Loading

தேசம் 7

அந்தப் பழைய அடுக்குமாடி குடியிருப்பு மூன்றாம் தளத்தில் வருட கணக்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் பல சிந்தனைகளோடு அமர்ந்திருந்தாள் பிரார்த்தனா. இத்தோடு ஆறாவது முறையாக கதவைத் திறந்தவன் எதையும் பேசாமல் இரண்டு நொடி அவளை பார்த்துவிட்டு மீண்டும் அடைத்து விட்டு செல்கிறான்.

அவளுக்குள் ஓராயிரம் கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருக்க அந்த இரண்டு நொடி பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. தூசி படிந்த அறை ஒத்துக் கொள்ளாமல் தொடர் இருமலை வேறு கிளப்ப ஆரம்பித்துவிட்டது. மூச்சு முட்டுவது போல் இருக்க, எழுந்தவள் கையெல்லாம் அழுக்கு.

அதைக் கண்டு முகம் சுழித்து அவ்வீட்டில் இருக்கும் ஜன்னல்களை திறக்க போக, “ஏய்!” என்ற சத்தம் அகோரமாக கேட்டது.

காலியான வீடு அவன் குரலுக்கு ஏற்றது போல் எதிரொலிக்க, திடுக்கிட்டவள் சுவற்றில் சாய்ந்து கொண்டு கதவு பக்கம் நோக்கினாள். திறந்த கதவுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தவன்,

“எந்த ஜன்னலையும் திறக்க கூடாது.” என்றான்.

“ஏன்?”

உத்தரவு போட்டவன் அவள் கேள்விக்கான பதிலை கொடுக்காமல் கதவைடைத்தான். ஒன்றும் புரியாமல் பெருமூச்சு விட்டவள் தன் நிலை கருதி ஜன்னலை திறக்க, சட்டென்று ஜன்னல் வழியாக ஒரு கை அவள் கழுத்தைப் பிடித்தது.

நிலநடுக்கம் போல் இதயம் தன் அதிர்வை காட்டி கண்கள் இரண்டையும் விரித்துக்கொண்டது. அதன் செயலில் தன்னை தற்காத்துக் கொள்ள மறந்தவள் அப்படியே உறைந்து நிற்க, “சொன்னா கேட்கணும்” என்ற குரல் மட்டுமே வந்தது.

குரல் வந்த திசையின் பக்கம் விழிகள் மெல்ல சுழல, தன் கணவன் நிழல் ஜன்னல் பக்கம் தெரிந்தது. அவள் பார்ப்பதை அறிந்து விட்டானோ என்னவோ கை வந்த வேகத்திற்கு அவன் உருவம் வந்து நிற்க,

“ஆஹான்!” என மீண்டும் இதயம் நடுங்கியது.

பிடித்திருந்த கழுத்தை தன் பக்கம் இழுத்தவன் ஜன்னல் கம்பியில் நன்றாக அழுத்தி, “இந்த ஜன்னலை நீ திறக்க கூடாது. இது எனக்கு சொந்தமானது. என் சந்தோஷம் இங்கதான் தினமும் நின்னு எனக்கு கை காட்டும். அந்த இடத்துல நீ நிக்கிறது பிடிக்கல. இனிமே செய்யாத, செஞ்சா…” என்றவன் தன் முகத்தையும் அவள் அருகில் கொண்டு வந்து,

“உன் அம்மா அப்பா இரண்டு பேரும் செத்துடுவாங்க.” என அவளை வேகமாக தள்ளிவிட்டு மறைந்து கொண்டான்.

எங்கும் அடிப்படாமல் தரையில் விழுந்தவள் அவன் செயலையும் பேச்சையும் எண்ணி அஞ்சி நடுங்கினாள். என்னவோ இவனிடம் இருக்கிறது என்பதை மட்டும் இந்த நொடி புரிந்து கொண்டாள். தன்னைச் சுற்றி நடக்கும் சதிவலைக்கு தானே வழி வகுத்ததாக எண்ணியவள் அவன் சொன்ன வார்த்தைகளை யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அரை மணி நேரம் கழித்து கதவு திறந்தது. சற்று முன்னர் பேசியதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் சாதாரணமாக நின்று கொண்டிருந்தான். மெல்ல அவன் விழி நோக்க, அந்த விழி சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் இருக்கும் இடத்தை பார்த்துக் கொண்டிருந்தது.

என்னவோ புரிவது போல் இருந்தது பிரார்த்தனாக்கு. அவ்விடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த குரோத விழிகள் இவளை அரை நொடி பார்த்துவிட்டு மீண்டும் கதவடைத்தது.

தான் வீட்டை சுத்தம் செய்யாமல் கதவு திறக்கப்படாது என்பதை ஆழமாக புரிந்து கொண்டாள். அவனிடம் பேச வேண்டும் அதற்கு அவன் வீட்டை திறக்க வேண்டும். வீட்டை திறக்க வேண்டும் என்றால் சுத்தம் செய்ய வேண்டும். கடைசியில் இவ்வளவு நேரமாக கதவு திறந்த படியும் மூடிய படியும் இருந்ததற்கான காரணத்தை பிடித்து விட்டாள்.

