விழியால் தொட்ட அழகே – 28

Loading

அத்தியாயம் – 28

 

“அம்மா அம்மா” வாசலில் புதிதாக குரல் கேட்கவே, வீட்டு வெளிப்புற தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்த நித்யா வந்து பார்க்க, ரிஷியின் காவல்துறை ஓட்டுனரான ராமையா தான் நின்று கொண்டிருந்தார், அவரை இருமுறை பார்த்திருந்த காரணத்தினால் அவர் யாரென்ற அடையாளமும் நித்யாவிற்கு தெரியவர, அவரருகில் வந்தவள்,… “வாங்கண்ணா உள்ளே வாங்க” என பரிவோடு அழைத்தாள்…

“இருக்கட்டும்மா, அது… அது வந்து, வீட்ல யாரும் இல்லயாம்மா” அவளை ஒரு முறை அளவெடுத்தவர், தனக்குள்ளிருந்த பதட்டத்தை மறைத்து கேள்வி எழுப்ப,… “பாட்டியும் தாத்தாவும் உள்ளே இருக்காங்கண்ணா, என்ன விஷயம்” என்றாள்,….

“அது வந்தும்மா, நீங்க இருக்கிற நிலமையில உங்க கிட்ட சொல்ல கூடாதுனு தான் தோணுது, ஆனா சொல்லாமலும் இருக்க முடியலமா” என்றவரின் குரலில் தற்போது பதட்டம் அதிகமாய் தெரிய,… “என்னாச்சுண்ணா, ஏதாவது பிரட்சனையா” அவளுக்கு ஏனோ அப்போது தன் கணவன் தான் கண்முன் வந்து தோன்றினான்,…

“பிரட்சனை தான்மா, அது வந்து சார், ரிஷி சார்க்கு பெரிய பிரட்சனைமா” என ஆரம்பித்தவர்,… “இன்ஸ்பெக்டர் கார்த்திக் இருக்காருலமா, அவர் போன்ல பேசுனத தற்செயலா கேட்டேன், கார்த்திக் யார் கூடவோ கூட்டு சேர்ந்து ரிஷி சாரை கொல்ல போறதா பேசிட்டு இருந்தாரு, கேட்ட எனக்கு ரொம்ப அதிர்ச்சியா போச்சு, சார் கூட அவ்வளவு அந்நியோன்யமா பழகுனவரு இப்போ அவரோட உயிரையே பறிக்க பார்க்கிறாரு, நான் மறைஞ்சு நின்னு கேட்டதை கார்த்திக் கண்டுபிடிச்சிடாரு, என்னை அடிச்சி இந்த விஷயம் வெளிய தெரிய கூடாதுனு மிரட்டினாரு, மீறி தெரிய வந்தா என் பொண்ணை கடத்தி என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு பயமுறுத்தினாருமா, எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல, மேலதிகாரி கிட்ட போய் சொல்ல எனக்கு தைரியம் இல்லமா, மனசு கேட்காம தான் உங்க கிட்ட சொல்ல ஓடி வந்தேன்” என்று கூறி அவர் கண்ணீர் விட, இங்கு நித்யாவிற்கு அவர் கூறியதை கேட்டு நெஞ்சமெல்லாம் பதறியது,….

அவள் கணவனின் உயிருக்கு ஆபத்து, அவளால் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூட யோசிக்க முடியவில்லை, கைகால்கள் எல்லாம் நடுங்க, தடுமாறி விழ போனவளை, “பார்த்துமா” என அவளது கரம் பற்றி நிற்க வைத்தவர்,… “நீங்க இருக்க நிலமைக்கு இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் சொல்ல கூடாது தான், ஆனா எனக்கு வேற வழி தெரியலமா, உங்களுக்கு தெரிஞ்ச யாராவது இருந்தா உதவிக்கு கூப்பிடுங்கமா” என அவரும் பதட்டம் கொள்ள, தன்னை சமன்படுத்திக் கொண்டு அவரை நோக்கியவள்…. “அண்ணா,… எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா?” என்றவளை நேர்கொண்டு பார்த்தவர், அவள் கூறியதை கேட்டு, வேகமாக யாருக்கோ போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தார்,….

“அம்மா… கருணா,… நீங்க சொன்ன கருணா எந்த ஏரியால இருக்காருன்னு தெரிஞ்சு போச்சுமா, அவர்கிட்ட உதவி கேட்டா பண்ணுவாரா சரிமா அப்படினா நான் அவர் கிட்ட போய் பேசுறேன்” என்று நகர முற்பட்டவரை நிறுத்தி,… “நானும் உங்க கூட வரேன்” என்று கூறி அவர் மறுக்க மறுக்க அவருடனே புறப்பட்டாள் நித்யா,….

“இந்த மாதிரி ஒரு நிலமையில நீங்க வீட்ல தானமா இருக்கணும், நான் சொல்ல சொல்ல கேட்காம என்கூட வந்துடீங்க, இப்போ நாம போற போற இடம் கூட ஆபத்தானது தான்மா, ரவுடி கும்பலுங்க வசிக்கிற இடம்மா, நீங்க ஆட்டோலயே இருங்கமா, நான் போய் நீங்க சொன்ன கருணா கிட்ட பேசி கூட்டி வரேன்” என ராமையா நித்யாவின் மீதுள்ள அக்கறையில் கூற, அவள் கேட்கவில்லை, மனம் முழுக்க பயமும் பதட்டமும் நிரம்ப கருணா வசிக்கும் ஏரியாவிற்கு வந்து சேர்ந்தவள், ஆட்டோவிலிருந்து இறங்கியதும்,… “அண்ணா,… என் மேல உள்ள அக்கறையில தான் நீங்க சொல்றீங்கன்னு புரியுது, ஆனா என் புருஷனை முழுசா கண்ணால பார்க்கிற வரைக்கும் என் மனசுல கொதிச்சிட்டிருக்க பயம் குறையாது, பாட்டி தாத்தா கிட்ட சொல்லாமலேயே வந்துட்டேன், என்னை காணோம்னு பயப்படுவாங்க, அவங்க கிட்ட நடந்த எதையும் சொல்லி பயமுறுத்தாம ஒரு வேலையா நான் வந்திருகேன்னு கொஞ்சம் பொறுமையா பேசுங்கண்ணா” என அந்த மூத்தவர்களின் உடல்நலன் கருதி கெஞ்சலுடன் வேண்டுகோள் வைத்தவள், கருணா வசிக்கும் வீட்டை நோக்கி நடந்தாள்….

சந்து சந்தாக புகுந்து புகுந்து போக வேண்டியதிருந்தது அந்த ஏரியாவிற்குள், ஆட்டோ உள்ளே வரைக்கும் போகாது என்பதால் அவள் சற்று முன்னதாகவே இறங்கி விட்டாள், செல்லும் வழியெங்கும் பல நபர்கள் நின்றனர், அவர்களை பார்க்கவே பயமான தோற்றத்தில் காணப்பட்டனர், நித்யா அவர்களை பார்த்து பயம் கொள்ளும் நிலையிலெல்லாம் இல்லை, ராமையா சொன்ன இடத்தில், கருணாவின் வீட்டை நோக்கி தான் நடந்து கொண்டிருந்தாள் தன் நிறைமாத வயிற்றை தூக்கி பிடித்துக் கொண்டு, வயிற்றில் கொஞ்சமாக வலி வேறு எடுத்தது, ஆனால் அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை,…

கருணா தங்கிருக்கும் வீடு வந்து சேர்ந்தாள், அந்த வீடு கூட சந்து சந்தாய் நுழைந்து போகும் அளவிற்கு தான் இருந்தது, சில பேர் அவளை வெறிக்க வெறிக்க பார்க்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தாள், “ஏய் யார் நீ” ஒருவன் அதிகார குரலில் அவளை வழிமறைத்து நின்று கேட்க, இத்தனை நேரம் யாரிடமாவது உதவி கேட்கலாமா என்ற பரிதவிப்புடன் வந்தவள் அவனிடம் கேட்டாள்,… “கருணா,.. கருணாவை நான் பார்க்கணும்” என்றாள்,…

அவளை நெற்றி சுருங்க பார்த்தவன்,… “கருணா அண்ணாவையெல்லாம் பார்க்க முடியாது, கிளம்பு கிளம்பு” என விரட்ட,… “தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுங்க, நான் கருணாவை பார்க்கணும்” அவளிருந்த நிலையும், அவளது கண்ணீரையும் கண்டதும் அந்த ரவுடிக்கே மனது உருக்க,… “உள்ளே இருக்காரு” என வழி காட்டினான்,….

வேகமாக நடந்தவளுக்கு இப்போது வயிற்றில் கொஞ்சம் வலி அதிகமானது போல் இருந்தது, இப்போதும் அவள் பொருட்படுத்தவில்லை, நடந்தாள் கருணாவை தேடி, மீண்டும் ஒருவன் வந்து வழிமறைத்தான்,… “நீ எதுக்காக வந்த” என்றான் நித்யாவை பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பவன் போல,…

“கருணாவை பார்க்கணும்” அவள் கலங்கிய விழிகளுடன் கூற,… “அதெல்லாம் பார்க்க முடியாது, இங்கிருந்து போ” என்று அவன் அதட்டலுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே, சற்று நிமிடத்திற்கு முன்பு அவள் மேல் பரிதாபப்பட்டு வழிகூறியவன், வந்து நின்றான்,….

“கருணா அண்ணாவை பார்க்க வந்திருக்கு இந்த பொண்ணு” அவன் கூற,… “தெரியும், இவ யார்னு உனக்கு தெரியாதுல, நான் சொல்றேன், முதல்ல இவளை வெளியே அனுப்பு” என்றான் கருணாவின் நெருங்கிய அடியாள் ஒருவன்,…

“பாவமா இருக்குண்ணா, ஏதோ பிரட்சனை போல” அவன் கூற,…. “தயவு செஞ்சு வழி விடுங்க, நான் கருணாவை பார்க்கணும், என் புருஷன் உயிருக்கு ஆபத்து” அவள் கைகூப்பி கெஞ்சி கேட்க,…. “அதெல்லாம் பார்க்க முடியாது, வெளியே போ, டேய் இவளை வெளியே பிடிச்சு தள்ளு” என அவன் கோபத்தில் கத்திய சத்தம், உள்ளேயிருந்த கருணாவின் காதிலும் விழ,… “என்னடா சத்தம்” என கேட்டபடி வந்தவன் முதலில் கண்டது, மேடிட்ட வயிறுடன் அழுது வீங்கிய முகத்துடனும் நின்ற நித்யாவை தான்,….

‘இவள் இங்கு என்ன செய்கிறாள்’ என வேகமாக அருகில் வந்தவன்,…. “இங்க ஏன் வந்த, இது என்னமாதிரி இடம் தெரியுமா” கருணா அவள் மீதுள்ள அக்கறையில் கடினமான குரலில் வினவ, கருணாவை கண்ட நித்யா ஓவென்று அழுது விட்டாள்,… அவளது அழுகையை பார்த்து அவளிடம் கோபமான பேசியவன் கூட ஒருநிமிடம் ஸ்தம்பித்து நின்றுவிட, கருணாவோ, அவளது அழுகையில் பயந்து பதறி போய்…. “ஏய் ஸ்ரீ, என்ன என்னாச்சு” என்றான்,…

அதற்கு மேல் பொறுக்காமல் ராமையா கூறியதை பற்றி கூறி முடித்தவள்… “என் புருஷனை காப்பாத்து, உன்னை மட்டுமே நம்பி வந்திருக்கேன், அவருக்கு ஒன்னுன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன், தயவு செஞ்சு என் மித்துவை காப்பாத்தி கொடு” என அவனது காலிலேயே விழுந்து விட, பதறியவன், அவளை தோளை பற்றி தூக்கி நிற்க வைத்து,…. “உன் புருஷனுக்கு எதுவும் ஆகாது” என அவளுக்கு வாக்களித்து விட்டு, தன் ஆள் ஒருவனுக்கு கண்ஜாடை காட்ட, போனுடன் நகர்ந்தவன், சற்று நிமிடத்தில் வந்து கருணாவிடம் ஏதோ கூற,… “ஸ்ரீ,… உன் புருஷன் இருக்க இடம் தெரிஞ்சு போச்சு, நீ வீட்டுக்கு போ, நான்… நான் அவரை அழைச்சிட்டு வரேன்” என்று கூற, அவள் கேட்கவில்லை,… “நானும் வருவேன், என் மித்துவை பார்த்தா தான் என்மனசு நிம்மதியாகும்” என ஒத்தகாலில் நிற்க, நேரத்தை கடத்த விரும்பாதவனும், வேறுவழியின்றி அவளையும் தன்னோடு அழைத்து சென்றான்,…

கருணா மற்றும் நித்யாவுடன் கருணாவின் நான்கு ஆட்களும் புறப்பட, சற்று நிமிடத்தில் எல்லாம் ரிஷி தாக்கப்பட்ட அதே குடோனிற்க்கு வந்து சேர்ந்தனர், நித்யாவிற்கும் வேறு வலி அதிகமாகி கொண்டே போனது, அவளது முகம் சுணக்கத்தை வைத்து கேட்ட கருணாவிடமும்… “ஒன்றுமில்லை” என்று மறைத்து கூறி, இவ்விடம் வரை வந்து சேர்ந்து விட்டாள்,….

எங்கு பார்த்தாலும் சடலங்கள் தான் காணப்பட்டது அவ்விடத்தில், மண்ணில் ரத்தம் தெறிக்க ஒவ்வொரு மனிதர்களும் வீழ்ந்து கிடப்பதை பார்த்து நித்யாவிற்குள் பயம் அதிகமாகி, மூச்சு முட்டி, நிலைதடுமாறி விழ போக, கருணா தான் தாங்கி நிறுத்தினான்,

“இதுக்கு தான் வர வேணாம்னு சொன்னேன்” என்றவனிடம்,.. “என் மித்து, அவருக்கு ஒன்னும் ஆகிருக்காதுல” என்று கேட்டவள், அதற்கு மேலும் முடியாது என்பது போல கத்தி கதறினாள் திடீரென்று வயிற்றில் ஏற்பட்ட அதீத வலியால்,…

கருணா தான் பயந்து போனான்,… “ஸ்ரீ என்னாச்சு என்ன பண்ணுது” என்றவனின் கரங்களிலிருந்து அவள் சமைந்து விழ பார்க்க, அவளால் நிற்க முடியவில்லை என்பதை அறிந்தவனும் ஓரிடத்தில் அவளை அமர வைத்தான்,….

“ஸ்ரீ ஸ்ரீ” அவன் பதற,…”கருணா,… ப்ளீஸ் என் மித்து, என் மித்து எனக்கு  வேணும்” அவள் வலியிலும் அவள் கணவனை தேட,… “உன் மித்துக்கு எதுவும் ஆகாது, கடைசியா அவர் இங்க தான் வந்திருக்கிறதா தகவல் தெரிஞ்சிருக்கு, அவர் இங்க தான் இருப்பாரு, டேய் போய் தேடுங்கடா” நித்யாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு, தன் ஆட்களிடமும் ஏவி விட, அவர்களும் ஓடினர் ரிஷியை தேடி….

“ஸ்ரீ,…. உனக்கு வலிக்கிதா, தயவு செஞ்சு எழுந்து வா, ஹாஸ்ப்பிடல்ல போலாம்” அவனுக்கு முதலில் மருத்துவமனை செல்வது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது,…

“இல்ல,… என் மித்து இல்லாம நான் எங்கேயும் வர மாட்டேன்” என்றவளின் கால்கள் வழியாக குருதி அருவியாய் வெளியேற,, அதை கண்டு பயந்து போன கருணா….”ஸ்ரீ ரத்தம், ஐயோ கடவுளே” என தலையில் கைவைத்தவன்,…. “கருணா,… என் குழந்தை, என் குழந்தைக்கு அவ அப்பா வேணும்” என்றவள் வலியில் பெருங்குரலெடுத்து கத்த, நாடிநரம்பெல்லாம் ஆட்டம் கண்டுவிட்டது கருணாவிற்கு,….

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்