
மாயோன் 16
வீட்டை விட்டு வெளியே வந்த அர்ஜுன், அதன் பிறகு தன் தாய் தேவியின் தந்தை வீட்டு சொத்துக்களை பராமரிக்க தொடங்கினான்… தேவியின் பெயரில் அறக்கட்டளை . குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம் போன்றவையையும் ஆரம்பித்தார்…
மேலும் தன்னுடைய சொந்த செலவில் ஒரு மருத்துவமனையினை கட்டி அதனை நிர்வகிக்க ஆரம்பித்தார்…
வர்ஷாவின் தாயும், தந்தையும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள்…
வர்ஷாவின் தந்தை இறந்த செய்தி கேட்டு… தன் மகனை காண வந்த வர்ஷாவின் பாட்டி தன்னுடைய பேத்தியை தானே வளர்க்க முடிவு செய்தார்…
வர்ஷாவின் பாட்டி ‘நானே என் பேத்தியை வளர்த்து கொள்கிறேன்’ என்று விரும்பி கேட்க… மறுப்பு கூற முடியாமல் தவித்த அர்ஜுன்.. இந்த சொந்தமாவது அவளுக்கு கிடைக்கட்டும்… என்ற எண்ணத்தில் அவர்களிடம் வர்ஷாவை ஒப்படைத்து விட்டு அவர்களுக்கான மொத்த செலவையும் அவனே பார்த்துகொள்ள முடிவு செய்தான்.. அவளது படிப்பு தொடக்கம் அனைத்தையும் அவனே செய்தான்…
வர்ஷாவின் பாட்டி அவளை தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அழைத்து சென்றார்..
அங்கு தன் பாட்டியுடன் வளர்ந்து வந்த வர்ஷாவை… இரு மாதத்திற்கு ஒரு முறை அர்ஜுன் சென்று பார்த்துவிட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு வருவான்..
பரதன் விக்ரமன் வீட்டில் தான் வளர்ந்தான்.. அதனால் விக்ரமனை ” அண்ணா ” என்று தான் அழைப்பான்… இன்றுவரை அவன் ‘அண்ணா’ என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை பேசியதில்லை…
விக்ரமனுக்கு பரதனை பார்க்கும் போதெல்லாம் அதியனது ஞாபகம் தான் வரும்… அதியனை விடுவித்த அவனது கரம் பரதனை பற்றி கொண்டது… இருப்பினும் அவனது மனம் இழந்த தன் உயிரான உறவை தான் தேடியது…
கிடைத்ததை கொண்டு வாழலாம்! ஆனால் தொலைத்த ஒன்றை மனம் தேடிக்கொண்டே தான் இருக்கும் என்பார்கள்… அதே போல தான் விக்ரமனும் தொலைத்த தன் வைரத்தை தேடி கொண்டிருந்தான்.
கிடைத்தது தங்கமானாலும் தொலைத்தது வைரம் அல்லவா, தேடாமல் எப்படி இருக்க முடியும் ?
( அன்பு விலைமதிபற்றது தான்.. இருந்தும் புரிதலுக்காக ஒப்பிட்டு கூறுவது தவறில்லையே? )
தாய்,தந்தை என்று நிம்மதியான சூழ்நிலையில் வாழும் விக்ரமனுக்கே அதியனது பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை எனும் பொழுது, சுயநலம் மிக்க உறவுகளின் மத்தியில் வாழும் அதியனால் எப்படி இந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியும்…
தன்னுடைய வலியை யாரிடமும் சொல்லி அழவும் முடியாமல்.. வழிந்த கண்ணீரை துடைக்கவும் ஆள் இல்லாமல்… தனிமையின் மடியில் தவழ்ந்தவனின் வேதனையை யார் அறிவார்…
கழுத்து வரை பணம் இருந்தும் கண்ணீர் துடைக்க ஆள் இல்லை என்றால் அந்த வாழ்கை நரகம் தானே..
கைவிட்டவனுக்கும் வலி தான்!! கைவிடப்பட்டவனுக்கும் வலி தான்!!
ஆனால் எதனால் கைவிடபட்டோம் என்று புரியாமல் தவிக்கும் இவனுக்கு அறுதல் சொல்லி, அணைக்க அன்று ஒருவரும் இல்லை அல்லவா?
‘ எனக்காக நீ ஆயிரம் பேரை எதிர்த்து போராட வேண்டாம்…
ஆள் இல்லாத போது எனக்கு துணையாக நில்… நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையிலேயே அந்த ஆயிரம் பேரை நான் எதிர்த்து நிறப்பேன்… ‘
அதியன் அன்று விக்ரமனிடம் எதிர்பார்த்தது அந்த நம்பிக்கையை மட்டும் தான்… ஆனால் விதி இருவரது வாழ்க்கையையும் தடம் மாற்றியது…
அதியன் எப்போதும் ‘விக்ரமா விக்ரமா ‘ என்று கலங்கி போய் நின்றான்.. அவனது நடவடிக்கையை கண்ட தேவனும், அதியனது மனதை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்க ஆரம்பித்தான்.. ‘விக்ரமனுக்கு நீ வேண்டாம்.. அதனால தான் உன்னை விட்டுட்டு போய்ட்டான்… அவனுக்கு உன் மேல உண்மையான பாசம் இல்லை ‘ என்று ஒவ்வொரு முறையும் தேவன் கூற.. அதை கேட்ட அதியனுக்கும் விக்ரமன் மீது கோவம் வர தொடங்கியது…
அப்போதும் சரி இப்போதும் சரி… சரத்துக்கு எதை பற்றியும் கவலை இல்லை… நல்ல சாப்பாடு, நிம்மதியான உறக்கம், தேவைக்கு மிகுந்த பணம் இது மட்டும் இருந்தால் போதும் அவனுக்கு..
வருடங்கள் பல கடந்தன…
தேவனது வளர்ப்பில்.. பொறுப்பில்லாமல் வளர்ந்தனர் சரத்தும், அதியனும்…
பணம் தான் எல்லாம் என்று தேவன் வாழ… தேவன் தான் எல்லாம் என்று சரத் வாழ… வேறு வழி இல்லாமல் அதியனும் அவர்கள் வழியில் வாழ தொடங்கினான்..
