Loading

“விக்ரம்!” மெல்லக் கண்ணைத் திறந்த விக்ரம வேந்தன் கண்ணில் நீர் நிரம்ப நின்றிருந்த மனையாளைக் கண்டு புன்னகைத்தான்.

அறுவை சிகிச்சை அரங்கத்திலிருந்து விக்ரமை அறைக்கு மாற்றி இருந்தனர்.

குருமணியும் விஜயாவும் மருத்துவமனையிலேயே இருக்க, நிவேதாவும் வந்து விட்டார்.

சிவக்குமாரை அழைத்ததற்கு, என்ன தான் பாசமிருப்பினும் இன்னும் சின்னக் கோபம் இருப்பதாகவும் அவன் வீட்டிற்கு வந்ததும் பேசிக்கொள்வதாகவும் கூறி விட, அவரும் வற்புறுத்தவில்லை.

வீட்டு வேலைகளை அப்படியே போட்டு விட்டுச் சென்ற மருமகளின் மீது கொலைவெறியில் இருந்தார் சவுந்தரவல்லி.

அவன் கண் விழித்ததும் தேடியது தம்பியைத் தான். அவனைக் காணாது ஏமாற்றம் கொண்ட விக்ரமின் வேதனையை அறிந்து கொண்ட திலோத்தமா, “அகி டாக்டர் ரூம்க்கு போயிருக்கான் விக்ரம்” என்றிட, அவனிடம் சோர்வான பெருமூச்சு.

“நான் இப்படி படுத்துருக்குறதை பார்க்க முடியாம இப்படி பண்றானா இல்ல, என்னைப் பார்க்கவே பிடிக்காததுனால இப்படி பண்றானா?” இன்னும் அரைமயக்கத்தில் இருந்தவனுக்கு தம்பியின் முகம் காணாத ஏக்கம் புலம்பலைக் கொடுத்தது.

திலோத்தமா பதில் கூறும் முன்னே பவித்ராத்யா முந்திக் கொண்டாள்.

“என்ன அத்தான் கேள்வி இது? உங்களை இந்த நிலைமைல பார்க்க முடியாம தான் உங்க முன்னாடி வராம இருக்காரா இருக்கும். உங்களை பிடிக்காம போயிருந்தா ஏன் 24 மணி நேரமும் ஹாஸ்பிடல் வாசலிலேயே வாட்ச்மேன்கு துணையா நிக்கணும்…?”

அதில் விக்ரமின் முகத்தில் குறுநகை தோன்ற, திலோத்தமாவும் தங்கையின் கூற்றை இயல்பாக எடுத்துக் கொண்டாள்.

“ஆமா விக்ரம். நீங்க கண்டதை யோசிச்சு குழம்பாம ரெஸ்ட் எடுங்க…” என்றிட, பெரியவர்கள் மூவரும் தான் பவித்ராத்யாவைக் கண்டு நமுட்டு நகை புரிந்தனர்.

அவர்களுக்கு தான் அக்னி வேந்தனின் மனம் தெரியுமே!

அவள் சொன்னது போன்றே மரத்தினடியில் போடப்பட்டிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து மடியில் இருந்த அக்னிலாவின் முதுகில் சாய்ந்திருந்தான் அக்னி வேந்தன்.

உண்மை தெரியாது போயிருந்தாலும் கூட, விக்ரமின் உடலில் காயத்தைக் காண தெம்பெல்லாம் இல்லை. அவனுக்கு சரியாகும் வரை அவனது கண்ணில் படக்கூடாதென்று தான் எண்ணி இருந்தான்.

நிச்சயம் உடைந்து விடுவான். அவனுக்கும் தைரியம் கரைந்து விடக்கூடாதே. அதனாலேயே இந்த ஒதுக்கம்.

“சித்தப்பா… அப்பாவுக்கு எப்போ சரியாகும்?”

மகளின் கேள்வியில் அவளது நெற்றி முடிகளை ஒதுக்கியவன், “இன்னும் கொஞ்ச நாள்ல உன் அப்பா உன்கூட ஓடிப்பிடிச்சே விளையாடுவார் குட்டிமா…” என்றான் மென்மையாக.

