Loading

அத்தியாயம் 49

ஆடவர்கள் கடத்தப்பட்டு வைத்திருக்கும் ரிசர்வ்ட் ஏரியா பற்றிய தகவல் கிடைத்ததில், மூன்று ஜோடிகளும் விஜயவாடாவிற்கு விரைந்தனர்.

ஒரு பங்களாவின் முன்பு கார் நிறுத்தப்பட, ஸ்வரூப்பின் ஆள்கள் அங்கு தயாராக இருந்தனர். அங்கு தான் தேஜஸ்வினும் இருந்தான். இவர்களைக் கண்டதும் வேகமாக அருகில் வந்தவன், கையில் ஐ – பேடை வைத்துக்கொண்டு,  “பாஸ்… இது தான் அந்த ரிசர்வ்ட் ஏரியா இங்க இருந்து 10 கிலோ மீட்டர்ல இருக்கு.” என்று லொகேஷனைக் காட்டினான்.

தேஜஸ்வினைக் கண்டதும், உத்ஷவி “டேய் தேஜா, உன் ஈ. எம். ஐ பொண்டாட்டியை விட்டுட்டு இங்க வந்து நிக்கிற.” என்றதில், திருதிருவென விழித்தவன், “நான் வீட்டுக்கு போயே ஒரு வாரம் ஆகுது.” என்றான் மெல்லமாக.

“ஐயோ பாவம்! புது ஜோடிகளைப் பிரிச்ச பாவம் உங்களை சும்மா விடாதுடா” என மூவரையும் குற்றம் சாட்டிய அக்ஷிதாவை ஸ்வரூப் நறுக்கென தலையில் கொட்டி, “இப்ப இது ரொம்ப முக்கியம். மூணு பேரும் உள்ள போய் இருங்க. நாங்க மட்டும் போயிட்டு வரோம்.” என்றான்.

விஹானாவிற்கு சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியவில்லை. ஒரு வித மாயையுடனே அமைதி காத்தாள். ஜோஷித்தை அவ்வப்பொழுது பார்த்து வைப்பதும், பின் இதழீரத்தின் தடத்தை உணர்ந்து சிலிர்த்துக் கொள்வதுமாக, அவளுக்குள் தனி உலகத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருந்தாள்.

உத்ஷவி ஸ்வரூப்பின் கூற்றை மறுத்து, “ஏன் நாங்களும் வர்றோம்.”என்றிட, “அங்க சேஃப்டி எப்படி இருக்கும்ன்னு தெரியலடி. இதான் பிரச்சனைன்னு தெரிஞ்சா பரவாயில்ல, நாங்களே ஒரு கன்பியூஷன்ல தான் போறோம்.” என்று விளக்கமளித்தான்.

“அதெல்லாம் முடியாது. அக்ஷியும் விஹாவும் வேணும்ன்னா இங்க இருக்கட்டும் நான் வருவேன்.” என்று வீம்பு பிடிக்க, “ஏய் சொல்லிக்கிட்டே இருக்கேன்ல. போடி உள்ள.” என அனலாகப் பொரிந்தவனை முறைத்தவள், “ப்பே!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றாள்.

அக்ஷிதா தான், “ஏண்டி நம்மளை கழட்டி விட்டுட்டுப் போறானுங்க.” எனக் கேட்க,

“அந்த சரோஜா தேவி சோப்பு டப்பாவையும் அவனுங்களே வாங்க பிளான் போடுறானுங்க போல.” என்று கடுப்புடன் காய்ந்தாள் உத்ஷவி.

சஜித்தும் ஜோஷித்தும் தீவிரத்துடன் லொகேஷனைப் பார்த்து ஏதோ விவாதித்துக் கொண்டிருக்க, ஸ்வரூப் காரைக் குத்தி கோபத்தை அடக்கினான்.

அதில் நிமிர்ந்த இருவரும், “என்னடா ஆச்சு?” என வினவ, “நத்திங். போலாம்” என்று கிளம்பினான்.

பத்ரிக்கு ஏற்கனவே உத்ஷவியின் மீது பகை தான். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்தே தொடர்ந்த வஞ்சம் இது.

அவளை அவன் சீண்டவில்லை என்றாலும், அவனது கண் பார்வைக்குள் தான் வைத்திருந்தான். இன்னும் சொல்லப்போனால், உத்ஷவியை அடைந்திடவும் வெறி கொண்டான்.

தானாக அவளை அணுகாமல், அவளையே தன் காலடியில் வந்து விழ வைக்க எண்ணியவன், ராகேஷின் மூலம் அவளுக்கு ப்ராஜக்ட்டுகளைக் கொடுத்தான்.

பத்ரி எங்கோ சென்று தொலைந்து விட்டான் என்று நம்பிக் கொண்டிருந்த உத்ஷவிக்கும், தன்னை நிழல் போல அவன் தொடர்வது தெரியவில்லை.

