Loading

அத்தியாயம் 19

 

சஞ்சனாவின் உடல் மொழியில் தென்பட்ட அலட்சிய மனோபாவம் விஜயனின் உணர்வுகளை வெகுவாய் தாக்க, “உன்னோட ஹஸ்பெண்ட் யாருனு, எதுவும் விசாரிக்கலயா சஞ்சு?”

 

சற்றே கனமாய் செவியினை கீழ்ப்பக்கமாய் இழுத்தபடி நடனமாடிக் கொண்டிருந்த காதணியை கழட்டிய படி அவனைப் பார்த்தவள், “அதெப்படி கேட்காம இருப்பாங்க?”

 

“என்ன சொன்ன நீ?”

 

“நம்ம ஜுவல்லரி பேரைச் சொல்லி, அதைப் பார்த்துக்கிறனு சொன்னேன்.”

 

“இது, பொய் ஆச்சே?”

 

“உங்க அப்பாவுக்கு அடுத்து, அது உனக்குத்தான? இதுல பொய் எங்க இருந்து வந்துச்சு?”

 

அவள் உரைப்பது சரிதான்‌. சிவநாதன் அப்படி ஒன்றும் மகனை விடுத்து மருமகனிடம் முழுமையாய்ச் சொத்துகளைத் தூக்கிக் கொடுக்கும் குரூர மனிதர் அல்ல. விஜயனுமே அதை அறிவான். ஆனால் அதை வெறும் சொத்தாய் மட்டும் பார்ப்பதில் தான் அவனிற்கு உடன்பாடு இல்லை.

 

சிவநாதனிடம் இருந்து மகனிற்கு என்று தரப்படும் ஒவ்வொன்றும், தந்தையாய் அவரது அன்பின் மொழி பெயர்ப்புகள், அக்கறையின் சாட்சியங்கள். அதனை வருமானம் ஈட்டித்தரும் ஒரு கடையாய் விஜயனால் பார்க்க இயலாது. அவர் தரும் பொழுது நல்முறையில் நடத்தி பாதுகாத்திட வேண்டும் என்ற எண்ணம் அவனுள்ளுமே இருந்தது.

 

ஆனால், ஆடவனின் அடையாளம் அதுவல்ல.‌ சுயமாய் ஒன்றை தனக்கென்று உருவாக்கிக் கொள்ளுதல் தான் ஒருவரின் அடையாளமாய் மாறும்.

 

என்னதான் பரம்பரை பரம்பரையாய் கொள்ளுத் தாத்தனும் தாத்தனும் தந்தையும் சொத்தைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றாலும், அந்தத் தலைமுறையில் அவன் என்ன செய்கிறானோ, அதுதான் அவனது பெயரைச் சொல்லும்! மற்ற அனைத்தும் அவனிற்கு முந்தைய தலைமுறையினரின் பெயரையே தாங்கி நிற்கும்.

 

“என்னோட அடையாளத்தையே மாத்தீட்டியே சஞ்சு?” என வலிந்த புன்னகையுடன் உரைத்தவனது குரலில், பெருத்த ஏமாற்றம் எஞ்சி நின்றது‌.

 

அதை உணர்ந்திடாத அவனின் துணைவி, “என்ன அடையாளம்? உங்க அப்பாவோட கடைப் பேரு தான, உனக்கு அடையாளம்? ஹோட்டல்ல சர்வரா இருக்க, லைப்ரரில வேலைப் பார்க்கிறனா வெளிய சொல்ல முடியும் விஜி?”

 

“என்னைப் பத்தித் தெரிஞ்சு தான, லவ் பண்ண?”

 

“ஆமாடா. நான் இல்லனு சொல்லல. நீ இப்படி இருக்கிறது எனக்கு ஓகே. ஆனா மத்தவங்க பார்வைக்கு?”

 

“என்ன‌, மத்தவங்க பார்வைக்கு? நான் செய்யிற வேலையை அப்படியே சொல்லுறதுல உனக்கு என்ன கஷ்டம்?”

 

“விளையாடாத விஜி. அதெப்படி சொல்ல முடியும்? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க?”

 

“ஹோ.. அசிங்கமா இருக்கா?”

 

“நீ ஏன் இன்னைக்கு இப்படிப் பேசுற?”

 

“எப்படிப் பேசுறேன்?”

 

“என்கிட்டச் சண்டை போடுற மாதிரியே பேசுற?”

 

தங்களுக்கு இடையேயான விவாதம் உண்மையிலேயே அத்திசையை நோக்கித்தான் செல்கிறதோ எனத் தோன்றிட, சட்டென்று அமைதி ஆனான் விஜயன்.