“நீங்களும் அகி கூட விளையாடுவீங்களா?” கண்ணை உருட்டிக் கேட்டவளுக்கு குறுநகை தந்தவன், “நம்ம மூணு பேரும் சேர்ந்தே விளையாடலாம் ஓகேவா?” என நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அக்னி வேந்தனைத் தேடி வந்த பவித்ராத்யாவிற்கு மகளை நெஞ்சில் சாய்த்து தலைகுனிந்து அணிந்திருந்த கோலம் புதுக்கவிதையாய் தெரிந்தது.

அடுத்த அடி எடுத்து வைக்க இயலாதவளாக, ஆடவனின் முகத்தையே ரசித்திருந்தாள்.

பின் தானாய் அவர்களின் அருகில் சென்றவள், “அத்தான் கண்ணு முழுச்சிட்டாங்க. நீங்க வரலையா?” என வினவ, “இப்போ ஓகே தான? கைல உணர்வு வந்துருச்சா?” அவன் ஆர்வமாக கேட்டான்.

“அது தெரியல. அத்தான் கொஞ்சம் மயக்கத்துல தான் இருக்காங்க. மருந்து பவர் குறையும் போது தான், உணர்வு தெரியும்னு சொல்லிருக்காங்க. எடுத்ததும் சட்டுன்னு கையை தூக்கி எதுவும் பண்ண முடியாதாம். பிசியோ எக்ஸர்சைஸ் எல்லாம் செஞ்சு தான், கொஞ்ச கொஞ்சமா ஆக்டிவ் ஆகுமாம். ஆனா உணர்வு வந்துடும்னு சொல்லிருக்காங்க அகி. சரியாகிடும்” எனத் தலையை ஆட்டி சமாதானம் கூறியவள், திருதிருவென விழித்தாள்.

“அட இதெல்லாம் விக்ரம் அத்தான் சர்ஜரிக்கு போறதுக்கு முன்னாடியே நீங்க தான சொன்னீங்க. இப்ப என்ன என்கிட்டயே கேக்குறீங்க?” என இடுப்பில் கையூன்றினாள்.

“அது தியரி. ப்ராக்டிகலா சர்ஜரி சக்ஸஸான்னு கேட்டேன்…”

“அதை நீங்களே வந்து பார்க்க வேண்டியது தான? அத்தான் உங்களைத் தேடுனாங்க…” என்றாள் உதட்டைக் குவித்து.

அவன் கடும் அமைதி காக்க, “அவருக்குத் தேவைப்படுறப்ப நீங்க கூட இல்லைன்னு வருத்தப்பட்டீங்க… இப்பவும் கூட உங்க ப்ரசன்ஸ் அத்தானுக்கு தேவை தான் அகி” என்றதும் அடிபட்ட பார்வை வீசினான்.

அதில் இதயம் உருக, “முதல்ல எந்திரிங்க. போய் அத்தான்கிட்ட பேசிட்டு வாங்க…” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தவள், அக்னிலாவைத் தூக்கினாள்.

“ஆத்யா! கொஞ்சம் சரி ஆகட்டுமே” பள்ளிக்குச் செல்லும் சிறுவனாக மருண்டான்.

“நீங்க பேசியே ஆகணும். நான் சொன்னா கேட்க மாட்டீங்களா?” கேட்டு விட்டு அவளே திகைத்தாள்.

“ப்ச்…” என பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டவன், “சரி போறேன். நீயும் கூட வா. என்னால அவனைத் தனியா ஃபேஸ் பண்ண முடியும்னு தோணல. எனக்கு இப்ப உன் ப்ரசன்ஸ் தான் தேவைப்படுது” என்றவனின் குரலில் இருந்த அன்பையும் தவிப்பையும் ஓர் உணர்வில் அடக்க இயலவில்லை.

“நானும் வரேன்” வேகமாக தலையாட்டியவள் இரு அகியையும் விக்ரமிடம் அழைத்துச் சென்றாள்.

கண்ணை மூடுவதும், பின் திறந்து திலோத்தமாவிடம் பேசுவதுமாக இருந்தான் விக்ரம்.

ஒருவித அலைப்புறுதல் அவனைத் துவம்சம் செய்தது.

திலோத்தமாவின் முகமே நிர்மலமாக இருந்தது. அதீத மகிழ்வும் இல்லை. வேதனையும் இல்லை. உணர்வுகள் மறக்கப்பட்ட நிலையில் அவனிடம் பேசுவதை கூட அனிச்சை செயலாக செய்தாள்.

