Loading

அன்றில்-2

 

உன்னோடே 

தீர்ந்து போகும்

என் இரசனைகளைக்

கொஞ்சம் இரட்சித்துவிட்டுப்

போயேன்..

உன் சார்ந்தவை எல்லாம்

இன்னும் மிச்சம் இருக்கிறது.

 

 

அதிகாலை மூன்று மணி..

 

“நிகழ்காலத்தில் கடும் உழைப்பு எதிர்காலம் பற்றி நம்பிக்கைக் கனவுகள் இவை மட்டும் இருந்தால் போதும் கொத்தடிமையும் கொற்றவன் ஆகலாம் இதற்குத் துல்லியமான உதாரணம் குத்புதீன் ஐபக்” என்று அடிமை வம்சத்திற்கும், குதுப்மினாருக்கும் அடிக்கல் நாட்டிய குத்புதீன் ஐபக்கின் தொடக்கத்துடனான டெல்லி சுல்தான்கள் வரலாறு அவள் காதில் மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது.

 

சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த ஏசி பஸ்.. காதில் ஒலித்துக் கொண்டிருந்த மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆடியோவைக் கேட்டபடி.. வெளியே மசமசப்பாய்த் தூறிக் கொண்டிருந்த மழையில் கண் பதித்திருந்தாள் நேத்ரா.

 

சற்றே தயங்கித் தயங்கித் தோள் தொட்ட முடிகள்.. கழுத்திலும், காதிலும் உரச.. வெளியே மழையின் குளிரும்.. உள்ளே பஸ்ஸின் ஏசியும் உள்ளங்காலைக் குறுகுறுக்க வைத்தாலும் உறக்கம் அண்டாத அவ்விழிகள் அசையாமல் அப்படியே தான் இருந்தது.

 

இன்று.. நேற்றல்ல.. அவள் உறக்கம் காணாமல் சென்று ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது.. அவளோடு இருந்த ஒற்றை ஜீவன் அவள் உறக்கத்தையும் உயிரில் பாதியையும் எடுத்துச் சென்றிருக்க.. விடாப்பிடியாகத் தன்னைச் சூழ்ந்த தனிமையில் தன்னைப் பிடிவாதமாக அழுத்திக் கொண்டாள்.

 

திடீரென போன் கால் வரவும்.. தன் நினைவில் இருந்து கலைந்தவள்.. ஒரு புருவச் சுளிப்புடன் அதை ஏற்று “டாடி.. இப்ப டைம் என்ன தெரியுமா.. இன்னும் தூங்காம என்ன பண்றீங்க” என்று கேட்கவும்..

 

“என்னடா கண்ணு செய்யச் சொல்ற.. எவ்வளவு நாளா உன்னைய இங்க வரச் சொல்லிட்டு இருக்கறேன்.. நீ இங்க வரும்போது எனக்கு அந்த சந்தோசத்துல தூக்கமே வரல” என்றது மறுமுனை.

 

கருவளையம் விரவியிருந்த விழிகள் சற்றே ஒளிர.. நெடு நாட்களாகச் சிரிப்பு வறண்டிருந்த மறந்திருந்த இதழ்களிலும் மெல்லிய புன்னகைக் கீற்று உதயமாகியது.

 

“நீங்க விடிய விடிய தவமே பண்ணாலும் பஸ் பறந்து வராது.. மார்னிங் தான் ரீச் ஆகும் டாடி.. சோ சமத்து பையனா போய் தூங்குங்க.. நா ரீச் ஆனதும் கால் பண்றேன்” என்றவளின் அதட்டல் குரலுக்கு..

 

எதிர்ப்புறத்தில் இருந்து சிரிப்புச் சத்தமும் “ஓகே ஓகே நா தூங்கறேன் கண்ணு.. நீ ஒரு சிக்ஸ் ஓ க்ளாக் லைவ் லோகேஷன் ஆன் பண்ணி வை.. நா டிரைவர அனுப்பறேன்.. நீயும் கொஞ்சநேரம் தூங்கு” என்ற அன்புக் கட்டளையும் வர.. அவளும் சரியென ஒப்புதல் அளித்து.. அழைப்பைத் துண்டித்தாள்.