பத்ரியோ, ஸ்வரூப் வீட்டிற்கு திருட அனுப்பி, திருடிக் கொண்டு வந்து விட்டால், ராகேஷ் அவளைக் கொலை செய்ய முனைவான். அதற்கு அவள் பயந்து ஒடுங்கிப் போவாள் என்று கற்பனை செய்து கொண்டான். அந்நேரம், அவன் இடையில் புகுந்து அவளுக்கு உயிர் பிச்சைத் தரலாம் என்றும், அதற்கு காலம் முழுக்க அவனது காலடியிலும், அவனது மஞ்சத்தையும் நிரப்பி தன்னடிமையாக அவளை இருத்திக் கொள்ளத் திட்டமிட்டான்.

அப்படி ஒருவேளை ஸ்வரூப்பிடம் மாட்டிக்கொண்டால், அவ்தேஷ சகோதரர்கள் அப்பெண்களைத் தண்டிக்காமல் விட மாட்டார்கள் என நிச்சயமாக நம்பினான். அப்போதும், அவளை விடுவித்துக் கொள்ள, தன்னிடம் வர வைத்துக் கொள்ளலாம் என வெறியுடனும் வஞ்சத்துடனும் சிறு வயது முதலே அவள் மீது தோன்றிய தீரா மோகத்துடனும் பதுங்கும் புலியாய் காத்திருந்தான் பத்ரி.

அவனது திட்டங்களை எல்லாம் அடித்து நொறுக்கியது ஆடவர்களின் செயல்கள்! அவர்களைத் தண்டிப்பார்கள் என்று நினைத்தால், ஆபாத்பாண்டவர்களாக பாதுகாக்க அல்லவா செய்கிறார்கள்!

அதுவே அவனை இன்னும் வெறி கொள்ளச் செய்தது. அவனைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அறிந்து கொண்ட ஸ்வரூப்பிற்கு, இனி அவனது நிழலைக் கூட உத்ஷவியின் மீது விழ வைக்க விருப்பமில்லை. அதனாலேயே இப்பிரச்சனையில் இருந்து அவளை விலக்கி வைக்க முயன்றான்.

10 கிலோ மீட்டரில் இருந்த ரிசர்வ் பாரஸ்ட் ஏரியாவிற்குள் நுழைந்தனர் சகோதரர்கள்.

எடுத்ததும், கூட்டமாகச் சென்று அவர்களை உஷாராக்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். கையில் துப்பாக்கியை வைத்தபடி மூவரும் சற்று தள்ளி மூன்று திசைகளில் நகர்ந்து சுற்றி முற்றி பார்க்க, அங்கு சிறிது தொலைவில் பாழடைந்தக் கட்டடம் ஒன்று தெரிந்தது.

அதனை நோக்கி எச்சரிக்கையுடன் உள்ளே சென்றவர்களின் பார்வையில் அகப்பட்டாள் நாகவல்லி.

மயங்கிய நிலையில் கிடந்த  பெண்ணின் அருகில் சென்றவர்களில், ஜோஷித் “நாகா” என அவளை எழுப்பினான்.

அதில் மெல்ல மயக்கம் கலைந்தவளின் வாயில் ஒட்டி இருந்த பிளாஸ்டரை எடுத்து விட்டவன், “நீ எப்படி இங்க வந்த?” எனக் கேட்டான் பார்வையால் சுற்றத்தை அளந்தபடி.

“அண்ணய்யா… எனக்குத் தெரியும் நீங்க எப்டியும் என்னைக் காப்பாத்திடுவீங்கன்னு.” என அழுது கரைந்தவள், “எனக்குத் தெரியல அண்ணய்யா, யார் கடத்துனாங்கன்னு. ரொம்ப நாளா என்னை இருட்டு ரூமுக்குள்ள தான் பூட்டி வச்சுருந்தாங்க. அடிக்கடி மயக்க மருந்து குடுத்தாங்க. இப்போ இங்க கட்டி போட்டுட்டு போய்ட்டாங்க.” எனத் தேம்பினாள்.

ஸ்வரூப், “பயப்படாத நாகா. அதான் நாங்க வந்துட்டோம்ல. இனி உன் பக்கத்துல கூட யாரும் வர முடியாது.” என்றவனின் இதழ்களில் இகழ்வாய் ஒரு புன்னகை.

அந்த நவீன பங்களாவின் ஹாலில் இருந்த பெரிய சோபாவில் காலை நீட்டி அமர்ந்தாள் அக்ஷிதா.

உத்ஷவிக்கோ பொழுதே போகவில்லை. ‘இப்படி விட்டு விட்டு சென்று விட்டானே’ எனக் கடுப்படித்தாள்.

விஹானாவோ, “மூணு பேர் மட்டும் தனியா போயிருக்கானுங்க. போலீஸ் ப்ரொடெக்ஷனோட போயிருக்கலாம்ல” எனப் பதற்றத்துடன் இருந்தாள்.

“ம்ம்க்கும்… இவனுங்க தான் போலீசுக்கே ப்ரொடெக்ஷன் குடுக்கணும் போல. போலீசை விட அதிக குண்டை இந்த சமுத்திரம் பாய்ஸ் தான் வேஸ்ட் பண்ணிருக்கு” என்று உத்ஷவி கிண்டலடித்ததில் கேலியாக சிரித்தாள்.

அக்ஷிதாவோ, பங்களாவைச் சுற்றிப் பார்த்தபடி, “இங்க லாக்கர் எங்க இருக்கும்?” எனக் கேட்டிட, விஹானா “அடியேய்” எனப் பல்லைக்கடித்தாள்.

“ஹி ஹி சாரி டார்ல்ஸ் பழக்கதோஷத்துல லாக்கரைத் தேடிட்டு இருக்கேன்.” என்றவளைக் கண்டு இருவரும் நகைத்தனர்.

அந்நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேட்க, உத்ஷவி சென்று பார்த்தாள்.

அங்கு ஜிம் பாடியில் ஒரு ஆடவன், அங்கிருந்த கார்ட்ஸை மிரட்டிக் கொண்டிருந்தான்.

விஹானாவும் அவள் பின்னேயே வந்து பார்த்து அதிர்ந்து, “ஷவி… இவன் தான் பத்ரி. இவன் ஏன் இங்க வந்துருக்கான்.” என்று பதறினாள்.

அந்த பத்ரியோ, “நான் உத்ஷவியைப் பார்க்கணும். பார்த்து பேசிட்டு போய்டுவேன். அதைத் தடுக்க நினைச்ச எல்லாரையும் சுட்டுட்டு உள்ள போவேன்.” என்று துப்பாக்கியை நீட்ட, அவர்களும் துப்பாக்கியை எடுத்து நீட்டினார்கள்.

பத்ரியுடன் வந்த ஆள்களும் துப்பாக்கியை எடுத்து நீட்ட, உத்ஷவி கண்ணைச் சுருக்கி பத்ரியைப் பார்த்து விட்டு, “தேஜா… அவனை உள்ள விடு” என்றாள்.

தேஜஸ்வின் மிரண்டு, “இல்ல ஷவி. பாஸ் யாரையும் அலோ பண்ணைக் கூடாதுன்னு சொல்லிருக்காரு. நீ உள்ள போ!” என்று மறுக்க,

“ஸ்வரூக்கிட்ட நான் சொல்லிக்கிறேன் தேஜா.” என்று பிடிவாதமாக உரைத்தப் பெண்ணவளை பல வருடம் கழித்து அப்போது தான் நேருக்கு நேராய் பார்க்கிறான் பத்ரி.

கோபம், வஞ்சத்திற்கிடையே அவள் வளைவு சுளிவுகளில் பார்வையைப் பதித்தவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விட்டே அனுப்பினான் தேஜஸ்வின்.

ஏளனத்துடன் அவளருகில் செல்லப் போகையில், “இன்னொரு தடவை ரேப் அட்டெம்ப்ட் பண்ணலாம் போல. அப்போ மிஸ் ஆகிட்ட. இப்ப?” என இளக்காரத்துடன் கேட்டான்.

“பிஞ்சுரும்.” உத்ஷவி பதில் பேசும் முன், விஹானா கொந்தளிக்க,

அக்ஷிதா, “இவனை ஏண்டி உள்ள வர சொன்ன. தேஜா இவனை அடிச்சுத் துரத்து.” என்றதில்,

“சில்லி கேர்ள்ஸ்!” என அதனை அசட்டையுடன் ஒதுக்கி விட்டு உள்ளே செல்ல, சாவகாசமாக சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தான்.

“ஏன்டி உங்க மூணு பேரையும் திருட அனுப்புனா, இங்க அவனுங்க கூட கூத்தடிச்சுட்டு இருக்கீங்க. எவ்ளோ குடுத்தானுங்க.” எனக் கேட்டான் நக்கலாக.

“அதெல்லாம் நீ நினைச்சுப் பார்க்க முடியாத அளவு” அதே நக்கலுடன் வெளி வந்தது உத்ஷவியின் வார்த்தைகள்!

“ஓஹோ! அதான், பல்லைக் காட்டிக்கிட்டு அவன் கூடயே ஒட்டிட்டு இருக்கியா? பணம் மட்டும் தானா… இல்ல அப்போ அப்போ அவனுக்கு அந்தப்புர சேவைகளும் செய்வியா? அதான் இன்னும் உன்னை உயிரோட விட்டு வச்சுருக்கானோ?” எனத் தாடையை நீவி சந்தேகம் போல கேட்க, உத்ஷவி பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு,

“நீ வேணும்ன்னு தான என்னை ராகேஷ் கூட கோர்த்து விட்டு, ஸ்வரூப் வீட்டுக்கு அனுப்புன? என்னை வாட்ச் பண்ணிட்டு இருந்தியாடா?” மனதில் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டு விட்டாள்.

