Loading

மறுநாளே விக்ரமை மருத்துவமனையில் அனுமதிக்க ஆயத்தமாகினர்.

காலை உணவை முடித்து விட்டு, மருத்துவர் புதிதாய் கொடுத்த மருந்துகளின் வீரியத்தில் விக்ரம் உறங்கி இருக்க, திலோத்தமா கீழிறங்கி வந்தாள்.

வரவேற்பறையில் அமர்ந்து தன் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அக்னி வேந்தனைத் தயக்கமாகப் பார்க்க, தாயைக் கண்டதும் வேகமாய் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள் அக்னிலா.

“ஹாஸ்பிடலுக்கு எப்போ போகணும்?” அவளது கேள்வியில்,

“விக்ரம் எந்திரிக்கவும் போகலாம்” என்றதில் தலையசைத்தவள், அங்கிருந்தே அவளை எரிச்சலுடன் பார்த்த சவுந்தரவல்லியின் பார்வையைத் தவிர்த்து விட்டு தங்கையைக் காணச் சென்றாள்.

எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தவளைக் கண்டு, “யோகா கிளாசுக்கு போறியா பவிமா” எனக் கேட்க,

“இல்லக்கா… இன்னைக்கு அத்தானை ஹாஸ்பிடல்ல சேர்க்கணும்ல. போயிட்டு வந்தா லேட் ஆகிடும்னு சொல்லிட்டாரு. நம்ம வீட்டுப் பக்கம் போகலாம்னு கிளம்புனேன்கா…” என்றாள் மெல்லெழுந்த வேதனையுடன்.

“நானும் போகணும்னு நினைச்சேன் பவி. விக்ரம் தூங்கிட்டு தான் இருக்காரு. நம்ம போயிட்டு வந்துடலாமா?” அவள் ஆர்வமாகக் கேட்க, “சரி திலோ” என வேகமாக வெளியில் வந்தவளை அக்னி வேந்தன் நிமிர்ந்து பார்த்தான்.

ஏற்கனவே அவனிடம் சொல்லிருந்தாள், “நாங்க இருந்த வீடு வரை போயிட்டு வந்துடட்டுமா? அரை மணி நேரத்துல வந்துடுவேன்…” என்று.

அவன் அக்னிலாவைப் பார்த்துக் கொள்வதாகக் கூறியதில் தான் அவள் கிளம்பச் சென்றதும்.

இப்போது அக்காவும் தங்கையுமாக சிறு வயதில் இருந்து அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்க்க நடைப்பயணம் மேற்கொண்டனர்.

சைக்கிளில் அங்கு வட்டமடித்த நிகழ்வுகளும், மாலை வீடு திரும்பும்போது தங்களுக்காகச் சுட சுட உணவுடன் காத்திருக்கும் அன்னையின் அன்பும் நினைவிழாட இருவருக்கும் கண் கலங்கியது.

வெகு வருடங்களாக அதே தெருவில் இருந்த சிலர், திலோத்தமாவைக் கண்டு கொண்டு முகத்தைச் சுளித்து விட்டு சென்றனர்.

அவர்களைப் பாராமல், தாங்கள் இருந்த நான்காவது மாடியை நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கு வேறொரு குடும்பம் வசித்தது.

தந்தை வைத்திருந்த மெக்கானிக் கடைக்குச் செல்ல, அங்கு அதை நடத்திக்கொண்டிருந்த சரவணன் என்பவர் இரு பெண்களையும் யாரென பார்த்தார்.

பவித்ராத்யா தான், “அண்ணா என்னை ஞாபகம் இருக்கா. என் அப்பா தான் இந்த கடையை நடத்திட்டு இருந்தாரு. லீஸை உங்களுக்கு மாத்தி விட்டுட்டுப் போனாருல” என நினைவுபடுத்த, “ஆமாமா நல்லாருக்கியா. அப்பா எப்படி இருக்காரு” என நலம் விசாரித்தார்.

“அப்பா இல்லண்ணா” அழுகையை விழுங்கியவள், “அண்ணா இங்க இருந்து போறப்ப நான் ரெண்டு சைக்கிள் குடுத்து இங்கேயே இருக்கட்டும்னு சொன்னேனே…” எனத் தயக்கமாகக் கேட்டாள்.

அவளது வருத்தம் புரிந்த சரவணன், “இருக்குமா. நான் அதை எதுக்காகவும் எடுக்கல. வேலை இல்லாம இருந்தப்ப, உங்க அப்பா தான் எனக்கு இங்க வேலை போட்டு குடுத்தாரு. கடைசியா, இடத்தோட ஓனருட்ட பேசி கம்மி விலைக்கு இந்த இடத்தை லீசுக்கு வாங்கித் தந்து, இப்ப எனக்கு வாழ்வாதாரம் கொடுத்ததே அவரு தான். அவர் இல்லைன்னு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு” என்றார் பெருமூச்சு விட்டு.

“ரெண்டு சைக்கிளும் வேணுமாமா?” அவர் கேட்டதும் பவித்ராத்யா ஆர்வத்துடன் தலையாட்டினாள்.

திலோத்தமா தான், “அங்க போய் எங்க நிறுத்துவ பவிமா. பாட்டி பார்த்தா திட்டுவாங்களே” எனப் பயம் கொண்டாள்.

“நிறுத்த இடம் தரலைன்னா, அந்தக் கெழவி ரூமுக்குள்ள போய் நிறுத்திட வேண்டியது தான்” என நக்கலாகச் சிரித்த தங்கையிடம் முறுவலித்தாள்.

சரவணனோ, “இருங்கமா காத்து அடிச்சு தரேன்…” என்று அந்த சைக்கிள்களை நன்றாகத் துடைத்து, காற்றடித்து தர, அவருக்கு நன்றி கூறி விட்டு இருவரும் கிளம்பினர். 

தங்களது சைக்கிளைத் தொட்டதும் ஒரு சிலிர்ப்பான உணர்வு இருவருக்கும்.

“இதையாச்சு எடுத்துட்டுப் போகலாம்னு அப்பாட்ட எவ்ளோவோ சொன்னேன் தெரியுமா திலோ. அவர் தான் கேட்கவே இல்லை” எனப் புலம்பிக்கொண்ட தங்கையிடம் பதிலுரைக்கவில்லை அவள்.

பவித்ராத்யாவோ ஓரக்கண்ணில் அவளை பார்த்தபடி, “அன்னைக்கு என்ன தான்கா நடந்துச்சு. யார் வந்து மிரட்டிட்டுப் போனா?” எனக் கேள்வி எழுப்ப, எப்போதும் போல பேச்சைத் திசை திருப்பினாள்.

“அந்த வீட்டுல ஒரு குட்டிப் பாப்பா இருக்கும்ல. அந்தப் பாப்பாவை பாரு. இப்ப நல்லா வளர்ந்துருச்சு” என்று ஒரு வீட்டைக் கை காட்ட, அவளை முறைத்து வைத்தாள்.

அந்தப் பேச்சைத் தொடர இயலாதவாறு, அக்கம் பக்கத்தினரின் கிசுகிசுப்பு.

“அந்தப் பணக்காரப்பையனோட ஓடிப்போனாள்ல அவ தான… அப்பனையும் ஆத்தாளையும் முழுங்கிட்டு எப்படி தான் மினுக்கிக்கிட்டு இருக்காளோ…”

“காசு பணத்தோட ஒருத்தன் வந்தா, குடும்பமெல்லாம் கண்ணுக்கா தெரியும்…”

“அந்தப் பையனோட அங்க இங்க சுத்திட்டு இருந்ததை நானே பார்த்தேனே”

ஒவ்வொருத்தரும் அவள் காதில் விழும்படியே பேசியதில் பவித்ராத்யாவிற்கு சுள்ளென கோபம் வந்தது.

“என் வீட்டுக் கதையைப் பேச இவங்க யாரு?” என்று பல்லைக்கடித்தவள் அவர்களைத் திட்ட போக, திலோத்தமா தடுத்து விட்டாள்.

“வேணாம் பேபி. போகலாம்…” என்று சைக்கிளுடன் விறுவிறுவென அங்கிருந்து நடந்து விட, அந்தத் தெருவைத் தாண்டியதும் தான் நிம்மதி மூச்சு எழுந்தது அவளுக்கு.

“அவங்க வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் பத்தரை மாத்து தங்கமாக்கும். யார் யாரை கல்யாணம் பண்ணுனா இவங்களுக்கு என்ன வந்துச்சு. நீ ஓடிப்போனனால தான் அம்மா இறந்தாங்க, அப்பா இறந்தாருன்னு இவங்ககிட்ட வந்து சொன்னோமா. வாய்க்கு வர்றதை பேசுறதே வழக்கமா போச்சு” என்று கோபத்தில் கொந்தளித்தாள்.

திலோத்தமாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. முயன்று தங்கையிடம் இருந்து தன்னை மறைத்துக்கொண்டவள், “அவங்களுக்கு தெரிஞ்சது அவளோ தான். விடு!” என்று விட்டு வீட்டை அடைந்ததும், மகளைக்கூட காணாமல் வேகமாய் அறைக்குச் சென்று விட்டாள்.

குளியலறைக்குள் புகுந்து, வாயை மூடி அழுதவளுக்கு ஆற்றாமை தீர்ந்த பாடில்லை.

நினைவுகளோ சில வருடங்கள் முன் நிகழ்ந்ததை ஏக்கத்துடன் எண்ணியது.

