
முகம் 08
“ம்மா என்ன சொல்லுறீங்க, அண்ணா எதுக்கு மறுபடியும் இங்க? சரி அழாதீங்க நான் பேசுறேன்” என்றவன் மேலும் சிறிது தாயிடம் பேசிவிட்டு, அழைப்பைத் துண்டிக்க, அவனையே கேள்வியாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் மற்ற இருவரும்.
அவர்களை நோக்கியவன் “தீராண்ணா மறுபடியும் இங்க சென்னைக்கே வரப்போறாங்கலாம் அதுவும் அதே கேஸ். இந்த ஒருவாரமா மறுபடியும் பழையபடி கடத்தல் நடக்க தொடங்கிடிச்சே!” என்றான்.
“வாட், இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டான் அவன்?” என்று கேட்டவனுக்கும் அந்த கேள்வி அபத்தம் என்றே தோன்றியது.
காவல் துறையினர் என்றும் அவர்கள் விருப்பப்படி வேலை செய்ய முடியாது. அவளது சேவை தேவைப்படும் இடத்துக்கு அழைத்தால் செல்ல வேண்டியது கட்டாயம் என்பதையும் அவன் அறிவான் தான். ஆனால் இதனை அவன் எதிர்பார்க்கவில்லை.
இந்த கடத்தல் கேள்விப்பட்ட போது கூட, ‘என் நண்பனை நம்பாமல் போனவர்களுக்கான பாடம் இது?’ என்ற எண்ணம் தான் அவன் மனதில்…
ஒரு பெரு மூச்சுடன் “ஓகே இதுவும் நல்லதுக்குத் தான்” என்றவன் மேலும் சில யோசனைகளை சொல்ல, அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.
____________________
இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வீட்டில் துவாவும் அபியும் கேக் செய்கிறோம் என சமையலறையை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்க,
“அபி, அத்தையை தொல்லை பண்ணாத? கம் ஹியர் அன்ட் சிட்” என்று மகனை தன் அருகே அழைக்க, அவனோ அங்கிருந்தபடியே “நோ மம்மி, ஐ எம் நாட் டிஸ்டர்பிங் துவா. ஐ எம் ஹெல்பிங் ஹேர்” என்றான் சத்தமாய்.
“இப்போ உள்ள வந்தேன் அடி தான் வாங்குவ நீ” என்க, உள்ளே சிரிப்பு சத்தம்.
அவளருகே அமர்ந்திருந்த சித்தார்த்தோ “உன்னப் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கும் போலடி” என்று சிரிக்க, அவள் முறைத்தாள்.
“சரி சரி சில நேரம் உண்மை வெளில வந்துடுது” என்றவன்,
“போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு முறைக்க சொல்லியா தரணும்’ என்று வாய்க்குள் முணுமுணுக்க, அது அவளுக்குக் கேட்டாலும்,
“என்னடா சத்தம் குறையுது” என வேண்டுமென்றே கேட்க,
“நான் சொன்னது உனக்கு கேக்கல அத நான் நம்பணும் அதானே நம்பிட்டேன்”. என்றவன்,
“சரி அத விடு, நான் இன்னைக்கு நைட் ஊருக்குப் போறதுல உனக்கு எதுவும் கஷ்டம் இல்லைல?” என்று கேட்டான்.
அவளோ “நீ உன் மாமனார் வீட்டுக்குப் போற, இதுல எனக்கு என்னடா கஷ்டம்? என்க,
“அது எனக்கு மட்டும் தான் மாமனார் வீடா மொழி?” என்று எதிர் கேள்வி கேட்டான் அவன்.
“சித்து முடிஞ்சதப் பேசாதன்னு உனக்குப் பல வாட்டி சொல்லிட்டேன்” என்று கண்டனக் குரலில் சொன்னவளோ,
“இங்க பாரு சித்து, நீ என்ன ட்ரை பண்ணுறன்னு எனக்கு நல்லாவே புரியுது. பட் அத எல்லாம் நான் எப்போவோ கடந்து வந்துட்டேன். இனிமேல் நானே நினைச்சாலும் ஒட்ட வைக்க முடியாது. என்னைப்பத்தி யோசிக்காம உன் வேலைய முடிச்சிட்டு வா, நான் எப்படியும் இன்னும் சிக்ஸ் மந்த் இங்க தானே இருப்பேன்” என்றாள்.
