Loading

தேசம் 21

தாமதமாக உறங்கியவள் கண்கள் எழ மறுத்தது. சூரியன் பளிச்சென்று வீட்டு ஜன்னலை தாண்டி அவள் கண்களை ஊடுருவினான். அதன் தாக்கம் பிடிக்காமல் போர்வையை இழுத்து போற்றியவள் கால் மடக்கி குறுகி படுக்க, பக்கத்தில் இருந்தவன் கைகள் நேராக படுக்க வைத்தது.

நல்ல நித்திரை அதை தொந்தரவாக எண்ணியது. தூக்கத்திலேயே, “ம்ம்… ப்ச்!” என ஓசை கொடுத்து தனக்கு விருப்பமான நிலையில் படுத்தாள்.

“ஐயோ! பாப்பாக்கு வலிக்கும்.” என்றவன் பதற்றத்தோடு வயிற்றை ஒட்டி இருந்த கால்களை நீட்டி விட்டான்.

தூக்கத்தில் இருந்தவள் கண்கள் மின்னல் வேகத்தில் திறந்தது. போர்வைக்குள் இருந்தாலும் வரும் வாசம் அவன் அருகாமையை உணர்த்தியது. கட்டியவன் முகத்தை பார்க்க விருப்பம் இல்லாது மீண்டும் அதே போல் படுக்க,

“அச்சோ! என்ன தனாமா அம்மாக்கு வலிக்க போகுது” என்றான்.

அவளையும் மீறி கண்ணிலிருந்து உப்பு நீர் வெளியேறி காது பக்கம் நுழைந்து முடிக்குள் மறைந்தது. மனதுக்குள் அசைக்க முடியாத பாரம். நிச்சயமாக இந்த நிமிடம் கோபம் இல்லை என்றாலும் மனதில் உண்டான விரக்தியை தடுக்க முடியவில்லை. சரவணப் பொய்கையின் பேச்சு தீ சூழ்ந்து கொண்ட எரிச்சலை கொடுத்தது. இல்லாத தாய்க்கு வலிக்கும் என்று வருத்தப்படுபவன் என் மீது துளி கூட காட்டவில்லையே என்ற ஆதங்கம் நெஞ்சை ரணமாக்கியது.

வலிகள் இவனுக்கு மட்டுமா! நடந்த சம்பவத்தில் அவளும் தானே வேதனையை அனுபவித்து இருக்கிறாள். அதிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் நேரம் தான் இவன் வந்தது. இழந்த வலி மீண்டும் நெஞ்சை தாக்கியது. தன்னைப்போல் ஒருவனா என்ற கேள்வி தான் நெருங்க வைத்தது.

வலியின் அளவை அறிந்தவள் போக்கும் மருந்தானாள். அதை அறியாதவன் ரணமாகி காய்ந்து போன தழும்பை விரல் நகம் கொண்டு ஆழமாக கிழித்து விட்டான். நம்பிக்கையை சிதைப்பது போன்றதொரு வேதனை இவ்வுலகில் எதுவுமில்லை. அதை முழுதாக அனுபவித்துக் கொண்டிருப்பவள் கண்ணீர் இன்னும் நிற்காமல் வந்து கொண்டிருக்கிறது.

“அன்னம்! நீ எப்ப வருவன்னு இருக்கு. இந்த ஒரு ராத்திரிய கடக்கவே மூச்சு முட்டிடுச்சு எனக்கு. இந்த தடவை உன்னை நிச்சயம் தவற விட மாட்டேன்.” வயிற்றை தடவி முத்தமிட்டான்.

முத்தமிட்ட இடம் அருவருப்பான உணர்வை கொடுத்தது. கணவன் செயல் வயிற்றில் இருக்கும் சிசுவின் மீது வெறுப்பை வர வைத்தது. கூடவே வந்த வேகம் போல் செல்லவிருக்கும் துரதிஷ்டத்தை எண்ணியும் கலங்கினாள்.