———–

கல்லூரியின் இறுதி ஆண்டில் திலோத்தமாவிற்கும் அக்னி வேந்தனுக்கும் இடையில் அழகிய நட்பு மலர்ந்தது.

அடிக்கடி பார்த்துப் பேசிக்கொள்வதில்லை என்றாலும், நண்பர்களுடன் வெளியில் செல்லத் திட்டமிட்டால், அவளையும் உடன் இணைத்து விடுவான்.

வெளிப்படையாய் பேச தயக்கம் கொள்பவளை அனைவரிடமும் பழக வைத்து தயக்கத்தை குறைத்ததன் பெரும்பங்கு அக்னியுடையது.

“நாளை பின்ன பெரிய கம்பெனில வேலைக்கு போய் பேசணும்னா, இப்படி தான் தடுமாறி நிப்பியா திலோ. இந்த மார்க்ஸ் எல்லாம் காலேஜ் வரை தான். காலேஜ் முடிஞ்சு போனதும், நம்ம புது உலகத்தை தான் பார்க்கணும். அதுக்கு நீ போல்டா பேசணும்…” என்று அவளுக்கு நிறைய நம்பிக்கையும் கொடுப்பான்.

கேம்பஸ் நேர்முகத்தேர்வில், ஆங்கிலத்தைச் சரளமாகப் பேச பயிற்சிகளும் கொடுத்தான்.

சில நேரம் மாலை வேளைகளில் விக்ரமும் இவர்களுடன் கலந்து கொள்வது உண்டு.

அக்னி வேந்தனுக்கு அடி பட்டதில் இருந்தே, அவனைத் தனியே கல்லூரிக்கு விடுவதில் ஒரு பயம் விக்ரமிற்கு.

அதனால் தினமும் அவனைக் கல்லூரியில் விடுவதும் அழைத்துச் செல்வதும் அவனது வழக்கமாகி இருந்தது.

சில நேரம் அத்திப்பூத்தாற்போல, கண்ணிற்கு விருந்தானவளையும் வசீகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கல்லூரி இறுதி நாள்களில், அது அதிகமாகவே கிடைக்க, அவனும் இணைந்து அரட்டை அடிக்கும் பணியைச் சிறப்புற செய்வான்.

விக்ரம் வந்தாலே, திலோத்தமாவிற்கும் ஒரு வித படபடப்பும் புன்சிரிப்பும் தானாய் தோன்றி விடும்.

இருவருக்குமே பிடித்தம் அதிகம் தான். ஆனால் கண்மூடித்தனமான காதலா எனக் கேட்டால், இருவருக்கும் பதில் தெரியாது.

சரியாக, அப்போது விக்ரமிற்கு வீட்டில் பெண்பார்க்கத் தொடங்கினர்.

“தொழில்ல தான் எங்க பேச்சைக் கேட்கல, நாங்க சொல்ற பொண்ணை தான் நீ கட்டணும்” என்று சவுந்தரவல்லி தீர்க்கமாகச் சொல்லி விட்டார்.

திலோத்தமாவின் மீது பிரியம் இருப்பினும், மீண்டுமொரு நிவேதா உருவாக வேண்டாமென்ற சிறு வலி உருவாக, அந்த துளி நேசத்தை அப்படியே புதைத்துக் கொண்டான்.

அதன்பிறகு, கல்லூரிக்கும் வருவதில்லை. திலோத்தமாவும் கேம்பஸ் நேர்முகத்தேர்வில் நல்ல வேலையை பெற்றுக்கொண்டாள்.

வேலை கிடைத்ததும் முதலில் விக்ரமிடம் சொல்லத் தான் மனம் துடித்தது.

அன்று மாலையே அக்னியிடம், “உங்க அண்ணா வரலையா அகி?” என வினவினாள்.

“இல்ல திலோ. இன்னைக்கு ஈவ்னிங் அவனுக்கு பொண்ணு பார்க்க போறோம். சார் ஒரே பிசி…” என்றான் கிண்டலாக.

மெல்லிய வலியொன்று நெஞ்சை ஊடுருவிச் சென்றது தான். ஆகினும், கற்பனையில் கொள்ளும் நேசம் நிஜத்தில் ஈடேறாது என்று அவளுக்கும் நிதர்சனம் புரிந்ததால்,

“வாவ் சூப்பர்டா. நான் காங்கிரேட்ஸ் சொன்னேன்னு சொல்லு. அப்பறம் எனக்கு வேலை கிடைச்சதையும் சொல்லிடு” என சிரிப்பு மாறாது கூறினாள்.

“சியூர்…” அவனும் புன்னகைக்க, பேச்சை திசை திருப்பும் விதமாக, “நீ அடுத்து என்ன பண்ண போற அகி? நீயும் கேம்பஸ்ல பிளேஸ் ஆகியிருக்க தான?” என்றாள்.