பவித்ராத்யா அக்னிலாவைத் தூக்கி வரவும், “அகிகுட்டி…” என விக்ரம் கொஞ்ச, “அப்பா,” என அவனைக் கட்டிக்கொண்டாள்.

“வலிச்சுதாப்பா?” கையில் போடப்பட்டிருந்த ட்ரிப்ஸை கண்டு அவள் வினவ, “இல்லடா… அப்பா உன்னையே நினைச்சுக்கிட்டேனா வலிக்கவே இல்லை…” என்று கண் சிமிட்டியதில்,
“நிஜமாவாப்பா?” என விழி விரித்தாள்.

ஆரஞ்சு பழச்சாறை தயாரித்துக் கொண்டிருந்த நிவேதாவிற்கு அவர்களது அன்பு பிணைப்பு நீர்த்துளிகளைக் கொடுத்தது.

அன்பான கணவனாக, பொறுப்பான தந்தையாக மிளிரும் தனது மகனைக் கண்டு பெருமிதம் அவருக்கு.

அவனது இந்நிலையிலும் கூட உற்ற துணையாக அவனைக் கண் போல காத்த மருமகள்களின் மீதும் அத்தனை பிடிப்பு. மனோஜ் அவர்களைத் தவறாகப் பேசியதை கூட தாங்க இயலவில்லையே அவரால்.

விஜயா தான், “நிலாக்குட்டி… அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நம்ம ஏதாவது சாப்பிட்டு வருவோமா?” எனப் பேத்தியை அழைக்க, அவளும் விஜயா குருமணி தம்பதியினருடன் சென்றாள்.

விக்ரம் எப்பவும் போல வாசல் புறம் தம்பியைத் தேட, தற்போது ஏமாற்றாமல் கிடைத்தது அவனது தரிசனம்.

“அகி…” விக்ரமின் இதழ்கள் முணுமுணுக்க,

அக்னி வேந்தனின் கண்களில் அடக்கப்பட்ட கண்ணீரின் சிவப்பு.

“விக்ராண்ணா” அவனது ஒரு அழைப்பே விக்ரமின் பாரத்தை எல்லாம் அடித்து நொறுக்கியது.

“சாரிடா” விக்ரமின் விழிகளில் இருந்து கண்ணீர் பிரிந்து வர,

“நான் தான் சாரி சொல்லணும். எந்த நிலமைலயும் நீயே என்னை அடிச்சு துரத்தி இருந்தாலும் உன்னை விட்டுருக்க கூடாதுண்ணா. எல்லாத்தையும் என்கிட்ட இருந்து மறைச்சுட்டல்ல” ஆடவனின் முகத்தில் வேதனையும் ஆதங்கமும் தாண்டவமாட விக்ரம் சற்றே திகைத்த வதனத்துடன் திலோத்தமாவைப் பார்த்தான்.

“என்னைக் கார்னர் பண்ணிட்டான் விக்ரம்…” அவள் தவிப்புடன் கூற, நிவேதா ஒன்றும் புரியாது நின்றார்.

அக்னி வேந்தனோ “எனக்கு இப்பவும் உன்னை அடிக்கணும்னு தான்டா தோணுது. நீ மட்டும் நல்லாருந்துருந்தா உன் சட்டையைப் பிடிச்சு கேட்டுருப்பேன். ‘நானே உன்னைப் போடான்னு சொல்லிருந்தாலும், என்மேல உனக்கு இருக்குற உரிமையை ஏன்டா உதறி விட்ட’ன்னு… அட்லீஸ்ட் அந்த பணத்தையாவது நீ செலவு பண்ணிருக்கலாம். சில உறவுகளோட உரிமை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான்ல?” என விழிநீர் தேங்க குற்றம் சாட்டியதில் விக்ரம வேந்தன் உருகிப் போனான்.

