
மாயோன் 17
சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கு… ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணர் (யூரலாஜிஸ்ட்) நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர், சிறுநீரக மாற்று சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளர் என பலர் இருப்பர்.
இந்த சிகிச்சைக்கு தேவன் தேர்வு செய்த மருத்துவர்கள் அனைவரும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்… அதனால் எந்த வித பிரச்சனையும் வாராது என்று தன் நண்பனுக்கு வாக்களித்து விட்டு, சரத்தையும், நந்தினியும் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு தன்னுடைய வேலை விஷயமாக தேவன் வெளிநாடு கிளம்பி இருந்தான்.. அதனால் மருத்துவர்களுடன் சரத்தும், நந்தினியும், மட்டுமே மருத்துவனையில் இருந்தனர்…
சிகிச்சை நடக்கவிருக்கும் அந்த இடத்தின் தளம் முழுக்க, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களும், செவிலியர்களும்,மேலும் அந்த சிறுநீரகம் பெறும் நபரின் பெற்றோரும் மட்டுமே இருந்தார்கள்… அவர்களை தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லாமல் அந்த இடம் முழுக்க அமைதியாக இருந்தது…
நந்தினியோ அறுவை சிகிச்சை முடிந்து விட்டால் இந்த தகவலை எப்படி தன் குடும்பத்திற்கு தெரியப்படுத்துவது, எப்படி சொல்லி அவர்களுக்கு புரியவைப்பது என்ற யோசனையில் ஓரமாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள்…
கீர்த்தியின் நல்ல நேரமோ என்னவோ… மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை அறைக்குள் நுழைய தயாராகும் முன், அவர்கள் சிகிச்சை ஏற்பாட்டை பற்றி பேசிக்கொண்டிருந்த நேரம்… அங்கு இருந்த சிறுநீரக மருத்துவருக்கு ( யூரலஜிஸ்ட்) தொடர் அழைப்புகள் வர தொடங்கியது… முதலில் அதை நிராகரித்தவர் பின்னர் மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே, அழைப்பை ஏற்றார்… அழைப்பை ஏற்றவர் அப்படியே ஒரு கணம் உறைந்து போனார்..
எதிர் முனையில் அவரது மனைவியோ, அவர்களது மகனுக்கு விபத்து என்றும், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை சொல்லி அங்கு சேர்த்திருக்கிறோம் என்றும் கூற… அப்படியே சிலையாகி போனார்.. அவர்களுக்கு ஒரே மகன் என்பதால் வந்த பரிதவிப்பு அது.
” டாக்டர் எல்லாம் ஓகே தானே ? ” என்று அருகில் இருந்த மருத்துவர் ஒருவர் கேட்க..
” நான் உடனே கிளம்பனும் ” என்று கூறினார் சிறுநீரக மருத்துவர்…
” இன்னும் அரை மணி நேரத்தில் ஆப்ரேஷன் இருக்கு டாக்டர்.. ”
” இப்போ நான் இருக்குற மனநிலையில் என்னால கண்டிப்பா இந்த ஆப்ரேஷனை பண்ண முடியாது ” என்றவர் நிலைமையை கருதி, உடனே தனக்கு தெரிந்த மருத்துவருக்கு அழைத்து, தன் நிலைமையை எடுத்து கூறியவர்… இந்த அறுவை சிகிச்சையை தனக்கு பதிலாக அவரை செய்ய சொன்னார்.. அவரும் இவருடைய நிலைமையை புரிந்துகொண்டு சம்மதம் தெரிவிக்கவும், நேராக சரத்திடம் வந்து விஷயத்தை கூறினார் அந்த சிறுநீரக மருத்துவர்…
” இல்லை நீங்க தான் பண்ணி ஆகணும்… வேற ஆப்ஷன் இல்லை உங்களுக்கு.. அண்ணாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல்ல? ஏற்கனவே இது எவ்ளோ ரிஸ்க் ஆன ப்ராசஸ்ன்னு உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… கடைசி நேரத்தில் இப்படி சொன்ன என்ன அர்த்தம். டோனர்க்கு மயக்கமருந்து எல்லாம் கூட கொடுத்தாச்சு… நோ வே ”
” ஐ க்னோவ் சரத் எனக்கு தெரிஞ்ச ஒரு யூரோலஜிட்டை நான் வர சொல்லிட்டேன்.. அவரு சரியா ஆப்ரேஷன் பண்ணி முடிச்சிடுவாறு.. இது தேவன் சார் காதுக்கு போகாமல் பார்த்துக்கோங்க, எனக்காக ப்ளீஸ்.. என் மகன் டேஞ்சர்ல இருக்கான்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..”