“ஹ்ம்ம்… ஆல்ரெடி விக்ரா பேமிலி பிசினஸ் எடுக்கலைன்னு அப்பா கோபமா இருக்காரு. அவரை சமாதானம் பண்றதுக்காக நாங்க ரெண்டு பேரும் பார்ட் டைமா அதை பார்த்துட்டு, ஃபுல் டைம் ஹோம்கு ஒர்க் பண்ணலாம்னு இருக்கோம்.

கரஸ்ல எம். பி. ஏ போடலாம்னு பிளான். அதோட எனக்கு இன்னொரு பிசினஸ் பண்ற ஐடியாவும் இருக்கு. ஆனா அதுக்கு கொஞ்சம் லோன் அரேஞ்சு பண்ணிட்டு இருக்கேன். அதுவும் வந்துட்டா, அப்பறம் ஸ்டடீஸ் பிசினஸ், ஹோம்னு ஃபுல் பிசி தான். பட் விக்ரா கூடவே இருக்க போறேன். அது ஒரு பெரிய ரிலீஃப் எனக்கு…” என்றான் வண்ண வண்ணக் கனவுடன்.

“ஆல்ரெடி உன் அண்ணா உன்கூட தான இருக்காங்க?” திலோத்தமா புரியாமல் கேட்டாள்.

“ஆமா ஆனா நான் தான் காலேஜ் வந்துடுறேனே. இனி பிசினஸ்னு ரெண்டு பேரும் ஒண்ணாவே இருப்போம்” என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.

“அண்ணா மேல அவ்ளோ பாசமா?”

“ரொம்ம்ம்ப! அவன் இல்லன்னா எனக்கு ஒண்ணுமே ஓடாது. அவனுக்கும் அப்படி தான்!” என்றான் கர்வமாக.

மெல்லச் சிரித்தவள், “ஏன் அகி லோன் எல்லாம் வாங்குற… அங்கிள்கிட்ட கேட்டா தருவாங்க தான?” என சைக்கிளை எடுத்தபடி வினவ,

“தருவார் தான். ஆனா, ஹோம் நடத்த போறதை குத்தி காட்டுவாரு. ஐ டோன்ட் லைக் தட்”

“ஹே உங்க ஹோம்ல நானும் ஒரு பார்ட்டா இருக்க விரும்புறேன் அகி. அதுல பண ரீதியா இல்லாம வேற என்ன ஹெல்ப் வேணாலும் நான் பண்றேன். சரியா… எதுனாலும் என்கிட்ட கேளு” என்று உத்தரவு பிறப்பிக்க,

“கண்டிப்பா திலோ. உனக்கு ஃப்ரீ டைம் இருக்கும்போது வந்து மேனேஜ் பண்ணிக்கோ. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்!” என்றான் கண்சிமிட்டி.

பின் நினைவு வந்தவனாக, “ஹே சொல்ல மறந்துட்டேன். ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஃப்ரெண்ட்ஸ் ட்ரிப் பிளான் பண்ணிருக்கோம். துபாய். நீயும் வரியா?” என்றான் ஆர்வமாக.

“விளையாடுறியா… என்கிட்ட பாஸ்போர்ட் கூட இல்ல” திலோத்தமா தயக்கமாக மறுத்தாள்.

“அதெல்லாம் நான் எடுத்துடுறேன். நீ ஜஸ்ட் ஜாயின் பண்ணிக்கோ. ஒன் வீக் தான். விக்ரமும் வர்றான்…”

“இல்ல அகி. ஒரு வாரம்லாம் என் வீட்ல என்னை விட மாட்டாங்க. கஷ்டம். அம்மாவுக்கு வேற கொஞ்சம் உடம்பு சரி இல்ல. பக்கத்துல எங்கயாவது பிளான் பண்ணும்போது கண்டிப்பா வர்றேன் ப்ளீஸ்” கெஞ்சலாகவே கூறினாள்.

எப்படியும் வரமாட்டாள் என்று கணித்ததால் அவனும் அதிகம் வற்புறுத்தவில்லை.

“சரி பட் நெக்ஸ்ட் டைம் உனக்காகவே பக்கத்துல பிளான் பண்றேன். நீ வரணும்” என்று கண்டிப்பாய் கூறியவன், “உனக்கு என்ன வேணும் துபாய்ல இருந்து வர்றப்ப…” எனக் கேட்டான்.

“எனக்கு ஒன்னும் வேணாம். நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க”

“ப்ச் என் அம்மா மாதிரியே பதில் சொல்லாத. ஒழுங்கா என்ன வேணும்னு சொல்லு”

அவன் முறைத்ததில் அவளும் புன்னகைத்துப் பின் சிந்தித்தாள்.

