
டியர்ஸ்… லாஸ்ட் எபிசோட்ல சஞ்சீவை சந்தீப்னு மாத்தி எழுதிட்டேன். ஹிஹி அவனை சஞ்சீவாவே வச்சுக்குவோம்.
—————————————
அக்னி வேந்தனைக் கண்டதும் சஞ்சீவ் திருதிருவென விழித்தான்.
“என்ன மச்சான்… இன்னைக்கு விக்ரம் அண்ணாவுக்கு சர்ஜரி தான. நீ போகல?” எனக் கேட்டவன் எச்சிலை விழுங்கினான்.
“போக தான் போறேன். அப்படியே உன்னையும் கூட்டிட்டுப் போய்ட்டா, ஒரே வேலையா முடிஞ்சுடும்ல” என்றபடி விரல்களை சுளுக்கெடுத்துக் கொண்டான்.
“என்… என்னை எதுக்கு கூட்டிட்டு போற? இங்கயே நிறைய வேலை இருக்கு மச்சான்” பதற்றத்தில் சில கோப்புகளை கீழே தள்ளி விட்டான் சஞ்சீவ்.
“ஏன்? எதுக்கு?”
நேரடியாக வினவியவனின் விழிகளில் அனல் தெறித்தது.
“அகி…” சஞ்சீவிற்கு பயத்தில் நா வறண்டது.
“எனக்கு டைரக்ட் பதில் கிடைச்சா, சேதாரமும் கம்மியா இருக்கும்…”
இதழ்களை ஈரப்படுத்திக்கொண்ட சஞ்சீவ், “மச்சான்… உனக்குப் போய் துரோகம் பண்ணுவேனா. உன் சித்தப்பா தான், விக்ரம் ஊரை விட்டுப் போனதுல இருந்து உன்கூடவே இருக்க சொன்னாரு. விக்ரம் உங்கிட்ட பேச முயற்சி செய்றது தெரிஞ்சாலே, அதை தடுக்க சொன்னாரு. நான் முடியாதுனு எவ்ளோவோ சொன்னேன் மச்சான். அவர் என்னை மிரட்டி…” எனும்போதே சடாரென எழுந்து விட்ட அக்னி வேந்தன்,
“ஹ்ம்ம் மிரட்டி… அவ்ளோ பயந்தவனா நீ. ச்சு ச்சு…” எனப் போலியாய் பாவப்பட்டான்.
“என்னை எதுவும் செஞ்சுடுவேன்னு சொன்னா கூட விட்டுருப்பேன் மச்சான். அவர் உன்னை ஹர்ட் பண்ணிடுவேன்னு சொன்னாரா அதான்…”
“ஸ்ஸ்ஸ்…” என நெஞ்சைப் பிடித்துக்கொண்ட அக்னி வேந்தன், “உன் அன்பால என் ஹார்ட்டை கட்டிப்போட்டுட்ட மச்சான். பதிலுக்கு நீ குடுத்த அன்பை உனக்கே கொடுக்குறது தான நியாயம்” என கண்ணைச் சுருக்கி பாசமாக பேசுவது போல பாவனை செய்தவனின் முகம் அடுத்த நொடி கோரமாய் மாறியது.
சஞ்சீவின் கன்னத்தில் பளாரென அறைந்த அக்னி, அவன் அமர்ந்திருந்த நாற்காலியுடன் நெஞ்சிலேயே எத்தினான்.
“அகி… வேணாம்” கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட, சஞ்சீவ் மிரட்டினான்.
அவனை ஒரு பொருட்டாக எண்ணாதவனாக, அவனது முடியைக் கொத்தாக பற்றியவன், கண்ணாடி மேஜை மீது அவன் முகத்தை நங்கென மோத வைக்க, கண்ணாடி மேஜை சுக்கு நூறாக உடைந்தது.
சஞ்சீவிடம் மெயின்டனன்ஸ் வேலை ஒன்றிற்காக அங்கு வந்த தேவாரம், சத்தம் கேட்டு மடமடவென உள்ளே வந்து அதிர்ந்தார்.
“அகி என்னப்பா பண்ற? விடு அவனை” என அக்னி வேந்தனைப் பிடித்துக்கொள்ள, சஞ்சீவ் அரை மயக்கத்தில் தள்ளாடினான். முகமெல்லாம் குருதி வழிந்தோடியது.
