்த்தாள். அவளின் எண்ணத்தின் நாயகன் கையில் கார் சாவியுடன் வரவேற்பறையை நோக்கி நடந்து வந்தான்.
“ஏய்! ஏய் வீட்டுக்குள்ள வர்ற அளவுக்குத் தைரியம் வந்திடுச்சா. வெளியே நில்லு” எனக் கோதண்டம் சொல்வதை மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா.
“சாரி சார்! கார் கீயை கொடுத்திட்டு போகலாமன்னு வந்தேன்” எனப் பணிவாய்ச் சொன்னான் அஜய்.
“அதுக்குத் தொறந்த வீட்டுக்குள்ள எதோ நுழைந்த மாதிரி வந்திடுவீயா?” என மேலும் கேள்வி எழுப்பினார். யசோதா சமையலறைக்குள் இருந்தார்.
“சாரி சார்” என மன்னிப்பு வேண்டி அவன் தலைக் குனிந்து நின்ற போது, லாவண்யாவுக்கு இதயத்தின் ஓரத்தில் எங்கோ வலிப்பதாய் தோன்றியது. அது காதல் என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை.
“சரி சரி, எத்தனை நாளைக்கு லீவ் எடுக்கப் போற?”
“லீவ் இல்லை சார் வேலைய விடப் போறேன்” என்றான் அஜய். கோதண்டம் இவ்வளவு பேசிய பின்பும் அவன் அமைதியாய்ப் பேசிக்கொண்டிருப்பது லாவண்யாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் வரவழைத்தது. எதற்காக இவன் இறங்கி போகிறான் என்ற கோபம் தான் அது. இத்தனை நாள் காதலுக்காக இறங்கி போன வரை சரி, ஆனால் இப்போது தான் அது இல்லை என்று ஆகிவிட்டதே. அவள் இந்த வீட்டுப் பெண் இல்லை என்று ஆகிவிட்டதே. என்ற கோபம் எழுந்ததோடு அவனுக்கு இவள் வாய் மலர்ந்தாள்.
“ஹே மேன்!!” என்றாள் மாடியில் இருந்து எட்டி பார்த்தபடி,
“மேம்!!” எனச் சொன்னவன் அன்னார்ந்து பார்த்தான்.
“லீவ்லாம் தர முடியாது. இப்போ நான் வந்திடுவேன் காரை ரெடி பண்ணி வை” எனக் கட்டளையாய் சொல்லியவள் அறைக்குள் சென்றாள்.
“மேடம் லீவ் இல்லை” எனத் தயங்கி நின்றான் அவன்.
“அதான் மஹாராணியம்மா சொல்லிட்டாங்கல்ல லீவ்வெல்லாம் கிடையாதாம் போ போய்க் காரை ரெடி பண்ணு” என்றார் கோதண்டம். புரியாதபடி அந்த வீட்டை விட்டு வெளியேறினான். காதல் வேண்டாம் என்று சொன்னவள் இப்போது எதற்காக இப்படி நடந்துக்கொள்கிறாள் என்பதைப் புரிந்துக்கொள்ள இயலாமல், மீண்டும் காரின் அருகே வந்து நின்றுக்கொண்டான்.
அறைக்குள் சென்றவள் நடந்தவற்றை ஆதித்துக்கு அழைப்பு விடுத்துச் சொன்னாள். ஆதித் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை லாவண்யாவிடம் சொல்லாமல், அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“உனக்கு யார் சொன்னது நீ நம்ம வீட்டு பொண்ணு இல்லைன்னு” என ஆதித் கேட்டான்.
“யாரும் சொல்லை அண்ணா, நானே தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் லாவண்யா.
“அண்ணாகிட்ட லாவ்குட்டி பொய் சொல்லாதே” என்றான் அவன்.
“நான் என்னோட பர்த் சர்டிபிகேட் அப்பறம், என்னைச் சாந்தி இல்லத்தில் இருந்து தத்தெடுத்தற்கான டாக்குமென்ட் எல்லாத்தையும் பார்த்திட்டேன்” என்றாள் அழுகையுடன்.