“ம்ம்ம் வாட்ச்? ஹே காஸ்ட்லியா எல்லாம் வேணாம்…”

“டன்…” என அவள் முடியைக் கலைத்து விட்டவனுடன் நட்பு பாராட்டுவது அன்றே இறுதி என்று இருவருக்குமே தெரியவில்லை.

——————-

சிவக்குமார் இன்னும் நான்கு நாள்களில் இந்தியா திரும்புவதாக இருக்க, அவர் வந்து இன்னும் கொஞ்சம் பிரச்சினையை இழுத்து விடக்கூடாதென்ற பயம் நிவேதாவிடம் அதிகம் இருந்தது.

விக்ரமின் உடல்நிலை சரியாகவேண்டுமென்ற பிரார்த்தனையிலேயே பொழுதைக் கழித்ததுனாலவோ என்னவோ, குடும்பத்தினரின் சுடுசொற்களை கவனிக்க அவருக்கு நேரமில்லை.

விக்ரமை மருத்துவமனையிலும் சேர்த்தாகிற்று.

“ஏன் உன் கண்ணு சிவந்திருக்கு திலோ?” எனக் கேட்ட கணவனிடம் “அதெல்லாம் ஒன்னும் இல்லையே விக்ரம்” எனச் சமாளித்தாள்.

அவனுக்கு ஏகபட்ட சோதனைகள் எடுத்ததில் அவனும் சோர்ந்திருந்ததால் மனையாளை சரிவர கவனிக்கவில்லை.

வீட்டினர் யாரும் வரவில்லை என்றாலும், மூன்று வேளை உணவுகளையும் சத்தான ஆகாரங்களையும் மருத்துவமனைக்கு கொடுத்து விட்டபடி இருந்தார் நிவேதா.

வேண்டுமென்றே சவுந்தரவல்லி அவருக்கு அதிக வேலை கொடுத்தும் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

மகனின் நலனை விட அவரது நலன் அவருக்கு பெரியதாகத் தெரியவும் இல்லை.

தனது தோளில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த அக்னிலாவின் கேசத்தை தடவிக்கொடுத்த அக்னி வேந்தன், “நிலாவை வீட்ல வச்சுரு ஆத்யா. ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் அவளுக்கு செட் ஆகாது…” என்றான் தன்னருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து.

இருவரும் விக்ரமின் அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர்.

“அத்தானும் அக்காவும் வீட்ல இருந்தா, இல்ல ஆபிஸ் போய்ட்டா கூட இருந்துப்பா. அதுவும் குறிப்பிட்ட டைம் வரைக்கும் தான். அதுக்கு அப்பறம் தேடி அழ ஆரம்பிச்சுடுவா. அப்படி ரொம்ப அழுதுட்டா, அவள் அக்காவை விட்டுட்டு என்கிட்ட கூட வரமாட்டா சார். அதுக்கு பயந்துட்டே அவங்க கண் பார்வையிலேயே வச்சுப்பேன். ஹாஸ்பிடல்ல இருக்குறது கூட ஓகே. வீட்ல போய் ரொம்ப அழுதுட்டா என்ன செய்றது?” என்றாள் வருத்தமாக.

“ஓ! ஆக்சிடென்ட் ஆனப்பவும் இவளும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தாளா?” மகளை ஆதூரமாய் பார்த்தபடி கேட்டான்.

“ஹ்ம்ம்… வேற வழி. அப்படியும் அவளுக்கு உடம்பு சரி இல்லாம போகுதுன்னு ரெண்டு நாள் வம்படியா வீட்ல வச்சுருந்தேன். அப்போ ரொம்ப அழுதுட்டா. திலோ பாவம் திணறிட்டா. ஒரு வாரமா என்கிட்ட வரவே இல்ல. அப்பறம் அவளை சமாதானம் செஞ்சதுக்கு அப்பறம் தான் என்கிட்ட திரும்பி வந்தா… பார்க்க தான் நம்மகிட்ட ஒட்டிக்கிற மாதிரி இருக்கும். என்ன தான் ரெண்டு பெரும் வேலைக்கு போனாலும் இவளுக்கான டைமை அவங்க மிஸ் பண்ணதே இல்ல. அதுனால அவள் ரொம்பவே அட்டாச்சா இருப்பா…”

அவள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவன்,

“இங்க ஸ்கூல்ல வேணும்னா சேர்த்துடலாமா. அட்லீஸ்ட் ஸ்கூல் போற டைம்ல அவளுக்கு ஸ்பேஸ் இருக்கும்ல…
விக்ரமுக்கு ட்ரீட்மெண்ட் முடியவும் ஸ்கூல்ல சேர்க்கலாம்னு நினைச்சுருந்தேன். உன்னையும் இவளையும் வீட்ல இருக்க வச்சுட்டு” எனத் தன் எண்ணத்தை கூற,

“ஸ்கூல்ல கூட சேர்க்கலாம். நீங்க சொன்ன மாதிரி முழுக்க முழுக்க ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் அவாய்ட் பண்ணலாம்” அவளும் வழிமொழிந்தாள்.

