
“ஆத்தாடி…” அக்னி வேந்தனைக் கண்டு திருதிருவென விழித்த பவித்ராத்யா, “அத்… அத்தை… துணி துவைச்சு வச்சுருக்கேன். காயப்போட்டு வந்துடுறேன்” என வேகமாய் அங்கிருந்து ஓட முயல, அவன் வழி விட்டால் தானே!
வழியை மறைத்து நின்றவனைத் தவிப்பாய் ஏறிட்டவள், “தள்ளுங்க” என்றிட, அப்போதும் சுவரில் ஒரு பக்கமாய் சாய்ந்து நின்றானே தவிர முழுதாய் நகரவில்லை.
அவன் மீது இடிக்காதவாறு ஒருபக்கமாக ஊர்ந்து செல்ல முயன்றும், அவனது மூச்சுக்காற்று தீண்டியதில் வெலவெலத்து ஓடியே விட்டாள்.
நிவேதா அடுப்பு மேடையில் சாய்ந்து இருவரையும் ரசனையாக பார்த்தவர், “நல்ல பொண்ணுல அகி…” என்று அவனைத் தூண்டினார்.
அவரை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன், சவுந்தரவல்லியின் குரல் கேட்டு திரும்பினான்.
“அகி… இன்னைக்கு சாயந்தரம் உனக்குப் பொண்ணு பார்க்க போறோம்” எனத் தீர்மானமாகக் கூற, அவனோ சிந்தித்தான்.
“நீயாவது என்னை மறுக்க மாட்டன்னு நம்புறேன்” கறார் குரலில் கூறிய பெரியவரிடம், “ஒரு ஏழு மணிக்கு போகலாமா பாட்டி?” எனத் தீவிரமாய் நேரம் முடிவு செய்ய, மறுப்பானோ எனப் பயந்தவர் மெல்ல நிம்மதியுற்றார்.
“எனக்கு தெரிஞ்ச குடும்பம் தான்பா. நம்ம சொல்ற நேரத்துக்கு போகலாம். நீ ரெடி ஆகிடு. நம்ம மட்டும் தான் போறோம்” என்று நிவேதாவை அழுத்திப் பார்த்து விட்டுச் செல்ல, நிவேதாவிற்கு மனம் கனத்தது.
அதற்கும் சரியென தலையசைத்த மகனை ஆற்றாமையுடன் ஏறிட்டவர், அப்போதும் தானும் வருவதாக கூறவில்லை. அவனும் அவரை அழைக்கவில்லை.
மாலையில் சரியாக ஆறு முப்பது மணிக்கு பெண் பார்க்க கிளம்பியே விட்டான்.
அப்போது கூட தாயிடம் சொல்லி விட்டுச் செல்லவில்லை. ஏன் இத்தகைய அழுத்தம் அவனுக்கு என்ற ஆதங்கம் எழ, உள்ளுக்குள் துவண்டார் நிவேதா.
பவித்ராத்யாவே கூட அவன் டிப் டாப்பாக பெண் பார்க்க கிளம்பிச் சென்றதில், அவனை எரிச்சலுடன் பார்த்தாள். நிவேதாவை அழைக்காதது தான் இந்த எரிச்சலுக்கு காரணமென்று அர்த்தமும் கற்பித்துக் கொண்டாள்.
பெண் பார்க்கும் படலம் முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போதே இரவு உணவு நேரத்தைத் தாண்டி விட்டது.
நிவேதாவிற்கு வருத்தம் இருந்தாலும் கூட, “பொண்ணு பிடிச்சிருக்கா அகி?” எனக் கேட்டு வைத்தார்.
“என் அளவுக்கு இல்ல. கொஞ்சம் ஓகே தான்… சித்தப்பா கூட கொஞ்சம் கம்மி தான்னு ஃபீல் பண்ணாரு. இல்ல சித்தப்பா” என்க, அவரும் தலையை சொறிந்தார்.
“ஆமா அகி… உன் ஹைட்டுக்கு அந்தப் பொண்ணு ஹைட்டு கம்மி தான். நம்ம வேணும்னா கொஞ்சம் ஹைட்டா பாக்கலாம்” என்றார் மனோஜ்.
“ஓகே சித்தப்பா… அப்பா வர்றதுக்குள்ள டக்குன்னு முடிவு பண்ணுங்க!” என அவனே திருமணத்திற்கு அவசரப்படுத்த அவர்களாலும் மற்றதை சிந்திக்க இயலவில்லை.
பேரனை அப்படியே வளைத்து விட வேண்டுமென்ற ஆர்வத்தில், சவுந்தரவல்லி இரவு எல்லாம் உறங்காமல் பெண் தேடும் வேட்டையில் இறங்கினார்.
“ஹைட்டு வேணுமாம்… ஹைட்டு! போய் பஜ்ஜி சொஜ்ஜியை சாப்பிட்டு வர வேண்டியது. அப்பறம் வந்து நொட்டை நொள்ளை சொல்ல வேண்டியது” சற்றே இயல்பான மனமதின் அர்த்தம் விளங்காமல், அவன் மீதான கோபத்தை ஏற்றிக்கொண்டாள் பவித்ராத்யா.