“தனா! தனா!”

“ம்ம்!”

“எந்திரிமா”

“எதுக்கு?”

“மணி எட்டாகுது இதுக்கு மேல தூங்க கூடாது.”

“ஏன்?”

“அம்மாக்கு பசிக்கும்ல.” என்றதும் உடைந்த ஓடை நின்றது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திடமாக போர்வையை விலக்கியவள், “எனக்கு பசிக்காதா” என புன்னகைக்க,

“உனக்கும் தான்” கன்னம் கிள்ளினான்.

“அப்போ டிபன் செஞ்சு எடுத்துட்டு வாங்க… போங்க”

“அதெல்லாம் நாலு மணிக்கே எழுந்து செஞ்சிட்டேன். மேடம் எந்திரிச்சு குளிச்சிட்டு சாப்பிட்டா போதும்.”

“இந்த அக்கறை இவ்ளோ நாளா இல்லயே, ஏன்?”

“முன்னாடி உன்ன கவனிக்க வேண்டிய தேவை இல்ல. இப்ப அப்படியா… உனக்கு சிரமமா இருக்கும்ல.”

“எனக்கு சிரமமா இருக்குமா இல்ல வர போற உங்க அம்மாக்கு சிரமமா இருக்குமா?”

“ரெண்டு பேருக்கும்”

“உங்களுக்கு நான் முக்கியமா இல்ல இந்த குழந்தை முக்கியமா” என்றதும் வயிற்றை தடவிக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்தான்.

“குழந்தை மேல சத்தியமா உண்மையை மட்டும் தான் சொல்லணும்.”

“அம்மா’னா ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு அப்புறம் நான் மனசார நேசிச்சது உன்னை மட்டும் தான். உங்க ரெண்டு பேர்ல யாரு முக்கியம்னு கேட்டா சொல்ல தெரியல. பார்க்கவே முடியாதுன்னு நினைச்ச எங்க அம்மாவ கொடுத்திருக்க உன் மேல மரியாதை ரொம்ப அதிகம் ஆயிடுச்சு. கூடவே இந்த கேடு கெட்டவனை மன்னிச்சு விட்டுப் போகாம கூடவே இருக்க உன் காதலுக்கு அடிமையாகிட்டேன். நீங்க ரெண்டு பேரும் என் கூட இருந்தா போதும் வேற எதுவும் சாமி கிட்ட கேட்க மாட்டேன்.”

“எங்கயும் போக மாட்டோம். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் உங்க கூட தான் இருப்போம்.”

“என்னதான் சந்தோஷமா இருந்தாலும் மனசு ஓரத்துல ஒரு மாதிரி இருக்கு தனா”

“என்னாச்சு சரவணா?”

“நீ என்னை மன்னிச்சது ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. கூடவே குழந்தை விஷயம் தெரிஞ்சதுல இருந்து…” என தன் உணர்வுகளை சொல்ல முடியாமல் தடுமாற, எழுந்தமர்ந்தவள் தன் மடியில் அவனைப் போட்டுக் கொண்டு,

“மன்னிப்பெல்லாம் புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வரவே கூடாது சரவணா. தப்பு பண்ணாத மனுஷங்களே இந்த உலகத்துல இல்லை. மத்தவங்களை மாதிரி நீங்க ஒன்னும் தவறான எண்ணத்துல எதுவும் பண்ணல. உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு இந்த அளவுக்கு பண்ண வச்சிருக்கு. நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம குழந்தைக்காக வாழ்வோம்.” என நெற்றியில் முத்தமிட வர, குனியாமல் பிடித்துக் கொண்டான்.

“ரொம்பத்தான்”

“இனிமே குனிஞ்சு நிமிருர வேலையெல்லாம் வச்சுக்க கூடாது. ஃபுல் பெட் ரெஸ்ட் தான். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நான் செஞ்சு தரேன்.”

