விழி வழியே சரணடைந்தேன் -8

Loading

அத்தியாயம் 8

 

கன்னிப்புரம் கிராமத்து ஒதுக்குபுற சாலையில் இருந்த மதுகடையில் இரண்டு பாட்டில் மதுவை குடித்து மூர்ச்சையாகி இருந்தான் வேலு. 

 

“எப்பா வேலு.. ஏன்யா தினமும் உன்னோட ரோதனையா போச்சு.. இருட்டுற நேரம் ஆச்சு வீட்டுக்கு கிளம்புயா” என்று மதுக்கடை உரிமையாளர் அவனை எழுப்ப முயல “ஏய் விடு..” என்று தட்டி விட்டான் அவன். 

 

“ச்சை.. தினமும் இவனோட ஒரு பிரச்சனை.. டேய் போய் அவன் வீட்ல யாரையாச்சும் வர சொல்லு” என்று வேலைக்கார பையனை அனுப்பி விட சிறிது நேரத்தில் ஓடி வந்தாள் கனிஷ்கா. 

 

வந்தவளுக்கு அவனை தூக்க கூட முடியவில்லை. அவன் சிறிதும் அசையவில்லை. அவன் அந்த ஓனரை பரிதாபமாக பார்க்க அவளோடு அவனை தூக்கி பிடித்தவர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவனை வீட்டினுள் படுக்க வைக்க உதவியவர் கிளம்பி விட கதவை பூட்ட சென்றவள் கதவின் இடுக்கில் புடவை மாட்டி கிழிந்து விட அவசரமாக வேலுவை பார்த்தாள். அவனோ முழுபோதையில் தூங்கி கொண்டிருக்க நிம்மதி பெருமூச்சு விட்டவள் புடவையை மாற்றி விட்டு கீழே படுக்க அந்த நாள் என்னவோ அவனின் வாசம் இல்லாமல் நிம்மதியாக இருந்தது. 

 

ஆனால் அவளின் நிம்மதி எல்லாம் ஒரே நாள் தான் போலும். அடுத்த நாள் அவள் விழிக்கும் போது வேலு அந்த அறையில் இல்லை. விடியற்காலமே எழுந்து சென்றவன் இரவில் தான் வீட்டிற்கு வந்தான். இரவு சாப்பாட்டை சாப்பிட்டவன் அவள் கண் முன்னே அவளின் பெட்டியை துழாவினான். 

 

“மாமா என்ன பண்ணுறீங்க?” என்று அவனை தடுக்க வர அவளை தள்ளி விட்டவன் கடைசியில் தான் தேடியது கிடைக்கவும் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். 

 

“துரோகி..” என்று அவளை புரட்டி எடுத்தவன் அடுத்த நாள் இரவில் அவளின் முன் தெளிவாக கையில் ஒரு மருந்துடன் வந்து நின்றான். 

 

காலையில் விழிப்பு தட்டிய வேலு கீழே பார்க்க கனிஷ்கா தூங்கி கொண்டிருந்தாள். வீம்புக்காக அவளை திருமணம் செய்திருந்தாலும் அவள் மேல் சிறிதும் காதல் இல்லை அவனுக்கு. அவள் மூலம் அவன் ஆசை பட்டது வாரிசும் மோகமும் தான். ஆனால் அவள் மூலம் பெரிய ஜாக்பாட் அடிக்க போவதை அன்று தான் அறிந்தான். ஜன்னலின் பக்கம் யாரோ நிற்க வெளியில் வந்து பார்த்தவன் முன் பெரிய உருவம் கொண்ட ஒருவன் வந்தான். 

 

“யார் நீ? எதுக்கு என் வீட்டு பக்கம் நிக்குற?” என்று கேட்க அவனை தன்னோடு அழைத்து சென்றான் அவன். 

 

ஒரு கூரை வீட்டினுள் சென்றவன் வேலுவை கேசவன் முன் நிறுத்தினான். 

 

“சார் இவன் தான் வேலு..” என்று கூற அவனை மேலிருந்து கீழாக பார்த்தான் கேசவன். 