“என்னைக்கு நான் சொல்றத நீங்க கேட்டிருக்கீங்க. ரெண்டு பேருக்கும் எதுல ஒத்துப் போகுதோ இல்லையோ, இதுல என்ன ஒரு ஒற்றுமை. எப்படியோ போங்க” என்று அலுத்துக் கொண்டவன்,
“மொழி, என் ஃபிரண்ட் ஒருத்தங்க இன்னும் ரெண்டு நாள்ல இங்க சென்னைக்கு ஒரு வேலை விஷயமா வர்றாங்க. அவங்க தங்குறதுக்கு ஒரு வீடு வேணும்னு எங்கிட்ட தான் கேட்டிருந்தாங்க. ஊருக்கு போற அவசரத்துல வேற இடம் அரேன்ஞ் பண்ண முடியல, உனக்கு அப்ஜெக்ஷன் இல்லனா அவங்க இங்க உங்ககூட தங்கிக்கட்டுமா?” என்று கேட்க,
“தாராளமா சித்து, இது பெரிய வீடு தான, கூட ஒருத்தர் வந்து தங்குறதுல என்ன? கெஸ்ட் ரூம் இன்னொன்னு எக்ஸ்ட்ரா இருக்குல்ல வந்து தங்கிக்கட்டும். எனக்கும் கொஞ்சம் பொழுது போகும்ல” என்றவள் தனக்கு வந்த பதில் மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் விண்ணப்பித்திருந்த சில மருத்துவமனைகளில் இருந்து அவளுக்குப் பதில் வந்திருந்தது.
அதில் எது தனக்கு திருப்தியானது எனப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் அவளது அலைபேசி ஒலி எழுப்ப, ‘யார்’ என்று எடுத்துப்பார்த்தாள்.
அவள் தவிர்க்கவே முடியாத அந்த நபரின் அழைப்பு. ஆனால் எடுக்கக் கூடத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அந்த அழைப்பு அடித்து ஓய்ந்து மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
இவள் நிலையையும் அடித்து ஓயும் அழைபேசியையும் பார்த்த சித்தார்த்தோ அவள் தோளைத் தொட்டு “பேசு மொழி” என்றவன் அவளுக்குத் தனிமை கொடுத்து அங்கிருந்து சென்றிருந்தான்.
நண்பனின் தொடுகையை உணர்ந்து சுயம் பெற்றவளோ அழைப்பை உயிர்ப்பித்து காதில் வைக்க “மயல்மா…” என்று எப்போதும் போல் அதே தேனொழுகும் குரல்.
அதில் மயங்கவிருந்த மனதை கட்டுப்படுத்தியவள் “சொல்லுங்க மிஸ்டர் ராம்பிரசாத்” என்று அழுத்தமாய் அவர் பெயரை உச்சரித்ததில் எதிரில் இருந்தவரின் முகத்தில் புன்னகை விரிந்தது.
“ஹாஹாஹா, அப்பா மேல ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கே மயல்” என்று கேட்க,
“கோபமா? நீங்க யாரு சார் எனக்கு? உங்க மேல எனக்கென்ன கோபம். தவறுதலாக் கூட இந்த நம்பருக்கு உங்க கால் வராதே! என்னாச்சு இன்னைக்கு, ஏதாச்சும் அதிசயம் நடக்கப் போகுதா?” என்றாள் உடையவிருந்த மனதை காட்டிக்கொல்லாமல்…
அதில் எதிரில் இருந்த ராம்பிரசாத்தின் குரலோ வலுவிழந்தது
“டேய் ஏன்டா இப்படிலாம் பேசுற, ப்ளீஸ் மயல். அப்பா எது பண்ணாலும் சரினு சொல்லுற என் பொண்ணுக்கு இப்போ என்ன ஆகிடிச்சாம்?” என்று கேட்க அவளிடம் அமைதி…
இனி அவள் புரிந்து கொள்வாள் என்பது புரிய, “நம்ம ஹாஸ்பிடல் போ மயல்” என்றொரு அழுதமான குரல் அவரிடம். அது மறுக்க முடியாத கட்டளைக் குரல் என்பதையும் அவள் அறிவாள்.
“என்ன உங்க விசுவாசி எல்லாம் உங்க கிட்ட ஒப்பிச்சாச்சா?” என்று கோபமாய் வந்தது அவள் வார்த்தைகள்.
அதில் புன்னகைத்தவரோ “என்ன இப்போ அவன் மேல கோபமா? அவன் சொல்லலடா” என்றார்.
“நம்பிட்டேன். அவரா உங்ககிட்ட சொல்லாம இருப்பாரு, இனிமேல் ஊருக்கு போகும் போது என்கூட வரவேணானு சொல்லிடுங்க” என்க,
“மயல் வார்த்தையைப் பார்த்து பேசணும். என்ன பேச்சு இது? தியா அவனுக்காகவா உன்கூட இருக்கான்?” என்று கண்டிப்பான குரலில் கேட்க,
“சாரி” என்றாள் அவளது தவறு புரிந்து…
“சரி நாளைக்கு கிளம்பி ஹாஸ்பிடல் போ மத்தத நான் பார்த்துக்கிறேன்” என்றவர் ஒரு நிமிடம் தயங்கி,
“அபி எங்கடா? தியாவ அனுப்புறேன் இங்க அனுப்பி வைக்கிறியா?” என்று கேட்க,
“பொண்ணப் பார்க்க தோணல, பேரன் மட்டும் வேணுமா? அதெல்லாம் முடியாது. இப்போவும் தேவைன்னு ஒன்னு வந்தா தான் நான் உங்க பொண்ணுன்னே உங்களுக்கு ஞாபகம் வரும்ல” என்றவள் அவர் பதில் பேசும் முன்னரே அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
துண்டிக்கப்பட்ட அழைப்பைப் பார்த்தவரோ “பாரேன் தியா இந்தப் பொண்ணுக்குக் கோபத்தை அப்படியே கோதை தான்” என்று மனைவி மேலுள்ள காதலில் உணர்ந்து சொன்னவர் முகத்தில் மனைவியைப் பிரிந்த சோகம் சிறிதாய் இழையோடியது.
“அதுசரி உனக்கு கோதை ஞாபகம் வரலன்னா தான் அதிசயம்” என்று சொல்ல,
“எப்படி வராம போகும் தியா, அவ என்னோட ஏஞ்சல்” என்று கண்மூடியபடியே சொல்ல,
“அந்த ஏஞ்சல் தான் கல்யாணமாகி ரெண்டு வருசத்துலேயே ஒரு பச்ச குழந்தையோட உன்ன தனியா விட்டுட்டுப் போச்சு” என்றார் கோபாமாய்.
அதற்கு ராமோ “தியா” என்று அழுத்தமாய் அழைக்க,
“என்ன இப்போ உன் பொண்டாட்டிய நான் பேசக்கூடாது அப்படித்தானே!” என்று காட்டமாய் அவர் கேட்க, ராமிடம் மௌனம்.
“இதோ பாரு ராம். உன்ன விட அவளை எனக்கு நல்லாவே தெரியும். உன் பொண்டாட்டியப் பேச எனக்கு உரிமை இல்லாம இருக்கலாம். ஆனா என் தங்கச்சிய எனக்குப் பேச எல்லா உரிமையும் இருக்கு. அவ ஒரு வாயில்லாத பூச்சு நான் ஒத்துக்கிறேன். ஆனா உன்ன விட்டுட்டுப் போனத மட்டும் என்னால ஒத்துக்கவே முடியலடா. அப்படி என்ன தான்டா உங்களுக்குள்ள பிரச்சனை. என்னன்னாச்சும் சொல்லித் தொலையேன்” என்றார்.
