விழியால் தொட்ட அழகே – 20

Loading

அத்தியாயம் – 20

 

பாஸ்கருடன் சென்ற பிறகு தான், அவன் பெரிய தாதா என்பது தெரிய வந்தது கருணாவிற்கு, அவனுக்கு அடியாட்களே ஐநூறு பேருக்கு மேல் இருந்தார்கள், அனைவர் முன்னிலையிலும் கருணாவை நிறுத்தி, இவனும் தங்களுள் ஒருவன் என்று அறிமுகப்படுத்தினான், அன்றிலிருந்து அவனது வாழ்க்கை கொலை கொள்ளை கடத்தல் என்றாகி போனது, வளர வளர உடம்போடு சேர்த்து மனதையும் இரும்பாக்கி கொண்டான், கண்மணியை பற்றி வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தான், அவளை பற்றி நினைத்தால் அவன் பலவீனமாகி விடுவான் என்பதாலேயே கண்மணி ஒருவள் இருந்தால் என்பதையே மறந்து தவறு என்று தெரிந்தும் ரவுடிகளின் குரூப்பில் சேர்த்து ரவுடி என்ற பெயர் வாங்கினான், தன் உயிரை காப்பாற்றியதாலேயே பாஸ்கர் கருணாவை நன்றாகவே பார்த்துக் கொண்டான் மகனை போல, கருணாவின் இருபதாவது முடிவில் பாஸ்கர் இறந்து போனான் உடல்நலகுறைவால், தங்கைக்கு பிறகு பாஸ்கருக்காக அன்று கண்ணீரை சிந்தினான், பாஸ்கரின் மறைவுக்கு பிறகு ஒரு கூட்டமாக இருந்த அவர்களின் அணி கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து போனது, அப்படி பிரிந்து போனவர்கள் தான் ஒரு க்ரூப்பாய் இணைந்த கருணா மற்றும் அவனது அடியாட்கள் ஐந்து பேர், காசு கொடுத்தால் கொலையும் செய்வார்கள், அதிக பணத்திற்காக கொள்ளையும் அடிப்பார்கள், பெரிய தலைகள் யாரையாவது கடத்த சொன்னால் கடத்தவும் செய்வார்கள், தேவைபட்டால் அவர்களின் மகள்களையும் கடத்துவார்கள், இப்படி தான் போய் கொண்டிருக்கிறது கருணாவின் வாழ்க்கை, நித்யாவை பார்த்த பிறகு அவளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது, அதை அவளிடமும் பகிர்ந்து கொண்டு, தன் கதையையும் கூறி முடித்தான்…. நித்யா கருணாவின் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ரவுடியான இவனின் மனதில் இத்தனை பெரிய துன்பமான சம்பவங்களும் நிகழ்ந்தேறி இருக்கிறதா என்று வேதனை பட்டாள், சூழ்நிலையால் ரவுடியாகியவன் திருந்தி வாழ ஆசை படுகிறான், அவன் ஆசையை ஏன் நிறைவேற்ற கூடாது, அவன் சொன்னது போல தான் யாரோ ஒருவனை கல்யாணம் செய்து கொண்டு அவனுடன் தான் இருக்க போகிறோம், அது ஏன் கருணாவாக இருக்க கூடாது, அன்புக்காக ஏங்கி போயிருக்கிறவனுக்கு தான் ஏன் அன்பு செலுத்த கூடாது, அரவணைக்க கூடாது என அவள் மனம் கேள்வி கேட்டது, அந்த நிமிடம் முடிவு செய்தாள் தான் கருணாவுடனே இருந்துவிடலாம் என்று, தன் முடிவை கருணாவுடனும் பகிர்ந்து கொண்டாள், உன்னை விட்டு போகமாட்டேன் எந்த நிலையிலும் உன் கூடவே இருப்பேனென்று வாக்கு கொடுத்தாள், அந்த கணம் அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை, அன்றிலிருந்து தான் இனி கத்தி துப்பாக்கி என்று எந்த வித ஆயுதத்தையும் எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான் அவள் கேட்பதற்கினங்க, அவளது சொல்லுக்காக அந்த நொடியே துப்பாக்கியை தூக்கி எறிந்தான்,…

நித்யா எப்படியாவது தன் தாய் தமையனிடம் கருணாவை பற்றி கூறி அவனையே கல்யாணம் செய்து கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டாள், அவர்கள் உடனடியாக சம்மதிக்க மாட்டார்கள் என்பது தெரியும், அதனால் அவர்களை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதை பற்றி தான் அடுத்த இரண்டு நாட்களும் ஆரவாரமாக சிந்தித்து கொண்டிருந்தாள், இதற்கிடையில் “கிளம்பு ஸ்ரீ, நான் உன்னை உன் வீட்டுல விட்டுடுறேன், சீக்கிரமே உன் வீட்ல உள்ளவங்க கிட்ட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கு” என்றபடி வந்து நின்றான் கருணா….

நித்யாவும் சரி என்றாள், அந்த நேரம் தான் அவர்களே எதிர்பாராவிதமாய் அவர்கள் இருக்கும் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு காக்கிஉடை அணிந்தவர்கள் அவர்களை சுற்று போட்டனர், நித்யா மிரண்டு போனாள், அவர்களை பின்தொடர்ந்து வந்த தமையன் வருணேஷை கண்டு கொண்டதும் அவள் மனது நிம்மதி கொள்ள, “அண்ணா” என்று அவள் வருணேஷை நெருங்க போன நேரம், கருணாவின் கரம் நித்யாவின் கரம் பிடித்து தடுத்து நிறுத்தியது, அவள் தன்னை விட்டு செல்வதை அந்நொடி ஏற்க முடியாமல் தான் அவன் தடுத்தான், அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தெரியாத ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, அவளை போக விடாமல் அவன் தடுப்பதை கண்டு கருணாவின் தோள்பட்டையை பதம் பார்த்தான், நித்யா வாயை பொற்றி அலறினாள்,…

அவன் பதட்டம் கொள்ளவில்லை, ஆனால் கோபம் வந்தது, தன் சட்டையின் பின்புறமிருத்து துப்பாக்கியை எடுக்க நினைத்தான், ஆனால் அதை தான் எங்கோ தூக்கி போட்டு விட்டானே அவளுக்காக, நொடியில் புரிந்து கொண்டவனின் முகத்தில் ஏமாற்றம், அவனை அவர்கள் என்கவுன்டர் செய்து விடுவார்களோ என்று பதட்டம் கொண்டான், நித்யாவுடன் வாழ முடியாமல் போய்விடுமோ என்று பயந்தவன், தன்னை காப்பாற்றி கொள்ளவே நித்யாவை தன் பக்கமாக இழுத்து, அவளை பகடை காயாய் உபயோகிக்க நினைத்தான், அதை பற்றி மெல்லிய குரலில் நித்யாவிடமும் அவன் உரைக்க, ஏற்கனவே அவன் ஆயுதத்தை தூக்கி போட வைத்து விட்டோமே, அவன் கையில் ஆயுதம் இருந்திருந்தால் இந்நேரம் தப்பி சென்றிருப்பானே என்ற தவிப்பில் நின்ற நித்யாவும், அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டாள், ஆனால் காவல் அதிகாரியோ நித்யாவை அவன் கொல்ல பார்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு, அவனது மற்றொரு தோள்பட்டையில் இன்னொரு குண்டை பாய்ச்சியது அவன் அசந்த நேரத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்தான், விழுந்தவனின் தலையில் பலத்த அடி பட்டது, மண்டை உடைந்து ரத்தம் கரகரவென்று வெளியேறியது, நித்யா “வேணாம், அவனை சுடாதீங்க,” என்று கத்தி கதறியவள், ரத்தம் வெளியேறிய நிலையில் பேச்சு மூச்சுற்று போய் கிடைந்தவனை பார்த்து மயக்கம் வரவே அங்கேயே மயங்கி சரிந்தாள்,….

அவள் கண்விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள், அவளுடன் தாயும் தமையனும் இருந்தனர், இருவர் முகத்திலும் நித்யா நலமாக கிடைத்து விட்டாள் என்ற நிம்மதியை காண முடிந்தது, ஆனால் நித்யா அவர்களை கண்டு கொள்ளவில்லை,… “கருணா எங்கே? அவனுக்கு என்னாச்சு?” என்று கத்தினாள், செந்தூரமும் வருணேஷும் அவளை குழப்பமாய் பார்த்தனர், “ஸ்ரீமா,…நீ நல்லா இருக்கல்லடா, இவ்வளவு நாள் உன்னை காணாம எவ்வளவு பயந்து போனோம் தெரியுமா, நீ கடத்தப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் துடிச்சு போயிட்டோம்” என்ற அன்னையின் வார்த்தைகள் அவளது காதில் விழவில்லை,…

“கருணா எங்கே இருக்கான், தயவு செஞ்சு சொல்லுங்க” என்று கேட்டு சத்தமிட்டாள்,….

“கருணான்னு யார சொல்ற,” வருணேஷ் புரியாமல் வினவ,.. “அவன் தான், என்கூட இருந்தானே, போலீஸ் சுட்டாங்களே, யாரை கேட்டு அவனை சுட்டாங்க, அவனை ஏன் சுட்டாங்க, அவனுக்கு ஏதாச்சும் ஆச்சு, அவங்களை சும்மா விட மாட்டேன்” என்று எகிறியவளை இருவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்,…

“ஸ்ரீ நீ என்ன பேசிக்கிட்டு இருக்க, சுயநினைவோடு தான் இருக்கியா?, அவன் உன்னை கடத்திட்டு போனவன், அவனுக்காக எங்க கிட்ட எகிறிக்கிட்டு இருக்கியா?” ஆதங்கத்துடன் கேட்டார் செந்தூரம்,

“அவன் என்னை கடத்திட்டு போனான் தான், ஆனா என்னை பத்திரமா பார்த்துகிட்டான், ஏன் ஏன் இப்படி பண்ணாங்க அந்த போலீஸ்காரங்க, இப்போ கருணா எங்கே இருக்கான், நல்லா தானே இருக்கான்” என்று கேட்டவளை இருவரும் பைத்தியத்தை பார்ப்பது போல் பார்த்தனர், அவள் மீண்டும் மீண்டும் கருணாவை பார்க்க வேண்டும் என்று கதறியதில் தூக்க மருந்தை செலுத்தி தூங்க வைத்தனர், தூக்க மருந்தின் வீரியம் குறைந்து எழுந்த போதும் அவள் கருணாவை பற்றியே கேட்க, செந்தூரம் தான் அவளை சமாதானம் செய்தார், வேறு வழியே இல்லாமல் கருணா சிகிச்சையில் இருக்கும் விஷயத்தை வருணேஷ் கூறினான்,….

வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆன பிறகும் கருணாவை பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள் நித்யா, மருத்துவமனையில் இருந்த போதே கேட்டால் தான் அவர்கள் தான் சமாதான வார்த்தை கூறி அப்போதைக்கு சமாதான படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர், வீட்டிற்க்கு வந்ததும் அவள் மீண்டும் கருணாவை பற்றி கேட்க, பொறுத்து பொறுத்து போன செந்தூரம் மகளின் மீது கோபத்தை காட்டினார், “அவன் உன்னை கடத்திட்டு போய் எங்களை கதற வச்ச ரவுடி, அவனை போய் பார்க்கணும்னு அடம் பண்ணிக்கிட்டு இருக்க, பைத்தியமா பிடிச்சு போச்சு உனக்கு” என சத்தம் போட்டார்…

“அம்மா அவன் ரவுடி தான், ஆனா எனக்காக எல்லாத்தையும் விட்டுடுறேன்னு சொன்னான், சின்ன வயசுலருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டான், சூழ்நிலை அவனை அப்படி மாத்திவிட்டுடுச்சு, அன்புக்காக ஏங்குறான், நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போதும் போதுங்கிற அளவுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் அன்பை கொடுக்கணும், சந்தோசமா வச்சுக்கனும், எனக்காக நான் சொன்னதுகாக தான் அவன் துப்பாக்கியை தூக்கி போட்டான், அவன் கையில அவனோட ஆயுதம் இருந்திருந்தா இந்நேரம் அவன் நலமா இருந்திருப்பான்” என தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே அழுதவளை, தாயும் மகனும் அதிர்ந்து போய் பார்த்தனர்….

“என்னடா என்ன பேசிக்கிட்டு இருக்கா இவ, புத்தி எதுவும் பேதழிச்சு போச்சா” என தாய் மகனிடம் புலம்ப,…. “அவன் நம்ம ஸ்ரீயை ஏதோ பிரைன்வாஷ் பண்ணிருக்கான்மா, அதான் அவ இப்படி பேசிக்கிட்டு இருக்கா, அவளை நாம இப்படியே விட்டுட கூடாதுமா, ஏதாச்சும் பண்ணனும்” என்றான் கவலையுடன்,….

“என்னடா என்னென்னமோ சொல்ற, எனக்கு பயமா இருக்கு,” என ஒரு தாயாய் அவர் உள்ளம் மகளை நினைத்து பதற,… “கவலை படாதம்மா, நான் பார்த்துகிறேன்” என்றவன் வெளியே எங்கோ கிளம்பி சென்றான்,…

சில மணி நேரத்தில் தாயிடம் வந்தவன்,… “அம்மா,… நாம நம்ம ஸ்ரீக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” மகனின் கூற்றில் திகைத்தவர்,… “என்னடா சொல்ற, கல்யாணமா? திடீர்னு எப்படிடா கல்யாணம் பண்ணுறது” என்றார்,…

“அவ மனசு அந்த ரவுடி பயலால நிறையவே குழம்பி போயிருக்கு, என்ன சொல்லி அவளை இந்தளவுக்கு மாத்தி வச்சிருக்கான்னு தெரியல, போக போக சரியாகிடுவான்னு இதை நாம இப்படியே விடுறதும் எனக்கு சரியா படல, அவ எதிர்காலம் இதனால பாதிக்கபட்டுட கூடாது, அதனால தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன்” என்றான்,..

“திடீர்னு எப்படிடா கல்யாணம் பண்ணுறது, முதல்ல நம்ம ஸ்ரீக்கு ஏத்த மாப்பிளைய பார்க்கணும், அப்புறம்” அவர் கூற வருகின்ற அனைத்தும் புரிந்தவன்,… “மாப்பிளை ரெடியா இருக்கான்” என்றுவிட்டு தன் நண்பனை பற்றி கூறினான், நித்யாவிடம் இவ்விஷயத்தை பற்றி கூற அவள் முடியவே முடியாது என திட்டவட்டமாக மறுத்தாள், செந்தூரம் தன் மகள் வாழ்க்கை நல்முறையில் அமைய வேண்டும் என்பதற்காக செத்து போய்விடுவேன் என மிரட்ட, முதலில் தன் தாயின் மிரட்டலை அலட்சிய படுத்தியவள், அவர் சாக துணிந்ததை அறிந்து பதறி விட்டாள், திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள், ஒரே வாரத்தில் விருப்பமே இல்லாமல் ரிஷியின் கரம் பற்றினாள், அவன் தன் கழுத்தில் தாலி அணிவிக்கும் போது அவள் எதிர்பாக்கவில்லை அவனை தான் நேசிப்போம் என்று, கருணாவை பற்றி தன் கணவனானவனிடம் கூறி எப்படியாவது கருணாவிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என கணக்கு போட்டவள், இப்போது அவனது அன்புக்கு அடிமையாகி அவனை மனதார காதலிக்க ஆரம்பித்து விட்டாள், கருணாவின் மீது வந்தது காதல் அல்ல என்பதை ரிஷியுடன் இருந்த நேரத்தில் அறிந்து கொண்டாள், இப்படியாக அவள் தன் கடந்து காலத்தை நினைத்து எண்ணிக் கொண்டிருக்க, அங்கு அவனது கணவனை ஒட்டு மொத்தமாக உலகத்தை விட்டு அனுப்புவதற்காக சில கயவர்களால் திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தது…

“என்ன நித்து ரொம்ப டல்லாயிருக்க மாதிரி இருக்கு” கண்ணாடியின் முன்பு நின்று முகத்தில் வருத்தம் தெரிய ஏதோ யோசித்து கொண்டிருந்தவளை பின்னாலிருந்து வந்தணைத்தான் ரிஷி மித்ரன்,…

காலையில் அவன் கொஞ்சம் கோபமாக பேசிவிட்டு போனதை எண்ணி, அன்று முழுக்க வருத்தத்துடன் வலம் வந்தாள், பாட்டியும் தாத்தாவும் கூட அவள் முகத்தை கணித்து, “உடம்பு எதுவும் சரியில்லயாடா? ரிஷி ஏதாவது சொன்னானா?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து விட்டார்கள், அம்மா நியாபகம் வந்து விட்டது என கூறி பாட்டியின் மடியில் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும், அதற்கு பிறகு சகஜமாகவே உரையாட ஆரம்பித்திருந்தாள், அறைக்கு வந்த பின்னர் மீண்டும் ரிஷியின் கோபவார்த்தைகள் நினைவு வந்து வேதனை படுத்தவே, அவனை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தாள் கண்ணாடியின் முன்பு நின்று, அப்போது தான் அறைக்கு வந்த ரிஷி அவளை அணைத்து விசாரித்தான்,…

கணவனின் வருகையை அறியாதவள், அவனது அணைப்பில் யோசனையிலிருந்து வெளி வந்தாள், “ஒன்னுமில்ல” என்றாள் அவன் கேள்விக்கு பதிலாய்,….

“இல்லையே,…. முகமே காட்டி கொடுக்கிதே ரொம்ப ஃபீலிங்ல இருக்கனு” என கேட்டுக் கொண்டே அவளை தன் பக்கம் திருப்பி அவள் இடையை சுற்றி தன் கரங்களால்  வளைத்தவன்,… “என்ன உன் லவ்வர் நியாபகமா?” என்றான்,….

அவன் மீண்டும் மீண்டும் கருணாவை லவ்வர் லவ்வர் என கூறுவது அவளுக்கு கோபத்தை தரவே, அவனை முறைத்து விட்டு அவனை பிடித்து தள்ளி விட்டவள், எதுவும் பேசாமல் அறையை விட்டே நகர முயல, அந்த கணம் போனவளின் கரம் பிடித்து இழுத்து தன் மீது போட்டவன் அவளுடன் கட்டிலில் சரிந்தவாறு… “இப்போலாம் உனக்கு அதிகமா கோபம் வருது, இல்ல நித்து” என்றான் அவள் மூக்கை பிடித்து ஆட்டியபடி,…

அவள் எதுவும் பேசவில்லை, அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்ள,… “அட” என அவளை தூக்கி தன் மீது போட்டுக் கொண்டு,.. அவளது முதுகில் கரத்தை படரவிட்டு அவள் எழ முடியாதளவிற்கு அணை போட்டுவிட்டு, அவள் முகம் பார்த்தவன்…. “பேச மாட்டியா நித்து” என்றான் தன் பார்வையால் அவள் முகத்தை அளந்தபடி,….

அப்போதும் அவள் பேசவுமில்லை, அவன் முகத்தையும் பார்க்கவுமில்லை, அவள் அவன் மீதிருந்தாலும் அவள் பார்வை முழுக்க வேறு பக்கம் தான் இருந்தது, அவளது செயலை புருவம் உயர பார்த்தவன், இதழோர சிரிப்பொன்றை வெளியிட்டு,…. “நித்து என்னை பாரேன்” என்றான் மீண்டும், அப்போதும் அவள் பார்க்கவில்லை,….

“உனக்கு அவ்வளவு வீம்பாடி” என்றவன் எட்டி அவளது மூக்கை கடித்து வைக்க, வலியில் “ஷ்ஷ்” என்று முணங்கினாளே தவிர, அவனை பார்க்கவில்லை,…

“நான் வேணும்னா உன்னை இப்போதே கருணா கிட்ட கொண்டு போய் விட்டுடட்டுமா” அவனது சொல்லில் அவளது பார்வை அவன் முகத்தில் வந்து நின்றது, அவள் விழிகளில் சந்தோசத்தை காணவில்லை அவன், அதனை உணர்ந்த அவன் மனம் துள்ளி குதிக்க, அடுத்த கணம் அவளது இதழை கவ்விக்கொண்டான் காதலோடு, அவனை தடுக்க நினைத்தவளும், வழக்கம் போல் அவன் முத்தத்தில் உருகி அவனுடன் மூழ்கி முத்தெடுத்தாள்,…..

*****************

“நித்து நாம வெளியே எங்கேயாச்சும் போலாமா” என்றான் ரிஷி,… கணவனின் கோப வார்த்தையால் வருத்தத்தில் இருந்தவள், அவன் மேலும் மேலும் கருணாவை பற்றியே பேசவும், அவனிடம் பேசவே கூடாது என்ற ஒரு முடிவோடு தான் இருந்தாள், எவ்வளவோ முயன்று கொஞ்ச நேரம் அவனிடம் பேசாமல் போக்கு காட்டியவள், அவனது ஒற்றை முத்தத்திலேயே மயங்கி கிறங்கி அவனுள் ஐக்கியமாகி போனாள், இரவு நடந்த ஊடலுடன் சேர்ந்த கூடலில் அவளது கோபமும் மொத்தமாக குறைந்திருக்க, வழக்கம் போல சகஜமாக உரையாட தொடங்கியிருந்தாள், அவனுக்கு வேண்டிய உடைகளை அயர்ன் செய்து, குளித்து முடித்து வந்தவனிடம் அணிந்து கொள்வதற்காக நீட்டிக் கொண்டிருந்த சமயம் தான் அவன் அக்கேள்வியை கேட்டான் திடீரென்று,…

“என்ன திடீர்னு வெளியேலாம் கூப்பிடுறீங்க” காரணம் இல்லாமல் அழைக்க மாட்டானே என்ற யோசனையுடன் தான் வினவினாள்,…

“நமக்கு கல்யாணமாகி ஒருமாசம் ஆக போகுது, இதுவரை என் பொண்டாட்டியை வெளியே எங்கேயும் அழைச்சிட்டு போகல இல்லயா? அதான்”  இடுப்பில் டவலுடன் நின்றவன் அவளை தன்னருகே இழுத்து, அவளை இடையோடு அணைத்தான்,….

“எங்கே போலாம்” அவனது அணைப்பை இதமாய் அனுபவித்துக் கொண்டே விழிகள் பளிச்சிட ஆர்வமாய் வினவினாள்,….

“நீயே சொல்லு, உனக்கு எங்கே போகனும்னு ஆசை” என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி,.

“கோயிலுக்கு போலாமா?” அவளிடமிருந்து இதை எதிர்பார்க்காதவன், கொஞ்சம் ஏமாற்றமாய் அவளை பார்த்துவிட்டு அவளது ஆசையை நிராசையாக்க விரும்பாமல்,… “ம்ம்… போலாமே” என்றுவிட்டு,…. “வேற” என்றான்,…

“வேற என்ன? கோயிலுக்கு மட்டும் போயிட்டு வீட்டுக்கு வந்துடுவோம்” அவள் உதட்டை சுழித்து கூற,… “ஏதாச்சும் ரொமாண்டிக்கான பிளேஸ் சொல்லுவன்னு எதிர்பார்த்தேன் நித்து, இட்ஸ் ஓகே எனக்கு வாச்சது அவ்வளவு தான்” என்ற புலம்பலுடன் அவன் விலகி கொள்ள,…. “நாம வேணும்னா கோயிலுக்கு போயிட்டு ஹோட்டல் எங்கேயாச்சும் போயிட்டு வருவோமா” அவன் முகம் சிறுத்துவிட்டதில், அவசரமாக யோசித்து ஒரு ஐடியா கொடுத்தாள்,…

“ஹோட்டல்க்கா?” என நெற்றி சுருங்க கேட்டவன் “போலாமே,… கேண்டில் லைட் டின்னர், என் வைஃப் கூட போகணும்னு கல்யாணத்துக்கு முன்னாடிலிருந்தே ஆசை, இன்னைக்கு அந்த ஆசையை நனவாக்கிடலாம்” என்று கண்கள் மின்ன கூறியவன்,… “நான் ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன், நீ  ரெடியா இரு” என உடையணிந்து முடித்தவன், மனைவி கையில் பரிமாறியதை உண்டு விட்டு, வேலைக்கு கிளம்பினான்…..

அவன் போன நிமிடத்திலிருந்தே சாயந்தரம் கணவனுடன் வெளியே செல்லும் போது என்ன உடை உடுத்தலாம் என்று தான் அலமாரியை ஒரு வழியாக்கி கொண்டிருந்தாள் நித்யா, கணவனுடன் முதல் முறை வெளியே செல்ல போகிறாள், அவன் கண்ணிற்கு இன்று, தான் கூடுதல் அழகாக தெரிய வேண்டும் என்பதற்க்காகவே மணி கணக்காக உடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள், தாய்க்கு அழைத்து தான் எந்த உடையில் அழகாய் இருப்பேன் என்று வினவினாள், திடீரென்று மகள் போன் பண்ணி இதை ஏன் கேட்கிறாள் என்பது புரியாத செந்தூரம், காரணத்தை கேட்க, அவள் கூறவில்லை, தன் கேள்விக்கு விடை கேட்டு நின்றாள், அவரும் “உனக்கு புடவை நல்லா இருக்கும்டா” என பதில் கூறவும் விடை கிடைத்து விட்ட திருப்தியில் பிறகு பேசுவதாக கூறிவிட்டு வைத்து விட்டாள், செந்தூரம் தான் எதுவும் புரியாமல் மகனிடம் புலம்பினார்,…

செவ்வந்தியிடமும் விசாரித்தாள், தனக்கு என்ன உடை நன்றாக இருக்கும் பாட்டி என்று கேட்டாள், அவளின் முகத்தை ஆராய்ந்தவர் கேள்வி கேட்டு குடையாமல் “புடவை நல்லா இருக்கும் கண்ணு” என்றார்,…

“தேங்க்ஸ் பாட்டி” என கூறி அவரது கன்னத்தில் சந்தோஷமாக முத்தம் ஒன்று வைத்தவள், அறைக்கு ஓடினாள்,… “பேத்தி முகத்துல இன்னைக்கு ஒரு வித தேஜஸ் தெரியுதுல செவ்வந்தி” மனைவியிடம் மகிழ்ச்சியுடன் விசாரித்தார் தர்மா,…

“ஆமாங்க, நேத்து தான் கூம்பி போன முகமா வலம் வந்தாளேன்னு, பார்க்க பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, இன்னைக்கு மலர்ந்த முகமா பார்த்த பிறகு தான் என் மனசுக்கும் நிம்மதியா இருக்கு, ஒரு நாள் சந்தோசமா இருக்கா, ஒரு நாள் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு இருக்கா, நம்ம பேரன் பேத்தியோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே தெரியல, ரெண்டு பேரும் சந்தோசமா தான் இருக்காங்க, ஆனா ஏதோ பிரட்சனை இருக்க மாதிரியும் சில நேரம் தோணுதுங்க” என்று புலம்பினார் செவ்வந்தி,…

“கவலை படாத செவ்வந்தி, புதுசா கல்யாணமானவங்க, போக போக புரிஞ்சிக்கிட்டு சரியாகிடுவங்க, நமக்குள்ள வராத மனஸ்தாபமா? ஒன்னு சொன்னாலே கோச்சுகிட்டு முகத்தை தூக்கி வச்சுப்ப, அப்படி பார்த்தா என் பேத்தி தங்கம், உன் பேரன் தான் முரடன்” என்றான் சைடு கேப்பில் மனைவியையும் குத்திக் காட்டிக் கொண்டே,…

“என்னை இழுக்கலன்னா உங்களுக்கு தூக்கம் வரதே” என கழுத்தை நெடித்துக் கொண்டு அவர் எழுந்து சென்று விட,.. “பார்த்து செவ்வந்தி, வயசான காலத்துல கழுத்து சுளுக்கிக்க போகுது” என மனைவியை கிண்டல் செய்தவர், அவர் நின்று திரும்பி பார்த்து முறைக்கவும், வாய்விட்டு சிரித்தார் ஆனந்தமாக,… “இந்த கிண்டல் கேலியையெல்லாம் அடக்க என் கொள்ளு பேரனோ பேத்தியோ வருவா, அப்போ உங்களை வச்சுக்கிறேன்” என்று கூறியவரின் இதழும் புன்னகையில் விரிந்திருந்தது,…

சில மணி நேர தேர்ந்தெடுப்பிற்கு பிறகு, பேபி பிங்க் நிற டிசைனர் புடவை ஒன்றை தேர்ந்தெடுத்த நித்யா அதற்கு மேட்சிங்கான ஆபரணங்களையும் தயாராக எடுத்து வைத்தாள், பாட்டியிடமும் தாத்தாவிடமும் உணவுன்னும் கொஞ்ச நேரம் கதை அளந்தாள், ரிஷியுடன் வெளியே போக போகின்ற விஷயத்தை கூற ‘ஓஹ்… இதான் விஷயமா?’ என இரு மூத்தவர்களும் அர்த்தமாக பார்த்து சிரித்துக் கொண்டவர்கள், நித்யாவை எதுவும் சீண்டவில்லை,….

மூன்று மணியிலிருந்தே தயாராக ஆரம்பித்து விட்டாள் நித்யா, பார்த்து பார்த்து மிகவும் நேர்த்தியாக புடவை உடுத்தினாள், கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்தாள், தங்க வளையல்கள் இருந்தாலும் அந்த புடவைக்கு ஏற்ற நிறத்தில் கண்ணாடி வளையல்கள் இருந்ததால் தங்க வளையல்களை விட இது நன்றாக இருக்கும் என எண்ணி கண்ணாடி வளையல்களையே அணிந்து கொண்டாள், காதில் பிங்க் நிற கற்கள் பதித்த அழகான டிசைனர்  தோடு, கழுத்திலும் அதற்கு மேட்சான சிம்பிளான நெக்லஸ், அதோடு அவளது தங்க தாலி, தலையை தளர பின்னி மல்லிகப்பூவை அதிகமாகவே சூடிக் கொண்டாள்,….

முகத்திற்க்கு இன்று பிரைமரில் ஆரம்பித்து ஃபவுண்டேஷன், காம்பக்ட் பவுடர் வரை அனைத்தையும் பூசினாள், கண்ணின் மேல் பட்டையில் ஐ லைனர், கண்ணிற்கு கீழே காஜல் இட்டதோடு விட்டுவிட்டாள், புருவத்திற்கு லேசாக கருமை தீட்டிக் கொண்டு, உதட்டிற்கும் சாயம் பூசிக் கொண்டாள்,…….

வழக்கமாக கண்ணிற்கு காஜல் வைப்பாள் அவ்வளவே, கடைசியாக தாய் வீட்டிற்கு மறு வீடு சென்ற போது உதட்டுசாயம் போட்டுக் கொண்டாள், இன்று கொஞ்சம் கூடுதலாகவே அழகு சேர்க்கனும் என்று சில அழகு சாதன பொருட்களை சேர்த்து உபயோகப்படுத்திக் கொண்டாள்,… கண்ணாடியையும் ஒருமுறைக்கு பல முறை பார்த்துக் கொண்டவளுக்கு எல்லாம் பக்காவாக இருப்பது இருந்தது, அதே நேரம்…. “நித்து ரெடியா” என்றவாறு சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தான் ரிஷிமித்ரன்,….

வந்தவன் மனைவியின் அழகு முகத்தை கண்டு மெய்மறந்து நின்றுவிட்டான், அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இவள் இவ்வளவு அழகாக தயாராகுவாள் என்று, மறுவீட்டு பங்சனின் போது கூட இவ்வளவு அழகாக இருக்கவில்லை, இன்று ரதியை போல் மின்னினாள், கணவனின் விழுங்கும் பார்வை அவளை நாணி சிவக்க வைக்க, தலை குனிந்து கொண்டாள், ஏற்கனவே அவள் அழகில் மயங்கி நின்றவன், அவளது வெட்கி சிவந்த முகம் கண்டு அவன் உணர்ச்சிகள் புடைத்தெழுந்து அவன் ஆண்மையை விழிக்க வைத்தது,… “நி.. நித்து ப்ரோக்ராம் கேன்சல்” அவனது தாபமான குரலில் சட்டென நிமிர்ந்தவள்,…”என்னது, ஏன் மித்து, நான் ஆசை ஆசையா ரெடியானேன்” என்றவளின் முகம் விழுந்து விட்டது,…

“பொய் சொல்லாம சொல்லு, நிஜமா வெளியே போகணும்னு தான் நீ ரெடியானியா? இல்ல நான் உன் மடியிலேயே கிடக்கணும்னு எதுவும் வேற மாதிரி பிளான் போட்டு ரெடினானியா” அவன் சொல்லின் அர்த்தம் புரிந்து, வெட்கம் நெடித்து தள்ள, உதட்டை கடித்து தன் உணர்சிகளை அடக்கி கொண்டவளின் அருகில் வந்தவன், அவளது இதழை அவளது பற்களுக்கிடையிலிருந்து தன் விரல்களால் எடுத்து விட்டு,…”நோ நித்து, இது எனக்கு சொந்தமானது, அதை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாத” என அவளது இதழை வருடிக் கொண்டே கூற,… “மித்து” என்று கூற வந்தவளின் இதழ்கள் நொடியில் அவன் வசமிருந்தது….

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்