
முகம் 09
அந்த அதிகாலையிலும் அந்த இடம் இருள் சூழ்ந்து தான் காட்சியளித்தது.
அத்தனை சுத்தம். அங்கே சிறு தூசியைக் கூடக் காண முடியாதபடி எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, ஆனால் அழும் குழந்தையின் சத்தம் மட்டும் சங்கீதமாய் அங்கே!
அன்று புதிதாய் அங்கே ஒரு குழந்தை வந்திருந்தது. அதன் அழுகை தான் அது. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அழுகை இல்லாத ஒரு ஆழ்ந்த மௌனத்துக்கு அந்த உயிர் செல்லவிருப்பதை அங்கிருப்பவர்கள் தவிர யாரும் அறியார்.
அங்கே வந்த உருவமோ அந்த அழுகையை உள்வாங்கி லேசான புன்னகையுடன் உள்ளறைக்குள் நுழைய,
அழும் குழந்தையை மடியில் ஏந்தியபடி சக்கர நாட்காலியில் கிட்டத்தட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி அமர்ந்திருந்தார்.
அவரருகே விரைந்த உருவமோ “கங்கா உனக்கு என்னோட அடுத்த கிஃப்ட்” என்க,
காங்கா என்று அழைக்கப் பட்டவரின் கண்களிலிருந்து ஒரு கண்ணீர் துளி அந்தக் குழந்தை மீது பட்டுத் தெரிந்தது.
“நீ எதுக்காக அழுற கங்கா, நாம பண்ணப்போறது ஆபரேஷன் சி.ஈ. இத நாம மனப்பூர்வமா பண்ணனும்” என்ற அந்த உருவமோ, அந்த குழந்தையைத் தூக்கி அருகில் படுக்க வைத்து, கங்காவின் காலடியில் அமர்ந்து கொண்டது.
கங்காவின் கரத்தைக் கையில் ஏந்தி அதற்கொரு முத்தம் வைத்து, “எங்கூட பேசேன் கங்கா, எத்தனை வருஷமா பேசாமலே இருக்க” என்று கங்காவின் இரு கரங்களையும் எடுத்து விரல்களை நீட்டி பேச வைக்க முயற்சி செய்ய, கரங்கள் இரண்டும் வலுவிழந்து தன்னால் கீழே விழுந்தது.
“அச்சோ வலிக்கிடுச்சா, சாரி… ஏன் கங்கா இப்படி இருக்க, எல்லாம் அவங்களோட தப்பு. அந்தத் தப்ப சரி பண்ணத்தான நாம போராடுறோம். நிச்சயம் நம்ம போராட்டம் வீண் போகாது” என்று தன் திட்டத்தில் அந்த வாய் பேச முடியாத, நடக்க முடியாத அந்த பெண்மணி கங்காவுக்கும் சமபங்கு கொடுத்தது அந்த உருவம்.
அப்படியே அமர்ந்தபடியே கங்காவின் மடியில் படுத்து தானே அவரின் கரத்தை எடுத்து தன் தலையிலும் வைத்துக்கொண்டு தடவிக் கொடுக்கத் தொடங்கியது.
ஆனால் கங்காவிடமிருந்து எந்த அசைவும் இல்லை, கூடவே அதற்கு அந்த உருவத்திடமும் எந்த எதிரிப்பும் வரவில்லை…
அதுவே அது பலவருடம் நடக்கும் நிகழ்வு தான் என்பதை உறுதிப்படுத்தியது.
கங்காவின் மடியில், சிறுது நேர ஆழ்ந்த உறக்கம். இனி உறக்கமே இல்லாமல் தவிக்கப்போகும் நாட்கள் மிக அருகில் என்பதை அந்த உருவத்துக்கு யார் சொல்வது???
________________________
வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டுருந்த மயல் மொழியோ கண்ணாடியில் அவள் முகத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தந்தை சொல்லியாகி விட்டது இனிமே மீறவும் வாய்ப்பில்லை. ஆனால் முழு மனதாய் அங்கே செல்ல முடியும் என்ற எண்ணமே அவளிடம் சிறிதும் இல்லை.
“மொயிமா, ஹாஸ்பிடல் நானும் வரவா?” என்று அபி கேட்க, அதில் சிந்தனையிலிருந்து விடுபட்டவள்,
“அபி, குட் பாய் தானே! அம்மா போயிட்டு சீக்கிரம் வருவேனாம். நீ நான் சித்து, துவா எல்லாரும் ஈவினிங் வெளில போகலாம் இப்போ துவா கூட சில் பண்ணுங்க” என்று மகன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வர, சித்தார்த் தயாராகி அவளுக்காகக் காத்திருந்தான்.
இவளைக் கண்டதும் சிறிது முறைப்புடன், “அதெல்லாம் சொல்லுறவங்க சொன்னா தான் எல்லாரும் கேக்குறாங்க, நாங்க எல்லாம் யாரோ தானே! அவர என்னனு தான் நீ இவ்வளவு நம்புறியோ?” என்று கேட்க,
“சித்து, மார்னிங்கே என்கிட்ட வாங்கிக் கட்டிக்காத” என்றாள் அவளும் அதே முறைப்புடன்…
“ஆமா அப்படியே நீ அவரப் பத்தி பேச விட்டுட்டாலும்” என்றவன் முன்னே நடக்க, துவாரகாவிடம் சொல்லி அவளும் வெளியேறி இருந்தாள்.
போகும் வழி எங்கும் சித்தார்த் எதுவுமே பேசவில்லை. அவனுக்கு அவ்வளவு கோபம். அப்படி என்ன கண்மூடித்தனமான அன்பு என அவனை எரிச்சல் படாமல் இருக்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்து அவர் மயலுக்காக எதுவும் செய்ததாக ஞாபகம் இல்லை.
‘இந்தப் பெண் என்னவென்றால் அவருக்காக அவள் வாழ்க்கையை அல்லவா அழித்துக் கொண்டிருக்கிறாள்’ என்ற கடுப்பு அவனுக்கு…
மருத்துவமனை வந்து சேரும்வரை பொறுமையாக இருந்தவள் அப்போதும் அவன் பேசவில்லை என்றதும்,
“சித்து, சில உறவுகள் மேல உள்ள நம்பிக்கையை வெறும் வார்த்தையாள சொல்லிட முடியாது, அப்படித்தான் எனக்கு என் அப்பா. இதப்பத்தி பேசி யோசிச்சு ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். இனிமேல் இத காரணமா வெச்சு நமக்குள்ள சண்டை வேணாமே ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சுதலாய் கேட்டதில்,
‘அப்போ உன் ஜெய் மேல நம்பிக்கை வெக்கல அப்படித்தானே?’ என்று கேட்க நினைத்த கேள்வி மனதுக்குள்ளே பதுங்கிக் கொண்டது.
‘இத்தனை வருடம் கழித்து தனக்காக வந்திருப்பவளிடம் சண்டை பிடித்து என்னவாகப் போகிறது?’ என்று எண்ணியவனோ,
“சரிடி லேங்குவேஜ், ஆனா இதுக்குப் பனிஷ்மென்ட்டா இன்னைக்கு லஞ்ச் உன் பொறுப்பு ஓகேவா?” என்றான்.
அதில் புன்னகைத்து “அது எப்படிடா சாப்பாட்டு விஷயத்துலயும் மட்டும் சரியா இருக்க?” என்றவள் அவனோடு சேர்ந்து நடக்க,
“அப்போ எனக்கு பசிக்கும்ல, நான் சாப்பிடக் கூடாதா” என்று நகைச்சுவை பாணியில் கேட்டவன் சிரிக்க, அவளும் சிரித்துவிட்டாள்.
அப்படியே அவர்கள் மருத்துவமனை உள்ளேயும் நுழைந்திருக்க, அங்கிருந்தவர்கள் பார்வை மொத்தமும் அவர்கள் மீதுதான் பதிந்தது.
இதனை உணராதவர்கள் அப்படியே பேசி சிரித்தபடி செல்ல, தாதி ஒருவரோ இவர்களிடம் விரைந்து வந்தவர்,
“டாக்டர், பெரிய டாக்டர் ரொம்ப கோபமா உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுறாங்க, சீக்கிரம் போங்க” என்று அவசரப்படுத்த, என்னவென்று புரியாவிட்டாலும் அவருடன் சென்றாள் மயல்மொழி.