” அவர் தான் இவ்ளோ சொல்லுறாரே சரத், பேசாமல் ஆப்ரேஷனை கேன்சல் பண்ணிடலாம் ” என்று நந்தினி கூற… அவளை முறைத்து பார்த்த சரத்
” தேவா அண்ணாக்கு போன் பண்ணி தரேன் பேசுறியா? ” என்று கூற நந்தினி மறுவார்த்தை பேசாமல் மௌனமாய் நின்றாள்…
” ஓகே.. அந்த டாக்டர் எப்போ வருவாரு? நீங்க தான் நம்பிக்கையானவர்ன்னு உங்களை வச்சு இதை பிளான் பண்ணா இப்படி பண்ணுறீங்களே… அந்த டாக்டர் எப்படி ? பேர் என்ன ? ” என்று சரத் கேட்கவும்…
” அவரை கண்டிப்பா உங்க எல்லாருக்கும் தெரியும் நெனைக்கிறேன் ‘ டாக்டர் விக்ரமன் ‘ ” என்றவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான்.. விக்ரமன்..
விக்ரமனது பெயரை கேட்டு சரத்தின் விழிகள் விரிந்து கொண்டது…
அந்த மருத்துவரோ எதிரில் வந்து கொண்டிருந்த விக்ரமனை கண்டு ” டாக்டர் ” என்று உரைக்க… பின் பக்கம் திரும்பி பார்த்த சரத்துக்கு கண்கள் மேலும் விரிந்து கொண்டது…
அவரது அருகில் வந்த விக்ரமன் அங்கிருந்த சரத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மருத்துவரிடம் பேச தொடங்கினான்…
” இதுல பேசன்ட்ஸ் டீடைல்ஸ் இருக்கு… விக்ரமன், பார்த்துக்கோங்க, அப்புறம் தேன்க்ஸ் ” என்றவர் அங்கிருந்து விரைந்து சென்றார் தன் மகனை காண..
விக்ரமனோ அங்கிருந்த மற்ற மருத்துவர்களிடம் அறுவைசிகிச்சை பற்றி பேச தொடங்கினான்…
சரத்துக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை… இந்நிலையில் விக்ரமனை ‘ வேண்டாம் ‘ என்று போக சொன்னால் நிச்சயம் அவனுக்கு சந்தேகம் வரும்… என்று உணர்ந்தவன் எதுவும் பேசமுடியாமல் நின்றிருந்தான்..
