
திமிர்-5
“ம்ப்ச்! யாருய்யா இது குறுக்கால வந்து மறைச்சுக்கிட்டு நிக்கிறது.?” என அவன் எட்டிப் பார்க்க முயன்றபோது, மீண்டும், அந்த இரண்டு உருவங்களும் அவனை மறைத்தபடி நின்றது.
“ம்ப்ச்! யாருய்யா இது?”
எனச் சலித்துக் கொண்டவன், தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே நிமிர்ந்துப் பார்க்க, ஆளுயரக் கரடி பொம்மை போல தன் முன்னே நின்றிருந்தவர்களின் முகம் அவன் பார்வையில் பட்டது. முகஜாடையும், உருவ அமைப்பும், அப்படியே போஸ்பாண்டியை ஒத்திருக்க, கொஞ்சம் அரண்டுதான் போனான் வீரபத்ரன்.
“அண்ணே! இவிங்க யாரு? பார்க்கவே புள்ளை புடிக்கிறவிங்க மாதிரி இருக்காய்ங்க! துணி மணியும் தோரணையும்.. ஒண்ணும் சரியா படலையே?” போஸ்பாண்டிக்கு அடுத்தவனான முத்துப்பாண்டி கேட்க,
“அடேய்! இவிங்கதேன், மயிலு கூடப் பொறந்த மண்ணாங்கட்டிங்க போல.! அப்படியே எந்திரிச்சு வந்த அய்யனார் சிலை மாதிரி இருக்காணுங்க! அடேய் வீரபத்ரா தொலைஞ்சடா நீ! உன் மூணு மாச்சான்களும் உன்னை வச்சு செய்யப் போறானுங்க! இப்போவும் உனக்கு இந்த மயிலம்மாதேன் வேணுமா?!” என வீரபத்ரனின் காதுக்குள் கேட்டான் காத்தவராயன்.
“முன் வச்ச காலை பின் வைக்க மாட்டான் இந்த வீரபத்ரன். நான் இவளைக் கட்டியே தீருவேன்!”
“ம்க்கும்! நீ முன்னாடி காலை வைக்கிறதுக்குள்ளேயே உன் மச்சானுங்க உன் காலை வெட்டப் போறாய்ங்க! அப்பறம் நொண்டிக்கிட்டேதேன் திரியணும்டி மாப்பிள்ளை!”
“ஏன் காக்காவிரட்டி, இப்படி பயமுறுத்துற? ஆறடி அண்டா மாதிரி உருளையா இருக்கிற இவிங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு! நீவேற உன் பங்குக்கு எதையாவது சொல்லி, இருக்கிற கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் ஒண்ணுமில்லாமல் ஆக்கிடுவ போல?”
“ஆமா நான்தேன் உன்னை பயமுறுத்துறேன். இந்த வாராய்ங்க பாரு! மூணு பேரு சேர்ந்து வர்ரதைப் பார்த்தாலே ஒரு ஊரே ஒண்ணு திரண்டு வர்ர மாதிரி இருக்கு. எனக்கு இந்த ஊரு மண்ணை மிதிச்சதில் இருந்தே உசுரு பயம் வந்துடுச்சுடா வீரா! அந்தக் காலத்தில் ஒரு கதை சொல்லுவாய்ங்களே.. அரக்கனோட உயிர், எழுமலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ஒரு கிளிக்குள்ளே இருக்கும்ன்னு சொல்லுவாய்ங்களே..?”
“ஆமா! அது என்ன இப்போ?”
“அதே மாதிரி என் உசிரையும் எதாவது பெருங்காய டப்பாக்குள்ளே போட்டு அடைச்சு வச்சிரு வீரா! ஊரு போய் சேர்ந்ததும் தந்தால் போதும். ஏன்னா என் உடல் மருதை மண்ணுக்கு. என் உசிரு என் பொண்டாட்டி கயலுக்கு!”
