விழியால் தொட்ட அழகே – 27

Loading

அத்தியாயம் – 27

 

“என்ன நித்து பலமான யோசனைல இருக்க மாதிரி இருக்கு” என்று கேட்டபடி ஆழ்ந்த யோசனையிலிருந்தவனின் அருகில் வந்தமர்ந்தான் ரிஷி,….

“மித்து,… மித்து வந்து, எனக்கு எனக்கு பயமா இருக்கு” அவள் குரலில் தெரிந்த நடுக்கமும், முகத்தில் தெரிந்த பயத்தின் பிரதிபலிப்பும் அவளது பயத்தின் அளவை காட்ட, அவளை தோளோடு அணைத்து, தன்னோடு ஒற்றியவன்,… “என்ன பயம் உனக்கு, நான் உன் பக்கத்துல இருக்கும் போது உனக்கு எதை நினைச்சு பயம்” என்றான்,….

“மித்து,… கருணா,… அவன் உங்களை இன்னைக்கு ஜாக்கிரதைன்னு சொல்லி மிரட்டினான் கவனிச்சீங்களா, அப்போ எனக்கு பெரிசா தெரியல, ஆனா இப்போ அதையெல்லாம் யோசிச்சு பார்த்தா, ஏதோ தப்பா படுது, அவன் அவனால உங்களுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துடுமோன்னு பயமா இருக்கு” அவள் முகம் வெளிறி போய் கூற,… “என்ன நித்து, கருணாவுக்காக என்கிட்ட சண்டை போட்ட, என்னை விட்டு போயிடுவேன்னு சொன்ன, இப்போ அவனை நினைச்சே உனக்கு பயமா?” என்றான் ஆதரவாக அவளது தலைகோதி,…

“அப்போ… அது வேற மித்து, ஆனா இப்போ, ப்ச்,… எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க, இனி உங்களை நான் வெளியே எங்கேயும் அனுப்ப மாட்டேன்” என்றவாறே, அவனது மார்பில் ஒட்டிக் கொண்டாள்…

“கருணாக்கு பயந்து நான் வீட்டுக்குள்ளேயே இருக்கணும்னு சொல்றியா நித்து நீ, உன் புருஷன் ஒன்னும் அவ்வளவு வீக்கானவன் கிடையாது” அவளுக்கு மென்மையாய் புரிய வைக்க,…. “தெரியும், ஆனாலும் எனக்கு பயமா இருக்கே” என்றாள்,….

“கருணா என்னை கொலை பண்ணுவான்னு உனக்கு தோணுதா? நித்து, அவனுக்கு உன் மேல இப்போ கோபம் இருக்கலாம், அதுக்காக உன்னோட வாழ்க்கையை அவன் அழிக்க நினைக்க மாட்டான், உன்மேலே அவனுக்குன்னு ஒருவித பாசம் அக்கறையெல்லாம் இருக்கு, இன்னைக்கு உன்னை வண்டி மோதவிருந்த சமயம் ஓடி வந்து உன்னை அவன் பாதுகாப்பா நிற்க வைத்தான், அந்த நிமிடம் அவன் கண்ணுல உனக்கான பயத்தை கவனிச்சேன், அதை வச்சு சொல்றேன், அவன் நீ ஹர்ட் ஆகுற மாதிரி எந்த வேலையும் பண்ண மாட்டான், இன்னும் சொல்லனும்னா அவன் நமக்கு பாதுகாப்பு வளையமா இருப்பானே தவிர, நமக்கு கெடுதல் பண்ண நினைக்க மாட்டான்” ரிஷி விளக்கிய பிறகு தான் நித்யாவிற்கு அவசரப்பட்டு கருணாவின் மீது சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனம் கவலை கொண்டது, கருணா கண்டிப்பாக தன் வாழ்க்கையை அழிக்க நினைக்க மாட்டான் என்று இவள் மனம் இங்கு நிம்மதி கொள்ள, அங்கு கருணாவுமே, நித்யா தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அவள் வாழ்க்கையில் எந்த வித கெட்டவிஷயங்களும் நெருங்க விட கூடாது என பலவற்றை பற்றி சிந்தித்து கொண்டிருந்தான்,….