“ஒருவேளை என்னை மட்டுமே வீட்டை விட்டு அனுப்பிருந்து, நான் மட்டுமே அந்தப் பணத்தை எடுத்துட்டு போயிருந்தா, கண்டிப்பா நான் செலவு பண்ணிருப்பேன் அகி… ஆனா திலோவும் கூட இருக்கும்போது, ஏதோ கோபத்துல கூட யாரும் அவளை ‘அடுத்தவன் பணத்தை எடுத்துட்டுப் போய் வாழ்ந்துட்டா’ன்னு சொல்லக் கூடாதுல… நம்ம வீட்ல இஷ்டத்துக்கு பேசுவாங்க தான். ஆனா, அட்லீஸ்ட் அவ மனசாட்சிக்கு தெரியும். என் புருஷன் உழைச்ச காசை தவிர வேற எந்த பணத்துலயும் அவளை வாழ வைக்கலைன்னு. அதுனால, யார் பேசுனாலும் அவளுக்கும் அது பாதிப்பை தராது. நான் அவளுக்காக யோசிக்க வேண்டிய சூழ்நிலைல இருந்தேன் அகி” என்ற தமையனை பெருமிதமாக ஏறிட்டான் அக்னி.

அந்தப் பதில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த ஆதங்கத்தைக் கூட துடைத்தெறிந்தது.

“ஐ ஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ ‘ண்ணா” புன்னகைத்த தம்பியை விழி விரித்துப் பார்த்தவன்,

“உனக்கு கோபம் வரலையாடா? ‘திலோவுக்கு நான் அடுத்தவனா’ன்னு கேட்பியோன்னு நினைச்சேன்” விக்ரம் கேட்டதில், நன்றாக சிரித்தவன்,

“எனக்கும் அவளுக்கும் இருக்குற பாண்ட் தனி. பட் உன் வைஃப்னு வரும்போது, இந்த பதில் எனக்குப் பிடிச்சுருக்கு” என்றான்.

தம்பியின் புரிதலில் அத்தனை நோயும் சரியாகி உடலே இலேசான உணர்வு விக்ரமிற்கு.

“தேங்க்ஸ்டா… என்மேல அத்தனை கோபம் இருந்தும், என்னைத் தேடி வந்து… இப்போ… இவ்வளவும் எனக்காக…” எனப் பேச இயலாமல் தொண்டை அடைத்தது.

“ஐ மிஸ் யூ அகி” என்ற விக்ரமின் விழிகள் மீண்டும் கலங்கிட,

“நானும் ரொம்ப…” இரு ஆடவர்களின் இதழ்களில் புன்னகையும் கண்களில் கண்ணீரும் தவழ்ந்தது இன்பமாக.

பவித்ராத்யா இருவரையும் ரசித்து பார்த்திருக்க, திலோத்தமா ஒரே இடத்தில் சிலையாக நின்றிருந்தாள்.

விக்ரமின் பதில் அத்தனை பாதித்தது. எத்தகைய ஆழ் நேசம்! வசதியாக வாழ்ந்தவன், அந்த பத்து லட்சத்தை வைத்து விருப்பத்திற்கு செலவு செய்து, தன்னை மட்டுமே வேலைக்கு அனுப்பி எப்படி எப்படியோ ஆட்டுவித்திருக்கலாம். ஆனால் உடலை வருத்தி, உறக்கம் துறந்து, சிறு விஷயத்திலும் தனக்கான மரியாதையைத் தேடி கொடுத்திருக்கிறான். ஓ’ வென கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

நிவேதா வேறு, “ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னே எனக்கு புரியல என்னாச்சு?” எனக் கேட்டுக்கொண்டே இருக்க, பவித்ராத்யா நடந்ததை உரைத்ததும் உறைந்தே போனார்.

“அப்போ நீங்க ரெண்டு பேரும் விரும்பவே இல்லையா?” அவரது திகைத்த கேள்வியில் விக்ரமும் திலோத்தமாவும் ஒருவரை ஒருவர் பார்வையால் தீண்டிக்கொள்ள, திலோத்தமா வேகமாக “இல்ல” என்றாள்.

அதில் விக்ரமின் முகத்தில் சிறு வாட்டம்.

அதனைக் குறித்துக்கொண்ட அக்னி வேந்தன், “ம்மா நடந்ததை பத்தியே பேச வேணாம். நீங்க வீட்டுக்குப் போங்க” என்றான்.

