
“விக்ரா! ஐயோ என் தங்கம்” என்ற பரிதவிப்புடன் விக்ரமைக் காண வந்தனர் விஜயா குருமணி தம்பதியினர்.
“விஜிமா” எப்போதும் மாறாத அன்புடன் கண் கலங்கிய பேரனை வாரி அணைத்து கொண்ட விஜயா, “எங்களை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு விக்ரா” என ஆதங்கத்தில் தவித்தார்.
“காதலுக்கு கண்ணில்லை விஜி… இப்போ எதுக்கு அதை பேசிக்கிட்டு” எனக் கடிந்த குருமணி,
“சீக்கிரம் சரியாகி வா விக்ரா. அந்த ஹோம்ல உன்ன பார்த்தா தான் எங்க மனசு நிறையும்” என்றதில், “சாரி குருப்பா” எனக் குற்ற உணர்வுடன் மன்னிப்பு வேண்டினான்.
“போடா ராஸ்கல். சாரியாம்! எங்க பேத்தியை பார்த்தோம். உன்னை உரிச்சு வச்சுருக்கா…” என்னும்போது தான் அவர்களுக்கு அருகில் விழித்துக்கொண்டு நின்ற திலோத்தமாவைக் கண்டார்.
“இது… பவி டார்லிங்கோட சிஸ்டர் தான?” கிண்டலாகக் கேட்ட குருமணியிடம், “என் கண்ணைப் பறிச்ச என் ஆசை காதல் மனைவி” விக்ரம் அழுத்தமாய் அவளது உரிமையைப் பதிய வைத்தான்.
விஜயாவும் குருமணியும் நமுட்டு நகை புரிந்தனர்.
“கண்ணை பறிச்சேனா?” திலோத்தமா குழப்பமாகக் கேட்டதில்,
“ம்ம்ம்… காதலுக்கு கண்ணில்லையாமே. அப்போ என் கண் பறிபோனதுக்கு காரணம் நீ தான திலோ” என்றதில் அவளுக்கு கன்னங்கள் ரத்த நிறத்தில் சிவந்தது.
சற்றே தயக்கமும் மேலிட, அந்தப் பேச்சைக் கத்தரிப்பது போல, “கிண்டல் பண்ணாதீங்க விக்ரம்… உங்களுக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்று சின்னச் சிரிப்புடன் அறையைக் கடந்தாள்.
கடந்த ஐந்து வருடத்தில், அன்பும் நேசமும் கரைபுரண்டு ஓடினாலும் இருவருக்குள்ளும் காதலென்ற வார்த்தை மட்டும் மறைமுகமாவே கடந்து சென்றது. காதலைத் தெரியப்படுத்தும் ‘ஐ லவ் யூ’ என்ற வாசகத்தைக் கூட , அவனுக்கு விபத்து நேர்ந்த பிறகே பலமுறை பயன்படுத்துகிறாள் திலோத்தமா. அதற்கு மறுமொழி கூட அவனிடம் இருந்து வந்ததில்லை. அவள் எதிர்பார்த்ததுமில்லை. அந்த வார்த்தையைத் தாண்டிய நேசத்தை அவன் கொடுத்திருக்கிறானே! ஆனாலும் சொல்லிருக்கலாமோ. சிறு ஏமாற்றம் அவ்வப்பொழுது.
ஆடவனின் அதரங்கள் உரைத்த காதெலென்ற ஒற்றைச் சொல் அவளுக்கு புத்தம் புதிய தவிப்பைக் கொடுக்க, கூடவே சிறு வலியையும் கொடுத்தது.
அவளது நாணச் சிவப்பை ரசித்த விக்ரமிற்கு ஏனோ அவளிடம் ப்ரொபோஸ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியது.
இதுவரை அவனும் சிந்திக்கவில்லையே, அவளது உரிமையை உணர்த்த தனது ஆசை மனைவி என்றும், தனது நேசத்திற்கு சொந்தக்காரி என்றும் பல முறை கொஞ்சி இருக்கிறான். ஆனால் காதல்!?
அவளது வலி தாங்கிய நாணம் கண்டபிறகே, அவளுக்கு காதலென்ற உணர்வைப் புகுத்தவில்லையோ என்ற சந்தேகம் பிறந்தது!
“என்னங்க சார், இப்ப தான் கல்யாணம் ஆன மாதிரி ரெண்டு பேரும் இப்படி வெட்கப்படுறீங்க…” குருமணி கேலி செய்ய,
விஜயா தான், “கண்ணு வைக்காத குரு!” என்று முதுகில் அடித்தார்.
“ஆல்ரெடி லேசர் பண்ணுன கண்ணை மேல வச்சா என்ன வைக்கலைன்னா என்ன…” எனச் சிலுப்பியவர், விக்ரமுடன் இணைந்து அரட்டை அடிக்கத் தொடங்கினார்.
இருவருக்கும் பழச்சாறு வாங்கி வந்த திலோத்தமாவும் இயல்பாகப் பேசத் தொடங்க, அவளை மிகவும் பிடித்துப் போனது பெரியவர்களுக்கு.
“பவி டார்லிங் மாதிரி திலோ டார்லிங்கும் வெரி ஸ்வீட்” என குருமணி கூறும்போதே, அக்னிலாவுடன் அங்கு வந்தாள் பவித்ராத்யா. அவர்களுடன் அக்னி வேந்தனும்.
“ஹாய் அங்கிள் ஹாய் ஆண்ட்டி” என ஆளுக்கு முன் அவர்களை வரவேற்ற பவித்ராத்யாவிடம், “உன்மேல கோபமா இருக்கேன் டார்லிங்” எனக் கோபித்துக்கொண்டார் குருமணி.
“மீ பாவம் அங்கிள். நான் என்ன பண்ணுனேன்?” அவள் உதட்டைப் பிதுக்க,
“ஒரு வாரமா நீ எங்களை பார்க்கவே வரல. நீ யோகா சொல்லிக் குடுக்காம உடம்பு வளைய மாட்டேங்குது” என்றதில், “நான் சொல்லிக்கொடுத்ததை ஃப்ரீ டைம்ல பண்ண சொன்னேன்ல. நீங்க பண்ணவே இல்லை அப்படி தான?” என்று அவளும் முறைத்தாள்.
அதில் குருமணி அசடு வழிய விஜயா சிரித்ததில், “உங்களுக்கும் சேர்த்து தான்…” என்றதும் குருமணி, “சரி இங்கயே இடம் நல்லா தான் இருக்கு. ஒரு மணி நேரம் க்ளாஸ் வச்சுப்போமா டார்லிங்” எனக் கிண்டல் செய்ய அங்கு சிரிப்பலை எழுந்தது.
விக்ரம் மட்டும் பவித்ராத்யாவை முறைத்திருந்தான். ‘என்கிட்ட பொய் சொல்லி விட்டு இங்க வந்து யோகா க்ளாஸ் எடுத்திருக்க’ என்ற காட்டம் அவனிடம்.
அவனைக் கண்டு அசட்டுப் புன்னகை உதிர்த்தவள், அவனிடம் இருந்து தப்பிக்கும்பொருட்டு, “அக்னி ஃபிளைட்டுக்கு டைம் ஆச்சுல்ல” என்று அவசரப்படுத்தினாள்.
அதுவரை அலைபேசியிலேயே மூழ்கி இருந்தவன், “எஸ் கிளம்பலாம்” என்றதில், “எங்க போற பேபி?” என வினவினாள் திலோத்தமா.
அவள் பதில்கூறும் முன்னே, “சென்னைல ஆக்சிடென்ட் ஆனப்ப பார்த்த ஹாஸ்பிடல்ல சில ரிப்போர்ட்ஸ் கலெக்ட் பண்ணனும்” என்றான் அக்னி.
“அதுக்கு ஏன் அலைஞ்சுக்கிட்டு… கால் பண்ணி கேட்டா வாட்சப்ல அனுப்புவாங்க தான அகி” என்றாள் தயக்கமாக.
“நேர்ல போகனும்” என முடித்துக்கொண்டவன், “இன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் கூட இருப்பாங்க. நான் நைட்டு வந்து நிலாவை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்” என்றபடி திலோத்தமாவிடம் இருந்த அக்னிலாவிற்கு முத்தமிட்டவன், அதிக விளக்கமளிக்காமல் வெளியில் செல்ல,
“அக்கா என்னையும் வர சொல்றாரு… சாயந்தரம் வந்துடுவேன்” என அவன் பின்னேயே ஓடினாள்.
விக்ரமிற்கு தான் உறுத்தல் அதிகரித்தது. பவி வந்ததும் அவளிடம் விசாரிக்க வேண்டுமென குறித்துக் கொண்டான்.
———–
“அக்னி, எனக்கு ஒரு டவுட்!” விமானத்தில் ஏறி அமர்ந்ததும் பவித்ராத்யா வினவினாள்.
ஏதோ யோசனையிலேயே இருந்தவன் அவள் புறம் திரும்ப, “அப்போ திலோவை தான் ஆக்சிடென்ட் பண்ண நினைச்சுருக்காங்கன்னா, ஒருவேளை அவள் மிஸ் ஆனதுக்கு அப்பறம், திரும்ப ட்ரை பண்ணிருப்பாங்க தான? ஏன் இது பியூர் ஆக்சிடென்ட்டா இருக்க கூடாது…” என்றாள் ஒரு ஆர்வத்தில்.
“எல்லா பக்கமும் பாசிபிலிட்டீஸ் இருக்கு. ஒருவேளை இது அட்டெம்ப்ட் மர்டர்னா, ஏன் எதுக்கு யார் செஞ்சதுன்னு தெரியணும். விக்ராவோட இந்த வலிக்கு காரணம் யாரா இருந்தாலும், விதியாவே இருந்தாலும் ஐ வில் நாட் ஸ்பேர் இட்.” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பிட, அவனைக் கண்ணிமைக்காது பார்த்து வைத்தாள்.
“நீங்க அவங்க மேல இவ்ளோ பாசம் வச்சுருக்கீங்கள்ல, அத்தான்ட்ட ஒரு வார்த்தை பேசலாம்ல?”
அக்கேள்வியில் மௌனமாகி விட்டவன், அவள் புறம் திரும்பவே இல்லை.
தனக்கு அவன் எத்தனை முக்கியமென்று இவளுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியுமே! அவனுக்காக உலகத்தையே எதிர்ப்பேனென தெரிந்தும், அவன் தவறே செய்தாலும் அவனுக்குத் துணையாய் தான் இருப்பேன அறிந்தும், ஏனிப்படி ஒதுக்கி வைத்தான்?
உருக்குலைந்த உள்ளத்தை அவளுக்கு காட்ட பிடிக்காதவனாக சீட்டின் பின்னால் சாய்ந்து கண்மூடிக்கொண்டான்.
ஏனோ அவனது மௌனம் அவளை அதிகம் பாதித்தது.
உறவு கொடுக்கும் அதிகபட்ச வலியும் ஏமாற்றமும் அவளைக் கூட பல நேரங்களில் மௌனியாக்கி இருக்கிறது.
அந்தக் கோபத்தில் தான் திலோத்தமாவிடமும் பேசாமல் இருந்தாள்.
ஆனால், அதற்காக எத்தனை நாளைக்குத் தான் கோபத்தை இழுத்துப் பிடித்து தானும் காயப்பட்டு அவர்களையும் காயப்படுத்த இயலும்?
“எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்துல பேசி தான ஆகணும் அக்னி. எல்லா உறவுலையும் ஏமாற்றம் இருக்கும் தான். அதுக்கும் மேல, எல்லாருக்குமே தனி தனி உணர்வும் பெர்சனலும் இருக்கும். இரத்த சொந்தமா பின்னி பிணைஞ்சவங்ககிட்ட கூட சொல்ல முடியாத உணர்வுகள் நிறைய இருக்கலாம்…”
அவனோ கண் மூடிய நிலையிலேயே, “எனக்கும் விக்ரமுக்கும் அப்படி ஒரு இடைவெளி இருந்ததில்லையே. ஒருவேளை டிபிகல் பிரதர்ஸா நாங்க இருந்திருந்தா, இந்த பிரிவு என்னை இவ்ளோ பாதிச்சுருக்காதோ என்னவோ” சொல்லும்போதே அவன் விழிகள் கசியும் அறிகுறி தெரிய, வெடுக்கென விழித்தவன் ஜன்னல் வழியே வெறித்தான்.
அவன் நயனங்களில் கசிந்த ஒரு துளி நீரும் அவளுள் பேரலையாய் வலி கொடுத்ததில் மருண்டாள்.
அக்னியே தொடர்ந்து, “யூ நோ வாட் ஆத்யா, துபாய்ல இருந்து திரும்பி வந்தப்ப அவன் இல்லைன்ற நிஜத்தை ஏத்துக்கவே எனக்கு ரொம்ப மாசம் ஆச்சு. எங்க போனான், யார்கிட்ட விசாரிக்கிறது எதுவுமே புரியல. பைத்தியக்காரன் மாதிரி நைட்டெல்லாம் தூங்காம தெரு தெருவா அவனைத் தேடுனேன். அவனுக்கு ஆஸ்திரேலியா போகணும்னு ஆசை. ஒருவேளை அங்க போயிருப்பானோன்னு நினைச்சு, ஆஸ்திரேலியால போய் தேடிட்டு இருந்தேன். அவனைப் பார்த்தா போதும். ஜஸ்ட் அவனோட ப்ரசன்ஸ் இருந்தா போதும். அவன் என்ன வேணா செஞ்சுருக்கட்டும், ஈவன் கொலையே செஞ்சுருந்தாலும் நான் இருந்துருப்பேன் அவனுக்காக.
என்னைக்கு என்கிட்டயே அவன் இருக்குற இடம் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறான்னு எனக்கு தகவல் வந்துச்சோ அன்னைக்கே அவனைத் தேடுறதை நிறுத்துனேன்.
நியாயமா வெறுப்பு வரணும். அதுவும் வரலை. என்னை ஈஸியா விட்டுட்டான் சரி, அவனோட கனவையும் விட்டது ஏன்?
திலோ… அவளை நான் நம்புனேன். என் நம்பிக்கைக்கு அவள் துரோகம் பண்ணிட்டான்னு நான் சொல்ல மாட்டேன். அவளோட காதலை நான் மதிக்கிறேன். ஆனா, எனக்கு அவன் எவ்ளோ உயிர்னு அவளுக்கு தெரியும். தெரிஞ்சும் ஏன் என்கிட்ட இருந்து பிரிச்சா? ப்ச், லீவ் இட்!” என்றவனின் வலி புரிய, அவளுக்கும் இனம் புரியா வலி.
“திலோ சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டுப் போனப்ப, ஒரு வருஷம் பேசாம தான் இருந்தேன். அவன் ப்ரெக்னன்ட்டா இருந்ததை அப்பாட்ட சொல்லிருப்பா போல. அப்பா என்கிட்ட ஒரு தடவை சந்தோஷமா அவளை பத்தி பேச வரப்போ கூட நான் ‘அவளை பத்தி பேசுனா நானும் உங்களை விட்டு போய்டுவே’ன்னு துடுக்கா பேசிட்டுப்போனேன்.
அதுக்கு அப்பறம் அப்பா தவறி கூட என்கிட்ட அவளைப் பத்தி பேசல… சட்டுன்னு ஒரு நாள் அவர் இல்லைங்கும் போது, கோபத்தை ஒதுக்கி வச்சுட்டு அவர்கிட்ட பேசிருக்கலாமோ, அவரோட சந்தோஷத்தையோ, வருத்தத்தையோ பகிர்ந்துக்க இடம் குடுத்துருக்கலாமோனு தோணுச்சு. அதுவே ஒரு குற்ற உணர்ச்சியையும் கொடுத்துச்சு. அதுனாலயோ என்னவோ, வயித்துல பிள்ளையோட திலோவ பார்த்தப்ப அவ்ளோ நாள் இருந்த கோபம் துளி கூட அவள் மேல வரல. ஒருவேளை அப்பா இருக்கும்போது அவளை நேர்ல பார்த்திருந்தா கூட என்னால அவள்மேல் கோபத்தை காட்டிருக்க முடியாது…
எனக்குப் புரியுது அத்தான் உங்களுக்கு எல்லாமுமே இருந்துருக்காங்கன்னு. ஒரு கட்டத்துக்கு மேல எல்லா உறவுகளோட முக்கியத்துவமும் மாறும் அக்னி. மே பி உங்களுக்கு இது கஷ்டமா இருக்கலாம். ஆனா பொண்ணுங்க இதெல்லாம் தொடர்ந்து அடாப்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க” என்றதில் அவன் திரும்பி புரியாது பார்த்தான்.
“நீங்களாவது உங்க ரிலேஷன்ஷிப்ஸ், ப்ரெண்ட்ஷிப்ஸ்னு எல்லாமே மெயின்டெயின் செஞ்சுப்பீங்க. உங்க லைஃப்ல எவ்ளோ முக்கியமான பெர்சன்ஸ் வந்தாலும் உங்களோட பிரைவசியும் லைஃப் ஸ்டைலும் மாறப்போறது இல்ல. ஆனா பொண்ணுங்களுக்கு அப்பா, அம்மா தான் உலகமே. ஹஸ்பண்ட்னு ஒருத்தர் வந்ததும் பிறந்தது இருந்து, கூட இருந்த சொந்தம் கூட ரெண்டாம்பட்சம் ஆகிடும். ஹஸ்பண்டும் புகுந்த வீடும் சம்மதிக்கலைன்னா சொந்த அப்பா, அம்மா, ஏன் சொந்தப பையன்கிட்ட கூட பேச முடியாது…
ஒரு கட்டத்துல அந்தப் பசங்க மேல முழு பாசமும் வச்சா அந்தப் பசங்களுக்கு கூட அந்தப் பொண்ணு அம்மாவா முக்கியமானவளா இருக்குறது இல்ல. நிவேதா அத்தையே அதுக்கு எடுத்துக்காட்டு தான!” இவனும் இணைந்து தானே அவரைக் காயப்படுத்துகிறான் என்ற கோபத்தில் குத்தினாள்.
அவளது முயற்சி புரிந்ததும் அவன் வதனத்தில் சிறு இளக்கம்.
“இங்க உறவுகளுக்கு குடுக்குற முக்கியத்துவம் மாறிட்டே இருக்கும்போது நாம மட்டும் அதை எதிர்பார்க்கிறது சுயநலம் அக்னி!” நிமிர்வாய் கூறியவளை ரசித்தது அவன் விழிகள்.
தனது தமையனின் முழு அன்பை எதிர்பார்ப்பதை கூட சுயநலம் என்று விட்டாள்! அவளது கூற்றில் சிறு நகையும் எழுந்தது அவனுக்கு.
“இங்க பிரச்சினை என்ன தெரியுமா ஆத்யா? பொண்ணுங்களோட லைஃப் ஸ்டைல், அவங்களோட முக்கியமான உறவுகளை இழக்குறதுக்கு காரணம் அவங்க மட்டும் தான்.
இங்க மேரேஜ் அப்டின்றது ஒரு வட்டத்துக்குள்ள அடங்கி இருக்கு. அந்த வட்டம் பொண்ணுங்களுக்கு மட்டுமே போடப்பட்டுருக்கு. அந்த வட்டத்தை சுத்தி சுத்தி வந்துட்டு, வெளில போக வழி இல்லைன்னு சொல்றது முட்டாள்தனம்.
இங்க புருஷன், புகுந்தவீடுன்னு ஒரு கூட்டை புகுத்திக்க அனுமதி குடுக்குறதே பொண்ணுங்க தான? புருஷன் தலை மேல ஏறி மிதிக்கும்போது, அதே வட்டத்துக்குள்ள இருக்குற மானம் மரியாதை பெத்தவங்க சூழ்நிலைனு அடங்கிப் போறதுல யார் தப்பு இருக்கு? சரி, தைரியம் இல்லைன்னே வச்சுப்போம். தைரியம் குடுக்க, எங்களை மாதிரி பசங்களும் கூட இருக்கும்போதும், ஏன் எங்களையே கீழ போட்டு மிதிக்கும்போதும் வேடிக்கை பார்க்குறதுல தான் சுயநலம் அடங்கி இருக்கு.
பயம்! எதிர்காலத்தை நினைச்சு இல்ல. அந்தக் கூட்டை கலைச்சுட்டா, தனக்குனு ஒரு அடையாளம் இல்லாம போய்டுமோன்ற பயம். இன்னொருத்தரோட மனைவின்ற அடையாளம் மட்டுமே தனக்கு சமூகத்துல அந்தஸ்த்துனு நினைக்கிற பொண்ணுங்க இருக்குறவரை இந்த வட்டம் வட்டத்துக்குள்ளேயே தான் இருக்கும் ஆத்யா.”
“அது கரெக்ட் தான். அதுக்காக அத்தைகிட்ட கூட கேட்காம கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குறது சரியா?” மனதில் உறுத்திய கேள்வியை வெளிப்படையாகக் கேட்டு விட்டாள்.
“பொண்ணு தான பார்க்க போனேன். ஓகே சொல்லலையே? எந்த பொண்ணை ஓகே சொல்லப்போறேனோ அங்க அம்மா இல்லாம போக மாட்டேன். அவங்க எவ்ளோ தூரம் தான் தாக்குப்பிடிக்கிறாங்கனு டெஸ்ட் பண்றேன்” எனத் தோளைக் குலுக்கிட, அவளுள் சின்னதாய் ஒரு பரவசம்.
“பாவம்ங்க அவங்க… இருந்தாலும் இப்படியெல்லாம் படுத்த வேணாம். கொஞ்சம் இறங்கி போகலாம். தப்பில்ல.”
“உனக்கு என் அம்மாவைப் பத்தி தெரியல ஆத்யா. அவங்க பாவம்னு எல்லாரையும் எதிர்த்து பேசுனா ‘பெரியவங்களை அப்படி பேசக்கூடாது என் வளர்ப்பு சரி இல்லைன்னு சொல்லிடுவாங்க;னு கண்ணீர் சிந்துவாங்க. விக்ரம் இங்க இருந்து போனப்ப, எனக்கும் மனோஜ் சித்தப்பாவுக்கு சின்ன வாக்குவாதம். அப்போ நான் எடுத்தெறிஞ்சு பேசுனதுக்கு அவங்க சொன்ன டயலாக் இது.”
“கஷ்டம் தான்”
வாயைப் பொத்தி சிரித்தாள் பவித்ராத்யா.
அதன்பிறகு என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. போன முறை விமானத்தில் வந்தபோது இறுக்கம் இருவரிடத்திலும் இல்லை.
அவள் அமைதி காக்கும் போது அவனும், அவன் அமைதி காக்கும்போது அவளும் ஏதேனும் ஒன்றை பேசி விட்டு பேச்சை வளர்த்தார்கள்.
சென்னையில் இறங்கியதும் இருவரும் சென்றது திலோத்தமா விக்ரம் வேலை செய்த அலுவலகத்திற்கு தான்.
“அக்னி, இவங்க நம்ம கேட்டா பதில் சொல்லுவாங்களா?” பவித்ராத்யா கிசுகிசுக்க, “கண்டிப்பா சொல்ல மாட்டாங்க…” என்றான் குளிர் கண்ணாடியை அணிந்தபடி.
“அப்பறம் எப்படிங்க?” எனும்போதே “ஹாய் அக்னி. நான் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் கணேஷ்” என காக்கிச் சட்டை அணிந்த காவலர் அவனிடம் கைகுலுக்கினார்
அவர்களுக்கு முன்னே அலுவலகம் வந்து விட்டார் போலும்.
“ஹாய் சார்… ரொம்ப நேரம் ஆச்சா வந்து? சாரி பிளைட் கொஞ்சம் டிலே” என மரியாதை நிமித்தம் பேசியவனிடம், “இல்ல இல்ல சார் இப்ப தான் வந்தேன். கமிஷனர் சொன்னாரு. உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி… உள்ள போகலாமா?” எனக் கேட்டு விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அங்கு சில அடிப்படை விசாரணைகளை முடித்து விட்டு, விக்ரமிற்கு விபத்து நடந்த போது காரை ஓட்டி வந்த ஓட்டுனரை பற்றி விசாரித்தான்அக்னி வேந்தன்.
ஆனால், அன்று ஒரு நாள் தான் அவன் வேலைக்கு வந்ததாகவும், அதன்பிறகு உடல்நிலை சரியான பின் வேலையில் சேர்ந்துகொள்ள கூறியும் அவன் மறுத்துச் சென்றதையும் கேள்விப்பட்டதும் அவனது சந்தேகம் வலுப்பெற்றது.
மருத்துவமனையிலும் சென்று சில தகவல்களைத் திரட்டியவன், மாலை விமானத்திலேயே மீண்டும் பவித்ராத்யாவை அழைத்துச் சென்றான்.
“என்ன அக்னி, போன வேல எதுவும் உருப்படியா நடந்த மாதிரியே தெரியல” அவள் வருத்தமாகக் கேட்க, அவனிடம் சிறு நெருடல்.
“உண்மையிலேயே ஆக்சிடெண்ட்டா தான் இருக்குங்க… நீங்க ரொம்ப குழப்பிக்கிறீங்களோன்னு தோணுது.” என்றாள் அவனது சுருங்கிய முகம் கண்டு.
“இருக்கலாம்” அப்போதும் அவன் முகம் மாறாது போக,
“உங்களுக்கு ஏன் இந்த டவுட் வந்துச்சு?” என்றாள் புரியாமல்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன், “அவன் சர்ஜரி முடியட்டும் சொல்றேன்” என இறுக்கமாக உரைத்துவிட்டு, கண்ணை மூடி பின்னால் சாய்ந்து கொள்ள, அவனது திடீர் அமைதியில் அவள் தான் திணறிப்போனாள்.
‘போகும்போது நல்லா தான பேசுனாரு. நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா?’ சடுதியில் வாடிப்போன மனதை தேற்ற வழியின்றி ஒரு வித அலைபாய்தலிலேயே சென்னையை அடைந்தாள்.
அதன்பிறகு விக்ரமின் அறுவை சிகிச்சை நாள் வரையிலும் ஒரு வித அழுத்தத்திலேயே தான் கழிந்தது.
சவுந்தரவல்லி அந்த அழுத்தத்தை இன்னுமே அதிகரிக்கச் செய்தார்.
காலை வேளையில் சாப்பாடு கூடையுடன், மருத்துவமனைக்கு வந்தாள் திலோத்தமா.
“அக்னி வரலையா விக்ரம்?” கேட்டபடி விக்ரமிற்கு உணவை ஊட்டி விட்டாள்.
“இங்க தான் இருந்தேன் போன் வந்துச்சுன்னு போயிருக்கான்…”
அவளையே மேலும் கீழுமாக பார்த்தவன், “காலைல வேற ட்ரெஸ் போட்டுருந்த. ஏன் மாத்திட்ட?” என வினவினான்.
“அது, சாம்பார் கொட்டிடுச்சு விக்ரம் அதான்…” என சமாளித்தவள் வலிய புன்னகைத்து விட்டு, பின் தனது மடிக்கணினியில் புதைந்தாள்.
விக்ரமின் எதிரில் அமர்ந்து மடிக்கணினியில் எரிச்சலுடன் வேலை செய்து கொண்டிருந்த திலோத்தமாவைக் கண்ட விக்ரம் “என்ன ஆச்சு திலோ எதுவும் பிரச்சினையா?” எனக் கேட்டான் அவளை ஆராய்ந்தபடி.
“நான் ஹேண்டில் பண்ணிட்டு இருந்த ப்ராஜெக்ட்ல ஒரு இஸ்யூ விக்ரம். டைரக்ட் ரிப்போர்ட்டிங்கு சென்னைக்கு வர சொல்லி பிரஷர் பண்றாங்க.”
“நீ இஸ்யூ ஃபிக்ஸ் பண்ண ட்ரை பண்ணு திலோ”
“அதுக்கு டைம் குடுக்கணும்ல விக்ரம். எப்படி ஃபிக்ஸ் பண்ணுவீங்கன்னு முன்னாடியே எக்ஸ்ப்ளெய்ன் பண்ண சொல்றாங்க. இப்ப இருக்குற மைண்ட்செட்ல எனக்கு ஒண்ணுமே புரியல. ஒரு மாசம் லீவ் அப்ளை பண்ணேன். ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. பேப்பர் போட்டுடவா?” எனக் கேட்டாள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேலை எத்தனை முக்கியமென்று இருவருக்குமே தெரியும். ஆனால், விக்ரமுடன் இருக்க வேண்டிய தருணத்தில் வேண்டுமென்றே தன்னை கார்னர் செய்வது புரிந்தவளுக்கு, இந்த வேலையே வேண்டாமென்றே தோன்றியது. இன்னொரு காரணமும் கூட!
“ஒரு செகண்ட் வா…” விக்ரம் மென்மையாக அழைத்தான்.
அவளும் மடிக்கணினியை சோபாவின் மீது வைத்து விட்டு, அவன் அருகில் தோளில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, கண்ணை கரித்தது. அடக்கிக்கொண்டாள்.
“ஆபிஸ் ப்ரெஷர் எல்லாம் ஹேண்டில் பண்றது உனக்கு ஈசியாச்சே திலோ. அப்பறம் என்னாச்சு?”
“இப்ப என் நினைப்பு முழுக்க உங்க சர்ஜரி தான் இருக்கு. அதான்…” என மென்று விழுங்கிட, “காலைல வீட்டுக்குப் போயிட்டு வந்தியே. அங்க எதுவும் பிரச்சினையா?” சரியாகக் கணித்து கேட்டவனை ஒரு கணம் திகைத்துப் பார்த்தாள்.
முந்தைய இரவே, அவளது மடிக்கணினியில் சிறு பிரச்சினை. வேலை செய்யாமல் சோதித்ததில், “உங்க லேப்டாப் எடுத்துக்குறேன் விக்ரம். நாளைக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு. அது முடிச்சுட்டா லீவும் கிடைச்சுடும்” என்றதில், “நீ வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வா திலோ. சின்னதா ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா. நீயும் இதே ரூம்குள்ள அடைஞ்சுருக்க” என்றான்.
“நீங்க எப்படி தனியா இருப்பீங்க?”
“இயர்லி மார்னிங் அகி வந்துடுவான்ல. நீ போயிட்டு வா. பவி சாப்பாடு எடுத்துட்டு வருவாள்ல அவகூட வந்துடு…”
அவளும் சரியென தலையசைத்து விட்டு, காலையில் வீட்டிற்குச் சென்றாள்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த சவுந்திரவல்லி, “என்ன நிவே உன் மருமக, புள்ளைய தண்ணி தெளிச்சு விட்டாச்சு. அவ புருஷனையும் படுக்கைல போட்டுட்டு இங்க என்ன மினுக்கிட்டு வந்துருக்கா?” எனக் குடைந்தார்.
சற்றே திகைத்த திலோத்தமா கண்ணாடியில் தன்னுருவத்தைப் பார்த்தாள்.
காலையில் மருத்துவமனையிலேயே தலை குளித்ததால், இன்னும் ஈரப்பதமாக இருந்தது. அதனால் கூந்தலை விரித்து விட்டிருந்தாள்.
விக்ரமிற்கு எப்போதும் நல்ல உடைகளை அணிந்திட வேண்டும். மன வருத்தமென்று, அழுக்கு நைட்டியையோ நைந்த உடைகளையோ அணிவது சுத்தமாக பிடிக்காது.
அவள் உடைகள் லேசாய் பழையதாவது தெரிந்தால் அவனே கழித்து விட்டு, புது செட் சுடிதார்களை வாங்கி விடுவான். அதனாலேயே அவளிடம் பழைய துணிகளென்று எதுவும் இருந்ததில்லை.
அவனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூட, அவள் அழுது வீங்கிய முகத்துடன் ஏனோ தானோவென உடை அணிந்து வந்ததில் விக்ரம் சத்தம் போட்டான்.
“உங்கிட்ட இருந்து எனக்கு பாசிட்டிவ் வைப் மட்டும் தான் வரணும் திலோ. என்னமோ பஞ்சத்துல அடிபட்ட பெக்கர் மாதிரி இருக்காத” என்றதோடு, கூந்தலை ஒதுக்கிக் கொள்வதும் சற்றே அவனுக்குப் பிடித்த உடைகளை அணிவதுமாக, தன்னை திருத்திக்கொண்டாள்.
தற்போது அணிந்திருப்பதும் ஒன்றும் அத்தனை உயர்ரகம் அல்ல. துப்பட்டா மட்டும் சற்று மிளிர்வாக இருக்கும். அவள் கிளம்பும்போது, விக்ரம் வேறு முத்தம் கேட்டு அடம்பிடித்ததால், சின்னதாய் ஆரம்பித்த முத்தம் இதழ் சிவக்கும் நீண்ட முத்தமாகிப் போனதால், அந்த சிலிர்ப்பில் அவள் வதனமும் அதரமும் சிவந்தே வேறு இருந்தது.
அதுவே அவளைப் பேரழகியாகக் காட்டியது.
இவையெல்லாம் ஒன்று திரட்டி, மினுக்கிக்கொண்டு வந்ததாக ஒரே வார்த்தையில் அவளை உடைய வைத்து விட்டார் சவுந்தரவல்லி.
அவசரமாக கூந்தலை முடிந்தவள், தனது பெட்டியைத் துழாவினாள். இருப்பதிலேயே மங்கிய வண்ணமுள்ள சுடிதாரைத் தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.
கடந்த மாதங்களாக அவன் படுக்கையில் இருப்பதால், அவளது பழைய சுடிதார்கள் தப்பித்தது.
அடுக்களையில் நிவேதாவிற்கு உதவி செய்து கொண்டிருந்த பவித்ராத்யாவிற்கு சவுந்தரவல்லியின் கூற்று கடும் சினத்தைக் கொடுக்க, ‘நாளைக்கு சர்ஜரி முடியற வரை அமைதியா இரு பவி’ எனத் தன்னையே அடக்கிக்கொண்டாள்.
திலோத்தமாவிற்கு காபி கலந்து எடுத்துச் சென்றவள், “திலோ இதை குடி” என்றாள்.
“ஹாஸ்பிடல்லயே குடிச்சுட்டேன் பேபி” அவள் மெலிதாய் முறுவலிக்க,
“இன்னொன்னு குடிச்சா சாமி குத்தம் ஆகாதுக்கா” எனக் கிண்டல் செய்தவள், “முடி ஈரமா இருக்கு ஏன் இப்டி கட்டி வச்சுருக்க…” என்று அவளது கூந்தலை அவிழ்த்து விட்டு, தளர பின்னி விட்டாள். பவித்ராத்யா அளவிற்கு இல்லையென்றாலும், அவளுக்கும் சற்றே தடிமனான கூந்தல் தான்.
“என்னக்கா அதிசயமா அத்தானை விட்டுட்டு வந்துருக்க?”
“லேப்டாப் வேணும் பவிமா… அதான்” எனும்போதே அவளுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததில் அதில் மூழ்கினாள்.
உடனே வீடியோ அழைப்பும் எடுக்க நேரிட, விக்ரமின் மடிக்கணினியையே உபயோகித்து தனது குழுவினருடன் இணைந்து கொண்டாள்.
சமையலை முடித்த பவித்ராத்யா, “அத்தை… திலோ வேலை பார்த்துட்டு இருக்கா போல. நான் சாப்பாடு எடுத்துட்டுப் போறேன். நீங்க பாப்பாவை ஸ்கூல்ல இருந்து கூப்பிடுக்குறீங்களா?” என்றதும் “சரிம்மா நீ போயிட்டு வா…” என்றார்.
அவள் சவுந்தரவல்லியை கண்டுகொள்ளாது நடந்து செல்ல “ஏய் நில்லுடி…” என்றார் கோபமாக.
அதில் நின்று விட்டவள், “உங்ககிட்ட வாதம் பண்ண எனக்கு நேரமில்லை. அத்தான் பசியோட இருப்பாங்க” என நகர எத்தனிக்க, “அவனுக்கு சாப்பாடு குடுக்க தான் ஒருத்தியை இழுத்துட்டு ஓடுனானே. நீ என்ன இலவச இணைப்பா? உன் அக்காக்காரி என்ன பண்ணிட்டு இருக்கா?” அவரது கேள்வியே அவளுக்கு அசூசையாக இருந்தது.
“வேலை பார்த்துட்டு இருக்கா பாட்டி” அவள் கண்டிப்பாய் கூற வர,
“ஆமா ஆமா ஒருத்தனை முடமாக்கியாச்சு. வேலை பாக்குறேன்ற பேர்ல எவன்கூடயாவது கூத்தடிச்சா தான அடுத்த ஆளை பிடிக்க முடியும்…”
“வார்த்தையை அளந்து பேசுங்க. இல்ல மரியாதை கெட்டுடும்” என விரல் நீட்டி எச்சரிக்க,
“என்னடி கையை நீட்டி பேசுற? நான் என்ன தப்பா பேசுனேன். புருஷன்காரனுக்கு நாளைக்கு ஆபரேஷன்னு சொலிருக்கும்போது எந்த பொண்டாட்டியால இப்படி குளிச்சு முழுகி அலங்கரிச்சுட்டு இருக்க முடியும்? வேலை பாக்குறாளாம் பொல்லாத வேலை. புருஷன் நினைப்பு இல்லாம எப்படிடி வேலை பாக்க முடியும். கிடைச்சது வரை லாபம்னு அவனோட உழைப்பை உறிஞ்சிட்டு இப்ப வந்து அக்காவும் தங்கச்சியும் நாடகமாடுறீங்களா?” எனச் சத்தமிடும்போதே, மனோஜும் இனியாவும் அங்கு வந்து விட்டனர்.
“அதுக்காக எப்பவுமே அழுது வடிஞ்சுட்டே சுத்த, இது என்ன சீரியலா. உங்க புருஷன் செத்துப்போனப்ப நீங்க என்ன எந்நேரமும் துக்கம் அனுசரிச்சுட்டா இருந்தீங்க? இப்ப வெள்ளை சேலை கட்டிட்டு மூலைல மூடிட்டு உக்கார வேண்டியது தான. பட்டு சேலையும் நகையுமா போட்டுட்டு நீங்க மினுக்கலாம். அவ பண்ணக் கூடாதா. இத்தனைக்கும் அவ புருஷன் உயிரோட தான இருக்காரு” எனக் கொந்தளித்தவளை சப்பென அறைந்தார் மனோஜ்.
அதில் கீழேயே விழுந்து விட்டவள், “எவ்ளோ தைரியம் இருந்தா, என் வீட்ல இருந்துட்டு என் அம்மாவையே எதிர்த்து பேசுவ. நீ வந்தப்பவே உன்னையும் உன் அக்காவையும் அத்து விட்டுருக்கணும். அனாதைக் கழுதைங்க. யாரு வீட்ல வந்து யாரைப் பேசுறது?” எனக் கர்ஜித்தார்.
திலோத்தமா நடந்த உரையாடல்களைக் கேட்டு அதிர்ந்து நிற்க, நிவேதா வேகமாய் வந்து அவளைத் தாங்கிப் பிடித்தார்.
‘அனாதை’ என்ற வார்த்தை இரு பெண்களையும் அதிகம் சுட்டது.
“யாருங்க அனாதை? எனக்கு திலோவும் அவளுக்கு நானும் இருக்கோம்” அப்போதும் நிமிர்வாய் எதிர்த்தாள் பவித்ராத்யா.
இனியாவோ, “ஆமா ஆமா, நீ அவள் இடத்துலையும் தான இருக்க. அவள் புள்ளைக்கு அம்மாவா அவ புருஷனுக்கு பொண்டாட்டியா… அக்கா புருஷனுக்கு சாப்பாடு குடுக்க போறேன்னு போற… கையில்லாதவனுக்கு நீ எப்படிடி சோறு குடுப்ப? அசிங்கமா இல்ல?” என்றதில்,
“அவர் எனக்கு அப்பா மாதிரி. நான் ஊட்டி விட்டா என்ன தப்பு? அவ்ளோ அக்கறை டேஷ் இருந்தா நீங்க போய் குடுங்க” என எகிறியவளுக்கு நெஞ்செல்லாம் வலி.
மனோஜ் மீண்டும் அவளை அறையப்போக, நிவேதா தடுத்தார்.
“வேணாம் தம்பி. பொம்பளபுள்ளையை கை நீட்டுறது தப்பு” என்றிட,
“இதுங்க பொம்பள புள்ளையா? இவ அக்கா உங்க பெரிய பையனை வளைச்சு போட்டா. இவ அவன்கூடயும் உரசிகிட்டு உங்க சின்ன பையன் கூடவும் உரசிட்டு இருக்கா. அசிங்கம் பிடிச்சதுங்களுக்கு, அக்கா புருஷன்ற வெட்கமும் கிடையாது. அடுத்தவளுக்கு புருஷனாகப் போறவன்ற இங்கிதமும் கிடையாது” என வார்த்தையைக் கடித்துத் துப்பியதில், இம்முறை பவித்ராத்யாவும் கூட பேச்சிழந்து போனாள்.
திலோத்தமா “நிறுத்துங்க” என்று கத்தும் நேரம், நிவேதா மனோஜை பளாரென அறைந்திருந்தார்.
“என்ன பேச்சு பேசுற? உன் பொண்ணா இருந்தா இப்படி தான் பேசுவியா?” என உறுமியதில் மனோஜ் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து விட்டார்.
சவுந்திரவல்லியோ, “ஏய் என்னடி?” என ஆரம்பிக்கும்போதே, அவரை முறைத்தவர், “உங்களுக்கு என் மேல கோபம்னா என் மேல காட்டுங்க. என் பசங்க மேல காட்ட கூட உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா என் மருமகளுங்க மேல காட்ட யாருக்கும் எந்த உரிமையும் இல்ல” எனத் தீப்பார்வையில் எரிமலையாய் நின்றதில் இனியாவும் அடுத்த பேச்சு பேச வார்த்தையின்றி சிலையானார்.
சிவக்குமாரும் நடந்ததை கவனித்துக்கொண்டு அங்கு வந்ததில், “டேய் சிவா பார்த்தியா இவளை…” எனும்போதே, “ம்மா… மனோஜ் அந்தப் பொண்ணுங்களைப் பேசுனது தப்பு. நானா இருந்துருந்தாலும் நிவே செஞ்சதை தான் செஞ்சுருப்பேன்” என்று நிவேதாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
சவுந்தரவல்லி பேச வரும்முன்னே, “நாளைக்கு என் பையனுக்கு சர்ஜரி இருக்கு. தயவு செஞ்சு எல்லாரும் எங்களை நிம்மதியா விடுறீங்களா?” எனக் கையெடுத்துக் கும்பிட, மனோஜ் நிவேதாவையும் வஞ்சத்துடன் முறைத்து விட்டே சென்றார்.
நிவேதாவோ, “திலோ நீ கிளம்புமா…” என்றதில் கன்னத்தில் நீர் வழிய நின்றவள் அங்கிருக்க பிடிக்காமல் தங்கையை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.
பவித்ராத்யாவிற்கு நிவேதா எதிர்த்து பேசியது கூட உறைக்கவில்லை. என்ன வார்த்தை கூறி விட்டார்கள்? நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை.
“பேபி… அவங்க பேசுனதை மனசுல வச்சுக்காத” திலோத்தமா தவிப்பாக கூற,
தமக்கைக்காக அழுகையை முயன்று கட்டுப்படுத்திக்கொண்டவள், “ச்சே அவங்க பேசுனது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல. சென்னைல கூட நம்ம பக்கத்து வீட்டுல எல்லாம், என்னையும் அத்தானையும் ஒரு மார்க்கமா தான் பார்த்தாங்க. மத்தவங்க பார்வைக்கு எல்லாம் நம்ம பதில் சொல்ல முடியாது திலோ” என்று அவளை சமாதானம் செய்து அனுப்பி விட்டவளுக்கு விக்ரமையும் அக்னி வேந்தனையும் பார்க்க தைரியமில்லை.
ஏற்கனவே அவர்களுக்கு சுமையாக இருப்பது உறுத்திட, தற்போது இருவரது பெயர்களுக்கும் களங்கமும் செய்து விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது.
திலோத்தமா கூறியதை அமைதியாகக் கேட்ட விக்ரமின் நரம்புகள் வெடித்தது.
“இதோ பாரு திலோ. யார் வேணா என்ன வேணா சொல்லட்டும். நிலா எனக்கு எவ்ளோ முக்கியமோ பவியும் முக்கியம். நிலாவுக்கு முன்னாடி அப்பான்ற ஃபீலை உணர்ந்தது அவள்கிட்ட தான். இவங்க என்ன பேசுவாங்க எப்படி பேசுவாங்கன்னு தான் நமக்கு தெரியுமே. இந்த தடவை இதுக்கு நான் ஒரு முடிவு கட்டாம விட போறது இல்ல” என்றான் ஆத்திரமாக.
“நாளைக்கு எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் விக்ரம். இப்போதைக்கு எதை பத்தியும் யோசிக்காதீங்க…”
“அதே தான் உனக்கும். உன் வேலை உனக்கான அடையாளம் திலோ. யாருக்கு என்ன ஆனாலும், தனி மனுஷனோட வாழ்க்கை நதி மாதிரி ஓடிட்டே தான் இருக்கும். இங்க யாரும் யாருக்காகவும் தேங்கி நிற்க முடியாது. எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு, ப்ராஜக்ட் பிரச்சினையை சால்வ் பண்ணு. யூ கேன் டூ இட்!” என்று நம்பிக்கையாகப் பேசியவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள் திலோத்தமா. மனதில் ஓர் வெறுமை சுட்டது.
மருத்துவமனையின் தோட்டத்தை ஒட்டிய கேன்டீன் பெஞ்சில் சென்று அமர்ந்து கொண்டாள் பவித்ராத்யா.
அதற்கு மேல் அடக்க இயலாமல் தேம்பி அழுது விட்டாள். ஒருவேளை தாய் தந்தையரோ அல்லது தனக்கென ஒரு துணை இருந்திருந்தால், இந்த அளவு வலித்திருக்காதோ என்னவோ!
பெண்ணின் மனம் கூட அக்னி கூறிய அதே வட்டத்திற்கு தானே தவிக்கிறது. அந்த வட்டத்தினுள் தானே அவளது ஆறுதலும் அடையாளமும் இருப்பதாக எண்ணிக்கொள்கிறாள்.
வேறு எங்கு சென்று ஆறுதல் தேடுவது? உலகில் எந்த மூலைக்கு சென்று எதை சாதித்தாலும் தனக்கென்று நெருங்கிய உறவுகளின் ஆறுதலின்றி எதை வெற்றி கொள்வது?
என்னன்னவோ எண்ணங்கள் அவளுள் ஊறி அலைக்கழித்தது.
அவளருகில் நிழலாட, மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அக்னி வேந்தன் தான் அவளை பார்வையால் ஊருடிவியபடி நின்றிருந்தான்.
அதில் அவசரமாக கன்னமெங்கும் பரவி இருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள், தலை கவிழ்ந்து அமர்ந்திருக்க, அவளருகில் அமர்ந்தான் அவன்.
தாடையைப் பற்றி அவளை நிமிர்த்திட, மனோஜின் கை ரேகைகள் கன்னத்தில் பதிந்திருந்தது.
அதனை விரல்களால் வருடியவன், “அடிக்கிற வரை என்னடி பண்ணிட்டு இருந்த?” எனக் கண்டித்தான்.
அவளோ இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல பார்க்க, “அம்மா சொன்னாங்க” என்றான்.
“ஓ!” அவன் கையை எடுத்து விட்டவளுக்கு தயக்கம் மேலோங்கியது.
“விக்ரம் அத்தானுக்கு நான் சாப்பாடு குடுத்தா என்ன தப்பு? அதை கூட அசிங்கப்படுத்துனா, எப்படி…” எனப் பேச இயலாமல் மீண்டும் தேம்பியவளை தோளோடு அணைத்துக்கொண்டவன்,
“சிலரோட அறிவுல அசிங்கம் மட்டும் தான் இருக்கும். அந்த மாதிரி ஆளுங்ககிட்ட இருந்து எப்படி நல்ல வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும் ஆத்யா. நல்ல எண்ணம் இருக்குறவங்ககிட்ட மட்டும் தான் நம்ம நல்லதை எதிர்பார்க்கணும். ம்ம்?” என்றான் மென்மையாக.
அவன் பேசியதை அவள் மனம் ஏற்றுக்கொண்டதா என்றே தெரியவில்லை ஆகினும் “ம்ம்” எனத் தலையாட்டி விட்டு, அவனிடம் இருந்து நகன்று அமர்ந்தாள்.
அவளைத் தடுக்காமல் ஆழமாய் ஏறிட்டவன், “காபி வேணுமா?” எனக் கேட்க, அவளுக்கும் அழுததில் தலை வலித்தது.
அவனிடம் கேட்க தன்மானம் தடை சொன்னதில், “நான் வாங்குறேன்” என எழப்போக, “வேணுமான்னு தான் கேட்டேன்… சிட்” எனக் கடிந்தவன் அவனே எழுந்து சென்று வாங்கி வந்தான்.
மீண்டும் அமரும் போது, அவள் அதற்கு மேலும் நகர இயலாதவாறு ஒட்டியே அமர்ந்திட, இருவரின் தோள்களும் நன்றாகவே உரசியதில், தவித்துப் போனாள்.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
+1

