Loading

நிவேதன் தீவிரமாக வளையல்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, கண்மணியோ அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.

“இந்தக் கலர் நிதாவுக்கு நல்லாருக்கும்ல கண்மணி?” என அபிப்ராயம் கேட்டுக் கொண்டதில், “ம்ம்!” எனத் தலையை உருட்டியவளுக்கு அவனைச் சீண்டத் தோன்றியது.

“முதல்ல எல்லாம் நீங்க கண்ணாடி வளையல் வாங்கிக் குடுத்தீங்க… ஓகே… ஆனா இப்ப அண்ணா அவங்களுக்கு டயமண்ட் வளையல்ல போட்டு விட்டிருக்காங்க!”

“அது என்ன கலரே இல்லாம எம்ப்டியா இருக்கு. நல்லா கலர் கலரா ட்ரெஸ்ஸுக்கு மேட்சா போட்டா தான அழகா இருக்கும்…”

“அதான் நீங்க டாப் சி. இ. ஓ – வா ஆகப் போறீங்களே. நீங்களும் அண்ணிக்கு காஸ்ட்லியா வாங்கித் தரலாம்ல?”

“ம்ம் நான் வாங்கித் தர முடியும். ஆனா, அது அவளுக்கு மனசுக்கு நெருக்கமா இருக்கணும்ல? அதுனா வருஷத்துக்கு ஒன்னு வாங்கலாமா? இதுன்னா தீர தீர, கலர் கலரா போட்டுக்குவா…” என்று வாதாடினாலும், அவள் இந்த வளையல்களை போட்டுக் கொள்வாளா என்ற சந்தேகம் அவனுக்குள்ளும் ஊறியது.

நிவேதனை ரசித்த கண்மணி, “எனக்கும் நீங்களே செலக்ட் பண்ணிக் குடுங்க… எனக்கு கண்ணாடி வளையல் தான் பிடிக்கும்!” என்னும் போதே அவனைப் பார்க்க இயலாமல் தவித்தாள்.

“அதுக்கென்ன செலக்ட் பண்ணிட்டா போச்சு…” என்றவன் சில நிமிடங்கள் செலவழித்து, சிவப்பில் தங்க ஜரிகைகளை தூவிய வளையல்களைத் தேர்ந்தெடுக்க, “அளவு சரியான்னு பாருப்பா” என்றார் கடைக்காரர்.

“உனக்கு சரியா தான இருக்கும்?” நிவேதன் கேட்டதில், “நீங்களே போட்டுப் பார்த்து செக் பண்ணலாம்” என்றாள் முணுமுணுப்பாக.

அவளது நெருக்கத்தில் மற்றவை மறந்தவன், “போட்டுப் பார்த்துடலாமே!” எனக் கேலியாய் கவரில் இருந்து வளையல்களை பிரிக்க, தலையைத் தரையில் புதைத்தபடி அவன் முன்னே தனது கையைத் தயக்கமாய் நீட்டினாள்.

உண்மையாகவே தன்னைப் போட்டு விடச் சொல்கிறாளா?

அவனுள் உருவமறியா உணர்வுகள் அங்கும் இங்கும் ஓடித் துள்ளியது.

மனதில் பேரலைகள் நேச நுரைகளை விட்டுச் செல்ல, சுற்றுப்புறம் முழுக்க மறந்து போனவன், அவளது தளிர் விரல்களை மெல்லப் பிடித்தான்.

அவனது தடித்த கரம் அவளைத் தொட்டதும் சிலிர்த்துப் போனவள், தலையை இன்னுமாய் தரையில் புதைத்துக் கொள்ள, பதற்றத்தில் அவளது நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளைக் கண்களால் பருகியபடி ஒவ்வொரு வளையலாய் அணிவித்தான்.

கண்மணிக்கு மேனி நடுக்கம் கொள்ள, நிவேதனுக்கும் இதயம் அதிகபட்சமாக துடித்தது.

அவளிடம், தான் முற்று முழுதாகக் கரைவதை உணர்ந்து, அடுத்த வளையலை வேகமாய் போட்டு விட, அவளும் விரல்களை குவிக்காது தளர்த்தியதில் லேசாய் கையில் கீறியது.