“எனக்கு அங்க போகவே பிடிக்கல அகி. என்ன மனுஷங்க. என் புள்ளைய வீட்டை விட்டு துரத்திட்டு ஓடிப்போய்ட்டதா சொல்லிட்டாங்களே. உன் அப்பாவும் கூட்டு இதுல…” எனப் பல்லைக்கடித்தவருக்கு கோபம் பீறிட்டு எழுந்தது.

“உங்க அக்னி சிறகை கொஞ்சம் அடக்கிட்டு அமைதியா வீட்டுக்குப் போங்க. ரியாக்ட் பண்ண சொல்றப்ப எல்லாம் பண்ணாம, ராங் டைம்ல ரியாக்ட் பண்ணிட்டு” என்று தாயைக் கேலி செய்தவனை குழப்பமாகப் பார்த்தார்.

“எப்பவும் நீ தான பொங்குவ. இப்ப எல்லாம் வீட்ல நடக்குறதை பார்த்துட்டு நீ ரொம்ப கூலா இருக்க அகி” என அவனைக் குற்றம் சுமத்த,

“இதே மாதிரி நீங்க இருக்கும்போது எங்களுக்கு இப்படி தான் கடுப்பா இருக்கும்” என்றான் கிண்டலாக.

“ப்ச் அகி” நிவேதா சிணுங்கிட, “சொல்றேன்ல. நிம்மதியா வீட்டுக்குப் போங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றவனின் நிதானம் அவருக்குப் புரிந்ததோ இல்லையோ விக்ரமிற்கு அடிவயிறை கலங்க வைத்தது.

“என்னடா பண்ண போற?” திகிலாய் கேட்டவனுக்கு கண்சிமிட்டலையே பதிலாகக் கொடுத்தான் ஆடவன்.

திலோத்தமாவிற்கு எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. ஏதேதோ குழப்பங்கள் அவளைக் கொன்று எடுத்துக் கொண்டிருந்தது.

விக்ரமைச் சுற்றிலும் எப்போதும் ஆள்கள் இருப்பதால், இருவருக்கும் தனிமையும் கிடைக்கவில்லை.

பெரியவர்கள், இரு பெண்களையும் வெளியாள்களாய் உணர வைக்காது, தங்களது குடும்பத்து பெண்களாய் நடத்திய விதம், பவித்ராத்யாவிற்கு தாய் தந்தையின் இழப்பை சற்றே குறைத்தது எனலாம்.

அன்று விக்ரம் ஓய்வெடுத்திருந்த நேரம், திலோத்தமா மட்டும் அவனுக்கு பழச்சாறு தயாரித்துக் கொண்டிருக்க, திடீரென விக்ரம் அவளைக் கூப்பிட்டு கத்தினான்.

திலோத்தமா பதற்றத்துடன் அவனருகில் சென்று “என்னாச்சு விக்ரம் எங்கயும் வலிக்குதா?” எனக் கேட்க,

“என் கையைப் பிடி திலோ” என்றான் நடுக்கத்துடன்.

தன்னிச்சையாக அவளும் அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

கண்ணை மூடி ஒரு கணம் அமைதி காத்தவனை தவிப்பாக ஏறிட்டவள், “விக்ரம் என்னாச்சு. எனக்குப் பயமா இருக்கு” என வினவ,

“உன் கையோட ஹீட்டை ரொம்ப நாள் கழிச்சு ஃபீல் பண்றேன். அந்த சூட்டுலயே உருகிடனும் போல இருக்கு திலோ” இன்னும் கண்ணைத் திறவாது அவளது தீண்டலை உணர்ந்து கொண்டிருந்தவனை கண்ணில் உறைந்த நீருடன் திகைத்துப் பார்த்தாள் திலோத்தமா.

ஒன்றும் பேசாது அவன் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.

விக்ரமின் கைகளில் உணர்வு வந்த போதிலும், சில ஃபிசியோ முறைகள் செய்ய வேண்டியுள்ளதால் மருத்துவமனையிலேயே தான் சில நாள்கள் தங்க வேண்டி இருந்தது.

விக்ரமும் அக்னியும் ஒன்றாக இணைந்து அரட்டை அடிக்கத் தொடங்கிட, விக்ரமிற்கு தேவையானதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டதும் அவனே.

திலோத்தமாவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து, வீட்டிற்கு சென்று நிவேதாவிற்கு உதவியாக இருப்பதும் மகளைப் பள்ளிக்கு அனுப்புவதுமாக கவனத்தை திருப்பினாள்.