“இந்தாரு காக்காவிரட்டி! நானே இவிங்களை பார்த்து நடுநடுங்கிப் போய் நிக்கிறேன். இதே மாதிரி எகனைக்கு மொகைனையா பேசிக்கே இருந்தேன்னு வையி, நான்தேன் அரசி மயன், இவன்தான் என்னை அம்மாப்பட்டிக்குள்ளே கூட்டியாந்தான்னு உன்னைப் போட்டுக் குடுத்துருவேன் பார்த்துக்க! என்னை வெறியேத்தி, மண்டையைக் காயவிடாமல், வாயை மூடிக்கிட்டு இறங்கு!”
“ரொம்பத்தேன் பேசுறடா நீயி! உனக்கு துணைக்குன்னு உங்க ஆத்தா என்னை அனுப்பிச்சு. உனக்கு துணையெல்லாம் தேவையே இல்லை. நீயே ஊரை வித்துப்புடுவ ராசா!”
என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மேகவர்ணாவின் அண்ணன்கள் மூவரும் வீரபத்ரனை நோக்கி வர,
“இந்தா வந்துட்டாய்ங்க! ஆதார் கார்டு, ரேஷன் கார்டுன்னு ஆரம்பிக்கப் போறாய்ங்க!” என முணுமுணுத்தான் காத்தவராயன்.
“அண்ணே! இவிங்களை ஏன் நம்ம வீட்டுக்கு வரச் சொன்ன? என் கருப்பனுக்கு இவிங்க மூஞ்சியையும் முகரையையும் பார்க்கவே பிடிக்கலை! நீ எப்படி என்னைக் கேட்காமல், இவிங்களை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம்?” பூமியதிர நடந்து வந்து தன் மூத்த அண்ணன் போஸ்பாண்டியிடம் சண்டையிட்டாள் மேகவர்ணா.
“ஆமா! தங்கச்சிக்குப் பிடிக்காத எதுவுமே இங்கே நடக்கக் கூடாது!” இது இரண்டாது ஆளான முத்துப்பாண்டி.
“வர்ணாவுக்குப் பிடிக்காதவிங்களை ஏண்ணே வீட்டுக்குள்ளே கூட்டியாற? தங்கச்சிக்குப் பிடிக்கலைன்னா விரட்டி விட வேண்டியது தானே?” இது கடைசி அண்ணனான இராஜபாண்டி.
மூத்தவன் முடிவெடுப்பவனாய் இருந்தாலும், மற்ற இருவரும் எப்போதுமே தங்கைப் பக்கம் தான். அவளுக்குப் பிடிக்காத எதுவும் இந்த வீட்டில் நடக்கக் கூடாதென்பதில் அவர்களுக்கு அப்படியொரு உறுதி.
“அடேய்.. இருங்க டா! நசநசன்னுட்டு இருக்கீங்க? நம்ம ஊருக்கு வந்தவிங்களை எல்லையோட விரட்டிவிடச் சொல்லுறீங்களா? என்னமோ வீடியோ எடுத்துப் போடப் போறாங்களாம். இம்புட்டு வளமும் சந்தோஷமும் இங்கண இருக்குன்னு, போன மனுஷங்க திரும்பி வந்துட மாட்டாய்ங்களான்னு ஒரு நப்பாசைதேன். எல்லாம் வசதி வாய்ப்புக்கு ஆசைப்பட்டு ஒவ்வொருத்தரா வெளியேறி, மிச்சம் சொச்சம்ன்னு மூவாயிரம் பேருதேன் இங்கண இருக்கோம்!”
“இந்தாருண்ணே.. இங்கிருந்து போன நம்ம ஊருக்காரய்ங்க திரும்பி வந்தால் பரவாயில்லை! இங்கே இருக்கிற வளங்களைச் சுரண்டவும்,’தண்ணீரை உறிஞ்சவும் வேற எவனாவது வந்துட்டா என்ன பண்ணுவ? இவிங்க காசு சம்பாதிக்க நம்ம ஊருதேன் ஊறுகாயா? ஏன் நாங்களுந்தேன் படிச்சிருக்கோம்! எங்களுக்கு வீடியோ போட தெரியாதாக்கும்? போகச் சொல்லுண்ணே அவிங்களை! அப்பறம் நான் கடுப்பாயிருவேன் பார்த்துக்கோ!”
