
தாரகேஷைப் போலீசார் சுற்றி வளைக்க, செங்காந்தள் கவலைகொண்டாள்.
கஜேந்திரன் கையில் துப்பாக்கியுடன், “தாரகேஷ்.. நீ எங்கேயும் தப்பிச்சுப் போக முயற்சி பண்ணாத.. உன்னால முடியாது..”
தாரகேஷ், “நீங்க நினைக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை சார். நான் ஓடலாம் மாட்டேன்..” என்றான் தெளிவாக.
போலீசார் தாரகேஷைக் கைது செய்ய, வெண்ணிலா போலீஸ் ஸ்டேஷனில் தாரகேஷைச் சந்திக்க வந்தாள்.
வெண்ணிலா, “தாரகேஷ்.. மறுபடியும் என்னடா பண்ணித்தொலைச்ச..”
தாரகேஷ், “நான் பண்றது இருக்கட்டும், நீங்க இங்கே எப்படி? உங்க கூட ஒரு பூந்தோட்டமே சுத்துமே.. எப்படி விட்டுட்டு வந்தீங்க?”
ஆம், தாரகேஷ் வெண்ணிலாவுடன் வரும்போதே அவளது கணவனுடன் விவாகரத்து ஆகியிருந்தது. வெண்ணிலா வீட்டில் தாரகேஷ் தங்கியிருக்கும் போது அவளுக்கு வேறு திருமணம் பற்றிப் பேச்செடுக்க, “எனக்கு ஆண்கள் மீது நம்பிக்கையே போயிருச்சு.. இன்னொரு முறை என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்னா நான் செத்துருவேன்.. இனி என் வாழ்க்கை ஆதரவில்லாத பெண்களுக்குத் தான்” எனத் தன் பெற்றோரிடம் கடுமையாகக் கூறியவள், ஊரில் இருந்த ஓர் ஆதரவற்ற இல்லத்தில் தன்னை வாலண்டியராகச் சேர்த்துக்கொண்டாள். அன்றிலிருந்து அவள் வாழ்க்கை பெண்களுக்கென்றானது. ஆதரவற்று வரும் பெண்களை ஊக்கப்படுத்தி அவர்களைச் சுதந்திரமாகவும் தைரியமாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமைப்படுத்தி இந்தச் சமூகத்தில் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி செய்து கொண்டிருந்தாள்.
தாரகேஷ் ஆண்களை எதிரியாகப் பார்க்க வெண்ணிலாவின் சூழ்நிலையும் அவளைச் சுற்றியிருந்த பெண்களின் சூழ்நிலைகளும் பெரும் காரணமாகின.
தாரகேஷ், “உங்களை ஒரு பூந்தோட்டமே சுத்துமே.. எப்படி விட்டுட்டு வந்தீங்க?”
வெண்ணிலா, “அது இருக்கு பத்திரமா.. ஆனா அன்னைக்கு நீ அடம்பிடிச்சன்னு உன்னைக் கூட்டிட்டே வந்திருக்கக் கூடாதுன்னு நினைக்க வச்சிட்டியேடா..”
தாரகேஷ், “நீங்க எனக்கு நல்லதுதானே பண்ணீங்க.. இன்னைக்கு நான் இவ்வளவு படிச்சு நல்ல நிலைமைக்கு இருக்கக் காரணமே நீங்கதான். ரொம்ப எல்லாம் கவலைப்படாதீங்க.. காதல்ன்ற பேர்ல இந்த உலகத்துல முக்காவாசி ஆம்பளைங்க பொண்ணுங்களை வேட்டையாடத்தான் பார்க்குறாங்க. நான் பிரிச்சுவிட்ட ஜோடிகள்ல பாதிக்குப் பாதி கெட்டவங்கதான். அந்த ராகவியோட பழைய லவ்வர் சுபாஷ் உண்மையிலேயே ஒரு பை-செக்சுவல் (Bisexual) தான். பாவம் அவன் பொண்டாட்டி விஷயம் தெரிஞ்சா ரொம்பக் கஷ்டப்படுவா.. நான் உண்மையிலேயே ராகவியைக் காப்பாத்தித்தான் இருக்கேன்.