“ஸ்ஸ்…” கண்மணி தன்னிச்சையாக நிமிர்ந்தும் பதறி விட்டவன், “கீறிருச்சா கண்மணி?” என அவள் கண் பார்த்துக் கேட்க, அவளும் அவன் விழிமொழியில் விழுந்து தொலைந்து போனாள்.

நாணப்புன்னகை இதழ்களை அலங்கரிக்க, மீண்டும் தலைதாழ்த்திக் கொண்டவள், மறுப்பாய் தலையசைக்க, அவன் இதழ்களிலும் நேசப்புன்னகை முற்றுகையிட்டது.

இரு ஜோடிகளும் வளையல்களை வாங்கி விட்டு கோவிலுக்குச் செல்ல, நிதர்ஷனா இன்னும் அந்த வேர்க்கடலையை விட்டபாடில்லை.

“இன்னுமா நீ தின்னுட்டு இருக்க?” கதிரவன் தலையில் அடித்துக் கொண்டதில், இரு பெண்களில் கைகளிலும் வளையல்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, “ஏய் கண்மணி இலை வாங்கப் போனியே… எங்க?” எனக் கோர்த்து விட, ஆதிசக்தியும் இளவேந்தனும் அவளை முறைத்துப் பார்த்தனர்.

திருதிருவென விழித்த கண்மணி, அசட்டுச் சிரிப்புடன் “ஹி… அது அது… வீட்டுல இலை இல்லைன்னு கடைல எடுக்க போனாங்க” என உளற, “என்னது?” எனக் குழம்பினாள் நிதர்ஷனா.

நிவேதன் நமுட்டு நகை புரிந்ததில், அவனைப் பல்லைக்கடித்து முறைத்த கண்மணி, “அது வந்து கடைல இலை இல்லைன்னு வீட்ல எடுக்க போனாங்க அண்ணி. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று தப்பித்து ஓடியே விட்டாள்.

கிருஷ்ணவேணி மகளை விசித்திரமாகப் பார்த்து, “சிந்தா… உனக்கு தான் கை நிறைய வளையல் போடவே பிடிக்காதே. என்ன அதிசயமா இவ்ளோ வளையல் போட்டுருக்க?” எனக் கேட்க, திருதிருவென விழித்தவளும்
“நிவே அண்ணா வாங்கி குடுத்தாங்க” என்று அவனைக் கோர்த்து விட்டு விட்டு, “நானும் போய் இலை வாங்கிட்டு வரேன்…” எனக் கண்மணி பின்னால் ஓடி விட்டாள்.

‘நான் எப்ப வாங்கித் தந்தேன் இவளுக்கு’ என கதிரவனை சந்தேகமாய் பார்க்க, அவனோ கோவிலை வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்தான்.

நிவேதனின் முதுகில் சுள்ளென அடித்த நிதர்ஷனா, “அவளுங்களுக்கு மட்டும் வளையல் வாங்கியிருக்க. எனக்கு எங்கடா?” என முறைத்ததில், “ஸ்ஸ்ஸ் ஆ… எருமை மாடே!” என முதுகைத் தேய்த்தவன், “உனக்கு தான் நான் வாங்கவே போனேன்” எனப் பேண்ட் பாக்கெட்டில் வைத்த வளையலை எடுத்தான்.

“குட் பாய்” என்று தமையனின் கன்னத்தை தட்டியவள், கையில் போட்டிருந்த வைரக்கற்கள் பதித்த வளையலைக் கழற்றி அருகில் வெயில் தாளாது தொப்பி அணிந்து நின்றிருந்த யாஷ் பிரஜிதனின் கையில் திணித்தவள், தமையன் வாங்கி கொடுத்ததை ஆசையாகப் போட்டுக் கொண்டாள்.

“எப்படி இருக்கு அரக்கா?” இரு கையையும் தன்னவனிடம் ஆர்வமாக காட்ட, அவனோ இதழ் வளைத்து, “பட்டிக்காடு மாதிரி இருக்கு…” என்றான் நக்கலாய்.

அதில் மூக்கை சுருக்கியவள், “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என முணுமுணுத்துக் கொள்ள, “வாட்ஸ் தட்?” எனக் கேட்டபடி அவள் புறம் அடியெடுத்து வைத்தான்.