நாட்கள் கடந்த நிலையில் நித்யாவிற்கு சீமந்தம் வைக்கும் நாளும் வந்தது, ஏழு மாத கர்ப்ப காலத்திலேயே சீமந்தம் வைக்கலாம் என செந்தூரம் கூறி இருக்க, ரிஷி வேண்டாம் என்று மறுத்து விட்டான், காரணம் சீமந்தம் முடிந்த அதே நாளிலேயே நித்யாவை தாய் வீட்டிற்க்கு அழைத்து சென்றுவிடுவோம் என்று செந்தூரம் கூறியதால், தன்னால் ஒரு நாள் கூட தன் மனையாளை பிரிந்து இருக்கவே முடியாது என்று அனைவர் முன்னிலையிலும் வெளிப்படையாகவே கூறியவன், ஒன்பதாவது மாதத்தில், பிரசவ தேதிக்கு ஓரிரு நாட்கள் முன்பு வைத்துக் கொள்ளலாம் என முடித்து விட, மற்றவர்களும் தடங்கல் விதிக்கவில்லை,….

இன்னும் பதினைந்து நாட்களில் நித்யாவின் பிரசவநாள், மூன்று நாட்களின் பின் நல்ல முகூர்த்த நாளில் அவளது சீமந்தம் நடத்துவதற்காக குறிக்கப்பட்டிருக்க, தற்போது, அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது… இவ்வேளையில் தான் ரிஷிக்கு கமிஷனர் முக்கியமான கேஸ் ஒன்றை நியமித்திருக்க, அதற்காக அவன் செல்லவேண்டியதன் கட்டாயம் வந்தது, நித்யாவிடம் ரிஷி இவ்விவரத்தை பற்றி கூற, அவளோ, “சீமந்தம் முடியும் வரைக்குமாவது நீங்க எங்கேயும் போக கூடாது” என உறுதியாக நின்றாள்,….

“நித்து டார்லிங் இன்னைக்கு நடக்க போற ஆபரேஷன் ரொம்ப முக்கியமானது, போதைப்பொருட்களை பதுக்கி வச்சு, அதை சின்ன சின்ன காலேஜ் பசங்களுக்கு சப்ளை பண்ணிருகாணுங்க ஒரு கும்மல், அந்த கும்மலை இன்னைக்கு கையும் களவுமா பிடிக்கலனா எஸ்கேப் ஆகிடுவானுங்க, அது மட்டும் இல்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி  சின்ன குழந்தைங்களை காணோம்னு கம்பலைன்ட் வந்திருந்ததுல, அந்த குழந்தைகளை கூட இதே கும்மல் தான் கடத்தி வெளிநாட்டுக்கு வித்திருக்கு, அவனுங்களை சும்மா விடலாமா? இப்போ நீயே சொல்லு நான் போகவா? வேணாமா?” என அவள் என்ன பதில் கூறுவாள் என்பது தெரிந்தும் அவளிடமே அதனை கேட்டு நிற்க, அவளும் அவன் எதிர்பார்த்தது போல,… “சரி போயிட்டு வாங்க” என்றாள்,…

“தட்ஸ் மை கேர்ள்” என்று செல்லம் கொஞ்சியவனின் படர்ந்த மார்பில் சாய்ந்தவள்,…. “சீக்கிரம் வந்துடுங்க மித்து, எனக்கு என்னமோ இன்னைக்கு உங்களை வெளியே அனுப்பவே மனசில்ல, அந்த சின்ன குழந்தைகளுக்காக தான் போக விடுறேன், பார்த்து பத்திரமா போயிட்டு திரும்பி வந்துடுங்க, உங்களுக்காக நானும் உங்க பாப்பாவும் காத்துட்டு இருப்போம்” என்றவளுக்கு ஏனென்று தெரியாமல் அழுகை வந்தது,….

“ஏய் நித்து,… ப்ச்,…  என்ன என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்ளோ எமோசனல் ஆகுற” அவளது கண்ணீரை துடைத்தபடியே வினவினான்,…

“தெரியல மித்து, மனசெல்லலாம் ஒரு மாதிரி படபடப்பாவே இருக்கு, நீங்க பார்க்க போற வேலை ரொம்ப பெரிய டேஞ்சரான வேலை ஒன்னும் இலைல மித்து” அவள் கேட்க,… “இல்ல, இதை விட பெரிய பெரிய கேஸ் எல்லாம் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சிருக்கு, நீ இதை நினைச்சு பயப்படவே வேணாம், நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என மனைவியை ஆறுதல் படுத்திவிட்டு, பிரியா விடைகொடுத்துவிட்டு சென்ற ரிஷி மித்ரன் அப்போது அறியவில்லை அன்றோடு தன் வாழ்க்கையே தடம்புரள போக போகிறதென்று,…

கமிஷனரின் உத்தரவின் பெயரில் திறமையான போலீசதிகாரிகள் ஐவரின் உதவியுடன் போதை பொருள் சப்ளை செய்யும் கும்மல் ஒளிந்திருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டான் ரிஷி, அந்த ஐந்து அதிகாரிகளுள் கார்த்திக்கும் ஒருவன்,….

நெல் மக்காசோளம் பயிர்கள் சாகுபடி செய்வதற்காக ஏழாயிரம் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த அந்த குடோனின் வாயில் பகுதிக்கு சற்று முன்னதாக தங்கள் வந்த வண்டியிலிருந்து இறங்கி விட்டனர் அந்த ஆறு அதிகாரிகளும்,… அவ்விடத்தில் தான் அந்த கயவர்கள் பதுங்கிருந்து தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர், ரிஷியின் உத்தரவின் படி கையில் துப்பாக்கியுடன் ஆளுக்கொரு பக்கம், மறைந்து தனித்து சென்றனர் அக்கொடூரர்களை பிடிப்பதற்காக அல்ல என்கவுண்டரில் கொலை செய்வதற்காக, ஏற்கனவே இவர்களை பிடிக்க முயன்று, அவர்களால் பல அதிகாரிகள் கொல்லப்பட்டனர், மீண்டும் மீண்டும் அதிகமாக அவர்களின் அட்டூழியம் தொடங்கியதால் அவர்களை சுட்டு கொல்ல கமிஷனர் ஆர்டர் போட்டிருந்தார்,…

நான்கு அதிகாரிகள் ஆளுக்கொரு பக்கம் செல்ல, கார்த்திக் ரிஷியுடனே சென்றான், அவன் விழிகளில் இன்று அளவுக்கதிகமான ஆக்ரோஷம் தெரிந்தது, ரிஷியை இப்போதே கொன்று போட்டு விட வேண்டும் என கரங்கள் பரபரத்தது, ஆனால் அதை செய்தால் பிளான் அனைத்தும் சொதப்பி விடுமே என்று பொறுமை காத்தான்,….

மெதுவாக உள்ளே இருக்கும் கொடூரர்களுக்கு தெரிய கூடாது என்று சத்தமில்லாமல் அவர்களை சுற்று போட நினைக்கும் முன்னே, அவர்களுள் ஒருவன், போலீஸின் வருகையை கண்டு கொண்டு, துப்பாக்கியால் சுட ஆரம்பிக்க, போலீஸ் அதிகாரிகளும், தங்கள் பக்கத்திலிருந்து சுட ஆரம்பித்தனர், ஓரிரு நிமிடத்திலேயே ஒரு போலீஸ் அதிகாரியின் நெஞ்சில் குண்டு பாய, பரிதாபமாக அவர் அதே இடத்தில் உயிரிழந்தார், ரிஷிக்கு அதை கண்டதும் வெறி ஏற, ஆக்ரோஷமாக முன்சென்று துப்பாக்கியால் தாக்கி, இரு கொடூரர்களை சுட்டு வீழ்த்தினான், ரிஷியை தொடர்ந்து மற்ற அதிகாரிகளும் முன்வந்து சுட்டு தாக்கினர், அனைவரும் ஒன்று கூடி தாக்கியதில் பாதிக்கு மேல் கொடூர மனிதர்களை தாக்கி வீழ்த்தியவர்கள், இன்னும் இன்னும் நம்பிக்கையை விடாமல் தங்கள் உயிரை நினைத்தும் பயப்படாமல் குறி வைத்து தாக்கி அனைத்து கொடூரர்களையும் சுட்டு கொன்றனர்,… ரிஷியோடு வந்த ஐந்து அதிகாரிகளுள் இருவர் இறந்து கிடக்க, மற்ற மூவர், வேறு எவரும் ஒளிந்திருக்கிறார்களா என பரிசோதித்து கொண்டிருந்த சமயம், எங்கிருந்தோ வந்த குண்டுகள் கார்த்திக்கையும் ரிஷியையும் மட்டும் விட்டுவிட்டு மற்ற இரு அதிகாரிகளின் நெஞ்சில் பாய்ந்து அவர்களை உயிரோடு கொன்றது,….

ரிஷிக்கு தான் ஒன்றும் புரியவில்லை, அப்படியென்றால் இன்னும் அந்த கயவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்களா? என துப்பாக்கியை உயரே தூக்கி, சுட தயாராக நின்றவன், கார்த்திக்கிற்கு கண்காட்ட, அவனும் ஒன்றும் தெரியாதவன் போல் பாவ்லா செய்து சுற்றி நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்…

தன் கழுகு பார்வையால் தன்னை தாக்க வருபவர்களை சுட காத்திருந்த ரிஷியின் செவியில், தன் பின்னால் யாரோ நடந்து வரும் அரவம் கேட்கவே, சட்டென திரும்பியவன், தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அமைச்சர் சந்தன பெருமாளை விழிகள் சுருங்க பார்த்தான்,…

“என்ன டிஎஸ்பி சார், பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க?” ஒய்யாரமாய் ரிஷியின் அருகில் வந்து நின்றவரின் குரலில் ஒருவித நக்கல் தெரிந்தாலும், அதோடு சேர்த்து விழிகளில் அதிகளவு ரௌத்திரமும் தெரிந்தது….

தன் பார்வையால் அவரை அளவிட்டவன்,… “நீங்க இங்க என்ன பண்ணுறீங்க அமைச்சர் சார்” என்றான் ஒருவித சந்தேகத்துடன்,…“என் பையனை கொன்ன உன்னை போட்டு தள்ள இது தான் சரியான இடமா இருக்கும்னு தோணுச்சு, அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவரை இகழ்ச்சியாய் பார்த்து சிரித்தவன்,… “அப்டிங்களா சார், ம்ம்.. நானும் வெயிட்டிங் நீங்க என்னை” என அவன் முழுதாக கூற வரும் முன்னரே, அவனது பின்னிடுப்பில் பின்புறமாகமிருந்து ஒரு கத்தி வந்து பாய்ந்தது ஆழமாய்,… வலியில் தடுமாறியவனுக்கு தன்னை பின்புறமாக தாக்கியவனின் மீது கொலைவெறியே உண்டாக, கரத்தை திருப்பி, தன்னை தாக்கிய கார்த்திக்கை முன்கொண்டு வந்து கழுத்தை நெறிக்க, அதே சமயம், அமைச்சரின் கையால் இன்னொரு கத்தி ஒன்று வந்து ரிஷியின் வயிற்றில் இறங்கியது,…. மொத்தமாய் உருக்குலைந்து போன ரிஷி அதற்கு மேலும் முடியாமல்  கார்த்திக்கின் கழுத்தை விட்டு விட, இருமிக் கொண்டே விலகியவனின் விழிகளில் ரௌத்திரம் தாண்டவமாட, கீழே கிடந்த கட்டையை எடுத்து ரிஷியின் தலையில் ஓங்கி அடித்த சில நொடிகளிலேயே கண்கள் சொருகிய நிலையில் சரிந்து விழுந்தான் ரிஷிமித்ரன்,….

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்