“ஹே லாவ் அழாதே!” பதறினான் ஆதித். அவளின் அழுகை நின்ற பாடில்லை.
“அண்ணா சொன்னால் கேட்க மாட்டியாடா?” எனக் கேட்டான் ஆதித்.
“அப்போ, நான் உன் கூடப் பொறக்கலை, நான் அநாதையா அண்ணா?” எனக் கேட்டவள் மேலும் அழுதாள். அவளுக்கு முன்பே தெரிந்திருந்தாலும் இத்தனை நாள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடந்துக்கொண்டிருந்தாள் லாவண்யா. ஆனால் இப்போது அவளால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம் அஜய் அவள் மீது வைத்திருக்கும் அன்பு.
“லாவ்! அண்ணா சொல்றதைக் கேளு. நீ பார்த்தது உண்மையா கூட இருக்கலாம். ஆனால் நீ தான் என்னோட பாசமான தங்கச்சி புரிஞ்சுதா? நீ எதையும் நினைச்சு கவலைப்படாதே. அஜயை கூட்டிட்டு பாண்டிக்கு வா” என்றான்.
“அங்கே எதுக்கு அண்ணா?” எனக் கேட்டாள் லாவண்யா.
“உங்க இரண்டு பேரோட உதவியும் எனக்குத் தேவை, வருவியா? மாட்டியா? லாவ்குட்டி” என அவன் சொன்ன போது,
“வர்றேன் அண்ணா” எனத் துரிதமாய்ப் பதில் கொடுத்தாள் அவள்.
“உன்னோட எதிர்காலத்தையும் கூட்டிட்டு வா” என ஆதித் சொன்னதைக் கேட்டு அவளின் கன்னங்கள் சிவந்தது. அவனுக்குத் தெரியும் அவள் வீட்டிலே அடைப்பட்டுக் கிடந்தாள் எதையாவது யோசித்துத் தன்னை வருந்திக்கொள்வாள் என்று. லாவண்யாவுக்காகத் தான் மஹதியுடனான நிச்சயதார்த்திற்குச் சம்மதித்தான் ஆதித். லாவண்யா மீது அவனுக்கு அளவுகடந்த அன்பு எப்போதும் இருப்பதால் தான் அவளை நன்கு புரிந்து வைத்திருக்கிறான் ஆதித்.
“சரி அண்ணா” எனப் பதில் கொடுத்தவள் அழைப்பை துண்டித்து விட்டு தன் உடைகளை ஒரு பையில் எடுத்து அடைத்தாள்.
பையை எடுத்துக் கொண்டு அவள் கீழே இறங்கிய போது, அவளை யசோதா எதிர் கொண்டார்.
“லாவண்யா! எங்கே கிளம்பிட்ட?”
“நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லைம்மா, ஃப்ரெண்ஸோட ட்ரிப் போறேன்” எனப் பதில் கொடுத்தாள். அவளுக்குத் தெரியும் இங்கே என்ன சொன்னாலும் அது ஜெகன்நாதனுக்கும் அவரின் மகள் மஹதி காதுக்கும் விசயம் போய்ச் சேர்ந்துவிடும் என்பதற்காகப் பொய்யுரைத்தாள் பெண்.
“யார் சொல்றதையும் நம்பாதேம்மா, நீ எங்களோட பொண்ணு தான்.” என அவளை ஆதூரமாய்க் கட்டிய படி சொன்னார் யசோதா.
“சரிம்மா” எனப் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தவளை முறைத்தபடி நின்றிருந்த கோதண்டத்தைக் கண்டுக்கொள்ளாமல் வாயிலை நோக்கி நடந்தாள் லாவண்யா. அவளின் கையில் இருந்த பையைப் பார்த்தவுடன் மிரண்டு போய் நின்றான் அஜய்.
“என்ன பார்க்கிற மேன், தூக்க முடியாமல் தூக்கிட்டு வர்றேன்னு தெரியுதுல வாங்கி டிக்கில வைக்கக் கூடாதா?” என அதட்டலாய் சொன்னாலும் குறுநகை அவளிதழில் தவழ்ந்தது.
“போய்ட்டு வர இரண்டு மூணு நாள் ஆகும், ட்ரெஸை எடுத்து வச்சிக்கோ” என்றாள். அவனோ அவளின் பையைக் காரின் டிக்கியில் வாங்கி வைத்தபடி,
“இருக்கு மேடம்” எனப் பதில் கொடுத்தான்.
“சரி சரி கிளம்பலாம்” எனக் காரின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்துக்கொண்டாள் லாவண்யா. அவளின் செயல்கள் புரியாமல் அவன் குழப்பமாய் விழித்தபடி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்க ஆரம்பித்தான்.
“என்ன மேன்? என்னைப் பார்த்து வண்டி ஓட்டிட்டு இருக்க ரோட்டை பார்த்து ஓட்டு மேன்” என்றாள்.
“இல்லை! இப்போ நான் என்ன செய்யணும்” புரியாது கேட்டான் அவன்.
“இப்போ வண்டியை ஓட்டணும்” நக்கலாய் பதில் கொடுத்தாள்.
“அதான் எங்கே போகணும்”
“போகும் போதே எங்கே போகணும்ன்னு கேட்குறீயே, போற காரியம் விளங்குமா” எனத் தலையில் அடித்துக்கொண்டாள். ஆனால் சிரித்துக்கொண்டு தான் இருந்தாள்.
“மேடம்!!” என அவன் வார்த்தைகளை உள் இழுத்தான்.
“அதான் லவ்வை சொல்லிட்டியே அப்பறம் என்ன மேடம்ன்னு சொல்லிட்டு இருக்க?” எனக் கேட்டாள் அவள். அவனோ மீண்டும் அவளைப் பார்த்தான்.
“என்ன பார்க்கிற நல்லா யோசிச்சு பார்த்து தான் முடிவெடுத்திருக்கேன். நீ டிக்கில வச்சிருக்கீயே ட்ரவல் பேக், அதில எங்க அண்ணா எனக்கு ஆசையா எடுத்துக்கொடுத்த பட்டு புடவை இருக்கு. கொஞ்சம் நகையும் எடுத்திட்டு வந்திருக்கேன்”
“எதுக்கு?” என அவன் கேட்டான்.
“கல்யாணத்துக்கு இதெல்லாம் தேவைப்படும்ல” என்றாள் அவள்.
“யாருக்கு கல்யாணம்??” எனக் கேட்டான் அவன்.
“வேற யாருக்கு நம்ம இரண்டு பேருக்கும் தான். போற வழில மாலை தாலி, அப்பறம் உனக்குப் பட்டு வேஷ்டி சட்டை எல்லாம் வாங்கிக்கலாம்” என அவள் சொல்ல.
“அய்யோ மேடம்! என்ன சொல்லுறீங்க” எனப் பதறிய படி காரை நிறுத்தினான்.
“எனக்குத் தெரியாமலே எங்க அண்ணாக்கிட்ட பேசி, என்னைய கரெக்ட் பண்ணுறதுக்கு, என்னோட காருக்கு ட்ரைவரா ஆகும் போது வராத பதற்றம், அங்கே மறைஞ்சி இங்கே மறைஞ்சி என்னைப் போட்டோ பிடிச்சு வச்சப்போ வராத பயம், அப்பறம் திடீர்ன்னு ஒரு நாள் லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு. நான் ஒரு கம்பெனியோட முதலாளின்னு சொல்லும் போதும் கூடத் துளியும் அச்சம் வரலை,இவ்வளவு செஞ்ச உனக்கு என் கழுத்தில தாலி கட்டுறது அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? அப்படியே ஷாக் அகுற?” என அவள் வரிசையாய் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி போய்ப் பாவமாய்ப் பார்த்தான் அஜய்.
***********