 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். பசியானது தனது நிதானத்தை இழக்க வைத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தான்.

 

‘அவளைப் பத்தி ஓரளவுக்கு உனக்கு தெரியும் தான?‌ சமாளிச்சுக்கலாம்னு முடிவு எடுத்திருந்தியே? இப்ப என்னாச்சு? எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணுற?’ என மனமானது வினா எழுப்பிட, விடை தேடத் துவங்கினான்.

 

“வாழ்க்கையில தோத்துட்டா, அப்புறம் நீ எதுல ஜெயிச்சாலும் அது சந்தோஷத்தைக் கொடுக்காது!” என்று தந்தை சிவநாதன் உரைத்தது நினைவிற்கு வந்தது.

 

உண்மைதான். வாழ்க்கை என்பதே நமது உணர்வுகளை நம்மோடு இணைந்து பகிர்ந்து கொள்ளும் துணையுடனான பயணம் தானே?

 

சஞ்சனாவுடனான வாழ்வு அப்படியான எந்த ஒரு உணர்வையும் தந்ததாய் அவனிற்குத் தெரியவில்லை‌. மகிழ்ச்சியைத் தராத துணை, எப்படி நமக்கானதாய் இருக்க முடியும்‌?

 

எனினும் அவனாய் தேர்ந்தெடுத்த வாழ்வு. அதில் தோற்க விரும்பவில்லை விஜயன்‌. முட்டி மோதி எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என எண்ணினான்.

 

காதல் எத்தனை அழகானதோ ஆத்மார்த்தமானதோ, அதே அளவிற்கு குரூரமும் பழியுணர்வும் கொண்டது‌.

 

எந்த அளவிற்கு மகிழ்ச்சியைத் தருமோ அதற்குச் சற்றும் குறையாத வலிகளையும் வேதனைகளையும் இரக்கமின்றி பரிசளிக்கும்.

 

காதல் அரங்கேற்றம்.. புரிதலில் முழுமை பெறுவது‌ மட்டுமல்ல, தோல்வியின் ரணத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் தான்.

 

விஜயன் கொண்ட காதல் அவனை மெல்ல மெல்ல பழிவாங்கி, மனவலியை தந்து கொண்டிருந்தது. ஆடவனின் இலட்சியம் பின்னே செல்ல, பிடித்தத்தின் காரணமாய் உண்டான ரணத்திற்கு மருந்தைத் தேடுவது தற்போது தலையாய பணியாய் மாறியது.

 

உடையை மாற்றி வந்தாள் சஞ்சனா‌.

 

ஏதோ யோசனையில் இருந்த கணவனைப் பார்த்தவள், “என்னாச்சு விஜி.?” என அருகே சென்று அமர, ஒரு பெருமூச்சை விட்டு அவள்புறம் திரும்பினான்.

 

“என்னனு கேட்டேன், ஒன்னும் சொல்லாம இப்படி என்னைப் பார்த்தா என்ன அர்த்தம்?”

 

“ஒன்னும் இல்ல. டைம் ஆச்சு. தூங்கலாம்.”

 

“விஜி..”

 

“என்ன சஞ்சு.?”

 

“ஒன்னு கேட்கணும் உன்கிட்ட.”

 

“கேளு.”

 

இரு நொடிகள் அவனைப் பார்த்தவள், கன்னத்தில் இதழ் பதித்து முகம் நோக்கிட, “என்ன?‌” என்றான்.

 

“நமக்கு மேரேஜ் ஆகி எவ்வளவு நாள் ஆகுது?”

 

“டூ வீக்ஸ்.”

 

“ஏன், என்னை இன்னும்..” என அவள் பாதியில் நிறுத்த, “ஏன் மேரேஜ் லைஃபை ஸ்டார்ட் பண்ணலனு கேட்கிறியா.?” என்று மெலிதாய்ப் புன்னகைத்தான்.

 

“ஆமா, சொல்லு!”

 

“எந்த மன வருத்தமும் இல்லாம சந்தோஷமா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன்.”

 

“ஏன், இப்ப நாம சந்தோஷமா இல்லையா?”

 

“எதை சந்தோஷம்னு சொல்லுற?”

 

“என்கூட இருக்கிறது உனக்கு ஹேப்பியா இல்லையா விஜி?”

 

“நான் அப்படிச் சொல்லல.‌ உன்கூட இருக்கும் போது உன்னைப் பத்தின நினைப்பு மட்டுமே இருந்தா தான், அது முழுமையான சந்தோஷம். ஆனா என்னால அப்படி இருக்க முடியல.”

 

“ஏன் விஜி?”

