
அத்தியாயம்:20
அவளின் கருவிழிகள் சற்றும் அசையவில்லை. அவன் மீது அவளின் பார்வை நிலைக்குத்தி நின்றது. தன்னை மறந்து அமர்ந்திருந்தவளை அவளின் தோள் தொட்டு உலுக்கினான் அஜய்.
“மை லவ்” என்றழைத்தான். அவளோ கனவில் இருந்து விழித்தது போல் பட்டென எழுந்தவள் அவனை விட்டு விலகி நடந்தாள். தடதடக்கும் இதயத்தோடு அவன் விழிகளைப் பார்த்தாள்.
“இதெல்லாம் நமக்குள்ள செட் ஆகாது அஜய்” என்றவள் அங்கிருந்து நகர முற்பட்டவளை இடையே புகுந்து தடுத்தான் அஜய்.
“மை டியர் லவ். எத்தனை நாளோ, வருசமோ உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கச் சொல்லு நான் காத்துக்கிட்டு இருக்கிறேன், ஆனால் இப்படி ஒட்டு மொத்தமா வேண்டாம்ன்னு சொல்லிட்டு போகதே மை லவ்” என்றவனின் குரலில் கொஞ்சம் கெஞ்சல் வழிய தான் செய்தது, இந்தக் கெஞ்சல் கொஞ்சல் ஆகிவிடாதோ என்ற ஏக்கமும் அவனுக்குள் இருக்கத் தான் செய்தது.
“இல்லை இது சத்தியமா ஒத்து வராது, இதுக்கு மேல் நீ என்னை ஃபோர்ஸ் பண்ணினால் நான் அண்ணாக்கிட்ட பேச வேண்டியதா இருக்கும்” என்றாள்.
“உனக்கு விருப்பம் இல்லைன்னும் போது, நான் கட்டாயபடுத்த மாட்டேன் மை லவ்.” எனச் சொன்னவுடன் அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்,
“என்ன அப்படிப் பார்க்கிற மை லவ்? உனக்கு என் மேல் விருப்பம் இல்லாத பட்சத்தில், நான் உன்னை விட்டு விலகிடுவேன்னு உன்னோட அண்ணா ஆதித்க்கு நான் ப்ராமிஸ் பண்ணிருக்கேன். அதை நிச்சயம் ஃபாலோவும் பண்ணுவேன் மை.” என இடைநிறுத்தியவன்,
“லாவண்யா மேடம்” என முடித்திருந்தான். அவனை இமைக்காமல் பார்த்து நின்றவள், அந்த நொடியில் அந்த அறையில் இருந்து வெளியேற முற்பட்டாள். இந்த முறை அவளை அவன் தடுத்து நிறுத்தவில்லை. அவளுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிந்த பிறகு அவளை வழிமறிப்பதையும், பின் தொடர்வதையும் வன்முறை என எண்ணினான் அஜய், அவளுக்காக அந்தக் கண்ணாடி கதவை திறந்து வெளியே செல்லும் பாதையை அவன் காட்டிய போது. நீர் தேங்கிய விழிகளுடன் அங்கிருந்து ஓடியவள் காரின் அருகே வந்து சேர்ந்தாள்.
காரின் சாவி அஜய்யிடம் இருப்பதை மறந்து போனவள் மீண்டும் அவனின் அலுவலக அறையை நோக்கி நடக்க முற்பட்ட போது. அவள் எண்ணத்தின் நாயகனே கையில் கார் சாவியுடன் அவசரமாய் வந்தான்.
“சாரி மேடம், உங்களை வீட்டில் விடாமல் என்னோட வேலை முழுமையடையாது. ஆதித் சார்கிட்ட சொல்லிட்டு நான் இந்த வேலையில் இருந்து நிற்பது தான் முறையாகும். உங்களோட பாதுகாப்பு ஆதித் சார்க்கு ரொம்ப முக்கியம்.” எனச் சொன்னவன் காரின் ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். அவளோ அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அப்போது காரில் எஃப்எம்மை ஆன் செய்தாள் லாவண்யா.
ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தைப் போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாகப் பார்த்திட வேண்டும்???