“ம்ம்ம்ம் டாங்கிக்கு காம்பர் வாசனை தெரியுமான்னு கேட்டேன்!”

“மீ டாங்கி!” இடுப்பில் கையூன்றி அவளை முறைக்க, “எஸ் எஸ் எஸ்…” என அவள் வேகமாய் தலையசைத்ததில், “யூ…” என்றபடி அவளை அடிக்க வந்தான்.

நிதர்ஷனா அவனிடம் சிக்காமல் ஓடிட, “நில்லுடி ஆலம்பனா… நான் டாங்கியா ஹார்ஸானு காட்டுறேன்” என்றதில், செவிகள் இரண்டையும் மூடிக் கொண்டவள், “அபச்சாரமா பேசாதயா” என அதட்டியபடி ஓட்டத்தைத் தொடர்ந்தாள்.

இங்கோ கதிரவனும் நிவேதனும் வெடித்துச் சிரிக்க, ஆதிசக்தி இரு ஆடவர்களையும் ஒரு மார்க்கமாகப் பார்த்திருந்தார்.

“தாத்தா எங்க பெரிம்மா?” பேச்சை மாற்ற கிருஷ்ணவேணியிடம் நிவேதன் வினவ, “உன் பெரியப்பாவும் மாமாவும் வேனுக்குள்ள தான் இருக்காங்க. மாமாவுக்கு மாத்திரை எடுக்க போயிருக்காங்க” என்றவர், “அடடா… வெல்லம் கம்மியா இருக்கு ஆதி” என்றார்.

நிவேதன், “நாங்க வாங்கிட்டு வரோம் பெரியம்மா” எனத் தப்பிக்க முயன்று அங்கிருந்து ஓடி விட்டனர்.

கண்மணியும் சிந்தாமணியும் இலையை வாங்கும் நேரம், “என்ன கண்மணி குடும்பத்தோட சந்தோசமா இருக்க போல…” என்ற குரல் கேட்டதில் இரு பெண்களும் திரும்பிப் பார்த்து திகைத்தனர்.

முருகன் தான் நின்றிருந்தான். முகத்தில் போடப்பட்டிருந்த தையல் அகற்றப்பட்டிருந்தது.

“நீ இங்க என்ன பண்ற?” எனக் கேட்ட கண்மணிக்கு உள்ளுக்குள் அபாய மணி அடித்தது. அவனுக்குப் பின்னால் இரு கார்களில் இருந்து கையில் கத்தியுடன் ஆள்கள் இறங்கியதில் இருவரும் வெலவெலத்துப் போயினர்.

“என்னை என்ன நினைச்சான் உன் அண்ணன். என்மேலேயே கையை வச்சுட்டு அவனால நிம்மதியா இருக்க முடியுமா? உன்னை கருவறுத்துட்டு அப்பறம் அவனைப் பார்த்துக்கிறேன்…” என்ற முருகனுக்கு ஆத்திரம் மழையாகப் பொழிய, கதிரவனும் நிவேதனும் இவர்களை பார்த்து விட்டனர்.

“டேய் கத்தியோட வர்றாங்கடா…” இருவரும் வேக வேகமாய் பெண்களின் அருகில் செல்ல, முருகன் கண்மணியைத் தாக்க வந்ததில் நிவேதன் அவனைத் தள்ளி விட்டு, கண்மணியை இழுத்துக் கொண்டு ஓடினான்.

“டேய் அவங்களை பிடிங்கடா” முருகன் தனது தந்தையின் ஆள்களுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு, சிந்தாமணியைத் தாக்க வர, கதிரவன் அவனைப் பளாரென அறைந்து விட்டு, சிந்தாமணியின் கைப்பற்றி அங்கிருந்து ஓடினான்.

—-

“யாஷ் விடு…” நிதர்ஷனாவைக் கையும் களவுமாகப் பிடித்து விட்ட யாஷ் பிரஜிதன், “என்ன சொன்ன என்ன சொன்ன?” எனக் கையை அழுத்தமாய் பிடிக்க, அவள் போட்டிருந்த வளையல் உடையத் தொடங்கியது.