“விடுங்க அங்கிள். துரோகி… கூடவே இருந்துட்டு துரோகம் பண்ணிருக்கான். என் அண்ணனுக்கு அடுத்து உன்னை நம்புனேன்டா. அதுனால தான், உன்னை ஹோம் வரைக்கும் உள்ள விட்டேன். ஆனா நீ…? சொல்லுடா என் சித்தப்பா மிரட்டி தான் எனக்கு துரோகம் செஞ்சியா? சொல்லு…” என்று மீண்டும் அடிக்க வர, சஞ்சீவ் தரையில் அமர்ந்து விட்டான்.
கண்ணே திறக்க இயலவில்லை அவனால்.
“நா… நான் திலோத்தமாவை லவ் பண்ணேன்” மூச்சிரைக்க உரைத்தவனைப் பார்வையால் எரித்தான்.
“உன் பர்த்டே பார்ட்டி அப்போவே, எனக்கு அவளைப் பிடிச்சுருந்துச்சு. ஆனா அவள் உங்கிட்ட பேசுன அளவு என்கிட்ட பழகல. நான் அவள்கிட்ட பேச போறப்ப எல்லாம் அவள் அவாய்ட் பண்ணிட்டு தான் போனா. ஆனா உங்கிட்ட மட்டும் இல்ல விக்ரம்கிட்ட கூட அவள் பேசுறதும், அவனைப் பார்த்தும் அவள் முகத்துல வர்ற சிரிப்பும் எனக்குப் பிடிக்கல.
அப்படி என்ன நான் குறைஞ்சு போய்ட்டேன்னு கோபம் வந்து, நேரடியாவே அவள்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போனேன்… நம்ம கடைசி எக்ஸாம் அன்னைக்கு!
அப்பவும் அவள் விக்ரம் கூட தான் பேசிட்டு இருந்தா. ஒரு பொண்ணு பேசுறது வச்சு தெரியாதா, அவளுக்கு யார் மேல இன்டரஸ்ட் இருக்குன்னு… அவளுக்கு விக்ரம் வந்துட்டா மட்டும் மத்த யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டோம். எனக்கு அது சுத்தமா பிடிக்கல. பிகாஸ் ஐ லவ்ட் ஹெர். நீ அதை பீல் பண்ணிருக்கியான்னு தெரியாது ஆனா நான் அவளை நல்லாவே கவனிச்சுருக்கேன். இத்தனைக்கும் விக்ரமுக்கு உன் வீட்ல மேரேஜ் அலையன்ஸ் பார்க்குறாங்கன்னு தெரிஞ்சும் அவ அவன்கூட பழகுனது எனக்கு இரிடேட்டிங்கா இருந்துச்சு.”
என முகத்தைச் சுளித்தவன், கல்லூரி இறுதி நாளன்று நடந்ததை கூறினான்.
விக்ரமுடன் பேசிவிட்டு சைக்கிளை எடுத்த திலோத்தமாவை வழி மறித்தான் சஞ்சீவ்.
அவனிடம் ஸ்நேகப்புன்னகை வீசியவள், “ஹாய் சஞ்சீவ். இன்னும் கிளம்பலயா?” எனக் கேட்க,
“கிளம்பனும். நீ இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்க. விக்ரம்ட்ட பேசிட்டு இருந்தியோ?” என்றான் ஒரு மார்க்கமாக.
“ம்ம் ஆமா…” வெகுளியாக ஒப்புக்கொண்ட திலோத்தமா, “துபாய்க்கு நீயும் போறியா சஞ்சீவ்” எனக் கேட்டதில்,
“ம்ம் நீ வரலையாமே… ஏன் அதான் விக்ரம் வர்றானே” எனக் கடுப்பாகக் கேட்டான்.
அப்போதும் புரிந்து கொள்ளாதவள், “வீட்ல விட மாட்டாங்க. சரி நான் கிளம்புறேன்” என்று நகர எத்தனிக்க, “திலோ நில்லு. உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று நிறுத்தினான்.
“சொல்லு சஞ்சீவ்!”
“நீ லவ் பத்தி என்ன நினைக்கிற?”
சட்டென விக்ரமின் முகம் மனக்கண்ணில் வந்து போக, “லவ் பத்தி நான் நினைக்க என்ன இருக்கு. இதை பத்தி யோசிக்க நேரம் இல்ல” என சிரித்து சமாளித்தாள்.
“நேரம் இல்லையா? இல்ல ஆள் கிடைக்கலையா?”
