Loading

தேசம் 15

“உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா” என்ற தேனிசை குரல் அந்த சமையலறை அசத்தி கொண்டிருக்க, “ஆஹாக்!” என்ற அதிர்ச்சி குரல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

“எப்பவுமே நீ எனக்கு சர்க்கரை தான்” காதோரம் கூசும் அவன் மீசை முடிகளை தள்ளி விட்டவள், “இப்படித்தான் சொல்லாம கொள்ளாம பிடிக்கிறதா? கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்” என்றாள்.

“உன்னை இந்த மாதிரி அணைக்கிறதுக்கு என்னை விட்டா யார் இருக்கா”

“அதுக்காக இப்படியா பண்றது. கொஞ்ச நேரத்துல திக்குன்னு ஆயிடுச்சு.” என நெஞ்சில் கை வைக்க அதன் மேல் தன் கை வைத்தவன்,

“இப்ப சரி பண்ணிடுறேன் பாரு” என்று சில்மிஷத்தில் ஈடுபட்டான்.

சிறு குழந்தையை மிரட்டும் ஆசிரியர் போல் ஒரு அடி அடித்து அவனை விலக்கியவள், “ஐயாக்கு வேலை முடிஞ்சுதா அதுக்குள்ள” என்றிட,

“ம்ம்! அதுக்கு என்ன சூப்பரா முடிஞ்சுது”

“நாலு தோசை சுட்டு முடியுறதுக்குள்ள முடிய வேண்டிய வேலைக்கு தான் அவ்ளோ பில்டப் பண்ணிங்களா”

“தனா, ஐயாவ பத்தி தப்பா நினைக்காத. எம்புட்டு பெரிய வேலையா இருந்தாலும் அசால்டா முடிப்பான்.”

“அதான் பார்த்தனே லட்சணத்தை”

“ஓய்!”

“என்ன ஓய், செய்ய வேண்டிய வேலையை மறந்துட்டு என் பின்னாடி சுத்திட்டு பேச்சை பாரு.”

“மறந்துட்டு இல்ல மறக்க வச்சுட்டுன்னு சொல்லு”

“யாரு நானா” என்றவள் சமைக்கும் வேலையில் ஆர்வம் காட்ட,

“நீயே தான் என் அழகு பொண்டாட்டி…” பின்னால் நின்று கட்டி அணைத்தான்.

“ப்ச்!”

“பாருடா கைய தட்டி விடுற அளவுக்கு வளர்ந்தாச்சா”

“ஏன்? தட்டி விடக்கூடாதா”

“கூடாது” என்றான் மீண்டும் காதோரம்.

“இந்த மாதிரி பண்ணீங்கன்னா தட்டி விடாம வேற என்ன செய்வாங்க. ஏற்கனவே மணி பதினொன்னு ஆச்சு. இதுக்கு மேலயும் வம்பு பண்ணிட்டு இருந்தீங்கன்னா இன்னைக்கு ராத்திரி ரெண்டு பேரும் பட்டினி தான்.”

அணைப்பில் இறுக்கத்தை காட்டியவன் அவள் காதோரம் ஏதோ வன்மமாக கிசுகிசுத்தான். உடனே பதறி அவன் புறம் திரும்பியவள் தலையில் அடித்துக் கொண்டு, “ஐய்யோ! இப்படி எல்லாம் பேச உங்களுக்கு யாரு கற்றுத்தரா.” வெட்கமாக கண்டித்தாள்.

“இதையெல்லாம் யார் கற்றுத்தரனும் உன்னை மாதிரி அழகான பொண்டாட்டி கூட இருந்தா தானா வரும்.”

“சார் இன்னைக்கு வேற எண்ணத்துல இருக்கீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பசிக்குது தள்ளி போங்க”

அவளை அப்படியே தான் நகரும் திசைக்கு நகர்த்தி வந்தவன் தூக்கி சுற்றினான். விடுபட முடியாமல் திட்ட ஆரம்பித்தவள் ஒருவழியாக தப்பித்து முறைக்க, “நீ தான தனாமா தள்ளிட்டு போங்கன்னு சொன்ன.” என கண்ணடித்தான்.