“அட அரக்கா… வளையல் உடையுது பாரு” எனக் கையை இழுத்துக் கொண்டதில், “என்னடி இப்படி உடையுது?” எனக் கேட்கும்போதே அலைபேசி அழைப்பு வந்தது.

எதிர்முனையில் கேள்விப்பட்ட விஷயத்தைக் கேட்டு யாஷ் பிரஜிதனும் சன்னமாக அதிர்ந்தான்.

இரு ஜோடிகளும் கண்மூடித்தனமாக எங்கெங்கோ ஓடியது.

அவர்களைத் தாக்க கத்தியுடன் வந்த படைகளும் சோர்வுறவில்லை.

“நிவே எங்க ஓடுறோம்” மூச்சு வாங்க கண்மணி வினவ, “யாருக்குத் தெரியும்… அவனுங்க டயர்ட் ஆகுற வரை ஓட வேண்டியது தான்” என்றான் மூச்சிரைக்க.

“அப்ப டயர்ட் ஆனதும் அடிக்கப் போறீங்களா?” சிந்தாமணி கேட்டதில்,

“அடிக்கவா? அடி வாங்க வேணா செய்றோம்” என்ற கதிரவனின் கூற்றில், ‘ஐயோ இவனுங்களை நம்பி உசுர பணயம் வச்சு ஓடிட்டு இருக்கோமே’ என்று சிந்தாமணி நொந்து கொண்டாள்.

ஓடும் போதே முடிவில் ஒரு ஆற்றங்கரையில் பயணம் முடிந்திருக்க, “ஐயோ இதுல எப்படி ஓடுறது?” என கண்மணி தலையில் வைத்துக் கொண்டாள்.

“நீச்சல் போட்டு போய்டலாமா?” நிவேதன் கேட்டதில், “டேய் நீ கொலைகாரங்ககிட்ட இருந்து தப்பிக்கிறியா இல்ல இவளை கூட்டிட்டு ஊரை விட்டு ஓடுறியாடா?” என முறைத்தான் கதிரவன்.

அதில் கண்மணியும் நிவேதனும் ஒருவரை ஒருவர் வெட்க நகையுடன் பார்த்துக்கொள்ள, ‘ஓஹோ அப்படி போகுதா சங்கதி’ என சிந்தாமணியும் மனதினுள் சிரித்துக் கொண்டாள்.

அந்நேரம் ஆள்கள் அவர்களை முற்றுகையிட, நால்வரும் செய்வதறியாமல் நின்றனர்.

—–

யாஷ் பிரஜிதனின் தீவிர முக பாவனையில் பதறிய நிதர்ஷனா “என்னாச்சு அரக்கா?” என வினவ,

“தெ ஆர் இன் டேஞ்சர்” எனத் தனது ஆள்களை வர வைக்க, அவன் முன்னே வெளிநாட்டுக் கார் ஒன்று நின்றது.

“ஐ ஹேவ் டு கோ!” எனும்போதே நிதர்ஷனா “இது யார் காரு. இவங்கள்லாம் யாரு?” எனக் கேட்டாள் குழப்பமாய்.

“என் கார்ட்ஸ். நம்ம எங்க போனாலும் நம்ம சேஃப்டிக்கு இருப்பாங்க”

“நீ வீட்ல சொல்லி பேனிக் ஆக்காத” என அவன் காரில் அமர, நிதர்ஷனா “யாஷ் யாஷ் நானும் வரேன்” என்றாள்.

“வேணாம்டி…” அவன் மறுக்க,

“ப்ளீஸ் யாஷ். ஒரு டூ மினிட்ஸ்” இரு என்று வேகமாக வேனை நோக்கி ஓட, “இவளை” எனப்பல்லைக்கடித்தான்.

அடுத்த இரு நிமிடத்தில் கைப்பையுடன் வந்தவளை விசித்திரமாகப் பார்த்தவன், காரைப் புயல் வேகத்தில் செலுத்தினான்.

——-

அடியாள்கள் அவர்களைத் தாக்க வந்ததில், அத்தனை நாள்களும் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

துப்பாக்கி சுடுதலுடன், சண்டைப்பயிற்சியும் கொடுத்ததால், தட்டுத் தடுமாறியேனும் எதிராளிகளை அடித்தனர்.