நண்பனின் தோளில் கை போட்ட ராமோ “அதைத்தான் இத்தன வருஷமா சொல்லுறேனே! அவ பிரியணும்னு கேட்டா நான் சம்மதிச்சேன் அவ்வளவு தான்” என்று எப்போதும் சொல்லும் அதே பதிலைச் சொல்ல, தியாகராஜன் முறைத்தார் அவரை…
ராம் பிரசாத்தோ “விடு தியா, பழசு எதுக்கு இப்போ, உன் வேலை எல்லாம் எப்படி போகுது அங்க?” என்றார் பேச்சை மாற்றும் விதமாய்…
அதனை புரிந்து கொண்ட தியாகராஜனும் “அதுக்கென்ன, நல்லா தான் போகுது. மொழி ரொம்ப இன்டலிஜெண்ட். அங்க அவ ஃபேமஸ் டாக்டர் தெரியுமா? பேசன்ட் ரொம்ப பொறுமையா ஹண்டில் பண்ணுவா. இப்போ பி.ஜி கைனோ ஜாயின் பண்ணி இருக்கா. என் ஃ பிரண்ட் ஒருத்தரத் தான் ஆசிஸ்ட் பண்ணுறா, அவங்களும் எங்கிட்ட பெருமையா சொல்லுவாங்க” என்க,
“அப்படியே அவ அம்மா மாதிரி” என்று ராம் முடித்து வைத்தார். அதுவே தியாகராஜனுக்குக் கவலை தொற்றிக் கொள்ள காரணமாய் இருந்தது.
பைத்தியக்கார தனமான காதல் என்று கேள்விப்பட்டிருக்கிறார் ஆனால் இப்போது அதனை ராம் விஷயத்தில் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
‘இப்படி ஒரு கணவனை விட்டுச் செல்ல தன் தங்கைக்கு எப்படி தான் மனது வந்ததோ?’ என அவர் எண்ணாத நாளில்லை
தங்கை வாழ்வையும் அவளது மடத்தனத்தியும் எண்ணிக் கவலை அவருக்கு…
நண்பனின் மனதை மாற்ற எண்ணியவரோ “ராம், கயலுக்கு கோதை ஏதோ மாப்பிள்ளை பார்த்ததா சொன்னியே! என்ன பன்றாரு?” என்று கேட்க,
“நம்ம ஹாஸ்பிடல்ல தான் ஒர்க் பண்றாரு தியா, ரொம்ப நல்ல பையன். நம்ம சீனியர் டாக்டர் முரளிதரனோட பையன். பெயர் விஷால். நம்ம கயலுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான்” என்றார்.
“சீக்கிரமே அவளுக்கும் கல்யாணத்தை பண்ணி வெச்சிடு ராம். இளையவ கட்டிக்கிட்டு அஞ்சு வருஷமாகிடிச்சு” என்க,
“அவ தான் அப்பா விருப்பத்தைக் கூடக் கேக்காம பத்தொன்பது வயசுலயே அவ வாழ்க்கைய தேடிக்கிட்டாளே! அதுவும் அப்படி ஒரு நிலையில” என்றவருக்கு அவள் திருமணம் நடந்த நிலையை நினைத்து அத்தனை கோபம்
“விடு ராம் எப்போவோ நடந்ததுக்கு இப்போ கோபப்படுவியா? மாப்பிளையக் கூப்பிட்டுப் பேசு, உன் பொண்ணு வாழ வேண்டாமா? உன்னப் போல உன் பொண்ணு வாழ்க்கையும் ஆரம்பிக்க முதலே இப்படி முடிஞ்சி போய் நிக்கிது” என்றார்.
ராமோ கோபமாக “நான் சொன்னா அவன் அப்படியே கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான். நான் சொன்னா வேணும்னே செய்யாம வேணா இருப்பான்” என்றவர், “என்கிட்டயே வந்து என் குழந்தை அவ வயித்துல வளருது இனிஷியல் வேணுமான்னு கேக்குறான் ராஸ்கல்” என்றார் அன்றைய நாளின் கோபத்தில்…
“இருந்தாலும் உனக்கு ஏத்த மாப்பிளை தான்” என்று
தியாகராஜன் சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருக்க,
அங்கே வந்த ஒருவனோ, “சார், குழந்தைங்கள இங்க கொண்டு வந்தாச்சு. இருபது பேர் போதுமா இன்னும் வேணுமான்னு கேட்டாங்க, என்ன சொல்லட்டும்?” என்று கேட்க, அத்தனை நேரம் இருந்த கணிவு மறைந்து அவர் முகம் இறுகியது.
“அத நான் பேசிக்கிறேன் ராஜ். இப்போ நீ குழந்தைங்கள நம்ம கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டுப் போ” என்றவர் கண்களை மூடித்திறக்க, அவனுக்கு அதன் அர்த்தம் புரிந்தது.
மீண்டும் அவரே “குழந்தைகளுக்குப் பால் கொடுக்க பத்துப் பேர ஏற்பாடு பண்ண சொல்லி இருந்தேனே! அது என்னாச்சு?” என்று கேட்க,
“தயாரா இருக்காங்க சார், நம்ம சொல்லுற வர இங்கையே தங்கி பால் கொடுக்கவும் தயாரா தான் இருக்காங்க, அதுக்குரிய காசு சேர்த்துத்தான் பேசி இருக்கேன்” என்று அவன் எல்லாம் சொல்ல, அமைதியாய் கேட்டுக்கொண்டார்.
“ம்ம்ம் குட், அப்பறம் அவங்களுக்கு தேவையான சாப்பாடு எல்லாம் பார்த்துக்கோ. நல்லா விசாரிச்சுத் தானே எடுத்திருக்க, நம்பிக்கைக்குரிய ஆட்கள் தானே?” என்று அவர் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்க,
“நம்பலாம் சார், எல்லாம் பார்த்துத் தான் செலக்ட் பண்ணி இருக்கோம்” என்று உறுதியாய்ச் சொல்ல, அவரோ தலையசைத்து அவனைப் போகும் படி சைகை செய்ய, அவனும் கிளம்பி விட்டான்.
அத்தனை நேரம் அமைதியாய் இருந்த தியாகராஜனோ “இதெல்லாம் தேவையா ராம், குழந்தைங்கள வெச்சு என்ன விளையாட்டு இது? ஏற்கனவே பட்டது எல்லாம் போதாதா? உன் கோதைக்கு இது தெரிஞ்சா எவ்வளவு பிரச்சனை ஆகும்னு யோசிச்சு பார்த்தியா?” என்று கேட்க,
ராம் பிரசாத்தோ “அவளுக்கு தெரிய வராம பார்த்துப்பேன் தியா, இது தான் நான் ஆரம்பிக்கப் போற விளையாட்டு, முடிவு நிச்சயம் நமக்கு சாதகமா தான் வரும். இப்போ வருவான்ல அந்த ஜெயதீரன், வரட்டும். உண்மைய கண்டுபிடிச்சு தான் காட்டட்டுமே! ஓடி ஒளிஞ்சு எங்கிட்ட இருந்து தப்பிக்க பார்க்குறானா அவன். அஞ்சு வருசத்துக்கு முன்ன கிடைக்காத அந்த ஆதாரம் இப்போ கிடைக்குதா பார்ப்போம். தி கேம் பிகின்ஸ் நவ்” என்றார்.
அவர் குரலில் என்ன இருந்தது என தியாகராஜனால் கூட கண்டறிய முடியவில்லை…
“ராம், அவர் உன்னோட மாப்பிள்ளை” என்று தியாகராஜன் ஞாபகப்படுத்த,
“அதான் இது விளையாட்டுனு சொன்னேனே தியா! இது முழுக்க முழுக்க மாமனார் மருமகன் விளையாட்டு. அஞ்சு வருடத்துக்கு முன்னவே என் மருமகன் என்கூட விளையாடிட்டானே! அதான் மாமனார் எனக்கு அவன் கூட விளையாடிப் பார்க்க ஆசை வந்திருக்கு. இப்போ இது என்னோட டேர்ன். நான் அதுல இருந்து வெளிய வந்தாலும் நடந்தது இல்லனு ஆகாதே! சோ அவன் வந்து எனக்குப் பதில் சொல்லியே ஆகணும்” என்றவர் அங்கிருந்து எழுந்து வெளியே வந்தார்.
அது ஒரு ஆசிரமம். அவருடையது தான். கடந்த ஐந்து வருடமாக அவரது இருப்பிடமும் அதுதான். இப்போதெல்லாம் அவர் மனது தியானத்தில் வழியில் தான் செல்கிறது.
தியானம் என்பது எதை மறைப்பதற்கான போர்வையோ???
அத்தனை சொத்துக்கள் இருக்கையில் இங்கே வந்து ஆசிரமத்தில் மக்களோடு மக்களாய் தங்கக் காரணம்???
விளையாட்டில் ஜெயிக்கப் போவது மாமனா?? மருமகனா??
ஈர்க்கும்….