அதற்கு தோதாய், அக்னிலாவிற்கும் காய்ச்சல் வந்ததில் அவள் திலோத்தமாவை அதிகம் தேட ஆரம்பித்து விட்டாள்.

“நீ வீட்ல இரு திலோ. பாப்பா இவ்ளோ நாள் அட்ஜஸ்ட் பண்ணதே பெருசு. இன்னும் டூ வீக்ஸ் தான். அப்பறம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு கூட ஃபிசியோ கன்டின்யூ பண்ணிக்கலாம்” என்ற அக்னி வேந்தனிடம் தலையாட்டினாள்.

விக்ரமிற்கும் இனி சரியாகி விடும் தானே. எதற்காக மகளை வேறு அலைக்கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், அவனும் அவளை வீட்டில் இருக்க சொல்ல, ஏதோ சிறு வலி அவளுள்.

அப்படியும் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மருத்துவமனைக்கு வந்து விடுவாள். அவன் முகத்தைப் பாராது அவளாலும் இருக்க இயலாதே.

விக்ரம் காஃபி கேட்டதற்கிணங்க, பிளாஸ்கில் காஃபி வாங்கி வந்தாள் பவித்ராத்யா.

விக்ரம் திலோத்தமாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, இருவருக்கும் காஃபியை ஊற்றிக் கொடுத்தவள், “எங்க உன் அருமை பிரெண்டு?” எனக் கேட்டாள்.

“வெளில போன் பேசிட்டு இருந்தான் பவிமா.”

“சரி அவருக்கும் காபி எடுத்துட்டுப் போறேன்…” என்று விட்டு ஒரு கப்பில் முழு காபியையும் ஊற்றினாள்.

விக்ரம் அதனைக் கவனித்து, “உனக்கு வாங்கலையா?” என வினவ,

“எனக்கும் சேர்த்து ஊத்திக்கிட்டேன் அத்தான்” என்றதில் அவன் புரியாது பார்த்தான்.

பவித்ராத்யாவோ அவனிடம் ஏதோ ரகசியம் பேசுவது போல, “உங்க தம்பி உங்களை மாதிரி இல்லை அத்தான். கொஞ்சம் கஞ்சம்…” என்றாள் கிசுகிசுப்பாக.

“கஞ்சமா? என்ன பேபி சொல்ற?” திலோத்தமாவும் குழம்பினாள்.

“ஆமாக்கா… என்னை வெளில கூட்டிட்டுப் போனா, அவர் எதையும் ரெண்டா வாங்க மாட்டுறாரு. ஃபர்ஸ்ட் டைம் உங்களை பார்க்க சென்னைக்கு கூட்டிட்டு வந்தப்ப அப்டி தான், இலையை கூட ரெண்டா வாங்காம ஒரே இலைல ஒரே மீல்ஸ் வாங்கி எனக்கும் குடுத்துட்டு அவரும் சாப்பிட்டாரு. ஜூஸ், காபின்னு எது வாங்குனாலும் அவருக்குன்னு தனியாவே வாங்க மாட்டுறாரு. என்கிட்ட இருந்து பறிச்சு தான் சாப்பிடுறாரு. எனக்கும் காபி ஹால்ஃப் கப் தான் குடிக்க முடியும்ல. அதுனால அவங்க கஞ்சத்தனத்துலயே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.”
எனக் கிண்டல் தொனியில் கூறுவது போல கிளுக்கிச் சிரித்து விட்டுச் செல்ல, விக்ரமின் விழிகள் மின்னியது.

“சம்திங் ஃபிஷி திலோ” நமுட்டு நகை அவனிடம்.

திலோத்தமா நண்பனின் மனம் புரிந்து அதிர்ந்த மனதை வெளிக்காட்டாது, வலுக்கட்டாயமாக முறுவலித்தாள்.

தற்போது பவித்ராத்யா தினமும் அக்னி வேந்தனுடன் இல்லத்திற்கு சென்று யோகா வகுப்பை நடத்திக் கொண்டிருந்தாள்.

விக்ரம் மீண்டும் இல்லத்தில் வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்பொருட்டு அவனுக்கென தனி சேர்மன் அறையை உருவாக்கி இருந்தான் அக்னி.