“அது தள்ளிட்டு போங்க இல்ல தள்ளி போங்க.”

“ஓஓ! அப்படி தெளிவா சொன்னா தான தெரியும்.”

“உங்களை என்ன பண்ணா தகும்” என்றதும் இரு கைகளை விரித்து மீண்டும் கண்ணடிக்க, “அடி விழும்” தோசை கரண்டியை காண்பித்தாள்.

“அடி வாங்காம ஒழுங்கா வேலைய பாருங்க.” என்றதும் உடனே வாயை மூடி தலையாட்டியவன், “உத்தரவு மகாராணி” என்றான்.

அவன் செய்கையில் சிரித்தவள் வேலையை கவனிக்க திரும்ப, ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தவன் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான். இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தவள் மூன்றாவது முறை உண்மையாக அடிக்க, கோபித்துக் கொண்டு ஓரமாக நின்று விட்டான்.

பிரார்த்தனாவும் கண்டு கொள்ளாமல் தன் வேலைகளை முழுமையாக கவனிக்க ஆரம்பித்தாள். அவளே வருவாள் என்று எதிர்பார்த்து நின்றிருந்தவன் ஏமாற்றத்தோடு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்றான்.

“ஏன்?” என்றவள் பார்வை அவன் புறம் திரும்பவே இல்லை.

அதில் இன்னும் கடுப்பானவன் நகரப் பார்க்க, சிரிப்போடு வழி மறித்து, “சாப்பாடு வேண்டாமா…” கேட்க, வீம்பாக வேண்டாம் என்று விட்டான்.

எரிந்து கொண்டிருந்த நெருப்பை குறைந்த அளவுக்கு மாற்றியவள் அவனை நெருங்கி முகத்தோடு முகம் வைத்து, “வேண்டாமா” கேட்க, இந்த முறையும் அதே வீம்பு இருந்தது அவனிடம்.

கன்னத்தோடு கன்னம் வைத்து காதோரம், “நிஜமா வேண்டாமா” என மெதுவாக கேட்க, வீம்பு குறைய ஆரம்பித்தது.

தாமதமாக வேண்டாம் என்றவன் குரலில் அந்தப் பிடிவாதம் இல்லாததை கண்டு கொண்டவள் கைகள் இரண்டையும் அவன் தோளில் போட்டுக்கொண்டு, “கடைசியா கேட்கிறேன் வேண்டாமா” என மூக்கோடு மூக்கு உரசினாள்.

வெகு சிரமங்களுக்கு பிறகு தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு வேண்டாம் என்று தலையசைக்க, “இப்ப கூட வேணாமா” இரு இதழ்கள் அவன் இதழோடு ஒட்டி விலகியது.

கொண்ட பிடிவாதத்தை மறந்தவன் விலகிய உதட்டையே ஏக்கமாக பார்க்க, “பதில் சொல்லுங்க” என முத்தம் கொடுப்பது போல் நெருங்கி அவனை சோதித்து விலகினாள்.

கரை சேர வரும் அலை வராமல் சென்ற ஏக்கத்தில் அந்த உதட்டோடு தன் உதட்டை இழுத்துச் சென்றவன் முத்தம் வைக்க முயன்றான். விலகி ஆட்டம் காட்டியவள், “சரி போங்க, உங்களை கட்டாயப்படுத்த விரும்பல.” என்று விட்டு எதுவும் நடக்காது போல் மீண்டும் சமைக்க ஆரம்பித்தாள்.

புருவங்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு உதட்டையும் பிதுக்கி அவளையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான். திரும்பாமலே அவன் செய்கைகளைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவள், “ஊட்டி விடலாம்னு ஆசையா இருந்தேன்.” என யாரிடமோ சொல்வது போல் அவனை இன்னும் உசுப்பேற்றினாள்.

