Loading

விக்ரம வேந்தன் அதிர்ந்தே விட்டான்.

“திலோ?”

“பயந்தே போய்ட்டேன் விக்ரம். உங்களைக் காணோம்னு எவ்ளோ நேரம் தேடிட்டு இருக்கேன் தெரியுமா. ஒரு போன் பண்ணிருக்கலாம்ல…” எனத் தேம்பியவளை இடையோடு அணைத்துக் கொண்டவனின் அத்தனை அழுத்தமும் மழையுடன் கரைய, புன்முறுவல் பிறந்தது.

“ரொம்ப பயந்துட்டியா திலோ…” ஆழ்ந்தகுரலில் அவன் கேட்க,

“ம்ம்” என அழுகுரலில் முனகினாள்.

“கட்டிப்பிடிக்கிற அளவுக்கா?” சின்னதொரு கேலி சிந்தியதில், திலோத்தமா நிகழ்வுணர்ந்து அவனை விட்டு விலக எத்தனிக்க, அதற்கு அவன் விடவேண்டுமே!

தற்போது பயம் மறைந்து அவனது தீண்டலில் நடுக்கம் பிறந்தது அவளுக்கு.

“விக்… ரம்!”

தொப்பலாக நனைந்திருந்தவளின் நடுக்கம் உணர்ந்தபிறகே விலகியவன், அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

“ஏன் இப்படி மழைல நனைஞ்சுட்டு இருக்க திலோ…”

“நீங்க ஏன் மழைல சாவகாசமா நனைஞ்சுட்டு வர்றீங்க?” துவாலையை எடுத்துக் கொடுத்தபடி முணுமுணுத்தாள்.

“மழைல நனைஞ்சுட்டு வந்தாலும் நமக்காக யாரும் வெய்ட் பண்ணவா போறாங்கன்னு மெதுவா வந்தேன்…” அவனுக்கு கொடுத்த துவாலையால் அவளது முகத்தில் இருந்த ஈரத்தை ஒற்றி எடுத்தான்.

ஒரு கணம் இரத்தம் உறைந்து போக, மேனியின் ஒவ்வொரு திசுக்களும் திசை தெரியாது அங்கும் இங்கும் சுழன்று சிலிர்ப்பைக் கொடுத்தது.

கூடவே அவனது கூற்றும் அவளை சுருக்கென தைக்க, “நான் வெய்ட் பண்ணுவேன்னு காட்ட தான் மழைல நின்னேன்” என்றவளுக்கு சற்று கோபமும் எழுந்தது.

அவனை நம்பி தான் இங்கு தனியாக இருக்க, என்னவாகினும் இப்படி ஏனோ தானோவென்று தாமதமாக வருவது தவறல்லவா?

அவளது குற்றச்சாட்டில் அவனின் கரங்களும் வேலை நிறுத்தம் செய்தது.

“நிஜமாவா? எனக்காக எப்பவும் இதே மாதிரி காத்துருப்பியா திலோ?” அக்குரலில் இன்னதென்று உணர இயலா உணர்வு. புரியவில்லை என்றாலும் உள்ளத்தில் புகுந்து குடைந்தது அவ்வுணர்வு.

“தினமும் லேட்டா வரப்போறிங்களா?” விழிகளைத் தாழ்த்தி வினவ,

“லேட்டா வந்தா, மண்டைல தட்டி உரிமையா கேள்வி கேட்குற வைஃபா இருப்பியா?” அவனும் எதிர்கேள்வி கேட்டான்.

இதற்கு என்ன பதில் கூற இயலும் அவளால்? அவனைப் பிடிக்கும். பிடித்த ஒருவனுடன் எதிர்பாரா திருமணம். அதனை ஏற்றுக்கொள்ள பல தடுமாற்றம். அவன் மீதிருக்கும் பிடித்தத்தை உணர்த்த கூட இந்தக் காலம் அவளுக்கும் அவனுக்கும் அவகாசம் அளிக்கவில்லையே.

“என்னைப் பிடிக்கலையா திலோ?” இம்முறை அவளது மௌனம் கொடுத்த அதீத வலியின் விளைவில் கேட்டு விட்டான் விக்ரம்.