 

“ஃபர்ஸ்ட் நான் மேரேஜ் லைஃபுக்கு இன்னும் ரெடி ஆகல சஞ்சு. சடனா எல்லாம் நடந்திடுச்சு. இதை எப்படிச் சரி பண்ணுறதுனு மட்டும் தான், இப்ப எனக்குள்ள ஓடுது.”

 

“ஹோ..”

 

“என்னாச்சு.?”

 

“என்னைக் கல்யாணம் செஞ்சதை நினைச்சு வருத்தப்படுறியா?”

 

“நான் அப்படி யோசிக்கிற ஆள் இல்ல. வாழ்க்கையை எப்படி சந்தோஷமா மாத்திக்கிறதுனு தான் பார்ப்பேன்‌. ஒவ்வொன்னா பிராசஸ் பண்ண கொஞ்ச காலம் ஆகும். அதுவரைக்கும் நாம இப்படி இருக்கிறதே நல்லது.”

 

“ஒன்னு கேட்டா கோபப்பட மாட்டியே.?”

 

“கோபமா?” எனச் சின்னதாய் சிரித்தவன், “இல்ல, மாட்டேன். கேளு!”

 

“ஏன் இவ்வளவு சாமியாரா இருக்க?”

 

“அதுசரி! நான் படிக்கிற ஸ்டேஜ்ல இருக்கேன். என்னைக் கைப்பிடிச்சு ஃபேமிலிக்குள்ள இழுத்துட்டு வந்துட்ட நீ! இப்ப இப்படிக் கேட்டா, நான் என்ன பதில் சொல்லுறது‌.”

 

“ரெண்டையுமே கவனினு சொல்லுறேன்.” என்றவள் கணவனை அணைத்து இதழ் முத்தம் பகிர்ந்திட, மெல்ல மெல்ல அவளின் பிடியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டான் ஆடவன்‌.

 

“என்ன விஜி?” என வினவிய பாவையின் உடலில் மோகம் தளும்பி நின்றது‌.

 

“ரிலாக்ஸ் சஞ்சு!” என்று விஜயன் அவளின் முதுகில் வருடிவிட, “இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ் மேரேஜ் லைஃப் பத்திக் கேட்கும் போது, என்னால ரியாக்டே பண்ண முடியல தெரியுமா‌?”

 

‘அவளுள் உண்டாகி இருக்கும் உணர்வுப் பெருக்கு எங்கிருந்து தூண்டப்பட்டு இருக்கிறது?’ எனப் புரிந்து கொண்டவன், 

 

“மத்தவங்க பேசுறாங்கனு எல்லாம் ‌நம்ம ஃபீலிங்ஸை இப்படி ஓவர் ஃப்ளோ ஆக விடக்கூடாது சஞ்சு. செல்ஃப் கண்ட்ரோல் இல்லேனா, லைஃபை லீட் பண்ணுறது ரொம்ப கஷ்டம். அது லவ்வா‌ இருந்தாலும் சரி, லஸ்ட்டா இருந்தாலும் சரி!” என்று மனைவியைத் தனது அணைப்பிலேயே வைத்து அமைதிப் படுத்த முயன்றான் விஜயன்.

 

*

 

புதுமணத் தம்பதியரை வழி அனுப்புவதற்காக, இரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர் இரு குடும்பத்தாரும்.

 

‘செல்வாவைப் பார்த்தால் கனி மனம் வருந்துவாள்!’ என, மகனை இல்லத்திலேயே விட்டுவிட்டு கணவரை மட்டும் அழைத்து வந்திருந்தார் காளீஸ்வரி‌.

 

திருமணம் முடிந்து பத்து தினங்கள் தென்காசியில் தங்கியிருந்த நவன், தற்போது விடுமுறை முடிந்து சென்னைக்கு கிளம்ப தயாராகி விட்டான். 

 

முதலில் ‘நான் அத்தை மாமாக்கூட இருக்கட்டுமா? எங்க இருந்தாலும் ஒன்னு தான?‌’ எனக் கேட்ட பாவையானவள், தற்போது கணவனிடம் இருந்து இரண்டு இருப்பிடத்திற்குமான வேறுபாட்டைக் கற்றுக் கொண்டதன் பயனாய், உடன் செல்ல முடிவெடுத்து விட்டாள்‌.

 

முதல் காரணம், துணைவனின் நெருக்கம். இரவுப் பொழுதினில் பயின்ற மோகப் பயிற்சிகள், பாவையின் சிந்தையை முழுவதுமாய் மயக்கி விட்டிருந்தது. அத்தோடு, வேறு சில காரணங்களும் இருந்தன.