தேவனுக்கு மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகம், அதனால் மருத்துவ ஆய்வுக்கென தனியே ஒரு ஆய்வகத்தை நிர்வகித்து வருகிறான்…
எந்நேரமும் மருத்துவம், ஆராய்ச்சி என்று இருக்கும் தேவன், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சிறிதும் யோசிக்க வில்லை…
பூபாலன் எவ்வளவு எடுத்து கூறியும் ‘திருமணம் வேண்டாம்’ என்று மறுத்த தேவன், ஆய்வகமே கதி என்று அங்கேயே இருக்க தொடங்கினான்…
தனது தேவைக்காக சரத்தையும், அதியனையும் மெடிக்கல் படிக்க சொன்னான்.. அவனது சொல்லிற்கேற்ப அவர்களும் படித்து முடித்தனர்…
சரத் படித்து முடித்து விட்டு அவர்களது மருத்துவமனையிலேயே பணிபுரிந்தான்.. ஆனால் அதியன் படித்ததோடு சரி… மருத்துவமனை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.
அதற்கு காரணம் அவனது பழக்கவழக்கங்கள்… பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல சரத்துடன் சேர்ந்து அதியனும் பெண், போதை என்று அதற்கு அடிமையானான்…
தேவனும் அதை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.. ‘உங்க விருப்பம் போல இருங்க எதுவானாலும் நான் பார்த்துகிறேன் ‘ என்று நம்பிக்கை கொடுக்க… இவர்களும் கட்டுப்பாடின்றி வாழ தொடங்கினர்…
இது போன்று பெண் சகவாசத்தால் தான் அதியன் தனது பணியை மேற்கொள்ள விரும்பவில்லை.. செய்யும் தொழிலுக்கு தகுதியானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவ பணியை கைவிட்டான்..
____
அதியன், விக்ரமனை பார்க்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை.. ஆனால் விக்ரமன் ஒருவயத்திற்கு பிறகு அதியனை சந்தித்து பேச முயற்சித்தான்.. ஆனால் அவன் பேச வருவதை அதியன் காது கொடுத்து கூட கேட்கவில்லை…
அவன் கேட்காமல் போனாலும் சரி.. என்று நினைத்த விக்ரமன் வாரம் ஒரு முறை அதியனை பார்க்க வந்து விடுவான்..
சனிக்கிழமை தோறும் அதியனும், சரத்தும் ஒரு பாருக்கு வருவார்கள்.. அந்த நேரம் அவர்களுக்காக வெளியே காத்திருந்து அதியனை பார்த்து விட்டு செல்வான் விக்ரமன்.. அவன் மறுத்தாலும் அவனுக்கு வேண்டியதை செய்வான்..
விக்ரமனுடைய அலைபேசி எண் கூட விக்ரமன் கட்டாய படுத்தி அதியனது அலைபேசியில் பதிவு செய்தது தான்…
விக்ரமன், அதியனிடம் பேசவரும் போது சரத் விலகி சென்று விடுவான்..
என்ன தான் அதியன் விக்ரமனிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தாலும் … அந்த ஒவ்வொரு சனிக்கிழமையும் விக்ரமனை அவனது கண்கள் தேடி கொண்டு தான் இருக்கும்… ஆனால் அதை வெளி காட்டி கொள்ள மாட்டான்..
நந்தினி, சரத் மற்றும் அதியன் ஆகிய மூன்று பேரும் ஒரே மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள்… நெருங்கிய நண்பர்களும் ஆவர்…
நந்தினிக்கு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம்.. அதனால் சரத் மூலமாக தேவனுடைய ஆய்வகத்திற்கு அடிக்கடி சென்று வருவாள்.. ஆனால் சரத் அதிகமாக தேவனின் ஆய்வகத்தில் தான் இருப்பான்… ஆனாலும் ஒரு ஆர்வத்தினால் நந்தினி அவ்வப்போது அங்கு சென்று வருவாள்… தேவன், சரத் மற்றும் நந்தினி ஆகிய மூன்று பேரும் மருத்துவ சம்மந்தமாக பேசிக்கொண்டிருப்பார்கள்… அப்போது அதியன் மட்டும் யாருக்கோ வந்த விருந்து என்பது போல… காரில் அமர்ந்து பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பான்..
*********
காவல் நிலையத்தில் விக்ரமனை பார்த்துவிட்டு வந்த அதியன் நேராக தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்…
கண்களை மூடி இன்று நடந்த நிகழ்வுகளை மீட்டெடுத்தவனது விழியோரம் உவர் நீர் கசிய… ஆழ்ந்து பெருமூச்சு எடுத்தவன் மேசையின் மீதிருந்த தனது டைரியை எடுத்து எழுத தொடங்கினான்…
அதியன் தனது தனிமையை போக்க தினமும் டைரி எழுதுவதை வழக்கமாக்கி கொண்டான்… தன்னுடைய ஒவ்வொரு சந்தோஷத்தையும்,துக்கத்தையும்.. எழுத்து வடிவில் அந்த காகிதத்தில் கொட்டியபின் தான் நிம்மதியாக உணர்வான்..
இன்றும் அதே போல விக்ரமனை எண்ணி அந்த காகிதத்தை நிறப்பினான்….
‘வேதனையில் மடி ஏந்தி கொள்ள தாயும் இல்லை…
தலை கோதி தைரியம் சொல்ல தந்தையும் இல்லை…
விரல் பிடித்த நல் வழி காட்ட நண்பனும் இல்லை…
அனைத்தும் நீ மட்டுமே என்று எண்ணிய போது நீயும் எனக்கு சொந்தமில்லை…
நீ என்னிடம் திரும்பி வந்த போது
சந்தோஷத்தையும், நிம்மதியையும் நான் உணரவில்லை…
ஏனெனில் அன்று உன் மீது இருந்த அன்பும், நம்பிக்கையும் இப்போது இல்லை…
இருந்தபோதும் ஏன் உன்னைப் பற்றிய எண்ணம் என் மனதில் தோன்றும் போதெல்லாம் என் இமைகள் ஈரத்தை உணருகிறது…
ஒருவேளை இழந்த உனை நான் இன்றும் தேடுகிறேனோ???
