பேரன்பின் பெருஞ்சலனமே-20

Loading

சலனம்-20

வாரம் ஒன்று கடந்து காணாமல் போயிருந்தது. என்னைப் பெற்றவர்கள் வந்து போன பிறகு, ஏனோ, என் மனதில் ஒரு நிறைவு.

 

நான் எதையும் ஒளித்து மறைத்து செய்யவில்லை என்ற நிம்மதியும் எனக்குள் இருந்தது. இதே மாதிரி சம்யூவுடனான உறவையும், கொஞ்சம் வெளிப்படையாய் என் பெற்றோரிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் நான் அதைச் செய்யவில்லை.

 

 

செய்யவும் தோன்றவில்லை. ஆனால் இப்போதிருக்கும், மனநிலையில் கொஞ்சமே கொஞ்சம் தெளிவு வந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அதற்காக அனைத்தையும் மறந்துவிட்டேன். சம்யூவை மறந்து வாழப் பழகிவிட்டேன் என்பது அல்ல! அவள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேன் என்பதே..

 

வாழப் பழகுதல் என்பது வேறு.. வழியில்லாமல் ஏற்றுக்கொள்வது என்பது வேறு. அதெல்லாம் அந்த இடத்தில் நின்று அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

 

 

இப்போதெல்லாம் என் உலகம் முழுக்க, என் மகளில் துவங்கி அவளுடனே முடிந்தது. அதிகாலை நேரத்திலேயே விழித்து அவள் அறைக்குள் போடும் சத்தம், அறையின் வெளியே, மெத்திருக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் என் செவியை நிறைக்கும். இரவு முழுதும், சமுத்ரா தான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள் என்பதால், அவள் துயில் கலைக்காமல், குழந்தையைத் தூக்கி வந்து என்னோடு கொஞ்ச நேரம் வைத்துக் கொள்வேன்.

 

அந்த அழகான காலைப் பொழுது, என் மகளின் பொக்கை வாய்ச் சிரிப்பிலும்,

 

“ப்பா!”

 

என்ற மழலை மொழியிலும் இன்னும் அழகாய் இருந்தது. சம்யூவின் மறைவிற்கு பின், சில நாட்களாகத்தான் என் மகள் சிரிப்பதாகத் தோன்றியது.

 

இந்த ஒருவாரமாய் என் வாழ்க்கை, கொஞ்சம் வழக்கத்திற்கு வந்திருந்தது. காலையில் கொஞ்ச நேரம், குழந்தையோடு கழித்துவிட்டு, பணிக்குச் சென்றுவர இரவாகிவிடும். சில நேரங்களில் படப்பிடிப்பு இரவைத் தாண்டியும் நீளும். ஆனாலும், இரவு தாமதமாக வந்தாலும், சமுத்ராவை அணைத்துக் கொண்டு படுத்திருக்கும் என் மகளின் முகத்தைக் காணாமல் என் பொழுது அடையாது.

 

உலகம், எங்கள் மூவருக்குள் சுருங்கிவிட்டதாய் எனக்குத் தோன்றியது.
சமுத்ராவின் நீலவிழிகள் அடிக்கடி என்னைத் தொட்டு மீள்வதை என்னால் உணர முடிந்தது. ஆனால், அவள் ஏதவது என்னிடம் சொல்ல விரும்புகிறாளா? வேறேதாவது விஷயமா? எனக் கேட்கும் தைரியம் எனக்கில்லை.

 

நானும் சமுத்ராவும், காதலர்களும் இல்லை.. கணவன் மனைவியும் இல்லை.. இது நட்பா? இல்லை வேறெதுவுமா.? இருவருக்கும் தெரியாது. ஆனால், அவந்திகாவைப் பெறாத தாய் அவள். பெற்ற தகப்பன் நான் தான்.

 

 

இந்த விந்தையான உறவு எங்கே போய் முடியப் போகிறதென எனக்குத் தெரியவில்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களும் இந்த உலகில் நடக்கத்தான் செய்கின்றன.

 

இப்படியொன்று நடக்குமென நான் கனவில் கூட, நினைத்ததில்லை. சம்யூவோடு திருமணம் அல்லாத உறவில் ஒரே வீட்டில் இருந்தவன், அவளைப் போலவே ஒருத்தியுடன், அதே வீட்டில் வசிக்கிறேன். ஆனால் இதற்கு பெயர் வைக்க முடியாது.

 

நான் எனக்குள் யோசித்தபடி, அவந்தியோடு, பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து, அவளுக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருக்க, கரத்தில் கிண்ணத்தோடு வந்தாள் சமுத்ரா.

 

“அவி குட்டி! அம்மாகிட்டே வாங்க! மம் மம் சாப்பிடலாம்!”

 

என அவள் அழைக்க, குழந்தை வர மாட்டேன் என தலையாட்டி மறுத்தது. இன்னொரு கரத்திலிருந்த காஃபி கோப்பையை என் முன்னாலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு,

 

“குழந்தையை என் கிட்டே கொடு! நீ காஃபி எடுத்துக்கோ!”

 

எனச் சொன்னாள். நான் ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல், அவளைப் பார்த்தேன்.

 

“மறந்து போய் எனக்குக் கொண்டு வந்துட்டியா? இதெல்லாம் மெய்ட் செய்வாங்க! நீ எதையும் செய்ய வேண்டாம்.!” அழுத்தமாய் சொன்னேன் நான்.

 

 

“நான் ஒண்ணும் உன் மேல் ஆசைப்பட்டு, இதைக் கொண்டு வரலை. ஒரே வீட்டில் இருக்கோம். சும்மா மூஞ்சியைப் பார்த்துட்டு இருக்க, போர் அடிக்குது. இட்ஸ் ஜஸ்ட் அ காஃபி.. நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதே விக்ரம்.!”

 

என அவள் சொன்ன பின் நான் எதுவுமே பேசவே இல்லை. சூடான குளம்பியை எடுத்துப் பருக துவங்கினேன். என் பார்வை குழந்தைக்கு உணவு ஊட்டும் சமுத்ராவில் நிலைத்திருந்தது.

 

“நீ என்ன செய்ற? அதாவது உன் ஜாப் பத்தி கேட்கிறேன்.!”

 

“அதைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போற? திடீர்ன்னு ஏன் இந்தக் கேள்வி?” நான் கேள்வி கேட்டால், அவள் பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டாள்.

 

“உன்னைப் பத்தி எதுவுமே எனக்குத் தெரியாதே.. சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டேன்.!”

 

அந்த சும்மாவில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருப்பது எனக்கு மட்டுமே தெரியும்.

 

“ஸ்டாண்டர்ட் சார்ட்டட் இல் வொர்க் பண்ணுறேன். சீனியர் மேனேஜர்.!”

 

“நீ வேலைக்கே போறதில்லையே.? அப்பறம் எப்படி?” அவள் பதில் சொன்னதுமே அடுத்தக் கேள்வி என்னிடமிருந்து.

 

“வொர்க் ஃப்ரம் ஹோம் தான். மோஸ்ட்லி நைட் ஷிஃப்ட்ஸ்.. ஸோ நோ ப்ராப்ளம்..!”

 

என அவள் சொன்னதும், எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இவள் வீட்டிலிருக்கும் தருணங்களில், அவள் பணி செய்வதை நான் பார்த்ததே இல்லை.

 

 

இரவு நேரப் பணியையும் பார்த்துக் கொண்டு, குழந்தையையும் எப்படி பார்த்துக் கொள்கிறாள்? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நிஜமாகவே பெண்கள், திறமைசாலிகள் தான்.எதுவாக இருந்தாலும், அழகாக லாவகமாகக் கையாளத் தெரிகிறது.

 

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”

 

அடுத்த கேள்வி என்னிடமிருந்து. அவளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள, என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? எனத் தெரிந்துக்கொள்ளும் அவசியம் எனக்கு இருந்தது. என்னதான் இவள் சம்யூவின் தங்கையாய் இருந்தாலும், என் சுயநலத்திற்காக, பயன்படுத்திக் கொள்கிறேனோ? என்ற உணர்வு எனக்குள் இருந்தது. என் குழந்தைக்கு அம்மா என எளிதாய் சொல்லிவிட்டாள். ஆனால், அவளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்? என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அவள் வந்ததிலிருந்தே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைத்தான் அவளிடம் கேட்டேன்.

 

“அதை தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போற விக்ரம்? சம்யூ எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தாள்ன்னு தெரிஞ்சும், நான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கிறியா? எனக்கு திருமண வாழ்க்கை மேலே நம்பிக்கை இல்லை. உன்னை மாதிரி ஆம்பிள்ளைங்க, போடுற கடிவாளம் தானே இந்தக் கல்யாணமெல்லாம்? கல்யாணம் பண்ணாமல் வாழவே முடியாதா என்ன? உண்மையைச் சொல்லப் போனால், கல்யாணம் பண்ணிட்டு, எல்லாத்தையும் சகிச்சுட்டு வாழறதை விட, தனியா வாழறது ஒண்ணும் அவ்வளவு கஷ்டம் இல்லை.!”

 

 

என அவள் சொன்னதிலேயே எனக்கும், சம்யூவிற்கும் இடையே நடந்த அத்தனையும், அவளுக்கு தெரியும் என்பது புரிந்தது.

 

 

“நீ ஏன் சம்யூ மாதிரி சினிமாவுக்கு வரணும்ன்னு நினைக்கல?” என நான் அடுத்தக் கேள்வியைக் கேட்க, மென்மையான சிரிப்பை உதிர்த்தது அவள் இதழ்கள். அந்தச் சிரிப்பில் ஒருவித விரக்தி தெரிந்தது.

 

“அது அவளோட விருப்பம். அவளுக்கு அது பிடிச்சிருந்தது. அதற்காக எனக்கும் அது பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லை. சும்மாவே எனக்கு சினிமா பிடிக்காது. ஆனால், சம்யூ போன பிறகு சுத்தமா பிடிக்காமல் போய்டுச்சு.!” சொன்னவளின் வார்த்தைகளில் இருந்த வலியை என்னால் உணர முடிந்தது.

 

 

“சம்யூவிற்கு நடந்தது வெறும் ஆக்ஸிடென்ட் தான் சமுத்ரா. அதுக்கும் சினிமாவிற்கும் என்ன சம்மந்தம்? நீ ஒட்டுமொத்த சினிமாவையுமே தப்பு சொல்றது சரியில்லை!” அவள் சினிமாவைப் பற்றி சொன்னக் கோபத்தில் என் குரல் சட்டென உயர்ந்தது.

 

“இந்த சினிமா மேலே அவளுக்கு ஆசை வராமல் இருந்திருந்தால், அவள் இங்கே வராமல் இருந்திருந்தால், உன்னை அவள் பார்க்காமல் இருந்திருந்தால், உன் மேலே நாசமாய்ப் போன காதல் வராமல் இருந்திருந்தால், உன்னைக் கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால், சம்யுக்தான்னு ஒருத்தி, இப்போ உயிரோடு இருந்திருப்பா! இதையெல்லாம் இல்லைன்னு உன்னால் மறுக்க முடியுமா விக்ரம்? அப்பறம் எப்படி சினிமா காரணம் இல்லைன்னு சொல்ற? உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? சம்யூ இப்போ இல்லாமல் போனதற்கு சினிமா காரணமோ இல்லையோ, சினிமாவிலிருக்கிற நீ மட்டும் தான் காரணம்.!”

 

அழுத்தமாய் அவள் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் நிஜமாகவே பதில் இருக்கவில்லை.
அவள் கேட்ட சில இருக்கலாம்ங்களின் காரணமாகத்தான் சம்யூ இப்போது இல்லாமல் போனாள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. நான் பதில் பேசாது அமைதியாய் அமர்ந்திருக்க,

 

“உன்னைப் பொருத்தவரை அது வெறும் ஆக்ஸிடென்ட்டா இருக்கலாம். ஆனால் எனக்கு, என் உயிரில் பாதியை இழந்த மாதிரி இருக்கு. உனக்கு இதெல்லாம் புரியாது. ஒவ்வொரு நிமிஷமும், நொடியும், நாங்க எமோஷ்னலா கனெக்ட் ஆகி இருந்தோம். ஆனால் இப்போ, அவளை இழந்துட்டு நான் மட்டும் தனியா நிற்கிறேன். உனக்கு இதில் எந்த இழப்பும் இல்லையே.. ஒரு மாசம் மட்டும் கஷ்டப்பட்ட.. இப்போ குழந்தையைப் பார்த்துக்க நான் வந்துட்டேன். உன் வாழ்க்கை வழக்கத்துக்கு வந்துதுடுச்சு. இனிமே சம்யூ உன் நினைவுகளில் இருப்பாள் தான். ஆனால் உண்மையில் உன் நிஜ வாழ்க்கையில் தேட மாட்ட! என்னால் உன்னை மாதிரி இருக்க முடியாது.!”

 

“தட்ஸ் யுவர் பாயிண்ட் ஆஃப் வ்யூ சமுத்ரா.! நான் தேட மாட்டேன்.. சம்யூ எனக்குத் தேவையில்லைன்னு நீ எப்படி முடிவு பண்ணலாம்? உன்னை விட, சம்யூவை எனக்கு அதிகமாகத் தெரியும். ஏன்னா அவள் என் மனைவி!”குழந்தையை அவள் மடியில் வைத்துக் கொண்டிருப்பதால், குரலடக்கி அமைதியாகவே பேசினேன்.

 

 

ஆனாலும், அவள் வார்த்தைகள் எனக்குள் கோபத்தை விதைத்திருந்தது. நானும் சம்யூவும் வாழ்ந்த வாழ்வைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்? அவளோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும், நேற்று நடந்ததைப் போல் எனக்குள் அப்படியே இருக்கிறது. என் உயிர் உடலை விட்டுப் பிரிந்தால் ஒழிய, என்னிடமிருந்து பிரிக்கவே முடியாத தருணங்கள் அவை. அப்படி இருக்கையில் இவள் எப்படி அப்படிச் சொல்லலாம்? அதோடு கூட, சமுத்ராவை விட, சம்யூவிற்கு அதிக நெருக்கமானவன் நான் மட்டுமே என்ற திமிரும் எனக்குள் இருந்தது.

 

 

“தட்ஸ் நாட் மை பாய்ண்ட் ஆஃப் வ்யூ.. உண்மை அது தான். சம்யூ பற்றி உனக்கு என்ன தெரியும் விக்ரம்? அவள் ஒரு நடிகை.. அப்பறம் உன் மனைவி.. அவ்வளவு தானே உனக்குத் தெரியும். அவள் என்ன படிச்சுருக்கா? அவளுக்கு என்ன பிடிக்கும்? அவளோட பேரண்ட்ஸ் யாரு? அவள் எந்த காலேஜில் படிச்சா? எந்த ஸ்கூல்? எதாவது உனக்குத் தெரியுமா? வெறும் உடல் தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணிட்டு இருந்த உனக்கு, அவளைப் பற்றி எதுவுமே தெரியாது விக்ரம். நீ தெரிஞ்சுக்க விருபவும் இல்லை. ஜஸ்ட் உன்னோட பிஸிக்கல் நீட்ஸை ஸேட்ஸ்ஃபை பண்ண அவளை யூஸ் பண்ணிக்கிட்ட.. அப்படித்தானே?”

 

அவளின் நீல நிற நயனங்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்துக் கேள்வி கேட்டது.

 

“காதலுக்கு, இதெல்லாம் அவசியமில்லைன்னு நான் நினைக்கிறேன்.!”

 

 

அவள் கேள்விக்கு மனசாட்சியே இல்லாமல் பதில் சொன்னேன். நிஜமாகவே அவள் கேட்ட கேள்வி எதற்குமே எனக்கு பதில் தெரியாது.

 

 

“நல்ல பதில்.. ஒரு நல்ல புருஷனா சொந்த மனைவியைப் பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கிற விக்ரம்! உன்னைப் போய் லவ் பண்ணினாளே அவள் தான் முட்டாள். உன்னை மாதிரி ஆண்களுக்கு, அவங்க தேவைகள் தீர்ந்தால் போதும், எதிரில் நிற்கிறவங்க யாரு என்ன அப்படிங்கிறதைப் பத்தின எந்த அக்கறையும் இல்லை. நீயெல்லாம் மனுஷனா மதிக்கக் கூட தகுதியில்லாதவன்.!”

 

 

பாரபட்சம் பாராமல் ஆள்காட்டி விரலை என்னை நோக்கி நீட்டிக் குற்றம் சாட்டினாள் சமுத்ரா.

 

“சமுத்ரா போதும்!”

 

அவள் என்னை நோக்கி நீட்டிய விரல் என் கோபத்தைக் கிளப்பியது.

 

“நீ போதும்ன்னு சொன்னால் நான் நிறுத்திடணுமா? முடியாது.. நான் பேசத்தான் செய்வேன். நான் பேசறதை நீ கேட்டுத்தான் தீரணும். இதோ, அவந்தி பிறந்த பிறகு, குழந்தை, குழந்தைன்னு உருகுறியே.. இந்தக் குழந்தை உருவானது உனக்குத் தெரியுமா? முதன் முதலில் அவள் அசைஞ்சது உனக்குத் தெரியுமா? வயிற்றில் இருக்கும் போது, குழந்தையோட ஹார்ட் பீட் கேட்டிருக்கியா? ஆனால் எனக்கு எல்லாமே தெரியும். அவளோட ஒவ்வொரு மாச ஸ்கேன் ரிப்போர்ட்டும் எனக்குத் தெரியும். ஏன்னா, அவந்தி சம்யூ வயிற்றில் வந்ததிலிருந்து ஒவ்வொரு தருணத்திலும், நான் சம்யூ கூடவே இருந்திருக்கேன். நீ சம்யூவிற்கு என்ன பண்ணின விக்ரம்? ஒரு கௌரவமான வாழ்க்கையை அவளுக்கு உன்னால் கொடுக்க முடிஞ்சுதா? கல்யாணம் கூட, இரகசியமாகத் தானே பண்ணிக்கிட்டே? நீ எங்கே கௌரவமான வாழ்க்கையைக் கொடுக்கிறது? இப்படிப்பட்ட நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுத்துட்டு, அவளைப் பத்தி எனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு பெருமை மட்டும் பேசிக்கிற.. உன்னைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருது.!” நக்கலாய் அவள் சொன்ன தோரணையில், என் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துக் கொண்டிருந்தது.

 

 

சம்யூவைப் பற்றி எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை என்ற நிதர்சனம் என் நெஞ்சை சுட்டது.

 

 

நமக்கு நெருக்கமானவர்களைப் பற்றி நமக்குத்தான் நன்றாகத் தெரியும் என நினைத்திருக்கையில், நம்மை விட, நமக்குப் பிடித்தவரைப் பற்றி நன்கு அறிந்த இன்னொருவர் நம் கண்முன் வந்து நிற்கையில், ஒரு கோபம் வருமே.. அந்தக் கோபம், எனக்கு சமுத்ராவின் மீது வந்தது. அதீத கோபத்தின் விளைவாய், என் கைமுஷ்டி இறுகியது.

 

 

ஆனால் அந்தக் கோபத்தை வெளிப்படுத்த முடியாதபடி எங்கள் இருவரின் நடுவே குழந்தை அவந்திகா இருக்க, அவள் என் முன்னே வைத்த காஃபியைக் கூட, முழுதாய் அருந்தாது வெளியே கிளம்பியிருந்தேன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்