 

அனைத்தையும் கடந்து.. இருபக்க பெற்றோரும், “கல்யாணம் ஆகிடுச்சுனா, புருஷன் பொண்டாட்டி சேர்ந்து தான் இருக்கணும்!” என்று அழுத்தமாய் வலியுறுத்தி இருந்தனர்.

 

“நாங்க சென்னைக்கு வந்து எல்லாத்தையும் தயார் செஞ்சு, உங்க ரெண்டு பேரையும் குடி வச்சிட்டு வர்றோம்!” என உரைத்த தந்தையிடம், 

 

“இத்தனை பேரு போய் வர்றதுனா எவ்வளவு செலவு ஆகுறது? என்ன பெருசா, தயார் செய்யப் போறீங்க? வீட்டுக்குத் தேவையான சாமானை வாங்கித் தருவீங்க‍, அவ்வளவு தான? அதை, நானும் என் பொண்டாட்டியுமே பார்த்துக்கிறோம். நீங்க அங்க வந்து அலஞ்சு சிரமப்பட வேண்டாம்!” என்று துவக்கத்திலேய உறவுகளை, உடன் அழைத்துச் செல்வதற்கு முடிவுரை தந்துவிட்டான் நவன்.

 

திருப்பதியுமே, “ஆமா சம்பந்தி. எதுக்கு வீணான செலவு? மாப்பிள்ள இவ்வளவு காலமும் அங்கதான இருக்காரு? அதெல்லாம் சம்சாரத்தை நல்லா பார்த்துப்பாரு!” என மருமகனிற்கு ஒத்து ஊதிட, ராஜாவும் மெலிதான புன்னகையுடன், அதனைத் தலை அசைத்து ஏற்றுக்கொண்டார்.

 

ஆயிரம் அறிவுரைகளையும் பத்திரங்களையும், பெரியவர்களிடம் இருந்து பெற்று சேர்த்தபடி தொடர் வண்டியில் ஏறினார் நவனும் கனியும்‌.

 

நீண்டு சென்ற பயணத்தை ஒரு வழியாய் முடித்துக் கொண்டு, சென்னையை அடைந்தனர் இருவரும். தென்காசியை விட்டுத் தாண்டாத பாவைக்கு, அவ்வூரும் அங்கு இருக்கும் மக்களும் புதிதாகத்தான் தெரிந்தனர். எங்கும் எவருடனும் ஒட்ட இயலாதது போலான ஓர் உணர்வு.

 

பரபரப்பிற்குப் பிறந்தவர்கள் வாழ்க்கையின் அவசியத்திற்காகக் கால்களில் சக்கரம் கட்டியது போல் ஓடிக் கொண்டிருக்க, அவர்களை நின்று நிதானித்து வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருந்தாள் ஆசைக்கனி.

 

ஆட்டோவில் இருந்து இறங்கியதும் கணவன் காட்டிய குடியிருப்பை அண்ணார்ந்து பார்த்தவள், “என்னங்க இவ்வளவு பெருசா இருக்கு.?”

 

“வா, இதுல மொத்தம் பதினேழு ஃப்ளோர் இருக்கு. நம்மளோடது எட்டாவது மாடி.”

 

“எட்டாவது மாடியா? அம்மாடி, ஒவ்வொரு தடவைக்கும் நூறு படிக்கட்டுக்கு மேல ஏறி இறங்கணும் போலயே?”

 

“லிஃப்ட் எல்லாம் கேள்விப்பட்டது இல்லையா நீ?” என்றவாறு முன் நடந்தான் நவன்.

 

“ஓ..” என எதிரே இருந்த கட்டிடத்தை பார்த்தபடியே அவனைப் பின் தொடர்ந்து செல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடம் இல்லத்தை அடைந்தனர்.

 

காவலாளி நாராயணனிடம் இருந்து வாங்கி வந்த திறவுகோலால்‌ ஆடவன் கதவைத் திறக்க, உள்ளே அடியெடுத்து வைத்தாள். 

 

அடுத்ததாய் அவன் நுழைய போன தருணம், “டேய் வளர்ந்தவனே!” என்றபடி வந்து, ஆடவனின் கழுத்தில் கையிட்டு வளைத்தாள், நவனின் கல்லூரி தோழி ரம்யா.

 

திடீரென கேட்ட பேச்சுக் குரலில், அவர்களின் பக்கம் திரும்பினாள் ஆசைக்கனி. கணவனுடன் புதிதாய் ஒரு பெண் நின்றிருந்த தோரணையும், நெருக்கமும் பாவையின் மனதில் லேசான கலக்கத்தைக் கொடுக்க, புரியாத பார்வையுடன் நோக்கினாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்