 

அந்தக் கட்டளையை ஏற்றோ என்னவோ அவள் விழிகள் இலேசாக செருகத் துவங்க.. அப்படியே சரிந்து படித்து கண்ணை மூடினாள் நேத்ரா.. பேருந்து இதமாய் அவளைத் தாலாட்டத் துவங்கியது.

 

****

 

சென்னையின் மத்தியப் பகுதியில் இருந்த அந்த பங்களாவின் பளிங்குத் தரையில் தவழ்ந்தபடி தன் அம்மாவைப் பெற்ற அம்மாவை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது ஒன்பது மாதக் குழந்தை ஒன்று.

 

“குட்டித்தங்கம்.. பாட்டி பாவம்டா.. இப்படி ஓட்டம் காட்டுனா எப்படி.. இன்னும் உன்னையே வளக்க ஆரம்பிக்கல.. அடுத்து உங்க மாமாவுக்குக் கல்யாணம் பண்ணனும்.. அவனோட குழந்தைகளையும் பாக்க பாட்டிக்குத் தெம்பு வேணும்ல.. இங்க வாடா தங்கம்” என்று புலம்பியபடியே அவ்வீட்டின் இல்லத்தரசி கார்த்திகா பேத்தியைப் பிடிக்க முயற்சிக்க..

 

இவர் மூச்சு வாங்குவது புரியாமல் பாட்டி விளையாட்டுக் காட்டுவதாக நினைத்து நான்கு கால்களில் அந்தப் பரந்த ஹாலையே பலமுறை அவர் கையில் சிக்காமல் வட்டமடிக்க.. ஒரு வழியாகப் பேத்தியைப் பிடித்துக் கொண்ட கார்த்திகா.. அதன் கொலுசுக் கால்களில் வலிக்காமல் ஓர் அடி ஒன்றைப் போட்டு “ஆட்டமா காட்டுறா.. இன்னைக்கு இந்தக் கூழை உன்னை குடிக்க வைக்காம விடறது இல்ல” என்று கண்களை உருட்டி மிரட்டியவாறே.. அருகில் நின்றிருந்த வேலையாள் கையில் இருந்த கூழ் பாத்திரத்தை வாங்கி அதற்கு ஊட்டத் துவங்கினார்.

 

பாட்டியும் பேத்தியும் மாறி மாறி ஃபேஷியல் செய்தபடியே கலவரமாக உணவை உண்டு கொண்டிருக்க.. அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் அருகே இருந்த சோஃபாவில் அமைதியாக அமர்ந்திருந்தாள் விஷ்ணுப்பிரியா.. அவள் கையில் இருந்த போன் விடாமல் தொணதொணத்தது.. அழைப்பவன் கணவன் தான்.. ஆனால் அவனிடம் சொல்ல பதில் இல்லை இவளிடம்.

 

பேத்தியின் பச்சரிசிப்பல் சிரிப்பில் மயங்கி “உங்கம்மாவ பாரு.. பாட்டி இருக்கற தைரியத்துல குழந்தை சாப்டாளா இல்லையான்னு கூடக் கேட்டுக்கறது இல்ல.. நீ பெரிய புள்ளை ஆனதும் உங்கம்மாவ மிரட்டனும்” என்று கார்த்திகா விளையாட்டிற்குச் சொல்லிக் கொண்டிருக்க..

 

அவரைத் திரும்பி முறைத்த ப்ரியா “உங்கள அவ்வளவு கஷ்டப்பட்டு எங்கள யாரும்மா பாத்துக்க சொல்றாங்க.. எங்க வீட்டுக்கு எங்கள போக விடாம நீங்க தான் பண்றீங்க” என்று தாயைக் குற்றம் சாட்ட..