“ஐயா அப்படியே வருஷம் முழுக்க வீட்ல உட்காரலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா. என் பின்னாடி சுத்திட்டு இருந்ததெல்லாம் போதும் இனிமே ஒழுங்கா ஆஃபீஸ் போங்க.”

“அதெல்லாம் முடியாது. இந்த மாதிரி நேரத்துல உன்ன தனியா எப்படி விட்டுட்டு போக முடியும்.”

“ஏன், நான் தனியா இருந்தா பேய் பூதம் வந்து பிடிச்சிட்டு போயிடுமா.”

“அப்படி இல்லம்மா…” என அவன் புரிய வைக்க முயல,

“நம்ம குழந்தையோட எதிர்காலத்துக்காகவாது நீங்க வேலைக்கு போய் தான் ஆகணும். இனிமே செலவ கட்டுப்படுத்த முடியாது. உங்க அம்மா உங்க அம்மாவா இருந்து கஷ்டப்பட்டதெல்லாம் போதும். உங்க குழந்தையா வந்தாவது சந்தோஷமா இருக்கட்டும்.”  என்றவளை ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றான்.

கடைசி வரை அதற்கு சம்மதிக்காதவள், “வேலைக்கு வேணா ஒரு ஆள் வச்சுக்கலாம். நீங்க இனிமே வீட்ல இருக்க கூடாது அவ்ளோ தான்.” என்று விட்டாள்.

“சரி, ஒரு ஆள் கிடைக்கிற வரைக்கும் நான் வீட்ல இருக்கேன்.”

“இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டேன். இது என்னோட ஆர்டர்.”

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான் சரவணப் பொய்கை. கண்டும் காணாமலும் குளித்து முடித்து வந்தவள் காலை உணவை முடித்துவிட்டு கோவில் செல்வதாக கிளம்ப, “இந்த டைம்ல ரொம்ப நடக்க கூடாது.” தடுத்தான்.

“நான் ஒரு டாக்டர் நியாபகம் இருக்கா?”

“கைனகாலஜி டாக்டர் இல்ல அது உனக்கு நியாபகம் இருக்கா.”

“எதுவோ ஒன்னு. மெடிக்கல் பீல்டுல இருக்க எனக்கு எது பண்ணனும் பண்ண கூடாதுன்னு நல்லா தெரியும். சும்மா பயந்து சாகாம கிளம்பி வேலைக்கு போங்க. நான் வரும்போது நீங்க இங்க இருக்க கூடாது.”

எச்சரிக்கை கொடுத்தவள் கோவிலுக்கு கிளம்பினாள். மனம் பொறுக்க முடியாமல் அவளை பின்தொடர்ந்தான். பின்னால் வருவதைக் கண்டும் காணாமலும் தன் வேலைகளை கவனித்தாள் பிரார்த்தனா. அவள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பயந்து துடித்தவன் எப்போது வீடு வந்து சேர்வாளோ என நொந்து போனான்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவளை கண்டு மனம் நிறைந்தவன் அலுவலகம் கிளம்பினான். அதுவரை பார்க்காதது போல் நடித்துக் கொண்டிருந்தவள் ஜன்னலோரம் நகர்ந்து கார் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

***

இன்று தான் வேலைக்கு வந்ததால் பரபரப்பாக இருந்தது அலுவலகம். முதலாளி இல்லாத அலுவலகம் எப்படி இருக்கும் என்பதற்கு இவன் அலுவலகம் சிறந்த உதாரணம். இடைப்பட்ட நாட்களில் விட்டுப் போன அனைத்து வேலைகளையும் கோப்பாக தயாரித்து எடுத்து வர சொன்னவன் அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி அனைத்து வேலையாட்களையும் ஒரு வழி செய்து விட்டான்.