என தன் மூத்த அண்ணனை அவள் மிரட்டிக் கொண்டிருக்க, பச்சை நிற சுடிதாரில், துப்பட்டாவை இடையில் கட்டியபடி, தோரணையாய் நின்றிருந்தவளை வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.
“பார்த்து மாப்பிள்ளை! கொசு உள்ளே போய்ட போகுது? இம்புட்டு இரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாக்கும்?!” என வீரபத்ரனின் காதுக்குள் வழக்கம்போல் முணுமுணுத்தான்.
“என்ன புதுசா மாப்பிள்ளைன்னு கூப்பிடுறே?”
“இந்த மயிலுபுள்ள எனக்கு தங்கச்சின்னா நீ எனக்கு மாப்பிள்ளை தானே?, ஆனால், அப்போ அழகருக்கும் என் தங்கச்சி கருவிழிக்கும் சேர்த்து சப்போர்ட் பண்ணினேன். இப்போ புதுத் தங்கச்சி மயிலுக்கு மட்டுந்தேன் என் சப்போர்ட்!”
“இதென்ன புதுக்கதையா இருக்கு?”
“பிறகு.. உன் கூடச் சேர்ந்து, உசிரு பயத்தோட அலையறதுக்கு, என் புதுத் தங்கச்சி பக்கம் போயிடலாம்ன்னு பார்க்கிறேன். உசிரு முக்கியமில்லையா? கட்சி தாவல் இங்கே தர்மமடான்னு ஆண்டவர் கூட சொல்லியிருக்காரு.!”
“ஆண்டவரா? கூகிள் ஆண்டவரா?”
“அடேய் பக்கி பயலே..! நாயகன் மீண்டும் வரார்.. அந்த ஆண்டவருடா!”
“அவரு காதலில் சொன்னார். எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிறது!” மென்மையாய் வீரபத்ரன் சலித்துக் கொண்ட அதே நேரம்,
“என்னத்துக்கு இப்படி கத்திக்கிட்டே கிடக்குறீங்க? சோலிக் கழுதையைப் பார்க்காமல், என்ன வெட்டிப்பேச்சு வேண்டி கெடக்கு?” என்ற கணீர் குரலின் பின்னால், லேசாய் ஆங்காங்கே நரைத்த தலை முடியும், கருத்த தேகமும், உறுதியான உடல்வாகுமாய் வெளிப்பட்டார் அவர்.
“அப்பா வர்ராரரு!”
“இந்தா அப்பா வந்துட்டாரு! அவருகிட்டேயே கேளு!”
“தங்கச்சி! அப்பா வந்துட்டாரு வையப் போறாரு!” என்ற குரல்களின் நடுவே, நிதானமாய் நடந்து வந்து தன் பிள்ளைகளின் அருகே நின்றார் நாச்சியப்பன். வலக்கரம் கம்பீரமாய், கருப்பும், வெளுப்புமாய் இருந்த மீசையை நீவியது.
“என்னத்துக்கு அம்புட்டு பேரும், இங்கண நீன்னு கத்திக்கிட்டு கிடக்கீக? யாருக்கும் எந்தச் சோலியும் இல்லையா? ஆத்தா மயிலு! இங்கண என்ன பஞ்சாயத்து?”
“இந்தாருங்கப்பா! இந்த போஸண்ணே, செய்றது எனக்கு ஒப்பவே இல்லை. ஊரு பேரு தெரியாதவிங்களைக் கூட்டியாந்து நம்ம வீட்டில் தங்க வைக்கணும்ன்னு சொல்லுது. இவிங்க வீடியோ எடுக்கப் போறோம்ன்னு சொல்றாய்ங்க! முழியைப் பாருங்க! திருட்டு முழியும் மொகரையும், களவாணிப் பயலுங்கன்னு சொல்லாமல் சொல்லுதா இல்லையா?” படபடவெனப் பொரிந்து தள்ளினாள் மேகவர்ணா.