 

அமைதியான புன்னகையுடன் மகளை எதிர்கொண்ட கார்த்திகா “நாங்க ஏன்மா வேண்டாம்னு சொல்ல போறோம்.. உங்க வீட்ல இருக்கற எல்லாரும் வந்து கூப்பிட்டா தாராளமா உங்க ரெண்டு பேருக்கும் என்னென்ன செய்யனுமோ அத்தனையும் செஞ்சு மனசார அனுப்பி வைப்போம்.. ஆனா அதே பெரிய மனசு உன் வீட்டு ஆளுங்களுக்கு இருக்குதா” என்று கேட்க.. அவளிடம் பதில் இல்லை.

 

அன்னையின் புன்னகையில் அவளுக்கும் கோவம் மிக வீம்புக்கென்றே “நான் ஒன்னும் அந்த வீட்டை கல்யாணம் பண்ணிக்கல.. ஆகாஷை தான் கல்யாணம் பண்ணிருக்கேன்.. நீங்க அவரைப் பாருங்க.. அவருக்கும் அவரு பொண்ணோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசை இருக்காதா” என்று கணவனை மட்டுமே கருத்தில் கொண்டு தாங்கலாகப் பேச..

 

“பொண்ணோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசை இருக்கற அப்பா.. இதுவரைக்கும் அவங்க வீட்டுல இதைப்பத்தி பேசாம என்ன பண்றாரு.. பாப்பாக்கு இன்னும் த்ரீ மந்த்ஸ்ல ஒன் இயர் ஆகிரும்.. ஆனா இன்னும் கூட ஏன் பொண்ணுக்கு நேம் வைக்கறத பத்தி கூட பேசாம சுத்திட்டு இருக்காரு” என்ற கணீர்க் குரல் ஒன்று இடையிட.. அவளின் வாதம் அப்படியே அமுங்கிப் போனது.

 

கார்த்திகா மகளை ‘உனக்குத் தேவை தான்’ என்ற பார்வை பார்த்துவிட்டு.. தன் மாமனைக் கண்டதும் குதிக்கத் துவங்கிய பேத்தியைச் சுத்தம் செய்ய எடுத்துச் சென்றுவிட்டார்.

 

 

மிடுக்குடன் படிக்கெட்டில் இறங்கியவன் அணிந்திருந்த க்ரேப் வைன் நிறச் சட்டையும், விண்ட்சர் ப்ரௌன் நிற ஃபேன்ட்டும் அவன் கோதுமை நிறத்திற்கு அத்தனை எடுப்பாக இருக்க.. கிளாசிக் ஃபேட் ஹேர்கட்டும், ஃபுல் பியர்ட் லுக்கும் அதை எடுத்துக்காட்ட.. அடர்ந்த புருவங்கள் கீழ் இருந்த அந்த தேன் நிற விழிகள் அவன் ஆணழகை முழுமையாக்கியது.

 

“சொல்லுக்கா.. இவ்வளவு நேரம் பேசின.. இப்ப பதில் சொல்லு” என்று அவள் முன்னே கையை பாக்கெட்டில் விட்டபடி நின்றான் துருவன்.. அவளை விட ஒன்றரை வயது இளையவன்.. ஆனாலும் அவன் பேச்சிற்கு இவளிடம் மறுபேச்சு இருப்பதில்லை‌.

 

அம்மாவிடம் போட்ட சண்டையை தம்பியிடம் போடத் தோன்றாமல் அவள் அப்படியே நிற்கவும்.. அவர்களின் மௌனத்தைக் குலைத்தது அந்த அலைபேசி.

 

அக்காவின் கணவன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்த துருவன் “குட்மார்னிங் மாமா.. சொல்லுங்க.. என்ன மார்னிங்கே போன்” என்று எதுவுமே நடவாதது போலக் கேட்கவும்.. எதிரில் ப்ரியாவும்.. போனில் ஆகாஷூம் பல்லைக் கடித்தனர்.

 

“நான் எதுக்கு கால் பண்ணிருக்கறேன்னு உங்களுக்கே தெரியும் துருவன்” என்றான் ஆகாஷ் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலுடன்.

