Loading

நித்திலன் நிவாசினியிடம் ‘நிநி’ க்கான விளக்கத்தைக் கூறியதும் சட்டெனச் சோர்ந்து போனது அவள் மனம்.

 

தாம் எதை எதிர்ப்பார்க்கிறோம்? தன் மனம் எதற்காக இப்படித் துவண்டு போகிறது? அவளுக்கே அக்கேள்விக்கான விடை தெரியவில்லை.

 

எங்கோ வெறித்திருந்த அவளின் பார்வையை, அவளின் முகம் பற்றித் தன் மீதிருக்குமாறு வைத்தவன், வெகு மென்மையான குரலில், “உன்னைக் கல்யாணம் செய்த பிறகு இந்த நிநிக்கான முழு அர்த்தமும் நீயா மட்டுமா தான் இருப்ப ஹனி! நிவாசினி நித்திலனா தான் இந்த நிநி பார்க்கப்படும்! என்னைக் கல்யாணம் செய்துக்க உனக்குச் சம்மதமா ஹனி”

 

‘அடேய் ஓங்கி அடிக்கப் போறா! ரெடியா இருந்துக்கோ’ மனத்தின் அலறலை வெளிக் காண்பிக்காது கெத்தாய் நித்திலன் தனது காதலை உரைத்து விட்டு அவளின் பதிலை எதிர்நோக்கிப் படபடப்புடன் காத்திருந்தான்.

 

அவளோ அவனின் ஹனி என்ற அந்த அழைப்பில் மெய்சிலிர்த்துக் கண்களில் நீர் வர அமர்ந்திருந்தாள்.

 

அவன் கூறிய காதலைத் தாண்டி அவனின் அந்த அழைப்பு, கனவில் உயிர் உருக அவன் அழைக்கும் அழைப்பல்லவா அது!

 

அப்படியென்றால் இது முருகனின் அருளாசியினால் நிகழ்வது தான்.

தாத்தாவின் விருப்பமாய் நிகழ்வது தான் எனப் பரிபூரணமாய் நம்பினாள். இவருக்கும் எனக்குமிருக்கும் முன் ஜென்ம பந்தம் உண்மை தான் என அவளின் மனம் எண்ணிப் பூரித்து மகிழ்ந்தது.

 

மனம் வெகுவாய் பரவசத்தில் துள்ளிக் குதிக்க, அதன் பாரம் தாளாமல் அவனின் இரு கரங்களையும் பற்றியவள், உள்ளங்கைக்குள் முகத்தினைப் புதைத்து அழுதாள்.

 

அவளின் தேம்பலிலும், கைகளில் உணரப்பட்ட கண்ணீர் துளிகளிலும் அவள் அழுவதை உணர்ந்தவன், “என்னடா… என்னாச்சு” பதறியவாறே கேட்டான்.

 

“நான் இவ்ளோ சந்தோஷமா இருந்து ரொம்ப நாளாச்சு” அழுகையும் விம்மலுமாய் அவன் கரங்களில் புதைத்த முகத்தினை அப்படியே வைத்துக் கொண்டு அவள் கூற, அவனுக்கு அவள் கூறியது சரியாகக் கேட்கவில்லை.

 

சுற்றும் முற்றும் மக்களின் பார்வை தங்களின் மீது இருக்கிறதா எனப் பார்த்தவன், அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்திருப்பதைப் பார்த்துச் சற்று ஆசுவாசமடைந்து, தூரமாய் அமர்ந்திருந்த தனது நண்பனை அருகே அழைக்கும் பொருட்டு அவனைப் பார்த்தான்.

 

அவனோ அதித் தீவிரமாய்க் கடவுளிடம் கண் மூடி வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க, ‘அடேய் தடிமாடு இங்க பாருடா’ என மனத்திற்குள் அவனைத் திட்டியவன், அவளைத் தேற்ற முற்பட்டான்.

