Loading

புகழேந்தியை திரும்பிப் பாராமல் சென்ற ஹரிதா, மீட்டிங் ஹாலுக்கு சென்று சாத்விக்கை முறைக்க, அவனோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

அவள் தீப்பார்வை தொடர்ந்ததில் அவன், “மீட்டிங்க்கு டைம் ஆச்சு ஹரி… போய் உட்காரு” என்று விட்டு ஃபைலில் தலையைக் கவிழ்த்த, அவளுக்குப் பின்னே புகழ் நின்று அவளையே பார்ப்பதை உணர்ந்து, இருக்கையில் சென்று அமர்ந்தாள் ஹரிதா.

கட்டுமானத் தொழில் சம்பந்தமான வாடிக்கையாளர் ‘மீட்டிங்’ இருக்க, சாத்விக் இடம் தான் கடந்த சில மாதமாக காரியதரிசியாகப் பணிபுரிகிறாள். அவளுக்கு ‘பாஸ்’ என்பதை விட, நல்ல நண்பனாகவே இருப்பான். அவள் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்தே, அவள் மேல் மிகவும் அக்கறையுடனும் நட்புடனும் இருப்பவனிடம், அவளும் இயல்பாகவே தான் பழகுவாள்.

சாத்விக் “உன்னால எனக்கு இன்னைக்கு செருப்படி இருக்கு” என்று புகழேந்தியை முறைக்க,
புகழ் ஹரிதாவையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘தன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டாளோ?’ என்ற பரிதவிப்பு அவன் கண்களில்.

வாடிக்கையாளர் கூறிய குறிப்புகளை எல்லாம் எழுதிக் கொண்டவள்,
‘புகழ் ஏன் இங்க வந்துருக்காரு…?’ என்று ஒரு புறம் யோசித்துக் கொண்டிருக்க, அப்போதென்று சுட சுட டீயை அவர்கள் முன் வைத்தான் பணியாள்.

அதனைப் பார்த்த புகழ், அவளை முதல் முறை பார்த்த தினத்தை நினைவு கூர்ந்தான். ஹரிதாவுக்கும் அந்த நிகழ்வு தான் மனதில் படமாக ஓடியது.

சில மாதங்களுக்கு முன், ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று, புகழேந்தியின் இனிய தோழி ரெஜினா, அவனைத் தேனிக்கு அழைத்து வர, அதன் பிறகே அவனுக்குப் பெண் பார்க்க அவனின் அப்பா மணிகண்டனோடு திட்டமிட்டு தன்னை அழைத்து வந்திருக்கிறாளென அறிந்து, மீண்டும் சென்னைக்கே வண்டியைத் திருப்பினான்.

“கமான், புகழ்… நான் அங்கிள் கிட்ட பிராமிஸ் பண்ணிட்டேன். ஒரே ஒரு தடவை நீ பொண்ணை வந்து பாரேன்” என்று கெஞ்சினாள் ரெஜினா.

அவன் ‘அவள் பேசியதே காதில் கேட்கவில்லை’ என்ற ரீதியில் சாலையில் கவனத்தைப் பதித்து, தேனியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் மகிழுந்தைச் செலுத்தினான்.

ரெஜினா, “புகழ் பிளீஸ் டா எனக்காக வா…! உன்னை நான் வேலை இருக்குன்னு பொய் சொல்லி, சென்னையில இருந்து தேனி வரை கூட்டிட்டு வந்து இப்போ பொண்ணு வீட்டுக்குக் கூடப் போகாம, திரும்பிப் போனா நல்லாருக்காது டா. உன் அப்பா, பொண்ணு வீட்டுல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…” என்று கெஞ்சியவளிடம்,

‘நானா வெயிட் பண்ண சொன்னேன்’ என்பது போல் அடர்ந்த அவன் புருவங்களை உயர்த்தி வினவினான்.
அவள் “சரி சரி… நீ பொண்ணை பார்க்க வர வேணாம். அட்லீஸ்ட் போய், பஜ்ஜி சொஜ்ஜியாவது சாப்பிட்டு வரலாம்டா. பசிக்குது” என்று பாவமாகச் சொல்லிட, புகழ் அமைதியாக ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தினான்.