 

“அப்ப அதுக்கு என்னோட பதில் என்னன்னு கூட உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே மாமா” என்றான் இவன் அலட்டிக் கொள்ளாமல்.

 

அதில் தொய்ந்து போனவனாய் “துருவன்.. ப்ளீஸ் இவங்க இப்படித்தான்னு கல்யாணத்தப்பவே உங்களுக்குத் தெரியும் தான.. எல்லாம் தெரிஞ்சுகிட்டு இப்ப வந்து பிடிவாதம் பிடிக்கறீங்க.. எனக்கும் என் பொண்ணோட ஒவ்வொரு மூமென்ட்லயும் கூட இருக்கனும்னு ஆசை இருக்காதா.. இப்பவே அவளுக்கு நைன் மன்த்ஸ் ஆச்சு.. இன்னும் அனுப்பாம வச்சுருக்கறது நல்லா இருக்கா சொல்லுங்க” என்று ஆகாஷ் பேசவும்.. துருவனுக்கும் அவனது மனக்கவலை எட்டியதோ என்னவோ ஒரு நொடி அமைதியாக நின்றான்.

 

“நானும் இதையே தான் உங்க ஆசை வைஃப்கிட்ட சொலலிட்டு இருந்தேன்.. உங்களோட ஆசை எங்களுக்குப் புரியுது மாமா.. அதே மாதிரி உங்க வீட்ல இருக்கற எல்லாத்துக்கும் புரியனுமே.. ஒரு வீட்ல குழந்தை பிறக்கும் போது ஏகப்பட்ட சந்தோஷத்தையும் சேத்தி தான் எடுத்துட்டு வருது.. ஆனா அதுல ஆணா, பொண்ணான்னு அதும் இந்த காலத்துல கூட பார்ஷியாலிட்டி பாக்கற எடத்துக்கு.. ப்ரியாவையும் பேபியையும் எப்படி அனுப்பறது.. உங்க வீட்ல இருக்கற பெரிய மனுஷங்க இப்ப வரைக்கும் எட்டிப் பாக்கல.. நாளைக்கு அங்க அனுப்பினா எப்படி பாத்துக்குவீங்க.. அவ ஒரு டாக்டர்.. நேரம் காலம் பாக்காம ஓட வேண்டிய வேலையில இருக்கறவள யாரை நம்பி நாங்க அனுப்பி வைக்கட்டும்”

 

“துருவன் நீங்க ரொம்ப ஓவரா யோசிக்கறீங்க.. இங்க இருக்கறவங்க எல்லா ஏதோ இதயமே இல்லாத மனுஷங்க மாதிரி இருக்குது உங்க பேச்சு.. உங்க அக்கா டெலிவரி வரைக்கும் இங்க தான் இருந்தா.. அப்ப இங்க இருக்கறவங்க தான் பாத்துகிட்டாங்க.. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எப்படியோ போன்னு விட்ர மாட்டாங்க.. என்னை நம்பாட்டி போகுது என்னோட அம்மா இங்க தான இருக்காங்க.. அவங்கள நம்பி ரெண்டு பேரையும் அனுப்பி வைங்க” என்று உறுதியாக ஆகாஷ் சொல்லவும்.. எதிரில் நின்ற ப்ரியாவும் ஆவலாகத் தன் தம்பியைப் பார்த்தாள்.

 

“நா யாரையும் தப்பு சொல்ல விரும்பல மாமா.. நீங்க உங்க லவ்வ வீட்ல சொல்லும் போதே நான் இதைப்பத்தி தான் யோசிச்சேன்.. அகெய்ன் இப்ப உங்களுக்காக மட்டுமே நா அப்பாட்ட பேசறேன்.. அவர் வந்ததும் பேசிக்கலாம் மாமா” என்று நம்பிக்கை வார்த்தை துருவன் சொல்லவும் தான்.. ஆகாஷ், ப்ரியா முகத்தில் சிரிப்பே வந்தது.