மதியம் வரை வேலை ஓய்ந்த பாடில்லை. மதிய உணவை கூட ஒதுக்கி வைத்தவன் ஒருவழியாக சீர் செய்த நிம்மதியில் இருக்கையில் சாய்ந்தான். கண்கள் சற்று நேரம் ஓய்வு கொடு என்றிட இமை மூடி அமைதியாக அமர்ந்திருந்தான். மூடிய இமைக்குள் மனைவியின் முகம் வரி கோடுகளாக தெரிய, அவளை அழைக்க கண் திறந்தவனுக்கு அவளே அழைத்திருந்தாள்.

ஆசையாக அவளிடம் பேச கைபேசியை காதில் வைத்தவன் அரண்டு போனான் எதிர்புறம் கேட்ட அழுகையில். பதற்றம் பேச்சை நிறுத்தி விட என்னவென்று கேட்க மறந்தான். சத்தமிட்டு கதறியவள் உடனே அவனை வீட்டிற்கு அழைத்தாள். அவசரத்தை உணர்ந்தவன் வேகமாக வீட்டை நோக்கி ஓடினான்.

அவன் நேரம் சாலை எங்கும் போக்குவரத்து நெரிசல். ஒலிபெருக்கியை அடித்தே ஓய்ந்து போனவன் வீட்டை வந்தடைய ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. காரை விட்டு இறங்கியவன் தன் மனைவியை தேடி ஓடினான். அங்கு அவன் கண்ட காட்சி உயிரை துறக்க செய்தது.

பிரார்த்தனா ஆடை நடுக்கூடத்தில் இருக்க அதில் சிகப்பு நிற சாயம். போதாக்குறைக்கு வெள்ளை நிற தரை முழுவதும் ரத்த திட்டுக்கள். அடுத்த அடி எடுத்து வைக்க துணிவின்றி அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் வாய் மெல்ல, “தனா” என உச்சரிக்க, பதில் கொடுக்க அங்கு அவள் இல்லை.

ரத்தத் திட்டுகளில் உறைந்து போன மனதை மீட்டெடுத்து அவளை சத்தமிட்டு அழைத்தவன் வீடு முழுவதும் தேடி வந்தான். இல்லாதவளை எண்ணி கலங்கியவன் கைபேசியை தொடர்பு கொள்ள,

“சொல்லுங்க சார்” என்றது ஒரு ஆண் குரல்.

மனைவியின் குரலுக்கு ஏங்கியவன் ஆணின் குரலைக் கேட்டு ஒரு நிமிடம் குழம்பினான். அதன்பின்னே தான் ஏற்பாடு செய்த ஆள் தான் பேசுகிறான் என்றறிந்து அழைப்பை துண்டித்தவன் மூளை எப்படி மனைவி அழைத்தால் என்பதை யோசிக்க தவறியது.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தவன் அங்கிருக்கும் தன் தாயின் புகைப்படத்தை பார்க்க, “நான் ஹாஸ்பிட்டலுக்கு போறேன்” என்ற வசனம் ஈர்க்க வைத்தது.

அன்னலஷ்மி புகைப்படத்தின் அருகில் சென்றவன் ரத்தத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தில் தன் உலகை தவற விட்டான். அதில் சாய்ந்து ரத்தக்கண்ணீர் வடித்தவன் எந்த மருத்துவமனை என்று தெரியாமல் பக்கத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனைக்கும் சென்று விசாரித்தான்.

அவள் பெயரில் யாரும் வரவில்லை என்ற பதில் தான் அனைத்து இடத்திலிருந்தும் வந்தது. நடு ரோட்டில் எங்கு செல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவன் எண்ணம் அவள் மருத்துவமனைக்கு செல்ல சொன்னது. உடனே அங்கு விரைந்தவன் அவளை விசாரிக்க,

“மேடம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்காங்க” என்றார் அங்கு பணிபுரியும் ஒருவர்.

மின்தூக்கியின் துணை நாடாமல் இரண்டு கால் பாய்ச்சலில் அந்த தரைத்தளத்தை அடைந்தவன் தன் மனைவியை தேடினான்.