கனியையும் சஞ்சீவையும் வேலையை விட்டு தூக்கியபிறகு அந்த வேலைகளையும் தானே பார்த்துக்கொள்ள நேரிட, வேலைக்கு ஆளும் தேடிக்கொண்டிருந்தான்.

வகுப்பு முடிந்தபிறகு பெண்ணின் கால்கள் தானாய் ஆடவனின் அறைக்குச் சென்று விட, அவன் வேலையில் தீவிரமாக புதைந்து கொண்டதில், “நான் ஏதாச்சு ஹெல்ப் பண்ணவா அகி” எனக் கேட்டாள்.

“க்ளாஸ் முடிஞ்சுதா?”

“ம்ம்… முடிஞ்சு.”

பிளாஸ்கில் இருந்த காபியை அவனது மக்கில் ஊற்றி கொடுக்க, தினமும் இது அவனது வாடிக்கை என்பதால் இன்றும் வாங்கிக்கொண்டாள்.

அவள் குடித்து முடித்ததும், அதே மக்கில் அவனுக்கும் காபி ஊற்றிக்கொடுக்க ஒரு கோப்பில் புதைந்தபடி அதனை வாங்கி குடிக்க தொடங்கினான்.

என்றும் போல இன்றும் சிலிர்த்தது அவளுக்கு. அவளறியாது கண்ணச் சிவப்பை ஊடுருவியவன் உதட்டுக்குள் புன்னகைத்தான்.

“ஹோம்ல இருக்குறவங்ககிட்ட நீ கணக்கெடுப்பு எடுக்கணுமே” என ஆரம்பித்தவனைக் கவனிக்கத் தொடங்கினாள்.

“என்ன பண்ணனும் அகி?”

“‘யார் யாருக்கு என்ன என்ன வேலைல இன்டரஸ்ட் இருக்கு. தினமும் ஒன்னு அல்லது ரெண்டு மணி நேரம் ஒர்க் பண்ண உடம்பும் மனசும் ஈகரா இருக்கா’ன்னு தெரிஞ்சுக்கணும். எத்தனை பேர் இதுக்கு ரெடியா இருக்காங்கன்னு எனக்கு ஒரு கணக்கெடுப்பு வேணும்”

“எதுக்கு அகி?” அவளிடம் குழப்பம்.

அதில் அவளைக் குறுகுறுவென பார்த்தவன், “யாரோ சஜஷன் குடுத்தாங்களே. என்ன தான் வயசானாலும், உழைச்சு பழகுனவங்களுக்கு உழைப்புல கிடைக்குற திருப்தி வேற எதுலயும் கிடைக்காதுன்னு… அதான், இன்டரஸ்ட் இருக்குறவங்களுக்கு இங்கயே ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கலாம்னு இருக்கேன்” என்றவனைத் திகைத்துப் பார்த்தாள்.

அவள் தானே சஞ்சீவிடம் பரிந்துரைத்தது. அவன் அப்போதே மேனேஜ்மெண்ட் விஷயத்தில் தலையிட வேண்டாமென முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டானே!

விழி தெறிக்க அவனை வெறித்திருந்தவளின் பார்வையில் கண்ணோரம் சுருங்க புன்னகைத்தவன், “என்னை முழுங்குனது போதும் ஆத்யா. இங்க வேலை பார்க்க என்னை கொஞ்சம் மிச்சம் வை” என்றான் குறும்பாக.

அதில் கண்ணைச் சிமிட்டி நிகழ்விற்கு வந்தவள், “ஆனா இது எப்படி ஒர்கவுட் ஆகும். நான் ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல சொல்லிட்டேனோன்னு இருந்தேன். ரொம்ப மெனக்கெடனும் தான?” எனத் தவிப்பாகக் கேட்டாள்.

“மெனக்கெடனும் தான். பட் உன் ஐடியா இன்ஃபியூஸ் பண்ணுனா, அவங்களாலும் இயர்ன் பண்ண முடியும் தான.”

கையை பிசைந்த பவித்ராத்யாவிற்கு இதயம் என்னவோ போல பிசைந்தது.

“ஆல்ரெடி யோசிச்சு வச்சுருந்தீங்களா? இல்… இல்ல நான் சொன்னதுக்காகவா?”