விக்ரமனது பார்வை வேறு அடிக்கடி சரத்தை தழுவி செல்ல.. அவனுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது…
கீர்த்தியின் ரிபோர்டில் அவளது வயது தொடக்கம் சிலவற்றை தங்களுக்கு ஏதுவாக மாற்றி தான் வைத்திருந்தான் தேவன்…
அதனால் அந்த பெண்ணை அடையாளம் தெரியாதவர்களால் நிச்சயம் இதில் சந்தேக பட முடியாது… அவளது சிறுநீரகமும் நன்றாக வளர்ச்சி அடைந்து இருக்க… யாருக்கும் அங்கு சந்தேகம் வர வாய்ப்பே இல்லை, என்ற நிலை தான். அதை எண்ணி சற்று மன நிம்மதி அடைந்தான் சரத்…
அனைத்து தவவல்களையும் பெற்று கொண்ட விக்ரமன்… தயார் ஆகி ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான்…
பேஷன்ட் டீடைலில் ஸ்ரூதி வயது 21 என்று குறிப்பிட பட்டிருந்தது… அதை பார்த்த விக்ரமன் தற்செயலாக பேசண்டின் முகத்தை பார்த்தவன்.. ஒரு கணம் அதிர்ந்து போனான்…
தான் கண்ட காட்சி உண்மையா? என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவன், விளக்கொளியை அவள் முகம் நோக்கி திருப்ப… அங்கு கீர்த்தியின் முகத்தை கண்டவனது மனம் படபடக்க தொடங்கியது…
உடனே சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்து. ஏதோ யோசனையிலும், பதற்றத்திலும் மீண்டும் அந்த பேஷன்ட் டீடைலை எடுத்து பார்த்தவன் ” சரத் ” என்று கத்தினான்…
அவனது செயல் கண்டு அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரும் விக்ரமனை புரியாமல் பார்த்தனர்…
அவனது சத்தம் கேட்டு சரத்துக்கும் இதயம் நின்று துடித்தது… பதட்டத்தில் நெற்றியில் வியர்வை வழிய விக்ரமனை ஏறிட்டு பார்த்தான்…
நேராக அவன் அருகில் வந்த விக்ரமன் ” என்ன வேலைடா பண்ணுறீங்க ? ” என்று கேட்டான். அவனது கேள்வியில் சரத் தடுமாறினாலும் பின் சுதாரித்து கொண்டு
” என்னசொல்லுற? புரியலயே?… ஆப்ரேஷன் பண்ண தானே வந்த நீ அந்த வேலையை மட்டும் பாரு ? ” என்று சரத் அதிகாரமாக பேச அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் விக்ரமன்…
” ஏய் ” என்று சரத் எதிர்த்து வர.. மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் விக்ரமன்.. அதனை கண்டு அதிர்ந்து நின்றாள் நந்தினி.
” உண்மையை சொல்லு அந்த பேசன்டோட ஏஜ் என்ன ? ” என்று விக்ரமன் கேட்க.. ஒரு கணம் அதிர்ந்த சரத் பின்னர் தன்னை நிலைபடுத்தி கொண்டு
” டாக்டர் தானே நீ அதுல பேசன்ட் டீடைல் இருக்குமே ? ” என்றவனை முறைத்து பார்த்தவன்…
” ஐ கனோவ், அவளுக்கு வெறும் பதினேழு வயசு தான், 21 வயசு இல்லை… எப்படி?எப்படி? ஸ்கூல் போற பொண்ணு சிறுநீரகம் தனம் பண்ணுதா? இப்படி ஒரு தப்பான விஷயத்தை பண்ணிட்டு நெஞ்சை நிமிர்த்தி பேசிட்டு இருக்க… இப்போவே போலீஸ் கம்பலைட் கொடுக்கவா? பதில் சொல்லுடா? ”
” விக்ரமா வேண்டாம் இதை இதோட விடு.. ”
” எப்படி விட முடியும்? இப்படி ஒரு விஷயம் பண்ணும் போது கிட்னி டொனேட் பண்ணுறவங்க அதுக்கு முழுமனதோடு சம்மதிக்கணும்.. அவங்க பிசிக்கலி, மெண்டலி, இதுக்கு தயாரா இருக்கணும்… பதினேழு வயசு பொண்ணுக்கு என்னடா முடிவெடுக்க தெரியும் ? ஒரு கையெழுத்து வாங்கிட்டா எல்லாம் சரியாகுமா? ”
” அந்த பொண்ணுக்கு பதினேழு வயசுன்னு நீ எப்படி சொல்லுற உன்னால ப்ரூப் பண்ண முடியுமா? தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணாத விக்ரமா? ”
” ஒஹ் நீங்க அப்படி வர்ரீங்களா? அந்த பொண்ணோட பேமிலி எங்க ? அப்போ அவங்க சம்மததோட தான் இது எல்லாம் நடக்குதா? இங்க தானே இருந்தாள் ” என்ற விக்ரமன் அங்கிருந்த நந்தினியை நோக்கி சொடுகிட்டு அவளை முன்னால் அழைத்தான்…
கீர்த்தியினை பார்த்த அடுத்த நாளே அவளது மொத்த குடும்பத்தை பற்றியும் அறிந்து கொண்டான் விக்ரமன்.
நந்தினி தயங்கியபடி முன்னால் வந்து நிற்க..
” ஆமா அந்த பொண்ணோட அக்கா சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குது.. இப்போ அதுக்கு என்ன?” என்ற சரத் நந்தினியை கை காட்ட.. அடுத்த நொடி விக்ரமனது பார்வை அவள் மீது அனலாய் பதிந்தது…
உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அவன் முன் வந்து நின்றவளை… கேவலமாக ஒரு பார்வை பார்த்த விக்ரமன் ” நீயெல்லம் ஒரு டாக்டரா? தப்பு பண்ணிட்டு இப்படி என் முன்னால கூனி குறுகி நிற்க அசிங்கமா இல்லை? இப்படி ஒரு விஷயத்தை எதுக்காக பண்ண? பணத்துக்காகவா? இப்படி தான் பணம் சம்பாதிக்கணும்னு இல்லை அதுக்கு எத்தனையோ வழி இருக்கு ” என்று அவன் கூறிய வார்த்தையின் அர்த்தம் நந்தினியை சுட்டது… அவன் கூறிய வார்த்தையை எண்ணியவளுக்கு இதயம் தணலில் விழுந்தது போல பொசுங்கியது… இருந்தும் சூழ்நிலை கருதி அவனை அமைதியாக எதிர்கொண்டாள்…
” இனி இந்த மாதிரி ஒரு தப்ப என்னைக்கு பண்ண நினைக்காத… ” என்ற விக்ரமன், சரத்தை பார்த்து ” உனக்கும் தான் புரியுதா ? ” என்றான் கட்டளையாக…
அங்கிருந்த அந்த மாற்று சிறுநீரகம் பெறுபவரின் பெற்றோர்களிடம் வந்த விக்ரமன் ” உங்க நிலைமை எனக்கு புரியுது, உங்க மகனை காப்பாத்துறது முக்கியம் தான் அதுக்காக இப்படி ஒரு தப்பான வழியில் உங்க மகனோட உயிரை காப்பாத்தி சந்தோஷமா இருக்க போறீங்களா ? இதனால் நாளைக்கு அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆன உங்களால் அந்த உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? ” என்ற விக்ரமனது கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை…
நிதானமாக அவர்களை பார்த்த விக்ரமன் ” உங்க மகனுக்கு நான் டோனர் ஏற்பாடு பண்ணுறேன்… உங்க மகனை நான் சொல்லுற ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைச்சிட்டு போங்க ” என்றவன், அவர்களை அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்..
பின்னர் அங்கிருந்த நந்தினியிடம்…
” உன் பேமிலிக்கு போன் பண்ணு ” என்று கட்டளையாக கூற… அவளும் வேறு வழியின்றி மகிழனுக்கு அழைக்க… அழைப்பை ஏற்றான் மகிழன்.
நந்தினி பேச வாய் எடுக்கவும் அவளிடம் இருந்து போனை பறித்து வாங்கிய விக்ரமன்… ” ஒரு ஆக்சிடெண்ட், உடனே *** ஹாஸ்பிட்டலுக்கு வாங்க ” என்று கூறி அழைப்பை துண்டிக்கவும் தான், நந்தினிக்கு மூச்சே வந்தது… எங்கு அவன் உண்மை முழுவதையும் மகிழனிடம் கூறி விடுவானோ? என்று பயந்தவளுக்கு அவனது இந்த செயல் சிறிது நிம்மதியை கொடுத்தது…
போன் செய்த அடுத்த அரைமணி நேரத்தில் பதறியயடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தான் மகிழன் …
மயக்க மருந்தின் வீரியத்தால் இன்னும் கீர்த்தி மயக்கத்தில் இருக்கவே, அவள் அருகில் வந்த மகிழன் துடித்து போனான்..