“சார்” என்ற குரல் அவன் தேடுதலை நிறுத்த,

“மேடம தேடிட்டு இருக்கீங்களா?” கேட்டது.

தேசம் 22

வேகமாக தலையாட்டும் சரவணப் பொய்கையிடம், “இப்பதான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி மேடம் கிளம்பி போனாங்க.” என்றாள் அந்த பெண்.

“எங்க?”

“அது தெரியல சார்”

“அவங்களுக்கு என்னாச்சு? என் அம்மா…இல்ல… குழந்தைக்கு என்னாச்சு”

“அது சார்…”

“ப்ளீஸ்! மறைக்காம உண்மைய சொல்லுங்க.”

“பேபி மிஸ்கேரேஜ் ஆகிடுச்சு சார்.”

கேட்டதும் ஆயிரம் இடிகள் மனதில். உடல் நடுங்க தலை தானாக ஆடியது. பதில் சொல்லிய அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட, அப்படியே அங்கு அமர்ந்தவன் தான் அரை மணி நேரம் ஆனது எழ. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கதறி அழுதான். தாயை இழந்து இரண்டாவது முறையாக கதறியவன் தன்னைத் தேற்றத் துணை இல்லாது அப்படியே துவண்டு கொண்டிருக்க ஒரு கை தோளை தொட்டது.

திரும்பிப் பார்க்க விருப்பம் இல்லாது கண்ணீரை மட்டும் நிறுத்த, “சார்!” என்றார் பெண் மருத்துவர் ஒருவர்.

அவர் தோரணையைக் கண்டதும் மருத்துவர் என்பதை புரிந்து கொண்டவன் கண்களைத் துடைத்து கொண்டு எழுந்து நிற்க, “இப்ப அழுது என்ன ஆகப்போகுது? நீங்க பண்ணதுக்கு பிரார்த்தனா தான் அழுகணும். குழந்தை வேணாம்னு முடிவு பண்ணிருந்தா அதுக்கு ஏத்த மாதிரி இருந்திருக்கணும். அதை விட்டுட்டு மனசாட்சியே இல்லாம ஒரு உயிரைக் கொல்ல சொல்லி இருக்கீங்க. ஒரு பொண்ணா மட்டும் இல்லாம மருத்துவராவும் பிரார்த்தனாக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்னு யோசிச்சு பாருங்க.” என்ற அவரின் வார்த்தை சரியாக விளங்கவில்லை அவனுக்கு.

புருவம் மட்டும் இல்லாது முகம் முழுவதும் சுருங்கியது. அந்த சுருக்கம் மாறாது, “என்ன சொல்றீங்க? நான் கொல்ல சொன்னேனா…” கேள்வியை தொடுத்தான்.

“ஆமா, அதனால தான டேப்லெட் வாங்கிட்டு போயிருக்காங்க.”

“சத்தியமா நீங்க பேசுறது எதுவும் புரியல. கொஞ்சம் என்ன நடந்துச்சுன்னு விளக்கமா சொல்றீங்களா.”

“பிரார்த்தனா என்னை பார்க்க வந்திருந்தாங்க. வந்தவங்க முகத்துல கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை. என்னன்னு விசாரிக்கும் போது குழந்தை இருக்கிற விஷயத்தை சொன்னாங்க. வாழ்த்து கூட சொல்லி முடிக்கல அதுக்குள்ள என் ஹஸ்பண்டுக்கு இந்த குழந்தை வேணாமாம் டேப்லெட் எழுதி கொடுங்கன்னு சொன்னாங்க. நான் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்துட்டேன் பிரார்த்தனா கேட்கிற மாதிரி இல்லை.” என்றதே அவனுக்கு பெரிய அதிர்வாக இருக்க,