“ஐயோ அப்படி இல்ல விக்ரம்…” வேகமாய் அவள் மறுப்பதே அவனுக்கு சிறு நிம்மதி கொடுத்தது.

“அப்பறம் ஏன் இந்த சைலன்ட்?”

“என்… என்ன சொல்லணும்னு தெரியல விக்ரம். இந்தக் கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு உங்களுக்கும் தெரியும். இதை ஏத்துக்கணுமா வேணாமான்னு கூட எனக்குத் தெரியல. அப்படி ஏத்துக்கிட்டா, உங்க மேல பழி போட்டு வீட்டை விட்டு துரத்துனது நியாயம்னு ஆகிடும்” அவளது தவிப்பு புரிய அவன் விழிகளில் ஓர் மினுமினுப்பு. தனக்காக சிந்தித்து தான் இந்த மௌனமா?

“நீ எப்படி நினைச்சுருக்கியோ எனக்கு தெரியல. ஏதோ சூழ்நிலைக்காக இந்த கல்யாணம் நடந்துருக்கலாம். ஆனா, உனக்கு தாலி கட்டும்போது ‘நான் சாகுறவரை நீ மட்டும் தான் என் சரிபாதி’ன்னு நினைச்சு மனப்பூர்வமா தான் கட்டுனேன். என் வீட்ல யாரும் புருஞ்சுக்கிட்டாலும் சரி இல்லைன்னாலும் சரி, இந்த ஜென்மத்துல நீ தான் என் வைஃப்” அழுத்தம் திருத்தமாகக் கூறியவனை கண்ணிமைக்காது ஏறிட்டாள்.

“இப்போ நீ தான் சொல்லணும்? யாருக்கு ப்ரூவ் பண்றதுக்காக இந்த வாழ்க்கையை உதறி தள்ளணும்னு நினைக்கிற?” கூர்மையாக அவளை நோக்கி கேள்விக்கணைகளை வீச,

“உங்களுக்கு நிஜமா இந்த லைஃப் ஓகேவா விக்ரம்? இந்த இடத்துல எவ்ளோ நாளைக்கு உங்களால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்.” இப்போதும் அவனுக்காக யோசித்துக் கேட்டாள்.

“நான் வந்தப்ப நிஜமா இந்த இடம் எனக்குப் பிடிக்கல திலோ. எவ்ளோ நாளைக்கு இங்க சர்வைவ் பண்ண முடியும்னு எனக்கு தெரியல. ஆனா எந்த இடமா இருந்தாலும் நீ என்கூட இருந்தா என்னால எங்க வேணாலும் இருக்க முடியும்னு தோணுது. உனக்கும் அதே பீல் இருந்தா சொல்லு, நம்ம மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். இல்லன்னா, கொஞ்ச நாள்ல உனக்குன்னு ஒரு லைஃப பார்த்துட்டு போய்டு.” இறுதி வரியை கூறும்போதே அவனது மார்பு இறுகியது.

“அப்படி போக முடிஞ்சா எப்பவோ போயிருப்பேன் விக்ரம். என்னால உங்களை விட்டுப் போக முடியாததுனால தான், எந்த முடிவும் எடுக்க முடியாம… இப்படி…” சில துளி கண்ணீர் தரையில் விழுக, “மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம் விக்ரம்” என்றாள் அவனைப் பாராது.

ஏதோ அவள் உள்ளார்ந்த காதலை கூறியது போல அவனுக்கு அத்தனை மகிழ்வு.

“இப்படி அழுதுட்டே சொன்னா, நான் உன்னை ஃபோர்ஸ் பண்ற மாதிரி இருக்கு” பிகு செய்து கொண்டதை புரிந்து கொள்ளாது, வேகமாக நிமிர்ந்தவள் “ஐயோ இல்ல விக்ரம். நான் சந்தோஷமா தான் சொல்றேன்” எனப் பதறியதில் அவன் இதழ்கடையோரம் கேலிநகை.

அதன்பிறகே அவன் தன்னைக் கிண்டல் செய்தது புரிந்து, அவசரமாக தலையைக் குனிந்து கொண்டவளின் அதரங்கள் அழகாய் மலர்ந்தது.