“இன்ச் பை இன்ச்சா வாட்ச் பண்ணுனேன் ஷவி. என் நெத்தில காயத்தை ஏற்படுத்துனவளை, உடம்பு முழுக்க காயமாக்காம விட்டுடுவேனா என்ன? அதுலயும் என்கிட்ட இருந்து மிஸ் ஆன ஒரே பொண்ணு நீ தான். சோ, இத்தன வருஷத்துல கோபம் அதிகமான மாதிரி, உன் மேல ஆசையும் அதிகமாகி இருக்கு! பட் ஐ வில் வெய்ட். என்னைக்கா இருந்தாலும், அவனுக்கு நீ போர் அடிக்கத் தான் போற. ஊருக்காகன்னு திருடியான உன்னை எப்படியும் பலி குடுக்கத் தான் நினைப்பான், அப்போ உயிர்ப்பிச்சை கேட்டு நீ என்கிட்ட தான் வரணும். உன்ன அணு அணுவா துடிக்க வச்சு வலிக்க வச்சு சாகுறதே மேல்ன்னு யோசிக்கிற நேரத்துல அந்த சாகுற வரத்தைக் கூட தராம உன்னை சித்தரவதைப் பண்ணப் போறேன். இந்த நாளுக்காக தினம் தினம் காத்துட்டு இருக்கேன் ஷவி.” என அக்கினி ஜுவாலையுடன் வஞ்சத்தைக் கக்கினான்.

விஹானாவும் அக்ஷிதாவும் லேசாய் நடுங்கிய மனதுடன் நிற்க, உத்ஷவி அவன் பேசியதற்கெல்லாம் சிறிதும் அசைந்துக் கொடுக்கவில்லை.

“சப்பா… நீ ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கான்’னு காத்துக்கிட்டே இரு. இவ்ளோ பேசுறியே பசங்களைக் கடத்தி பொழைக்கிற வெட்கமா இல்ல உனக்கு” என்று நாசூக்காய் பேச்சை ஆரம்பித்தாள்.

அவனிடம் எப்படியாவது ஒரு விஷயத்தையாவது வாங்கி விட வேண்டும் என்று ஆவல் கொண்டே அவனை உள்ளே அனுமதித்தாள்.

அவளது எண்ணம் புரிந்த பத்ரி, “வெட்கத்தைப் பத்தி நீ பேசாதடி. குடுத்த வேலையை முடிக்காம, அவனுக்கு ஜால்ரா அடிச்சுட்டு இருக்க. காசு குடுத்தா கால் கேர்ள்ஸா கூட போற உங்களைப் பத்தி இன்னும் இவனுங்களுக்குத் தெரியல போல” என்று நெருப்பைக் கக்கினான்.

அதில் மூன்று பெண்களின் மனதும் ஒரு நொடி துடித்து தான் போனது. உத்ஷவி கோபத்தை அடக்க இயலாமல், “அவன் இருக்கும் போது வந்து உன் வீரத்தைக் காட்டாம, பொ**டை மாதிரி அவன் போனதுக்கு அப்பறம் வந்துருக்க”. எனக் கூறி முடிக்கும் முன், அவளது கழுத்தைப் பிடித்தான் பத்ரி.

விஹானாவும் அக்ஷிதாவும் தடுக்க முயல, அவனோ சிறிதும் கையை எடுக்காமல் இறுக்கிக்கிக்கொண்டே சென்றான்.

“என்னடி துள்ளுற. இவ்ளோ நாள்ல அவன்கிட்ட நீ சோரம் போகாமயா இருந்துருப்ப. எதையாவது காட்டியாவது அந்த டாக்குமெண்ட்டை எடுத்துட்டு வந்துருக்கணும்ல நீ. உனக்குக் குடுத்த வேலைய செய்யாம, என்கிட்டயே சடவாள் பேசுற…” எனப் பல்லைக்கடித்தான்.

“உனக்காக உயிரைக் குடுத்து வேலை பாக்கணும்ன்னு எனக்கு என்ன தலையெழுத்தா. நீ இதுல இருக்கன்னு தெரிஞ்சு இருந்தா ராகேஷ் பக்கமே நான் வந்துருக்க மாட்டேன்.” என்றவளுக்கு பேச இயலவில்லை.

“ஏற்கனவே ஒருத்தன் என் மேல கை வைச்சதுக்கு தான், மூக்கு உடைஞ்சு, இருட்டு ரூம்ல சோறு தண்ணி இல்லாம இருக்கான். உன் நிலைமையை யோசிச்சுப் பார்த்துக்க” என்று மூச்சு விட முடியாமல் திணறியபடி அப்போதும் திணக்கமாகவே பேசினாள்.

ஒரு கட்டத்தில், அவனைத் தள்ளி விட்டவள், லொக்கு லொக்கு என இரும, அவன் கையில் அணிந்திருந்த கனத்த மோதிரம் கழுத்தின் ஓரத்தில் நன்றாகக் கீறி விட்டதில் இரத்தம் வழிந்தது. அவனது கைத்தடமும் பதிந்து சிவந்து போனது.

