Loading

அத்தியாயம் 21

தெருமுனையில் கால் கடுக்க மனைவிக்காகக் காத்திருந்தான் விஜயன். அங்கு வந்து அரைமணி நேரத்திற்கும் மேல் கடந்துவிட்டது.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு, “வீட்டுல ரொம்ப போர் அடிக்கிது விஜி. வேலைக்குப் போகட்டுமா.? நான் முதல்ல ஒர்க் பண்ண இடத்துலயே, என்னை இன்னும் கூப்பிட்டுக்கிட்டு தான் இருக்காங்க!” என அவள் கேட்டிட, 

‘இல்லத்திலேயே இருந்தால் மனைவியின் எண்ணம் தறிகெட்டு ஓடும். பணியின் வாயிலாக அவளின் சிந்தனையை திசைத் திருப்பி விடலாம்!’ என்று ஆடவனும் சம்மதித்தான்.

துவக்கத்தில் அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவளிடம் வெவ்வேறு மாதிரியான மாற்றங்கள்.

ஒன்பது மணிக்கே பணி முடிந்து விடும். ஆனால் பதினோரு மணிக்குத்தான் இல்லம் வந்து சேர்ந்தாள். மூன்று வேளை உணவும், வெளியில் தான் என்றானது. கால தாமதத்தை அவனிடம் உரைப்பது என்பது முற்றிலுமாய் இல்லை.

‘பெண்கள் பொழுதோடு இல்லத்திற்கு வந்துசேர வேண்டும், அனைத்தையும் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும்!’ என எதிர்பார்க்கும் ஆண் இல்லைதான் அவன்.‌ எனினும் துணைவியின் பாதுகாப்பு என்பது மிக அவசியமானதாய் தோன்றியது.

சஞ்சனாவின் ஆண் பெண் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களைப் பற்றி எல்லாம் ஓரளவிற்கு அவளிடமே கேட்டு அறிந்து கொண்டான். அதனால் அச்சம் என்று ஏதும் இல்லை. 

‘இவள் ஏன் இப்படிச் செய்கிறாள்?’ என்ற கவலை மட்டுமே!

ஆனால் இவனிற்கு மாறாக, அவளுடன் சம்பந்தப்பட்ட எவரிற்குமே விஜயனைப் பற்றி எதுவும் தெரியாது. சஞ்சனா யாரிடமும் தனது‌ கணவனைப் பற்றி உரைக்க விரும்பவில்லை.

உடன் பணிபுரியும் ஆணின் வாகனத்தில் வந்து அவள் இறங்கிட, வீதியின் பக்கவாட்டில் நின்றபடி நடப்பதைப் பார்த்திருந்தான் ஆடவன்.

இரண்டு நிமிடம் எதையோ பேசி கையசைத்து விட்டு, வீட்டை நோக்கி நடந்தாள்.

சில நொடிகளின் இடைவெளியில், “சஞ்சு.” என்றபடி விஜயன் அருகே வர, “இங்க என்ன செய்யிற.?”

“லேட் ஆகிடுச்சு‌. உன்னைக் காணோம். அதான் பார்க்கலாம்னு வந்தேன்.”

“ம்ம்..”

“சாப்பிட்டியா சஞ்சு.?”

“ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து சாப்பிட்டேன்.”

“ஏன் இவ்வளவு லேட்டா வர்ற?”

“சீக்கிரமா வந்து என்ன செய்ய?”

“என்ன செய்யனு கேட்டா? உனக்குனு ஒரு வீடு இருக்கு. நான் இருக்கேன்.”

“விஜி..‌ அதை வீடுனு சொல்லாத. ஒரு ரூம், அவ்வளவு தான். நாம தங்கி இருக்கிற நாலு சுவரைத் தாண்டி அந்த வீட்டுக்குள்ள வேற எங்கேயும் போக எனக்கு அனுமதி இல்ல. வீடுக்கும் ரூமுக்கும், இப்ப வித்தியாசம் தெரியிதா உனக்கு? அப்புறம் உன்னைப் பத்திச் சொல்லணும்னா, நீ ரூம்மெட். போதுமா.?”

அவன் திகைத்து, “என்ன பேச்சு இது சஞ்சு?”

“ஏன், நான் சரியாத்தான் பேசுறேன்.”

“நாம கல்யாணம் செஞ்சிருக்கோம். நம்ம மேரேஜ் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு. ரூம் மெட்டுனு எந்த அர்த்தத்துல சொல்லுற ?”

“மேரேஜுங்கிறது சர்ட்டிஃபிகேட்ல இருந்தா போதுமா? சேர்ந்து வாழணும்‌. இல்லேனா அதுக்கு எந்த மீனிங்கும் இல்ல.”

“இதைப்‌ பத்தி நாம ஏற்கனவே பேசி இருக்கோம்‌.”

“நாம பேசுனோமா? என்ன பேசுனோம்? எப்ப? அப்படி ஒன்னு நடந்ததா, ஞாபகம் இல்லையே? எனக்குத் தேவையானது எது? லைஃபை பத்தின ஒப்பினியன், இதெல்லாம் கேட்டியா? நீயா ஏதோ சொல்லி, அதையே முடிவு செஞ்சிட்ட.”

தாம்பத்திய வாழ்வைப் பற்றிய பேச்சு வந்த பொழுது, அவளிற்கு தான் சமாதானம் உரைத்தது நினைவிற்கு வந்தது விஜயனிற்கு.

உண்மை தான்! 

‘மனைவியின் எண்ணம் யாது? தேவை என்ன? அதனை ஈடுசெய்ய எவ்வகையில் முயற்சிக்கலாம்?’ என எதையும் கலந்து ஆலோசிக்கவில்லை. கருத்துகளையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

அன்றைய தினம், ‘தனது நிலைப்பாடு இதுதான்!’ என்பதோடு நிறுத்திக் கொண்டான் ஆடவன்.

‘இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் இருந்தவனைக் குடும்ப வாழ்விற்குள் இழுந்து வந்து விட்டதாய், சஞ்சனாவின் மீது குற்றம் சாட்டினாயே? நீ, தற்போது செய்து கொண்டிருப்பது என்ன? இலக்கு ஒன்று இருக்கும் பொழுது, அதிலிருந்து விலகி மனதை அலைபாய விட்டு காதலை அனுமதித்தது தவறு இல்லையா? தடம் மாறிச் சென்றது, நீ அல்லவா?’ எனச் சிந்தனையானது வினா எழுப்பியது.

அவன் சற்று தடுமாறாமல் இருந்திருந்தால், சஞ்சனாவுடனான அறிமுகம் காதலின் எல்லையைத் தொடாமல், நட்போடு நின்று போயிருக்கலாம். 

இல்லையேல்.. வீட்டில் இருந்து வெளியேறி வந்தவளின் பெற்றோரைச் சந்தித்துப் பேசி, அச்சூழலை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு!

உள்ள உணர்வுகளிற்கு கடிவாளம் இடாமல் அதன் விருப்பத்திற்கு இயங்க விட்டதன் விளைவு, திருமண பந்தம் எதிர்கால வாழ்வு இரண்டும் கரங்களுக்குள் அகப்படாமல் நழுவி செல்வதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறான் விஜயன்.

காதலில்.. மனதிற்குத் தடுப்பணை போடாது, உடலைக் கட்டுப்படுத்துவது என்பது ஆழம் தெரியாமல் கண்ணைக் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கும் கதை தான். அதிர்ஷ்டம் இருந்தால் காலமும் இணங்கினால், வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளலாம். எனினும் அதற்குத் துணையின் அனுசரணை அவசியம். 

இல்லையேல் தோல்வியும் ரணமும் மட்டுமே எஞ்சும்.

‘முன்பே இதை எல்லாம் சிந்திக்காது போனேமே?’ என இத்தருணத்தில் தன்னையே நொந்து கொண்டான் ஆடவன். ஆனாலும் கரம் பற்றிய பாவையை விட்டு விலக மறுத்தது, காதல் கொண்ட மனம்.

அதனால் துணைவியைச் சமாதானம் செய்யும் விதமாய், “நான்‌தான், கொஞ்சம் பொறுத்துக்கோனு உனக்கு பதில் சொல்லி இருந்தேனே சஞ்சு?” எனப் பேச முயன்றான்.

சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்ன பதில்? என்னை லஸ்ட்டுனு சொன்னியே அதுவா.?”

திகைத்து நின்றான் விஜயன்.

அன்று உரையாடும் போது சாதாரணமாய் தெரிந்த ஒரு வார்த்தை, இன்று அவளின் வாய் மொழியாய் கேட்கும் பொழுது பெரும் வலியைத் தருவதாய் இருந்தது.

எந்தப் பெண்தான்.. நேசிக்கும் ஆண் தன்னை, ‘தேகத்தின் இன்பத்திற்கு ஏங்குபவள்!’ என உரைத்தால் ஏற்றுக் கொள்வாள்?

நொடிப் பொழுதில், உடைந்து போனான்.