“அப்போ சிங்கிள் பெட் வேணாம் தான?” அவள் உயரத்திற்கு குனிந்து குறும்பாய் கேட்ட விக்ரமை ஏறிட இயலாமல், “போங்க விக்ரம்…” என வெட்கம் தாளாது அறைக்குள் புகுந்து கொண்டாள் திலோத்தமா.

இந்தப் புத்தம் புது உணர்வில் திணறிப்போனது என்னவோ விக்ரம வேந்தன் தான்.

பிறகு தாமதம் செய்யாமல், அந்த வாரத்திலேயே திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர்.

அவளுக்கு இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவையை வாங்கி இருந்தவனுக்கு, அவளுக்காக சின்னதாகவேனும் தங்க நகைகள் வாங்கிக்கொடுக்க வெகுவாய் ஆசைப்பட்டான். ஆனால், இந்த வருமானத்தில் இருவரும் வீட்டை நிர்வகிப்பதே பெரிது என்பதால், ஆசையை கடினப்பட்டு அடக்கிக்கொண்டான்.

ஒருமுறை நிவேதா கூட கூறினாரே! “உனக்கு கல்யாணம் பண்ணப்போற பொண்ணுக்கு, நம்மளே நகையெல்லாம் வாங்கி குடுக்கணும். பொண்ணு வீட்ல இருந்து எதுவுமே வாங்க கூடாது விக்ரம்…”

சொல்லிவிட்டு பின் அவரே, “ஆனா உன் பாட்டி எப்படியும் பணக்கார வீட்டுப்பொண்ணா தான் பார்ப்பாங்க. அவங்களே நிறைய வச்சுருக்கும்போது நம்ம வாங்கி குடுத்து கூட்டிட்டு வர என்ன இருக்கு…” என சலித்தும் கொண்டார்.

“ஏன் பாட்டி தான் பார்க்கணுமா? நீங்க பார்க்க மாட்டீங்களா?” அப்போது கூட அலைபேசியில் தீவிரமாக கேம் விளையாடிக்கொண்டிருந்த அக்னி வேந்தன் தாயைத் தீயாக முறைத்தான்.

“ம்ம்க்கும் ஆகுற காரியமா இது. வேணும்னா நீங்களே ஏதாவது பொண்ணை கூட்டிட்டு வாங்க. இல்லன்னா உங்க பாட்டி உங்க ரெண்டு பேரையும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு வித்துருவாங்க” நிவேதா நொடித்துக்கொள்ள,

“இது மட்டும் ஆகுற காரியமாக்கும்…” அக்னி சலித்தான்.

“ஏன் உங்க ரெண்டு பேருக்கும் லவ்வுலாம் எதுவும் இல்லையா?”

“நீங்க வேற ஏன்மா… உங்க பெரிய பையன், பொண்ணுங்களை பார்த்தா பல தூரம் தள்ளிப்போவான். அப்படியும் என் காலேஜ்ல இருந்தே அவனுக்கு ப்ரோபோசல் எல்லாம் வந்துச்சு. ஆனா கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு லெக்ச்சர் எடுத்தே வந்த பொண்ணுங்களை ஓட விட்டுட்டான். பாட்டியா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா தான் அவனுக்கு வேலைக்கு ஆகும்போல” எனக் கிண்டல் செய்த தம்பியை செல்லமாக அடித்தான் விக்ரம்.

“நீ மட்டும் என்னவாம்?” விக்ரம் முறைக்க,

“நமக்குலாம் பொண்ணு கிடைக்கல. பிடிச்ச பொண்ணா பார்த்தா தான லவ் வரும். அப்படி யாரையும் பார்க்கல…” என்றான் தோள்குலுக்கி.

“அப்போ உனக்கும் பாட்டி பார்க்குற பொண்ணு தான் தலையெழுத்து” விக்ரம் வாயை பொத்தி நகைக்க, இப்போது முறைப்பது அக்னியின் முறையாகிற்று.

எத்தனை கனவுகள்! அவர்களின்றி ஏன் தான் இவ்வாழ்க்கை இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக தருகிறதோ என்றே துவண்டு போனவன், திலோத்தமா அறியாது தன்னை மறைத்துக் கொண்டான்.

அவளும் கூட, குடும்பத்தினரின் பிரிவை அவனுக்காக மறைத்தாள்.

சொன்னது போன்றே, அந்த சிங்கிள் மெத்தையை மாற்றி டபிள் மெத்தையைப் போட்டிருந்தான் விக்ரம்.

அன்றைய இரவில், பட்டுச்சேலையில் மெல்லிய அலங்காரத்தில், தேவதையாக மிளிர்ந்தவளை விட்டு கண்ணை அகற்ற இயலவில்லை அவனுக்கு. அவளை பார்க்கும் நேரமெல்லாம் அவனது வேதனைகள் கூட வெகு தூரம் தள்ளிச் சென்று விடுகிறது.

இத்தனை நாள்கள் தான் மட்டுமே இருந்த அறையில் விக்ரமும் இருப்பது அவளுக்கு அதிக படபடப்பைக் கொடுத்தது.

“அழகா இருக்க திலோ” விக்ரம் அவள் மீதிருக்கும் பார்வையை துளியும் நகற்றவில்லை.

நாணம் தாளாது தலை கவிழ்ந்தவளுக்கு வார்த்தைகளும் வரவில்லை.

“இப்படி ஏதாச்சு பொய் சொன்னா, நீயும் பதிலும் பொய் சொல்லணும். நானும் அழகா இருக்கேன்னு” அவளை நிதானப்படுத்த கிண்டல் செய்தான்.

அதில் நிமிர்ந்து முறைத்தவள், “நான் எதுக்கு பொய் சொல்லணும். உண்மையாவே இந்த வேஷ்டி சட்டை உங்களுக்கு அழகா இருக்கு…” என்று விட்டு அவனது குறும்பு சிரிப்பில் விழித்தாள்.

“தேங்க்ஸ்…” எனக் கண்சிமிட்டியதில், அவளுக்கு வெட்கம் தலைக்கேறியது.

நடுங்கிக்கொண்டிருந்த பாவையின் கரத்தைப் பற்றியவன், “உண்மையை சொல்லனும்னா, நீ நார்மல் சுடிதார்ல, முடியை எல்லாம் கிளிப்ல அடக்கிட்டு, இந்தப் பின்னங்கழுத்துல ஸ்வெட் ஆக கிட்சன்ல நிக்கும்போதே எனக்கு நீ பேரழகியா தான் தெரியுவ. இன்னைக்கு… சொல்லவா வேணும். யூ கில்லிங் மீ திலோ…” என்றவனின் ரசனை மிகுந்த வார்த்தைகளில் சொக்கிப் போனாள் அவள்.

“என்னை வேவு பார்த்தீங்களா கிட்சன்ல நிக்கும்போது…” உதட்டைக் குவித்து கேட்டதில்,

“என் பொண்டாட்டியை நான் ஏன் வேவு பார்க்கணும். உரிமையோட தான் பார்த்தேன். நான் பார்க்க கூடாதா?” குறுகுறுவென பார்த்தபடி கேட்டான்.

“பார்க்கலாமே…” குறுநகையுடன் கூறியவளை இடையுடன் பற்றி மடியில் அமர வைத்தவன்,

“அப்போ பெர்மிஷன் உண்டு தான? ஹ்ம்ம்?” என்றான் ஹஸ்கி குரலில்.

அப்போதே அவளது இதயத்துடிப்பு எகிறிப்போனது.

“ம்ம்ம்” தன்னை மீறி அவள் அனுமதி கொடுத்ததுமே, வெட்கத்தில் நடுங்கிய அதரங்கள் அவன் வசத்திற்கு வந்தது.

மூச்சிரைக்க நகன்றவள், “வி…க்…” என அரை மயக்கத்தில் அழைக்கும்போதே, நெற்றி தொடங்கி முத்தத்திற்கு முன்னுரை எழுத ஆரம்பித்தவன், முடிவுரையை மட்டும் எழுத விரும்பாது நேச மடலை தொடர்ந்து அவளை உணர்ச்சியின் பிடியில் ஆட்டுவித்தான்.

இத்தகைய அழகிய இரவை அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அன்று மட்டுமல்ல, அதன்பிறகான அத்தனை நாள்களும் இருவருக்கும் பொக்கிஷம் தான்.

அள்ள அள்ள குறையாத நேசத்தை இருவரும் திகட்ட திகட்டவே பகிர்ந்து கொண்டனர்.

அதன்பிறகும் விக்ரம் அவளுடன் வீட்டு வேலைகளை அவளை உரசியபடியே பகிர்ந்து கொண்டான்.

அடுக்களையில் இருவருமாக சமையல் செய்ததை விட, காதலை வளர்த்ததே அதிகம்.

தனது உடலில் ஒரு பகுதியாக மாறி விட்டவனின் மீதிருந்த தயக்கமெல்லாம் விடைபெற்றுச் சென்றது திலோத்தமாவிற்கு.

“விக்ரம், இந்த வெங்காயத்தை உரிச்சு தாங்களேன்” என அவளும்,

“திலோ எனக்கு ஷேவ் பண்ணி விடு…” என அவனும் உரிமையாக தங்களது தேவைகளை கேட்டு நிறைவேற்றிக்கொண்டனர்.

இல்லற தேவைகளை கேட்காமலே நிறைவேற்றிக்கொண்டு, புன்னகைத்தும் கொள்வர்.

நாள்கள் தெளிந்த நீரோடையாக நகர்ந்திட, ஒரு நாள் திலோத்தமா முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாது அமைதியாக வீட்டிற்கு வந்தாள்.

இருவரும் ஒரே கேப் என்பதால், தினமும் பேசிக்கொண்டே வருவது வழக்கம். இன்று மனையாளின் மௌனம் அவனைத் தாக்கினாலும், வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காத்தான்.

வீட்டினுள் நுழைந்ததுமே அவளைப் பிடித்து விட்டவன், “என்னவாம் என் பொண்டாட்டிக்கு” என்று அவள் கன்னம் ஏந்தி கேட்க, அவளுக்கு கண்ணில் நீர் நிறைய ஆயத்தமானது.

முயன்று அடக்கிக் கொண்டவள், “வீட்டுக்கு வந்துட்டு சொல்லலாம்னு இருந்தேன். அதுக்காக கதவை கூட மூடாம விளக்கம் கேட்குறதா…” எனக் கண்சிமிட்டிக்கொண்டவளை விசித்திரமாகப் பார்த்தான்.

“என்னாச்சு திலோ. நீ ஓகே தான…?”

எச்சிலை விழுங்கியவள், “அது வந்து விக்ரம்… இன்னைக்கு ஆபிஸ்ல வாமிட் பண்ணிட்டேன்…” என்றதுமே பதறி விட்டான்.

“அதான் நினைச்சேன்… இன்னைக்கு உன் முகமே சரி இல்லைன்னு. மார்னிங் சரியாவும் சாப்பிடல நீ. பாரு முகமெல்லாம் கருத்து போன மாதிரி இருக்கு. ரொம்ப வேலையா திலோ. வேற கம்பெனி வேணும்னா ட்ரை பண்ணலாமே. இல்லைன்னா, இன்னும் ஹையர் போஸ்ட்கு படிக்கிறியா? உனக்கு படிக்கிறது தான் ஈசியாச்சே…”

அவனது பதற்றத்தை ரசித்தவள், “விக்ரம்… கொஞ்சம் பொறுமையா இருங்க. வேலையெல்லாம் அதிகம் இல்ல. வாமிட் பண்ணுனதும், என் கொலிக் டெஸ்ட் பண்ண சொன்னாங்க. அவங்களே கிட் வாங்கிட்டு வந்து குடுத்தாங்க…” என்றதில்,

“என்ன டெஸ்ட் பண்ணுன?” என்றவனுக்கு இன்னுமே விஷயம் புரியவில்லை.

அதில் சிரித்து விட்டவள், “உண்மையாவே வீட்டுக்கு பெரிய பசங்க கொஞ்சம் டியூப் லைட் தான் போல” என அவனை வார, விக்ரம் இடுப்பில் கையூன்றி செல்லமாக முறைத்தான்.

“என்னாச்சோ ஏதாச்சோன்னு நானே பதறி போயிருக்கேன் உனக்கு கிண்டலா இருக்கா?”

ஆடவனை இன்னுமா ரசித்தவள், தனது கைப்பையில் இருந்து பிரக்னன்சி கிட்டை எடுத்துக் காட்டினாள்.

“பிரக்னன்சி பாசிட்டிவ் வந்துருக்கு விக்ரம்” என்றதுமே அவன் முகத்தில் பிரகாசம் அதிகரித்தது.

“ஹே நிஜமாவா? இதை ஏன் இவ்ளோ டிவிஸ்ட் பண்ணி சொல்ற. வாவ்… நான் அப்பாவாக போறேனா” எனத் துள்ளி குதித்தான்.

அவளோ அமைதியாக அவனையே பார்த்திருக்க, “உனக்கு ஹேப்பியா இல்லையா திலோ? கார்ல கூட ஏதோ யோசிச்சுட்டே வந்தியே…” அவளைக் கவனித்துக் கேட்டான்.

“ஹேப்பி இல்லாம எப்படி இருக்கும் விக்ரம்? ரொம்ப ஹேப்பி தான். ஆனா இந்த ஹேப்பிய யார்கூடவும் ஷேர் பண்ணிக்க முடியாதுல” சொல்லும்போதே தொண்டை கமறியது அவளுக்கு.

“திலோ…” அவள் கையைப் பிடித்துக்கொண்டவன், “இது நமக்கே நமக்கான நேரம். ப்ளீஸ்…” என்றபிறகு சட்டென தன்னை சமன்செய்து கொண்டவள்,

“ஜஸ்ட் தோணுச்சு விக்ரம். உங்ககிட்ட ஷேர் பண்ணவும் இப்ப பரவாயில்ல. ஆனா இப்ப தான் வேலைக்கு சேர்ந்துருக்கேன். மேட்டர்னிட்டி லீவ் அது இதுன்னு கரெக்ட்டா லீவ் கிடைக்குமா? குழந்தை வந்தா எப்படி தனியா ஹேண்டில் பண்றது ரெண்டையும்னு புரியாம ஒரு சின்ன குழப்பம் இருந்துச்சு. அதான் யோசிச்சுட்டு இருந்தேன். அப்பறம் உங்ககிட்ட பேசிக்கலாம்னு தான் அமைதியா வந்தேன்…” மறைக்காது மனதை பகிர்ந்திருந்தாள்.

அதில் புன்னகைத்தவன், “நீ அதெல்லாம் யோசிக்காத திலோ. நம்ம ரெண்டு பேரும் இருக்கோம்ல மேனேஜ் பண்ணிக்கலாம். கேரியரையும் குடும்பத்தையும் பாலன்ஸ் பண்ற எத்தனையோ பேர் இருக்காங்க. நம்ம பேபி வரவும் லீவ் எல்லாம் பிளான் பண்ணிக்கலாம். நீ வொரி பண்ணாத சரியா?” என்றதுமே நன்றாக புன்னகைத்தவள், “ஓகே விக்ரம்…” என்றாள் வேகமாக.

எங்கே வேலையை விட்டு விட சொல்லி விடுவானோ என்ற பயம் அவளுக்கு.

அவனது சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிறான். தனது சம்பளம் அனைத்தும் தந்தைக்கு தான் செல்கிறது. அதனால் குழந்தையை முன்னிறுத்தி வேலையை விட சொன்னால்… அவளால் அவன் பேச்சைத் தட்டவும் இயலாதே. கல்லூரி படிக்கும்போது திருமணம் செய்து விட்டு, குழந்தை என்றான பின் படிப்பையே விட்ட பலரை பார்த்திருக்கிறாள். அதனாலேயே இந்தச் சிறு பயம்.

அவளை சரியாக கணித்து விட்டவன், “நம்ம இந்த லைஃபை ஷேர் பண்ணிக்கிறோம் திலோ. உனக்கு நானும் எனக்கு நீயும் அடிமை இல்லை… ஒரே ஒரு விஷயத்தை தவிர…” என அவள் நெற்றி முட்ட, அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டவள், ஆடவனின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டாள்.

அதனை கண்ணை மூடி ஏற்றவன், “நீ போய் ரெப்ரெஷ் ஆகு. இன்னைக்கு டின்னர் என்னோடது…” என்று கண் சிமிட்டி அடுக்களைக்குள் சென்றான்.

புன்னகைத்த திலோத்தமா அலைபேசியுடன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

சுவரில் சாய்ந்து அமர்ந்தவள், தந்தைக்கு அழைத்து விவரத்தை கூற, அவருக்கோ மகிழ்வில் கண்ணில் நீர் நிறைந்தது. ஒரு பேச்சுக்கென்று சொல்லாமல் உண்மையிலேயே மகளைத் திருமணம் செய்து கொண்டு அவளைக் கண்ணும் கருத்துமாக விக்ரம் பார்த்துக்கொள்வதை அறிந்து வைத்தவருக்கு மனம் நிறைந்தது.

“உன் அம்மா இருந்திருந்தா இந்நேரம் கிளம்பி வந்துருப்பா…” சொல்லிவிட்டு துக்கம் அடைக்க அமைதியாகி விட்டான்.

திலோத்தமா கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்க, “உடம்ப பார்த்துக்கோமா. கண்டதை யோசிக்காத சரியா… மாப்பிள்ளையை கேட்டேன்னு சொல்லு” என்றார்.

“பவி இருக்காளாப்பா…” ஏக்கமாக கேட்டாள்.

“மாடில டியூஷன் எடுத்துட்டு இருக்காமா… கூப்பிடவா?”

“கூப்பிட்டா பேச மாட்டா தான?”

“அதெல்லாம் பேசுவா. இரு” என்று பவித்ராத்யாவை அழைக்க, தந்தையில் அழைப்பில் வந்தவள், “சொல்லுங்கப்பா…” என்றாள்.

“ம்மா திலோ” என ஆரம்பிக்கும்போதே, “அவளை பத்தி என்கிட்ட பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு. எனக்கு இன்னும் டியூஷன் முடியல. பசங்க வெய்ட் பண்ணிட்டு இருக்காங்கப்பா… ஒரு அரை மணி நேரத்துல வந்துடுறேன்…” என்று எரிந்து விழுந்து விட்டு சென்றவளை பரிதாபமாகப் பார்த்தார் சுந்தரம்.

“அவள் ஏதோ கோபத்துல பேசுறாமா… நடந்ததை தெரிஞ்சுக்க கூட அவளுக்கு பொறுமை இல்ல” அவர் வருத்தமாக கூற,

“கோபத்தை விட அவளுக்கு தான் வலியும் அதிகம் இருக்கும்பா…” என தங்கையின் நிராகரிப்பில் துவண்ட மனதுடன் அழைப்பைத் துடித்தவள், அழுகை வெளிவராது வாயை மூடி குமுறினாள்.

இங்கோ அடுக்களையில் சுவரில் சாய்ந்து அமர்ந்த விக்ரம வேந்தன், இரு கோடு கொண்ட ப்ரக்னன்ஸி கிட்டை வெறித்திருந்தான்.

வாழ்வின் முக்கிய தருணத்தை தனது குடும்பத்துடன் பகிர இயலா ஏக்கம் அவனைக் கொன்றதில், சில நொடிகள் சத்தம் வராமல் அழுகையின் பிடியில் கதறினான்.

திலோத்தமா கதவைத் திறக்கும் அரவம் கேட்டதுமே அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டவன், சமைக்கத் தொடங்க அவளும் இணைந்து கொண்டாள்.

இருவரது கண்களும் கோவைப்பழமாக சிவந்திருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவும் முயலவில்லை. பார்த்து விட்டால், தாங்கள் அழுதது தெரிந்து விடுமே!

சின்னஞ்சிறு உணர்விலும் கூட தனது இணையின் மனநிலையைப் பொருத்தி அடுத்து வந்த வருடங்களும் அழகான நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தனர், விபத்து எனும் கோரம் மட்டும் அவர்கள் வாழ்வில் வராதிருந்தால்!

பவித்ராத்யா கன்னத்தில் வழிந்த நீருடன் சிலையாக அமர்ந்திருந்தாள்.

திலோத்தமா தேம்பலுடன் நடந்ததை உரைத்து விட்டு, “அப்படியும் நான் ப்ரெக்னன்ட்டா இருக்கும்போது, அவருக்கு உன் ஞாபகம் அதிகமா இருக்குன்னு, உங்கிட்ட பேச சொல்லி கம்பெல் பண்ணேன் அகி. முதல்ல உங்கிட்ட மறுபடியும் பேசுறேன்னு சொன்னவரு திடீர்னு என்னன்னு தெரியல, இனி யார்கிட்டயும் நான் பேசுறதா இல்லைன்னு முடிவா சொல்லிட்டாரு… ஆனா உங்களை நாங்க மிஸ் பண்ணாத நாளே இல்ல… நீங்க இல்லாத சந்தோஷமெல்லாம் எங்களுக்கு நிறைவை கொடுத்ததும் இல்லை அகி…” என்றவளின் அன்பில் அக்னி வேந்தனும் உருகிப்போனான்.

பவித்ராத்யா ஓடி வந்து தமக்கையைக் கட்டிக்கொண்டாள்.

“சாரிக்கா ரொம்ப ரொம்ப சாரி… அந்த நேரத்துல என்கிட்ட நிலா வயித்துல இருக்கறதை சொல்ல ஆசைப்பட்டு இருப்பல்ல…” எனக் கேவிட,

“ஐயோ பேபி… நீ சாரி எல்லாம் சொல்ல வேணாம். உன்மேல என்ன தப்பு இருக்கு…” என்று திலோத்தமா பதறினாள்.

“நான் அப்பாகிட்ட தெளிவா கேட்டு இருக்கணும்கா” விசும்பியவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவள்,

“அந்த வயசுல நீ அவ்ளோ மெச்சூர்டா இருந்ததே பெருசு பேபி. தனி ஆளா அப்பாவை ஒரு வருஷமா பார்த்துருக்க. இத்தனைக்கும் அவர் நார்மலா இருந்தாருன்னா தான் நினைச்சுட்டு இருந்தேன். முடங்கி போயிருப்பாருன்னு எதிர்பார்க்கல. எல்லாம் விதி… விடுடா” என்றாள் திலோத்தமா.

“விதி ஒன்னும் இல்ல… எல்லாமே சதி தான். வேணும்னே உங்களை கஷ்டப்படுத்தி இருக்காங்க திலோ…” என்றவள் திரும்பி அக்னி வேந்தனை முறைத்தாள்.

“உங்களுக்கு அத்தான் கால் பண்ணாருல… அப்போ கூட ஏன் அப்படி ஹர்ட் பண்ணீங்க?” என சண்டைக்கு வந்தாள்.

அவனோ இறுகிய முகத்துடன், “அவன் போன் பண்ணிருக்கான்னு கேள்வி பட்டுருந்தா கூட நான் அவனைத் தேடி போயிருப்பேன்…” என அழுத்தம் திருத்தமாய் உரைத்தவனின் கழுத்து நரம்புகள் புடைத்தது.

அதில் இரு பெண்களுமே அதிர்ந்தனர்.

திலோத்தமாவிற்கு எதுவோ புரிவது போல இருக்க, “அப்போ சந்தீப்…” என இழுத்தாள்.

அந்நேரம் மருத்துவர் அங்கு வந்தனர்.

“சர்ஜரி நல்லபடியா முடிஞ்சுது அக்னி. நினைச்சதை விட சுமூகமாவே முடிஞ்சுது. 24 மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கணும். அதுக்கு அப்பறம் ஃபிசியோ கொடுத்துட்டே இருக்கணும். தென், எந்த அளவு ஒர்கவுட் ஆகிருக்குன்னு பார்க்கலாம்” எனும்போதே அக்னி பேச வர, “டோன்ட் வொரி… ஹீ வில் பீ பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்…” என்றதில் அவனிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு.

திலோத்தமாவிற்கு தனது காதையே நம்ப இயலவில்லை.

“நான் உண்மையை சொன்னா தான் சர்ஜரி பண்ண விடுவேன்னு சொன்ன. உண்மையாவே சர்ஜரி முடிஞ்சுதா அகி?” விழிகளை விரித்தாள்.

“ம்ம்…” என்றவனின் முகம் இன்னும் கூட தெளிவடையவில்லை. அங்கிருந்து விறுவிறுவென நேராய் அக்ரம் இல்லத்திற்குச் சென்றவன் சந்தீப்பின் முன்னே தான் நாற்காலியைப் போட்டு அமர்ந்தான். கண்களில் சிங்கத்தின் கர்ஜனை மிளிர்ந்தது.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 52

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
57
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment