Loading

அத்தியாயம் 24

 

அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது விஜயனிற்கு. இருந்தும் எழ மனமின்றி படுத்துக் கிடந்தான். 

 

மூன்று மாதங்களிற்கும் மேலாய் சஞ்சனாவுடன் இருந்து அவளுக்காக என்று பணி செய்து பழகிய உடல், தற்போது அதைத் செய்வதற்கு அவசியம் இல்லாததால் அந்த நேர இடைவெளியினைக் கடத்த வழி தெரியாது தவித்தது.

 

‘வேகமா எழுந்திருச்சு, அவசர அவசரமா வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்ல, இப்ப. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்!’ என மூளையும் மனதும் அறிவுறுத்தினாலும், தேகம் அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்தது.

 

ஒரு பெருமூச்சை வெளிவிட்டு எழுந்தான். நிதானமாய் தயாராகி வந்த மகனை எதிர் கொண்டார், சிவநாதன்.

 

“என்னப்பா? இவ்வளவு காலையிலயே எழுந்திரிச்சிட்டீங்க?” என வாய் வரை வந்த சொற்களை வெளிவிடாமல், கேள்வியாய் நோக்கினான்.

 

அவரிற்குமே விஜயனிடம் கேட்க சில வினாக்கள் இருக்க, “என்ன, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?” என்றார்.

 

“தூக்கம் வரலப்பா.”

 

“தூக்கம் வரலயா? இல்ல, இவ்வளவு நாளும் கூட இருந்தவ இல்லாம தூங்க முடியலயா?”

 

அவன் மறுமொழி உரைக்காது தலைகுனிந்து நிற்க, “அந்தப் பொண்ணு எங்க விஜய்.?”

 

தந்தையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவன், “அவளோட பேரண்ட்ஸ் வீட்டுக்குப் போயி இருக்கா அப்பா.”

 

“நீங்களா தான கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க? இப்ப இந்த பொண்ணு போனா, அவங்க வீட்டுல ஏத்துப்பாங்களா?”

 

“சஞ்சுவோட பேரண்ட்ஸ் அப்படி ஒன்னும் பிடிவாதம் பிடிக்கிறவங்க இல்ல வசந்தி அக்காக்கிட்டப் பேசுனேன். அவ, அங்கதான் இருக்காளாம். நல்லா பார்த்துக்கிறாங்கனு தான் சொன்னாங்க.”

 

“ஓ.. சரி. உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ன பிரச்சனை?”

 

“பிரச்சனைனு எதுவும் இல்லப்பா.” என அவன் சமாளிக்க முயற்சிக்க, “நீங்களா தான் முடிவெடுத்து கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க. ரெண்டு பக்கமுமே யாரும் உங்களுக்கு ஆதரவா நிக்கல. அப்படி இருக்கும் போது.. உனக்கு அந்தப் பொண்ணும், அவளுக்கு நீயும் மட்டும் தான சப்போர்ட்? 

 

ஒரு இக்கட்டான சூழ்நிலைனு வரும் போது, உங்களுக்கு நீங்களே தான ஆதரவு தந்துக்கணும்? ஆனா, இப்ப அப்படி நடக்காம.. அந்தப் பொண்ணு பெத்தவங்களைத் தேடிப் போயிருக்குனா.. உங்களால சால்வ் பண்ண முடியாத அளவுக்கு ஏதோ பிரச்சனை வந்திருக்குனு அர்த்தம். ஆனா, நீ ஒன்னும் இல்லனு சொல்லுற? இதை, நம்புவேன்னு நினைக்கிறியா? நான், வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சவன்டா. இதுமாதிரி எவ்வளவு பார்த்து, கடந்து வந்திருப்பேன்?”

 

“ஸாரிப்பா..”

 

“சரி சொல்லு. என்ன பிரச்சனை?”

 

“பெருசா எதுவும் இல்ல. நான் பார்த்துக்கிறேன்.”

 

“நீ பார்த்த இலட்சணம் தான் தெரியிதே? அந்தப் பொண்ணு திடீர்னு கிளம்பிப் போயிருக்கா.”

 

தந்தையின் சொற்களில் மனம் கனத்திட, “நான் தான்ப்பா, தப்பு செஞ்சிட்டேன்!” எனக் குரல் கரகரக்க நடந்ததை உரைத்தான்.

 

“தப்பு யாரு செஞ்சாங்கிறது விஷயம் இல்ல. அதைச் சரி செய்ய, அடுத்ததா நாம என்ன ஸ்டெப் எடுத்து வைக்கிறோம்கிறது தான் முக்கியம்!”

 

“இல்லப்பா.. இப்போதைக்கு நான் எதுவும் செய்யிறதா இல்ல. கொஞ்ச நாள் ஆகட்டும். இந்த இடைவெளி, எங்களுக்கு நடுவுல இருக்க உறவுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்னு நம்புறேன்.”

 

“ம்ம்.. சரிதான். ஆனா, நீ நினைக்கிற மாதிரியே அந்தப் பொண்ணும் யோசிக்கணும்ல.?”

 

வலிந்து புன்னகைத்தவன், “ஷீ லவ்ஸ் மீ அப்பா. சஞ்சுவால நிச்சயம் என்னை விட்டு ரொம்ப நாளைக்கு விலகி இருக்க முடியாது. இப்போதைக்கு அவளோட எதிர்பார்ப்பை ஈடு செய்யிற அளவுக்கு, நான் என்னோட தகுதியை வளர்த்துக்கிறது தான் முக்கியம்!”

 

மகன் உரைத்ததை தலை அசைத்து ஏற்றுக் கொண்ட சிவநாதன், “எனக்கு உன்மேல நிறைய வருத்தங்கள் இருக்கு தான் விஜய். அதுக்குனு நான் பெத்த பிள்ளையோட வாழ்க்கை எப்படியோ போகட்டும்னு விட முடியாது என்னால. எப்பவாது இந்த அப்பன்கிட்ட எதுவும் வேணும்னா, கேளு. சரியா?”

 

கலங்கிய கண்களுடன் தலை அசைத்த விஜயன், “தேங்க்ஸ் ப்பா. நீங்க மனசு கஷ்டப்படுற மாதிரி, இனி நான் நடந்துக்க மாட்டேன்!” எனத் தந்தைக்கு வாக்களித்து விட்டு, திட மனதுடன் தனது வாழ்வின் அடுத்த படிநிலைக்கு ஆயத்தம் ஆனான்.

 

*

 

தேநீர் விடுதி ஒன்றில் எதிரெதிரே இரு இருக்கைகள் இருந்த மேஜையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர் நவனும் ரம்யாவும்.

 

“எதுக்குடா என்னை கூப்பிட்டு இப்படி உட்கார வச்சிருக்க?”

 

“முதல்ல டீயைக் குடி சொல்லுறேன்.” என்றவன் அங்கு பணி செய்பவரைப் பார்க்க, அடுத்த இரண்டாவது நிமிடம் இருவருக்குமான தேநீரை அவர்களின் முன்பு வைத்துவிட்டு சென்றான் அவன். 

 

அதில் இரு மிடறை அருந்தியவள், “ம்ம். இப்ப சொல்லு.”

 

“கனிக்கு பர்த்டே வருது. என்ன கிஃப்ட் வாங்கித் தரலாம் ஐடியா சொல்லேன்?”

 

“உன்னோட வொய்ஃபுக்கு வாங்கித் தர்றதுக்கு, என்கிட்ட ஏண்டா கேட்கிற?”

 

“என்ன தர்றதுனு தெரியல இம்சை. அதான் கேட்கிறேன்.”

 

“நான் இதுவரை அவக்கூட பழகிப் பார்த்த வரைக்கும் சிட்டி கேர்ள்ஸ் மாதிரி இல்ல. கனிக்கு என்ன தேவை, எது பிடிக்கும்னு முதல்ல பாரு.”

 

“அவளுக்குத் தேவைனு பெருசா எதுவும் இல்ல ரமி. வீட்டுல வாஸிங் மிஷின் இருக்கு. ஆனாலும் ஊர்ல வேலை செஞ்ச பழக்கத்துக்குக் கையில தான் தினமும் துவைச்சுப் போட்டுட்டு இருக்கா. மத்த வேலையிலயும் அப்படித்தான், ஷார்ப்பா இருப்பா.”

 

சிரித்த ரம்யா, “அநியாயத்துக்கு உன்னோட பொண்டாட்டி நல்லப் பொண்ணா இருக்காளேடா?”

 

“ஓய் இம்சை, என்ன நக்கலா?”

 

“நக்கல் எல்லாம் இல்ல நவா. சீரியஸா தான் சொல்லுறேன்.”

 

“அது எனக்கே தெரியும். நீ விஷயத்துக்கு வா!”

 

“ம்ம்..” என இரண்டு நொடிகள் சிந்தித்தவள், “பேசாம கனிக்கு வாட்ச் வாங்கி பிரசண்ட் பண்ணு.”

 

“என்னது வாட்சா?”

 

“எதுக்குடா இப்படி ஷாக் ஆகுற?”

 

“எதுக்கு வாட்ச்? அவ என்ன வேலைக்கா போறா?” அதுனால வேற ஏதாவது யோசி!”

 

நண்பனை ஒரு பார்வைப் பார்த்த ரம்யா, “நவா, டூ யூ லுக் டவுன் ஆன் ஹெர்?”

 

“ஹேய்.. அப்படி எல்லாம் இல்ல ரமி. கனிக்கு வாட்சால என்ன யூஸ்? அதான் வேணாம்னு சொன்னேன்.”

 

கைக்கடிகாரம் கட்டி இருந்த தனது வலது கையை அவனின் முன் நீட்டியவள், “சரி சொல்லு, இதால எனக்கு என்ன யூஸ்.?”

 

“இந்த வாட்ச்ல தான, நீ டைம் பார்க்கிற?”

 

“இது இப்ப என் கையில இல்லேனா, என்ன ஆகும்?”

 

நவன் பதில் உரைக்காது விழிக்க, “டைம் தெரிஞ்சுக்க வேற வழியே இல்லையா? இருபத்து நாலு மணி நேரமும் கையில மொபைல் இருக்கு தான? ஸீ.. வாட்ச் டைம் மட்டும் பார்க்கிற மிஷின் இல்ல. அது எனக்கு லுக்கையும் கான்ஃபிடன்ஸையும் தருது. புரியிதா.?”

 

அவன் அமைதியாய் பார்க்க, “நாம கொடுக்கிற கிஃப்டால என்ன யூஸ்னு, நேரோ மைண்டா யோசிக்காத. அதால கிடைக்கக் கூடிய அந்த அனுபவம் என்னனு பாரு.”

 

“ஓகே தான். பட் கனி வாட்ச் கட்டுவாளானு தெரியலயே?”

 

“நீ கட்டி விடு. கத்துக் கொடு. அதுல டைம் பார்க்க, பழக்கப் படுத்து. அவ ஷார்ப்பான பொண்ணு. எதையும் டக்குனு புரிஞ்சுக்கிட்டு, அடாப் பண்ணிப்பா.”

 

“ம்ம்.. தேங்க்ஸ் இம்சை.”

 

ரம்யா சிரித்திட, “சரி, உன்னோட ஆளு என்ன சொல்லுறாரு.?”

 

“ப்ச்ச்.. இப்ப எல்லாம் என்கிட்ட சரியா பேசுறது கூட இல்லடா.”

 

“ஏன்.?”

 

“ஏற்கனவே கதிர் இண்ட்ரோவெர்ட். சாதாரணமா பேசுறதுக்கே யோசிப்பான். இப்ப.. இந்த ஹாஸ்பிடல் டிரீட்மெண்டுனு போறதால ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ்ஸா பீல் பண்ண ஆரம்பிச்சிட்டான். ஏதாவது பேசுனா, நாமளும் பதிலுக்கு பேசி அவனோட மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். ஆனா, நான் பேசுறதுக்கு கூட ரியாக்ட் பண்ணாம இருக்கறவனை எப்படி ஹேண்டில் பண்ணுறது? புதுசு புதுசா ஏதேதோ செஞ்சுக்கிட்டு இருக்கான். இப்ப எல்லாம் லைஃபையும் எங்க ஃப்யூச்சரையும் நினைச்சா ஒரு மாதிரி பயமா இருக்கு நவா.”

 

“ஹேய்.. ரிலாக்ஸ்.. விடு. எல்லாம் சரியாகிடும். அதான், நான் உன்கூட இருக்கேன்ல?” எனத் தோழிக்குத் தைரியம் தந்து சமாதானம் உரைத்தவன் தேநீருக்கான பணத்தை செலுத்தி விட்டு வர, இருவரும் இணைந்து இல்லத்திற்கு கிளம்பினர்.

 

*

 

கணவருக்கு உணவைப் பரிமாறினார் கல்யாணி.

 

தட்டை ஒருமுறை பார்த்த நடராஜன், “சஞ்சு சாப்டுட்டாளா?”

 

“ம்ம். சாப்டுட்டா.”

 

“பேசிப் பார்த்தியா அவக்கிட்ட?”

 

“பேசுனேன். ஆனா, பதிலே சொல்ல மாட்டிறா.”

 

நடராஜன் அமைதி காக்க‌, “இப்ப என்னங்க செய்யிறது?”

 

“முதல்ல அவங்களுக்கு இடையில என்ன பிரச்சனைனு தெரிஞ்சுக்கணும். அப்பதான் அதை சரி செய்யிறதுக்கான வழியையும் யோசிக்க முடியும்.”

 

“ம்ம்.. நான் வேணும்னா அந்தப் பையனோட அக்கா பக்கத்து தெருவுல குடி இருக்காங்க இல்ல? அவங்கக்கிட்டப் பேசி பார்க்கவா?”

 

“பேசு. என்ன நடந்துச்சுனாவது தெரிஞ்சுக்கலாம்.”

 

“ஏங்க.?”

 

“என்ன கல்யாணி?” என வினவியவாறு அவர் மனைவியைக் கேள்வியாய் நோக்க, “ஒருவேளை நம்மளால சரி செய்ய முடியலேனா?”

 

பெண்ணின் வாழ்வை எண்ணி தாயுள்ளம் தவித்தது. இயற்கையாய் பெற்றவருக்குள் உருவாகும் அந்த அச்சம் தான் கல்யாணிக்குள்ளும் துளிர் விட்டு இருந்தது தற்போது.

 

“முதல்லயே எதுக்கு இப்படி யோசிக்கிற? அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்? நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்னு தான இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு, வீடு நகை நட்டுனு சேர்த்து வச்சோம்?‌ அது முழுசையும் தந்தாவது, சஞ்சுவை நல்லா வாழ‌ வைப்பேன்.

 

நீ, அந்தப் பையனோட அக்காக்கிட்ட பேசு. நான்.. சஞ்சுவோட வீட்டுக்காரர் வேலைப் பார்க்கிற இடத்துல எதுவும் பிரச்சனையானு விசாரிக்கிறேன்‌. இப்ப எல்லாம்.. புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வர்ற சண்டை சச்சரவைக் காட்டிலும், வெளி ஆளுங்களால வர்ற பிரச்சனை அதிகம் ஆகிடுச்சு.

 

தேவைப்பட்டா, அவங்க வீட்டுப் பெரியவங்கக்கிட்டயும் பேசுவோம். ஏற்கனவே நிச்சயம் செஞ்ச கல்யாணம் நின்னு, காதலிக்கிறவனைத் தேடிப் போயி கல்யாணம் செஞ்சுக்கிட்டா. இன்னுமே அந்த பேச்சு ஓய்ஞ்ச மாதிரி தெரியல. இதுல சஞ்சு திரும்ப வந்துட்டான்னு தெரிஞ்சா, சுத்தி இருக்கிறவங்க இஷ்டத்துக்குப் பேச ஆரம்பிச்சிடுவாங்க.

 

அது, அவ்வளவு நல்லது இல்ல. வெளிய ஆளுங்களுக்கு விஷயம் தெரியிறதுக்கு முன்னாடி,‌ சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவை எடுத்தாகணும்‌. சஞ்சு, அதுவரைக்கும் வேலைக்கு எதுவும் போக வேண்டாம். இதை, நீ அவக்கிட்ட சொல்லி வை!”

 

“ம்ம்.. ஆனா சஞ்சு நாம சொல்லுறதைக் கேட்பாளானு தெரியலயேங்க.?”

 

“கேட்க வைக்கணும், வேற வழி இல்ல‌. இவ்வளவு காலமும் பொண்ணு சொல்லுறதை நாம கேட்டோம். இந்த ஒரு தடவை, நம்ம பேச்சை அவ கேக்கட்டும்!” என்ற நடராஜன் உணவை முடித்துக் கொண்டு எழுந்து செல்ல, மெலிதான பெருமூச்சு ஒன்றை விட்டபடி கணவரைப் பார்த்திருந்தார் கல்யாணி.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்