Loading

தேசம் 10

சாமிநாதனின் அழுகை பெரும் ஆனந்தத்தை கொடுத்தது சரவணனுக்கு. இந்த அழுகையை அவர் முகத்தில் காணத்தான் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் காத்துக் கொண்டிருந்தான். பிரார்த்தனா மீதுதான் அதிக கோபம் என்றாலும் அந்த கோபத்திற்கு பிள்ளையார் சுழி சாமிநாதன். மகள் செய்யும் குற்றத்தை தட்டிக் கேட்காமல் ஆதரவு தெரிவித்ததற்காகவே இந்த தண்டனை அவருக்கு.

அந்த அழுகையோடு கெஞ்சி கதறுவதையும் கேட்க விரும்பியவன் தன் ஆட்களுக்கு, “அவன் வாயில இருக்க துணிய எடுங்கடா. கத்தி கதறி கூப்பாடு போட்டு அக்கம் பக்கத்துல இருக்க எல்லாரையும் கூப்பிடட்டும். எவன் வந்து என்ன கேட்டாலும் நான் கொடுத்த பத்திரத்தை காட்டுங்க.” என உத்தரவிட்டான்.

வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக சாமிநாதனின் கதறலை கேட்க வைத்தனர். கண்மூடி தன் கார் சீட்டில் சாய்ந்தவன் அந்த சத்தத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். பெற்றோர்கள் படும் துயரத்தை மனைவிக்கு காட்டத்தான் முதலில் முடிவு செய்திருந்தான். அந்த எண்ணம் மாறியது பெற்றோரும் பிள்ளையும் பார்த்துக் கொள்ளவே கூடாது என்ற பின் புத்தியில்.

இந்த சம்பவத்தை நடத்துவதற்கு முன் தன் இல்லத்திற்கு சென்றவன் மயங்கிய நிலையில் மனைவி மீது இரக்கம் பார்க்காமல் நீரை ஊற்றினான். மயக்கம் தெளிந்தாலும் எழுந்தமர தெம்பில்லை அவளிடம். அதைக் கண்டு சிறு துளி மனம் இறங்காதவன் தன் ஷூ கால்களால் முகத்தை உயர்த்தி,

“உன்ன தூங்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.” என்றிட,

“முடியல சரவணா கொஞ்ச நேரம்.” என ஷூ மீது முகத்தை நகர்த்தி தரையில் வைக்க முயன்றாள்.

தரையில் முகம் சாய்ந்த அடுத்த நொடி ஷூ கால் முகத்தை அழுத்தியது. இருந்த மயக்கம் எல்லாம் தெளிந்தது அந்த வலியில். பலம் இல்லாத கைகளைக் கொண்டு எடுக்க முயன்றவள் தோற்றுப் போய்,

“என்ன தான்டா உனக்கு வேணும் சைக்கோ” கத்தினாள்.

“நீ கேட்டு வாங்கிக்க வேண்டியது அவசியம் எனக்கு இல்லடி… நான் தர வலிய வலியோட வாங்கிக்கணும். என் கையால எடுக்காத உயிரை நீயே எடுத்து எனக்கு கொடுக்கணும். அந்த நொடி இந்த சைக்கோ உன் வாழ்க்கையை விட்டு எங்கேயோ…. போய்டுவான்.” என கண்மூடி பரவச நிலைக்கு ஆளானவன் உடனே மிருகமானான் அவளை நெருங்கி.

பயந்து எழ முயன்றவள் கழுத்தை நெருக்கி, “இவ்ளோ செஞ்சும் கொஞ்சம் கூட அசராம இருக்க. ரெண்டாவது நாளே தூக்குல தொங்கிடுவேன்னு எதிர்பார்த்தேன். உன்னை என்ன பண்ணி என் காரியத்தை சாதிக்கிறதுன்னு தெரியலடி.” சுவற்றோடு சுவராக தள்ளி கோபத்தை காட்டினான்.

அவளுக்குத் தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ள ஆசை. தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தோற்றுப் போக விரும்பாதவள் பிடித்து வைத்திருக்கிறாள் தன் உயிரை. அந்த திடமான தைரியம் பிடித்த கைகளை விலக்கி,

“என்ன வேணும்னு சொல்லு…. என்உயிரா?” கேட்டது.