உடலும் உள்ளமும் குறுகிட, “சஞ்சு, நான் சொன்னதுக்கான மீனிங் அது இல்ல. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட.” என்று அவளை அமைதிப்படுத்த முயற்சித்தவனின் குரல் நடுங்கியது.

“ஆமா விஜி, தப்பா தான் புரிஞ்சுக்கிட்டேன். நான் வேலைக்குப் போறேன்‌. சம்பாதிக்கிறேன். எனக்கானதை நானே செஞ்சுக்கிறேன். நீ எனக்காக என்ன செஞ்ச, சொல்லு? எப்படி உன்னை என்னோட ஹஸ்பெண்டுனு ஏத்துக்க முடியும்.?”

உண்மையில் அவளின் வினாக்களிற்குப் பதில் உரைக்கும் திடம் விஜயனிடம் இல்லை.

‘என்னென்ன செய்தான்?’ என்று ஒரு நிமிடத்தில் பட்டியலிட்டு விட முடியும். ஆனால் அப்படிச் செய்தால், அது எப்படிக் காதலாகும்.?

‘உணர்வுகளைக் கட்டுக்குள் வை!’ என அவன் உரைத்ததற்குப் பின்னிருக்கும் காரணத்தை வேறு விதமாய் புரிந்து கொண்டவளை, எந்த விளக்கத்தைக் கொடுத்தும் சமாதானம் செய்திட முடியாது என்று தோன்றியது.

இப்பொழுது, ‘சொற்களை நிதானம் இன்றி கையாண்டது தவறு!’ என்று ஆடவனிற்குள் இருக்கும் நியாயவாதி வேறு புகார் உரைத்தான். அதனால் உண்டான குற்ற உணர்வின் காரணமாய், அதற்கு மேல் எதுவும் பேசாது அவளை மௌனமாய் நோக்கினான் விஜயன்.

“எனக்கு என்னமோ, நீ என்னை லவ் பண்ணவே இல்லையோனு தோணுது விஜி. அதுனால தான் என்கூட லைஃபை ஸ்டார்ட் பண்ண, இவ்வளவு யோசிக்கிற. நான் மட்டும் தான், உன்னை விரும்பி இருக்கேன் போல. வீட்டை விட்டு வெளியே வந்து ஃபோர்ஸ் பண்ணதால, நீ மேரேஜ் பண்ணி இருக்க. இல்லேனா நம்ம கல்யாணமே நடந்து இருக்காது‌. அப்படித்தான?”

“நீ சொன்னது உண்மை தான் சஞ்சு. ஒருவேளை நீ வீட்டை விட்டு வெளிய வரலேனா, இப்ப நம்ம கல்யாணம் நடந்திருக்காது!” என இம்முறை மனதில் இருந்ததை மறைக்காது, வெளிப்படையாய் உரைத்தான்.

அவளின் கண்களில் லேசான நீர்ப்படலம் உருவாக, “ஓ.. தேங்க்ஸ்‌. இப்பவாது உண்மையைச் சொன்னியே.?”

“ஆனா, நான் உன்னை லவ் பண்ணுறது நிஜம். அது என்னைக்கும் மாறாது‌.”

“டோண்ட் செட் லை விஜி!”

“சஞ்சு..” எனப் பேச முற்பட, அவனிற்கு அதற்கான வாய்ப்பு அளிக்காது, “உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? அப்பவும் இப்பவும்.‌ ஆனா கஷ்டமா இருக்கு, உன்கூட இப்படி இருக்கிறது!” என்றுவிட்டு வேகமாய் நடந்தாள் சஞ்சனா.

தெருவின் நடுவே அரை இருளில் நின்று அவளைப் பார்த்திருந்த ஆடவனின் கண்களில் இருந்து சிறு துளிகள் வெளியேறி, எவருக்கும் தெரியாமல் அப்படியே மறைந்து போனது‌.

*

அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்தாள் கனி. வாயிலில் நின்று இருந்தாள் ரம்யா.

“ஹாய் கனி, எங்க அவன்.?” என்றபடி அவள் உள்ளே வர, “இன்னும் அவரு வரல.”

“வரலயா.?”

“ம்ம்.”

“மணி பத்தாச்சே? கால் பண்ணியா நவனுக்கு.?”

அவள் மறுத்துத் தலை அசைக்க, “ஏன் பண்ணல?” என வினவியவாறே நண்பனிற்கு அழைப்பு விடுத்தாள்.

மறுபுறம் தொடர்பிற்கு வந்தவன், “என்ன இம்சை?”

“இந்நேரம் வரைக்கும் என்னடா செய்யிற?”