அவர் நேரே அழைத்துச் சென்றது பூங்கோதையின் அறைக்குத் தான்.
“உள்ள போங்க டாக்டர்” என்றவர் அங்கிருந்து செல்ல, ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு எதையும் சமாளிக்க மனதை திடப்படுத்தியவள் உள்ளே நுழைந்தாள்.
“இதான் நீ வர்ற நேரமா கயல்? இன்னைக்கு ஒரு முக்கியமான டெலிவரி இருக்குன்னு நேத்தே சொல்லி இருந்தேனே! அவ்வளவு கிரிட்டிகல் கேஸ், உன் நாலேஜுக்கு யூஸ் ஆகுமேன்னு உன்ன எனக்கு அஸிஸ்ட் பண்ண சொன்னா. இது தான் நீ கத்துக்குற லட்சணமா?” என்று அவர் பாட்டுக்குக் கோபமாய் பேச எதிரில் நின்றிருந்தவளிடம் பதில் இல்லை…
கயல் என்றால் இந்நேரத்துக்கு ஆயிரம் மன்னிப்புக் கேட்டுத் தாயை சமாதானம் செய்திருப்பாள்.
அப்படி எதுவும் நடக்காததில் பார்த்துக் கொண்டிருந்த கோப்பை விட்டு பார்வையை அவள் புறம் திருப்பினார்.
அங்கே அவருக்கு நேர் எதிரே கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டியபடி உணர்வுகளின் பிடியில் நிமிர்ந்து கோதையையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளை நோக்கியவருக்கு எதிரில் நிற்பது யாரென்று புரிந்து போனதில் மூளையில் சட்டென மின்சாரம் பாய்ந்த உணர்வு.
சட்டென இருக்கையை விட்டு எழுந்தே விட்டார்.
“மொழி…” என்று திணறியபடி வந்தது அவர் அழைப்பு.
அதனை புறம் தள்ளியவளோ “அப்பா என்னை இங்க டெம்பரரியா ஒர்க் பண்ண சொன்னாங்க அதான்ல தான் வந்தேன். பயப்பட வேணாம் சிக்ஸ் மந்த்ஸ்ல போய்டுவேன்” என்றாள். அதில் அவ்வளவு தான் உங்களுக்கு தகவல் சொல்லியாகிற்று என்ற பாவனை மட்டுமே!
அவளது வெற்றுப் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று, கோதையின் மனதை கொஞ்சம் கொஞ்சமாய் சுட்டுக் கொண்டிருந்தது.
“எத்தனை நாள் வேணா இங்க இரு மொழி” என்றார் அவள் சீக்கிரம் சென்று விடுகிறேன் என அவளுக்கு குறிப்பு கொடுத்த தாக்கத்தில்.
அதற்கு பதில் சொல்லாமல் “நான் போகட்டா?” என்று கேட்டவளுக்கு அங்கே நிற்க முடியவில்லை..
அவள் மறக்க வேண்டும் என்று நினைத்தும் முடியாத அந்த வேண்டாத நினைவுகள் எல்லாம் அணிவகுக்க, நிலையாய் நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது அவளுக்கு, உணர்வுகளை அடக்கப் பார்த்தும் முடியாமல் மயங்கி சரிந்திருந்தாள்…
_________________
மாணிக்கவேல் அவர் அறையில் யோசனையுடன் அமர்ந்திருக்க, சக்திவேலோ தந்தையின் அறைக்குள் நுழைந்தார்.
“அப்பா, என்ன விஷயம்ப்பா? அவசரமா வர சொன்னீங்களே!” என்று தந்தையின் அருகில் அமர,
தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றியவரோ, “எல்லாம் முக்கியமான விஷயமாத் தான் சக்தி” என்று நிறுத்தியவர் அமைதியாக இருக்க, சக்திவேலும் தந்தை பேசட்டும் என்று மௌனம் காத்தார்.
சில வினாடிகள் அப்படியே கழிய, பெருமூச்சொன்றை வெளிவிட்டவர் “நம்ம தீராவோட வாழ்க்கை, அதப்பத்தி என்ன யோசிச்சி இருக்க சக்தி?” என்றார்.
அதனைக் கேட்டதும் சக்திவேலின் முகம் மாற முயன்று நிதானதுக்கு வந்தவர் “அத எதுக்குப்பா எங்கிட்ட கேக்குறீங்க, மூத்தவருக்கிட்ட நீங்களே பேசலாமே!” என்றார். அந்த வார்த்தைகளில் இருந்த வேதனையை ஒரு தந்தையாக உணர்ந்தவர்,
“எதுல இருந்து தப்பிக்க நினைக்கிற சக்தி நீ? அவன் உன் மகன். அவன் வாழ்க்கை உனக்கு முக்கியமில்லையா? இது தப்பு சக்தி. பசங்க தப்பு பண்ணா எடுத்து சொல்லணுமே தவிர தண்டிக்க கூடாது. அதுவும் நம்ம தீரன் தப்பு
பண்ணக் கூடிய ஆளா? நீ சொல்லியும் அவன் அத பண்ணலனா, அதால எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பான்னு நீ யோசிக்கலையே!” என்றார்.
சக்திவேலும் அதை எல்லாம் யோசிக்காமல் இல்லையே! தன் மகன் எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும், பின் வாங்கக் கூடாது என்பது அவர் எண்ணம். அதுவே அவரது அந்த முடிவுக்கும் காரணம். ஆனால் வருடங்கள் ஓடியும் மகன் அதை செய்ய தயாராய் இல்லை. இவரும் இறங்கி வர எண்ணவில்லை.
மகனின் அமைதியில் மாணிக்கவேல் மீண்டும் தொடர்ந்தார்.
“நானும் நீயா புரிஞ்சிப்பன்னு காத்திருந்தா அப்படி ஒன்னு நடக்கவே இல்ல. இப்போ துவா கல்யாணமும் முடிஞ்சாச்சு, அடுத்து வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருக்கு, அவங்க வாழ்க்கையையும் பார்க்கணும்ல” என்றதும்,
“சிவா, இன்பா கல்யாணம் முன்னவே பேசுனது தானேப்பா. மலருக்கு வெளில பேசுவோம். அதுதான் சரியும் கூட” என்க,
அவரோ புன்னகையுடன் “திருப்பியும் அதே தப்பைப் பண்ணாத சக்தி, ஏற்கனவே வல்லி ஆசைய வளர்த்துட்டு கஷ்டப்படுறது போதாதா? முதல்ல சிவா, இன்பா மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு தான் அடுத்த கல்யாணப் பேச்சே இந்த வீட்டுல வரணும்” என்று உறுதியாகச் சொன்னவர்,
“நான் இப்போ பேச கூப்பிட்டது தீரனோட வாழ்க்கையைப் பத்தி, நீ உன் கோபத்தை எல்லாம் விட்டுட்டு அவன்கிட்ட பேசு. நீ பேசுனா அவன் புரிஞ்சிப்பான். நீ கோபத்துல வார்த்தையை விட்டுட்ட அது அவன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு, இளம் ரெத்தம்ல அதான் அவனும் வீம்புக்கு அங்க போய் உக்காந்திருக்கான்” என்றவர்,
“உன் பையன் பிறந்த அன்னைக்கு எவ்வளவு ஆசையா என் பையன்னு என்கிட்ட அவனைக் காட்டுன, அதே எதிர்பார்ப்போட தான அன்னைக்கு அவனும் உன் முன்ன நின்னான். இதோ இப்போ மறுபடியும் அங்க போகணும்னு முடிவு எடுத்திருக்கான். யோசி சக்தி உனக்கு நான் சொல்லணும்னு இல்ல. ” என்று மகனின் தோளில் தட்டிக் கொடுத்தார்.
இனி மகன் யோசித்து முடிவு எடுப்பான் என்பது அவர் எண்ணம்.
எடுக்கும் முடிவு யாருக்கு சாதகமாய் அமையுமோ????
ஈர்க்கும்…