 

அழைப்பைத் துண்டித்து அவள் கையில் கொடுத்த துருவன் “அவர்ட்ட சொன்னது தான் உனக்கும்.. மறுபடியும் உன்னோட பிடிவாதத்துல தான் ஓகே சொல்லிருக்கேன்.. ஆனா எனக்கு இதுல இஷ்டமே இல்ல” என்று ‘க்கு’ வைத்துச் சொல்லிவிட்டு.. கார்த்திகா சுத்தம் செய்து எடுத்து வந்த குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான்.

 

மகளின் தெளிந்த முகம் கண்டு சிரித்த கார்த்திகா “என்னடி உன் தம்பி வழிக்கு வந்துட்டான்னு சந்தோஷமா” என்று கேட்க..

 

அன்னையை முறைத்த ப்ரியா “போங்கம்மா.. தம்பி மாதிரியா நடந்துக்கறான்.. ஆனாலும் ஒரு பேச்சுக்கு கூட நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணல.. உங்க பையன் பக்கமே இருந்துட்டு” என்று முறுக்க..

 

“அவன் சரியாத்தான சொல்றான்.. உனக்கு தான் புரியல” என்று அப்போதும் மகனின் பக்கமே அவர் நிற்க.. ப்ரியா காது, மூக்கு வழியே புகை தான் வந்தது.

 

“ம்மா.. உங்க பையன் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிக்கிறான்.. அதுக்கு நீங்களும் சப்போர்ட்.. இதுக்காகவே ஒருத்தி வருவாம்மா.. அவனை சுத்தல்ல விடறாளா இல்லையான்னு பாருங்க.. டேக் மை சாபம்” என்று தம்பிக்கும் கேட்கும் குரலிலேயே கடுப்படிக்க.. எதையோ நினைத்து மீசை மறைத்த துருவனின் அதரங்களில் மெல்லிய புன்னகை.

 

அதே நேரம்.. தலை முடியை உச்சியில் தூக்கி மெஸ்ஸி பன்’னாக மாற்றிக் கொண்டு.. தன் உடைமைகளை கைப்பையில் வைத்துக் கொண்ட நேத்ரா.. குறிப்பிட்ட இடம் வந்ததும் இறங்கி.. பேருந்தின் பக்கவாட்டில் இருந்து எடுத்துக் கொடுத்த ஏனைய லக்கேஜ்களையும் வாங்கிக் கொண்டு திரும்ப.. அவள் ஃபோன் இசைத்தது.

 

 

அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள் “டாடி.. சொன்ன மாதிரியே சென்னை வந்து சேந்துட்டேன் தான.. நடுவுல எங்கையும் குதிச்சு ஓடிப் போகல.. ஹாப்பி தானே” என குறுஞ்சிரிப்புடன் பேச..

 

மறுமுனையோ மிகப்பெரிய மகிழ்வுடன் “எம்புள்ள எங்கிட்ட வர்றா.. இந்தளவு கூட சந்தோஷம் இல்லைன்னா எப்படி.. இன்னும் கொஞ்சம் இந்த வயசானவன சந்தோஷப்படுத்தி பாக்கோனும்னு நெனச்சைன்னா எங்கூடவே வந்துரு கண்ணு” என்று பழைய பல்லவியையே பாட.. “டாட்” என்று அழுத்தமான அழைப்பில் அந்தப் பேச்சை நிறுத்தினாள் நேத்ரா.

 

“சேரிடா.. வந்ததும் கோவப்படாத.. உன்னோட நிம்மதி தான் எனக்கு முக்கியம்.. இப்பத்திக்கு நீ அந்த வீட்டுக்கே போ.. நான் வந்து உன்னைய பாக்குறேன்.. டிரைவர் வந்துட்டு இருக்காரு.. பாத்து பத்திரம் சாமி” என்று இரங்கிப் பேசியதுடன் மறுமுனை துண்டித்துக் கொள்ள..

 

பெருமூச்சுடன் மொபைலை தன் கைப்பையில் வைத்துவிட்டு நிமிர.. அவள் முன்னே பல்லை இளித்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.

 

துணையாவான்..

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்