அவள் தனது கணவனுடன் உரையாடுவதை கேட்க மனம் இல்லாது, ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அறைக்குள் சென்றாள் கனி.

“ஒர்க் முடியல ரமி.” என நவன் தோழிக்குப் பதில் உரைக்க, “அடப்பாவி! கல்யாணம் ஆன ரெண்டு மாசத்துலயே பொண்டாட்டியை இப்படித் தனியா விட்டிருக்க?”

“ஏன், என்ன செய்யணும்கிற? வேணும்னா, கம் போட்டு என்கூட ஒட்ட வச்சுக்கிட்டே சுத்தவா?”

“ஹேய்.. இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு. வேணும்னா ட்ரை பண்ணிப் பார்றேன்?”

“நக்கலு? நேர்ல வந்தேன்னு வச்சுக்கோ, நடு மண்டையில நச்சுனு ஒன்னு போட்டு விட்டுடுவேன்!”

“போடா.. போட.. அது வரைக்கும் நாங்க சும்மா வேடிக்கை பார்ப்போமாக்கும்.?”

மெலிதாய்ச் சிரித்தவன், “சரி, எதுக்கு இப்ப கால் பண்ண?”

“வீட்டுக்கு வந்தேன். கனி தனியா இருந்தா. உன்னை ஆளைக் காணோம், அதான்.”

“கதிர் எங்க.?”

“ப்ச்ச்..”

“என்ன ரமி.?”

“அவன் வீட்டுக்கு வரலடா.”

“எங்க இருக்காரு.?”

“ஆஃபிஸ்ல.”

“பேசுனியா நீ?”

“ம்ம்..”

“என்ன சொன்னாரு?”

“இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டான்னு நினைக்கிறேன். எனக்கு லோன்லியா ஃபீல் ஆச்சு. அதான் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்.”

தோழியின் மனநிலையை உணர்ந்தவன் அதை மாற்றும் விதமாய், “இதோ கிளம்பிட்டேன். சீக்கிரமே வந்திடுறேன். உனக்கு எதுவும் வாங்கிட்டு வரணுமா?”

“ம்ம்.. பிரியாணி வாங்கிட்டு வர்றியா?”

“அட கிறுக்கு! இந்த நேரத்துலயா?”

“ஹேய் ஹேய் ப்ளீஸ்டா.. சாப்பிடணும் போல இருக்கு. எனக்கு அப்படியே சிக்கனும் வேணும்.”

“டிரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. நேரம் கெட்ட நேரத்துல கண்டதையும் முழுங்கி உடம்பை ஸ்பாயில் பண்ணிக்காத!”

“ரொம்ப டவுனா இருக்கேன்டா. எனக்குப் பிடிச்ச பிரியாணி சாப்பிட்டா பிரைட் ஆகிடுவேன். ஒருநாள் தான, உடம்புக்கு ஒன்னும் ஆகாது.”

“சரி சரி..” எனச் சிரித்தவன் பேச்சை முடித்திட, கனியை அழைத்தாள் ரம்யா.

“என்ன அக்கா?”என்றபடி அவள் வெளியே வர, “டிஃபன் பண்ணிட்டியா?”

“இனிதான். வேலை முடிஞ்சு கிளம்பும் போது எனக்கு ஃபோன் போட்டு என்ன வேணும்னு சொல்லுவாரு. நான் செஞ்சு வைப்பேன்.”

“ஆஹான்? என்ன ஒரு பொண்டாட்டி? அப்படியே புல்லரிக்கிது போ. நான் எல்லாம், ஒருநாள் கூட அப்படி செஞ்சது இல்ல. எனக்கு வேணும்கிறதை சமைச்சு சாப்பிட்டுட்டு, மீதியைக் கதிருக்கு வச்சிடுவேன்.”

“உங்க வீட்டுக்காரவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

“என்ன சொல்லுவான்? அவ்வளவு தைரியம் எல்லாம் இல்ல, அவனுக்கு!”

கனி மறுமொழி எதுவும் உரைக்காமல் அமைதியாய் பார்த்திருக்க, “எதுவும் சமைக்க வேணாம். நவனை, நான் வெளிய இருந்து வாங்கிட்டு வர சொல்லிட்டேன், இன்னைக்கு உனக்கு ரெஸ்ட். கெஸ்ட் ரூம் ஃப்ரீயா தான இருக்கு? நான் யூஸ் பண்ணிக்கிறேன்!” என்றுவிட்டு அவளின் பதிலைக் கூட எதிர்பாராமல், விருந்தினர் அறைக்குச் சென்றாள் ரம்யா.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
29
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்