“ரெண்டுமே வச்சுக்கோயேன்” அவனிடம் இருந்து வந்த சங்கடமான கேள்விகளைத் தவிர்க்கும்பொருட்டு ஏதோ ஒரு பதிலை கூறியவளிடம், “ஐ லவ் யூ திலோ. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு. ஆள் எல்லாம் ரெடி தான்…” என்றான் கண்சிமிட்டி.
அதில் திகைத்து நின்ற திலோத்தமா, “என்ன பேசுற சஞ்சீவ். உன்னை அப்படி எல்லாம் நான் நினைக்கல. அகி மாதிரி நீயும் எனக்கு ப்ரெண்ட் தான். ப்ளீஸ் இதை பத்தி பேச வேணாமே” என நாசுக்காக மறுத்து விட்டு நகர முற்பட, அவளது சைக்கிளை இறுக்கிப் பிடித்தான் சஞ்சீவ்.
“என்னை அப்படி நினைக்கலைன்னா வேற யாரை நினைச்ச?”
அவனது கேள்வி கோபத்தைக் கிளறியதும் “அது உனக்கு தேவையில்லாத கேள்வி” என்றாள் எரிச்சலாக.
“நான் சொல்லவா? அந்த விக்ரம் தான? அவன் வந்து சொல்லிருந்தா இந்நேரம் பல்லை இளிச்சுட்டு போயிருப்ப தான?” காட்டத்துடன் கேட்டவனைக் கண்டு முகம் சுளித்தாள்.
“மனசுல ஒரு பதிலை ஃபிக்ஸ் பண்ணிட்டு, யாரையும் ஹர்ட் பண்ணியே ஆகணும்னு எந்த விஷயத்தை விக்ரம் கேட்க மாட்டாரு சஞ்சீவ்…” அழுத்தம் திருத்தமாக விக்ரமை அவனுடன் ஒப்பிடுவதை கூட விரும்பாதவளாக எச்சரித்தாள்.
“உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க கூட, பங்களாவும் காரும் இருக்கறவன் தான வேணும். இதுல லவ் பண்ண மட்டும் என்னை மாதிரி பசங்களை சூஸ் பண்ணிடுவீங்களாக்கும்…” என நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள இயலாதவனாக வாய்க்கு வந்ததை பேசினான்.
இத்தனைக்கும் அவன் ஒன்றும் பரம ஏழையெல்லாம் கிடையாது. அக்னியின் குடும்ப பின்னணியை விட சற்று குறைந்தவன் அவ்வளவே!
“உங்கிட்ட பேசுறதே வேஸ்ட். உன் நினைப்புக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது” என எரிந்து விழுந்து விட்டு சென்ற திலோத்தமாவை பார்வையால் எரித்தான் சஞ்சீவ்.
துபாயில் இருந்து திரும்பி வந்தவனை எரிய வைக்கும் விதமாக அமைந்தது, விக்ரமும் திலோத்தமாவும் காதலித்து ஊரை விட்டு ஓடிய செய்தி.
குபுகுபுவென கோபம் கொழுந்து விட்டு எரிந்தது அவனுக்கு.
‘அன்னைக்கு கேட்டப்ப பெரிய இவளாட்டம் பேசுனா’ என்ற ஆத்திரம் மிக, அக்னி வேந்தனும் கூட திலோத்தமாவின் மீது கோபமாக இருந்தான்.
இந்நிலையில் மனோஜும் சஞ்சீவிடம் பேசி இருந்தார்.
“நீ எங்க வீட்டுப் பையன் மாதிரிப்பா. அந்த ஓடிகாலி விக்ரமை இழுத்துட்டு ஓடிட்டா. ஆனா சும்மா இருக்க மாட்டா. விக்ரமை வச்சு அகிட்ட பேச சொல்லி, திரும்ப இங்க வந்து ஒட்டிக்க பார்ப்பா. அவள் குடும்பத்துக்குள்ள வந்தா எங்க குடும்பமே சிதைஞ்சுடும்” என்று போலி வருத்தத்தைக் காட்ட, சஞ்சீவுக்குள்ளும் அலாரம் அடித்தது.
அவள் திரும்பி வந்து, என் முன்னேயே அவனுடன் கூத்தடிப்பதை நான் பார்க்க வேண்டுமா? என்ற எரிச்சலில் அக்னி வேந்தனுக்கு உதவி செய்வது போல, அவனது அலைபேசியை வாங்கிக் கொண்டான்.
“விக்ரம் அண்ணாவோட ப்ரெண்ட்ஸ்ட்ட நான் பேசி டீடைல் கேட்குறேன் மச்சான். நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு” என்று தேனொழுக பேசினான்.
தமையனின் திடீர் பிரிவில், உருக்குலைந்திருந்த அக்னி வேந்தனுக்கு உடலில் எந்த ஒரு பாகமும் உடனடியாக செயல்படவில்லை என்பதே உண்மை.
நண்பனை நம்பி விக்ரமை பற்றி விசாரிக்கச் சொல்லி அலைபேசியைக் கொடுக்க, அவனோ விக்ரமிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி, மின்னஞ்சல்கள் என அனைத்தையும் சரமாரியாக நீக்கி விட்டான். விக்ரம் அலைபேசியில் அழைத்தபோதும் வெகுவாய் நடித்து, விக்ரமை காயப்படுத்தி, அக்னி வேந்தனையும் நம்ப வைத்திருந்தான்.
அதன்பிறகும் விக்ரம் எந்த வகையிலும் அவனைத் தொடர்பு கொண்டு விடக்கூடாது என்பதாலேயே, தனக்கு கிடைத்த அத்தனை வேலையையும் விட்டு விட்டு, சேவை செய்கிறேன் பேர்வழி என, அக்ரம் இல்லத்தின் முக்கிய பொறுப்பில் நுழைந்து கொண்டான்.
சஞ்சீவ் பேசி முடித்ததும் தாடையிலேயே ஒரு குத்து விட்டான் அக்னி வேந்தன். மீண்டும் விடாது அடித்து துவைத்திட தேவாரத்தினாலும் அவனைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
அக்னி வேந்தனின் கசங்கிய முகமே பவித்ராத்யாவை மருத்துவமனையில் நிம்மதியாக இருக்க விடவில்லை. தனது கணிப்பு படி, தமையனின் மீது இத்தனை பாசம் வைத்திருப்பவன், நிச்சயம் அவனாக அழைத்திருக்கும்போது சஞ்சீவை விட்டு காயப்படுத்தி இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது.
இல்லத்திற்கு தான் வந்திருப்பானென்ற எண்ணத்துடன் அவளும் அவன் பின்னேயே வந்திருக்க, சஞ்சீவின் குள்ளநரி வேலையைக் கேட்டு அதிர்ந்தே விட்டாள். அனைவருமாக சேர்ந்து இரு நல்ல உள்ளங்களை எத்துணை காயப்படுத்தி இருக்கிறார்கள்.
இதில் அக்னி வேறு அடிப்பதை நிறுத்தாது போனான்.
“நீயும் உன் பிளாஷ்பேக்கும். அவள் உன்னை லவ் பண்ணி ஏமாத்திட்டுப் போன மாதிரி… துரோகி நாயே…” என மீண்டும் அடிக்கப்போக, பவித்ராத்யா வேகமாக அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அக்னி, விடுங்க அவனை. செத்து கித்துற போறான்”
“விடுடி இவனைக் கொன்னா தான் என் கோபம் தீரும்…”
“ஐயோ அவன் ஏற்கனவே மயங்கிட்டான். விடுங்க அகி ப்ளீஸ்…” என அவனது இரு கையையும் பிடித்து அணைப்பது போல நிற்க, அதன்பிறகே நிதானித்தவன், மயங்கி இருந்தவனை ஒருமுறை எத்தி விட்டு, “நண்பன்னு கூட வச்சதுக்கு முதுகுல குத்திட்டானுங்க…” என்று கோபத்துடன் மொழிந்தான்.
“சொந்த வீட்லயே யாரும் உண்மையா இல்லாதப்ப, மத்தவங்க உண்மையா இருப்பாங்கன்னு நினைக்கிறது நியாயம் இல்ல அகி. ப்ளீஸ் கொஞ்சம் நிதானமா இருங்க…” என்று அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
தேவாரம் தான், “விடு தம்பி… இவனுக்கு அறிவு அவ்ளோ தான். விக்ரம் உங்கிட்ட பேசவே இல்லைன்னு எவ்ளோ வருத்தப்பட்ட. இப்ப அவன் உன்னை அப்படியே மறந்துட்டுப் போகலைன்னு தெரிஞ்சுதுல. அதை நினைச்சு சந்தோஷப்படு” என்றதும் அவனது கண்களில் நீரலை.
“எப்படி ரம்மு…? அவனை கார்னர் பண்ணி ஏமாத்தி என்னை விட்டு பிரிச்சுருக்காங்க. அவன் என்ன சொல்றது தேட வேணாம்னு… அவன் என்ன சொல்லிருந்தாலும் நான் அவனைத் தேடி இருக்கணும்ல அங்கிள். ஒவ்வொரு நாளும், எவ்ளோ தவிச்சுருப்பான். அவன் பணத்தை எடுத்துட்டுப் போனதுக்கும், என் பிரெண்டை காதலிச்சு ஊரை விட்டு ஓடுனதுக்கும் கூட எனக்கு அவன் மேல கோபம் இல்ல அங்கிள்.
என்கிட்ட ஏன் சொல்லாம விட்டான்… அது மட்டும் தான் என் கோபம். எனக்குப் பணம் வேணும்டான்னு உரிமையா கேட்டுருக்கலாமே. அவளைத் தான் பிடிச்சுருக்கு. எனக்கு ஹெல்ப் பண்ணுன்னு கேட்டுருக்கலாமேன்னு தான் எனக்கு ஆதங்கமே தவிர. எனக்கு அவன் மேல வேற எந்த கோபமும் இல்ல. வரவும் வராது. ஆனா, இப்படி… இப்படி நான் எதிர்பார்க்கல ரம்மு” என்றவனுக்கு குரல் உடைந்திருக்க, பெண்ணின் கையை விட்டுவிட்டு கண்ணீர் நிரம்பிய முகத்தை யாருக்கும் காட்டாது வெளியேறி இருந்தான்.
பவித்ராத்யாவிற்கு அவனது சின்ன முகச் சுருக்கம் கூட அத்தனை வலி கொடுக்கும் போது, இந்தக் கண்ணீர் மட்டும் வலிக்காமல் இருக்குமா என்ன?
தானாய் அவனைக் காண அவள் கால்கள் வெளியேற, “என்ன ஒரே கூச்சலா இருக்கு” என்று ஜெயசுதாவும் அங்கு வந்து சஞ்சீவைப் பார்த்து அதிர்ந்தார்.
“என்ன ரம்மு… கொலை கேசா? மூச்சு இருக்கா?” எனத் திகிலாக கேட்க,
“தெரியலையே நீ வேணும்னா டெஸ்ட் பண்ணு” என்றார்.
ஜெயசுதாவும் அவனுக்கு அருகில் அமர்ந்து மூக்கின் அடியில் கை வைத்துப் பார்த்து, “டேய் ரம்மு… பிரீதிங் கம்மியா இருக்குடா…” என்றதோடு நில்லாமல் அவன் கையை வேறு பிடித்து நாடித்துடிப்பை சோதித்தார்.
“அச்சோச்சோ என்ன சுதா, உன் ரூம்ல வாட்டர் ஹீட்டர் ஒரு வாரமா வேலை பார்த்து தரலைன்னு இப்படி இவனைப் போட்டு தள்ளிட்டியே” என்றதில் மிரண்டார்.
“அடேய்… நான் ஒன்னும் பண்ணல.”
“அது எனக்கு தெரியும் ஆனா போலீசுக்கு தெரியுமா. நீ தான இப்ப அவன் கையைப் பிடிச்சு உன் கைரேகையை பதிய வச்சுட்ட” என்று வழக்கம்போல கிண்டல் பணியை ஆரம்பிக்க,
“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைப்பா… அப்படி போலீஸ் வந்தா உங்க மூணு பேரையும் சேர்த்தே தான் மாட்டி விடுவேன். எங்க போனாலும் ஒண்ணா போகலாம்” என்றதில், “அடிப்பாவி…” என்றார் வாயில் கை வைத்து.
“சரி சரி இவன் உண்மையாவே சாவுறதுக்குள்ள ஆம்புலன்ஸ்கு போனை போடு” ஜெயசுதா சலித்ததில், “இந்தப் பசங்க காதலுன்ற பேர்ல ஏன் தான் இப்படி இருக்காங்களோ” எனப் புலம்பியபடி ஆம்புலன்சுக்கு அழைத்தார்.
இங்கோ அக்னி வேந்தன் மரத்தினடியில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.
இத்தனை நாள்களும் இறுகி இருந்த கண்ணீர் ஏனோ தடையில்லாது வெளிப்பட்டது.
அவனருகில் அமர்ந்து கொண்ட பவித்ராத்யா, “அகி…” என மென்மையாக அழைக்க, “ம்ம்” என்றவனின் முனகளில் கூட தேம்பலே கேட்டது.
அதற்குமேலும் முடியாதவளாக, அவனுக்கு முன் சென்று முட்டியிட்டு அமர்ந்தவள், அவன் கையை எடுத்து விட முயன்றாள்.
“அகி இங்க பாருங்களேன். எல்லாரும் சேர்ந்து செஞ்ச சதிக்கு நீங்க என்ன பண்ண முடியும். ப்ளீஸ் அகி” என முகத்தில் இருந்த அவன் கையைப் பிடித்தவளுக்கு அவனது கண்ணீரும் தட்டுப்பட மருகிப்போனாள்.
“ஐயோ என்ன இது குழந்தை மாதிரி அழுதுட்டு… உங்களுக்கு தெரிஞ்சுருந்தா இந்நேரம் வரை நீங்க விக்ரம் அத்தானை பார்க்காம இருந்துருப்பீங்களா? அவங்க லவ் பண்ணாங்கன்னு நானும் கூட நம்பிட்டு இருந்தேன். கூட இருந்த எனக்கே எதுவும் தெரியல” எனும்போதே அவனிடம் விசும்பல் அதிகரிக்க,
“அவன் என்னை எதிர்பார்த்துருப்பான்ல… என்ன தான், அவன் ஊர்லயே இல்லைன்னு நம்ப வச்சிருந்தா கூட என்னை ஒவ்வொரு நாளும் தேடி வருவேன்னு எதிர்பார்த்து இருப்பான்ல. அவன் நம்பிக்கையை நான் காப்பாத்தல ஆத்யா…” என உடைந்திருந்தவனை வாரி அணைத்து நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்.
“ஐயோ வேந்தா… லூசா நீங்க. இப்படி எல்லாம் குற்ற உணர்ச்சில அழுகணும்னா, நானும் எல்லாத்துக்கும் அழுகணும்” எனும்போதே அவளுக்கு அழுகை வந்தது.
அவளது தோளில் நெற்றியை அழுத்தி அழுத்தத்தை எல்லாம் கரைக்க முயன்றவன், “நான் இன்னும் கொஞ்சம் கேர்ஃபுலா இருந்துருக்கணும். குடும்பமே இந்த அளவு விஷமா இருக்கும்னு எதிர்பார்க்கல ஆத்யா. எப்பவோ என் அம்மாவை கூட்டிட்டு கிளம்பிருக்கணும் அங்க இருந்து. தப்பு பண்ணிட்டேன். என் தாத்தா பாட்டியை ஒதுக்குனப்பவே, அவங்க குணம் தெரிஞ்சு ஒதுங்கி இருக்கணும். என் அண்ணனோட இந்த நிலைக்கு நானே காரணம் ஆகிட்டேன் ஆத்யா” என்றான் வேதனையுடன்.
அவனை விலக்கி நிமிர்த்தியவள், அவனது இரு கன்னத்தையும் பற்றி “நீங்க ஒதுங்கி இருந்தா விட்டுருப்பாங்களா? எனக்கு தெரிஞ்சு இவங்க யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க வேந்தா. அப்பவும் புது புது பிரச்சினை வந்துருக்கும். இதுனால அக்காவும் அத்தானும் அழகா ஒரு வாழ்க்கை வாழ்ந்தாங்க. இனியும் வாழ்வாங்க. நீங்களும் இந்த ஹோமை சூப்பரா நடத்திட்டு இருக்கீங்க. இந்த சாக்ரிஃபைஸ் வீண் போகலைல. கெட்டதுலயும் நல்லதையே எடுத்துக்கோங்களேன். ம்ம்?” என பெருவிரலால் கன்னத்தில் கோடாய் வழிந்த ஆண்மகனின் கண்ணீரைத் துடைத்து விட, அவள் நெற்றியில் தன் நெற்றியை வைத்து அழுத்தியவன் கண்மூடி “ம்ம்ம்” என்றான் ஆசுவாசமாகி.
பின் மெல்ல கண்ணைத் திறந்து அவளைப் பார்க்க, அவளும் அழுதிருந்தாள்.
அழுத்த விரல்களால் அவளது கண்ணீரை துடைத்து விட்டவன், “நீ ஏன்டி அழுகுற?” என்றான் மென்மையாக.
“தெரியல. நீங்க அழுகவும் அழுகை வந்துடுச்சு…” எதையும் யோசியாமல் மனதில் பட்டதை உரைத்தவளைக் கண்டு மனமும் இலகுவாக, தன் கன்னம் பற்றி இருந்தவளின் உள்ளங்கையைப் பற்றி தடித்த மீசை உரச மென்முத்தமிட்டான் ஆடவன்.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
35
+1
3
+1