” என்ன ஆச்சு ” என்று அருகில் இருந்த நந்தினியிடம் அவன் கேட்க..
” அவங்க சொல்ல மாட்டாங்க? நான் சொல்லுறேன் ” என்ற விக்ரமன் ” பெருசா எந்த பிரச்சனையும் இல்லை, வெறும் மயக்கம் தான்.. வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க ரெண்டு இல்லை மூணு மணி நேரத்தில் கண் முழிச்சிடுவாங்க ” என்றவன் அருகில் இருந்த நந்தினியை ஆழ்ந்து பார்த்தவாறே ” கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க யாரையும் நம்பி விட்டுட்டு போகதீங்க ” என்று கூறியவனது கரம் கீர்த்தியின் கரத்தை ஒருகணம் அழுத்தி பிடித்தது, மெல்ல அவளது முகத்தை பார்த்தவனது இதழோரம் சிறு புன்னகை மலர… விட மனமில்லாமல் அவளது கரத்தில் ஒரு அழுத்தத்தை கொடுத்துவிட்டு பின்னர் விடுவித்தான்…
நந்தினியும், மகிழனும் கீர்த்தியை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றபிறகு…
” சரத் இனி இந்த மாதிரி தப்பு பண்ணனும்னு சொல்லி கனவுல கூட நினைச்சு பார்க்காத, எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. இது உன் அண்ணணோட தலையீடு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை, அது எனக்கு நல்லா தெரியும்.. அவர் கிட்ட சொல்லு செய்யுற தொழிலுக்கு நேர்மையா இருக்க தெரியாதவன்.. வாழ தகுதி இல்லாதவன்னு.. ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் விக்ரமன்…
நிச்சயம் இதை ஒரு பெரிய பிரச்சனையாக விக்ரமனால் மாற்றி இருக்க முடியும்.. ஆனால் அப்படி செய்தால் அது கீர்த்தியையும் சேர்த்து பாதிக்கும் என்று எண்ணியவன்… இதனை இத்தோடு விட்டுவிட்டு சென்றிருந்தான்…
மருத்துவமனையில் நடந்த விஷயத்தையும், விக்ரமன் கூறியதையும் வார்த்தை மாறாமல் சரத் தேவனிடம் ஒப்பிக்க.. தேவனது கண்கள் கோவத்தில் சிவக்க ஆரம்பித்தது…
ஏற்கனவே இப்போது தான் அவனது நண்பன் போன் செய்து ‘ உன்னை நம்பி என் மகனுக்காக ஒரு உதவி கேட்டதுக்கு என்னை இந்த அளவுக்கு அவமான பட வச்சுட்டியே… ஏன் தான் உன்கிட்ட இந்த உதவியை கேட்டோம்னு இருக்கு… உன்னால முடியலனா முடியலன்னு சொல்ல வேண்டியது தானே .. இனிமேல் எந்த உதவிக்காகவும் நான் உன்னை தேடி வரமாட்டேன்.. நீயும் அதே மாதிரி என்னை தேடி வராத.. சொன்ன சொல் காப்பாத்த தெரியாதவன் எதுக்கு வாக்கு கொடுக்குற? உன்கிட்ட உதவி கேட்டதுக்கு முதலே நான் விக்ரமன் சொன்ன ஹாஸ்பிட்டலுக்கு போயிருக்கலாம் ‘ என்று கண்டபடி திட்ட , அந்த அவமானமே இன்னும் தேவனது மனதில் அழியாமல் இருக்க… இப்போது சரத் கூறியதும் சேர்த்து விக்ரமன் மீது கொலை வெறி உருவானது… அழைப்பை துண்டிந்தவன்,
” உன்னை விட மாட்டேன் விக்ரமா… உன்னை கதற வைப்பேன்.. உனக்கும் வலிக்கும், வலிக்க வைப்பேன்… நீ அழுவடா, உன்னை துடிக்க வைக்குறேன்டா ” என்று வன்மத்துடன் மனதில் கருவி கொண்டான் தேவன் சக்ரவர்த்தி..
*******
எப்போதும் போல இந்த சனிக்கிழமையும் அதியனை காண வந்தான் விக்ரமன்…
நடந்த விஷயத்தை சரத்தோ, நந்தினியோ, தேவனோ யாரும் அதியனிடம் கூறவில்லை… இது போன்ற விஷயம் எதுவும் அதியனது காதிற்க்கு செல்லாது…
வெளியே விக்ரமன் நிற்பதை கண்ட சரத், கோவம் கொண்டு அதியனது கரத்தை பற்றி கொண்டு கார் நோக்கி அழைத்து வந்தான்…
விக்ரமனோ அதியனிடம் பேச வர … அதனை அறிந்து கொண்ட அதியன் சரத்தின் கரத்தில் இருந்து தனது கரத்தை விடுவித்தபடி.. நேராக விக்ரமனை நோக்கி வந்தான்.
அதியனே மனம் மாறி தன்னை தேடி வருகிறான்! என்று நம்பிய விக்ரமனது இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது…
அதனை பொய்யாக்கும் பொருட்டு விக்ரமனுக்கு பின்னால் நின்ற, தன்னுடைய நண்பனை அணைத்து கொண்டு நலம் விசாரித்தான் அதியன்… அதனை கண்டு சரத் வாய்விட்டு சிரித்தான்.
ஆனால் விக்ரமனது இதழ்கள் வலி நிறைந்த புன்னகையை உதிர்த்தது.. அதனை ஓரக்கண்ணால் கண்ட அதியனோ கண்களை மூடி திறந்து, பின்னர் தன் நண்பனை வழி அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்து செல்ல பார்க்க… அவனது கரத்தை விரைந்து பிடித்தான் விக்ரமன்.
” அதியா பேசணும்டா ” என்று விக்ரமன் கூற…
” ம்ம்ம் பேசுங்க ஆனால் என்கிட்ட பேச என்ன இருக்கு ? ”
” அதியா ப்ளீஸ்… ஏன் உன் லைப்பை கெடுத்துக்கிற? நீ இப்போ வாழுறது வாழ்க்கை இல்லைடா.. பொண்ணுங்க, தண்ணீ, இது தான் வாழ்க்கைன்னு நெனைக்கிறியா? இதையும் மீறி வாழ்க்கையில் எவ்ளவோ இருக்குடா ”
” உண்மை தான் ஆனால் அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் ”
” அதியா நான் சொல்லுறதை புரிஞ்சுக்க.. என் கூடவா நம்ம வீட்டுக்கு போகலாம் ”
” நம்ம வீடா? அது எது ? அங்க எனக்கு யார் இருக்கா? ”
” அதியா இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காதடா, அதெல்லாம் மறந்திடு. அப்போ எனக்கு வெறும் பதினோரு வயசுடா? என் அப்பாவை மீறி என்னால என்ன பண்ண முடியும்னு நீ நினைக்கிற? ” என்று விக்ரமன் கேட்க.. விரக்கத்தியாக சிரித்த அதியன்…
” எல்லா செயலுக்கு பின்னாடியும், ஒரு ஒரு காரணம் இருக்கும்… ஆனால் அந்த காரணத்தினால எந்த வலியையும் மாத்தவோ, மறைக்கவோ முடியாது… இப்போ என்ன சொன்ன? உனக்கு பதினோரு வயசு, என்ன பண்ண முடியும்ன்னு கேக்குற? சரி தான் உன்னால என்ன பண்ண முடியும்? ஆனால் அப்போ எனக்கு வெறும் ஏழு வயசு தான் விக்ரமா? நீ விட்டு போகும் போது எனக்கு மனசு வலிச்சுதே… உனக்கு ஏன் வலிக்கல? ”
” எனக்கும் தான்டா வலிச்சுது… ஆனால் அப்போ எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல ? அதான் போக வேண்டியது ஆகிடுச்சு”