அதனால் தான் இன்னும் கண்ணீர் சிந்துகிறேனோ???
முன் ஜென்மத்தில் நான் செய்த பாவத்திற்க்கான சாபமோ இந்த வாழ்க்கை…
என் வேதனை உணர உனக்கு இந்த ஜென்மம் போதாது விக்ரமா…
என்று எழுதியவனது ஒரு துளி கண்ணீர் அந்த பக்கத்தின் இறுதி எழுத்தாக இருந்தது…
*******
தேவனது, நண்பனுடைய மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவனுக்கு பொருத்தமான டோனரை ஏற்பாடு செய்து தரும்படி அவனது நண்பன் கேட்க… அவனும் பல்வேறு தரப்பில் முயன்று பார்த்தான் கிடைக்கவில்லை..
அந்த நபருக்கு அரியவகை ரத்த பிரிவு என்பதால் டோனரை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது…
இருந்தும் தன் நண்பனிடம் கொடுத்த வாக்கிற்காக.. டோனரை ஏற்பாடு செய்ய முயன்று கொண்டிருந்தான் தேவன்..
அப்போது தான் திடீர்ன விக்ரமனது ஞாபகம் அவனுக்கு வந்தது… விக்ரமன் ஒரு யூராலஜிஸ்ட் ( urologist ) சிறுநீரக மருத்துவர்…
கடைசி வாய்ப்பாக அவனிடமும் கூறி வைப்போம் என்று நினைத்த தேவன் அவனது எண்ணிற்கு அழைக்க முடிவு செய்தான்..
தேவனது ஒரு நல்ல குணம் என்னவென்றால் பெர்சனலையும், ப்ரப்பஸ்னலையும் என்றும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ள மாட்டான்.. அது வேறு இது வேறு என்ற எண்ணம் கொண்டவன், விக்ரமனும் அப்படி தான்.
இது விக்ரமன் முதல் முறையாக கீர்த்தியை சந்தித்தது போது நிகழ்ந்தது…
கீர்த்தியிடம், விக்ரமன் பேசிக்கொண்டிருக்கும் போது தான் தேவனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது… திரையில் தேவன் சக்ரவர்த்தி என்ற பெயரை பார்த்த விக்ரமன் முதலில் அதனை நிராகரித்தான்…
பின்னர் கீர்த்தி அங்கிருந்து சென்றபிறகு மீண்டும் தேவன் விக்ரமனுக்கு அழைத்தான்…
அழைப்பை ஏற்றவன்…
” ம்ம்ம் சொல்லுங்க என்ன விஷயம்” என்று கேட்க
” நான் ஒன்னும் உன்கூட உறவு கொண்டாட போன் பண்ணல…” என்று அவன் அழைப்பை நிராகரித்த கோவத்தில் தேவன் பேசினான்…
” சந்தோசம்… அப்ரோம் எதுக்கு கால் பண்ணீங்க ஒருவேளை நம்பர் மாத்தி கால் பண்ணிட்டீங்களோ? வயசானாலே இப்படி தான் போல ” என்று விக்ரமன் நக்கல் குரலில் பேச…
” ஏய் ” என்று சீறினார் தேவன்..
” ஓகே கூல்… என்ன விஷயம் ” என்று விக்ரமன் கேட்க… தேவனும் கோவம் மறந்து விஷத்தை கூறினான்…
” சரி நான் யாரும் டோனர் கிடைக்குறாங்களான்னு பாக்குறேன் ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
விக்ரமனிடமிருந்து சாக்லேட்டை வாங்கி வந்த கீர்த்தி ” மாமா ” என்று அழைத்தவாறு நேராக மகிழனது அறைக்குள் ஓடி வந்தாள்…
” மெதுவா பாப்பா ” என்று அவளது வேகத்தை மட்டுப்படுத்தினான் மகிழன்…
” மாமா இங்க வாயேன் ” என்று அவனது காது பக்கம் சென்று ” எனக்கு ஒருத்தர் சாக்லேட் கொடுத்தாரு ” என்று கூறியவள் பின்னால் மறைத்து வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து அவனுக்கு காட்டினாள்…
” இங்க பாரு மாமா ”
” பாப்பா உன்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. தெரியாதவங்க எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு, கேட்கவே மாட்டியா? ” என்று அவன் கொஞ்சம் கோவமாக பேச… கீர்த்தியின் முகம் வாடி போனது… அப்போது அறைக்குள் நுழைந்தாள் நந்தினி…
” என்ன ஆச்சு ” என்று நந்தினி கேட்க… கண்களை அகல விரித்த கீர்த்தி ‘ சொல்ல வேண்டாம் ‘ என்று மகிழனுக்கு ஜாடை காட்ட.. அதனை புரிந்து கொண்ட மகிழனும்
” ஒன்னும் இல்லை கண்ணம்மா ” என்று கூறி கீர்த்தியை வெளியே அழைத்து செல்ல முற்பட்டான்.. அப்போது கீர்த்தி மறைத்து வைத்திருந்த சாக்லேட்டை நந்தினி பார்த்து விட்டாள்…
” என்னடி அது கையில… ” என்று கேட்டவள்.. அங்கிருந்த மகிழனை முறைத்து பார்த்து ” சாக்லேட் வாங்கி கொடுக்காதீங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. அது ஆரோக்கியம் இல்லை, சொன்னா கேட்க மாட்டீங்களா? ” என்று நந்தினி மகிழனை திட்டவும்… கோவம் கொண்ட கீர்த்தி…
” சும்மா என் மாமாவை திட்டாத க்கா.. இது எனக்கு வேற ஒருத்தங்க கொடுத்தாங்க ” என்று அதனை பற்றி கூறி முடிக்க… அவளது கையில் இருந்த சாக்லேட்டை பிடுங்கி டஸ்ட்பின்னில் எறிந்த நந்தினி கீர்த்தியை ஓங்கி அறைந்திருந்தாள்.
அதனை கண்டு கோவமான மகிழன் ” நந்தினி ” என்று கத்த… நந்தினியோ மீண்டும் கீர்த்தியை அடிக்க கை ஓங்க அவளது கரத்தை தடுத்து பிடித்தான் மகிழன்…
அதனை கண்டு நந்தினி அதிர்ச்சியுடன் மகிழனை பார்க்க… கீர்த்தி பயந்து நடுங்கியபடி மகிழனது பின்னால் மறைந்து கொண்டாள்..