அப்புறம் ஆபீஸ்ல கூட வேலை பார்த்த கல்பனாவுக்குப் பார்த்த மாப்பிள்ளை ஒரு இல்லீகல் டிரக் டீலர். கடைசி நேரத்துல தான் அவ கல்யாணத்தை நிறுத்த முடிஞ்சது. கல்யாணத்துப்போ அவனை அரெஸ்ட் பண்ணதுனால அவளுக்கும் ஆண்கள் மேல நம்பிக்கை போச்சு.
அந்த பூர்வியோட ஆளு ஆரவ், பூர்வியோட பணத்துக்காக லவ் பண்ணிட்டு வீட்டுல பார்த்த அவனோட மாமா பொண்ணைக் கல்யாணம் பண்ணத் தயாரா இருந்தான். அதான் அவங்க காதலையும் பிரிச்சுவிட்டேன். கிருத்தியோட லவ்வர் ஹர்ஷித் உண்மையிலேயே கம்பெனி டாக்குமெண்ட்ஸ வித்துட்டான் தான். அதை நான் கண்டுபிடிச்சேன். அவ்வளவுதான்..
இப்படி நான் பிரிச்ச பல ஜோடிகள் உண்மையிலேயே கல்யாண வாழ்க்கையில அடி எடுத்து வச்சிருந்தாலும் அவங்க கொஞ்ச நாள்ல நிஜமாவே கஷ்டம்தான் பட்டிருப்பாங்க. நான் பண்ண தப்பு என்ன தெரியுமா? விஷயத்தை அந்தப் பூக்கள் கிட்ட சொல்லாதது. நான் அவங்ககிட்ட சொல்லி ‘இது உன் வாழ்க்கை, நீ என்ன முடிவு எடுக்கப் போற?’ன்னு கேட்காதது. கேட்டிருக்கணும். அத்தா சொல்ற மாதிரி கேட்டிருந்தா.. இன்னைக்கு என் பூ என்னையே சந்தேகப்பட்டு இருக்காது..” என்றான் கலங்கிய குரலில்.
தாரகேஷ் கூறிய செய்தியில் போலீசார் அனைவரும் அதிர்ந்தனர்.
பின் தாரகேஷ் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தாரகேஷ் இதற்கு முன் செய்த கொலை வழக்கையும், இப்போது தொடர்ந்து ஆண்களின் வாழ்க்கையில் விளையாடுவதையும் வைத்து அவன் தொடர் குற்றவாளி என அரசுத் தரப்பு வாதம் செய்தது.
தாரகேஷின் சார்பாக ஆஜரான வெண்ணிலா, முதல் முறை தாரகேஷ் கொலை செய்தபோது அவனுக்கு வயது பத்து. அன்று தற்காப்புக்காகக் கொலை செய்தாலும், அன்று ஜட்ஜ் சொன்ன ஒரே காரணத்திற்காக இன்று வரை எந்த மனிதனையும் அவன் நேரடியாகத் துன்புறுத்தவில்லை எனவும், தாரகேஷ் பிரித்த காதலர்களில் ஆண்கள் பெருவாரியாக அந்தப் பெண்களுக்குத் துரோகம் செய்ய இருந்த நிலையில் அந்தப் பெண்களை உண்மையில் அவன் காப்பாற்றியதாகவே எடுத்துக்கூறினாள்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தாரகேஷ் பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் அனுமதியின்றி நுழைந்தது உண்மைதான். அதற்கு ஆதாரமாக அவனது ஜர்னல் இருக்கிறது. அதே நேரம் அவன் இதைத் தொடர்ந்து செய்வது, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது குற்றமாகும். தாரகேஷ் தப்பு செய்த ஆண்களிடமிருந்து பெண்களைப் பிரித்தாலும், அவரால் பாதிக்கப்பட்ட ஆண்களில் தப்பு செய்யாதவர்களும் இருப்பது உண்மைதான். எந்த மனிதனும் பலவீனம் இல்லாமல் இருப்பது இல்லை. அவனது பலவீனத்தைத் தான் பயன்படுத்திக்கொண்டு அவனைக் குற்றவாளியாக அவனைச் சார்ந்தோரிடம் காட்டும் உரிமை தாரகேஷிற்கு கிடையாது. மேலும் தாரகேஷ் பல ஆண்களின் வாழ்க்கையில் டெக்னாலஜி மூலம் விளையாடி இருப்பதால் இது சைபர் குற்றமாகும். அதே நேரம் அவர் குற்றத்திற்கு ஆதாரமான ஜர்னலே ஒரு டேட்டா தெஃப்ட் ஆகும். தாரகேஷ் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகளும், அவருக்குச் சமூகம் மீதான அழுத்தத்தைக் குறைக்க மனரீதியான சிகிச்சையும் கிடைக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது..
மேலும் தாரகேஷ் சொன்னது போல அவரது ஜர்னலில் உள்ள குற்றம் செய்த ஆண்களைப் பற்றி விசாரித்துத் தக்க அறிக்கை வழங்க வேண்டும் எனப் போலீசாருக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது” எனத் தீர்ப்பை எழுதினார்.
தாரகேஷின் வழக்கு சமூகத்தில் ஒரு விவாதமாக மாறியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தாரகேஷ் செய்தது சரியா தவறா என விவாதம் நிகழ்த்தித் தங்களுக்கான டி.ஆர்.பி-யை ஏற்றிக்கொண்டு சில நாட்களில் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றன. தாரகேஷ் தான் செய்த தப்பை உணர்ந்தும் இருந்தான். அதே நேரம் அவனால் காக்கப்பட வேண்டிய பூக்கள் இன்னும் வெளியே வேட்டைக்காரன் தோட்டத்தில் இருப்பதையும் உணர்ந்து இருந்தான். காவலர்கள் அவனைச் சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும் வெண்ணிலாவிடம் அவனது பூக்களைப் பாதுகாக்கக் கேட்டுக்கொண்டான்.
மூன்று வருடம் கழித்து.. மதுரை மத்திய சிறையில்.. அன்று தாரகேஷிற்கு விடுதலை நாள்..
குற்றவாளிகள் ஆறு பேர் இருந்த அந்த அறையில் அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் மட்டும் அன்று புதிதாக வந்தவன், டென்ஷனாக இருந்தான்.
குற்றவாளி ஒருவர், “இப்போ எதுக்குடா அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க.. தப்பு பண்ணிட்டான்னு தானே உள்ள தூக்கிப் போட்டுருக்காங்க.. இன்னமும் மிச்சம் வச்ச மாதிரி டென்ஷனா சுத்திக்கிட்டு இருக்க..”
மற்றொரு குற்றவாளி, “என் தங்கச்சிய ஒருத்தன் லவ் பண்றேன்னு சொல்லிட்டு சுத்திக்கிட்டு இருந்தான்.. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கல.. அவன் பெரிய இடத்துப் பையன் வேற, மேல கைவச்சுட்டேன். அதுக்குப் கொலை பண்ணப் பார்த்தேன்னு சொல்லி உள்ள தூக்கிப் போட்டாங்க.. வெளிய என் தங்கச்சி என்ன நிலைமையில இருக்காளோ?” என்றவர், தாரகேஷிடம் திரும்பி, “தம்பி நீ இன்னைக்கு வெளிய போற தானே.. என் தங்கச்சிய கொஞ்சம் பார்த்துக்கிறியா? அவ பூ மாதிரிப்பா.. உலகம் தெரியாம காதல்னு கண்டவனை நம்பி சுத்திக்கிட்டு இருக்கா.. ”
தாரகேஷ், “உங்க தங்கச்சி எங்கே வேலை பார்க்கிறா?”
அந்த டென்ஷனாக இருந்த குற்றவாளி, “அவ இங்கே தான் மதுரையில வேலை பார்த்துட்டு இருந்தா.. அந்தப் பையன் தான் ஏதேதோ சொல்லி மும்பைக்கு டிரான்ஸ்பர்க்கு அப்ளை பண்ணச் சொல்லிருக்கான்..”
தாரகேஷ், “அப்போ எனக்கும் அடுத்த வேலை மும்பையில தான்..” என்றவனைக் காவலர் அழைத்துச் செல்லத் தனது பூக்களைப் பாதுகாக்க மீண்டும் புறப்பட்டான்.
– முற்றும்