” ஒஹ் அப்போ இப்போ மட்டும் ஏன் வந்த? ”
” அதியா.. அங்க இருக்க வசதிக்கு நீ சந்தோஷமா இருப்பன்னு நெனைசோம் டா? ” என்று விக்ரமன் கூற.. கலங்கிய கண்களுடன் சத்தமாக சிரித்த அதியன்…
” அப்படி பார்த்தால், இப்போவும் அங்க பணம் இருக்கு… நான் வசதியா தான் இருக்கேன், விதவிதமான ட்ரஸ் ,கார்.. நேரத்துக்கு ஒரு பொண்ணு.. நிமிஷத்துக்கு ஒரு போதைன்னு ரொம்ப வசதியாவே இருக்கேன்.. அப்படி இருந்தும் நீ ஏன் எனக்காக வருத்தபடுற.. சந்தோஷ பட வேண்டியது தானே, எனக்கு தான் எல்லாமே இருக்கே, ஒரு மனுசன் சந்தோஷமா வாழ இது மட்டும் இருந்தால் போதும் தான? ”
” அதியா ஏன்டா இப்படி பேசுற? ப்ளீஸ் எங்கூட வா ” என்று விக்ரமன் உருக்கமாக கேட்க…
அதியனிடம் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது…
” அதியா” என்று விக்ரமன் அழைக்க ஒருகட்டத்தில் பொறுமை இழந்தவன்..
” அது தான் அன்னைக்கு குடும்பமா சேர்ந்து, வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டீங்க இல்லை.. இப்போ மட்டும் என்ன புதுசா பாசம் பொங்குது ” என்று கேட்டவனின் கண்களில் இருந்து தன்னையும் மீறி ஒரு துளி கண்ணீர் வழிந்தது.. அவன் அனுபவித்த தனிமையின் ரணம் அவனது கண்ணீரில் வெளிப்பட்டது…
” நீ நல்லா இருக்கனும்னு தான்டா ” என்று விக்ரமன் கூற… இகழ்ச்சியாக சிரித்தான் அதியன்..
” ஒஹ் அப்படியா இப்போவும் நான் நல்லா தான் இருக்கேன்.. எனக்கு என்ன குறை.. இப்போ மட்டும் ஏன் என்னை வர சொல்லுற? ”
” இது வாழ்க்கை இல்லடா நீ தப்பான வழியில் போய்ட்டு இருக்க ”
” நான் இந்த வழியில் போக காரணமே நீ தானே… நீ என்னை விட்டு போகமா இருந்திருந்தால் நான் இப்படி ஆகி இருக்க மாட்டேன், வேண்டாம் என்னை பேச வைக்காத இதுக்கு மேல பேசினா எங்க கதறி அழுதிடுவேனோன்னு பயமா இருக்கு” என்று அதியன் கூற அடுத்த நொடி அவனை அணைத்து கொண்டான் விக்ரமன்…
அதியனது சூடான கண்ணீர் விக்ரமனது தோள்களை நனைத்தது… அதியனோ எந்த உணர்வுமின்றி அவனது அணைப்பில் ஜடமாக நின்றிருந்தான்…
” நீங்க விட்டு போன அப்புறம் மூணு நாள் நான் சாப்பிடல, என்னை சாப்பிடுன்னு சொல்ல கூட அங்க யாரும் இல்லை… தலை சுத்தி மயக்கம் வந்துச்சு அப்போ கூட என் உதடு உன் பேரை மட்டும் தானே விக்ரமா சொல்லிச்சு… அப்போவும் நீ வரலையே விக்ரமா! எந்த நம்பிக்கையில் நீ என்னை அங்க விட்டுட்டு போன? ” என்று தன்னை மறந்து கேட்ட அதியன் பின்னர் தன்னிலை உணர்ந்து வேகமாக விக்ரமனை விட்டு விலகி நின்றான்…
” எல்லாம் போகட்டும்… இப்போ வா நம்ம வீட்டுக்கு போகலாம்டா ”
” எதுக்கு ? இதுக்கு மேல எனக்கு யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம்… காலத்தால கூட சில வலிகளுக்கு மருந்தாக முடியாது.. எனக்காக நீ ஒன்னே ஒன்னு பண்ணு அது போதும் “என்று அதியன் கேட்க சந்தோஷமான விக்ரமன்
” சொல்லுடா ” என்று ஆர்வமாக கேட்க…
” இனி என்னை பார்க்க வராத என்னை பார்க்க முயற்சி பண்ணாத.. நான் நல்லா இருக்கணும்னு நீ நினைச்சா என்ன விட்டு போய்ட்டு ” என்று அதியன் கூற அதிர்ந்து நின்றான் விக்ரமன்…
பின்னர் விக்ரமனது கரத்தினை எடுத்து தன் தலை மீது வைத்த அதியன்.. ” இது என் மேல சத்யம்… நீ என்னை பார்க்க வர்றது இதுவே கடைசியா இருக்கட்டும் ” என்று கூற…
” அதியா என்னடா இது ? ”
” வேண்டாம் விக்ரமா.. இப்போ நான் உன் கூட வந்த அப்புறம், மறுபடியும் நீ என் கையை விடவேண்டிய நிலை வந்து.. நீ கையை விட்டுட்டா… நான் சத்யமா உயிரோட இருக்க மாட்டேன் விக்ரமா .. போய்டு என் முகத்துல முழிகாமல் போய்டு.. என் மேல சத்யம் பண்ணி இருக்க.. எனக்காக இந்த சத்யத்தையாவது காப்பாத்து ” என்ற அதியன் அவனை திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றான்.
செல்லும் அவனை மன வலியுடன் பார்த்த விக்ரமன், மொத்தமாக நொறுங்கி போனான்.
இதுவே அவர்கள் இருவரது இறுதி சந்திப்பாகும்!!!
******
கருமேகம் சூழ்ந்து அடைமழை பொழிந்து கொண்டிருக்க.. அதியனோ அவனது காரில் பாடல்களை கேட்டவாறே வந்து கொண்டிருந்தான்…
யாருமில்லா பகுதியில் சாலையின் இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருந்தது…
தனியாக பயணம் செய்யும் போது அதியன் எப்போதும் நிதானமாக தான் வாகனத்தை ஓட்டி செல்வான்..
அதே போல நிதானமாக வாகனத்தில் வந்தவன் எதையும் கவனிக்காமல், சாலையில் வந்துகொண்டிருக்க… ஓரத்தில் நின்ற காரை அவன் கவனிக்காமல் செல்ல, இருள் சூழந்த அந்த இடத்தில் அந்த காரின் விளக்குகள், மின்னி மின்னி எரிந்தது…
ஏதோ சிந்தனையில் வந்தவன் அந்த காரை கடந்து செல்ல போகும் நேரம் அங்கிருந்த நீரில் கார் செல்லவும், அந்த நீர் இருபக்கமும் சிதறியது…
அந்த நீர் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது தெறிக்க… கோவம் கொண்டவள் ” டேய் பைத்தியகாரா ஆள் நிக்கிறது கண்ணு தெரியல இப்படியா வண்டியை ஓட்டுவ? ” என்று கத்தினாள்…
அதனை கேட்டு சட்டென்று வண்டியை நிறுத்திய அதியன், காரினை பின் நோக்கி எடுத்து வந்தான்…
கார் கண்ணாடியை கீழே இறக்கியவன் அங்கு நின்றிருந்தவளை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தான்.
முதல் பார்வை…
அவள் மீது பதிந்த
அந்த முதல் பார்வை?
அவன் வாழ்கையின்
கடைசி பிழையாகி போனது!