உடனடியாக பள்ளியிலும் பேசி அடுத்த நாளில் இருந்து அவளை அனுப்புவதாகத் திட்டம்.

மறுநாள், நிவேதாவும் வேகமாக உணவை தயாரித்து, பேத்திக்கும் கொடுத்தார்.

“லன்ச் கொண்டு போகணுமா பவிமா?”

“இல்ல அத்தை ப்ரீகேஜி தான. பாதி நேரம் தான். ஸ்நாக்ஸ் மட்டும் குடுக்கலாம்” என்றதும் அவளுக்குத் தேவையானதை தயார் செய்ததோடு, மருத்துவமனைக்கும் சேர்த்தே உணவைக் கொடுத்து விட்டார்.

அக்னி வேந்தனும் பவித்ராத்யாவும் இணைந்தே மகளை பள்ளியில் விட்டு விட்டு உணவுடன் மருத்துவமனைக்கு வந்து விடுவர். அடுத்த இரு நாள்களில் இது அவர்களது வாடிக்கையாகி விட்டது.

ஆனால், பவித்ராத்யா தான் யோசனையில் இருந்தாள்.

“சார்…” காரில் செல்லும்போது அக்னியை அழைக்க, அவன் திரும்பவே இல்லை.

“சார்” மீண்டும் அழைத்தாள்.

அப்போதும் வெகு தீவிரமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“ப்ச்… அக்னி” எனத் தயக்கத்துடன் அவன் பெயரை உரைக்க, அப்போதே கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன், “என்ன? கூப்ட்டியா?” என வினவியதில் லேசாக முறைத்தாள். உடம்பு முழுக்க திமிரு!

“இல்ல, நாளைல இருந்து பாப்பாவை ஸ்கூல்ல விட்டதும், என்ன வீட்ல இறக்கி விட்டுட்டு, நீங்க ஹாஸ்பிடல் போறீங்களா. லன்ச் நான் கொண்டு வந்துடுறேன்”

“ஏன்?” புருவம் சுருக்கினான் அவன்.

“உங்க வீட்டுத் தாய் கெழவி தான், தெளிவா சமையக்கார அண்ணாவையும் லீவ் குடுத்து அனுப்பிட்டாங்களே. ஹாஸ்பிடல்லயே சாப்ட்டுக்குறோம்னு சொன்னாலும் அத்தை கேட்க மாட்டுறாங்க. அவங்களே எல்லாருக்கும் சமைக்கிறது கஷ்டம். நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தான்…

அதுவும் இல்லாம பாப்பாவை நானே போய் பிக்கப் பண்ணிக்கிறேன். நீங்களும் ஹாஸ்பிடலுக்கு ஸ்கூலுக்கு வீட்டுக்குமா அலையுறீங்களே…” அவனுக்காகவும் பேசியதில் அவனுக்கு உள்ளுக்குள் குளிர்ந்ததோ என்னவோ, அவளைக் கண்ணாடி வழியே ஆழ்ந்து பார்த்தவன்,

“எனக்குத் தெரியும்… முருகனை வேலையை விட்டு அனுப்புனது” என்றான்.

“அப்போ நீங்களாவது சொல்லலாம்ல அத்தைகிட்ட. பாவம் கஷ்டப்படுறாங்க. அப்படியும் இல்லனா உங்க பாட்டிக்கிட்டயாவது வாயை கட்ட சொல்லலாம்” என்று நிவேதாவிற்காக கவலைப்பட்டாள்.

“எப்பவும் யாரும் யாருக்காகவும் பேசிட்டே இருக்க முடியாது ஆத்யா. வேணும்னே தான் அமைதியா இருக்கேன். இப்ப அவங்களுக்கே மருமகளும் பேத்தியும் வந்தாச்சு. என் தாத்தா பாட்டியை கொட்டுற வரை கேட்டுட்டு இருந்தாங்க. சரி… எங்களுக்காக பொறுத்துக்குட்டாங்கனு விடலாம்.

இப்ப எங்களையே கொட்ட விட்டு வேடிக்கை பார்க்க கூடாது. இனி அவங்க பசங்க குடும்பமும் அவங்க பொறுப்பு தான. எதிர்த்து பேசணும். அவங்க என்னைக்கு எதிர்த்து பேசுறாங்களோ, அப்பவே அவங்களை இந்த வீட்டை விட்டு கூட்டிட்டு வந்துடுவேன்…” என்று ஸ்டியரிங்கை ஆத்திரத்துடன் அழுத்தியபடி கூறியவனின் புடைத்த நரம்புகளைத் திகைத்துப் பார்த்தவளுக்கு அவனது ஆதங்கமும் புரிந்தது.