” எத்தனை முறை சொல்லி இருக்கேன் அவள் மேல கை வைக்காதன்னு ” என்று மகிழன் கோவத்தில் பேச..
” அவள் என் தங்கச்சி அவளை அடிப்பேன்… தேவை பட்ட என்னவேணும்னாலும் பண்ணுவேன் அதை கேட்க நீங்க யாரு ” என்று நந்தினியும் அவனுக்கு சற்றும் குறையாத கோவத்தில் பேச…
” அவள் என் புள்ளைடி அவள் மேல கை வச்சா, எவனா இருந்தாலும் நான் கேட்பேன்… அது நீயா இருந்தாலும் சரி இனி மேல அவள் மேல கைவைச்ச நான் மனுசனா இருக்க மாட்டேன் ” என்றவன் கீர்த்தியை வெளியே அழைத்து சென்றான்…
*******
இங்கு தேவனோ சரத்திடம் தனது நண்பன் மகனுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருந்தான்…
” என்ன ப்ளட் க்ரூப் சொன்னீங்க அண்ணா ” என்று சரத் கேட்க…
” ஓ நெகட்டிவ் டா ”
” ஒஹ் ” என்று யோசித்த சரத் உடனே ஏதோ நினைவு வந்தவனாக ” நந்தினியோட சிஸ்டர் கீர்த்திக்கும் அதே ப்ளட் க்ரூப் தான்ண்ணா.. எப்போவோ சொன்ன ஞாபகம் இருக்கு ”
” ஒஹ் ரியலி ”
” ஆமா அண்ணா வேணும்னா இருங்க, நந்தினி கிட்டயே கேட்டு கன்பார்ம் பண்ணிக்கலாம் ” என்ற சரத் உடனே நந்தினிக்கு அழைத்தான்…
அழைப்பை ஏற்ற நந்தினி ” சொல்லு சரத் அதி என்ன பண்ணுறான் ” என்று கேட்டாள்..
” எப்போ பாரு அதி தானா.. சரத், சரத்ன்னு ஒருத்தன் இன்னும் உயிரோட தான்மா இருக்கான்.. அவனுக்கும் கொஞ்சம் கருணை காட்டு ”
” இருந்து மட்டும் என்ன? சரி எதுக்கு இப்போ போன் பண்ண? ”
” உன் சிஸ்டர் பத்தி பேசலாம்னு தான் எப்படி இருக்காள் அவள் ” என்று அவன் விளையாட்டாக பேச…
” இதோ இப்போவே என் மாமா கிட்ட போன் கொடுக்குறேன்.. அவர் கிட்ட கேளு அவர் நல்லா பதில் சொல்லுவாரு ” என்று நந்தினி சிரித்தபடி கூற… ஒருகணம் அதிர்ந்த சரத்
” அதெல்லம் ஒன்னும் தேவை இல்லை.. ஒரு முக்கியமான விஷயம் உன் சிஸ்டர் ப்ளட் க்ரூப் என்ன? ”
” ஒ நெகட்டிவ், இப்போ அது எதுக்கு உனக்கு ? ”
“சொல்லுறேன்.. நாளைக்கு அண்ணாவோட லேப்க்கு வந்திடு ” என்றுவன் அழைப்பை துண்டித்து விட்டு… தேவனிடம் விஷயத்தை கூறினான்…
” அந்த பொண்ணுக்கு வயசு என்ன? ” என்று தேவன் கேட்க..
” ஒஹ் இதை மறந்துட்டேன்ண்ணா ச்சே அவளுக்கு பதினேழு வயசு பக்கம் தான் இருக்கும் அப்போ இது சரிவராது அண்ணா.. ”
” அதெல்லாம் ஒன்னும் இல்லைடா சிறுநீரகம் நல்லா வளர்ச்சி அடைந்திருந்தால் போதும்… செக் பண்ணி பார்த்துக்கலாம் ”
” ஆனால் அண்ணா இது இல்லீகல் இல்லையா ? அவளுக்கு பதினெட்டு வயசு ஆகாமல் எப்படி? வெளியே தெரிஞ்சா அவ்ளோ தான்.. முதலில் அவங்க வீட்டுல உள்ளவங்க இதுக்கு சம்மதிக்கணுமே”
” வெளியே தெரிஞ்சால் தானேடா விடு அதெல்லாம் பார்த்துக்கலாம் நந்தினிக்கு ஹாஸ்பிட்டல் கட்டணும்னு ஆசை இருக்கு இல்லை அந்த ஒரு ஆசை போதும்… அவளை என்ன வேணாலும் பண்ண வைக்கலாம் ” என்று கூறிய தேவன் அங்கிருந்து எழுந்து சென்றான்…
****
அடுத்த நாள் காலையில் நந்தினி, தேவன் சக்ரவர்த்தியை காண அவனது ஆய்வகத்துக்கு வந்தாள்.
சரத்தை முன் வைத்து கொண்டு தேவன், நந்தினியிடம் தான் அழைத்ததற்க்கான காரணத்தை கூறினான்.. அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள்,
” என்ன சொல்லுறீங்க நீங்க ? கண்டிப்பா இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன், சின்ன பொண்ணு அவள், அது மட்டும் இல்லாமல் அவளுக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகலை… நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும் இல்லை , இது எவ்ளோ பெரிய இல்லீகலான விஷயம் தெரியும் தானே.. அப்புறம் எந்த எண்ணத்தில் இதை நீங்க என்கிட்ட கேக்குறீங்க? சாரி தேவன் சார் இதை உங்க கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல… நான் கிளம்புறேன் ” என்றவள் தனது ஹண்ட் பேக்கை எடுத்து மாட்டியபடி அருகில் இருந்த சரத்தை முறைத்து பார்த்தாள்..
சரத்தோ, எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல கையை விரித்து காட்டி, எதிரில் இருந்த தேவனை கண் காட்டினான்..
இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு நந்தினி வெளியே செல்ல போகும் நேரம்…
” நந்தினி ” என்று அழைத்தான் தேவன். அவனது குரல் கேட்டு நந்தினி திரும்பி அவனது முகத்தை பார்க்க… எழுந்து அவள் அருகில் வந்தான் தேவன்.
” என்ன இது நந்தினி உன்னை நான் எந்த இடத்தில் வச்சு யோசிச்சு பார்த்தேன், நீ போய் இப்படி லீகல், இல்லீகல் பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க… ஸ்ட்ரேஞ்”
” லீகல், ஆர் இல்லீகல் அது இப்போ பிரச்சனை இல்லை சார்.. நீங்க பேசுறது என் தங்கைச்சியை பத்தி, வாழ வேண்டிய பொண்ணு அவள், என் வாழ்க்கை இது தான்னு நான் முடிவு பண்ணி வாழ்ந்துட்டு இருக்கேன்… ஆனால் அவளாவது நல்லா வாழனும்னு நான் ஆசைப்படுறேன், அது என் கடமையும் கூட, ப்ளீஸ் சார் இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம் ”
“ஒஹ் கமான் நந்தினி, நீ ப்ராக்டிகளா இருப்பன்னு நெனச்சேன்.. நீ என்னன்னா பந்தம் பாசம்ன்னு உளறிட்டு இருக்க.. ஒரு கிட்னியை டொனேட் பண்ணிட்டு எத்தனையோ பேர் குடும்பம், குழந்தைங்கன்னு வாழலயா? டாக்டர் தானே நீ! முட்டாள் தனமா பேசிட்டு இருக்க ”
” நான் டாக்டர் தான் சார், அதனால எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் இதோட பின் விளைவுகள் என்ன, எப்படின்னு!! தெரிஞ்சே ஒரு பதினேழு வயசு பொண்ணுக்கு நரகமான வாழ்க்கையை என்னால கொடுக்க முடியாது… அதுவும் என் தங்கச்சிக்கு! கண்டிப்பா முடியாது ”
” உனக்கு ஹாஸ்பிட்டல் கட்டணும்ன்னு ஆசை இருக்கா? இல்லையா ? ” என்று நந்தினியிடம் கேட்ட தேவன் மேசையில் சாய்ந்து நிற்க..
” ஆமா சார், அதுக்காக என் தங்கச்சியோட ரத்தத்தில நான் சொகுசா வாழனும்னு என்னைக்கும் ஆசைப்பட்டது இல்லை… ”
” இங்க பாரு நந்தினி ஹாஸ்பிட்டல் கட்ட தேவையான இடத்தையும், பணத்தையும் நான் உனக்கு கொடுக்குறேன்.. அது மட்டும் இல்லாமல் நியூ ப்ரொஜெக்ட் ஒன்னு வந்து இருக்கு, முந்நூறு கோடி மதிப்பான அந்த ப்ராஜெக்ட்ல நீயும்,சரத்தும் என்னோட பட்னர்ஸா இருக்க போறீங்க… நல்லா யோசி நீ ஓகே சொன்னா இது எல்லாம் உனக்கு கிடைக்கும்.. அதுவே நீ நோ சொன்னா??? நீ டாக்டர்ன்னு வெளியே சொல்லிக்க முடியாத அளவுக்கு உன் நிலைமை மோசமாகிடும்… என்னை பத்தி உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… உனக்கு ஒரு வாரம் டைம் தரேன், யோசிச்சு சொல்லு, அப்புறம் உன் விருப்பம் ” என்று கூறியவன் நந்தினியை செல்லும் படி கைகாட்ட பல்வேறு யோசனையுடன் வெளியே செல்ல திரும்பிய நந்தினியிடம்…
” ஆனால் முடிவு எனக்கு சாதகமா இருக்கணும் நந்தினி… இந்த தேவன் டிசிசன் மேக்கர்… நான் எடுக்குறது தான் முடிவு! நான் முடிவு எடுத்துட்டேன்.. உனக்கு யோசிக்க தான் டைம் கொடுத்து இருக்கேனே தவிர.. என் முடிவை மாத்துறதுக்கு இல்லை… புரியுதா? நீ போகலாம்…” என்று அழுத்தி கூறிய தேவனது விழியில் வெளிப்பட்ட அனல் நந்தினியை சற்று பயம் கொள்ள வைத்தது…
கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே வந்தாள்..
அவளை தொடர்ந்து சரத்தும் வெளியே வந்தான்…
வெளியே வந்த சரத்தை முறைத்து பார்த்த நந்தினி ” இது தான் விஷயம்னு ஏன் என்கிட்ட நீ முன்னாடியே சொல்லல ? ” என்று கோவமாக கத்தினாள்…
” கூல் நந்தினி.. என்னமோ உன் கிட்னியை கேட்ட மாதிரி கோவப்படுற.. உன் சிஸ்டரோடது தானே அதுல உனக்கு என்ன பிரச்சனை… இருந்தாலும் உன்கிட்ட இந்த அவதாரத்தை நான் எதிர்பார்க்கல… இங்க பாரு நந்தினி அண்ணாவை பத்தி உனக்கே நல்லா தெரியும்.. இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது, சோ சீக்கிரம் ஓகே சொல்லிடு ” என்ற சரத் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றான்…
******
அடுத்த நாளில் இருந்து தினமும் மாலை கீர்த்தியை காண அதே இடத்திற்கு வந்து நின்றான் விக்ரமன்…
விக்ரமனது தோற்றம் கண்டு முதலில் தடுமாறியவள் பின்னர் அவனது கார், வாட்ச் என சிறு சிறு அடையாளம் கொண்டு அது அவன் தான் என்று கண்டு கொண்ட கீர்த்தி அவனை பொருட்படுத்தாமல் கடந்து சென்றாள்..
பெண்கள் கடந்து செல்பவர்கள் தான்… ஆனால் ஒருநாளும் அவர்கள் எதிரில் இருப்பவர்களை கவனிக்காமல் சென்றது இல்லை…
பெண்கள் கவனிப்பது கூட கடந்து செல்வதை போன்று தான் எதிரில் இருப்பவர்களுக்கு தெரியும் ( பொண்ணுங்க அவ்ளோ திறமைசாலி )
விக்கிரமன் பார்க்கும் போதெல்லாம் கீர்த்தி அவனை கவனிக்காமல் கடந்து சென்றுவிடுவாள்… ஆனால் அவன் கண் சிமிட்டும் ஒரு நொடி இடைவெளியில் அவனை கவனித்துவிட்டு கடந்து செல்வாள்! அதை அவன் அறியவில்லை…
பின்னர் அவளுக்கு தெரியாது என்று நினைத்து விக்ரமன், கீர்த்தியை புகைப்படம் எடுப்பதும்… அவளை ரசிப்பதும் என சிறு சிறு கேடி தனத்தையும் செய்தான்..