அவளது அறையைத் தாண்டும்போது அவனுக்கும் அவையெல்லாம் காதில் விழ, மென்புன்னகையில் அலங்கரித்தது அவனிதழ்கள்.
———
விக்ரமும் திலோத்தமாவும் ஒவ்வொரு வித பயத்தில் அமைதியாகவே பொழுதைக் கழித்தனர்.
தினமும் பகல் முழுக்க அக்னி வேந்தன் மருத்துவமனையில் தான் இருப்பான் என்றாலும், விக்ரமின் அருகில் செல்வதில்லை.
திலோத்தமாவிற்கும் அவனுக்குமான நெருக்கத்திற்கு இடையில் வரக்கூடாதென்று எண்ணினானோ என்னவோ, அவர்களுக்கு அதிகம் தனிமை தந்தான்.
அக்னி வேந்தனிடம் பேசி விட விக்ரமின் மனம் துடித்தது. ஆகினும், இப்போதிருக்கும் மனநிலையில் திலோத்தமாவின் அண்மையை இழக்க அவனுக்கு துளியும் மனமில்லை.
அந்நிலையில் தான், அவனைப்பார்க்க மருத்துவமனைக்கு வந்தார் மனோஜ்.
அவரைக்கண்டதும் முகம் கறுத்தாலும் “வாங்க சித்தப்பா” என்று அழைக்க,
“என்ன தம்பி… ட்ரீட்மெண்ட் எல்லாம் எந்த அளவுல இருக்கு” என்றார்.
“இன்னும் நாலு நாள்ல ஆபரேஷன்”
“ம்ம்! அன்னைக்கு மட்டும் நாங்க சொல்ற மாதிரி அவளை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிருந்தா ராஜா மாதிரி வாழ்ந்துருக்கலாம். இப்ப பாரு, கூட இருக்குற தம்பி கூட ஏதோ வேண்டா வெறுப்பா தான் பாக்குறான். எப்பவும் பெரியவங்க சொன்னா கேட்கனும் விக்ரம். இல்லன்னா இப்படி தான், தகுதி இல்லாதவங்களோட தகுதி இல்லாத வாழ்க்கையை வாழனும். இனியாவது புரிஞ்சுக்க!” என்று அவனை நலம் விசாரிக்க வருவது போல குடைந்தார்.
“புரிஞ்சதுனால தான், இங்க இருந்து போனேன் சித்தப்பா. தகுதி இல்லாத வீட்ல வாரிசா இருக்கறதை விட, தகுதியுள்ளவளுக்கு முடமான புருஷனா இருக்கலாம்!”
மனோஜ் கோபத்துடன் ஏதோ பேச வரும்போதே, மருந்தகத்தில் மருந்தை வாங்கி விட்டு அங்கு வந்திருந்தாள் திலோத்தமா.
மனோஜை அவள் திகைத்துப் பார்க்க, அவரோ இருவரையும் அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்து விட்டுச் சென்றார்.
“என்ன ஆச்சு விக்ரம்? இவர் ஏன் வந்துட்டுப் போறாரு?” என்றவளுக்கு நிச்சயம் தெரியும்… நல்ல மாதிரியாக வந்திருக்க மாட்டார் என்று.
“சும்மா பார்க்க வந்தாரு திலோ. நீ நைட்டு சரியா தூங்கலல. கொஞ்ச நேரம் தூங்கு. எனக்கும் தூக்கம் வருது” என்றதும் அவனைப் படுக்க வைத்தவள், பதற்றத்துடன் இருந்தாள்,
என்ன பேசி வைத்து கலங்க வைத்தாரோ என்று!
சிறிது நேரம் அவனது கேசத்தை கோதி விட்டவள், அவன் உறங்கி விட்டது புரிந்து நெற்றியில் முத்தமிட்டு சோபாவில் சென்று படுத்தாள்.
சற்று நேரத்தில் அவளும் உறங்கி விட, விக்ரம் கண் விழித்தான்.
தற்போது எந்த சதிவலையிலும் சிக்கி விடாதவாறு அக்னி தன்னுடன் இருக்கிறான் என்ற தைரியம் இருப்பினும், விக்ரமினுள் ஏதோ ஒரு உறுத்தல். காரணமின்றி இவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என அறிந்து வைத்தவனாகிற்றே!
கழுத்தைத் திருப்பி தன்னவளைப் பார்வையால் பருகினான்.
கள்ளம் கபடமில்லா அன்பின் உறைவிடம் அவள்!
அவளுடனான இனிய நினைவுகள் அவனுள் சுரந்தது.
———
“உங்களுக்கு பொண்ணு பார்த்துட்டதா அகி சொன்னான். காங்கிரேட்ஸ்”
அவர்களின் இறுதி தேர்வன்று தம்பியை அழைப்பதற்காக வந்த விக்ரம வேந்தனிடம் புன்னகையுடன் பேசினாள் திலோத்தமா.
வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “தேங்க்ஸ் திலோ. இன்னும் முடிவு பண்ணல. வீட்ல பாக்குறாங்க” என்று முடித்துக் கொள்ள, “கல்யாணத்துக்கு கூப்பிடுவீங்கள்ல?” என்றாள் குறும்பாக.
“நீ இல்லாம என் கல்யாணமா?” தன்னை மீறி தன்னுள் இருந்த ஆதங்கத்தை வெளிக்காட்டியதில் அவள் விழித்தாள்.
“ஐ மீன், நீ இல்லாம நான் பொண்ணு கழுத்துல தாலியே கட்ட மாட்டேன்” என முறுவலித்து சமாளிக்க சற்றே நிம்மதியுற்றவள், “சரிங்க பாக்கலாம்!” என நீண்டதொரு பிரிவிற்கு ஒத்திகை பார்ப்பது போல, அவனை விட்டு கடினப்பட்டே பிரிந்து வந்தாள்.
அவள் சென்று வெகு நேரமாகியும் விக்ரமின் பார்வை அவளது வழித்தடத்தை விட்டு நகரவில்லை.
அதிகம் அன்பைப் பகிரவில்லை. ஆனால் பகிரப்படாத அன்பு உள்ளிருந்து உவர்க்கிறது.
கிடைக்காத உறவிற்கும், முற்றுப்பெற இயலாத நேசத்திற்குமே இங்கு ஏக்கம் அதிகம்!
கிடைக்குமென தெரிந்தால், ஏக்கத்திற்கும் வழியில்லையே.
தேர்வு முடிந்து இரு நாள்கள் கடந்திருக்க, விக்ரம வேந்தன் திலோத்தமாவின் வீட்டின் வழியே மெயின் ரோடை பிடிக்கச் சென்றான்.
இப்போதெல்லாம் இந்த பாதையைத் தவிர்த்து வந்தவன், இன்று உண்மையிலேயே அவனது வீட்டுப்பக்கம் சாலை வேலை நடந்ததால் இவ்வழியே பயணித்தான்.
ஆனால், சட்டென கார் நின்று விட “ப்ச்… இது வேற” என எரிச்சலுற்றான்.
தந்தையின் மெக்கானிக் கடைக்கு வந்த திலோத்தமா சற்று தொலைவில் நின்ற விக்ரமின் காரை பார்த்து விட்டாள்.
யோசனையுடன் அருகில் செல்லும்போதே, ஷோல்டர் பேக் சகிதம் காரில் இருந்து இறங்கிய விக்ரம வேந்தன் திலோத்தமாவைக் கண்டு விழி விரித்தான்.
கேட்கும்போது கிடைக்காத தரிசனங்களை எல்லாம் விதி கேட்காத போது தான் அள்ளிக்கொடுக்கும் என்ற சலிப்பு இருந்தாலும் கூட, அவளுடனான சந்திப்பை என்றும் போல அன்றும் மனதில் தேக்கிக்கொண்டு “ஹாய் திலோ” என்றான்.
“ஹாய் விக்ரம்… என்னாச்சு?”
“கார் நின்னுடுச்சு. பஞ்சர்னு நினைக்கிறேன்”
“இருங்க அப்பாவை வர சொல்றேன்…” என வேகமாய் ஓடி தந்தை சுந்தரத்தை அழைத்து வந்தாள்.
அழுக்குச் சட்டை அணிந்திருந்தாலும் கூட, அவரது கண்களின் அத்தனை கனிவு.
“அப்பா நான் அக்னி சொல்லிருக்கேன்ல. அவனோட அண்ணா இவரு…” எனக் குதூகலத்துடன் அறிமுகப்படுத்தினாள்.
“வணக்கம் தம்பி” எனக் கும்பிட்ட பெரியவருக்கு மரியாதை நிமித்தம் வணக்கம் வைத்தான்.
அந்நேரம் தண்ணீர் வண்டி வந்து தெருவை அடைத்து நிற்க, புகையை வேறு கிளப்பி விட்டது.
“இவனுங்க எடுக்குற வரை காரை ஷெட்டுக்கு கொண்டு போக முடியாது” என முணுமுணுத்தபடி, காரைத் தள்ளியே ஓரமாக நிறுத்திய சுந்தரத்திடம் “நான் தள்றேன் அங்கிள்” என உதவி செய்தான்.
சுந்தரம், “நீங்க கடைல உக்காருங்க தம்பி. நான் ரெடி பண்ணிட்டு சொல்றேன்…” என்று டயரை கழற்றும் வேலையில் புதைய, “ப்பா இங்க ஒரே புகையா இருக்கு. பக்கத்துல இருக்குற கோவில்ல உக்கார வைக்கிறேன். போன் பண்ணுங்க” என்று விக்ரமை சற்றே தள்ளி இருந்த சிறிய கோவிலுக்கு அழைத்துச் சென்றாள்.
“இதுக்குள்ள கோவில் இருக்குன்னே எனக்கு இப்ப தான் தெரியும் திலோ.”
“ரொம்ப சின்னது விக்ரம். அப்படி உக்காருங்க…” என அங்கிருந்த திண்ணையை கை காட்ட, “ஷூவை கழட்டாம எப்படி வர்றது?” என்றவன், தயக்கத்துடனே ஷுவை கழற்றினான்.
பாதத்தில் ஒரு கர்சீப் கட்டி இருக்க, “கால்ல என்னது விக்ரம்?” என வினவினாள் திலோத்தமா.
“ஹோம்ல கட்டட வேலை நடக்குது திலோ. அங்க போய் பாத்துட்டு இருந்தேன். கால்ல ஏதோ குத்திடுச்சு…” என்று காலை மெல்ல ஊன்றி உள்ளே சென்றான்.
அதன்பிறகே காரில் இருந்து இறங்கியதில் இருந்தே அவன் மெதுவாக நடப்பது புரிந்தது.
“ஷு போட்டுருப்பீங்க தான?” திலோத்தமா பதறி கேட்க,
“இல்ல, ஆல்மோஸ்ட் உள்ள டைல்ஸ் எல்லாம் போட்டுட்டாங்க. உள்ள எப்படி ஷு போட்டு போறதுன்னு கழட்டிட்டு போனேன்…” என அசடு வழிந்தான்.
“உங்களுக்கே ஓவரா தெரியல. வேலை முடியாத இடத்துல வெறும் கால்ல நடக்கலாமா?” எனக் கடிந்தவள், “இருங்க வந்துடுறேன்…” எனத் திடுதிடுவென ஓடினாள்.
ஐந்தே நிமிடத்தில் அங்கு வந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஓடி வந்திருப்பாள் போலும்.
ஒரு கையில் முதலுதவிக்குத் தேவையான மருந்தும், ஒரு கையில் காபியும் இருந்தது.
“இதைக் குடிங்க” என்று கிளாஸை நீட்டினாள்.
“என்ன திலோ இது? எங்க போய் எடுத்துட்டு வர்ற?”
“என் வீடு இங்க தான் இருக்குனு சொல்லிருக்கேன்ல. நியாயமா உங்கள வீட்டுக்கு கூப்பிடனும். சரி நாலு மாடி ஏற வைக்கணுமேன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன். குடிங்க” என்றதில் காபியை வாங்கிக்கொண்டவன், “நாலு மாடி ஏறி இறங்கிட்டு வந்தியா. ஏன் திலோ ஸ்ட்ரெய்ன் பண்ற?” எனக் கடிந்து கொண்டாலும் கூட அந்த காபி அவனுக்கு அப்போது தேவையானதாக இருந்தது.
“ம்ம்ம்ம்… ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போகுது இந்த காபில. ஆண்ட்டி போட்டாங்களா?” குறும்பாக கேட்டான்.
இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “நான் தான் போட்டேன்… அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க” என்றபடி அவனது காலுக்கு கீழே அமர்ந்தாள்.
“என்னாச்சு திலோ ஆண்ட்டிக்கு… ஏய் ஏன் கீழ உக்காருற?” விக்ரம் பதறினான்.
“காலுக்கு மருந்து போட வேணாமா. நீங்க உக்காருங்க விக்ரம்” என்று அவன் காலை எடுத்து மடியில் வைத்திட, “ஐயோ திலோ வேணாம் ப்ளீஸ்…” என சங்கடமாக மறுத்தான்.
“செப்டிக் ஆகிடும் விக்ரம். நான் சும்மா க்ளீன் பண்ணி விடுறேன். நீங்க மறக்காம ஹாஸ்பிடல்ல போய் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுடுங்க. முதல்ல காலை காட்டுங்க. கர்சீப் வச்சு கட்டி வச்சிருக்கீங்க. இருங்க அகிட்ட சொல்றேன்” என்று மிரட்டினாள்.
“அடிப்பாவி. அவன்கிட்ட சொல்லிடாத துபாய் போனவன் கிளம்பியே வந்துடுவான்” ஆடவனின் குரலில் அத்தனை பெருமிதம்.
அவர்களது அன்பை எப்போதும் ரசிப்பாள் தான். இப்போதோ விக்ரமின் கர்வமும் ரசிக்க வைத்தது.
“அட நீங்களும் தான ட்ரிப்க்கு வர்றதா சொன்னான். நீங்க போகலயா விக்ரம்?”
“இல்ல திலோ. இங்க ஹோம் வேலை முடியல. லாஸ்ட் மினிட்ல ஒரு குளறுபடி. அதை சரி பண்ண நான் இருந்தே ஆகணும்னு ஆகிடுச்சு.”
“அகி எப்படி போனான் உங்களை விட்டுட்டு” சிரிப்புடன் கேட்டாள் திலோத்தமா.
“ம்ம்க்கும் நீ வேற… கதற கதற பிளைட் ஏத்தி விட்டேன். நான் வரலைன்னா ட்ரிப்பை கேன்சல் பண்றேன்னு சொன்னான்…” அப்போதும் கர்வ நகை அவனிடம்.
“ப்ரெண்ட்ஸ் ட்ரிப்க்கு அண்ணனை கூட்டிட்டு போற தம்பி அவனா தான் இருப்பான்” திலோத்தமா கேலி செய்ய,
“அவன் ஹனிமூன்கே என்னை கூட்டிட்டுப் போவான் திலோ” என்றதில் வாய்விட்டே சிரித்தாள்.
“செஞ்சாலும் செய்வான்! ரெண்டு பேரும் இதே மாறியே இருங்க. முடிஞ்சா அவன் துபாய்ல இருந்து வரவும் ரெண்டு பேருக்கும் சுத்தி போட்டுடுங்க. என் கண்ணே பட்டுடும்!”
“உன் கண்ணெல்லாம் பட்டா ஒன்னும் ஆகாது. சரி ஆண்ட்டிக்கு என்னாச்சு?”
“அம்மாவுக்கு சர்ஜரி சொல்லிருக்காங்க விக்ரம். பவி ஹாஸ்பிடல்ல இருக்கா. நான் வீட்டு வேலையை முடிச்சுட்டு சமைச்சு எடுத்துட்டு அப்பா கூட போகணும் ஹாஸ்பிடலுக்கு…”
“உனக்கு இருக்குற வேலைல நான் வேற வந்து கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்” விக்ரம் வருத்தம் கொள்ள, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. காலைல இருந்து மனசே ஒரு மாதிரி இருந்துச்சு. இப்ப கொஞ்சம் பரவாயில்ல உங்ககிட்ட பேசவும்” என்றாள் முறுவலுடன்.
அதே முறுவல் அவனிடமும் பிறக்க, “சீரியஸ் எதுவும் இல்லல…? எதுவும் ஹெல்ப் வேணும்னா கேளு திலோ. ஹெசிட்டேட் பண்ணாத. நானும் உனக்கு அகி மாதிரி தான்” என அக்கறையாய் கேட்டான்.
“சீரியஸ் எல்லாம் இல்ல விக்ரம். கண்டிப்பா உதவின்னா கேட்குறேன்!” என ஒப்புக்கொண்டவள், காலுக்கு கட்டிட, “போதும் திலோ… எவ்ளோ நேரம் காலை பிடிச்சுருப்ப. விடு” என்றான்.
“இருங்க கட்டு போட்டு விடுறேன். நல்ல ஆழமா ஏதோ குத்திருக்கு…” என்றவளுக்கு அவனது காயம் கண்டு வருத்தமும் எழுந்தது.
அந்த வலி அவனுக்கு சற்றே குதூகலத்தையும் கொடுக்க, “சரி சரி என் காலை பிடிச்சு கெஞ்சாத. நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்: என்றதும் விலுக்கென நிமிர்ந்தாள்.
சில நிமிடங்களேனும் இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் ஒன்றாய் தீண்டி சென்றது.
அவனோ கீழுட்டைக் கடித்து சிரித்து, :வெளில இருந்து யாரும் நம்மளை பார்த்தா, இப்படி தான் நினைப்பாங்கள்ல” என்றான் குறும்புடன்.
அதன்பிறகே ஆசுவாசமானவள், “நினைப்பு பொழைப்பை கெடுக்குமாம்…” என நாக்கைத் துருக்கி விட்டு எழுந்தவள், “மறக்காம ஊசி போடணும்… இல்லன்னா டைரக்ட் போன் கால் அகிக்கு தான்” என மீண்டுமொரு முறை மிரட்டி, அவனது உள்ளத்தில் நேச அலையை இன்னுமாய் அதிகரிக்க வைத்தாள்.
திலோத்தமாவின் தந்தை விக்ரமிடம் பணம் வாங்க மறுத்து விட்டார்.
“என் பொண்ணுக்கு தெரிஞ்சவரு பணமெல்லாம் எதுக்கு தம்பி. நீங்க கிளம்புங்க” என்றிட,
“அது வேற இது வேற. நம்ம செஞ்ச உழைப்புக்கு எப்பவும் ஊதியம் இருக்கனும் அங்கிள். ஒழுங்கா வாங்கிக்கோங்க. அப்பறம் நான் கோச்சுப்பேன்” என்று உரிமையுடன் சண்டையிட்டு பணத்தை கொடுத்தவனை அவளது விழிகளும் ரசித்தது.
திலோத்தமாவிடம் கண்ணாலேயே விடைபெற்றுச் சென்றவன், இனி வரும் அத்தனை நாள்களும் அவளுடனே கழிக்கப்போகும் உண்மை உணராது மீண்டுமொரு பிரிவு தந்த வலிதனை சுமந்து சென்றான்.
இப்போதும் சிறு புன்னகை விக்ரம வேந்தனின் இதழ்களில் வீற்றிருந்தது.
கேளாமல் கிடைத்த வரமவள்! என்னுயிரில் இன்னுயிராய் கலந்திட்டவளின் மீது துரும்பும் படாது காத்திட வேண்டும். அதற்காகவேனும் முற்றும் முழுதாய் சரியாகி விடவேண்டும் என்ற தவிப்பு அவனுள்!
இந்நிலையில் சிவக்குமாரும் வந்து விட்டார். அவர் என்ன ஆடப்போகிறாரோ எனப் பதைபதைத்த நிவேதாவை வியப்பூட்டும் வண்ணம், “முதல்ல விக்ரமோட சர்ஜரி முடியட்டும். அவன் நல்லபடியா திரும்பி வந்தா போதும்” என்றார்.
அதனை மகிழ்வுடன் அலைபேசியின் வழியே விக்ரமிடமும் தெரிவித்தார் நிவேதா.
“அப்பாவுக்காச்சு இவ்ளோ நாள்ல கோபம் குறைஞ்சுதே” விக்ரம் பெருமூச்சு விட்டுக்கொள்ள, திலோத்தமா வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தாள்.
இப்பொதெல்லாம் அக்னிலா நிவேதாவிடமும் நன்கு ஒட்டிக்கொண்டாள்.
அவ்வப்பொழுது அவளை நிவேதாவிடம் விட்டு விட்டு மருத்துவமனைக்கு வரும் அளவு இருந்தாள் பவித்ராத்யா.
“அத்தான்… இன்னைக்கு உங்களுக்கு பிடிச்சது செஞ்சேனே” என்றபடியே உணவுக்கூடையுடன் உள்ளே வந்தாள்.
அக்னி வேந்தனும் அங்கு தான் இருக்க, அவனது ரத்த மாதிரி சோதனைகளையும் மற்ற சோதனை முடிவுகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவனைத் திரும்பிப் பாராது, விக்ரமிற்கு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
திலோத்தமை, “நிலா எங்க பவி?” என வினவ,
“அத்தைகிட்ட இருக்காக்கா. அத்தை தான், சாப்பாடு குடுத்துட்டு வர்ற வரை அவங்க வச்சுருக்கேன்னு சொன்னாங்க” எனும்போதே, விக்ரமும் திலோத்தமாவும் ஒன்றாக “அவளை வீட்ல தனியா விட்டுட்டு வராத பவி” என்று அதட்டலாக கூறினர்.
அதில் பவித்ராத்யா புரியாமல் நின்றாள்.
கோப்பில் புதைந்திருந்த அக்னி வேந்தன் ஒரு கணம் தலையை நிமிர்த்தி இருவரையும் அழுத்தத்துடன் பார்க்க, இருவருமே திருதிருவென விழித்தனர்.
விக்ரமோ சமாளிக்கும் வகையில், “அது… அது… திடீர்னு அழுவா அகி அதான்” என்றதில், “அழுதா பார்த்துக்கலாம்” என உணவைக் கண் காட்டியவன், பவித்ராத்யாவை வெளியில் வரச் சொல்லி நகர,
“நீ சாப்பிடல அகி. உனக்கும் சேர்த்தும் தான் குடுத்து விட்ருக்காங்க” திலோத்தமா வேகமாய் கேட்டாள்.
மீண்டும் உள்ளே வந்தவன், அவனுக்கும் பவித்ராத்யாவிற்குமாக கொடுத்து விட்ட கேரியரை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
பவித்ராத்யாவும் கையைப் பிசைந்தபடி அவன் பின்னே செல்ல, அவன் நேராக கேன்டீனிற்கு சென்றான்.
அவன் எதிரில் அமர்ந்ததும், கேரியரை அவள் புறம் தள்ளியவன் “சாப்பிடு ஃபர்ஸ்ட்” என்றான்.
அவளும் காலையில் இருந்து எதுவும் உண்ணவில்லை. என்னவோ அந்த வீட்டில் உண்பது கூட அவளுக்கு ஒப்பவில்லை.
அதில் டிபனைத் திறந்து உண்டவள், “எதுக்கு கூப்டீங்க?” என சாப்பாடை வாயில் வைத்தபடியே கேட்டாள்.
“எனக்கு சில டீடெய்ல்ஸ் வேணும்.”
“என்னது?”
“விக்ரமோட ஆக்சிடென்ட் எப்படி ஆச்சு?”
அக்கேள்வியில் வாடியவள், “அதுவா… எதிர்ல லாரி பிரேக் பிடிக்காம வந்துடுச்சு” என்றாள் வருத்தத்துடன்.
“நீ அவங்களோடவே இருந்த தான? அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி, அவங்களுக்கு எதுவும் பிரச்சினை, மிரட்டல் எதுவும் வந்துச்சா?” தீவிரமாய் வினவினான்.
“சே சே அப்படி எல்லாம் இல்லையே. ரெண்டு பேருமே அவ்ளோ அண்டர்ஸ்டாங்டிங் தெரியுமா. அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல. மிரட்டல் எல்லாம் வந்துருந்தா, எனக்கும் தெரிஞ்சுருக்கும்” என்றாள் தீர்மானமாக.
“விக்ரமோட ஆக்சிடெண்ட்ல உனக்கு சந்தேகம் எதுவும் இருக்கா?”
“என்ன சந்தேகம்?” பாவம் அவனது கேள்வியே அவளுக்குப் புரியவில்லை.
“சரி ஓகே… ஆக்சிடெண்ட் எப்போ ஆச்சு?”
“எப்போன்னா டைமிங் கேட்குறீங்களா?”
“ம்ம்!”
“ஃப்ரைடே. மதியம் ஒரு ரெண்டு மணி இருக்கும்.”
“எப்பவும் ஆபிஸ் ரெண்டு மணிக்கு தான் முடியுமா?” அவளுக்குத் தூண்டிலிட்டான்.
வாயில் ஒரு விள்ளலை வைத்தவள், “ம்ம்ஹும் இல்ல. அத்தானும் அக்காவும் ஒரே ஆபிஸ் தான். காலைல ஒன்பது மணிக்கு கிளம்பிட்டு சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துடுவாங்க. ஒரே கேப்ல தான் போவாங்க” என விளக்கினாள்.
“பிரைவேட் கேபா?”
“இல்ல ஆஃபிஸ் கேப். தினமும் பிக்கப் டிராப் பண்ணிடும்.”
“எப்பவுமே ஒண்ணா தான் ஆபிஸ் போயிட்டு வருவாங்களா?”
“ஆமா சில நேரம் விக்ரம் அத்தானுக்கு ஓவர் டைம் ஒர்க் இருந்தா திலோ வந்துடுவா. திலோவுக்கு ஒர்க் இருந்தா மட்டும் விக்ரம் அத்தான் வெய்ட் பண்ணி கூட்டிட்டு வருவாங்க.”
“டெய்லி ஒரே கேப் ஒரே ட்ரைவரா இல்ல மாறி மாறி வருவாங்களா?”
“ஆமா, ஒரே ட்ரைவர் அண்ணா தான். நான் இருந்த நாலு வருஷத்துல ரெண்டு பேர் மாறி இருப்பாங்க. ரொம்ப ரேரா, ட்ரைவர் அண்ணா லீவ் போட்டா சப்சிடியூட் ட்ரைவர் வருவாங்க.”
அக்னி வேந்தன் அவளை குறுகுறுவென பார்க்க, அவனது பார்வை புரிந்து,
“எனக்கும் பாப்பாவும் ஸ்கூல் காலேஜ் 9.30 க்கு தான். இவங்களுக்கு கேப் 9 மணிக்கே வந்துடும். தினமும் நானும் பாப்பாவும் கீழ வந்து ரெண்டு பேரையும் கார் ஏத்தி விட்டுட்டு தான் போவோம். அதே மாதிரி சாயந்தரம் அவங்க வர்ற நேரத்துக்கு எல்லாம் கீழ போயிடுவோம்” எனப் புளி போட்டு விளக்கினாள்.
“ஸ்கூல்ல இருந்து யார் பிக்கப் பண்ணுவா?”
“எனக்கு காலேஜ் 2 மணிக்கு முடிஞ்சுடும். அதுவரை அவள் ஸ்கூல்ல இருப்பா. லன்ச்சும் குடுத்து விட்டுடுவேன். அங்க சாப்பிட்டு வெய்ட் பண்ணுவா. நான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன்.”
“ஓகே… எப்பவும் ஒண்ணா போயிட்டு வருவாங்கன்னா ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு விக்ரம் மட்டும் ஏன் வந்தான்?” அக்னியின் கேள்வியில், அவள் உண்பதை நிறுத்தி இருந்தாள்.
“அன்னைக்கு நிலாவுக்கு ஸ்கூல்ல ஆனுவல் டே. பாப்பாவும் டேன்ஸ்ல இருந்தா. அவளோட ஸ்கூல்ல, பங்க்ஷன் அப்போ யார் யார் வரணும்னு முன்னாடியே லிஸ்ட் எடுத்தாங்க. ஃபங்க்ஷன் அன்னைக்கு விக்ரம் அத்தானுக்கு ஹெவி ஒர்க் இருக்கும்னு திலோவும் நானும் மட்டும் வர்றதா பேர் குடுத்தா.
ஆனா அன்னைக்குன்னு திலோவுக்கு ப்ராஜக்ட்ல ஏதோ பிரச்சினை ஆகி நகரவே முடியல. லாஸ்ட் மினிட்ஸ்ல வர முடியலைன்னு சொன்னா… விக்ரம் அத்தான் தான் ரெண்டு பேருமே வரலைன்னா பாப்பா ஏங்கிடுவான்னு, ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுட்டு கிளம்புனாரு. அவரு வருவாருன்னு நானும் ஸ்கூல்ல வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா ஆக்சிடென்ட்னு போன் தான் வந்துச்சு” என்றவளின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
அதற்கு மேல் உணவு எடுக்க இயலாமல் பிசையத் தொடங்கினாள்.
“அப்பறம் என்ன ஆச்சு?” டிஸ்யூ ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டியபடி கேட்டான்.
“அப்பறம் என்ன, நான் நிலாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போனேன். திலோ உடைஞ்சு போயிருந்தா. டாக்டர் காப்பாத்தவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஒரு வாரமும் சீரியஸ் கண்டிஷன்லயே தான் இருந்தாரு. கடவுளோட புண்ணியத்துல அவன் உயிர் பொழைச்சதே பெருசு…” என்றவளுக்கு இன்னும் அந்நிமிடங்களை எண்ணி அழுகை முட்டியது.
அவனுக்கு ஏதும் நேர்ந்திருந்தால்? அக்னி வேந்தனின் நெஞ்சில் எழுந்த ஒட்டு மொத்த அச்சத்தையும் கையை இறுக்கி மூடி அடக்கிக் கொண்டவன், தனது கேள்விக் கணைகளை விட்டானில்லை.
“ட்ரைவர்க்கு என்ன ஆச்சு?”
கண்ணைத் துடைத்த பவித்ராத்யா, “ட்ரைவர்க்கு நல்ல அடி தான். ஆனா உயிருக்கு ஆபத்து இல்ல” என்றதும், “நீ பார்த்தியா அவனை” என்றான்.
“ஹா ஆமா, ஆக்சிடென்ட் கேஸ்னு போலீஸ் எல்லாம் வந்தாங்க. திலோ சுத்தமா சுயநினைவுலயே இல்ல. என்கிட்ட தான் விசாரிச்சாங்க. டிரைவரையும் கூட்டிட்டு போய் காட்டி, அவன்கிட்டயும் விசாரிச்சாங்க. நானும் இருந்தேன் அங்க.”
“எப்பவும் வர்ற ட்ரைவரா?”
“இல்ல… ஏதோ புது ட்ரைவராம். லாரி கண்ட்ரோல் இல்லாம வந்ததுல அவனும் பதறி இருக்கான்.”
“காலைல பிக்கப் பண்ண வந்ததும் புது ட்ரைவரா?” அவன் கண்களில் கூர்மை அதிகரித்தது.
நெற்றியை நீவி சிந்தித்தவள், “சரியா ஞாபகம் இல்லையே! ஏன்னா அன்னைக்கு சர்விஸ் எக்ஸாம் இருந்துச்சு. மூணாவது அட்டெம்ப்ட். பாஸ் ஆகிடணுமேன்னு எனக்கு கவனமெல்லாம் அங்கயே இருந்துச்சு” என்றாள் பரிதாபமாக.
“கொஞ்சம் யோசிச்சு பாரேன் ஆத்யா!”
“ம்ம்ம்ம்… ஆனா, எப்பவும் சப்சிடியூட் ட்ரைவர் வந்தா, விக்ரம் அத்தான் கார்ல ஏறும்போதே அந்த டிரைவர்கிட்ட பேசுவாங்க. எப்பவும் வர்ற அண்ணா வரலையான்னு… அன்னைக்கு விக்ரம் அத்தானும் எதுவும் பேசுன மாதிரி தெரியல.”
“அப்படினா மார்னிங் எப்பவும் வர்ற ட்ரைவர் தான் வந்துருக்கான். அப்போ ஏன் மதியம் வேற ட்ரைவர் வந்தான்?”
“ஒரு வேளை அந்த ட்ரைவர் அண்ணா ஈவ்னிங் ஷிஃப்ட்கு தான் வருவாங்களா இருக்கும்!”
“இருக்கலாம்…”
“ஆமா, போலீசை விட நீங்க ஏன் இவ்ளோ கேள்வி கேட்குறீங்க?” பவித்ராத்யா கேட்டதில்,
பெருமூச்சு விட்டவன், “எனக்கு இந்த ஆக்சிடென்ட்ல கொஞ்சம் சந்தேகம் இருக்கு…” என்றான் யோசனையாக.
“என்ன சந்தேகம் அக்னி. அத்தானை வேணும்னே ஆக்சிடென்ட் பண்ணிருக்காங்களா?” அவள் பதறினாள்.
மறுப்பாய் தலையசைத்த ஆடவன், “கொஞ்சம் யோசிச்சு பாரு ஆத்யா. அன்னைக்கு விக்ரம் ஸ்கூலுக்கு வர்றது லாஸ்ட் மினிட்ல தான் முடிவு ஆகியிருக்கு. உண்மையிலேயே இது திட்டமிட்டு செஞ்ச சதின்னா, இந்த சதி விக்ரமுக்கு இல்ல. திலோவுக்கு!” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் பவித்ராத்யா அரண்டு விட்டாள்.
“என்னங்க சொல்றீங்க. திலோ மேல யாருக்கு கோபம் இருக்க போகுது.”
“அதை இனி தான் கண்டுபிடிக்கணும். அந்த ஆக்சிடென்ட் பத்தி விசாரிக்க, நம்ம சென்னைக்குப் போகணும்.”
“எப்போ?”
“நாளைக்கு மார்னிங் போயிட்டு ஈவ்னிங் வந்துடலாம். நாளைக்கு விஜிமாவும் குருப்பாவும் இங்க வரேன்னு சொல்லிருக்காங்க விக்ரமை பாத்துக்க. சோ நிலாவும் நாளைக்கு இங்க இருக்கட்டும். அவங்க பார்த்துப்பாங்க.”
“ம்ம்ம்” பலவீனமாய் தலையசைத்தவளுக்கு வருத்தம் மேலோங்கியது.
அதற்கு மேல் சாப்பிடவும் இயலவில்லை. அதன்பிறகே நினைவு வந்தவளாக, “நீங்க சாப்பிடவே இல்ல…” என்று மற்றொரு டிஃபன் பாக்ஸை எடுக்க, “நீ இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என்றான்.
“இல்ல போதும்”
“இன்னும் ரெண்டே வாய்!” அக்னி வற்புறுத்தியதால், இன்னும் இரண்டு விள்ளலை உண்டவள்
“போதும் அக்னி… என வேதனையாக கூற, அதே டிஃபன் பாக்ஸை அவன் வாங்கி உண்ணத் தொடங்கியதில் விக்கித்துப் போனாள் பவித்ராத்யா.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
+1