கண்மணிக்கும் சிந்தாமணிக்கும் அதே பயிற்சி கொடுக்கப்பட்டதால் அவர்களாலும் சமாளிக்க முடிந்தது.

“ஹை நமக்கு சண்டை போட தெரியுது கண்மணி” முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு கூறிய சிந்தாமணியை ஒருவன் கத்தியால் தாக்க வர, தாவிச் சென்று அந்தக் கத்தியைப் பிடித்திருந்தான் கதிரவன்.

“கதிர் கைல ரத்தம் வருது…” சிந்தாமணி பதறிட, அவனோ அதனைப் பொருட்படுத்தாது அவளது அருகில் யாரையும் நெருங்காது பார்த்துக்கொண்டான்.

முருகன் கோபமாக கண்மணியின் அருகில் வர, அவனை அறையப் போனவளின் கையைப் பிடித்துக் கொண்டவன், “என்னடி என்கிட்டயே உன் வித்தையை காட்டுறியா?” எனும்போதே அவள் கையில் இருந்த வளையல் உடைந்தது.

வளையல் உடைந்ததால் கவனத்தை சிதற விட்ட கண்மணி, அவன் கத்தியால் குத்த வருவதைக் கவனியாது கையையே வெறித்திருக்க, நிவேதன் சரியான நேரத்தில் முருகனை தாக்கினான்.

“நீ யாருடா தேவையில்லாம வந்து இம்சை பண்ணிட்டு இருக்க… ஒழுங்கா போய்டு. இல்ல இங்கயே உன் சங்கை அறுத்துருவேன்” என்றபடி அவனது சட்டையில் கோடு கிழிக்க, அவனது வயிற்றிலும் இரத்தக் கோடுகள் தெரிந்தது.

“நிவே!” கண்மணி பதறிச் சென்று அவனை அணைத்துக் கொள்ள முருகனுக்கு வெறியே பிடித்தது.

நிவேதனோ “அவளுக்கு ஒண்ணுன்னா நான் தான் வருவேன். என்னைத் தாண்டி நீ அவளைத் தொட முடியாது!” என்றான் ஆத்திரத்துடன்.

கண்மணிக்கு நெஞ்செல்லாம் நிறைந்தது போன்ற உணர்வு!

ஆற்றுமணலில் சண்டை நிகழ்ந்ததால் புழுதி பறந்தது.

இதில் அங்கு யாஷ் பிரஜிதனும் அதிவேகத்தில் வந்து காரை நிறுத்த, புகை அதிகமானது தான் மிச்சம்.

யாஷ் கோபத்துடன் இறங்கி வந்து, முருகனை சப்பென அறைந்தான்.

“ஹொவ் டேர் யூ? உன்னை என் தங்கச்சி பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல” என்று மிரட்ட, முருகனுக்கு அனைத்தும் சொதப்பி விட்டதில் பயம் வேறு எழுந்தது.

“டேய் என்னடா பாத்துட்டு இருக்கீங்க. அடிங்கடா” என அரை மயக்கத்தில் இருந்த ஆள்களை எழுப்ப, அவர்களும் தங்களை நிதானப்படுத்திக்கொண்டு யாஷை அடிக்க வர, அந்நேரம் எங்கிருந்தோ வந்த குண்டுகள் அந்த ஆள்களின் காலில் பட்டுத் தெறித்தது.

அனைவரும் ஒவ்வொருவராய் குண்டடி பட்டு சரிந்ததைக் கண்டு முருகனுக்கு பீதியாகி விட்டது.

இறுதியாய் முருகனின் காலிலும் குண்டு பட, அவனும் அப்படியே அமர்ந்து விட்டான் வலியில்.

“கால்ல பட்ட குண்டு, உன் தலைல பட்டா என்னாகும்னு தெரியும்ல. செகண்ட் டைம் உன்னை மன்னிச்சு விடுறேன். தர்ட் டைம் நோ எக்ஸ்கியூஸஸ்” என சீறியதில், “இனிமே கண்மணி பக்கமே வர மாட்டேன் சார்… எங்களை விட்டுருங்க” என்று நொண்டி நொண்டி அனைவரும் காரில் ஏறி ஓடியே விட்டனர்.