சற்று வசதியான குடும்பம் இவளுடையது. பிறந்ததிலிருந்தே தந்தை செல்லமாக வளர்ந்தவள் பிடித்ததை படித்து உடனே வேலைக்கும் சேர்ந்து விட்டாள். அன்னை வள்ளிக்கு குடும்பப் பொறுப்பு மட்டும்தான் என்பதால் பிள்ளைகளை எந்த வேலையும் வாங்காமல் முழு வீட்டையும் அவரே ஆள ஆரம்பித்தார். அதனால் எவ்வித வீட்டு வேலையும் இதுவரை செய்ததில்லை பிரார்த்தனா. சமையல் மட்டும் சண்டையிட்டு கற்றுக் கொண்டாள்.

தன் பெற்றோர்களை நினைத்து கண் கலங்கினாள். எப்படி எல்லாம் அவளை வளர்த்து அழகு பார்த்தார்கள் என்பதை உள்ளம் உணர்த்தியது. கன்னத்தை தாண்டி ஆடையில் பட்டு மறையும் கண்ணீரைத் துடைத்தவள் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

பல வருடமாக பூட்டி இருந்த வீட்டிற்கு சாட்சியாக தூசி அப்படியே படிந்திருந்தது. சில இடங்கள் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அப்படித்தான் இருப்பேன் என்று அடம் பிடித்தது. அதையெல்லாம் வேர்த்து விறுவிறுக்க சுத்தம் செய்தவள் கழிவறை கதவைத் திறந்ததும் வாந்தி எடுத்து விட்டாள். அந்த அளவிற்கு துர்நாற்றம் உயிரை எடுத்தது. வேகமாக கதவடைத்தவள் முடியாமல் தரையில் சாய, கதவு திறந்தது.

கண்கள் சொருகி அவனைக் காண, அவன் விழி வீட்டை வலம் வந்தது. மெல்ல முடியாமல் எழுந்தமர்ந்தவள், “இதுக்கு மேல என்னால சுத்தம் பண்ண முடியாது.” என்றிட, இடி சத்தத்திற்கு இணையாக கதவு மீண்டும் சாற்றப்பட்டது.

தன்னைத் தானே நொந்து கொண்டு வாந்தி வரும் உணர்வை கட்டுப்படுத்தி கழிவறை கதவை திறந்தாள். சத்தியமாக முடியாமல் அந்த இடத்திலேயே அமர்ந்தவள் இரண்டாம் முறையாக வாந்தி எடுத்து சோர்ந்து போனாள்.

என்ன நடந்தாலும் நீ தான் செய்ய வேண்டும் என்பது போல் அடுத்த முறையும் அவன் செயல் இருக்க ஒரு வழியாக சுத்தம் செய்தவள் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். சாவகாசமாக கதவைத் திறந்தவன் தன் வீட்டின் அழகை ரசித்தபடி அவள் எதிரில் அமர்ந்தாள்.

“குடிக்க தண்ணி வேணும்” என சோர்ந்து கேட்க, மறுக்காமல் அவள் கேட்டதை அடுத்த சில நொடிகளில் வாங்கி வந்தான்.

தண்ணீரைப் பார்த்ததும் கண்ணில் அப்படி ஒரு உயிர். அவசரமாக வாங்கி தன் உயிரைக் காக்க நினைத்தவள் குடிக்க, “ஒரு வாய் தண்ணி கூட நிம்மதியா குடிக்க முடியல.
தொண்டைக்குள்ள சிக்கிட்டு வலிக்குது. இந்த வலிக்கு நான் செத்தே போகலாம்.” என்ற வசனம் காதை அடைத்தது.

அந்த உணர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் தன் காதுகளை மூடியவன் கண்ணில் கட்டியவள் விழ, காலால் எட்டி உதைத்தான் தண்ணீர் பாட்டிலை. அப்போதுதான் தன் தொண்டையை நீர் ஆதாரம் கொடுத்து நனைத்தவள் ஏமாந்த விழியோடு பார்க்க, முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன்ன பார்க்க புதுசா இருக்கு சரவணா‌. என்ன பண்ற எதுக்கு பண்றன்னு சத்தியமா புரியல. முதல்ல நான் காதலிச்ச என் சரவணாவான்னே சந்தேகமாக இருக்கு‌. எதுக்கு இப்படிலாம் பண்ற? என்ன கோவம் உனக்கு‌… என் மேலையா. நாலு அடி அடிச்சு இதான்டி விசயம்னு சொல்லு. இப்படி இருக்காத யார் கூடவோ இருக்க மாதிரி இருக்கு.

என் சரவணா இதோ என் எதிர்ல இருக்க உன்ன மாதிரி இல்ல. பட்டாம்பூச்சி மாதிரி ரொம்ப இலகுவான குணம். அடிக்க கூட வேணாம் சேலா கண்ண காட்டி மிரட்டுனாலே அழுதுடுவான். முக்கியமா என்னை அவன் பார்க்குற பார்வைல அப்படி ஒரு காதல் இருக்கும். இப்ப அது எங்க போச்சு… ஏன் போச்சு…எதுனால இப்படின்னு யோசிக்க கூட தெம்பு இல்லாம இருக்கேன்‌.

காதல்னா அது சரவணா…சரவணான்னா அது காதல் அவ்ளோ தான் எனக்கு தெரியும். இப்ப புதுசா என்னவோ தெரியுது உன் கிட்ட‌. பயமா இருக்கு… இது யாரு வீடுன்னு சொல்லு ப்ளீஸ். உன்ன தப்பா நினைக்க கூட மனசு வரல. அவ்ளோ லவ் பண்ற சரவணா.” என முடியாமல் பேசியவள் பலம் இழந்து அழுக ஆரம்பித்தாள்.

முதலில் அவள் பேச ஆரம்பித்த போது கண் சிவந்து பார்த்தவன் முடிக்கும் பொழுது கருணையோடு பார்த்தான். கடைசி வசனம், “அவ்ளோ லவ் பண்ற சரவணா” மனதை மழுப்ப செய்தது‌. இவ்வளவு நேரம் செய்த சித்திரவதை அவனுக்கே திரும்பியது. அவள் அழுகை உள்ளத்தை வதைத்தது. எழுந்து சென்று அணைத்து கண்ணீர் துடைக்க கை பரபரத்தது.

அவ்வுணர்வுகள் அனைத்தையும் அவளே வழி அனுப்பி வைத்தாள், “நான் யாருக்கும் மனசால சின்ன துரோகம் கூட நினைச்சது இல்ல. இந்த ஆறு நாளா என் வாழ்க்கையில நடக்குறதை பார்க்கும் போது அப்படி வலிக்குது. அதுவும் நீ பண்றதை பார்க்கும் போது…” என்று.

“பார்க்கும் போது…” என சரவணா அவளுக்கு எதிராக அமர, “நம்ப முடியல. ஏன்னு கேட்க முடியல. கனவா இருக்குமோன்னு மட்டும் தான் தோணுது.” என்றாள்.

“ஹா…ஹா…கனவு தான் என் காதலியே… நீ பார்க்குற அத்தனையும் கனவு தான்.” என்றவன் அவள் காதோரம் குனிந்து,

“பல நாள் கனவு.” என்று விட்டு விலகினான்.

அவள் விளங்காது பார்க்க, முகத்தில் படரும் முடிகளை காதோரம் தள்ளி விட்டபடி, “உன்ன இந்த மாதிரி அழ வைச்சு பார்க்கணும்னு பல நாள் கனவு. இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நினைச்சு பார்க்காத கனவு. ஆனாலும் நீ சொன்ன வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றவன் கன்னத்தை தடவிக் கொண்டே,

“மனசால சின்ன துரோகம் கூட நினைச்சதில்லன்னு சொன்ன பாரு… அந்த மனச எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு பழைய சரவணா வேணும்னா அந்த மனச என்கிட்ட கொடு. அந்த மனசுக்கே தெரியாம நீ செஞ்ச துரோகத்தை அந்த மனசு கிட்ட சொல்லி… நீயாது தடுத்திருக்கக் கூடாதானானு கேட்டு என் கையாலையே…” பேசிக் கொண்டு சென்றான்.

“சரவணா” என்றதும் கன்னத்தை தடவிக் கொண்டிருந்த கை அவள் கழுத்தை வேகமாக பிடித்தது.

“பேசக்கூடாது நான் பேசும் போது நீ பேசவே கூடாது.”

சரவணப் பொய்கை முகத்தில் தெரியும் கோபமே புதிதென்றால் இப்பொழுது புதிதாக தெரியும் ஒருவித கொடூரப் பார்வை மிகவும் புதிதாக தெரிந்தது. இவன் முகத்தில் இந்த ஒரு பாவனை கூட வருமா என்ற சிந்தனைக்கு அவனே பதில் சொன்னான்,

“இந்த சரவணன் உண்மையான முகம் இதுதான். இப்போதைக்கு இந்த உண்மை உனக்கு தெரிஞ்சா போதும். ஒரு பத்து நாள் காத்திரு… உன் கேள்விக்கான பதில் தானா கிடைக்கும். அதுவரைக்கும் இந்த வீடு உனக்கு சிறை. இந்த சிறையை விட்டு வெளிய போகணும்னு நினைக்கக் கூடாது. முக்கியமா அந்த ஜன்னலை திறக்கவே கூடாது. உண்மைய தெரிஞ்சுக்க உயிர் இருக்கணுமா இருக்கக் கூடாதான்னு நீயே முடிவு பண்ணிக்க.” என அவள் கழுத்திற்கு விடுதலை கொடுத்தவன் தண்ணீர் பாட்டிலில் மிதமிருந்த தண்ணியை தரையில் ஊற்றிவிட்டு பழைய இடத்தில் அமர்ந்து கொண்டான்.

அப்படியே அமர்ந்நிருந்தவள் மூளை அந்த கண்களை குத்திக் காட்டியது. மனமோ இவனுக்கு என்னானது என்ற வீணான சிந்தனையில் அதை உதாசீனம் செய்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்