 

“இவன் எப்படிடா நம்ம வேலைக்கு சரி பட்டு வருவான்னு ஜார்ஜ் அனுப்பி வச்சாரு” என்று வேலுவை அங்கிருந்த இருக்கையில் அமர சொன்னான். 

 

“இங்கப்பாரு நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.. உன் பொண்டாட்டி கனிஷ்காவால ஒரு வேலை நடக்கணும்.. அது முடிஞ்சதும் உன்கிட்டேயே திரும்ப வருவா.. அதுக்கு ஒருகோடி பணம் உனக்கு தரோம்..” என்று சொல்ல ஒரு கோடியா என்று வாயை பிளந்தான் வேலு. 

 

அவன் வாழ்க்கை முழுசும் கஷ்டப்பட்டாலும் அதுல பாதி பணம் கூட சம்பாதிக்க முடியாதே.. பண ஆசை யாரை விட்டது? 

 

கேசவனை பார்த்தவன் “எல்லாம் சரி.. என்ன சொல்லி அவளை வீட்டை விட்டு வெளில கொண்டு வரது?” என்று கேட்க சிரித்தான் அவன். 

 

“ஏன்டா இவ்ளோ நாள் வாழ்ந்தும் அவள பத்தி ஒரு மண்ணும் தெரியாம இருந்திருக்க.. அவளை பத்தி விசாரிச்ச கொஞ்ச நேரத்துல எங்களுக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு.. வீட்ல அவளோட பெட்டியில் ஒருத்தன் அட்ரஸ் இருக்கும்.. அது அவளுக்கு காதல் சொன்னவன் முகவரி.. இனியும் உனக்கு சொல்லி தரணுமா? வேலைய முடிச்சிட்டு காசை வாங்கிட்டு கிளம்பு” என்று கூற கொலைவெறியுடன் வீட்டிற்கு வந்தான் வேலு. 

 

அவனுக்கு பிடிக்காத பெண்ணாக இருந்தாலும் இன்னொருவரின் முகவரி அவளுக்கு எதற்கு என்பதே மனதில் நிற்க பண ஆசையும் சேர்ந்து கொள்ள கட்டின மனைவியை விரட்டி விட முடிவு செய்து விட்டான். 

 

வீட்டிற்கு வந்தவன் கையில் கேசவன் சொன்னது போல் முகவரி அட்டை கிடைத்து விட அவளை வதைத்தவன் கையில் இருந்த மயக்க மருந்தை அவளுக்கு கொடுத்தான். அவனை தடுக்க அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட அவனின் கைகளில் மயங்கி சரிந்தாள் கனிஷ்கா. 

 

எவருக்கும் தெரியாமல் கேசவனிடம் அவளை ஒப்படைத்தவன் பணத்தை வாங்கி கொண்டு தன் வீட்டிற்கு சென்றான். அடுத்த நாள் காலையில் அவள் யாருடனோ சென்று விட்டதாக ஊரை நம்ப வைத்தவன் தனக்கு கிடைத்த பணத்தை வைத்து ஊர் சுற்றினான். 

      

“சார் பொண்ணு கிடைச்சிடுச்சு..” ஜார்ஜ் சொல்ல அந்த பக்கத்தில் சித்தார்த்துக்கு நம்பவே முடியவில்லை. 

 

“ஹே மேன் சொல்லியே ஒரு வாரம் தான் ஆச்சு.. அதுக்குள்ள எப்படி பிடிச்ச?” என்று ஆச்சர்யப்பட்டவன் ஜார்ஜை அவளுடன் அமெரிக்கா வர சொன்னான். 

 

பெண்ணை பாதுகாக்க ஆணை படைத்த கடவுள் அவள் கடைசி வரைக்கும் நன்றாக இருக்கவே கணவன் எனும் முறையில் அவளுக்கு கொடுத்தார். ஆனால் கனிஷ்கா விஷயத்தில் அந்த கணவனே பொய்யாகி விட எவனோ ஒருவனிடம் மாட்டி அவஸ்தை பட்டு கொண்டிருந்தாள். 