“என் ஹஸ்பண்டுக்கு தப்பான நிறைய பழக்கம் இருக்கு. அதுல ஒன்னு உடல் ரீதியா துன்பப்படுத்தி சந்தோஷத்த அனுபவிக்கிறது. இந்த குழந்தை வந்தா உடல் ரீதியா அவரை சந்தோஷப்படுத்த முடியாதுன்னு கலைக்க சொல்லிட்டாரு. நானும் கால்ல விழுந்து எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். கடைசி வரைக்கும் மனசு இறங்காதவர் குழந்தை இருக்குன்னு கூட பார்க்காம…என்னை ரொம்ப துன்புறுத்திட்டாரு. என் கஷ்டம் என்னோட போகட்டும் குழந்தைக்கு வேணாம்னு நானும் இங்க வந்துட்டேன்.” என்ற வார்த்தைகள் எல்லாம் சொல்ல முடியாத அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

“படிச்ச ஆள் தான சார் நீங்க. எத்தனை பேர் குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க தெரியுமா. ஒரு ஒன்பது மாசம் உங்க உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாதா. கூட வாழுற பொண்டாட்டிய எதோ உடல் சுகத்துக்காக வந்தவ மாதிரி நடத்துறது சரியா. நியாயப்படி உங்க மேல கேஸ் கொடுத்திருக்கணும். பிரார்த்தனா எனக்கு நல்ல தெரிஞ்ச பொண்ணா போனதுனால ஒன்னும் பண்ண முடியாம பேசிட்டு இருக்கேன். இனிமேலாது மனுச தன்மையோட அவங்க கிட்ட நடந்துக்கோங்க.” என்ற அப்பெண் மருத்துவர் அங்கிருந்து நகர, பித்து பிடித்த நிலை இவனுக்கு.

என்ன நடக்கிறது என்று தெளிவாக உணர முடியாமல் மூளை குழம்பி நின்றிருந்தவன் சிந்தனையில், ‘முன்னாடி வந்தவங்க மிஸ்கேரேஜ்னு சொல்றாங்க இவங்க டேப்லெட் வாங்கிட்டு போனான்னு சொல்றாங்க. தனா ஏன் இப்படி சொன்னா…என்ன நடக்குது.’ பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

கட்டியவள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற முடிவோடு அங்கிருந்து வெளியேறியவன் செவியில், “மேடம்! அவரு கிளம்பிட்டாரு. நீங்க சொன்ன மாதிரி தான் சொன்னேன், ஒரே அழுகை. அதை வீடியோ எடுத்து உங்க வாட்ஸ் அப்புக்கு அனுப்பி இருக்கேன். நல்லா பார்த்து சந்தோஷப்படுங்க.” என்ற குரல் சத்தமாக கேட்டது.

குரல் வந்த திசையை நோக்கி நகர்ந்தவன் பார்வைக்கு முன்பு பேசிய பெண் விழ, இவனைப் பார்த்ததும் கைப்பேசியை அணைத்து விட்டு ஓட ஆரம்பித்தாள். நான்கு எட்டில் தாவி பிடித்தவன் கடுமையாக முறைக்க,

“எனக்கு எதுவும் தெரியாது சார் பிரார்த்தனா மேடம் தான் இப்படி சொல்ல சொன்னாங்க.” என சரணடைந்தாள்.

“தனா எங்க?”

“உங்க வீட்ல இருக்காங்க சார்”

முகம் முழுவதும் கோப ரேகைகள் தாண்டவம் ஆடியது. அந்தத் தடம் மாறுவதற்குள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். முழு வீடும் இருட்டில் இருக்க ஒரு அறை மட்டும் வெளிச்சமாக இருந்தது. இத்தனை நாள் எந்த அறையை பூட்டி வைத்திருந்தானோ அந்த அறை தான் அது.  எட்டிப் பார்க்க, அவனை பார்த்தபடி கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் பிரார்த்தனா.

“அடடே! வாங்க… மிஸ்டர் சரவணப் பொய்கை. ரொம்ப பதட்டமா வந்த மாதிரி தெரியுது ஜூஸ் ஏதாச்சும் குடிக்கிறீங்களா.” என்ற மனைவியை நெருங்க,

“பாருடா! நம்ம பாயும் புலி பாஞ்சிட்டு வருது.” எள்ளி விளையாடினாள்.

நடந்தவன் அப்படியே நிற்க, இடதுபுறமாக இதழை வளைத்து சிரித்தவள் நெருங்கினாள். அவன் நெஞ்சில் கை வைத்து,

“ஆட்டம் முடிஞ்சி போச்சின்னு நினைச்சிட்ட போல இனிமே தான் சூடு பிடிக்க போகுதுன்னு தெரியாம‌.” என்றிட, “ஏன் இப்படி பண்ண?” கேட்டான்.

“ஹா..ஹா…” என நகைத்து எதிரில் இருக்கும் கண்ணாடியில் அவன் முகம் பார்த்தவள்,

“எப்படி மிஸ்டர் சரவணப் பொய்கை…பழி வாங்க என் வாழ்க்கை தான் வழியா. இப்போ உனக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு எனக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு. திடீர்னு நீ நல்லவன் ஆகிடுவ நான் மன்னிச்சு சேர்ந்து வாழனும். ப்ச்! காலம் காலமா இதான் நடக்குது நம்ம கொஞ்சம் ட்ரெண்ட மாத்துனா என்ன” என்றாள்.

“பிரார்த்தனா!”

“ரொம்ப சூடா இருக்க போலையே” என்று விட்டு அவன் கையில் ஒன்றை வைத்தாள்.

பார்த்தவன் மனம் தூக்கி போட்டது. படபடவென ரத்த நாளங்கள் எகிறி குதித்து உண்மையா என கேள்வி கேட்க, இருக்க கூடாது என்ற வேண்டுதல் மட்டுமே அவனிடம். கணவன் செய்கைகளை உள்வாங்கி மகிழ்ந்தவள்,

“உன்னை திருத்தவோ இல்ல போனா போகுதுன்னு சேர்ந்து வாழவோ துளியும் விருப்பம் இல்லை. அதே நேரம் சும்மா விடவும் இந்த பிரார்த்தனா மனசு ஒத்துக்கல. கடவுளா பார்த்து ஆட்டத்தை என் பக்கம் மாத்திட்டான். ஆடி முடிச்சி நானும் மனம் திருந்தி மன்னிப்பு கேட்கிறேன். ஒருவேளை என்னை மன்னிக்கிற நல்ல மனசு உன் கிட்ட இருந்தா பார்க்கலாம்.” என்றாள்.

“இதை..” மேற்கொண்டு பேச்சு வராமல் தவிக்க,

“ஆறு மணி நேரம் ஆச்சு.” என்றதும் அந்த இடத்திலேயே தொப்பென்று அமர்ந்தான் சரவணப் பொய்கை.

“உன் ஆட்டத்தை உனக்கே ஆடி காட்டிட்டேன் பார்த்தியா, எப்படி இருக்கு?” என்றவளை சிவந்த கண்களோடு ஏறிட்டுப் பார்க்க,

“முட்டாள் ஆக்க உனக்கு மட்டும் தான் தெரியுமா. எப்படி… ஒரு நாளுக்கே உன்னை ஓட வச்சேன் பார்த்தியா. பரவால்ல நான் தான் ஏதோ பைத்தியக்காரத்தனமா உன்ன நம்பிட்டேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். நீ இன்னைக்கு என்னை நம்பி ஓடினதை பார்த்ததுக்கு அப்புறம் தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.” என்றாள்.

முதுகில் குத்தியதில் நலிவடைந்து பாவமாக அவளை பார்த்துக் கொண்டிருக்க, “என் கையில தான் ஃபோனே இல்லையே உனக்கு எப்படி போன் பண்ணன்னு கொஞ்சம் கூட யோசிக்க தோனலல. இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் உன்னை கண் முடித்தனமா நம்புனேன். உண்மையா நேசிச்சவங்க ஏமாத்துனா எப்படி வலிக்கும்னு இப்ப புரியுதா? புரியலனாலும் கவலை இல்லை இனி ஒவ்வொரு நாளும் புரியும்.” என கண் சிமிட்டினாள்.