காலை உணவின் போது கூட ஊட்டி விட கோரிக்கை வைத்தான். இவளோ முடியாது என்று மறுத்து விட நிறைவேறாத ஆசையாக அவனுக்குள் அடங்கிப் போனது. அவ்வாசையை கிளறியவள் அவன் வருகைக்காக காத்திருக்க வெட்கம் பார்க்காமல் அவளிடம் சரண் அடைந்தான்.

“ஹா! ஹா…!” மனைவியின் சிரிப்பை கண்டு பொய் கோபம் கொண்டவன் கழுத்தை கடிக்க, “பசி வந்தா நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க” என்று இன்னும் வெறுப்பேற்றினாள்.

“எனக்கு ஒரு டைம் வரும் அப்ப இருக்கு”

“அந்த டைம் வரும்போது பார்த்துக்கலாம் மிஸ்டர் சரவணப் பொய்கை.”

“ஊட்டி விடுறேன்னு சொன்னதால தான் வந்தேன். இல்லன்னா இன்னைக்கு ராத்திரி பட்டனியாவே படுத்திருப்பேன்.”

“ஆஹான்! ஆஹான்! நம்பிட்டேன்… நம்பிட்டேன்.” என்றவளை அடக்க முடியாமல் குறுக்கு வழியை பின்பற்றினான்.

சமையலை முடிக்க விடாமல் இம்சை செய்தவன் கிடைத்த இடத்தில் எல்லாம் கிள்ளி வைத்தான். வலி பொறுக்க முடியாமல் கத்த ஆரம்பித்தவள் கரண்டியால் அடிக்கவும் செய்ய, “கொல…கொல…” ஊரை கூட்ட ஆரம்பித்தான்.

“வாய மூடுங்க நடுராத்திரி” இரு உதட்டுக்கு மேல் இருக்கும் அவள் கையை கடித்து வைத்தவன், “அப்ப நக்கல் பண்ணாம சமைக்கிற வேலைய பாரு.” மிரட்டினான்.

கடி வாங்கிய கையை விடுவித்து பாவமாக சமைக்க ஆரம்பித்தாள். அமைதியாக இருக்கும் மனைவியை சமாதானம் செய்ய நினைத்தவன் கிள்ளி வைத்த இடத்தில் எல்லாம் முத்தம் வைக்க கொஞ்சம் சமாதானமானாள்.

நேரம் ஆகிவிட்டதால் சேட்டைகளை ஓரம் கட்டி வைத்தவன் அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். இருவரும் சேர்ந்து இரவு உணவை முடிக்கும் தருவாய்க்கு வந்தார்கள். சட்னி தாளித்துக் கொண்டிருந்தவள் பின்னால் அணைத்தபடி நின்றிருந்தவன் கடுகு வெடிப்பதை பார்த்து, “ஏய் தனா! தள்ளிவா மேல பட போகுது.” பின்பக்கம் இழுத்தான்.

சிரித்துக் கொண்டே, “எங்க அப்பா மாதிரியே பண்றீங்க.” என்றிட, அணைத்துக் கொண்டிருந்த கைகள் சற்று விலகியது.

“அவரும் இப்படித்தான் என்னை எந்த வேலையும் வாங்க மாட்டாரு. என்னைக்காவது ஒரு நாள் ஆசையா சமைக்க போனா பக்கத்துல நின்னுகிட்டு இதை பண்ணாத அதை பண்ணாதன்னு அவரும் பயந்து என்னையும் பயமுறுத்துவாரு.”

மனைவியின் பேச்சு வெறுப்பை கொடுத்தது. காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் பேச்சை மாற்ற முயன்றான். அதில் கவனம் திரும்பாது தந்தையை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா.

அவளை விட்டு முழுவதும் விலகி நின்றவன், “முடிஞ்சுதா ரொம்ப பசிக்குது” என்றான் குரலை திடமாக காட்டி.