அதில் கடுப்பானவள், “போடா! நீ பொண்ணு வீட்டுக்கு வர்ற வரைக்கும், நான் விரதம்” என்று அவளின் சிவந்த முகத்தைச் சுருக்கி கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பெரிய பெரிய மூச்சுக்களை விட, அதில் வசீகரமாகச் சின்ன சிரிப்பைச் சிந்தியவன், மீண்டும் தேனியை நோக்கிப் பயணித்தான்.

“சித்தி, மாப்பிள்ளை வந்துட்டாங்க…! நீங்க கிளம்பிட்டீங்களா?” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள் 7 வயது ரித்திகா தன் தாயின் தங்கையிடம்.

மல்லிகைச் சரத்தை தலையில் சூடி, கண்ணாடியில் தன்னை ஒருதரம் சரிபார்த்துக் கொண்டிருந்த ஹரிதா,
“நான் ரெடி தங்கம்…” என்று கண்ணடித்து, மலர்ந்த புன்னகையை கொடுத்தவள், ஜன்னல் வழியே வெளியில் பார்க்க, அங்கு, புகழ் வருவதைக் கண்டு மெலிதாக முறுவலித்தாள்.

உள்ளே வந்தவனை, பெண் வீட்டார் தடபுடலாகக் கவனிக்க, அவனின் அப்பா மணிகண்டன் ‘ஏண்டா லேட்?’ என்று பார்வையாலேயே கடிந்து கொண்டார். 
அவனோ சற்றும் யோசிக்காது, “நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசணும் இந்த டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் அப்புறம் சாப்பிட்டுக்கலாம்…” என்றவன் பார்வையை வீட்டினுள் அலசி,
“பொண்ணு ரூம் எங்க இருக்கு?” என்று கேட்க,

அவன் செய்த ரகளையில், ‘வாயில் வைத்த பஜ்ஜியை விழுங்குவதா? இல்ல துப்புவதா? எனப் புரியாமல்’ பேந்த பேந்த விழித்தாள் ரெஜினா.

புகழ் உள்ளேயே சென்று பெண்ணைத் தேட, அவனுக்குப் பின்னிருந்து “நீங்கப் பார்க்க வந்தது என்னைத் தான்…” என்ற ஹரிதாவின் குரல் ஒலித்தது.

அதில் அவன் “ஹாய்! ஐ ஆம் புகழேந்தி. முதல்ல ஒரு சாரி. எனக்கு இந்தப் பொண்ணு பார்க்குற விஷயமே இப்போ தான் தெரியும்.  எனக்கே இது ஷாக் தான். இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ணிக்க்கிற ஐடியால இல்ல… சோ டோண்ட் மிஸ்டேக் மீ…!” என்று படபடவெனப் பேசி விட்டு, அவளைத் தாண்டிச் சென்றவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

பின் ஏதோ தோன்ற ஹரிதாவிடம் திரும்பி வந்த புகழேந்தி, “நீங்க அழகா இருக்கீங்க. சோ ஏதோ குறை இருக்குன்னு உங்களை வேணாம்னு சொன்னேன்னு நினைச்சுக்காதீங்க. எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு ஐடியா வந்தா, முதல்ல உங்களைத் தான் நினைப்பேன். அப்போவும் உங்களுக்குக் கல்யாணம் ஆகலைன்னா, மறுபடியும் நானே உங்களைப் பொண்ணு கேட்டு வரேன். பட், வெரி சாரி ஸ்வீட்டி. ஃபார் திஸ் இன்கன்வீனியன்ஸ்” என்று ஓட்டமும் நடையுமாக வெளியில் வந்தவனை, மணிகண்டன் முறைத்தார்.

ஹரிதாவின் அப்பா கந்தன் சிறிதாய் ஜவுளி வியாபாரம் செய்பவர். அம்மா வள்ளி இல்லத்தரசி. ஒரு அக்கா சிந்தியா. திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவளுக்குப் பிறகு நீண்ட இடைவெளியில் பிறந்த ஹரிதா, அப்பா அம்மா இருவருக்கும் செல்லம்.

அவளுக்கும் அவளின் குடும்பம் தான் எல்லாமே. அம்மா அப்பாவின் மேல் உயிரையே வைத்திருப்பவள். அவள் அப்போது தான் எம்.பி.ஏ படிப்பை முடித்திருக்க, கந்தன் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்.

அதிலும் அவளின் அக்கா வீட்டு சொந்தத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். சிந்தியா குடித்துச் சீரழியும் அவளின் கொழுந்தனுக்குத் தான், அவளைக் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, கந்தனுக்கு அதில் விருப்பம் இல்லை. அதில் அவள் கோபத்துடன் இருந்தாள்.
அப்போது தான், புகழின் அப்பா, இவர்கள் குடும்பத்தைப் பிடித்துப் போய்ப் பெண் கேட்டு வந்தார்.