“என் மேல இருக்க கோபத்தை குழந்தை கிட்ட காட்ட எப்படி மனசு வந்துச்சு? அது என்ன பாவம் பண்ணுச்சு?”

“பெரிய பாவம் பண்ணிடுச்சு உனக்கு பிள்ளையா பிறக்க நினைச்சு.”

“தனா… இப்ப கூட இதெல்லாம் பொய்ன்னு ஒரு வார்த்தை சொல்லு.”

“நானும் நேத்து இப்படித்தான் நினைச்சேன்.”

“நிஜமாவே குழந்தை இல்லையா?”

“ஹா…ஹா… உன் அம்மா இல்ல.”

தலை குனிந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தவன் எதிரில் நின்றவள் அவன் முகம் நிமிர்த்தி,

“உன் குடும்பம் சிதைஞ்சதுக்கு நான்தான் காரணம்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் என்னை வெட்டி போட்டிருந்தா கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். காலம் பார்த்து என் மனச திருடி எனக்கே தெரியாம என்னை வச்சு நீ பண்ண துரோகத்தை செத்தாலும் மறக்க முடியாது. இவ்வளவும் செஞ்சதுக்கு அப்புறமும் என்னை தொட்டியே அது எல்லாத்தையும் விட பெரிய துரோகம்.

அந்த துரோகத்துல இருந்து ஒரு சந்தோஷம் உனக்கு கிடைக்கலாமா? அது கிடைச்சா செஞ்சது துரோகம்னு புரியுமா? அதனால தான் தாய்மை கெட்டுப் போனாலும் பரவால்லன்னு இதை பண்ணேன். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல உயிரா மாறி உருவம் எடுக்க ஆர்வமா இருந்த உன் உணர்வு சிதைஞ்சு வெளிய வந்திடும். அள்ளி எடுத்து அம்மா…அம்மான்னு கொஞ்சு.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

ஒரு துளி அழுகை இல்லை அந்த கண்ணில். சிவந்த கண்கள் சிவந்த படியே இருக்க சொல்லிவிட்டு சென்றவள் வார்த்தை ஒவ்வொன்றும் ஊசியாக குத்தியது உள்ளத்தை. நேற்று அவள் சிரித்த சிரிப்பிற்கான அர்த்தத்தை கண்டு கொண்டான்.

செய்த துரோகத்திற்கான பரிசாய் கண் முன்னே கலைந்து போன தன் தாயின் உயிரை எண்ணி கலங்கினான். இனி அடுத்து என்னவென்று யோசிக்க தெம்பு இல்லாமல் அன்றைய இரவை அந்த அறையிலேயே கழித்தான்.

இரவு சற்றென்று விடியாமல் இழுத்தடித்து அவனை நோகடித்தது. விடிந்ததும் மனம் கேட்காதவன் தன் அறைக்குச் சென்று அவளிடம் கடைசியாக ஒருமுறை கேட்க துணிய, குளிக்க நகர்ந்தவள் கையில் இருந்த அணையாடையை (நாப்கின்) கண்டு வந்த வழியே திரும்பி விட்டான்.

சுவற்றில் அடித்த பந்து போல் இரவெல்லாம் இருந்த அறைக்கே வந்தவன் சத்தமிட்டு அழ துவங்க, மாடியில் இருந்து கேட்டவள் உள்ளம் சற்று நிம்மதி அடைந்தது. அதை இன்னும் பேரானந்தம் ஆக்கினான் எதை எதையோ புலம்பி. போதும் என்ற வரை கேட்டு மகிழ்ந்தவள் தன் வேலையை கவனிக்க செல்ல, அழுதே மயங்கி போனான் சரவணப் பொய்கை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்