என்ற பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் அந்தக் காரை நிறைத்திருக்க, இருவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் அமைதியாய் சாலையைப் பார்த்திருந்தனர். பயணங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை அள்ளி தருவதில்லை. சிலருக்கு வலியையும் தருகிறது. மிகவும் பிடித்த ஒருவரிடம் யாரோ போல் நடந்து கொள்ள வேண்டிய வலியையும் இந்தப் பயணத்தில் அஜய்க்குக் கொடுத்திருந்தது. அவள் மனதில் அவன் இல்லை தான். ஆனால் ஒரு போதும் இவனின் மனதில் இருந்து அவள் நீங்க போவதில்லை.
***********
காதல் மழையே! காதல் மழையே!
எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னைக் காணும் முன்னே,
மண்ணில் ஒளிந்தாயோ?
மகேஷை கட்டிக்கொண்டு நின்றிருந்தவளை பார்த்தபடி நின்றிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“மீரா! ஒன்னும் இல்லை அதான் நான் வந்துட்டேன்ல” என மகேஷ் பதில் கொடுக்க அவளோ அவனை மேலும் இறுக்கமாய் அணைத்தாள்.
அவன் மீரா என்று அழைப்பதில் அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது அவள் தன்னுடைய ஆராவாகத் தான் இருக்க முடியும். என உறுதியாய் நம்பினான் ஆதித்
“மீராவா? அவள் என்னோட ஆரா” எனச் சொன்ன ஆதித்தோ அவனிடம் இருந்து அவளைப் பிரித்தெடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.
“ஆரா! ஆரா! நீ ஓகே தானே? உனக்கு ஒன்னும் ஆகலையே” எனச் சொன்னவன் தன் காதல் மீது அலாதியான நம்பிக்கையில் இருந்தான். ஆனால் ஒரு நொடியில் அதை அவள் அதைத் தவிடு பொடியாக்கினாள்.
“யார் நீங்க” எனச் சொன்னவள் அவனிடம் இருந்து விலகி மீண்டும் மகேஷிடம் வந்து ஒட்டிக்கொண்டாள்.
“மஹி! எனக்கு ரொம்பப் பயமா இருக்கு” எனப் பயந்தபடி சொன்னாள் அவள் சொன்ன வார்த்தையை அவனால் சற்றும் ஜீரனிக்க முடியவில்லை.
ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் ஆதித் கிருஷ்ணாவோ, மகேஷை புரட்டி எடுத்தான். வெறி பிடித்தவன் போல் அவனை மூர்க்க தனமாகத் தாக்கினான் ஆதித். தன்னவளை இவன் என்ன செய்து வைத்திருக்கிறான், தன்னிடம் யாரோ போல் நடந்துக்கொள்கிறாளே. அவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற குழப்பமும் ஆதித் மனதில் வித்திட்டது.
“சொல்லு டா, என்னோட ஆராவை என்ன செஞ்ச? எதுக்குடா அவளை மீரான்னு சொல்லுற?” என மேலும் கோபமாய்த் தாக்கிய போது, குறுக்கே வந்து நின்றிருந்தாள் அவள்.
“மஹியை அடிக்காதீங்க, நீங்க யாரு அவரை அடிக்கிறதுக்கு நீங்க தேடிட்டு இருக்கிற பொண்ணு நான் இல்லை. என்னோட பேர் மீரா, மீரா மகேஷ்” எனச் சொன்னதில் அதிர்ந்து போனான் ஆதித்.
“ஆரா! என்னை உனக்கு நினைவில்லையா?”
“நீங்க யாருன்னு தெரிந்தால் தானே எனக்கு நினைவில் இருக்கிறதுக்கு, நீங்க யாருன்னே எனக்குத் தெரியலைங்க, எங்களை நிம்மதியா வாழ விடுங்க” எனத் தன் காதலே தன் முன் கை கூப்பிக் கெஞ்சுவதைப் பார்த்து, சிறகு உடைந்த பறவை போல், செயல் இழந்து போனது அவனுடைய மனம். தன் முன்னே நின்று பேசிக்கொண்டிருப்பவள் யார் என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்த போது அவள் கழுத்தை பார்த்தான்.