“மயிலு! மயிலு! கொஞ்சம் பொறுமையா பேசு ராசாத்தி! நம்ம ஊரை நம்பி வந்திருக்காய்ங்க! இங்கண இருந்துட்டு போவட்டுமே! இந்த ஊரில் இருக்கவா இடமில்லை? ஊரில் முக்கால்வாசி வீடு காலியாத்தேன் கெடக்கு! இந்துட்டு போவட்டும் மா!” எனப் பொறுமையும் கண்டிப்பும் கலந்தக் குரலில் பேசினார் நாச்சியப்பன்.
“அப்போ வேற எதாவது வீட்டில் போய் தங்கச் சொல்லுங்கப்பா! எனக்கு இவிங்க மூஞ்சியைப் பார்த்தாலே பிடிக்கலை. என்னமோ பகையாளியைப் பார்க்கிற மாதிரியே தோணுது.!” வீரபத்ரனை முறைத்தபடியே சொன்னாள் மேகவர்ணா.
“அடேய்! அரசி மயனே..! இந்தப் புள்ளை என்னடா அசால்ட்டா உண்மையைக் கண்டு பிடிச்சுருச்சு.? பகையாளின்னு சொல்லிப்புடுச்சு பார்த்தியா?”
“மெதுவா பேசித் தொலைய்யா! நீயே போய் அவக்கிட்டே போட்டுக் கொடுத்துடாதே! அப்பறம் வந்த அன்றைக்கே நம்மளை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாய்ங்க!” யாருக்கும் கேட்காத வண்ணம் சின்னக் குரலில் முணுமுணுத்தான் வீரபத்ரன்.
“ஏம்மா! நம்ம வீடு இருக்கையில நாம ஏன் அவிங்களை வெளியே அனுப்பணும்? புரிஞ்சுக்க மயிலு! சும்மா கிடக்குற வீட்டில் கொஞ்ச நாளைக்கு தங்கிட்டுப் போறாய்ங்க! போய் சாவி கொண்டா ராசாத்தி!”
“ப்பா! நானெல்லாம் சாவி கொண்டாந்து கொடுக்க மாட்டேன்.!”
“இந்தாரு மயிலு! இம்புட்டு பிடிவாதம் கூடாதுன்னு சொல்லிப்புட்டேன். நம்ம ஊருக்கு வந்திருக்காக! வந்தவங்கக் கிட்டே இப்படி மூஞ்சியைக் காட்டுறது சரியில்லை சொல்லிப்புட்டேன்.! சாவி எடுத்துட்டு வான்னு சொன்னால் எடுத்துட்டு வா! அம்புட்டுதேன்!” நாச்சியப்பனின் கண்டிப்பானக் குரலில், கொலுசுக்கால் சிணுங்க, தரையை உதைத்து நடந்தபடியே வீட்டுக்குள் சென்று, சாவியை எடுத்துக்கொண்டு மூஞ்சியைத் தூக்கியபடியே வந்தாள் மேகவர்ணா.
“இந்தாங்கப்பா!”
“அவங்கக் கிட்டே கொடு மயிலு!”
“நீங்களே கொடுத்துருங்கப்பா!”
“கொடுன்னு சொன்னேன்!” அதட்டலான குரலில் முகம் சிணுங்க, வீரபத்ரனை நோக்கி நடந்தவள்,
‘வந்த அன்றைக்கே, எங்க அப்பன்கிட்டே என்னை வை வாங்க வச்சுட்டல்ல, இருடி.. உன்னை என் கருப்பனை வச்சு முட்ட விடுறேன்.!’
என மனசுக்குள் நினைத்துக் கொண்டே, அவனைப் பார்வையால் எரித்தபடியே அவன் கரத்தினில் சாவியை வைத்தாள்.
வீரபத்ரனின் கரத்தினில் அவள் சாவியை வைத்த நொடியினில், தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், பட்டு விலகிய, அவள் மென்விரல் ஸ்பரிசமும், அவன் நாசியைத் தீண்டி விலகிய லேசான ஏலக்காயின் மணமும், அவனுக்குள் ஏதேதோ மாற்றங்களை ஏற்படுத்தியது.
அவன் மனதிற்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கும், உணர்வுகளின் பெயர் தெரியாமல், அவள் மீதான பிடித்தத்தின் காரணம் தெரியாமல், அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.
“ம்க்கும்!” என்ற போஸ்பாண்டியின் தொண்டைச் செருமலில் கூடச் சிந்தைக் கலையாது, அவன் அசையாமல் நிற்க,
“அடேய்! ஒட்டுமொத்தக் குடும்பமும் உன்னைய மட்டுந்தேன் பார்க்கிறாய்ங்க! அந்தப் புள்ளையை விட்டுட்டு வேற எங்கேயாவது பார்க்கிறியா டா? அப்பட்டமா தெரியுதுடா, அந்தப் புள்ளையை சைட் அடிக்கிறேன்னு!” என்ற காத்தவராயனின் குரலில், திடுக்கிட்டு நிமிர்ந்தவன்,
அப்போதுதான் அவளிடம் சாவிக்காக கை நீட்டியபடியே நிற்பதையும், அவள் சாவியை கரத்தினில் தந்து விட்டு நகர்ந்து சில நிமிடங்கள் கடந்துவிட்டதென்பதையும் உணர்ந்தான்.
“ஹி..ஹி..!”
சமாளிப்பாய் புன்னகைத்து வைத்தவன்,
“நாங்க தங்கப் போற வீடு எந்தப்பக்கம் சார் இருக்கு?” எனக் கேட்டான்.
“இந்தா, எதிரில் இருக்குல்ல அந்த வீடுதேன் தம்பி! கொஞ்சம் குப்பையாய்க் கிடக்கும், சுத்தம் பண்ணிக்கிடுங்க! இன்னைக்குப் பொழுதுக்கு சாப்பாடு கொடுத்தனுப்ப சொல்லுறேன். நாளையிலிருந்து நீங்க சமைச்சுக்கிடுங்க! அடுப்பு பின்னாடிப் பக்கந்தேன் இருக்கும்! விறகுக்கு தென்னை மட்டை நிறையா கிடக்கும் எடுத்துக்கிடுங்க! எதாவது உதவி வேணும்ன்னா என் கடைசிப் பையன் இராஜபாண்டியை துணைக்கு வச்சிக்கிடுங்க!” என நாச்சியப்பன் சொல்ல, சரி, சரி என தலையாட்டிவிட்டு, வீரபத்ரனும், காத்தவராயனும் அந்த வீட்டை நோக்கிச் செல்ல,
“ஏன் போஸூ! இந்தப் பயலோட முக ஜாடையை எங்கணையோ பார்த்த மாதிரி இருக்கு! என்ன ஏதுன்னு விசாரிச்சு வை!” என தன் மூத்த மகன் போஸ்பாண்டியிடம் சொன்ன நாச்சியப்பனின் அடர்ந்தப் புருவங்கள் யோசனையாய் முடிச்சிட்டிருந்தது.
*****
“ஆத்தாடி ஆத்தா! சின்ன வீடுன்னு நினைச்சேன் பெரிய வீடாத்தேன் இருக்கு. மூவாயிரம் வாடகை கேட்கவும், ஒத்தை ரூமோட உள்ள வீட்டைக் காட்டுவாய்ங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை பெரிய வீடுதேன். வீட்டுக்கு முன்னால் இடம் கிடக்கு, திண்ணை இருக்கு. பின்னால் அடுப்பு, பக்கவாட்டுல தோட்டம் எல்லாம் சூப்பரா இருக்குல்ல டா?” எனக் காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்க, வீரபத்ரனோ, பதில் ஏதும் பேசாமல், அங்கிருந்த மேஜையை இழுத்துப் போட்டு, தன் மடிக்கணிணியில் ஏதோ செய்துக் கொண்டிருந்தான்.