தலையாட்டி மறுத்தவனிடம், “உயிரையே கேட்டாலும் தரேன். ஆனா, காரணத்தை சொல்லிட்டு கேளு. என் சரவணன் ஆசைப்பட்டா… உயிரா இருந்தாலும் மனசார கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்.” என்றவள் விழிகளுக்குள் தெரியும் காதலில் தொலைந்து போக விரும்பாதவன் அவளை விட்டு திரும்பிக் கொண்டான்.

இந்த நடவடிக்கையை சில முறை கவனத்தில் கொண்டு பிரார்த்தனா. கடுமையாக நடந்து கொள்கிறான் அதே நேரம் தன் காதலை காட்டினால் தடுமாறியும் விலகுகிறான். இவனுக்கு தன் மேல் காதல் இருக்கிறது அதைவிட ஏதோ ஒரு கோபம் அதிகமாக இருக்கிறது. அந்த கோபத்திற்கான காரணத்தை அறியத்தான் இந்த அக்னி பரிட்சையில் தன்னை தயார்படுத்தி இருக்கிறாள்.

“சரவணா” என தோள் மீது கை வைக்க, தட்டிவிட்டான்.

அசராமல் மீண்டும் வைத்தவள், “ஒரு நிமிஷம் என்னை பாரு” என்றாள்.

எழ முயலும் அவன் செயலுக்கு தடை போட்டவள் தானே திருப்ப முயல, வளர் பருவம் சட்டென்று மண்டையில் உதயமானது. கோபித்துக் கொண்டு குழந்தை போல் திரும்பி நிற்கும் இவனை, “என் குஞ்சு மணி…அழகு செல்லத்துக்கு என்ன கோவம்” என கொஞ்சி சமாதானம் செய்தே ஓய்ந்து போகும் அந்த உயிர்.

இழந்த உயிரை எண்ணி கலங்கியவன் கண்ணீர் தரையை தொட, “சரவணா” என அதை மறைய வைத்தாள் அவன் மனைவி.

அதன்பின் அவள் காணாத கணவன் குணத்தை கண்டாள். பின்பக்க முடியை கொத்தாக சுழற்றி பிடித்தவன் சிறிதும் யோசிக்காமல் சுவற்றில் முட்ட ஆரம்பித்தான். முதல் இடியே பலமாக இருக்க கை இரண்டையும் பின்னந்தலைக்கு தாங்கிக் கொண்டவள், “அம்மா…” என ஓலமிட்டாள்.

அவள் சொல்லிய வார்த்தை உள்ளுக்குள் இருந்த கோபத்தை இன்னும் பல அடி உயரத்திற்கு தூக்கி செல்ல, தான் நேசித்த ஒருத்தியின் வலியை அந்த உயரத்தை விட அதிக உயரத்திற்கு துடிக்க வைத்தான். உடல் சோர்ந்து அப்படியே தலையை தோளில் தொங்க போட்டாள். அதை அறியாமல் இரண்டு முறை இடித்தவன் மூன்றாவது முறை விட்டு விட்டான்.

காற்றைப் போல் இதமாக தரையில் விழுந்தவள் கண்கள் இறுக மூடி திறந்து வலியை தாக்குப் பிடிக்க முடியாமல் கதறியது. அதைக் கண்டதும் செய்தவன் கண்ணில் நீர் துளிகள் உருவாக, தொட போனான். அவற்றை செய்யும் முன் அடியாட்களின் அழைப்பு வந்துவிட அவளை அப்படியே விட்டவன் இங்கு வந்து விட்டான்.

மனைவி மீதான எண்ணத்தை கலைத்தது மாமனாரின் அழுகை குரல். நினைவு திரும்பி கைப்பேசி வழியாக அந்தக் கதறல்களை கேட்டு குத்தாட்டம் போட்டவன் உள்ளம் தனக்கேற்ற பாடலை ஒளிபரப்பியது.

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…”

அங்கு அந்த வயதானவரோ யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு அக்கம் பக்கத்தில் இருக்கும் தெரிந்தவர்கள் பெயரை அழைத்தார். நவீன உலகில் மற்றவர்களை கவனிக்க எங்கு நேரம் இருக்கிறது இங்கு இருப்பவர்களுக்கு. அதுவும் சண்டை என்றால் தனக்கு எதற்கு வம்பென்று ஒதுங்கும் ஆட்கள் தான் அதிகம்.

அதேபோல் பலர் இருக்க இருவர் மட்டும் எட்டிப் பார்த்தார்கள். அவர்களைக் கண்டதும் கவிழ்ந்த படகிற்கு உதவி கிடைத்தது போல் கூக்குரல் இட்டவர் நடந்ததை விவரிக்க, “யாருப்பா நீங்க, எதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க?” கறாராக விசாரித்தார்கள்.

“அதைக் கேட்க நீ யாருடா?” என்றதும் மரியாதை போய்விட்டதாக உணர்ந்த பெரிய மனிதர்கள் சண்டைக்கு பாய,

“இதோ பாரு! இந்த கிழவன் இந்த வீட்டை அடமானம் வச்சு காசு வாங்கி இருக்கான். ரொம்ப வருஷமா தராம ஏமாத்திட்டு இருந்தா வேற என்ன பண்ண முடியும். அவன் பணத்தை நீ கொடுக்குறதா இருந்தா சொல்லு இப்பவே எல்லாத்தையும் நிறுத்துறோம்.” என சரவணப் பொய்கை தயாரித்த போலி பத்திரத்தை நீட்டினார்கள்.

தன்மீது பாரம் விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவர்கள் வந்த வழியே திரும்பி விட, “ஏண்டா இப்படி அபாண்டமா பொய் சொல்றீங்க நான் எப்போ உன்கிட்ட பணம் வாங்குனேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் இந்த வீட்டை என் மருமகன் பெயருக்கு மாத்தினேன். உங்க ரவுடி தனத்தை என்கிட்ட காட்டுனீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நிறைய பேர தெரியும் எனக்கு. ” வாதம் செய்ய, அதை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தவன் சத்தமாக சிரித்தான்.

“டேய்! அந்த பரதேசி ரொம்ப பேசுறான். வாய அடைச்சிட்டு அவன் துணி எல்லாத்தையும் தூக்கி வெளிய போடுங்க.”

வாங்கிய பணம் நன்றாக பேசியது. பாதி பொருட்களை அடித்து நொருக்கிய திருப்தியில் அவன் சொன்னதை செய்ய சென்றார்கள். பாடல் வரிகளை தனக்கே எழுதியதாக எண்ணி தாளம் போட்டுக் கொண்டிருந்தவனிடம்,

“சார், பீரோல இருக்க எல்லா துணியையும் தூக்கி போட்டுட்டோம். வேற என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா செஞ்சுட்டு கிளம்பிடுவோம்.” என்றார்கள்

கண் மூடியவாறு, “அவனையும் அவன் பொண்டாட்டியையும் தூக்கி வெளிய அடிங்கடா.” என்றிட, செய்ய விரைந்தார்கள்.

அந்த அற்புதமான நிகழ்வை காண விழி திறக்கும் நொடி எதுவோ திரையில் சற்றென்று மறைந்தது. ஒரு நொடி தன் இமைகளை மூடி கண்டதை திரும்பி ஓட்டி பார்த்தவன் வேகமாக விழித் திறந்து, “டேய்!” கத்தினான்.

இதுவரை நடந்த அனைத்தையும் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தவன் என்னவென்று கேட்க, “பின்னாடி போடா!”

“எதுக்கு சார்?”

“வாய மூடிக்கிட்டு சொன்னதை மட்டும் செய்டா. வந்த வழியே பின்னாடி போடா…! போடா…!” குரல் தடுமாற கட்டளையிட்டான்.

கைப்பேசி திரையை பின்னால் கொண்டு வர அதோ அவன் கண் முன்னே ஒரு காட்சி. நரம்பு மண்டலம் பாய்ந்து கொண்டிருந்த ரத்தத்தை அப்படியே இடைநிறுத்தம் செய்து மூளையை செயலிழக்க செய்தது. அவனுக்கு திரையை காண்பித்துக் கொண்டிருந்த அடியாள் “இங்கயா சார்” என பலமுறை கேட்டும் அவன் செவியில் விழவில்லை.