இப்படியே அவர்களது நாட்கள் கண்பார்வையில் கடந்து சென்றது…
*****
இப்படியே ஒருவாரம் கடந்தது… தேவனிடம் இருந்து நந்தினிக்கு அழைப்பு வந்தது…
” சொல்லுங்க சார் ”
” என்ன முடுவு எடுத்திருக்க நந்தினி ” என்று தேவன் கேட்க…
” சார் நான் கீர்த்தியை அழைச்சிட்டு வரேன்.. டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு பேசிலாம் ” என்று ஒருமனதாக கூறிய நந்தினி தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டாள்…
அப்போது அறைக்குள் நுழைந்த கீர்த்தி…
” அக்கா நாளைக்கு வரும் போது எனக்கு மில்க் ஷேக் வாங்கிட்டு வா ப்ளீஸ்? ” என்று கேட்டபடி அவளது மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
தனது மடியில் அமர்ந்தவளை அமைதியா பார்த்த நந்தினிக்கு மனம் கனக்க தொடங்கியது…
ஆழ்ந்த மூச்செடுத்து கீர்த்தியை தன் மார்போடு அணைத்து கொண்டாள் நந்தினி…
நந்தினியின் இந்த செயல் கீர்த்திக்கு புதிது… நந்தினி எப்போதும் பாசத்தை வெளி காட்டுபவள் அல்ல… அவளது பாசத்தில் எப்போதும் ஒரு கண்டிப்பு இருக்கும், அதற்கு காரணம் கீர்த்தியின் வெகுளித்தனம். எளிதில் யாரிடமும் அவள் ஏமாந்து விட கூடாது என்று எப்போதும் கண்டிப்புடன் தான் இருப்பாள்… ஆனால் அந்த கண்டிப்பில் இருக்கும் பாசமும், அக்கறையும் கீர்த்திக்கும், நன்றாக புரியும்.. அதனால் தான் கீர்த்தி ஒரு இடத்தில் கூட நந்தினியை விட்டு கொடுத்தது இல்லை.
நந்தினியின் மார்பில் முகம் புதைத்து படுத்திருந்த கீர்த்தி, தனது முகம் உயர்த்தி நந்தினியை பார்த்து மெல்ல புன்னகைக்க… மொத்தமாக நொறுங்கி போனாள் நந்தினி.
‘ என்னடி பண்ண போறேன்.. எனக்கு என் கெரியர் ரொம்ப முக்கியம்டி… அக்காவால உனக்கு இப்படி ஒரு கொடுமையை பண்ண முடியல…ஆனால் அப்படி பண்ணாமல் விட்டால் அந்த தேவன் என்ன பண்ணுவாருன்னு வேற ஒரு பக்கம் பயமா இருக்கு.. அக்காவை மன்னிச்சிடு கீர்த்தி எனக்கு இதை விட்டா வேற வழி இல்லை.. ‘ என்று மனதில் கீர்த்தியிடம் மன்னிப்பு வேண்டியவள்… இறுதியாக ‘ இவளுடைய தசை வகைகள் அந்த நபருடன் பொருந்தாமல் போக வேண்டும் ‘ என்று இறைவனிடம் வேண்டி கொண்டாள்…
தேவனை எதிர்த்து நந்தினியால் எதுவும் செய்ய இயலாது.. போலீஸ் கேஸ் என்று சென்றாலும் எதுவும் வேலைக்கு ஆகாது, என்று நன்கு அறிந்த நந்தினிக்கு உண்மையாக அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை தான்…
இறுதியில் ஒரே முடிவாக மனதை கல்லாக்கி கொண்டவள் கீர்த்தியை பரிசோதனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தாள்…
எப்படி கீர்த்தியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்று யோசனையுடன் அமர்ந்திருந்த நந்தினியின் மனதில் திடீரென ஏதோ யோசனை வர, கீர்த்தியை அழைத்தாள்.
கீர்த்தி அறைக்குள் வந்ததும், தனது மடிக்கணினியில் வேலை செய்வது போல பாவனை செய்த நந்தினி
” கீர்த்தி இங்க வா ” என்று அழைக்க…
” சொல்லு க்கா எதுக்கு கூப்பிட்ட ” என்று கேட்டாள் கீர்த்தி..
” அது அந்த ஸ்டூல் மேல ஏறி அலமாரியில் இருக்க அந்த சூட்கேஸை எடுத்து கொடு ” என்று நந்தினி கூற.. அந்த சூட்கேஸ் இருக்கும் இடத்தை பார்த்த கீர்த்தி மலைத்துபோய் நின்றாள்…
” அக்கா நான் எப்படி எடுக்குறது அது எவ்ளோ உயரமா இருக்கு எனக்கு எட்டாது க்கா ”
” அது தான் ஸ்டூல் மேல ஏறி எடுக்க சொன்னேன் எடு ”
” நான் வேணும்னா மாமாவை எடுக்க சொல்லவா ” என்ற கீர்த்தி ” மாமா… ” என்று அழைக்க வாய் எடுக்கும் போது அவளை திரும்பி பார்த்து முறைத்தாள் நந்தினி…
நந்தினியின் பார்வையில் கீர்த்தியின் வாய் தானாக மூடிக்கொள்ள… அடுத்த வார்த்தை பேச முடியாமல் தானாக அந்த ஸ்டூலின் மீது ஏறி நின்று மேலே இருந்த சூட்கேஸை எடுக்க தயாரானாள் கீர்த்தி..
ஸ்டூலில் ஏற்கனவே ஒருபக்க கால் உடைந்து இருந்தது… அதை கவனித்த நந்தினி வேண்டுமென்றே தான் கீர்த்தியை அதன் மீது ஏற சொன்னாள்…
கீர்த்தி மேலே ஏறிய அடுத்த நொடி பாலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தாள்..
” மாமா” என்று கூறியவாறே அவள் கீழே விழவும்… அவளது சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு மகிழன் உள்ளே நுழைந்தான்…
மகிழன் உள்ளே வருவதை கண்ட நந்தினி உடனே இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு எதுவும் அறியாதவள் போல ” அய்யோ கீர்த்தி என்னடி ஆச்சு ” என்று கேட்டபடி அவள் அருகில் வருவதற்குள் மகிழன் கீர்த்தியை நெருங்கி இருந்தான்…
” பாப்பா ” என்று பதறியபடி வந்த மகிழன் கீர்த்தியை தூக்க போக… கீர்த்தி தனது முட்டியை பிடித்து கொண்டு கதற தொடங்கினாள்..
” மாமா… மாமா ” என்று அவள் அழவும்
” என்ன ஆச்சு பாப்பா ” என்றவன் அப்போது தான் பார்த்தான் அவளது சுடிதார் பேன்டை மீறியும் முட்டியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது… அதனை கண்டவன் நேராக நந்தினியை நோக்கி ” என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க ஏதாவது பண்ணு ” என்று கூறவும் நிதானமடைத்த நந்தினி ” இதோ பார்க்குறேன்” என்று கூறியவாறு கீர்த்தியின் காயத்தை ஆராய்ந்து பார்த்தாள்…
” காயம் பெருசா இருக்கு ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகணும் ”
” பாப்பா வலியில கத்துறா பாரு.. முதல் பர்ஸ்ட் எய்ட் பண்ணலாம் அப்ரோம் அழைச்சிட்டு போகலாம் ” என்று கூற… கோவமான நந்தினி
” எனக்கு தெரியாதா? உள்ள எலும்பு எதுவும் பிராக்ச்சர் ஆகி இருக்கும் ஹாஸ்பிட்டல் போய் ஸ்கேன் எடுத்து பார்க்கணும்.. நானே அழைச்சிட்டு போறேன் ”
” சரி இரு நானும் வரேன் ” என்று மகிழன் கூற…
” ஒன்னும் வேண்டாம் நானே பார்த்துக்குறேன்… இவளை கார் வரை மட்டும் தூக்கிட்டு வாங்க ” என்று கூற…
மகிழனும் கீர்த்தியை தூக்கி வந்து காரில் அமர வைத்தவன்… நந்தினியிடம் திரும்பி ” நானும் வரேன் கண்ணம்மா ” என்று கேட்டான்.
” ஒன்னும் தேவை இல்லை, எனக்கு பார்த்துக்க தெரியும்… ஒர்க் போய்ட்டு வந்து நீங்க இன்னும் ப்ரஷ் ஆக கூட இல்லை… போங்க நானே போய் பார்த்துக்குறேன் ” என்றவள் கீர்த்தியை அழைத்து கொண்டு தேவனது மருத்துவமனைக்கு வந்தாள்…
அங்கு வந்தவள் தேவனுக்கு தகவல் கொடுக்க… அங்கு வந்தனர் சரத்தும், தேவனும்…
கீர்த்திக்கு முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டவர்கள்… அடுத்து தங்களுக்கு தேவையான பரிசோதனை எல்லாம் செய்து பார்த்தனர்…
ரிப்போர்ட் வர தாமதமாகும் என்பதால் நந்தினி கீர்த்தியை வீட்டிற்கு அழைத்து சென்றாள்…
அடுத்த நாள் ரிப்போரட் வந்தது.. அதில் ரத்த பிரிவு தொடக்கம், தசை வகைகளும் அந்த நபருடன் கீர்த்திக்கு நன்றாக பொருந்தி போனது… அவளது சிறுநீரகமும் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது…
அதனை கண்டு சந்தோஷமடைந்த தேவன் எதிரில் நின்ற நந்தினியிடம் ” பெர்பெட் நந்தினி.. ஆப்ரேஷன் எப்போ வச்சுக்கலாம் ” என்று கேட்டான்…
அதனை கேட்டு அசையாமல் நின்றாள் நந்தினி… அவளது கடைசி நம்பிக்கையும், வேண்டுதலும் கூட கைவிட்டு போய் விட்டது இல்லையா ? அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து நின்றாள்..
‘தன்னுடைய சுயநலத்திற்காக கீர்த்தியை பலி கொடுக்க போகிறோமே ‘என்ற குற்ற உணர்ச்சி நந்தினியை கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க வைத்தது… இருந்தும் வேறு வழி இல்லாமல் அதற்கு சம்மதிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு…
இறுதியாக ‘ ஒரு கிட்னி மட்டும் கொண்டு இவ்வுலகில் எத்தனையே பேர் நல்லா வாழ்வது இல்லையா? நிச்சயம் கீர்த்தியும் அப்படி வாழ்வாள்.. இதன் மூலம் தனக்கு கிடைக்க போகும் பணத்தில் பெரும் பங்கை அவளது பெயரில் போட்டு விடுவோம்… என்று முடிவு செய்து தேவனிடம் ‘ சரி ‘என்று கூறினாள்.
ஒருவாரத்திற்கு பிறகு ” கீர்த்தி நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு கோவாக்கு டூர் போறோம் ” என்று நந்தினி கூற.. சந்தோஷமான கீர்த்தி விரைந்து வந்து நந்தினியை அணைத்து கொண்டாள்…
” அக்கா உண்மையாவா? அப்போ மாமா… அம்மா எல்லாரும் தானே போறோம், ஒரே ஜாலியா இருக்கும் ” என்ற கீர்த்தியை தன்னில் இருந்து பிரித்து நிறுத்திய நந்தினி
” அவங்க எல்லாம் இல்லை, நம்ம ரெண்டு பேரும் மட்டும் தான் போறோம் ”
” ஏன் அக்கா? ” என்று கேட்ட கீர்த்திக்கு முகம் தொங்கி விட்டது
” அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை கீர்த்தி … மாமா இங்க இருந்து அம்மாவை பார்த்துப்பாரு நம்ம மட்டும் போய்ட்டு வருவோம் ”
” இல்லை அக்கா, மாமா இல்லாமல் நல்லா இருக்காது… நான் வரல ”
” அப்போ நான் கூப்பிட்டா என்கூட வர மாட்ட அப்படி தானே ” என்று நந்தினி கோவமாக பேச.. பயந்து போனாள் கீர்த்தி…
” சரி அக்கா கோவ படாத வரேன் போவோம் ” என்று கூறி கஷ்டபட்டு புன்னகைத்தாள் கீர்த்தி…
” சரி அப்போ நீயே மாமா கிட்ட போய் நானும் அக்காவும் டூர் போறோம் நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க அப்படின்னு போய் சொல்லு ”
“ஏன் அக்கா நீயே சொல்லு ”
” நீ தான் சொல்லணும்… அக்கா சொன்னா கேட்ப தானே, போ… நான் என்ன சொன்னேனோ அப்படியே போய் மாமா கிட்ட சொல்லு ” என்ற நந்தினி கதவருகில் மறைந்து நிற்க… கீர்த்தி நேராக மகிழனது அறைக்குள் நுழைந்தாள்..