புல்லாங்குழலுடன் இணைந்த மயிலிறகு டாலர் அவள் கழுத்தின் நடுவே பொருந்தி இருந்தது. இவள் ஆரா தான் என்பதை உறுதி செய்துக்கொண்டான். என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆரா எப்படி மீராவாக்கப்பட்டாள் என்பதைத் தெரிந்து கொள்ள முற்பட்டான் இந்தக் காதலன்.
அவளை அதிரடியாய் நெருங்கினான். அவளின் கரம் பற்றிய போது. திமிறிக்கொண்டு நின்றிருந்தவளை அள்ளி எடுத்தான். அவளோ துள்ளினாள்
“டேய் ஆதித்! என்ன பண்ணுற” என ராகவனின் குரலைக் கூட அவன் காதில் வாங்கவில்லை.
“ராகவ்! இவன் கிட்ட நீ என்னன்னு விசாரிச்சு வை இப்போ நான் வந்திடுறேன்” என்ற ஆதித் கிருஷ்ணா. துள்ளி திரியும் புள்ளிமானை. தன் கைகளில் அடக்கியது போல் அவளைத் தூக்கி கொண்டு சென்றவன்.
அந்த இரவின் நிசப்தத்தில் பொங்கி எழுந்துக்கொண்டிருந்த அலைக் கடலின் கரையோரத்தில் அவளை நிறுத்தினான். வானில் முழுநிலவு ஒளிர்ந்துக்கொண்டிருந்தது. அவளின் பாதம் மெல்ல ஈர பதத்தை உணர்ந்தது.
“ஆரா! நம்ம காதல் இங்கே தான் தொடங்கிச்சு அதை நினைவு படுத்த தான் நான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன்” என்றவனை அவள் முறைத்து பார்த்தாள்.
“அன்றொரு நாள் இதே இரவில். நிலவொளியில் உன் மதிமுகம் பார்த்து உன் கரத்தில் இதைப் பூட்டியது நினைவில்லையா ஆரா?” என அவளின் வலது கரம் பற்றி அவள் அணிந்திருந்த ப்ரெஸ்லெட்டை காட்டினான்.
“இது என்னோட மஹி கொடுத்தது” எனத் தன் வலது கையைப் பின்னால் மறைத்தாள்.
“அதில் டார்டர் ஆஃப் சமுத்ரான்னு எழுதியிருக்கும்” என்றான் அவள் விழி பார்த்து அவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“இதெப்படி உனக்குத் தெரியும்” சந்தேகத்துடன் கேட்டாள் அவள்.
“அதை வாங்கிக் கொடுத்த எனக்குத் தெரியாதா ஆரா?” என அவன் கொடுத்த பதிலில் யோசனை தாங்கி நின்ற விழிகள் பட்டென மாறியது.
“நீ எதோ பண்ணி, என்னையும் மஹியையும் பிரிக்கப் பார்க்கிற? சொல்லு யார் நீ? உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்” எனக் கோபத்துடன் அவனை ஏறிட்டாள்.
“ஆரா!!” என அவன் கோபமாகக் கத்தியிருந்தான்.
“நோ!!! அப்படிக் கத்தாதீங்க, எனக்குப் பயமா இருக்கு இந்த இருட்டை பார்த்தால் ரொம்பவே பயமா இருக்கு” என அவள் பாதங்கள் பின் எட்டுகளை எடுத்து வைக்க,
“ஹே ஆரா! என்ன பண்ணுற, பின்னாடி கடல் இருக்கு” என அவன் எச்சரித்ததைப் பொருட்படுத்தாது. மேலும் அவனைப் பார்த்தபடி பின்னோக்கி நடந்தாள். அவளின் பாதங்களை அலைகளைத் தீண்டி ஜில் உணர்வை கொடுத்தது. அவளோ அந்த வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தது.
“ஆரா ஸ்டாப்” என அவளின் கரம் பற்ற முயன்றவனின் கரங்களை உதறிவிட்டு கடலை நோக்கி ஓடினாள். ஏன் ஓடினாள் எதற்காக ஓடினாள் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முயன்றவள் கடலை நோக்கி ஓடினாள்.
“இந்தக் குரலை என்னால கேட்க முடியலை, என் தலைக்குள்ள என்னமோ பண்ணுது. ப்ளீஸ் என்னை விட்டுட்டு போயிடுங்க, என்னால முடியலை”
“ஆரா கொஞ்சம் சொல்றதை கேளு” என அவளை நோக்கி மேலும் முன்னேறினான்.
“அய்யோ பேசாதீங்க” எனத் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு கடலை நோக்கி ஓடினாள்.
“நம்ம காதலை தேடி கடலோட ஆழத்தை அளக்க போறீயா ஆரா? நானும் வர்றேன் உன் கூடவே வர்றேன். இந்தக் கடலின் ஆழம் எப்படியோ அப்படித் தான் நம்மளோட காதலும், அதோட ஆழம் யார் கண்ணுக்கும் புலப்படாது. நீ சொன்னது தான் ஆரா, இதையும் நீ மறந்துட்டியா? இந்த க்ரிஷை மறந்துட்டியா? என்ன பார்த்து சொல்லு ஆரா? உன் கனவை மறந்துட்டியா? அங்கே போறாதா தானே சொல்லியிருந்த இப்போ இங்கே என்ன பண்ணுற ஆரா” என அவளை மேலும் நெருங்கியவன் அவளை அள்ளிக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்திருந்தான்.
“ஆரா! நீ தான் என்னோட உலகமாய் இருந்த, இப்போ யாரோ ஒருத்தன் மாதிரி என்னைப் பார்க்கிற ஆரா? என்னாச்சு உனக்கு.” எனக் கேட்ட போது அவளிடம் எந்தப் பதிலும் இல்லை முழுவதுமாய்த் தண்ணீரில் நனைந்து குழந்தை போல் அவளின் கரங்களில் தவழ்ந்துகிடந்தாள். மயக்கத்தில் கிடந்தவளின் இதழ்கள், சில வார்த்தைகளை உச்சரித்தது. அவனின் செவியை அவளின் இதழருகே வைத்துக் கேட்டான்.
“இங்கே ரொம்ப இருட்டா இருக்கு க்ரீஷ், எனக்குப் பயமா இருக்கு, என்கிட்ட வந்திடு க்ரிஷ்” எனச் சொல்லி புலம்பியவளை மார்போடு அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவனுக்கு புரிந்து போனது இவள் தன்னை மறந்து போயிருக்கிறாள் என்பதும். அவளின் ஆழ்மனதில் இருந்து அவள் நீங்கிவிடவில்லை என்பதும் தெளிவாய் புரிந்து போக, வன்முறை இதற்கு தீர்வாகது. மகேஷை அடிப்பதால் ஆரா தன்னை வெறுத்து விடுவாள் என்ற பயமும் ஆதித்தின் மனதில் வித்திட்டது. மௌனமாய் மனதிற்குள் திட்டம் தீட்டினான்.
“உன்னை அப்படியே விட்டுட்டு போயிட மாட்டேன் ஸ்மைலி, பிகாஸ் நீ மட்டும் தான் என்னோட காதல்” என்றவன் அவளைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்தான் ராகவ். அவனுடன் மகேஷூம் நின்றிருந்தான். ராகவ் விசாரித்தற்கு ஆதாரமாய் அவனுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
“ராகவ்! ஆராவை உடனே ஹாஸ்பிட்டல சேர்க்கணும்” எனச் சொன்ன படி வந்து நின்ற ஆதித் கிருஷ்ணாவை பார்த்துச் சம்மதமாய்த் தலையசைத்தான்.
“என்ன பார்க்கிற மகேஷ்? நீயும் தான் வா” என ஆதித் அழைத்ததில் அவனும் வாகனத்தில் வந்து ஏறிக்கொண்டான். ஆதித்துக்கு தெரியும் அவள் கண் விழித்தவுடன் மகேஷை தான் தேடுவாள் என்று, இந்த மகேஷ் அவளின் நியாபகத்தில் இருக்கும் போது, என்னை பற்றிய நினைவு எப்படி அவளுக்கு இல்லாமல் போனது. என்ற கேள்விகளுடன் மருத்துவமைனையை நோக்கி பயணித்தான் ஆதித். ராகவ் வாகனத்தை இயக்கி கொண்டிருந்தான்.
******************
இருள் சூழ்ந்திருந்த இரவில் காரில் அமர்ந்தபடி எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளின் விரல்கள் தன் தந்தை ஜெகன்நாதனுக்கு அழைப்பு விடுத்தது.
“சொல்லுமா மஹதி! எங்கே இருக்க? யார்க்கிட்டையும் சொல்லாமல் இந்த ராத்திரி நேரத்தில் எங்கே போயிருக்க மா?” எனக் கேள்விகளை அடுக்கினார் ஜெகன் நாதன்.
“உங்களால எதுவும் செய்ய முடியலைனாலும் இந்த அதிகாரத்துக்குக் குறையில்லை டாட். நான் சொல்றதை கவனமா கேளுங்க. அந்த ஆதித் ஆராவை கண்டுபிடிச்சுட்டான்” என்றாள் மஹதி.
“வாட்? என்னமா சொல்லுற?”
“நான் என்ன கதையா சொல்லுறேன் டாட்? அதிர்ச்சி ஆகிட்டு இருக்கீங்க? என்ன பிரச்சனைன்னு தெரியலை அவளைப் பாண்டிச்சேரி மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கிறார், உங்களோட அருமை மருமகன்” என்றாள் எரிச்சலுடன்.
“நீ எங்கம்மா இருக்க?”
“ம்ம் அந்த ஹாஸ்பிட்டல் வாசல்ல நாய் மாதிரி காத்துக்கிட்டு இருக்கிறேன் டாட். அவளை அன்னைக்கே போட்டு தள்ள சொன்னேன். நீங்க பண்ணலை. இப்போ அவ என்னோட வாழ்க்கைகுள்ள மறுபடியும் வந்திட்டாள். இனி நான் எப்படி ஆதித் கூடச் சேருவது” எனக் கோபமாய்க் கத்தினாள்.
“மஹதி நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா” எனத் தன் மகளைச் சமாதானம் செய்ய முயன்றவரை,
“நீங்க அமைதியா இருங்க அப்பா, நீங்க அந்தக் கோதண்டம் அங்கிளையே நம்பிட்டு இருக்கிற வரைக்கும் இங்கே எதுவும் நடக்கப் போறதில்லை. இது என்னோட வாழ்க்கை நான் பார்த்துகிறேன்” என்றாள் மஹதி.
“மஹதிம்மா” என ஜெகன் அழைத்ததையும் பொருட்படுத்தாதவள், அழைப்பை துண்டித்துவிட்டு மருத்துமனைக்குள் நுழைந்தாள்.
அதே சமயம்,
மருத்துவமனை அறையில் எழுந்து அமர்ந்திருந்தாள் ஆரா. ஆனால் அவள் தன்னை மீராவாக நினைத்துக்கொண்டு, எதிரில் நின்றிருந்த ஆதித் கிருஷ்ணாவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.
மகேஷோ தலையில் அடிபட்டு கட்டுப் போட்டிருந்தான்.
“மஹி! வா நம்ம போலீஸ்ல போய்க் கம்ப்ளைன்ட் பண்ணலாம் இவங்க யாரு உன்னை விசாரிக்கிறதுக்கு” எனக் கோபமாய் எழுந்தவள் மகேஷின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“மீரா! நான் சொல்றதை கொஞ்சம் கேளு” அமைதியாய்ச் சொன்னான் மகேஷ்.
“அவங்க ஆரான்னு ஒரு பொண்ணைக் காணோம்ன்னு தேடிட்டு இருக்காங்க, அந்தப் பொண்ணு அவரோட லவ்வராம். அந்தப் பொண்ணு மாதிரி நீ இருக்கிறதால் குழம்பிட்டாங்க” என நிதானமாய் எடுத்துச் சொன்னான் மகேஷ். மகேஷூக்கு வேறு வழியில்லை ஆதித்திடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டான். மகேஷ் சொன்னால் தான் ஆரா கேட்பாள் என்பதையும் அவன் புரிந்துக்கொண்டதால். மகேஷை வைத்தே அடுத்தக் காயை நகர்த்தினான் ஆதித் கிருஷ்ணா.
“அதுக்காக அவங்க எப்படி உன்னை அடிக்கலாம் மஹி, முதலில் சாரி கேட்க சொல்லு” என்றாள் ஆரா.
“என்ன சாரி கேட்கணுமா மகேஷ்?” என்ற ஆதித் கிருஷ்ணாவின் கர்ஜனை குரலில், கன்னத்தைத் தேய்த்தபடி.
“சாரி சொன்ன வரைக்கும் போதும் சார்” என்றான். அவனை மெல்ல நெருங்கிய ஆதித்.
“ஷி இஸ் மைன், ஐ யெம் வாட்சிங் யூ ஆல்வேஸ் ஆராவை நாடு கடத்திட்டு போகணும்னு, நீ தப்பிச்சு போயிடலாம்ன்னு நினைக்காதே மகேஷ், உன்னோட பாஸ்போர்ட் அண்ட் ஆராவுக்கு நீ ஃபேக்கா மீரான்ற பேர்ல ரெடி பண்ணின பாஸ்போர்ட் எல்லாமே இப்போ என் கையில். ஆராவுக்கு நினைவு வர வரைக்கும் தான் உன்னோட இந்த ஆட்டம் எல்லாம், அதுக்கு அப்பறம் ஜெயில்ல கம்பி எண்ண ரெடியா இரு” என மௌனமாய் எச்சரித்து அங்கிருந்து நகர்ந்தான் ஆதித் கிருஷ்ணா. அறையை விட்டு வெளியே செல்பவனைப் பார்த்து கொண்டிருந்தவள்.
“என்ன சொல்லிட்டுப் போறான் அவன் உன்னை மிரட்டி விட்டு போறானா?” எனக் கேட்டாள் ஆரா.
“இல்லை இல்லை மீரா” எனத் துரிதமாய்ச் சொல்லிக் கொண்டிருந்த போது மருத்துவர் அங்கு வந்தார். ஆராவை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும் படி சொல்லிவிட்டு நகர்ந்தார். மருத்துவமனையில் ஆராவை தங்க வைப்பது ஆதித்தின் திட்டம் என்பதை மகேஷால் உணர முடிந்தது.
**********
மருத்துவர் தன்னுடைய அறையில் அமர்ந்தபடி ஆராவின் ரிப்போர்ட்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். அவர் எதிரில் பதற்றத்துடன் அமர்ந்திருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“டாக்டர் ஆராவுக்கு என்ன பிரச்சனை?” என்றான் பொறுமை தாங்க முடியாமல்.
“ரிப்போர்ட்ஸ்ல எல்லாமே நார்மலா தான் இருக்கு மிஸ்டர் ஆதித். ஆராவை நம்ம அனலைஸ் பண்ணினால் தான் அவங்களுக்கு எந்த மாதிரியான மெமரி லாஸ் ஆகிருக்குன்னு தெரிய வரும்” என்றார்.
“என்னை பற்றிய நினைவு ஆராவுக்கு எப்போதுமே வராதா?”
“வீ வில் ட்ரை அவர் பெஸ்ட் மிஸ்டர் ஆதித்” எனச் சொல்லி மருத்துவர் எழுந்து போன போது. அனைத்தும் தன்னை விட்டு விலகி செல்வதைப் போல் உணர்ந்தான் ஆதித்.
ஆராவை இப்படியொரு நிலையில் பார்ப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
இப்போது அவளை மட்டுமின்றித் தன்னையும் மறந்து போய் இருக்கிறாள். அவளிடம் போய் எப்படிக் காதலை உணர்த்துவது. என்று புரியாமல் தவித்தான் ஆதித் கிருஷ்ணா. தன்னுடைய ஆராவை இதில் இருந்து மீட்பான் என்ற நம்பிக்கையில் அவன் வெளியே வந்த போது அவனெதிரே வந்து நின்றிருந்தாள் மஹதி.