 

*****************

 

கனிகீதனின் வீடு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அவனின் தங்கை அனுவுக்கும் நண்பன் அதிரனுக்கும் கோலாகலமாக திருமணம் செய்து வைத்திருந்தான். இருவரின் காதல் தெரிந்தும் அனுவின் படிப்பிற்காக மட்டுமே தள்ளி வைத்திருந்தவன் இப்போது முழு மனதோடு அவர்களின் காதலை சேர்த்து வைத்தான். 

 

அனுவின் திருமணத்தை எடுத்து செய்ய எவரும் இல்லாததால் கனிமொழி தான் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தாள். அதை பார்த்த கீதனுக்கு ஒரு புறம் கஷ்டமாக இருந்தாலும் இன்னொரு புறம் பெருமையாக இருந்தது. 

 

அவள் ஏதோ எடுக்க போகும் நேரம் மடக்கி பிடித்தவன் “ரொம்ப அழகா இருக்கமா” என்று சொல்ல கனியின் முகம் செங்கொழுந்தானது. 

 

“விடுங்க.. இது எல்லாம் இப்போ தேவையா?” என்று விலக நினைக்க “எனக்கு அம்மா அப்பா அவங்க சொந்தக்காரங்க எல்லாம் இப்போ இல்லன்னு வருத்தமா இருக்குடா” அவனின் பேச்சில் கையில் இருந்த தட்டை கீழே வைத்து விட்டு அவனின் முகத்தை தன் கரங்களில் ஏந்தினாள். 

 

“அவளுக்கு அம்மா அப்பா இருந்திருந்தா கூட இவ்ளோ சந்தோசமா பீல் பண்ணிருப்பாளா தெரியாது.. இப்போ அவளோட சந்தோசம் நீங்க கொடுத்தது அதை எப்பவும் மறக்க மாட்டா.. அப்பா விட ஆயிரம் மடங்கு அன்பை கொட்டி அந்த ஏக்கமே இல்லாம அவளை வளர்த்திருக்கீங்க..” என்று அவன் நெற்றியில் முத்தமிட “கனி ப்ளீஸ்” என்று அவளை இறுக அணைத்து கொண்டான். 

 

ஆனால் அவனின் அணைப்பில் இருந்தவள் கண்களோ கண்ணீரை கொட்டி கொண்டிருந்தது. அவனின் வாழ்நாள் எண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்க அதை அறியாமல் இருக்கும் அவனின் நிலை இவளை உயிரோடு கொன்றது. 

 

தன்னை தேற்றியவள் “தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு அவ மேடையில் நிற்கும் போது அண்ணன் ரொமான்ஸ் பண்ணிட்டு நிக்குறது நல்லாவா இருக்கு?” என்று மேடைக்கு அழைத்து செல்ல அனு அவளின் காதுக்கு அருகில் “அண்ணி நாளைக்கு செக்கப் இருக்கு” என்றாள். அதை கேட்ட நொடி கனிமொழிக்கு சர்வமும் நடுங்கியது. 

 

இனி காலம் முழுவதும் ஒரு பயத்தில் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா என்று பயந்து கொண்டிருக்க கீதனின் சந்தோசம் இன்னும் வலியை கூட்டியது. 

 

“நான் பார்த்துக்குறேன் அனு.. இனி இதை பத்தி நினைக்காம அதிரன் கூட சந்தோஷமா வாழு” என்றவளை பார்த்து அனுவுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. 

 

இத்தனை நாள் தோன்றாத ஒன்று. அதிரனை திருமணம் செய்த போது அவனோடு நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்று அவள் மனம் விரும்பும் போது கனியும் அதை தானே எதிர்பார்த்து திருமணம் செய்திருப்பாள்.. ஆனால் அவளின் வாழ்க்கை சரி ஆகாத போது அவளுக்கு எப்படி சந்தோசமாக வாழ தோன்றும்? 

 

அவளின் மன ஓட்டங்களை அறிந்து கொண்ட கனிமொழியும் அனுவை தட்டி கொடுத்து விட்டு செல்ல போகும் அவளையே பார்த்து கொண்டிருந்தாள் அனு. 

 

எவரும் அறியாமல் தங்கள் அறைக்கு சென்ற கனிக்கு இப்போதே கதறி அழ துடித்தது. மேசையில் இருந்த அவர்களின் திருமண போட்டோவை எடுத்து பார்த்தவள் அதில் இருந்த தன் பிம்பத்தை உற்று பார்த்தாள். திருமணம் எனும் சந்தோசம் சிறிதும் இல்லாமல் எதையோ தொலைத்து விட்டது போல் போஸ் கொடுத்திருந்தாள். ஆனால் இன்று நிஜத்தில் அவளின் சொர்க்கம் தொலைந்து போவதை அவளால் ஏற்று கொள்ள தான் முடியவில்லை. 

 

கணவன் மனைவி பந்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதாம். ஆனால் அதே பந்தம் நிலைத்திருக்க முடியாமல் போவதற்கும் அந்த விதியை காரணம் சொல்ல முடியுமா என்ன? மனபாரத்துடன் வெளியே வர எதிரில் நின்றிருந்தான் கீதன். 

 

அவனை பார்த்த நொடி கட்டி அணைத்து கதற கைகள் பரபரத்தாலும் திரும்பி நின்று அழுந்த கண்களை துடைத்தவள் “என்னங்க வேணும்?” என்று கேட்டாள். 

 

அவளை கூர்ந்து பார்த்தவன் “இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க கனி? யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க இல்லையென தலையசைத்தாள். 

 

“அப்புறம் எதுக்குமா அழுற?” என்று கேட்க அதற்கு மேல் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் நெஞ்சில் சாய்ந்தவள் அழுது தீர்த்து விட்டாள். 

 

கீதன் பதறி போனான். இதுவரை நன்றாக இருந்தவள் திடீரென அழவும் சுற்றி பார்த்தவன் அவளை தங்கள் அறைக்குள் அழைத்து சென்று கதவை பூட்டினான். அவளை கட்டிலில் அமர வைத்து தண்ணீர் பாட்டிலை நீட்ட வாங்கி குடித்தவளுக்கு அதன் பிறகே நிதர்சனம் புரிந்தது. 

 

என்ன காரியம் செய்து விட்டாள்? இப்போது அவன் கேட்டால் என்ன பதில் சொல்வது? என்று யோசிக்க அவன் எதுவும் கேட்கவில்லை என்பதே ஆச்சர்யம். கட்டிலில் வாகாக அமர்ந்தவன் அவளை தன் மடியில் படுக்க வைத்து தலைகோத அந்த வருடலில் அவள் மனம் அமைதியடைந்து தூக்கத்திற்கு சென்றது. 

 

அவளை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தவன் அனுவிடம் கனி ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி விட்டு வெளியே சென்றவன் இரவில் தான் வீடு திரும்பினான். அந்நேரத்திற்கு கனி எழும்பியிருக்க அனு-அதிரனின் முதலிரவுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். 

 

“நீ ஸ்ட்ரெஸ் பண்ண வேணாம் கனி.. அதிரன் அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிட்டான்” என்று கூற புரியாமல் பார்த்தாள். 

 

“இதெல்லாம் பொண்ணு வீட்ல தானே..” என்று கேட்க அவன் பார்த்த பார்வையில் அவள் வாய் தானாக மூடி கொண்டது. 

 

“பொண்ணு வீட்ல தான் பண்ணனும்.. பட் இங்க ரெடி பண்ண வேண்டிய பொண்ணோட அண்ணிக்கு வேற வேலை இருக்காம்” என்று அவளை நெருங்க “எனக்கு வேற வேலை எதுவும் இல்லையே..” என்று யோசித்தவள் அவன் பார்வையில் பின்னோக்கி சென்றாள். 

 

“உனக்கு நியாபகம் இருக்காது.. வேலை குடுக்க வேண்டியவனே நான் தானே” என்றவன் அலேக்காக அவளை தூக்க “விடுங்க..” என்று திமிறினாள் அவள்.

 

“ஏன் கனி இந்த சாக போறவன் கூட வாழ உனக்கு கஷ்டமா இருக்கா?” அவனின் கேள்வியில் அதிர்ந்து அவனை பார்த்தாள் கனிமொழி. 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்