தலை மட்டும் தன்னால் ஆடியது. இதயம் எவ்வளவு வேகத்திற்கு துடிக்க முடியுமோ அவ்வளவு வேகத்திற்கு துடித்தது. உடலுக்குள் ஒளிந்திருந்த ஆன்மா வெளியேறத் துடித்து எதையோ ஒன்றை செய்ய கட்டளையிட்டது. அதில் விழித்துக் கொண்ட மூளை அவன் நினைவையும் திருப்பி,

“கிட்ட போடா! அது கிட்ட போ…!” என பதற வைத்தது.

மிக நெருக்கமாக அவன் கண்ட காட்சி அப்படியே மனக்கண்ணில் பதிந்து போனது. பின்னந்தலையில் வேகமாக நான்கு ஐந்து முறை தட்டியவன் விழிகள் எல்லாம் செந்நிற சிகப்பானது. விழியில் இருந்து நீர் கட்டுப்பாட்டை மீறி வெளியேற, மூச்சு முட்டியது காருக்குள் இருந்தவனுக்கு.

மூச்சை பெற வேண்டி உள்ளுறுப்புகள் அனைத்தும் அவனிடம் போராட்டம் செய்ய, காரை விட்டு இறங்கினான். கதவை சாற்றிய கையோடு அப்படியே அதில் சாய்ந்து தரையில் அமர்ந்தவன் தலையில் கை வைத்துக் கொண்டு கதறினான். உடல் துடி துடித்து எதையோ வாய் வழியாக உளறிக் கொண்டிருக்க, முழு கட்டுப்பாட்டை இழந்தான் சரவணப் பொய்கை.

“இல்ல, நான் பார்த்தது உண்மை இல்லை. இல்லடா சரவணா நீ பார்த்த எதுவும் உண்மை இல்லை. யாரோ உன்னை ஏமாத்துறாங்க நம்பாத… நீ பார்த்தது சத்தியமா உண்மையா இருக்க வாய்ப்பே இல்லை. உன்னை ஏமாத்துறாங்கடா திரும்பவும் ஏமாத்த பார்க்கிறாங்க. நம்பிடாத அவங்களை நம்பிடாத.” என சொன்னதையே சொல்லிச் சொல்லி உளற ஆரம்பித்தான்.

பைத்தியக்காரன் போல் நடுவீதியில் அதுவும் நடு சாமத்தில் புலம்பியவன் அரக்க பரக்க எழுந்தான். கார் கதவை திறக்க முயன்று முடியாமல் விழுந்தவன் முகத்தில் சேலாக காயம் பட்டது. அதை உணரும் நிலையில் இல்லாதவன் தட்டுத்தடுமாறி கதவை திறந்து கைபேசியை எடுத்தான்.

பேச உதடுகள் ஒத்துழைக்க மறுத்தது. பின்னந்தலையை போதுமென்ற வரை தட்டி இயல்புக்கு மீட்டவன், “அதை காட்டி என்னன்னு கேளுங்கடா” என்றிட,

“எதுக்கு சார் இதை போய் கேட்குறீங்க. பார்த்தாலே தெரியலையா இது…” அவன் நிலை புரியாது பேசினார்கள்.

“ஏய் நாயே! சொன்னதை செய்டா இல்ல குத்தி கிழிச்சு குடலை உருவிடுவேன்.” அமைதியான சூழ்நிலையை மிரள வைத்தது அவன் அதிகார குரல். அதில் பயந்தவர்கள் சாமிநாதனிடம் விசாரிக்க, அவர் எதற்கு என்று கேட்டார்.

“டேய்! உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள நான் கேட்டதுக்கு பதில் வரணும். இல்லைன்னா இரக்கம் பார்க்காம அவனை அடிச்சு கொல்லுங்க.” என்றதன் பெயரில் அனைத்து கொடுமைகளும் நடந்தது சாமிநாதனுக்கு.

வலி பொறுக்க முடியாதவர் வாய்விட்டு அனைத்தையும் சொல்ல, “அய்யோ தனா!” எனக் கைப்பேசியை தூக்கி அடித்து விட்டு நடுரோட்டில் அமர்ந்தான்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்