அவளது கேள்வியில் எழுந்தவன், அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னே கையை ஊன்றி அவளது அடர்ந்த கூந்தலை நாசியில் சுவாசித்தான்.

பின்னங்கழுத்தில் அவனது மூச்சின் சூடு உணர, அசைய இயலாமல் தவித்திருந்தாள்.

“இங்க சில பிசினஸ் ஸ்டார்ட் பண்றது என் பிளான் தான். ஆனா, ஹோம்ல இருக்குறவங்களுக்கு ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் தர நினைச்சது உனக்காக மட்டும் தான். இந்தக் கண்ணுல வர்ற மின்னலைப் பார்க்கணும்னு தோணுச்சு.”

அவனது கூற்றில் வெட்க ரேகைகள் தடுமாறி ஓடியது.

அவனோ தொடர்ந்து, “ஏன் கஷ்டப்பட்டு இப்படி பின்னி வைக்கிற ஆத்யா. ரெண்டு சைட்ல இருந்து கொஞ்சமா முடி எடுத்து நடுவில சென்டர் கிளிப் குத்தி, மீதி முடியை விரிச்சு விட்டா, உனக்கு இன்னும் அழகா இருக்கும்” என கிறக்கத்துடன் உரைத்தவன்,

“அந்த அடர்ந்த கூந்தலுக்குள்ள நானும் தொலைஞ்சு போகணும். தொலையவா?” கேட்டபடி அவளது தோளில் நாடியைப் பதித்தான்.

படபடப்பில் பதில் சொல்லக்கூட அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“அகி… யாரும் வரப்போறாங்க” தவித்து போனவளின் தோள்பட்டையில் முத்தமிட்டான்.

சிலிர்த்து கழுத்தை குறுக்கியவள் கண்ணை இறுக்கி மூடிட, அவனோ மேஜையின் மீது அமர்ந்து இரு காலையும் நாற்காலியின் கைப்பிடியில் வைத்துக்கொண்டு அவளைத் தன்னோடு ஒட்டினான்.

இம்முறை நேருக்கு நேராய் அவனது கண்களை பார்க்க நேர, “எந்திரிங்க அகி ப்ளீஸ்…” என உதடுகள் துடித்தது.

குனிந்து கட்டை விரலால் அவளது இதழை வருடியவன், “முதல் முதல்ல இந்த உதட்டுல தான் நான் விழுந்தேன் ஆத்யா. ஃபர்ஸ்ட் டே க்ளாஸ்கு வந்தப்போ, யோகா பத்தின உன்னோட புரிதலும் அதை மத்தவங்களுக்கு நீ புரிய வச்ச விதமும், அவங்க மேல நீ வச்சிருந்த அக்கறையும், என்னவோ என் அண்ணாவை நான் திரும்ப பார்த்த மாதிரி இருந்துச்சு. என்னை அறியாம உன்னை கவனிச்சேன். கவனிச்ச கொஞ்ச நேரத்துலயே உன் லிப்ஸ் அசைவு எனக்கு போதையும் கொடுத்துடுச்சு” என்றான் ரசித்து.

அத்து மீறிய அவன் விரல்களை பிடித்துக்கொண்டவளுக்கு நாணம் பிடுங்கி தின்றது.

“அப்போ என் ஃபர்ஸ்ட் க்ளாஸ் அன்னைக்கு நீங்க தான் என்னை பார்த்துட்டு இருந்தீங்களா? யாரோ என்னை பார்க்குற மாதிரி இருந்துச்சு” என விழிகளை உருட்டிட, அவ்விழிகளுக்கு மென்முத்தமிட்டவன், “நானே தான்…” எனும்போதே திலோத்தமா அவளுக்கு அழைத்தாள்.

அவனோ இன்னும் விடாது அவள் கன்னத்தை பற்றி இருக்க, “போன் அடிக்குது அகி…” என்றவளுக்கு அவன் இதழீரம் இமைகளில் தங்கி குறுகுறுப்பை மூட்டியது.

அவனை நிமிர்ந்து பார்க்கவே கொள்ளை வெட்கம் அவளுக்கு. அவன் லேசாய் விலகியதுமே அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடி விட்டவளுக்கு புன்னகை வீற்றிருக்க, அதே அழகிய புன்னகை அவனிடமும் அழகாய் ஒட்டிக்கொண்டது.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்