ஒரே குடும்பத்தில் ஒவ்வொருத்தருக்கும் தான் எத்தனை வித்தியாசம்!

அக்னிலாவை பள்ளியில் விட்டதும் நேராய் வீட்டிற்கு வந்த பவித்ராத்யாவை புரியாமல் பார்த்த நிவேதா, “என்னமா ஹாஸ்பிடல் போகலையா?” என வினவினார்.

“இல்ல அத்தை. உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன். சேர்ந்து செஞ்சா சீக்கிரம் வேலை முடியும்ல” என்றவளைக் கண்டு புன்னகைத்தவர், “வேலை பாக்குறதுலாம் எனக்கு பெரிய விஷயம் இல்லமா” என்றார்.

“அதுக்காக தனியா எவ்ளோ பார்க்க முடியும். நானும் தான் ஹெல்ப் பண்ணுவேன். அப்படி வேணாம்னா நாங்க ஹாஸ்பிடல்லயே சாப்ட்டுக்குறோம்” என்று முறுக்கியதில் “வேணாம் வேணாம்…” எனப் பதறினார்.

பிறகு, அவளும் சமையலில் இறங்கி விட, சவுந்தரவல்லிக்கு அவள் அடுக்களை வரை வந்தது முற்றிலும் பிடிக்கவில்லை.

“ஏய் நிவேதா” கர்ஜனையாக அழைத்த மாமியாரின் குரலில் பயந்தவர், அடுப்பை அப்படியே போட்டு விட்டு அவரிடம் ஓடினார்.

“உனக்கு அறிவில்ல. கண்டவளை எல்லாம் எதுக்கு கிட்சனுக்குள்ள விடுற. அவள் செஞ்சு நாங்க சாப்பிடணுமா?” என எகிறினார்.

இனியா தான், “விடுங்க அத்தை. மூர்த்தி செஞ்சு நம்ம சாப்பிடலையா. அவளை வேலைக்காரியா அக்னி போட்டுருக்கானோ என்னவோ…” நக்கலாய் உரைத்ததில், நிவேதாவிற்கு சுள்ளென இருந்தது.

“அந்தப் பொண்ணு, எனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தா. இந்த வீட்டு மருமகளோட தங்கச்சி அவள். வேலைக்காரின்னு சொல்லாத இனியா…” நிவேதாவின் மறுப்பில் சவுந்தரவல்லி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

“நீயே இந்த வீட்டு மருமகளா தப்பி தான் வந்துட்ட. உன் ஆத்தாக்காரி செஞ்ச வேலைக்கு உன்னை எப்பவோ வீட்டை விட்டு அனுப்பி இருக்கணும். இதுல இழுத்துட்டு ஓடிப்போன ஓடுகாலி நாயை எல்லாம் இந்த வீட்டு மருமகளா கொண்டு வரணும்னு நினைச்ச… என் மகனுக்கு இப்ப கூட வேற கல்யாணம் பண்ணி வச்சு உன்னை உன் அம்மா வீட்டுக்கே அனுப்பி விட்டுருவேன் ஜாக்கிரதை!” பெரியவரின் கண்கள் தகித்தது.

நிவேதாவிற்கு உள்ளம் அதிர்ந்தது.

விறுவிறுவென அங்கு வந்த பவித்ராத்யா, “அத்தை ஹாஸ்பிடலுக்கு லேட் ஆகுது. வாங்க வேலையை முடிக்கலாம்” எனக் காரியத்தில் கண்ணாக கூற, அவர் கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டார்.

“இப்ப என்ன இங்க என்னை வேலைக்காரியா நினைக்கிறாங்களா. நினைச்சா நினைச்சுக்கட்டும். மத்தவங்க நினைப்புக்குலாம் நம்ம விளக்கம் சொல்ல முடியாது” எனத் துணிச்சலாய் எதிரில் நின்ற இரு பெரியவர்களையும் எரித்தவள், நிவேதாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“பார்த்தீங்களா அத்தை. எவ்ளோ எகத்தாளமா பேசுறான்னு. எல்லாம் உங்க பேரன் குடுக்குற இடம்” இனியா பொருமினார்.

“இவளை எப்படி அடக்குறதுனு எனக்கு தெரியும்” எனப் பல்லைக்கடித்த சவுந்தரவல்லியின் கண்களில் தீஜூவாலை.

அடுக்களைக்குள் நுழைந்ததும் நீர் திரண்ட விழிகளுடன் கேவலை அடக்கிய நிவேதாவின் தோளைத் தொட்டாள் பவித்ராத்யா.

“நீங்க இருந்தாலும் இவ்ளோ அமைதியா இருக்க வேணாம் அத்தை. இத்தனை வருஷத்துக்கு அப்பறம், மாமாவுக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்ற அளவு தைரியம் நீங்க குடுத்தது தான்.