 

அவன் கையிலிருந்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், கண்களில் நீர் வழிய, “என்னை என்னிக்கும் விட்டுட்டு போய்ட மாட்டீங்க தானே! உங்க உயிரா என்னை வச்சி பார்த்துப்பீங்களா? யாருக்காகவும் என்னை ஹர்ட் பண்ணாம பார்த்துப்பீங்களா? எனக்குனு இந்த உலகத்துல யாருமேயில்ல” பிதுங்கிய உதட்டுடன் அழுதவளாய் கூறியவளைக் கண்டவனின் கண்களிலும் கண்ணீர் சூழ்ந்தது.

 

அவளின் தலையை வருடியவனாய், “என்னிக்குமே உன் கண்ணீரை பார்க்கிற தைரியம் எனக்கில்லை ஹனி! கண்டிப்பா உன்னை என் உயிரா வச்சி பார்த்துப்பேன்” கைகளைப் பற்றி வாக்களித்தான்.

 

தூரமாய் அமர்ந்திருந்த அவனது நண்பன் விஜய், இவர்களின் இந்தக் கண்ணீர் நிலையைப் பார்த்து, என்னமோ ஏதோவெனப் பதறி அருகில் வந்தான்.

 

அவன் வருவதைப் பார்த்த நித்திலன், அவளிடமிருந்து தனது கைகளை உருவி கொண்டு தனது கண்களை அவசரமாய்த் துடைக்க, என்ன என்பது போல் நித்திலனைப் பார்த்தான் விஜய்.

 

அவர்களின் அருகே வந்த விஜய், “என்னடா மச்சான்? என்னாச்சு? தங்கச்சி அறைஞ்சுட்டாங்களா? அதான் கண்ணுலாம் கலங்கிருக்கா?” நித்திலனின் காதினில் மட்டும் விழுமாறு மெல்லிய குரலில் கேட்டான்.

 

“ஆமா அவளுக்கே அறைய தெரியலைனாலும் நீயே போய்ச் சொல்லி கொடுப்ப போலயே” பல்லைக் கடித்தவனாய் கோபத்துடன் விஜயை முறைத்துப் பார்த்தவாறு உரைத்தான் நித்திலன்.

 

ஹி ஹி ஹி என அசடு வழிந்தவன்,

“ஹாய் சிஸ்டர்” என நிவாசினியிடம் பேச, லேசாய் சிரித்து வைத்த நிவாசினி, “யாரிது?” என நித்திலனிடம் கேட்டாள்.

 

அவளின் கேள்வியில் வாயில் கை வைத்த விஜய், “வைஷூ மாதா நான் தான் மாதேஷ்” ஜீன்ஸ் படத்தின் ராஜு சுந்தரம் போல் உரைத்தவன்,

 

“என்னடா இது? மயக்கம் போட்டு மடியில தாங்கினவனை ஞாபகம் இருக்கு? தண்ணீர் கொடுக்கச் சொன்னவன ஞாபகம் இல்லையா? கலிகாலம் கலிகாலம்” தன்னை எண்ணியே நொந்து கொண்ட பாவனையில் அவன் கூறவும், அவனின் செய்கையிலும் பேச்சிலும் வாய்விட்டுச் சிரித்திருந்தாள் நிவாசினி.

 

“சாரி அண்ணா! அன்னிக்கு நான் மயக்கம் போட்டப்ப நீங்க இருந்தீங்களா? நான் கவனிக்கலை” நிவாசினி விஜயிடம் கூற,

இருவரும் பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின் இயல்பாய் பேசியிருந்தனர்.

 

“இது தான் என் நம்பர்” கைப்பேசி எண்களைப் பறிமாற்றம் செய்து கொண்ட நித்திலன், “ஷோக்கு டைம் ஆகிடுச்சு நான் இப்ப போனா தான் சரியா இருக்கும்! இன்னிக்கு ஷோ கண்டிப்பா கேளு ஹனி” எனக் கண்களில் காதல் மின்ன உரைத்தான்.

 

ஹ்ம்ம் என வெட்கமாய் அவள் ராகம் பாட, இதைப் பார்த்த விஜய், ‘ஹ்ம்ம் அப்ப மச்சான் வந்த வேலை முடிஞ்சிது! இனி நம்மளைலாம் கண்டுக்கக் கூட மாட்டானே’ என மனத்திற்குள் பேசிக் கொண்டவனாய், “நீங்கப் பேசினது போதும்” எனக் கூறி நித்திலனை இழுத்துச் சென்றான்.

 

பவானி தனது திருமணத்திற்கான துணிகளையும் பொருள்களையும் வாங்குவதற்காக அபிநந்தனுடன் கடை வீதிக்கு செல்வதாகவும், அதனால் தான் அறைக்கு வருவதற்குத் தாமதமாகும் எனவும் நிவாசினிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

 

அறையை அடைந்த நிவாசினியின் மனமோ நித்திலனின் நினைவில் நெகிழ்ந்திருக்க, பவானியின் குறுஞ்செய்தியை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை அவள்.

 

அவளின் காதல் மனம் அவனிடம் உடனே பேச வேண்டுமென அல்லாட,

“ஹாய் நித்திலன்” அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

 

“நீ என்னை நித்தினே கூப்பிடலாம் ஹனி” என்று அனுப்பினான் அவன்.

 

ஆச்சரியமாகிப் போனது அவளுக்கு.

 

“அன்னிக்கு நித்தினு கூப்பிட்டா பிடிக்காதுனு சொன்னீங்க?” கேட்டு அவள் அனுப்ப,

 

“உன்னைத் தவிர யாரு கூப்பிட்டாலும் பிடிக்காது!” என அனுப்பினான்.

 

“நிஜமாவா?” நம்ப முடியாத இன்ப ஆச்சரியத்துடன் கேட்டாள்.

 

“ஆமா” என்று அனுப்பினான் அவன்.

 

“என்னை அவ்ளோ பிடிக்குமா?” மீண்டுமாய்க் கேட்டு அவள் அனுப்ப,

 

“ஆமா. ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்று அனுப்பினான்.

 

இவளுக்குப் பரவசமாகிப் போனது. நெஞ்சம் நிறைந்து போனது. தான் மகிழ்வின் உச்சத்தில் இருப்பதாய் உணர்ந்தாள்.

 

“நித்திப்பா”

 

“என் நித்திப்பா!”

 

“என் செல்ல நித்திப்பா!”

 

“மை ஸ்வீட் நித்திப்பா!”

 

“எனக்காகவே வந்த என் நித்திப்பா”

 

வரிசையாய் குறுஞ்செய்திகளை அனுப்பிவிட்டு, ரோஸ், ஹார்டீன் ஸ்டிக்கர்களையும் அனுப்பி விட்டு கைப்பேசியைத் தள்ளி வைத்தவள், வெட்கம் தாளாமல் முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டாள்.

 

“அய்யய்யோ என்ன ரிப்ளை செய்வாருனு தெரியலையே” தனக்குள்ளாகவே பேசிக் கொண்டவள்,

 

“கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?” எனக் கேள்வி எழ, “போய்ட்டு போகுது என் நித்திக்கிட்ட தானே” என்று கூறிக் கொண்டாள்.

 

மெதுவாய் கைப்பேசியை எடுத்து அவனின் பதிலைப் பார்த்தாள்.

 

“யெஸ் உனக்காகவே வந்தவன் தான். லவ் யூ சோ மச் ஹனி” என அனுப்பியிருந்தவன்,

 

“உன்கிட்ட என்னைப் பத்தி சொல்லனும். நாளைக்கு நிறையப் பேசலாம்! இப்ப எனக்கு ஷோக்கு டைம் ஆகிடுச்சு.பை பை ஸ்வீட் ஹார்ட்! குட் நைட்! ஹேவ் எ ஸ்வீட் நித்திலன் ட்ரீம்ஸ்” கண்ணடிக்கும் ஸ்மைலியுடன் மெசேஜ் அனுப்பி வைத்தவன், ஆஃப்லைன் சென்று விட்டான்.

 

அவனின் குறுஞ்செய்தியை வெகு ஆசையாய் படித்தவள் அவனின் பண்பலை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

 

அதற்குள் அறைக்கு வந்து சேர்ந்திருந்த பவானி வெகு களைப்பாய் இருக்க, நிவாசினியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அலுப்பில் உறங்கி விட்டாள்.

 

“ஹாய் ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்”

 

இந்நிகழ்ச்சியில் அவனின் இக்குரல் அந்த இரவின் நிசப்தத்தைத் தாண்டி அவளின் செவி வழியாய் இதயத்தைத் தீண்டியது.

 

“இன்னக்கு நாம எந்த மாதிரியான நினைவுகளைப் பத்தி பேச போறோம், பகிர்ந்துக்கப் போறோம்னு பார்த்தீங்கனா…” சற்று இடைவெளி அவன் விட,

 

வெகு ஆவலாய் கேட்டுக் கொண்டிருந்த நிவாசினிக்கு, தன்னைப் பற்றியோ அல்லது தனக்குச் சம்பந்தமா ஏதேனும் ஒரு நிகழ்வை பற்றியோ பேசப் போகிறானோ என்ற ஆர்வம் எழுந்து அவளை நிலைக்கொள்ளாதிருக்கச் செய்தது.

 

“பொதுவா திருமணமானவங்க எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைல ஏதேனும் ஒரு வகையில உங்க கணவர்கிட்டயோ இல்ல மனைவிக்கிட்டயோ உங்க காதலை சொல்லியிருப்பீங்க தானே! அப்படி அந்தக் காதலை முதலில் சொன்னது யாரு? கணவனா? மனைவியா? அதை எப்படிச் சொன்னாங்க?”

 

“முக்கியக் குறிப்பு இது காதலர்களுக்கான கேள்வியல்ல! இது திருமணமானவங்களுக்கான கேள்வி! திருமணமானவங்க தான் இன்னிக்கு எனக்கு ஃபோன் செஞ்சி திருமணத்திற்குப் பிறகான உங்கள் காதல் கதையின் நினைவுகளை என்கிட்ட பகிர்ந்துக்கப் போறீங்க”

 

அங்கு நித்திலன் உரைக்கவும் இங்கு இவளுக்குக் குழப்பம் சூழ்ந்தது. அது ஏன் திருமணமானவங்க? காதலர்கள் ஏன் சொல்லக் கூடாது?

 

இவள் மனதிற்குள்ளாகவே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க,

அங்கு அவனுக்கு அழைப்பு விடுத்த முதல் நேயரும் இக்கேள்வியினை அவனைக் கேட்டிருந்தார்.

 

“காதலர்களாய் இருக்கும் போது காதல் சொன்னால் தான் புரியும்! ஆனா கணவன் மனைவி ஆன பிறகு அவர்களின் செயலில் சொல்லாமலே அந்தக் காதல் புரியும். அந்தக் காதல் பேரழகு” ரசனையாய் அவனுரைத்த விதத்தில் இவளின் மனமும் சிக்கித் தான் போனது.

 

“ஆனா அப்படிச் சொல்லபடாம இருக்கும் போதும் இவர்கள் மனதிற்குள் புரிந்து வைத்திருக்கும் தங்களின் இணை மீதான அந்தக் காதலை யாராவது ஒருத்தர் வாய்விட்டு சொன்னா அது எவ்ளோ நல்ல ஃபீல் கொடுக்கும். இந்த நிகழ்ச்சி மூலமா கல்யாணமானவங்க யோசிச்சு இது வரை வாய் வார்த்தையா தன்னோட காதலை சொல்லவே இல்லயேனு நினைச்சு, யாராவது ஒருத்தர் தன்னோட கணவனோ இல்ல மனைவிக்கிட்டயோ அந்தக் காதலை வெளிப்படுத்தினால் அதுவே இந்தக் கேள்விக்கான வெற்றி”

 

‘ஏன் இவர் அடிக்கடி இப்படிப் புரியாத மாதிரியே பேசுறாரு’ என மனத்திற்குள் எண்ணிக் கொண்டே அவனின் பேச்சைக் கேட்டிருந்தாள் நிவாசினி.

 

அவளுக்கு உறக்கம் கண்களைச் சுழட்டினாலும், நிகழ்ச்சியின் நிறைவில் இக்கேள்விக்குத் தனது நினைவுகளாய் எதை அவன் பகிர்ந்து கொள்வான் என அறிந்து கொள்ளும் ஆவலில் முழித்திருந்தாள் நிவாசினி.

 

பத்து மணிக்கு தொடங்கும் அவனின் நிகழ்ச்சி இரவு பன்னிரண்டு மணியளவில் நிறைவு பெறும்.

 

“இன்றைய கேள்விக்கான என்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துக்கப் போறேன்!” என்றவன் கூறவும்,

 

இங்கு முழுதாய் உறக்கம் கலைந்து விழித்து அமர்ந்தாள் நிவாசினி.

 

“காதலைச் சொல்லாமலேயே புரிய வைக்க முடியுமான்ற என் கேள்விக்கு முடியும்னு எனக்குப் புரிய வச்சவ அவ தான்!

 

ஏன் உங்க அண்ணி அண்ணன்கிட்ட என்னை அறிமுகம் செய்து வைக்கலன்ற அவளின் கேள்வியில நான் உன் குடும்பத்துல ஒருத்தி இல்லையான்ற மறைமுகக் கேள்வியை எழுப்பி அவளோட காதலைச் சொன்னாள்.

 

அந்த நிநி யாருன்ற கேள்வியில குட்டியாய் பொறாமை! நான் இருக்க வேண்டிய இடத்துல யாரதுன்னு ஒரு கோபச் சிணுங்கல்!

 

இப்படிலாம் கூடவா ஒருத்தி அவளோட காதலைச் சொல்ல முடியும்னு வியந்து தான் போனேன்.

 

உன்னைக் கண்ட நாளிலிருந்து

மீண்டுமாய் உன்னை

காணும் நாளுக்காய்

ஏங்கித் தவித்துக்

காத்திருந்தேன் நானடி!

 

மீண்டுமாய் உன்னை

கண்ட பொழுதில்

உன்னிடம் காதலை

சொல்ல வந்ததும் நான் தானடி!

 

நீயோ உன் செய்கையால்,

சொல்லாமல் உன் காதலைச்

சொல்லிக் கொண்டிருத்தாயடி

என் ஹனி பெண்ணே!

 

“இது அந்த நிமிஷம் என்னவளுக்காக என் மனசுல தோணின கவிதை” எனக் கூறினான் நித்திலன்.

 

இங்கு நிவாசினியின் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ?

 

தனக்கு யாருமில்லையெனத் தனிமை சிறையில் தவித்திருந்தவளுக்கு, உனக்காக நானிருக்கிறேனென அவள் விரும்பியவனே வந்து அவளுக்காக அழுகிறான், சிரிக்கிறான், அவளின் நேசத்தை உணர்ந்து கொண்டதாய் உரைக்கிறான், அவளுக்காகக் கவிதையாய்ப் பேசுகிறான்.

 

பரவசமாய் வானத்தில் பறந்து கொண்டிருந்தாள் அவள்.

 

“இப்ப போடப்போற இந்தப் பாடல் என்னோட ஹனி பொண்ணுக்கு டெடிகேட் செய்றேன். நாளை மீண்டும் வேறொரு நினைவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன். நித்தில நினைவுகளில் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் நித்திலன்”

எனக் கூறி அப்பாடலை ஒலிக்கச் செய்தான் நித்திலன்.

 

உனக்கென உனக்கெனப் பிறந்தேனே

உயிரென உணர்வேனே கலந்தேனே

இதயத்தை இதயத்தில் இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே

 

ஆசையாய் இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவளின் இன்றைய இந்த இதமான மனநிலை நாளை முற்றிலுமாய் மாறப் போவதை உணராது இமைகளில் சுமக்கப்பட்ட கனவுகளுடன் இன்பமாய் உறங்கிப் போனாள் நிவாசினி.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்