“டூ மினிட்ஸ்” என்றவள், “தப்பி தவறி ஏதாவது ஒரு சின்ன காயம் பட்டா அவ்ளோதான் வீடு. என்னை எதுவும் சொல்ல மாட்டாரு அம்மாவை பிடிச்சு பயங்கரமா திட்டுவாரு. எங்க அம்மா அழாத குறையா பாவமா நிப்பாங்க. நிறைய நாள் யோசிச்சிருக்கேன் எதுக்கு அப்பா நம்ம மேல இவ்ளோ பாசமா இருக்காருன்னு. நான் இல்லாம அங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பாரு.” தந்தை புராணத்தை பாடிக் கொண்டிருந்தாள்.

கேட்க முடியாமல் அங்கிருந்து சரவணன் வெளியேற, “இதை எடுத்துட்டு போங்க சரவணா நான் தட்ட கழுவி எடுத்துட்டு வரேன்.” என்றாள்.

எரிந்து கொண்டிருக்கும் அடுப்பை விட சூடாக இருந்தவன் அவளைப் பார்க்காமல், “நான் பாத்ரூம் போறேன்” என சென்று விட்டான்.

அவளை விட்டு சிறு தொலைவு வரும் வரை தன்னை கட்டுப்படுத்தி பொறுமையாக நடந்தவன் படியேற ஆரம்பித்ததும் பறந்தான். வேகமாக தன்னறைக்குச் சென்று கழிவறையில் புகுந்து கொண்டான். பிரார்த்தனா பேசியதை நினைத்து கடுப்பானவன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்க,

“டேய்!” என்றது கண்ணாடியில் அவன் மனசாட்சி.

மார்பளவு இருக்கும் கண்ணாடியை பார்க்க, “நீ போட்ட திட்டம் அவ்ளோ சீக்கிரம் நிறைவேறாது. இந்த உலகத்தையே மறந்து உன்னை மட்டுமே நினைக்க வைக்கலாம்னு தப்பு கணக்கு போட்டு நீயே அவ அப்பாவ நியாபகப்படுத்திட்ட. இருபத்தி ஆறு வருஷம் அன்பை கொட்டி வளர்த்திருக்காரு அவ்ளோ சீக்கிரம் மறந்துடுவாளா.” என்றது.

“வாய மூடிட்டு போடா.”

“நானும் வாயை மூடிட்டு சும்மா இருக்கலாம்னு பார்க்கிறேன் எங்க விடுற. நீ என்ன பண்ணாலும் நீ நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது.”

“ஏன் நடக்காது? இந்த சரவணப் பொய்கை நினைச்சா எல்லாத்தையும் நடத்தி காட்டுவான். என்னை விட்டு விலகி இருந்தவ இப்ப ஓரசிக்கிட்டு நிக்கலையா. அதே மாதிரி அவ அப்பனையும் முழுசா விலக்கி வைக்க என்னால முடியும்.”

“ஐயோ! ஐயோ! உன்னால என்னத்தடா கிழிக்க முடிஞ்சுது. போலீஸ் ஆகணும்னு நினைச்ச, முடிஞ்சுதா? நாலு போலீஸ்காரங்க முன்னாடி துணி இல்லாம உட்காரதா முடிஞ்சுது.”

“டேய்!”

“அது மட்டுமா” என அவன் வாழ்க்கை பக்கத்தை புரட்டி போட, கோபம் கொண்டு அந்த கண்ணாடியை நொறுக்கினான்.

கண்ணாடி சில் நான்கு புறமும் தெறித்து அவன் மீதே பட்டு ரத்தத்தை கொப்பளிக்க வைத்தது. போதாக்குறைக்கு குத்திய விரலில் இரண்டு கண்ணாடித் துகள்கள் குத்தி இருந்தது. அதிலிருந்து வெளியேறிய ரத்தம் வெள்ளை நிற தரையை அழுக்காக்கியது. உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை கண்டும் கோபத்தை குறைக்காதவன் தலையை முட்டினான் சுவற்றில்.

அவற்றுக்கு வாய் இருந்தால் நிச்சயம் அழுதிருக்கும் இவன் அடிக்கும் வேகத்தில். பத்து முறைக்கும் மேலாக தலையை முட்டி கதி கலங்க வைத்தவன் மீண்டும் உடைந்த கண்ணாடியை குத்தினான். இந்த முறை ரத்தம் குபு குவென வெளியேற ஆரம்பித்தது. கோபமும் பதட்டமும் அப்போதுதான் நிதானத்திற்கு வர ஆரம்பித்தது. உடல் மட்டும் தான் அடங்காமல் நடுங்கியது.

அவ்விடத்திலேயே அமர்ந்தவன் நடுங்கும் விரல்களை பார்த்தான். அதிலிருந்த இரண்டு கண்ணாடி துகள்களை வலியோடு எடுத்தான். ஆழமாக குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வெளியேற அதில் சாமிநாதன் முகம் தெரிந்தது. மாமனாரின் திருமுகம் தணிந்த கோபத்தை மீண்டும் தூண்டி விட்டது.

வெறி அடங்காமல் அருகில் இருந்த குழாயில் குத்த வர, “சரவணா” என்ற குரல் அதை நிறுத்தியது.

தேசம் 16

“சரவணா”

நான்கு முறைக்கு மேலாக அழைத்து விட்டாள். உள்ளே இருந்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் குரலுக்கு பின்பு தான் கழிவறை இருக்கும் லட்சணத்தையே பார்த்தான். பார்க்கும் இடமெல்லாம் கண்ணாடி துகளும் இவன் உடலில் இருந்து வெளியேறிய ரத்தமும் காட்சி பொருளானது‌.

“என்ன பண்றீங்க இவ்ளோ நேரம்”

“வந்துட்டேன்” என்றவன் சில நொடிகள் கழித்து, “நீ கீழ போ நான் வரேன் தனா.” என அவளை அனுப்பி வைக்க முயன்றான்.

“சீக்கிரம் வாங்க ரொம்ப பசிக்குது”

கதவை லேசாகத் திறந்து அவள் இல்லாததை உறுதி செய்தவன் செய்த வேலையை மறைக்க முயன்றான். வெள்ளை நிற தரையை பளபளப்பாக மாற்றியவன் உடைந்த கண்ணாடியை அகற்றி விட்டான். பழைய நிலைமைக்கு வந்த கழிவறையில் கண்ணாடி மாட்டிய இடம் மட்டும் வெறுமேன இருந்தது. அதைக் கூட சமாளிக்க வழி கண்டுபிடித்தவன் தன் காயங்களை சமாளிக்க வழி தெரியாமல் முழிக்க ஆரம்பித்தான்.

அவசரத்திற்கு எந்த யோசனையும் வராமல் போக மனைவி மீண்டும் அழைத்தாள். அவசரப்பட்டதை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவன் காயம் பட்ட கையை மறைத்துக் கொண்டு அவளிடம் சென்றான். எதையும் அறியாமல் வெள்ளந்தியாக உணவு பரிமாறி விட்டு சாப்பிட அமர்ந்தாள்.

கையை உயர்த்தினால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், “ஊட்டி விடுறேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு சாப்டுட்டு இருக்க. சின்னப் பிள்ளைய ஏமாத்துறியா.” என ஒரு சின்ன தாயத்தை உருட்டினான்.

அவன் நோக்கம் அறியாது தன் மீது உள்ள காதலில் கேட்கிறான் என உள்ளத்தில் இருந்து புன்னகைத்தாள். அந்த சிரிப்பு தப்பித்த செய்தியை உணர்த்தியது. அதன்பின் அவளோடு சகஜமாக பேசியவன் சாப்பிட்டு முடித்தான்.

பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றதும் வேகமாக தன்னறைக்கு ஓடியவன் படுத்துக்கொண்டான். வேலைகளை முடித்து வந்தவள், “நாளைக்கு கோவிலுக்கு போலாமா” கேட்க,

“ம்ம்” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, “போன் ஒன்னு வேணும்.” என்றிட, மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் தோன்றினாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் சரி என்றான்.

“உங்க போன் கொடுங்க அப்பாக்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்.”

பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல் எதற்கென்று கேட்டான்.

“நாளைக்கு அப்பா அம்மாக்கு கல்யாண நாள்”

“ஓஹோ!”

“எவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன் ஊளை விட்டுட்டு இருக்கீங்க. ஃபோனை கொடுங்க இப்பவே விஷ் பண்ணலாம்.”

“தூங்கிட்டு இருப்பாங்க தொந்தரவு பண்ணாத.”

“இதெல்லாம் ஒரு தொந்தரவா… நான் விஷ் பண்ணா ரொம்ப சந்தோஷப்படுவாரு. இந்த வருஷம் மாப்பிள்ளையும் சேர்ந்து விஷ் பண்ற குஷில அவர் தூக்கமெல்லாம் காணாம போயிடும்.”

“சொன்னா கேளு தனா எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”

“ப்ச்! உங்க கிட்ட கேட்கிறது வேஸ்ட்.” என்றவள் அவனுக்கு பக்கத்தில் இருக்கும் கைபேசியை எடுக்க முயன்றாள்.

தடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தவன் அவள் கைக்கு கைபேசி வந்ததும், “சொல்லிட்டு இருக்கேன்ல மீறி செஞ்சா என்ன அர்த்தம்.” என்று கைபேசியை பிடுங்கினான்.

நன்றாக பேசிக் கொண்டிருந்தவன் காட்டிய திடீர் முகத்தில் திடுகட்டவள், “என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்துறீங்க. கோபப்படுற அளவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலையே.” வினவிட, பதில் சொல்லாமல் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

“உங்களை தான கேக்குற யார் கிட்டயோ பேசுற மாதிரி திரும்பி படுக்குறீங்க.”

“காலையில பேசிக்கலாம் படு”

“இதை எதுக்கு காலைல வரைக்கும் கொண்டு போகணும். நீங்க கோபப்படுற அளவுக்கு என்ன தப்பு பண்ணன்னு சொன்னா அடுத்த தடவை பண்ணாம திருத்திப்பேன்ல.”

“ஒரு தடவை சொன்னா புரியாதா? காலைல பேசிக்கலாம் படு.” என்ற சரவணப் பொய்கையின் குரலில் அப்படி ஒரு தீ.

சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லை. நிதானம் அடைந்தவன் மீண்டும் அவசரப்பட்டதை எண்ணி கடிந்து கொண்டான். கூடவே என்ன செய்து அவள் கேட்பதை தடுப்பது என்ற ஆழ்ந்த சிந்தனை. மனதின் ஓரம் தன்னவளைக் காயப்படுத்திய வலியும் சிறிதளவு உண்டானது. ஆயிரம் சிந்தனைகளுக்கு மத்தியில் பிரார்த்தனா தூங்கிவிட்டாளா என்பதை அறிய திரும்ப, அழுதபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தனா!” கண் துடைக்க எழ, முதுகு காட்டி படுத்துக் கொண்டு விசும்பினாள்.

முதுகை உரசிக்கொண்டு படுத்தவன் கண் துடைத்து விட, தட்டிவிட்டாள். வாய்விட்டு மன்னிப்பும் கேட்டு விட்டான் ஏற்றுக் கொள்ளவில்லை. கோபத்திற்கான காரணத்தைக் கேட்டு அடம் பிடித்தாள். சிக்கல் மேல் சிக்கல் உண்டாக என்ன செய்வது என்று தெரியாமல்,

“கோபப்படாம என்ன பண்ணுவாங்க. என் கையில அடிபட்டு ரத்தம் வரது கூட தெரியாம சாப்பாடு ஊட்டி விடுற. சரி இங்க வந்தாவது பார்ப்பன்னு பார்த்தா உங்க அப்பாவ பத்தி பேசுற. கூடவே இருக்கவனை கண்டுக்காம எங்கயோ இருக்கிறவரை பத்தி பேசினா கோபம் வரத்தான செய்யும்.”
எதை மறைக்க முயன்றானோ அதையே காட்டி தீர்வு கண்டான்.

சரவணப் பொய்கை வார்த்தையை கேட்டவள் துடித்து எழுந்து கையை ஆராய்ந்தாள். கட்டி வைத்திருந்த வெள்ளை துணியை விலக்கிப் பார்த்தவள் அதிர்ந்து, “எப்படி ஆச்சு?” விசாரிக்க,

“சாப்பிடாம இருந்ததுல மயக்கம் வந்துடுச்சு. விழப்போற பயத்துல கண்ணாடியை பிடிக்க போய் இப்படி ஆகிடுச்சு.” வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.

கலங்கமில்லாது காதல் கொண்ட அவள் உள்ளம் தன்னவன் ரத்தத்தை கண்டு துடி துடித்தது. இதைக் கூட அறியாமல் அரை மணி நேரமாக உடன் இருந்திருக்கிறேனே என்ற குற்ற உணர்வு இம்சை செய்தது. கைகளைப் பற்றி கண்ணீரால் மருந்திட்டவள் அவனிடம் மன்னிப்பு வேண்ட, வழக்கம் போல் ஆதரித்துக் கொண்டான் பெரிய மனம் கொண்டு.

பிரச்சனையை சமாளித்த நிம்மதியில் கடவுளாய் அரவணைக்க, அழுகை நின்றபாடில்லை. அவனே இந்த அளவிற்கு வருத்தம் கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. தன் மீதா இவ்வளவு காதல் என்ற ஆச்சரியம் அவளையே பார்க்க வைத்தது.

“உங்க அளவுக்கு நான் உங்களை காதலிக்கலன்னு தோணுது.”

“எதுக்குமா இப்படி எல்லாம் பேசுற இது ஒரு சின்ன விஷயம் தான.”

“இதுவாங்க சின்ன விஷயம். கூடவே இருந்தும் இதைக் கூட தெரிஞ்சிக்காம இருந்திருக்கேன்.”

“நான் தான் காட்டாம மறைச்சேன். இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை.”

“எதுக்காக மறைச்சீங்க அப்பவே சொல்லி இருந்தா ஹாஸ்பிடல் போய் இருக்கலாம்ல.” என்றதும் அவள் கன்னத்தைப் பிடித்தவன்,

“இந்த மாதிரி நீ அழுறதை என்னால பார்க்க முடியாது தனா. அதனாலதான் சொல்லாம மறைச்சேன்.” என்றான் மனசாட்சி உறுத்தாமல்.

சரவணப் பொய்கையை இறுக்கமாக அணைத்துக் கொண்ட பிரார்த்தனா, “இதனால தான் சொல்றேன் உங்க அளவுக்கு நான் உங்களை காதலிக்கலன்னு. என்னை காதலிச்ச பாவத்துக்காக எவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கிறீங்க. ஆனா, நான் உங்களை சந்தேகப்பட்டேன், விலக்கி வச்சேன், புரிஞ்சிக்காம காயப்படுத்தினேன்.” என செய்யாத அத்தனை குற்றத்தையும் தன் மீது சுமத்தி கொண்டாள் பிரார்த்தனா.

மனைவி சொல்லிய வார்த்தையில் உள்ளம் சுருக்கென்று குத்தினாலும் சுயநலம் கண்ணை மறைத்து, “உன்னை காதலிக்கிறது என்னோட பாக்கியம். அதை பாவம்னு சொல்லி அசிங்கப்படுத்தாத தனா. பதிலுக்கு பதில் செய்றதுக்கு இது பிசினஸ் இல்ல வாழ்க்கை. எப்படியோ அனாதையா போக வேண்டிய என் வாழ்க்கையை ரொம்ப அழகாக்கி இருக்க உனக்காக எதை வேணுனாலும் செய்வேன்.” என்றான்.

ஏற்கனவே காதலித்து பலவீனமடைந்தவள் இவன் வார்த்தைகளை எல்லாம் கேட்டு இன்னும் தன்னை பலவீனப் படுத்திக் கொண்டாள். சுற்றி நடக்கும் சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தன்னவன் சதி பின்னுகிறான் என்பதை உணராமல் அவன் எண்ணத்திற்கு வளைந்து கொடுத்தவள் முற்றிலும் அவன் வசம் ஆகிவிட்டாள்.

வெகு நேரமாக அழுது ஓய்ந்தவள் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு அவனோடு உறங்க முற்பட, சூழ்ச்சியே என்றாலும் மனைவியின் அன்பு சற்று ஆட்டி படைத்தது. அவள் கொண்டுள்ள காதலில் ஒரு சதவீதம் அளவாது இவன் கொண்டுள்ளானா என்பது சந்தேகமாக இருக்க மனைவி என்ற அதிகாரம் தொட வைத்தது.

இல்லறத்தை ஆரம்பிக்கும் பொழுது உள்ளம் பிசுறு தட்டியது. ஏமாற்றி தொடுகிறாய் என எச்சரித்தது உள்ளம். எத்தனை எச்சரிக்கை மணி அடித்தாலும் அவனுக்குள் இருக்கும் சுயநலம் ஆக்கிரமிப்பு செய்ய துணிந்தது. காதல் ஆர்ப்பரிக்க அங்கு ஒருத்தி தன்னை முழுவதும் அர்ப்பணிக்க களவாடினான் காதல் என்ற பேர்வழியில்.

எல்லாம் முடிந்தபின் சோர்ந்து அவனிடமே மடி சாய்ந்தவள், “லவ் யூ சரவணா” என்றிட, “லவ் யூ தனாமா” நெற்றியில் முத்தமிட்டு சேர்த்தணைத்துக் கொண்டான்.

மனதிற்குள் ஏதோ ஒரு எண்ணம் சுரண்டிக்கொண்டே இருந்தது சரவணப் பொய்கையை. அவை வார்த்தைகளாக, “என்னை எதனால உனக்கு பிடிச்சுது. எப்படி பார்த்தாலும் நான் ஒரு மனநோயாளியா தான உன் முன்னாடி இருந்தேன். அந்த கோட்டை தாண்டி காதலியா எப்படி என் வாழ்க்கைக்குள்ள வர தோணிச்சு.” கேட்டான்.

இது வெகு நாட்களாக அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்த கேள்வி. திட்டம் போட்டு தான் அவளை வளைத்தான் என்றாலும் வளைந்து வந்ததற்கான காரணத்தை இன்று வரை அறியவில்லை. அவள் காட்டிய அழுகையில் மனம் கரைந்தவன் வாய்விட்டு கேட்க,

“ஒரு காலத்துல என்னை சுத்தி எதுவுமே இல்ல. எதுக்கோ அழுவேன் எதுக்கோ ஆசைப்படுவேன். நிறைவேத்திக்க முடியாத வாய் இல்லாத குழந்தையா நான்கு சுவற்றுக்குள்ள முடங்கிட்டேன். யாராவது வந்து என்னை மீட்டெடுக்க மாட்டாங்களான்னு ஒவ்வொரு நொடியும் காத்திருந்தேன். அந்த வலியோட உங்களை பார்த்தேன். யாரோன்னு விட்டுட்டு போக மனசு வரல.” என்றதோடு பேச்சை நிறுத்தியவள் கண் மூடிக்கொள்ள, பலத்த யோசனை இவனுக்கு.

கட்டியவன் அறிந்த வரை சிரிப்பு நிறைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரி பிரார்த்தனா. அப்படி இருக்க சொல்லிய வார்த்தைக்கான அர்த்தம் விளங்கவில்லை. சொல்லும் பொழுது அவள் விழியில் கண்ட வலியை ஒரு காலத்தில் இவன் விழியில் கண்டிருக்கிறான்.

தன்னவள் கடந்த காலம் எளிதானது அல்ல என்பதை அறியாதவன் அறிந்த பின் என்னாவானோ!

தேசம் தொடரும்…
அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்