அத்தியாயம் 50

நாகவல்லி பயந்த விழிகளுடன் தன்னைக் கட்டி வைத்திருந்த இடத்தைப் பார்த்தபடி, “அண்ணய்யா… நான் மயங்குறதுக்கு முன்னாடி அந்த ரூம்குள்ள யாரோ போனாங்க.” என்று ஒரு அறையைக் கை காட்டிட,

ஸ்வரூப் தீவிரத்துடன், “ஓ! யாரு அது?” எனக் கேட்டான்.

“எனக்கு தெரியலைங்க அண்ணய்யா.” என அழுகுரலில் கூறியதில், “அப்போ தெரிஞ்சுக்கலாம் நாகா… வா” என அவளை எழுப்பி விட்டான்.

அவளோ புரியாமல் எழுந்து, “வே… வேணாம். நான் வரல. எனக்குப் பயமா இருக்கு.” என்று பின்வாங்கிட, “அட… வாம்மா. நாங்க இருக்கும் போது பயந்துக்கிட்டு” என சஜித் வற்புறுத்தினான்.

அவளை இழுக்காத குறையாக அந்த அறைக்கு அருகில் கொண்டு வந்தவர்கள், “நீயே கதவை திற. நாங்க துப்பாக்கியை லோட் பண்ணிக்கிறோம்.” என்று ஸ்வரூப் கூறியதில், “நா… நானா. இல்ல அண்ணய்யா எனக்கு பயமா இருக்கு” என்றதில்,

ஜோஷித், “அட என்னமா நீ. கலெக்டர், இப்படி எல்லாம் உயிருக்கு பயப்படலாமா? திற.” என்றிட அவள் எச்சிலை விழுங்கினாள்.

“திறடி…” இம்முறை ஸ்வரூப் கடினத்துடன் கூற, “அண்ணய்யா?” என கூறி முடிக்கும் முன், அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவன்,

“நான் என்ன உன் கூட பிறந்தவனாடி. அப்படியே நடிச்சு அள்ளுற. எங்க ஊர்ல எங்க கூடவே பேரை மாத்தி, அடையாளத்தை மாத்தி எல்லாரையும் நம்ப வச்சு இருக்கியே உனக்கு எவ்ளோ தில்லு இருக்கணும் நாகவல்லி என்கிற மேகனா.” எனக் கர்ஜித்தான்.

அவள் ஸ்தம்பித்து நிற்க, சஜித்தோ நக்கல் நகையுடன், “எங்களை அந்த அளவு முட்டாள்ன்னு நினைச்சுட்டீல. இப்படி வசமா மாட்டிக்கிட்டியே மேகனா.” எனப் பாவம் போல பேசினான்.

அரண்டு நின்றவள், “என்னை எப்படி?” எனத் தடுமாறிட, “நான் கேக்குறதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு. எதுக்கு இந்த பித்தலாட்டம் பண்ணுன. ஊருக்குள்ள இருந்துகிட்டே பசங்களை கடத்துனது நீ தான?” என உறுமினான்.

அவர்கள் கையில் சிக்கி, அவர்களுடனே சென்று மூவரையும் சுற்றலில் விடலாம் என எண்ணிய தனது திட்டம் பாழடைந்ததில் கோபமுற்றவள், “அதான் தெரிஞ்சுடுச்சுல… அப்படியே திரும்பிப் போய்டுங்க. இல்லன்னா உங்க எலும்பு கூட யாருக்கும் கிடைக்காது.” என்று திமிராக மிரட்டினாள்.

பளாரென அவளை அறைந்த ஜோஷித், “செய்றதையும் செஞ்சுட்டு திமிரா வேற பேசுறியா நீ. மவளே கேட்குற கேள்விக்கு பதில் சொல்லாம நீ நகரவே முடியாது.” என்னும் போதே அவள் தப்பிக்க முயல, சஜித் அவளை இலாவகமாகப் பிடித்து விட்டு, “எப்படியும் சாகப் போற. உண்மையை சொல்லிட்டு சாகுவேன்.” என்றான்.

“என்னை விடுங்கடா. உங்களால என்னையும் எங்க நெட்வொர்க்கையும் ஒன்னும் புடுங்க முடியாது. நீங்க தேடி வந்த பசங்கள்லாம் கிடைக்க மாட்டாங்க. கிடைச்சாலும் உயிரோட வாழ மாட்டாங்க. உங்க சமஸ்தானமே சுடுகாடா தான் மாற போகுது. இதுக்கு மேல இதை தோண்டுனா, அந்த சுடுகாட்டுக்கு போற மொத மூணு பொணம் நீங்களா தான் இருப்பீங்க.” என்று ஆத்திரத்துடன் மொழிந்தாள்.

ஸ்வரூப் சாவகாசமாக நெற்றியை தேய்த்துக் கொண்டு, “சரி சரி… அத நாங்க போகும் போது பார்த்துக்கலாம். இப்ப நீ பதில் சொல்றியா… இல்லையா?” என எரிச்சலாகக் கேட்டான்.

“சொல்ல மாட்டேன். சொன்னாலும் உங்களால கண்டுபிடிக்க முடியாது.” என்றதில்,

“அப்போ நீ சொல்லவே வேணாம்.” என அவளது காலில் குண்டை பாய்ச்சியவன், சஜித்திற்கு கண்ணைக் காட்ட, அவன் அவளை அலேக்காகத் தூக்கி கார் டிக்கியில் போட்டான்.

வலியில் அலறித் துடித்த பெண்ணின் கதறல்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை மூவரும்.

அந்நேரம் தேஜஸ்வினிடம் இருந்து போன் வந்ததில், “ஷிட்” எனக் காலை தரையில் உதைத்த ஸ்வரூப், உடனடியாக பங்களாவை நோக்கிச் சென்றான்.

பத்ரி உத்ஷவியை குரூரமாய் முறைத்தபடி, “உனக்குத் தான் யாருக்குமே உண்மையா இருக்கப் பிடிக்காதே. உன் தொழிலுக்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம். அப்பறம் ஏண்டி அவனுக்கு மட்டும் உண்மையா இருக்க.” என எரிச்சலுற்றவன்,

“ப்ரீத்தனை ஸ்வரூப் உனக்காக சிறைப் பிடிச்சு வச்சுருக்கான்னு நினைக்கிறியா ஷவி. ஐயோ பாவம்! அவனுக்கு அவனோட சொத்தையும் பதவியையும் காப்பாத்திக்கணும். சித்தூர்ல இருக்குற மூலை முடுக்குகளை எல்லாம் அவனுங்க தான் ஆளனும்ன்னு நினைக்கிறானுங்க. அதான் மூணு பேரும் அதுக்கு பங்குக்கு வர்றவனை அடிச்சு அடக்கி வச்சுருக்கானுங்க. அடுத்து அவனுங்களுக்குள்ளேயே அடிச்சுட்டு நாறுவானுங்க பாரு!” என சவாலிட,

அக்ஷிதா உடனே, “அவங்க ஒன்னும் உன்னை மாதிரி வெறிப்பிடிச்சவங்க இல்ல.” என்று எகிறிட, பத்ரி அவளை நோக்கிப் பாய்ந்ததில் விஹானா அவளை மறைத்துக் கொண்டான்.

“உனக்கு உயிர் மேல ஆசை இருந்தா, அவங்க வர்றதுக்குள்ள கிளம்பிடு. இல்லன்னா, அல்பாயுசுல செத்துப்போய்டுவ” என்றாள் மிரட்டலாக.

மூவரையும் கொலைவெறியுடன் பார்த்த பத்ரி, “எப்படியும் தொலைஞ்சு போனவங்களை பத்தி தெரிய என்கிட்ட தான வருவீங்க. அப்ப பாத்துக்குறேன்.” என சவாலாகப் பேசி விட்டு திரும்பிச் செல்ல, உத்ஷவி அவனை சொடுக்கிட்டு நிறுத்தினாள்.

“அவனுக்கு மட்டும் ஏன் உண்மையா இருக்கன்னு கேட்டீல. அவன் என்னைக்குமே நான் முகம் சுளிக்கிற மாதிரி என்னைப் பார்த்தது கூட கிடையாது. அவனுங்களோட கால் தூசிக்கு கூட நீ வரமாட்ட பத்ரி.” எனக் கண்ணில் கனலை ஏற்றி அழுத்தம் திருத்தமாய் கூறியதில் பத்ரியின் இரத்த அழுத்தம் தான் உயர்ந்தது.

அவன் சென்று விட்டதும் சோபாவில் கோபம் குறையாமல் அமர்ந்து விட்டாள் உத்ஷவி.

அக்ஷிதா தான், சுருங்கிய முகத்துடன், “என்னடி இவன் கால் கேர்ள் அது இதுன்னு பேசிட்டு போறான். காசுக்காக என்ன வேணாலும் செய்வோம் தான். அதுக்காக இவ்ளோ மட்டமாவா இருக்கோம். அப்போ அவங்க மூணு பேரும் அப்படி தான் நினைப்பாங்களா?” என நிஜமாய் கவலைக் கொண்டவளுக்கு பெரிய வருத்தமே சஜித்தும் அப்படி எண்ணி இருப்பானோ என்றதே!

விஹானாவோ, “பைத்தியம் மாதிரி பேசாத டார்லிங். எவனோ ஒருத்தன் வந்து சொல்லிட்டு போனா உடனே நம்ம தரம் தாழ்ந்து போய்டுவோமா? நம்ம செஞ்சதுலாம் தப்பு தான். இல்லைன்னு சொல்லல. நம்மளும் 420 அந்த பத்ரியும் 420. நம்மளை ஜட்ஜ் பண்ணுற அளவு அவன் ஒன்னும் பெரிய அப்பாடக்கர் இல்ல.” என்று சமன் செய்ததும், “அவன் நினைச்சுட்டு போகட்டும். இவனுங்களும் அப்படி நினைச்சா…” எனத் தயங்கினாள்.

உத்ஷவி தான், அவளைக் கூர்ந்து பார்த்து, “யார் என்ன நினைச்சா நமக்கு என்ன அக்ஷி. அப்டி நினைச்சுருந்தா நினைச்சுட்டு போகட்டும். மத்தவங்க நினைப்பை எல்லாம் நம்மளால மாத்த முடியாது. இப்படி ஒவ்வொன்னுக்கும் நம்ம பீல் பண்ணுனா, நம்ம பொழப்பை பார்க்க முடியாது. நீ என்ன இவனுங்களை மாதிரி அன்னை தெரசாவா மாறி, சேவை செய்யப் போறியா? எப்படியும் இங்க இருந்து போனதும் நம்ம திருடி தான் வாழ போறோம்.” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

அக்ஷிதாவும் அதனை அரைமனதாக ஆமோதிக்க, விஹானா திகைத்தாள்.

இத்தனை நடந்த பிறகும், திருடப் போகிறேன் என்கிறாளே என நொந்தவள், அதனை வெளியிலும் கூறி விட, அவளைக் காட்டத்துடன் ஏறிட்ட உத்ஷவி, “இப்ப என்ன நடந்துருச்சு? இங்க எதுவும் மாறல டார்ல்ஸ். நீ தான் படிச்சு இருக்கியே. நீ வேணும்ன்னா எங்களை விட்டுட்டு, வேலைக்கு போய் உன்னையும் உன் தம்பியையும் பார்த்துக்க.” என்றவளின் கூற்றில், சற்று அழுத்தம் குறைவாக இருந்தாலும் தீர்மானமாகவே இருந்தாள்.

இதற்கு பதில் கூற விரும்பாமல் விஹானா அமைதி காக்க, அந்நேரம் வெளியில் கார் சத்தம் கேட்குது.

அக்ஷிதா “போச்சு ஸ்வரூ வந்துட்டான். பத்ரியை உள்ள விட்டதுக்கு காட்டு கத்தா கத்தப்போறான்” என்று கையை உதறினாள்.

இத்தனை நேரம் பேசிய பேச்சுக்களை எல்லாம் அறவே மறந்து போன உத்ஷவி அவசரமாக “அக்ஷி உன் ஷாலை குடு” என்று வாங்கி, கழுத்தைச் சுற்றி போட்டு விட்டு, போனிடெயிலில் அடங்கிய கூந்தலை விரித்து இரு தோள்பக்கமும் போட்டுக் கொண்டாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்த விஹானா, “நீ இப்படி மறைச்சுட்டா அவன் எதையும் கண்டுபிடிக்க மாட்டானா?” என்று முறைக்க, அந்நேரம் சிங்கத்தின் கர்ஜனையுடன் “தேஜா” என கனத்த குரலில் உறுமிய படி உள்ளே வந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

ஜோஷித்தும் சஜித்தும் மேகனாவை தூக்கிக்கொண்டு பேஸ்மென்ட்டில் அடைத்து வைப்பதற்காக சென்று விட, தேஜஸ்வினுக்கு ஸ்வரூப்பின் ரௌத்திர முகத்தைக் கண்டதுமே கால்கள் நடுங்கத் தொடங்கியது.

“பாஸ்…” என அவன் ஆரம்பிக்கும் போதே, “பத்ரி வந்தானா?” எனக் கேட்க, அவன் பலவீனமாகத் தலையாட்டினான்.

“யார் வந்தாலும் உள்ள விடக் கூடாதுன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன்ல. எதுக்கு அவனை உள்ள விட்ட?” என்று சினத்துடன் கேட்க,

“நான் தான் அவனை விட சொன்னேன்” என்றாள் உத்ஷவி. அவளை உஷ்ணத்துடன் எரித்தவன், தேஜஸ்வினின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான்.

“எவ்ளோ தைரியம் இருந்தா, நான் சொன்னத மீறி அவனை உள்ள விட்டு இருப்ப. கெட் லாஸ்ட். யூ ஆர் ஃபயர்ட்” என்று விட, தேஜஸ்வினுக்கு கண்ணே கலங்கி விட்டது. சில முறை அடி வாங்கி இருக்கிறான் தான். ஆனால், இத்தனை கோபத்துடன், வெறுப்புடன் அவன் தன்னிடம் நடந்து கொண்டதில்லை என்றபோதே, தான் செய்த தவறின் வீரியம் உரைக்க, “சாரி பாஸ்” என்றான் பாவமாக.

உத்ஷவிக்கும் அவனது பேச்சில் சற்று திகைப்பு எழ, “ஸ்வரூ அவன் என்ன செய்வான். நான் சொன்னதுனால தான்…” எனப் பேச வர, அவள் முன் ஒற்றை விரலை நீட்டியவன், “‘மூச்’ ஏதாவது பேசுன கொன்னுடுவேன்.” என்று கண் சிவக்க எச்சரிக்கும் போதே தன் மீது கொலைவெறியில் இருக்கிறான் என்று புரிந்து விட, உத்ஷவிக்கு முகமே கன்றி விட்டது.

“அவன்கிட்ட லூஸ் டாக் பேசி, ஏதாவது க்ளூ கலெக்ட் பண்ணலாம்ன்னு தான் வர சொன்னேன் ஸ்வரூ.” என முணுமுணுக்கும் போதே, ஏனோ அவனது கோப அலைகளின் தாக்கத்தில் தானாக கண்கள் கலங்கி விட்டது.

‘யார் என்ன நினைச்சா என்ன?’ என்ற வாசகத்தை சற்று நேரம் முன்பு அவள் தான் பேசினாள் என்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

“அவன் பொட்டுன்னு மூணு பேரையும் சுட்டுப் போட்டிருந்தா என்னடி செஞ்சுருப்ப. ஹான்?” எனக் கடிந்ததும், “இல்ல இல்ல… தேஜா அவன்கிட்ட இருந்து வெப்பனை எல்லாம் வாங்கி வச்சுட்டு தான் உள்ள விட்டான்.” என்றாள் வேகமாக.

அப்போதும் அவனது உஷ்ண மூச்சுக்கள் அடங்கவில்லை.

“என்ன நடந்துச்சு…” என அக்ஷிதாவைப் பார்த்து அவன் வினவ, ஏற்கனவே அவன் ஆடிய ருத்ர தாண்டவத்தில் விழி பிதுங்கி நின்றவள், மடமடவென ஒரு வார்த்தை மாறாமல் அனைத்தையும் கூறி விட்டாள். அவள் கழுத்தில் ஏற்பட்ட காயத்தை மட்டும் மறைத்து.

அக்ஷிதா பேசும் போதே மற்ற இருவரும் வந்து விட, ஜோஷித் கோபத்துடன் “எப்படி பேசி இருக்கான் பாரு ஸ்வரா. அவனப் பிடிச்சு வைக்காம வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்களா” என தேஜஸ்வினிடம் பொரிந்தான்.

சஜித்தின் பார்வையோ அக்ஷிதாவின் வாடிய வதனத்திலேயே தான் நிலைகொண்டிருந்தது.

உத்ஷவிக்கு கழுத்தின் காயம் வேறு வலிக்க, அங்கு நிற்க இயலாமல், மெல்ல உள்ளே நகரப் பார்த்தாள்.

சட்டென அவளது தலைமுடியை கொத்தாகப் பற்றிய ஸ்வரூப், அவள் சுற்றி இருந்த துப்பட்டாவை கழற்றி எரிந்து, கழுத்தில் இருந்த காயத்தைக் கண்டு ஆத்திரத்தை உமிழ, அக்ஷிதா மீண்டும் வேகமாக விட்ட விஷயங்களை சொல்லி விட்டாள்.

விஹானா தான், “நீ ஏண்டி அவன்கிட்ட திருக்குறள் மாதிரி வார்த்தை மாறாம ஒப்புச்சுட்டு இருக்க?” எனக் கடிய, “உனக்கு என்னம்மா, முடி கம்மியா இருக்கு புடிச்சு இழுத்தாலும் வலிக்காது. எனக்கு அப்படியா…” என தனது கூந்தலை முன்னால் போட்டு பத்திரப்பப்டுத்திக் கொண்டாள்.

“ஆ டைனோசர் விடு வலிக்குது” என்று முடியை அவனிடம் இருந்து காப்பாற்ற முற்பட, அவனோ அவளை தரதரவென உள்ளே இழுத்துச் சென்று, கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு அவனே மருந்திடத் தொடங்கிட, “அடேய்… இதை விட நீ முடியைப் பிடிச்சது தான்டா வலிக்குது.” என்று தலையை தேய்த்துக் கொண்டாள்.

“இன்னொரு தடவை இந்த மாதிரி முட்டாள்தனம் செஞ்சிடாத.” எனக் கடுகடுத்தவன், “உன்ன அப்படியே கடத்திட்டு போயிருந்தா என்னடி செஞ்சுருப்பேன் நான். ஏற்கனவே கடத்துன பசங்களை எங்க தான் வச்சுருக்கானுங்கன்னு ஒரு துரும்பு கூட கிடைக்கல. அதே மாதிரி உன்னையும்… கொஞ்சமாவது யோசிச்சு நடந்துக்கடி” என்றவனின் நெஞ்சம் தடதடத்தது.

அந்த ஆண்மகனின் ஆழ்ந்த தவிப்பைப் புரிந்து கொள்ளாமல், அவன் சட்டைய பற்றியவள், “அப்டி எல்லாம் அவன்கிட்ட சிக்கிட மாட்டேன் டைனோசர். அவன் சொன்ன மாதிரி, ஊருக்காக நீ என்னை கொன்னா கூட, உன் கையால சாவேனே தவிர அவன் நினைக்கிறது என்னைக்குமே நடக்காது.” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக பதித்தவளை, விழி இடுங்கப் பார்த்தவன், “நான் நடக்க விடமாட்டேன்.” என்றான் அதே அழுத்தத்துடன்.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
103
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.