” பாப்பா தூங்கலயா நீங்க? ” என்று கேட்ட மகிழனது அருகில் சென்று அமர்ந்து கொண்ட கீர்த்தி மெதுவாக பேச தொடங்கினாள்..
” மாமா நானும் அக்காவும் டூர் போறோம்.. நீ வீட்டுல இருந்து அம்மாவை பார்த்துக்கோ ” என்று அவள் தடுமாறி கூறி முடிக்க..
” இதை யாரு உன் அக்கா சொல்ல சொன்னாளா? ” என்று கேட்டான் மகி.
” இல்லை இல்லை ” என்று கீர்த்தி விரைந்து உரைக்க.. நந்தினி தான் இப்படி பேச சொல்லி அனுப்பி இருக்கிறாள், என்பது மகிக்கு நன்றாக புரிந்து போனது…
” எங்க அவள் ? ”
” யார் மாமா? ”
” நந்தினி ” என்று அவன் அழைக்க… வெளியே வந்தாள் நந்தினி..
” கீர்த்தி என்ன சொல்லுறாள் ? எங்க போறீங்க ரெண்டு பேரும் ? ”
” டூர் பிளான் பண்ணி இருக்கேன் .. என் பிரெண்ட்ஸ் கூட போறேன் ”
” யார் அந்த பிரெண்ட்ஸ் ? ” என்று மகிழன் சந்தேகமாக கேட்க…
” அதெல்லாம் உங்க கிட்ட சொல்லணும் அவசியம் இல்லை.. தேவை இல்லாமல் என் விஷயத்தில் தலையிட வேண்டாம்.. அவள் என் தங்கச்சி எனக்கு அவளை பார்த்துக்க தெரியும் ” என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க .. எங்கு சண்டை வந்து விடுமோ என்று பயந்து போன கீர்த்தி
” மாமா விடு மாமா… நான் அக்கா கூட போறேன், ஒன்னும் இல்லை .. எனக்காக ப்ளீஸ்.. கோவப்படாத மாமா ” என்று கீர்த்தி அவனது கன்னம் பிடித்து கெஞ்ச மனம் இளகிய மகிழன் “சரி” என்று சம்மதம் கூறினான்…
நந்தினியும் அடுத்த நாளே கீர்த்தியை அழைத்து கொண்டு வீட்டிலிருந்து சென்றாள்…
நந்தினியின் வாகனம் தேவனின் மருத்துவமனையில் நின்றது…
மருத்துவமனையை கண்டு ” அக்கா இங்க எங்க ? ” என்று கேட்டாள் கீர்த்தி..
” சொல்லுறேன் கீழே இறங்கு.. என் பிரெண்டு இங்க தான் இருக்காங்க பார்த்துட்டு போய்டுவோம் ” என்று கூறி நந்தினி கீர்த்தியை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்…
கீர்த்தியை சுற்றி நின்று கொண்டு பல்வேறு மருத்துவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க.. திரு திரு வென முழித்துகொண்டிருந்தாள் கீர்த்தி…
கீர்த்தியை விட்டு விட்டு நந்தினி வெளியே செல்ல பார்க்க… அவளது கரத்தை விரைந்து வந்து பிடித்த கீர்த்தி ” அக்கா எங்க போற? என்ன என்னமோ பேசுறாங்க வா நம்ம போவோம் ” என்று கூறி எழுந்து கொண்டாள்…
” கீர்த்தி ஒரு நிமிஷம் இரு அக்கா இப்போ வந்துடுறேன் ” என்றவள் வெளியே செல்ல அங்கிருந்த உளவியல் நிபுணர் ஒருவர் கீர்த்தியிடம் ஏதோ கேள்விகள் கேட்க… பதில் கூறாமல் முழித்துக்கொண்டிருந்தாள்… அப்போது உள்ளே வந்த நந்தினி ஒரு பேப்பரை கீர்த்தியிடம் கொடுத்து அதில் கையெழுத்திட கூறவும்…
” எதுக்கு அக்கா? இவங்க என்ன என்னமோ பேசுறாங்க நம்ம போகலாம் அக்கா எனக்கு ஏதோ பயமா இருக்கு” என்ற கீர்த்தியின் கண்கள் கலங்கி போனது…
” நான் இருக்கேன்ல கீர்த்தி கையெழுத்து மட்டும் போடு போகலாம் ” என்று நந்தினி கூற… பொம்மை போல தலையை ஆட்டிவிட்டு அந்த பேப்பரில் கையெழுத்திட்டாள் கீர்த்தி…
அவள் கையெழுத்திட்டு முடிக்கவும்… நர்ஸ் ஒருவர் வந்து அவளுக்கு ஊசி போட வந்தார்… அதனை கண்டு மிரண்டவள் ” அக்கா ” என்று அலற…
” ஒன்னும் இல்ல கீர்த்தி.. இது நார்மல் தான் ” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அங்கு கீர்த்தியின் கையில் அந்த மருந்தை செலுத்தினார் அந்த செவிலியர்…
மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் கீர்த்தி கண்களில் இருள் சூழ அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தாள்… மயங்கி சரிந்தவளை ஸ்ட்ரச்சரில் படுக்க வைத்தவர்கள்.. ஆப்ரேஷன் தியேட்டர் நோக்கி அவளை அழைத்து சென்றனர்…