புழுதி அதிகமாய் இருந்ததில் யாஷிற்கு லேசாய் கண்ணை இருட்டியது.

அவனது அதிரடியில் அதிர்ந்து போயிருந்த ஐவரில் நிதர்ஷனா தான் முதலில் சுயநினைவுக்கு வந்து, “யாஷ் மூக்குல இருந்து ரத்தம் வருது…” என்று பதறி விட்டு வேகமாய் தான் கொண்டு வந்த கைப்பையில் இருந்து அவனது நாசல் ஸ்ப்ரேயை எடுத்துக் கொடுத்தாள்.

துரிதமாய் தனக்கான சிகிச்சையை செய்து கொண்ட யாஷ், சில நொடிகளில் நிதானமாகி விட்டு, “இதை எடுக்க தான் வேன்கு போனியா ஆலம்பனா?” என்றான் கனிவாக.

“ம்ம் எப்படியும் ஒரு சண்டைக்காட்சி இருக்கும்னு ஒரு பட்சி சொல்லுச்சு அதான்… இப்ப பரவாயில்லையா யாஷ்” என முந்தானை கொண்டு மூக்கில் இருந்து வந்த இரத்தத்தைத் துடைத்திட, “நொவ் பெட்டர்டி…” என்றான்.

“மச்சான்… ஹாஸ்பிடல் எதுவும் போகணுமா?” நிவேதனும் கவலையுடன் கேட்க,

“ஆமா போகணும்… உங்களை அட்மிட் பண்ண” என்றதில், கண்மணி “ஆமாண்ணா ரெண்டு பேருக்குமே அடிபட்டுருக்கு” என்றாள்.

“அதுக்கு இல்ல. இப்ப நான் அடிக்கப் போறதுல இவனுங்க உண்மையாவே ஐசியூல அட்மிட் ஆகப் போறானுங்க” என்று கர்ஜித்தான்.

“ஆத்தாடி!” கதிரவன் இரு கன்னத்திலும் கை வைத்து சிந்தாமணியின் பின்னால் ஒளிந்து கொள்ள, சிந்தாமணியோ “மாமா இவங்க சண்டை போட்டு எங்களை காப்பாத்துனாங்க” என்றாள் வேகமாக.

“லூசு லூசு… எனக்கு அந்த அரை மெண்டல் இங்க வந்து பிரச்சினை பண்ணும்னு ஏற்கனவே தெரியும். அப்படி எவனாவது வந்தா, யோசிக்காம ஷுட் பண்ண சொல்லி என் ஆள்களை ரெடியா வச்சுருந்தேன்.

கண்மணியை அட்டாக் பண்ணும்போது ஒரு ஒரு செகண்ட் சும்மா விட்டுருந்தா என் கார்ட்ஸ் அவங்களை அங்கேயே ஷுட் பண்ணிருப்பாங்க… இடியட்ஸ்” என்றதில் ஆடவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

“இதெல்லாம் முன்னாடியே சொல்றது இல்லையா மச்சான்” என்ற நிவேதனின் முடியைப் பற்றி ஆட்டினான்.

“ஐயோ மச்சான் வலிக்குது…” நிவேதன் கதறிட, அங்கிருந்து தப்பித்து ஓட எண்ணிய கதிரவனின் கேசமும் வசமாக யாஷிடம் சிக்கிக் கொண்டது.

“சரிடா நீங்க சண்டை போட்டது வரை சரி தான். அதைக் கோவில் வாசல்லயே போட வேண்டியது தான. ஏன்டா இருபது கிலோ மீட்டர் ஓடி வந்தீங்க?” என்று பற்களை நறநறவெனக் கடிக்க, ‘அவ்ளோ தூரமா ஓடுனோம்!’ என்று நால்வரும் அசடு வழிந்தனர்.

“ஹய்ய… அடிக்க வந்தா ஓடியே பழகிடுச்சு மச்சான். சண்டை போடத் தெரியும்னு மறந்து போச்சு. இங்க வந்தப்பறம் தான் ஞாபகம் வந்துச்சு. வுட்ரு மச்சான்” என நிவேதன் கெஞ்சிட, நிதர்ஷனா அதற்கு மேல் முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினாள்.

அரக்கன் தொடரும்
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
66
+1
2
+1
6

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment