
ஆராவின் அழுகைச் சத்தம் கேட்டதும் என்னவோ? ஏதோவென்று? பதறிப் போய் அவளிடம் சென்றான் அபூர்வன்.
அவளிருக்கும் நிலையில் தனித்து விடக் கூடாது என அன்று தான் முடிவெடுத்து இருக்க அதற்குள் அவளுக்கு என்ன துயரம் நேர்ந்ததோ?
விரைவில் அவளை அடைந்தவன் அங்குத் தனது மடியில் முகம் புதைத்து அழுது கொண்டு இருந்தாள் அவனது மனைவி.
“ஆராம்மா. என்னடா ஆச்சு? ஏன் அழுதுட்டு இருக்க?”
அவளிடம் பதிலில்லை. அவன் தன்னிடம் வந்து விட்டான் என்பது தெரிந்தும் கூட அவள் நிமிரவில்லை.
“அந்தக் காரிகா எதுவும் சொன்னாங்களா? அவங்களை நினைச்சு அழுகுறியா?”எனக் காரிகாவால் தான் இவளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்திருக்க வேண்டும் என யூகித்தான் அபூர்வன்.
ஆனால் அதில் விருட்டென்று நிமிர்ந்த ஆராவோ கணவனைக் கண்களாலேயே எரிக்கும் நிலையில் இருந்தாள்.
“எனக்கு என்ன ஆனாலும் அதுக்குக் காரிகாவைத் தான் தப்பு சொல்வீங்களா? உங்க நோக்கமே அது தானே? அவளே ரொம்ப பாவம்! ஆனா, ஊனா – ன்னா அவளையே குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க”என்றவளின் வார்த்தைகள் அபூர்வனுக்குத் தீயாய்த் தகித்தன.
அவனது ஆரா அல்லவா அவள்! எனவே அவளது கோபத்தைக் கூட ரசிக்கத் தான் தோன்றியது.
“சரி. அந்தப் பேச்சு வேண்டாம். நீ ஏன் அழுகுற?”என்று உடனே பேச்சை மாற்றி அவளது அழுகைக்கானக் காரணத்தைக் கேட்டான்.
“நான் எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கேனோ – ன்னுத் தோனுதுங்க?”எனச் சிறு குழந்தையாய் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே கூறியவளைப் புரியாமல் பார்த்து,
“என்னது? புரியலை ஆரா? நீ யாரைக் கஷ்டப்படுத்திட்டு இருக்கிற?”என்று அவள் கூறியது சரி வரப் புரியாததால் தெளிவாகக் கூறுமாறு வினவினான் அபூர்வன்.
“அது… நான் உங்களைக், காரிகாவை எல்லாம் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்னுச் சொல்றேன்! இவ்வளவு நாள் காத்திருந்த நமக்கு நம்ம குழந்தை வரப் போகுது! ஆனால் அதைக் கூட உங்களைச் சந்தோஷமாக கொண்டாட விடாமல் கொடுமைப்படுத்திட்டு இருக்கேன்லங்க?”என அவனிடம் பாவமாகக் கேட்டாள் ஆரா.
அவளுக்கு மசக்கையின் காரணமாக அவளது மனநிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதைப் புரிந்தவன்,
நாளை காலையில் சீக்கிரமே தன் பெற்றோரிடம் அவளைப் பத்திரமாக கூட்டிக் கொண்டு சென்று அவர்களிடம் அவளது பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணினான் அபூர்வன்.
அவன் யோசிப்பதைப் பார்த்ததும் ஆராவிற்கு முகம் சுனங்கிப் போயிற்று.
“பாருங்க! நீங்கப் பதிலே சொல்லாமல் இருக்கீங்க! அப்போ நான் சொன்னது தானே சரி?”என்றவளோ,
எங்கே அவன் உன்னால் தான் இப்படி இருக்கிறேன் என்று கூறி விடுவானோ! என்றப் பயமும், பதட்டமும் அவளது மனதை அரிக்க ஆரம்பித்தது.
ஆனால்,”அப்படி நினைக்காதே ஆரா! நீ எப்பவும் என்னைக் கொடுமை செஞ்சது இல்லை. நீ என்னோட தேவதை! இதை மட்டும் மனசில் வச்சுக்கோ. போதும்” எனக் கூறி அவளைச் சமாதானம் செய்து கட்டிலில் அமர வைத்து,
“உன்னோட மனநிலையோட ஏற்ற, இறக்கங்களால், நீ தான் ரொம்ப கஷ்டப்பட்றன்னு எனக்கு நல்லா தெரியும். நீ கொஞ்சம் அமைதியாக இரு! இரு” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டுச் சமையலறைக்குச் சென்று அங்கே இருந்து தம்ளரில் நீர் கொணர்ந்து வந்து மனைவியிடம் கொடுக்க,
“இங்கே நமக்குன்னு வச்சு இருக்கிற பாட்டிலில் தண்ணீர் இருக்கான்னுக் கூட பார்க்கலையேங்க நானு!”என்றவளைப் பாவமாகப் பார்த்தான்.
அவளே குற்ற உணர்ச்சியை உருவாக்கிக் கொண்டு இருக்கிறாளே!
தன் ஆராவை இவ்வாறு பார்ப்பது அபூர்வனுக்கு வேதனையாக இருந்தது.
“நீ முதல்ல தண்ணியைக் குடி”என அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு
தண்ணீரை மெதுமெதுவாக அவளுக்குப் புகட்டினான்.
அதைப் பருகியவள் அப்படியே அவனின் தோளிலேயே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் அழுதழுதே சோர்ந்து போய் விட்டதை அறிந்தவனோ, தானும் இன்னும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளவில்லையே என்று நினைத்தவன் மனைவியிடம் அதைக் கூறும் வகையில்,
“ஆராம்மா! நான் இன்னும் ஃபிரஷ் ஆகல. ஒரு கால் மணி நேரத்தில் வந்துட்றேன்மா. அது வரைக்கும் இந்தத் தலகாணியில் தலையைச் சாய்ச்சுப் படுத்து இரு”என்றவன் கூறியதைச் சமர்த்தாக கேட்டுக் கொண்டுத் தலையணையில் தலையைச் சரித்துப் படுத்துக் கொண்டாள்.
தானும் சில நிமிடங்களிலேயே தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வந்து விட்டிருந்தான்.
தான் வந்த நேரத்தில், தன் மனைவி இன்னும் உறங்காமல் விழித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதைக் கவனித்தான் அபூர்வன்.
அவளருகில் சென்று அமர்ந்து மெலிதாகப் புன்னகைத்தவனோ அவளது தலையைத் தன் மடியில் வைத்தான் அபூர்வன்.
ஆனால் தனது கண்களை மூடாமல் கணவனது ஸ்பரிசத்தை உணர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டாள் ஆரா.
அதற்குப் பிறகு அன்றிரவு நேரத்தில் அன்றைய நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைத்துச் சஞ்சலம் அடைந்தான் அபூர்வன்.
அதுவும் ஆரா படித்தக் கல்லூரியின் துறைத் தலைவர்,’காரிகா’என்று யாரும் அங்குப் படிக்கவில்லை எனவும், ஆரா மட்டுமே அங்குப் படித்திருக்கிறாள் எனவும் தெளிவாக அவனிடம் கூறி இருக்க இவனுக்கு அதைக் கேட்டுப் பக்கென்றாகி விட்டிருந்தது.
தான் காரிகாவைப் பற்றிய விவரங்களைக் கேட்டதும் ஆரா தர மாட்டேன் என்றதற்கு இது தான் காரணமோ? காரிகா என்று யாரும் இல்லையெனில் இவள் அவ்வப்போது செல்பேசியில் பேசும் நபர் யார்? அந்த நபருக்கு இவளிடம் என்னக் காரியம் ஆக வேண்டும்? காரிகா என்பவள் நிஜத்தில் இல்லை என்று தெரிந்து தான் அவளுடன் ஆரா பேசிக் கொண்டு இருக்கிறாளோ? இல்லை, காரிகாவிடம் பேசுவதாகத் தான் எண்ணிக் கொண்டு அவளிடம் உரையாடுகிறாளோ?
ஆராவின் மனநிலை பாதிக்கக் கூடாது என்ற முயற்சியைத் தாம் சற்றுத் தாமதமாக மேற்கொண்டு விட்டோமோ? என்றெல்லாம் அவனது எண்ணங்கள் அவனைச் சுழற்றி அடித்தது.
இப்போது உறங்காமல் விழித்து இருக்கும் ஆராவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பேச்சைத் தொடங்கும் விதமாக,
“ஆராம்மா. இந்தக் காரிகா…”என ஆரம்பித்தவனை முடிக்க விடாமல் இவள் பேசினாள்.
“ஆமாங்க. நானே உங்ககிட்ட சொல்லனும்னு நினைச்சேன். காரிகா கிட்ட நான் கர்ப்பமாக இருக்கேன்னு இன்னைக்குத் தான் சொன்னேன். அதைக் கேட்டு அவ ரொம்பச் சந்தோஷப்பட்டாள்! அப்பறம், நீ பத்திரமாக இரு! அபூர்வனையும் நல்லாப் பாத்துக்கோன்னு சொன்னால், உன்னோட மனநிலையோட ஏற்ற, இறக்கங்களை நல்லா கையாளுன்னு ஒரே அட்வைஸ் மழை தான்! உங்களை வார்த்தைக்கு, வார்த்தைப் பாசமாக அண்ணன்னு சொல்லிப் பேசினா. ரொம்ப நல்லப் பொண்ணுங்க காரிகா! நீங்க எப்போ தான் என் ஃப்ரண்ட்டைப் புரிஞ்சுக்கப் போறீங்களா தெரியலை!”எனத் தன்னிடம் சலித்துக் கொண்ட மனைவியைத் திகிலுடன் பார்த்தான் அபூர்வன்.
‘அப்படி ஒரு பொண்ணே இல்லையே! நீ யார்கிட்டடி பேசிக்கிட்டு இருக்கிற? உன்னை இந்த நிலைமையில் அதிர்ந்து பேசவும் முடியல! காரிகா கிட்டப் பேசாதேன்னு சொன்னாலும் கோபப்பட்ற! நான் என்ன தான் டி பண்றது?’ என்றெண்ணியவனோ,
இன்னும் விட்டால் இவளது மனநிலை மிகவும் மோசமாகி விடும் போலவே!
கர்ப்பமாக இருக்கும் வேளையில் ஆராவின் மனமும் பலவீனமானதாக மாறக் கூடாது என்ற எண்ணத்தாலேயே காரிகாவின் பேச்சை எடுக்காமல் இருக்கிறான்!
இந்த வேளையில் ஆராவின் நடவடிக்கைகள் படுபயங்கரமாக பயமுறுத்திப் பார்க்கும் பொழுது அபூர்வனுக்குக் கொஞ்சம் நம்பிக்கையின்மைத் தோன்றி விட்டிருந்தது.
இவளை நான் என்ன செய்து குணப்படுத்துவது? காரிகாவைப் போல் யாரையாவது நடிக்க வைத்து இவளிடம் பேச வைக்க வேண்டும் இந்த யோசனை சரியானதாக இருக்கும்.
அதேபோல் இப்போது ஆராவின் செல்பேசியை எடுத்து அதில் காரிகாவின் எண்ணைத் தெரிந்து கொள்ள நினைத்தான்.
அதற்குள் அவனது மடியிலிருந்தவாறே தலையை மட்டும் உயர்த்திக் கணவனிடம்,”அபூர்வன்! நான் அசந்து தூங்குற நேரத்துலயோ, குளிக்குற நேரத்துலயோ நீங்க என் மொபைலை எடுத்து அதில் காரிகாவோட நம்பரை எடுத்துடலாம்னு நினைக்காதீங்க! அது வேலைக்கே ஆகாது”என்று அறிவுறுத்தினாள்.
அதில் பேயறைந்தாற் போலத் திடுக்கிட்டு மனைவியைப் பார்த்தான்.
ஏனெனில் அவன் அப்போது தானே அதைப் பற்றி யோசித்து விட்டிருந்தான்!
உடனே அந்த எண்ணத்தைப் பற்றி இவள் எப்படி அறிந்து கொண்டாள்? என்று குழம்பிப் போனான் அபூர்வன்.
“உங்க முகத்தைப் பார்த்தாலே நீங்க அப்படி ஏதோ செய்ய யோசிச்சு இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது!”என்று கூறி முடித்து விட்டுத் தன் வாய் வலிக்கும் வரை அவனைப் பார்த்து நகைத்து முடித்து,
“இப்படி எல்லாம் யோசிப்பீங்கன்னுக் கூட தெரியாத முட்டாளாவாக நான் இருப்பேன் அபூர்வன்? உங்கப் பொண்டாட்டி ஒரு நல்லப் படிச்சப் பொண்ணு! என்னோட பகுத்தறிவுத் திறனோட அளவைப் பத்தி உங்களுக்கு உங்களுக்கேத் தெரியுமே! அப்பறம், இதைக் கண்டுபிடிக்க நான் துப்பறிவு செய்ற அளவுக்கு எல்லாம் போகத் தேவையில்லை. இது ரொம்ப சின்ன விஷயம் தான்! அதோட உங்களோட அடுத்த நடவடிக்கை இது தான்னு நான் எப்பவோ யூகிச்சிட்டேன். என்னோட மொபைலில் ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் வைக்கல! அதுக்குப் பதிலாகப் பாஸ்வேர்ட் தான் வச்சு இருக்கேன! ஏன்னா நான் தூங்குறப்போ நீங்க என் ஃபிங்கர் ப்ரிண்ட்டை வச்சு மொபைலை அன் லாக் பண்ணிடலாமே! இன்னொரு விஷயம், நான் செட் பண்ணி இருக்கிறப் பாஸ்வேர்ட்டை நீங்க என்னப் பண்ணினாலும் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை! ஏன்னா அது நம்மளோட கல்யாணமான தேதி, என்னோட பிறந்த தேதி, அல்லது உங்களோட பிறந்தநாள்ன்னு எதுவுமே இல்லை! அதை ஈசியாக கண்டுபிடிக்கவும் முடியாது”என்றவளோ தாகம் எடுக்கவும் தண்ணீரைப் பருகியவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே மேலே தொடர்ந்து,
“அப்பறம் இந்த மொபைலை நீங்க தான் எனக்கு வாங்கிக் கொடுத்திங்க! அதை வச்சு உரிமைக் கொண்டாட வேண்டாம்! அதே மாதிரி இப்போ இது என்னோட ஃபோன்! இது என்னோட சொத்து. இதைத் தொட்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லைன்றதை உங்க மனசில் வச்சுக்கோங்க!”என்ற ஆராவிற்கு அவளது கர்ப்பத்தினால் வரும் மனநிலை மாற்றம் தான் இது என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டு அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான் அபூர்வன்.
தான் இவ்வளவு சொல்லியும் இவன் இப்படி ஒரு எதிர்வினை ஆற்றுவதைக் கண்டுக் கோபமுற்றாள்.
ஆனால் அவனோ உள்ளுக்குள் நொறுங்கிப் போயிருப்பது அபூர்வனுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.
கூடிய சீக்கிரமே இவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் காண்பிக்க வேண்டும் இல்லையெனில் விடயம் விபரீதத்தில் முடிந்து விடும்!
அதனால் தாமதியாமல் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் நாளையே முன்னேற்பாடாக அனுமதி பெற்று விடவும் நினைத்தான் அபூர்வன்.
அவனது முன் சொடுக்கிட்ட ஆரா தன்னைப் பாருங்கள் என்று அவனைச் சைகையில் அழைத்தாள்.
“எனக்குப் பசிக்குது. சாப்பிடப் போகலாமா?”எனக் கணவனை இப்போது முற்றிலும் மாறுபட்ட அன்பான குரலில் கூப்பிட்டாள்.
அதில் பெருமூச்சு விட்டவனோ அவளுடன் சாப்பாட்டு மேசைக்குச் சென்றான் அபூர்வன்.
அவர்கள் இருவரும் எதிரெதிரே அமர்ந்து கொண்டுத் தங்களுக்கு வேண்டியவற்றைத் தாங்களே பரிமாறிக் கொண்டு உண்ணத் துவங்கினர்.
“ம்ம்ம்… என்னன்னுத் தெரிலங்க! இந்தச் சாம்பார் இன்னைக்கு ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கு! எப்பவுமே நான் சமைக்குறது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது+ ஆனால் வர, வர எனக்கு அதுக் கூடப் பிடிச்சுப் போச்சு”என்றவளைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தான் அபூர்வன்.
“சரி. நீங்க சொல்லுங்க. இன்னைக்கு ஆஃபீஸில் என்ன நடந்துச்சு? வேலை எப்படி போச்சு? மன அழுத்தம் ஆகலைல உங்களுக்கு?”என அவனிடம் இயல்பாகப் பேசி விசாரித்தாள் ஆரா.
“ரொம்ப நல்லாப் போச்சு! எதுவும் தொந்தரவாக இல்லை. குழந்தை வந்த நேரம், எனக்கும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கும் போது நான் ஏன் மன அழுத்தத்துக்கு ஆளாகப் போறேன்?”
என அவளிடம் நிதானமாக கூறினான்.
“ம்ஹ்ம். அதுவும் நல்லது தான்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம ரூமில் பேசிக்கிட்டு இருக்கும் போது உங்க முக பாவனைகளைப் பார்த்தேன். நார்மலாக இருந்துச்சே! உங்களோட நோக்கம் என்னன்னுத் தெரிஞ்சுக்கலாமா?”என்று கேட்டு விட்டுத் தன் கணவனைக் கூர்மையாகப் பார்த்தாள் ஆரா.
“ஒன்னுமே இல்லையே! என்னோட முக பாவனைகள் இயல்பாக இருக்கிறதைப் பார்த்ததும் உனக்கு நியாயமாகச் சந்தோஷம் தானே வரனும்? அதை விட்டுட்டு அதைப் பத்தி ஏன் சந்தேகமாக கேட்கிற?”என ஆராவின் வழியிலேயே அவளைப் பேச்சில் மடக்கினான் அபூர்வன்.
“எனக்குச் சந்தேகம் எல்லாம் இல்லை! ஜஸ்ட் தெரிஞ்சிக்கக் கேட்டேன்! ஒரு ஆர்வம் அவ்ளோ தான்! அதை தவிர, அதில் எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை மிஸ்டர் அபூர்வன்”என்றவளின் அந்த அபூர்வன் என்ற உச்சரிப்பில் இருந்த அழுத்தத்தைக் கவனித்து விட்டு அவளை மெச்சியபடியே உணவுண்டு விட்டதற்கான அடையாளமாகக் கைகளைக் கழுவிக் கொண்டு எழுந்து சென்றான் அபூர்வன்.
– தொடரும்