ஹரிதாவின் பெற்றோருக்கும் இதில் விருப்பமே. அவனை நேரில் பார்க்காமல் புகைப்படத்திலேயே அவனைப் பிடிக்கவே செய்தது. ஹரிதாவுக்கும் அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்ல எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லையென ஒப்புக் கொண்டாள்.

அப்போது தான், அவன் மின்னலாய் உள்ளே வந்தான். ஜன்னல் வழியே அவன் நடந்து வருவதை பார்க்கும் போதே, அவன்மேல் ஒரு சின்ன ‘ஸ்பார்க்’ இருந்தது அவளுக்கு. ஆனால் அவன் பேசிவிட்டுச் சென்றது, அவளுக்கு சிரிப்பைத் தான் கொடுத்தது. பொதுவாக, பெண் பார்க்க வந்தால், ஆயிரம் நொட்டைகள் சொல்லி விட்டுப் போவார்கள். ஆனால், இவன் பேசியது அவளுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்க, தலையை ஆட்டி, சிரித்துக் கொண்டாள்.

மணிகண்டன் தலையில் அடித்து, தன்  மகனை ‘உட்காரு’ என்று கண்ணைக் காட்டியதில்,
புகழ் “டாட் நான் போகணும்.” என்று பிடிவாதம் பிடிக்க, கந்தனும், வள்ளியும் தான் திருதிருவென விழித்தனர்.

ரெஜினாவோ சொல்லவே வேண்டாம். “டேய்! ஒரு மரியாதைக்காக வந்ததுக்கு உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசுடா” என்று அடிக் குரலில் மிரட்ட,
‘உங்களோட பெரிய தொல்லை…’ என்று தலையில் அடித்தவன் தலையெழுத்து என்று அமர்ந்திருந்தான்.

மணிகண்டனும் சங்கடமாக அமர, ஹரிதா தான் அவர்களை சகஜமாக்கும் பொருட்டு, புகழிற்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

அவனோ “எனக்கு காபி பிடிக்காது. ஒரு கப் ‘டீ’ கிடைக்குமா” என்று கேட்க,
ரெஜினா “இதென்ன ஹோட்டலா டா?” என்று முறைத்தாள்.

“நமக்காகத் தான் இதெல்லாம் பண்றாங்க… அப்போ நமக்குப் பிடிச்சதை கேட்குறதுல தப்பில்லையே?” என்று தோளைக் குலுக்கினான்.

ஹரிதா மென்னகையுடன், “டூ மினிட்ஸ்…” என்று நகரப் போக,
புகழ் “ஒன் மினிட்… இந்தக் கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு சொன்னதுல உங்களுக்கு என் மேல கோபம் இல்லைல?” எனக் கேட்டதில், அவளின் பெற்றோர், அவனின் பேச்சில் முழித்துக் கொண்டு நிற்க, மணிகண்டனோ கொலை வெறியில் இருந்தார்.

“உங்க விருப்பத்தைச் சொன்னதுக்கு, நான் ஏன் உங்க மேல கோபப்படனும்.” என்று விழி உயர்த்திக் கேட்க,

“தட் சவுண்ட்ஸ் குட்…” என்றவன், கைகட்டி பின்னால் சாய்ந்து அமர்ந்தவாறு “‘டீ’ பிளீஸ்….!”

‘கொஞ்சம் திமிரு தான்’ என்று சிறு புன்னகையுடன் நினைத்தவள், அவனுக்குத் தேநீரை தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அப்போது கை வழுக்கி, தெரியாமல் அவன் மேலேயே கொட்டி விட்டாள். ரெஜினாவோ வாயைப் பொத்திச் சிரித்து,
“சிஸ்டர் சும்மா சொல்லக் கூடாது செம்மையா பழி வாங்கிட்டீங்க, ஹா! ஹா!” என வாய் விட்டுச் சிரிக்க, புகழ் அவளைத் தீயாய் முறைத்தான்.

“சாரிங்க! ரொம்ப சாரி! நான் தெரியாம கைத்தவறி…” என்று ஹரிதாவின் மலர்ந்த முகம் பதட்டத்தில் சுருங்க,

வள்ளி “என்னம்மா நீ பார்த்துக் குடுக்குறது இல்ல?” என்று அதட்டினார்.

அவளுக்கோ வருத்தமாகப் போய் விட்டது. “ரொம்ப சாரிங்க” என்று கண்ணைச் சுருக்கி கேட்க,

மணிகண்டன் “இவனுக்கு இது தேவை தான் நீ ஏன்மா சாரி கேட்கிற” என அவர் பங்கிற்கு அவனை வார,
அவன் தான் “குட் ஃபாதர், குட் நட்பு…” என்று விட்டு,
ஹரிதாவிடம் “கூல் ஸ்வீட்டி. நோ ப்ராப்ளம்…” என்றவன், சுற்றி முற்றி தேடி விட்டு,
“டீ தான் கொஞ்சூண்டு சூடா இருந்துச்சோ… மே ஐ யூஸ் ரெஸ்ட் ரூம்?” எனக் கேட்டான் சூடு தாங்காமல்.

அவள் “ஸ்ஸ்ஸ்…! சாரி வாங்க…” என்று புகழை பின் பக்கம் இருக்கும் குளியலறைக்கு அழைத்துச் செல்ல,
அவன் தான் “எக்ஸ்கியூஸ் மீ… கொஞ்சம் உள்ள போறீங்களா? பேசிக்கலி ஐ ஆம் லிட்டில் ஷை” என்றிட,

‘அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே?’ என்ற பதட்டத்தில் இருந்தவள், குளியலறையைக் காட்டிய பிறகும், தான் நகராமல் இருந்தது அப்போது தான் உரைக்க, தன்னையே திட்டிக் கொண்டு, தலையைக் குனிந்தபடி உள்ளே சென்றாள்.

புகழ் வருவதற்குள் மீண்டும் தேநீரை தயாரித்தவள், அடுக்களையிலிருந்து கையில் கப்புடன் வெளியில் வர, அப்போது தான் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, பின் புறம் வழியே அந்தப் பக்கம் வந்தவன் மேல் மீண்டும் மோதி விட்டாள்.

அதில் தேநீர் அவன்மேல் கொட்டப் போக, சட்டென அதனைப் பிடித்தவன் “உன்கிட்ட ஒரு ‘டீ’ கேட்டது தப்பா? இப்படி டீயாலேயே எனக்கு அபிஷேகம் பண்ற…” என்றான் பாவமாக.

“அய்யோ சாரிங்க… நீங்க வந்ததை நான் கவனிக்கல” என்று உதறலுடன் கூறிய ஹரிதாவை,
“வந்ததுல இருந்து இது ஆறாவது சாரி…” என கேலி செய்தவன்,
“உன் டீய… நீயே குடிச்சுடு” என்று கொடுத்து விட்டு வெளியில் சென்றதில்,
அவள் தான் ‘சே!  டீ கேட்டவருக்கு ஒரு வாய் டீ கூட குடுக்காம இப்படி பண்ணிட்டோமே’ என்று முகம் வாடினாள்.

சட்டென மீண்டும் அவள் முன் வந்தவன், அவள் கையில் இருந்த தேநீர் குவளையை வாங்கி, ஒரே மடக்கில் குடித்து விட்டு, “ஹேப்பி?” என்று தலையைச் சாய்த்து கேட்டு விட்டு, “பை ஸ்வீட்டி! சீக்கிரம் கல்யாண பத்திரிக்கை அனுப்பு…! ஒருவேளை நான் உன்னைப் பொண்ணு கேட்டு வரலைன்னா…” என்றவன் கிளம்பிச் சென்று விட, புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவளுக்கு.

இருந்தும் இதழ்களில் ஒரு புன்னகை இழையோடிக் கொண்டே இருந்தது. அந்த நிகழ்வை நினைக்கும் இந்நேரமும், அதே சிறு புன்னகை வருவதை அவளால் தடுக்க இயலவில்லை. அவனுக்கும் தான்! ஏடு படிந்த அந்தத் தேநீரையே பார்த்தவன், ‘எல்லாத்தையும் சொதப்பியது நான் தான் ஸ்வீட்டி…’ என எண்ணி,

அறிந்தே செய்த பிழை தான்…
மன்னிப்பே கிட்டாது என்றறிந்தே 
உன்னிடம் யாசிக்கிறேன்…!
மன்னிப்பை அல்ல…!
மைவிழி காதலை…!
என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.

அதனைப் பார்த்தவள் எப்போதும் போல் அதனை அழித்து விட்டு, மீட்டிங் முடிந்ததும் சாத்விக் இடம்,

“நீ தான் அவரை வரச் சொன்னியா?” எனக் கேட்டாள் காரமாக.

அவனோ “இல்ல ஹரி. சத்தியமா நான் சொல்லல. இவரு உன்  ஹஸ்பண்ட்னு நேத்து நீ சொல்லிதான் எனக்கே தெரியும். அப்புறம் எப்படி நான் போய் இவர் கிட்ட சொல்லுவேன்.” என்று நல்ல பிள்ளையாகப் பேசினான்.

புகழேந்தியை விட்டு வந்து பல மாதங்கள் கழித்து, நேற்றைய தினம் தான் அவள் முன் வந்து நின்றான் புகழேந்தி. அலுவலகத்திலேயே அவளைச் சென்று பார்க்க அப்போது வேறு வழியில்லாது, சாத்வியிடம் தன்னை பற்றிச் சொல்ல வேண்டியதாகப் போயிற்று.

அப்போதும் அவன் ‘ஏன் இதனை என்னிடம் சொல்லவில்லை?’ என்று கோபப்பட கூட இல்லை. ‘உன் வாழ்க்கை உன் விருப்பம்’ என்று விட்டு விட்டான்.

இருந்தும், சாத்விக் இவனிடம் தான் செல்லும் இடத்தைக் கூறி இருப்பானோ என்ற சந்தேகம் இருந்ததில் தான் அவனிடமே கேட்டாள்.

சாத்விக் ‘அப்பாடா தப்பிச்சுட்டோம்’ என்று பெருமூச்சு விட,
அந்த நேரம் பார்த்து, புகழ் அவர்கள் அருகில் வந்து, “என்ன மச்சி…! காலேஜ்ல பார்த்ததை விட உனக்குக் கொஞ்சம் வெயிட் கூடிடுச்சு… நல்ல தீனியோ” என்று சிறப்பாக அவனைக் கோர்த்து விட, அவனோ இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

ஹரிதா “என்னது நீ இவரோட ஃப்ரெண்டு ஆ…” எனத் திகைத்து, ‘என்னை நீயும் ஏமாற்றி விட்டாயே!’ என்று அடி பட்ட பார்வை பார்க்க, அவன் “ஹரி” என்றான் பாவமாக.

ஹரிதா “என் மூஞ்சியிலேயே முழிக்காத…” என அவனைப் பார்வையால் சுட்டெரித்து விட்டு அங்கிருந்து சென்றதில்,
சாத்விக் “ஏன்டா இப்படி என்னைக் கோர்த்து விட்ட? அவள் கோச்சுக்கிட்டு போறா பாரு” 
“போகட்டும். அதென்ன உன்கிட்ட மட்டும் நல்லா பேசுறா… என்னைப் பார்த்தா பாவமா இல்ல” என்று சற்று பொறாமையில் பேசியதும்,
“இந்த ஆமையெல்லம் ஒரு வருஷமா சாருக்கு எங்க போச்சு…?” என்று நக்கலாகக் கேட்டான்.

புகழ் உடனே அமைதி ஆகி விட, “ஏன்டா இப்படி இருக்க…? ஏதாவது கேட்டதும் அமைதி ஆனா என்ன தான் பண்றது. அட்லீஸ்ட் அவள் கிட்டயாவது மனசு விட்டுப் பேசு” என்றதும்,
“எனக்கு அவள் வேணும் டா” என்றான் வருந்திய குரலோடு.

அவனும் செய்வதறியாது நிற்க, புகழ் வேகமாக அவள் சென்ற திசையில் சென்று, அவளைத் தடுத்து நிறுத்தினான்.
அவனைப் பாராமல் கோப முகத்துடன் நின்றவளிடம், “ரிது… நான் பண்ணது தப்பு தான். ஆனால் எந்தக் காரணத்துக்காகவும் என்னால உன்னை இழக்க முடியாது” என்றவனை கண்டுகொள்ளாமல் தாண்டிப் போகையில், அவள் கையைப் பிடித்தவன் “பதில் சொல்லு ஸ்வீட்டி” என்றான் கண்ணில் காதலையும் ஏக்கத்தையும் தேக்கி.

ஹரிதாவோ கையை உதறி விட்டு, “பதில் சொல்ல வேண்டியது நீங்க தான் மிஸ்டர் புகழ். நீங்க வேணும்னு சொன்னா உங்க பின்னாடி வர்றதுக்கும், வேணாம்னு தூக்கிப் போட்டா அப்படியே போறதுக்கும், நான் ஒன்னும் மெஷின் இல்ல. இத்தனை மாசமா இல்லாம இப்போ எதுக்கு என்னைத் தேடி வந்துருக்கீங்க? ஒருவேளை உங்களுக்கு ‘போர்’ அடிக்குதோ?” என்று நக்கலாகக் கேட்டு விட்டு, அவனுக்கு எதிர்திசையில் நடந்தாள்.

மனம் நிறைய பாரத்துடன் வீட்டிற்குச் சென்றவள், அங்கு, புகழேந்தி சோஃபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு, ‘இவரு எப்படி உள்ள வந்தாரு?’ எனத் திகைக்க,

அவன் “என்ன ஸ்வீட்டி இவளோ நேரம்? என்கூட கார்ல வந்துருந்தா அப்போவே வந்துருக்கலாம்ல?” எனக் கேட்டவன்,
“டீ குடிக்கிறியா ஸ்வீட்டி?” என்று கப்பை அவளிடம் நீட்ட, அவளோ கடுங் கோபத்தில் இருந்தாள்.

“அட! உன்னை மாதிரி நான் அபிஷேகம் எல்லாம் பண்ண மாட்டேன். தைரியமா குடி” என்று குறும்பு மின்னக் கூற,
அந்த டீயை அவன் மேலேயே தட்டி விட்டு, “கெட் அவுட்” எனக் கத்தியவள், அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினாள்.
அவனோ அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. சில நிமிடங்களில் அறையிலிருந்து வெளியில் வந்தவள், அவன் அங்கேயே நிற்பதைக் கண்டு, மெல்லிய குரலில் “போய், வாஷ் பண்ணுங்க!” என்றாள்.

அவன் அழுத்தமாகக் கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்க்க, “தெரிஞ்சு தான் கொட்டினேன். இப்போ நான் சாரி கேட்கணுமா? இல்ல உங்களை மாதிரி அழுத்தமா இருக்கணுமா?” என்று அமைதியுடனும், அதே நேரம் அவனை வார்த்தையால் காயப்படுத்தும் நோக்கில் கேட்க, அவன் எதுவும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
சிறிது நேரத்தில், உடை மாற்றி விட்டு  வெளியில் வந்த ஹரிதா, தன்னவன் முகத்தைத் தொங்கப் போட்டிருப்பதைக் காண, அவளுக்குத் தான் கோபத்தையும் தாண்டி வருத்தமாக இருந்தது.

‘நம்ம கொஞ்சம் ஓவரா தான் பண்றோமோ?’ என எண்ண, அது தவறு என்று அடுத்த நிமிடமே நினைக்க வைத்து விட்டான்.

ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ் கட்டிகளை எடுத்து, அவள் உணரும் முன் அவள் நைட்டிக்குள் போட்டு விட்டவன், சாவகாசமாக சோஃபாவில் அமர,
அவள் குளிர் தாங்க முடியாமல் “ஆ” என்று கத்தி துள்ளிக் குதித்தாள். அதில் புகழ் காலை வேண்டும் என்றே நீட்டி, அவள் காலைத் தடுமாற வைக்க அதில் பொத்தென அவன் மேலேயே விழுந்தாள்.

இதுதான் சாக்கென்று அவள் இடையை இறுக்கியவன், “தெரிஞ்சே தான் பண்ணேன் ஸ்விட்டி. இப்போ நான் சாரி கேட்கவா? இல்ல, நானே ஐஸ் கியூப்சை வெளிய எடுக்கவா?” என்று விழி உயர்த்தி குறும்புடன் வினவ, அதில் அதிர்ந்து சிவந்தவள், அவனைத் தள்ளி விட்டு, அறைக்குள் சென்று குதித்துக் கொண்டிருந்தாள்.

அதில் உதட்டைக் கடித்துச் சிரித்தவன்,

உன் ஆடைக்குள் நான் ஆடையாக ஆசை…!!!
என் பேராசை நிறைவேறும் நாள் என்றோ?
என்ற குறுஞ்செய்தியைத் தட்டி விட்டு, காற்றிலேயே தன் மனையாள் இருந்த திசைக்கு முத்தத்தைப் பறக்க விட்டான்.

அலைகள் தீண்டும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்