உங்க அப்பா, அம்மாவை ஹோம்ல பார்த்தேன்” என இறுதி வரியைத் தயக்கமாகக் கூறினாள்.

அவளை வேதனையாகப் பார்த்தவர், “இங்க இருந்து போறதுல எனக்கும் எந்த பிரச்சினையும் இல்ல பவிமா. என் பசங்க என்னை ராணி மாதிரி பார்த்துப்பாங்க” என்றிட,

“அப்பறம் ஏன் நீங்க இந்த மாதிரி அடங்கி போகணும். உங்கச் சின்னப் பையன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதுமே. அவரே எல்லாரையும் பந்தாடிடுவாரு…” என்னவோ அவனுடன் பல வருடம் வாழ்ந்த தோரணையில் கூறியவளை உள்ளுக்குள் குறித்துக்கொண்டார் அந்நிலையிலும்.

“ஆனா அதுக்கு அப்பறம் என் அம்மாவோட மனநிலையை யோசிச்சுப் பாரு பவி. குரு அப்பாவைக் கல்யாணம் பண்ணுனது தப்போன்னு ஒரு தடவை கூட அவங்க யோசிச்சுட கூடாது. எங்க வாழ்க்கைல வந்துருக்கவே கூடாதோன்னு குரு அப்பாவும் வேதனைப்பட்டுட கூடாது.

என்னைப் பெத்த அப்பாகூட என்கிட்ட இவ்ளோ பாசமா இருந்துருப்பாரான்னு தெரியல… அவருக்கு எப்படி பிசினஸ் லாஸ் ஆச்சுன்னு நினைக்கிற. என்னை இங்க குறைவா நினைக்க கூடாதுன்னு, அவர் சம்பாரிச்சதை கூட அவரோட பையனுக்கு குடுக்காம என் பேர்ல எழுதி வச்சாரு. என் தம்பியும் சும்மா சொல்லக்கூடாது. ‘நீ வந்துடுக்கா. நம்ம எல்லாரும் கனடா போய்டலாம். நான் பாத்துக்குறேன்’னு வாய் நிறைய சொல்லுவான்.

ஆனா இப்ப வரை, அம்மாவும் அப்பாவும் ஒரு சில சங்கடங்களை தவிர, இங்க என்னை நல்லா தான் பாத்துக்குறாங்கனு நம்பிட்டு இருக்காங்க. இவ்ளோ வருஷம் கழிச்சு எல்லாத்தையும் வேணாம்னு வந்துட்டா, அவங்க மனசு உடைஞ்சுடும். தங்களோட சுயநலத்துக்காக என் வாழ்க்கைய கெடுத்துட்டோம்னு முட்டாள்தனமா நினைப்பாங்க கண்டிப்பா. அந்த வேதனையை என்னால அவங்களுக்கு குடுக்க முடியாது பவிமா!

நான் குடும்பத்தோட இருக்குறது தான் அவங்களோட முழு சந்தோஷமே!” என்றவரை வியப்பாகப் பார்த்தாள்.

பெற்றவர்களுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்து விடக்கூடாதென்று, தன்னுணர்வுகளைக் கொலை செய்கிறார். என்ன மாதிரியான அன்பு இது?

“இப்ப தான் தெரியுது உங்க பசங்க ரெண்டு பேருமே யார் மாதிரி இருக்காங்கன்னு. அதுவும் விக்ரம் அத்தான் அப்படியே உங்களை மாதிரி தான். சென்டிமென்ட்டை கொஞ்சம் ஓவர் தூக்கலா போடுவாரு” எனக் கண்சிமிட்டி குறும்பாய் கூறிட, “ஏய்…” என அவர் போலியாய் முறைத்தார்.

அதில் இருவரும் சிரித்து விட்டனர்.

அவளை ரசனையாக ஏறிட்ட நிவேதா, அவளுக்குப் பின்னால் ஒரு கணம் பார்த்து விட்டு, “அப்போ அக்னி யார் மாதிரி?” எனக் கேட்டார்.

“அவர் உங்க அளவு செண்டிமெண்ட் பெர்சன் மாதிரி தெரியல. அப்போ அப்போ அவர்கிட்ட ஒரு சவுந்தரவல்லியை பார்க்கலாம்…” எனக் கண்ணை உருட்டியவளைக் கண்டு சத்தமாக சிரித்து விட்டார்.

“அகி கேட்டுக்கிட்டியா… நீ உன் பாட்டி மாதிரியாம்” தனக்குப் பின்னால் பார்த்து பேசியதில் துணுக்குற்றவள், மெல்லத் திரும்பிப் பார்க்க அங்கோ அடுக்களை வாயிலின் சுவரில் சாய்ந்து கையை மார்புக்கு குறுக்கே கட்டியபடி அவளைப் பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தான் அக்னி வேந்தன்.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்