“இதைத் தூக்கி வச்சிட்டு இவன் என்னத்தைப் பண்ணிட்டு இருக்கான்?”
யோசனையாய் காத்தவராயன் வீராவின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருக்க, கணிணியின் திரையில், வரும் வழியில் மேகவர்ணா இவர்களிடம் சண்டையிட்டது காணொளிக் காட்சியாய் ஓடத் துவங்கியிருந்தது.
“அடேய்! என்னடா பண்ணி வச்சிருக்க? இதை எப்போடா எடுத்த? பைக்கில் முன்னாடி நீ கேமிராவை மாட்டிக்கிட்டு, அங்கேயும் இங்கேயும் ஆட்டி அளக்கும் போதே நான் சுதாரிச்சுருக்கணும். இதுக்குத்தேன் வண்டி பக்கத்திலேயே நின்னியாடா?!”
“அதே.. அதே..!”
“அந்தப் புள்ளைக்கும் அவிங்க அண்ணேங்களுக்கும் தெரிஞ்சுச்சு உன்னை உரிச்சுப்புடுவாங்க டா!”
“பொண்ணு எப்படி இருக்காள்ன்னு மைடப்பிக்கிட்டே கேட்க வேணாம்? அதுக்குத்தேன் எடுத்தேன்.!”
“அடேய்! ஏன்டா இப்படி உசுரை வாங்குறே? உங்க அப்பனுக்கும், பெரியப்பனுக்கும் நீ அம்மாபட்டிக்குள்ளே அலப்பறை பண்ணிக்கிட்டு திரியறேன்னு தெரிஞ்சுது.. உசுரோட புதைச்சுப்புட்டுதேன் மறுவேலை பார்ப்பாய்ங்க! பற்றாக்குறைக்கு, உன் மொத்தக் குடும்பமும், நான்தேன் உன்னை இங்கே கூட்டியாந்தேன்னு சொல்லும். ஏன்னா நீ வாயில் விரல் வச்சா கடிக்கத் தெரியாத பச்சை மண்ணு பாரு!”
“நான் பச்சை மண்ணுதேன் காக்காவிரட்டி!”
“என் வாயிலிருந்து பச்சை பச்சையாய் வந்திரும் பார்த்துக்கோ! அரசி மயனே.. நீ ரொம்பத்தேன் பண்ணுறே? எங்கேயாவது வகையா மாட்டிக்கப் போற ராசா!”
“அதை மாட்டும் போது பார்த்துக்கலாம்.! ஆரம்பத்தில் குடும்பத்தைச் சேர்த்து வைக்கணும்ங்கிற எண்ணத்தோட மட்டுந்தேன் இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் இப்போ, அந்த மாயக்காரி மயிலம்மாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அரசியோட ரெண்டாவது மருமக அவதேன்.!” வீரபத்ரனின் குரலில் தெரிந்த உறுதியில், காத்தவராயனின் குட்டி இதயம் அசுர வேகத்தில் ஆட்டம் கண்டது.
“அடேய்! இப்படி அதிர்ச்சியா கொடுக்காதீங்க டா! ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போல டா!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கருவிழியின் முகம் கணிணி திரையில் விரிந்தது. காணொளி அழைப்பில் வீரபத்ரனுடன் இணைந்திருந்தாள்.
“அடேய்! டென் ருப்பீஸூ போய்ச் சேர்ந்துட்டியா டா? ஊரு எப்படி இருக்கு?”
“ஊரெல்லாம் நல்லாத்தேன் இருக்கு! உனக்கு அனுப்பின வீடியோ பார்த்தியா?”
“பார்த்தேன் டா! யாருடா இந்தப் பொண்ணு? உன்கிட்டே இப்படி ஒரண்டை இழுக்குறா? அதோட அந்த மாட்டுக்குப் பயந்து நீங்க ஓடுனீங்க பாருங்க, சிரிச்சு முடியலைடா டென்ருப்பீஸ்..!”
“இந்தாரு மைடப்பி! அண்ணின்னு கூடப் பார்க்க மாட்டேன். சும்மா சும்மா ஈஈஈன்னு பல்லைக் காட்டாதே! அந்த மாடு விரட்டினதை விட, நீ சிரிக்கிறதுதேன் கடுப்பாகுது.!” கருவிழி சிரிப்பதைப் பார்த்து முகம் தூக்கினான் வீரபத்ரன்.
“எம்மா தங்கச்சி! நானும் இங்கணதேன் இருக்கேன். உன் இத்துப் போனக் கொழுந்தனாருக்கு நீயாச்சும் சொல்லக் கூடாதா?!”
“என் கொழுந்தனாரு அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்? அந்தப் புள்ளை தானே இவன் கிட்டே ஒரண்டை இழுத்திருக்கு?”
“அந்தப் புள்ளைதேன், இந்த கிறுக்குப் பயலோட மாமன் மவ! இவள் பத்தாதுன்னு இவளுக்கு மூணு அண்ணனுங்க வேற.. எக்ஸ்ட்ரா லார்ஜ் எருமை மாதிரி இருக்காணுங்க! அவிங்களைப் பார்த்தாலே அடிவயிற்றில் புளியைக் கரைக்குது. பேசாமல் என்னை அழகரு கிட்டே சொல்லி நாடு கடத்திவிடு தங்கச்சி!”
“ஆத்தீ! என்னண்ணே சொல்றே?”
“ஹூம்ம்.. இந்தியாக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சுன்னு சொல்றேன். தமிழில் தானே சொல்றறேன்? சும்மா என்ன சொல்ற? நொண்ண சொல்றன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கிட்டு!”
“நீ கொஞ்ச நேரம் சும்மா இருண்ணே..!” எனக் காத்தவராயனின் பேச்சை நிறுத்தியவள்,
“டேய்! பதிற்றுப்பத்து, எருமைமாடு! எதுவுமே சொல்லாமல் அமைதியாய் இருக்கே? என்னதான் டா சங்கதி?”
“இந்தாரு மைடப்பீ! அண்ணின்னு அதிகாரம் பண்ணுற வேலையெல்லாம் வச்சுக்கிட்டே, எதுவுமே சொல்ல மாட்டேன் பார்த்துக்கோ!”
“சரி.. சரி.. சொல்லுடா டென் ருப்பீஸ்..!”
“எனக்கு இந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு மைடப்பி! நீதேன் எங்கக் காதலைச் சேர்த்து வைக்க உதவி செய்யணும்?!”
“ஆத்தாடி! என்னடா இப்படி சொல்றே?”
“நம்ம ஹிட்லர், உனக்கும் அழகருக்கும் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னப்போ, கருவிழிதேன் எனக்கு அண்ணி வேற யார் வந்தாலும், அவங்க அண்ணி இல்லைன்னு உனக்காக பேசினேனா இல்லையா? இப்போ நீ எனக்கு உதவி செஞ்சுதேன் ஆகணும்!”
“அடேய்! நான் இருக்கிற நிலைமையில் உனக்கு என்னடா உதவி செய்ய முடியும்? அதுவும் இவ்வளவு பெரிய வயிற்றை வச்சிக்கிட்டு, நடக்கவே உங்க அண்ணனை ஓராயிரம் முறை அழைக்கிறேன். இதில் ரன்னிங், சேஸிங் எல்லாம் சத்தியமாய் முடியாது டென் ருப்பீஸ்..! நான் வேணும்ன்னா இந்தப் புள்ளை ஃபோட்டோவை அத்தைக்கிட்டேயும் மாமகிட்டேயும் காட்டவா?”
“ஆத்தா! நீ ஆணியே புடுங்க வேணாம்!”
“அப்போ, அம்மாச்சிகிட்டே காட்டுறேன்.!”
“நீ காட்டிவிடு தங்கச்சி! அந்தக் கிழவி வந்து இவனைக் காதைப் பிடிச்சு இழுந்துட்டுப் போகட்டும்!” எனக் காத்தவராயன் சொல்ல,
“இந்தாரு மைடப்பி! நீ யாருக்கிட்டேயும் சொல்ல வேணாம். நானே நேரம் பார்த்து சொல்லிக்கிறேன். இந்த ராக்காச்சியைக் கட்டுறதுக்குள்ளே, எத்தனை வலைக்குள்ளே சிலந்தியாய் மாட்டப் போறேனோ தெரியலை.!” என அவசரமாய் சொன்னான் வீரபத்ரன்.
“பார்த்துடா டென் ருப்பீஸ்.. அந்த மாட்டை அடக்குனாதேன் பொண்ணு குடுப்போம்ன்னு உன் ஒண்ணு விட்ட மாமன் சொல்லிற போறாரு! அப்பறம் உன் பாடு திண்டாட்டம்தேன்.!”
“ஏய்! அஞ்சு பைசா மைடப்பி வாய் வச்சு தொலையாதே! நடந்து தொலைச்சிடப் போவுது!” பயத்துடன் சொன்னான் வீரபத்ரன்.
“இது நல்ல ஐடியாவா இருக்கே? மாட்டை அடக்கணும்ன்னு சொன்னாய்ங்கன்னா, இவனை இழுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து ஓடிரனும்!” எனக் காத்தவராயன் சொல்ல,
“ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு! என்ன நடந்தாலும், நான் இந்த ஊரைவிட்டு வர்ரதா இல்லை. நான் இங்கிருந்து போகும் போது, என் மயிலைக் கூட்டிட்டுதேன் போவேன்.!”
“அடேய்! அரசி மயனே.. அவசரப்பட்டு சபதமெல்லாம் போடாதடா! எப்போ இவிங்கக் கிட்டே சிக்கி, பின்னங்கால், பிடரியில் பட ஓடப் போறோமோ தெரியாது.!”
“உன் தலையை அடகு வைச்சாவது, அந்தப் பொண்ணை மருதைக்குக் கூட்டிட்டுப் போயிருவேன்.!”
“ஆமா! என் தலையை தங்கத்தில் செஞ்சு ஒட்ட வச்சிருக்காய்ங்க! போனதும், தலையைக் கழற்றி வச்சிக்கிட்டு இந்தா ராசான்னு காசு கொடுத்துருவாய்ங்க! போடா லூசுப் பயலே..!” என காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்க,
“சரிடா டென்ருப்பீஸ்.. நான் அப்பறம் கூப்பிடுறேன்.! அழகரு வந்துருச்சு!” என அவள் இணைப்பைபைத் துண்டித்துவிட, தான் எடுத்த காணொளியை மீண்டும் திரையில் ஓடவிட்டவன், அதில் தெரிந்த மேகவர்ணாவின் பிம்பத்தைக் கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் பின்னால் நின்றிருந்த கருப்பனின் திமிலைப் பார்த்து அவனுக்குப் பக்கென்று இருந்தது.
“ஒருவேளை மாட்டை அடக்கச் சொல்லிருவாய்ங்களோ?” என முணுமுணுத்தவனின் விழிகள் மீண்டும் மேகவர்ணாவின் மீதே பதிய,
“அடியே.. என் மாமன் மவளே.. உன்னைக் கட்டம் கட்டி தூக்கறேன் டி!” என அவனின் தாடிக்குள் புதைந்த உதடுகள் மென்மையாய் யாருக்கும் கேட்கா வண்ணம் உச்சரித்தது.
தித்திக்கும் 🔥
அடுத்த அத்தியாயம் திங்களன்று மக்களே..
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள். ❤

